• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 11

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
918
481
93
Tirupur

அத்தியாயம் - 11 (பாத்திமா அஸ்கா)



"மீரு... நான் என்ன சொல்ல வரேன்னு..." அவளைத் துளைத்து எடுத்த மீராவின் பார்வையை எதிர்கொள்ளத் திராணியற்றுத் தான் போனாள் பெண்ணவள்.



எப்படிச் சொல்லிப் புரிய வைப்பாள் அவள்? தனக்கும் இன்று நடந்த தாலி விளையாட்டுக்கும் எந்த விதச் சம்மதமும் இல்லை என்று கூறினால் அவள் என்ன நம்பி விடவா போகிறாள். அது தான் அத்தனை பேருக்கும் மத்தியில் பானை போல் போட்டு உடைத்து விட்டானே.



ஆதவனைப் போட்டுக் கொல்ல வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. தன் கைப்பாவை நிலையைக் கண்டு கடவுளுக்குக் கூட இரக்கம் இல்லையா என்றானது அவளுக்கு.



"போதும் கமலி. அதான், நம்ப வச்சு நல்லா கழுத்தை அறுத்துட்டல்ல இதுக்கு மேல என்ன சொல்லப் போற? இதெல்லாம் ஆக்சிடன்ட்னு சொல்லப் போறியா? இத்தனை நாள் ஏமாத்தினது போதாது குறைக்கு இன்னும் என்ன பொய் சொல்லப் போற?



ச்சி உன்னைப் போய் நம்புனனே கமலி..." ஏவுகணைகளாய் மீராவின் ஒவ்வொரு கேள்விகளும் பேதையவளின் உள்ளத்தைச் சில்லு சில்லாய்ப் பேற்று எறிந்தன.



"ஏய் மீரு, என்ன பேசிட்டு இருக்க? நீயும் அவங்கள மாதிரிப் பேசாத டி..." என்ற மாதவனைக் கண்களால் அடக்கியவள்,



"என்ன டா நீயும் இதுல கூட்டுக் களவாணியா? எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டிங்க... என்னோட மூஞ்சில கூட யாரும் முழிக்க வேணாம்..."



"என்ன டி மீரா..." மாதவனின் பேச்சைக் கேட்க அவள் தயார் இல்லை. காரை எடுத்து மின்னல் வேகத்தில் பறந்தே விட்டாள். மாதவனைத் தவிர.

அவளுக்குப் பின்னே ஆதவனின் குடும்பமும் வந்த வேகத்திலேயே சென்று விட்டிருந்தனர்.



கமலி மீண்டும் அனாதை போல் உணர்ந்தாள்.



ஆதவன் தர்ம சங்கடமாய் நோக்கியது அவளின் கலங்கிய விழிகளைத் தான்.



"என்ன பண்றதுன்னே தெரியல டா..." விரக்தியாய் மாதவனின் தோள் தொட்டான்.



"இதைத் தாலி கட்ட முன்னாடி யோசிச்சு இருக்கணும்… என்னோட பிரண்ட்க்கு ஒரு ரெசார்ட் இருக்கு, அங்க கொஞ்சம் நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்புறம் பார்த்து சரி செஞ்சுக்கலாம்..."



"இப்போ என்ன? நான் உங்க கூட வரணுமா?" ஆத்திரத்தில் சிவந்து போனது அவள் முகம். ஆதவன் மௌனியாய் நின்றான்.



"என்னோட வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டு இப்போ உங்க கூடக் குடும்பம் நடத்தணுமா? சொல்லுங்க சார் பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுக்குப் பேசாம இருக்கீங்க?"



"மன்னிச்சிடு கமலி நான் ஏதோ அவசரத்துல..." இப்போது கண்கள் கலங்கி நின்றது அவன் முறையாகிப் போக, பளாரென்று அவன் கன்னத்தில் ஒன்று விட அதையும் வாங்கிக் கொண்டான்.



இதுவே வேறு யாராவது எதிரே நின்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று அவனுக்கே தெரியாது.



"ஏய்..." என்ற மாதவன் அவளை அடிக்கக் கை ஓங்க மறு கணம் அவன் கன்னத்தில் ஆதவனின் ஐவிரல் பதிந்து விட்டிருந்தன.



"கமலி என்னோட பொண்டாட்டி டா அவ மேல எவனாச்சும் கை வைக்க நெனச்சாலே கொன்னுடுவேன்… ஏய், துர்கேஷ் இது உனக்கும் தான்..."



"இதுக்கெல்லாம் பயந்துடுவேன்னு நெனச்சியா? நான் சிங்கம் டா அழிக்க முடியாது... கமலி தான் உன் கூட வர முடியாதுன்னு சொல்லிட்டால்ல. அவளை விட்டு விலகிடு..."



"டேய் உடன் பிறப்பே, அவளுக்காக என் மேல கை வச்சியே, உன் கூட இருக்க அவளுக்கு விருப்பம் இல்ல, இவன் கிட்டயே விட்டுடு. ஏம்மா தாயே, நீ இந்த ஜண்டா கூடயே போயிடு..."



கமலிக்கு துர்கேஷை விட இவனே மேல் போல் இருக்க ஆதவனின் கை புஜங்களுக்கு நடுவே ஒளிந்து கொண்டாள்.



"என்ன கமலி செல்லம்… தாலி வேணும்னா ஹீரோ கட்டி இருக்கட்டும். மத்ததுக்கு இந்த வில்லன் கூட வர்றியா..." என்றது தான் தாமதம். அவனைப் பிளந்து இருந்தான் ஆதவன்.



அடி வாங்கிய துர்கேஷ் கும்பல் துண்டைக் காணும், துணியைக் காணும் என ஓடி விட்டிருந்தனர்.



"டேய் உடன்பிறப்பே, இந்தா பத்திரமா போய் சேரு..." ரெசார்ட் விலாசத்தைக் கையில் திணித்தவன், "பார்த்துக்கோடா..." என்றபடி நகர்ந்து விட்டிருந்தான்.



அறை வாங்கிய கோவத்தில் மாதவன் முகம் கொடுத்தும் பேசவில்லை. ஆதவனுக்கு அது வேறு மனதைப் பிசைந்தது.



கமலியை அழைத்துக் கொண்டு மாதவன் கூறிய ரெசார்ட்டுக்குச் சென்றான். காவலாளியிடம் முன் கூட்டியே இவர்கள் இருவர் பற்றிச் சொல்லி இருந்ததால் மறுப்பு இன்றி உள்ளே செல்ல அனுமதித்து இருந்தார்.



கமலி உள்ளே வராது வாசற்கதவருகே இவனைக் குத்தவா கொல்லவா என எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள்.



"மேடம், பாக்கு வெத்தல வச்சு அழைக்கணுமா? உள்ள வரலாம்ல..." பைக் கீயை பெருவிரலால் சுற்றியபடி வாசற்கதவைத் திறந்து வழி விட்டான். அவளோ உள்ளே வந்த பாடில்லை.



"உங்க கூட ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியாது..."



"அப்படின்னா அந்தத் தடியனுக்கு கால் பண்ணி வரச் சொல்லிடறேன் மேடம்..." கண்களில் குறும்பு அழகாய் மின்ன தொலை பேசியில் எண்ணை டயல் செய்வது போல் சம்பாஷனை செய்தான்.



அது வரைக்கும் வெளியே நின்றவள் துர்கேஷ் என்றதும் இரண்டே தாவில் ரெசார்டுக்குள் குதித்து இருந்தாள்.



ஆதவனை இமை வெட்டாது பார்த்தவள், "எல்லாத்துக்கும் ஒரு நாள் இருக்கு..." என்று பொருமியபடி உள்ளே சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள்.



இருவருக்கும் தூக்கம் வேறு கண்ணைப் பறிக்க, பசி உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.



"உனக்கு ஏதாச்சும் சாப்பிட வாங்கிட்டு வர்றேன். நீ பசி தாங்க மாட்டல்ல..." என்றதும் அவன் பக்கம் சட்டெனத் திரும்பியவள், "நான் பசி தாங்க மாட்டேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..."



யோசனை ரேகை மின்ன அவனை ஏறிட்டவள் பார்வையை, எல்லாம் எனக்குத் தெரியும் என்ற பாணியில் பார்வையால் அள்ளிப் பருகினான்.



அவன் பார்வையின் வீச்சு தாளாது மறுபுறம் திரும்பி அருகே இருந்த மீன் தொட்டியின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்.



"உங்களோட காசுல சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல… இந்தாங்க இது என்னோட பாட்டியோட நகை, இதை அடமானம் வச்சுட்டு எனக்கு டின்னர் வாங்கிட்டு வாங்க..."



"அப்பவும் சோறு வேண்டாம்னு சொல்றாளா பாரு, அது சரி மீராவோடா பெஸ்ட் பிரண்டுன்னு நிரூபிச்சுட்ட…" என்க அவனைக் குதறி விடுபவளைப் போல் முறைத்து வைத்தாள்.



அவனோ அவனவள் ரோஜாப் பூ முகத்தில் முகாமிட்டிருந்த குடை மிளகாய் திமிரை முகம் கொள்ளா கண் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.



அதைக் கலைத்து மாதவனின் அழைப்பை ஏற்றுச் செல் போன் சிணுங்கிட, காதில் சிறை செய்தான்.



"டேய், நம்ம மீருவ காணல டா… அக்கம் பக்கம் ஃபுல்லா தேடிட்டோம், அவ கெடைக்கல..." பிரச்சனையின் தீவிரத்தை மூச்சிறைக்கப் பேசியவனின் குரல் உணர்த்தியது.



"அவளோட செல்லுக்கு கால் பண்ணியா?"





"ஆயிரம் வாட்டிப் பண்ணிட்டேன். நாட் ரீச்சபிள்னு வருது… ரொம்ப பயமா இருக்கு டா. துர்கேஷ் நாய் தான் ஏதாச்சும் பண்ணிருப்பான் டா..."



"இல்ல, இதை அவன் பண்ணல, யாரு பண்ணி இருப்பான்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்..." அவன் முகம் தீப்பிளம்பென மாறிப் போனது.



"யாரு டா?"



"ஆத்ரன்!"



********



அது ஊரின் ஒதுக்குப் புறமாக உள்ள அடர்ந்த வனம். காட்டு மிருகங்கள் உரிமை கொண்டாடும், மனிதர்கள் நடமாற்றமற்ற மூங்கில் காட்டுக்குள் அமைந்திருந்தது அந்தப் பங்களா.



பழமை சின்னத்தைப் பறை சாற்றியது அந்தக் கட்டடம். இருட்டு பங்களாவுக்குள் ஆங்காரமாய் நுழைந்தது அவனது கறுப்பு நிற ஜீப் வண்டி. கறுப்பு நிற ஜேக்கட் பேண்ட் அவனுக்குப் பாந்தமாய் பொருந்தியிருக்கக் கண்களில் வக்கிரம் தாண்டவமாடியது.



"என்ன? இவன் எப்படி வந்தான்னு யோசிக்குறியா? நான் வருவேன்னு யாரும் எதிர்பார்க்கவே இல்லேல்ல… இருபது வருஷமாயிடுச்சு. நீ இன்னும் கியூட்டா தான் இருக்க மீரா..." மீரா கையும் வாயும் கட்டப்பட்ட நிலையில் திமிறிக் கொண்டிருந்தாள்.



ஜீப்பை விட்டு இறங்கியவன், சிகரட்டைப் பற்ற வைத்துப் புகையை உள்ளிழுத்து மீராவின் முகத்தில் பட ஊதினான்.



அவள் மூச்சு விட முடியாமல் தவிக்க ஆத்ரனின் முகத்தில் எதையோ சாதித்த வெறி. மீராவைத் தோளில் அலேக்காகத் தூக்கினான்.



அவனது ஆறடி தேகத்தில் பூங்கொடி போல் தொங்கினாள் பெண்ணவள்.



ஆளைக் கொல்லும் அவனது ஆண் வாசனை இவளைக் கிறங்கச் செய்ய அந்தச் சிந்தை கலைவதற்குள் அவளை ஊஞ்சலில் தூக்கி வீசி இருந்தான் ஆத்ரன்.



வாய்க் கட்டை அவிழ்த்து விட்டுக் கையில் ஒரு மது பாட்டிலுடன் அமர்ந்து கொண்டான்.



"எதுக்காக என்னைக் கடத்திட்டு வந்த ஆது? என்னைக் கொல்லப் போறியா?"



முழங்கால் முட்டி வரை ஷாட்ஸ் அணிந்து வெற்று மார்பு தெரிய கால் மேல் கால் போட்டு அவளையே பார்வையால் துளைத்தான்.



ஜிம் செய்து முறுக்கேறிய அவன் படிக்கட்டு மேனியில் நிலவொளி பட்டுத் தெறித்தது.



"ஆது... ஆதுல! உதட்டில் பற்கள் பதிய ட்ரிம் செய்த தாடியை வருடியபடி மென்மையாய் சிரித்து வைத்தான்.



"அந்த ஆது செத்துப் போயிட்டான்… ஐ ஏம் பேக்… இப்போ இருக்குறது டாக்டர் ஆத்ரன்… இதோ இவங்க தான் என்னோட குழந்தைங்க..."



இறைச்சிச் துண்டுகளைத் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த உயிர் கொல்லி சுறாக்களுக்குப் போட்டான்.



அவனது மிருகத்தனமான நிலை அறிந்து உயிர் பயத்தில் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. ஆளை விழுங்கும் சுறாக்களைக் காணக் காண முதுகுத் தண்டில் மின்சாரம் வெட்டியது.



மது பாட்டிலை ஒரு சிப் அடித்தவன், அவளருகே வந்து காதுமடலில் வாய் உரச, "அப்பத்தா எப்படி இருக்கு, வேளா வேளைக்குச் சாப்பிடுதா?"



அவன் மூச்சுக் காற்றின் சூடு இவளது கழுத்தோர உப்பு மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தது.



"அம்மத்தா நல்லா இருக்கு..."



"நல்லது… அப்பத்தாவைப் பார்க்கணும் போல இருக்கு மீரு..." அவன் இன்னும் பாசத்திற்கு ஏங்கும் குழந்தை தான் என மீராவுக்கு அடி நெஞ்சில் யாரோ ஆணி வைத்து அறைந்தனர். அவர்கள் குடும்பம் அந்தத் தப்பை அவனுக்குச் செய்து இருக்கக் கூடாது.



ஆதரனின் இந்த மிலேச்சத் தனமான நிலைக்கு இவள் குடும்பம் அன்று செய்த அந்தப் பாவம் தானே காரணம்.



ஆத்ரன் இன்று மனிதம் மறந்து மிருகமாய் மாறி இருக்க அவர்கள் தானே காரணம்.



"மன்னிச்சிடு ஆது, உன்னோட இந்த நிலைமைக்கு நானும் காரணமாயிட்டேன்..."



"மன்னிப்பா..." ஊஞ்சலின் வேகத்தை அதிகரித்தவன்,



"ஒரு மன்னிப்பால நான் இழந்தது எல்லாம் கெடச்சுடுமா மீரா? குடும்பத்தைப் பிரிஞ்சி இருக்குற வலி நீ அனுபவிச்சு இருக்கியா? அதை நான் இன்னிக்கு அவங்களுக்குத் தரப் போறேன்..."



அவள் இதயத் துடிப்பு போல், ஊஞ்சலில் வேகமும் அதிகரிக்க,



"வேணாம் ஆது... வேணாம்..."



"உன்னைக் கொன்னா அந்தக் குடும்பம் துடிச்சுப் போயிடும்ல, அது தான் எனக்கு வேணும். நீ ஒண்ணு பண்ணு. செத்துப் போயிடு மீரா..."



ஊஞ்சலைக் காலால் உதைக்க மீரா பிடிமானம் தவறித் தடாகத்துக்குள் விழுந்தாள்.



"நிம்மதியா செத்துப் போ..."



வானொலியில் டி. எம் சௌந்தர ராஜன் இசையை ஒலிக்க விட்டவன், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி நின்றான்.



அவள் தத்தளித்து அரை மயக்க நிலைக்குச் சென்று இருந்தாள்.



"ஜிம்மிஸ் கோ..." என அவளை விழுங்கக் காத்துக் கிடந்த சுறாக்களுக்குக் கட்டளை இட்டுத் தடாகத்துக்குள் தானும் பாய்ந்து மீராவைத் தன் மீது தாங்கினான்.



தன் அகன்ற படுக்கை அறைக்குள் அவளைக் கிடத்தி, ‘இவ்ளோ சீக்கிரம் உன்னைக் கொல்ல மாட்டேன்… அவங்க அணு அணுவாச் சாகனும்..." கதவைத் தடாரென அடைத்து வெளியேறினான்.



யார் இந்த ஆத்ரன்?