• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 12

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 12 (நுஹா மர்யம்)



மாதவனிடம் பேசி விட்டு அழைப்பைத் துண்டித்த ஆதவனின் முகம் கோபத்தில் தீப்பிழம்பாகச் சிவந்திருந்தது.



என்ன தான் ஆதவன் மீது கொலை வெறியே இருந்தாலும், அவனின் முகத்தைப் பார்த்தே ஏதோ பிரச்சனை என யூகித்த கமலி ஆதவனை நெருங்கி, "என்னாச்சு? ஏதாவது பிரச்சினையா?" எனக் கேட்டாள்.



தீவிரச் சிந்தனையில் இருந்த ஆதவன், தன்னவளின் குரலில் சிந்தனை கலைந்து அவள் முகத்தை ஏறிட்டான்.



ஆதவனின் பதிலை எதிர்பார்த்து அவனின் முகம் நோக்கிய கமலி, அவனிடமிருந்து பதில் வராது போகவும், "உங்களை தான் கேட்குறேன்." என்றாள் சற்றுக் கோபமாக.



மீராவின் நிலையைக் கூறி வீணாகக் கமலியை பயமுறுத்த விரும்பாத ஆதவன், "ஒண்ணு இல்லடாம்மா. ஒரு சின்ன வேலை. அவசரமா போய் ஆகணும். அருணுக்குச் சொல்லிட்டுப் போறேன். அவன் வந்து உனக்குத் தேவையானது எல்லாம் பார்த்துப் பண்ணித் தருவான். நான் கிளம்புறேன் மா" எனத் தன் பதட்டத்தை மறைத்தபடி கூறினான் ஆதவன்.



ஆதவனின் 'மா…' என்ற அழைப்பு கமலிக்கு உள்ளுக்குள் இதமாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டாது அவனை நம்பாத பார்வை பார்க்க, அதனைக் கண்டு கொள்ளும் மனநிலையில் இருக்காத ஆதவன் தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பி வாசல் வரை சென்றான்.



திடீரென என்ன நினைத்தானோ தன்னையே வெறித்துக் கொண்டிருந்த கமலியிடம் திரும்பி வந்து, அவள் நெற்றியில் லேசாக இதழ் ஒற்றி தன் முதல் முத்த அச்சாரத்தைப் பதித்த ஆதவனை அதிர்ந்து நோக்கினாள் கமலி.



ஆதவனோ, "சேஃபா இரு கமலி. நான் வரும் வரை எங்கேயும் வெளிய போகாதே. யார் வந்தாலும் கதவைத் திறந்துடாதே. அருண் வந்து பேசினால் மட்டும் கதவைத் திற. உன் கிட்ட நிறையப் பேச வேண்டி இருக்கு. ஆனா இப்போ சரியான நேரம் இல்ல. பார்த்து பத்திரமா இரு. நான் வரேன்." என்றவன் வந்த வேகத்தில் கிளம்பிச் செல்ல, கமலிக்குத் தான் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.



ஆதவன் சென்று பல மணித் துளிகள் கடந்த பின்னும் அவனின் இதழின் ஈரத்தைத் தன் நுதலில் உணர்ந்தாள் கமலி.



சட்டெனத் தனக்கு நடந்த திடீர் திருமணம் நினைவு வரவும், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல மாறியது கமலியின் மனம்.



‘அவன் எப்படி என் அனுமதி இல்லாம என்னைக் கிஸ் பண்ணலாம்?’ எனத் தன்னையே கேட்டுக் கொண்ட கமலிக்கு, 'உன் அனுமதி இல்லாம உன் கழுத்துல தாலி கட்டினவனுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா?' என்ற மனசாட்சியின் பதிலில் கமலியின் விழிகள் கண்ணீரைச் சிந்தின.



***************



தன்னவளைக் காணாது எல்லா இடமும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்த மாதவன், தன் இரட்டைச் சகோதரனிடம் தகவல் தெரிவிக்க, ஆதவனோ ஆத்ரன் தான் மீராவைக் கடத்தி இருப்பான் எனக் கூறவும் ஏகத்துக்கும் அதிர்ந்தான் மாதவன்.



சற்று நேரத்தில் ஆதவன் வந்து சேரவும், "எப்படி அவன் தான் கடத்தினான்னு இவ்வளவு உறுதியாய் சொல்ற?" எனக் கேட்டான் மாதவன்.



"இதைப் பாரு." எனத் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு வெள்ளி பிரேஸ்லெட்டை எடுத்துக் காட்டினான் ஆதவன்.



அந்தப் பிரேஸ்லெட்டை விழி விரிய நோக்கிய மாதவன், "இ…இது…" எனத் தடுமாற, "அதே தான் மேடி. மீரா அவனுக்குப் போட்டு விட்டது. நேற்றுக் காலைல கமலியப் பசங்க கூட வண்ணக்காடு அனுப்ப ரெடி பண்ணிட்டு இருந்த நேரம், அந்த துர்கேஷோட ஆளுங்க நம்ம வீட்டை நோட்டம் விட்டுட்டு இருந்தானுங்களே. நாம கூட அவனுங்களை ஏமாற்ற முன் வாசல் வழியாப் போய் பின் வாசல் வழியாய் திரும்ப வீட்டுக்குள்ள போனோமே. அந்த நேரம் தான் எனக்கு இந்த பிரேஸ்லெட் கீழ இருந்து கிடைச்சது. நேற்று துர்கேஷோட ஆளுங்க மட்டும் இல்ல. அவனும் அங்க தான் இருந்திருக்கான். நான் அப்போ இருந்த டென்ஷன்ல இதைப் பெரிசா கண்டுக்கல. ஆனா அவன் தான் நம்மள வண்ணக்காடு வரை ஃபாலோ பண்ணி வந்து மீரா தனியா சிக்குற நேரம் பார்த்து அவளைத் தூக்கி இருக்கான். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவன் திருந்தி இருப்பான்னு நினைச்சது என் தப்பு தான்." என்ற ஆதவனின் குரலில் லேசாக வருத்தத்தின் சாயல்.



"இப்போ என்ன அண்ணா பண்ணுறது?" எனக் கேட்ட மாதவனின் குரல் கலங்கி இருந்தது.



அவனின் அண்ணா என்ற அழைப்பே ஆதவனுக்கு தன் இரட்டைப் பிறவியின் நிலையை எடுத்துரைத்தது.



மாதவனுக்குச் சில நிமிடங்கள் முன் பிறந்த ஆதவனை மாதவன் என்றுமே அண்ணன் என்று அழைக்க மாட்டான். ஒரு தோழனைப் போல் தான் இருவரும் பழகுவர்.



என்றாவது மிகவும் கலங்கிப் போனால் மட்டுமே ஆதவனை அண்ணா என்று அழைப்பான் மாதவன்.



இன்றும் தன்னவளைத் தொலைத்து மனம் உடைந்து நின்றிருந்த உடன் பிறப்பின் தோளில், ஆறுதலாகத் தட்டிக் கொடுத்த ஆதவன், "மீராவுக்கு ஒண்ணும் ஆகாது டா. கண்டு பிடிச்சிடலாம். அதுக்கு என் கிட்ட ஒரு வழி இருக்கு." எனவும் மாதவனின் முகம் பளிச்சிட்டது.



"என் மீராவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன்னைச் சும்மா விட மாட்டேன் ஆத்ரா. ஏற்கனவே மீரா மேல கை வெச்சதனால தான் உன்ன வீட்டை விட்டே துரத்தினாங்க. ஆனா இந்தத் தடவை மட்டும் என் மீராவுக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னை உயிரோட விட மாட்டேன்." என்றான் மாதவன் ஆவேசமாக.



**************



"நீ செத்துப் போயிடு மீரா." என்றவாறு மீரா எதிர் பார்க்காத நேரம் ஆத்ரன் ஊஞ்சலை உதைக்கவும் பிடிமானம் தவறிச் சுறாக்கள் நிறைந்த தடாகத்துக்குள் விழுந்தாள் மீரா.



தூரத்தில் இருந்த சுறாக்கள் இறைச்சி வாடையில் மீராவை நோக்கி வர, நீச்சல் தெரியாத மீராவோ தத்தளித்துக் கொண்டிருந்தாள்.



மீராவின் முகத்தில் உயிர்ப் பயம் தெரிய, ஆத்ரனோ முகத்தில் வன்மச் சிரிப்புடன் அதனை ரசித்தான்.



ஜீப் கீயை ஒரு விரலில் சுழற்றியபடி இருந்த ஆத்ரன் சுறாக்கள் மீராவை நெருங்கச் சில அடிகள் இடைவெளி இருக்கும் போது, "த்ரீ… டூ… வன்…" என எண்ண ஆரம்பித்தவன் சட்டெனக் கீயுடன் இருந்த ஒரு ரிமோட்டை அழுத்த, இவ்வளவு நேரமும் ஆக்ரோஷமாகப் பசி வெறியில் சுற்றிய சுறாக்கள் அனைத்தும் உயிரற்றுத் தடாகத்தின் மேற்பரப்பில் மிதக்கத் தொடங்கின.



மீராவைச் சுற்றியிருந்த நீர் இரத்த நிறத்தில் மாறி அதிலிருந்து வந்த வாடை அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தியது.



அந்த இடமே அதிர எக்களித்துச் சிரித்த ஆத்ரனோ, மீராவின் அருகே வந்து அவளை நோக்கிக் கரம் நீட்டவும் ஒரு விதப் பயத்துடனே அவன் கரம் பற்றினாள் மீரா.



தன் கரம் பற்றிய மீராவைச் சட்டென இழுத்துத் தண்ணீரை விட்டு வெளியே கொண்டு வந்த ஆத்ரன் அதே வேகத்தில் அவளைக் கீழே தள்ளி, "என்ன? பயந்துட்டியா?" எனக் கேட்டவனின் முகம் இறுகிப் போய் இருந்தது.



"ஆ..ஆது…" என்றாள் மீரா பயத்தில் திக்கித் திணறி.



"ஷ்ஷ்ஷ்… உன் வாய்ல இருந்து அந்தப் பெயரே வரக் கூடாது. அந்தத் தகுதி உனக்கோ, உன் குடும்பத்துக்கோ கொஞ்சம் கூடக் கிடையாது. ஐம் ஆத்ரன். டாக்டர் ஆத்ரன்.‌ உன்னால… உன் ஒருத்தியால மட்டும் தான் நான் இத்தனை வருஷமா எல்லாத்தையும் இழந்து, குடும்பத்தைப் பிரிஞ்சு, அநாதையா வாழ்ந்துட்டு இருக்கேன். விட மாட்டேன். உங்க யாரையும் நான் நிம்மதியா இருக்க விட மாட்டேன். ஒவ்வொருத்தரையும் துடிக்கத் துடிக்கக் கொல்லுவேன். இப்போ உனக்குக் காட்டினது ஜஸ்ட் ட்ரையல் தான். இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு. வெய்ட் அன்ட் வாட்ச்." என ஆவேசமாகக் கூறிய ஆத்ரன் மயக்க மருந்தை எடுத்து மீராவின் முகத்தில் ஸ்ப்ரே செய்யவும் அவன் கரங்களிலேயே மயங்கிச் சரிந்தாள் மீரா.



அவளை ஒரு கையால் தூக்கித் தன் தோளில் போட்ட ஆத்ரன், மறு கையால் சிகரெட்டைப் பற்ற வைத்தவாறு தன் காரை நோக்கி நடந்தான்.



"டேய் ஆதி… எங்கடா போயிட்டு இருக்கோம்? எப்படி மீராவ கண்டு பிடிக்கப் போறோம்? ஏதோ வழி இருக்குன்னு சொன்ன. என்ன அது?" எனக் கேட்டான் மாதவன் பதட்டமாக.



ஒரு கரத்தால் ஸ்டியரிங் வீலைப் பிடித்தபடி மறு கரத்தில் இருந்த தன் கைப்பேசியை அடிக்கடி இயக்கிப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவனின் கண்கள் சட்டென மின்னின.



"கண்டு பிடிச்சிட்டேன்." எனக் கத்திய ஆதவனை மாதவன் புரியாமல் நோக்க, "மீரா இருக்குற இடத்தைக் கண்டு பிடிச்சிட்டேன்.‌" என்ற ஆதவன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.



சற்று தூரம் சென்றதுமே மீராவின் கார் ஒரு மரத்தில் மோதிய நிலையில் இருந்ததைக் காணவும், சகோதரர்கள் இருவரையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.



"மீரு… மீருவுக்கு ஆக்சிடன்ட் டா?" எனப் பயந்த மாதவன் வண்டி நிறுத்தப்பட்டதும் பாய்ந்து இறங்கி மீராவின் வண்டியை நோக்கிச் செல்ல, உள்ளே நெற்றியில் மட்டும் லேசானக் காயத்துடன் மயங்கிக் கிடந்தாள் மீரா.



மாதவன் அவசரமாகத் தன்னவளை மடியில் ஏந்தி, "மீரா… மீரா…" என அவளின் கன்னத்தைத் தட்ட, ஆதவன் மீராவின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கவும் சில நொடிகளில் மெதுவாகக் கண் விழித்தாள் மீரா.



கடினப்பட்டு இமைகளைப் பிரித்த மீரா முதலில் தான் இருந்த இடத்தைத் தான் கவனித்தாள்.



‘இவ்வளவு நேரமும் கனவு கண்டோமா?’ என யோசித்தவளுக்கு அவளின் உடையில் இன்னுமே முழுவதுமாகக் காயாமல் இருந்த ஈரம் அவள் கண்டது கனவு இல்லை. நிஜம் என்பதை உணர்த்தியது.



"மீரா… ஆர் யூ ஓக்கே?" எனப் பதட்டமாகக் கேட்டவாறு அவளுக்குத் தண்ணீரைப் புகட்டிய மாதவனுக்கு ஆம் எனத் தலையை மட்டும் ஆட்டிப் பதிலளித்தாள் மீரா.



ஆள் நடமாட்டம் அற்ற அந்தப் பாதையையும், சுற்றியும் படர்ந்திருந்த கும்மிருட்டையும், குழப்பமாகப் பார்த்த ஆதவன், "மீரா… நீ எப்படி இங்க வந்த?" எனக் கேட்டான்.



மாதவனும் தன் சகோதரனிடம் பார்வையாலேயே ஆத்ரனைப் பற்றிக் கேட்க, தோளைக் குலுக்கினான் ஆதவன்.



மீராவிடம் அது பற்றி விசாரிக்க மாதவன் வாயைத் திறக்க, அவனைப் பார்வையால் அடக்கிய ஆதவன், "ம்ம்ம் மீரா… நீ மட்டும் தனியாவா இங்க வந்த?" எனக் கேட்டான் குழப்பமாக.



ஆத்ரன் கூறியவற்றையே யோசித்துக் கொண்டிருந்த மீரா, ஆதவனின் கேள்வியில் தன்னிலை அடைந்து, "ஆ…ஆமாம் அத்தான். நான்… நான் மட்டும் தான் வந்தேன். வர வழியில ப்ரேக் பிடிக்காம கார் வந்து மரத்துல மோதிடுச்சு. பயத்துல மயங்கிட்டேன்னு நினைக்கிறேன்." என்றவள் ஆத்ரனைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.



ஆனால் பின்னாளில் ஆத்ரனைப் பற்றி அவர்களிடம் கூறாதது எவ்வளவு பெரிய தவறு என்று அவள் வருந்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்தால் எதையும் மறைக்காமல் இருந்து இருப்பாளோ?



மீராவின் பதில் ஆதவனுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அவள் எதையோ மறைப்பதாகவே எண்ணினான்.



மாதவனுக்கோ தன்னவள் கிடைத்ததே போதும் என்றிருந்தது.



"ஆதி. நீ வண்டியை எடு. நான் மீராவைக் கூட்டிக்கிட்டு வரேன். வீட்டுக்குப் போகலாம். அத்தை இந்த நேரத்துக்கு மீராவைக் காணோம்னு பதட்டமா இருப்பாங்க." என்றான் மாதவன்.



"இல்ல மேடி. நீ மீராவைக் கூட்டிக்கிட்டு கிளம்பு. நான் இப்போ வீட்டுக்கு வந்தா வீணாய் பிரச்சனை வரும். நாளைக்கு எதுன்னாலும் பார்த்துக்கலாம்." என்றான் ஆதவன்.



மாதவனும் அதனை ஆமோதிக்க, மீராவோ ஆத்ரனைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.



மாதவன் மீராவைத் தூக்கிக் கொள்ள, ஆதவன் அவனுக்கு உதவியாக கார் கதவைத் திறந்து விட்டான்.



மீராவைப் பின் இருக்கையில் கிடத்திய மாதவன், ஏதோ யோசனையில் நின்ற சகோதரனிடம் வந்து, "மீரா இருக்குற இடத்தை எப்படிக் கண்டு பிடிச்ச ஆதி?" எனக் கேட்கவும் தான் தன்னிலை அடைந்தான் ஆதவன்.



"மீரா அவளாகப் போய் துர்கேஷ் கிட்ட வாயை விடவும், அவ சேஃப்டிக்கு அவ கார்லயும், மொபைல்லயும் ஜீ.பி.எஸ் ட்ரேக்கர் ஃபிட் பண்ணி இருந்தேன். அதை வெச்சி தான் கண்டு பிடிச்சேன் மேடி. சரி ரொம்ப லேட் ஆகிடுச்சு. நீ மீராவைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குக் கிளம்பு. நானும் கிளம்புறேன். கமலி வேற தனியா இருப்பா." என்றான் ஆதவன்.



*******************

இராஜராஜன் சாந்தியுடன் மாமனார் மீதுள்ள கோபத்தில் வீட்டை விட்டே கிளம்பி விட, இராதாகிருஷ்ணனோ அதனைத் துளி கூடக் கண்டு கொள்ளாது ஆக்ரோஷமாகத் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.



பெற்ற மகளே இல்லை என்று ஆகி விட்டது. இனி யார் இருந்தால் தான் என்ன? என்ற எண்ணம் அவருக்கு.



ஆனால் கமலி மீது இருந்த வெறுப்பு மாத்திரம் பல மடங்கு அதிகரித்தது.



வெளியுலகில் தனக்கிருந்த பெயரையும், மதிப்பையும் நாறடித்தவள் என்று அவளின் மீது வன்மத்தை வளர்த்தார் இராதா கிருஷ்ணன்.



அதனை அதிகரிக்கவே அடிபட்ட பாம்பாய் வந்து சேர்ந்தான் துர்கேஷ்.



"யோவ், பெரிய மனுஷா… என்னடா பொண்ணு வளர்த்து இருக்க?" எனக் கேட்டபடி வந்த துர்கேஷைக் கொன்று விடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது இராதா கிருஷ்ணனுக்கு.



இருந்தும் அவன் மூலம் வர இருந்த லாபத்தை எண்ணித் தன்னை அடக்கியவர், "என்னாச்சு மாப்பிள்ளை? அந்தச் சிறுக்கிய இழுத்துட்டு வரேன்னு தானே கிளம்பிப் போனீங்க. ஏன் அவ வர மாட்டேன்னு சொல்லிட்டாளா?" எனக் கேட்டார்.



"அசிங்க அசிங்கமாய் கேட்பேன்யா கிழவா. பொண்ணா வளர்த்து இருக்க? கல்யாணத்து அன்னைக்கு எவன் கூடவோ ஓடிப் போறா. யாரு வீட்டுலயோ போய் தங்குறா. கட்டிக்கப் போற நான் போய் கூப்பிட்டா, எவனோ ஒரு பரதேசிப் பையன் என் முன்னாடியே அவளுக்குத் தாலி கட்டுறான். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? அம்புட்டையும் பிடுங்கி நடுத்தெருவுல நிறுத்துவேன். என்னையே அடிப்பானா அந்த நாய்?" எனச் சீறினான் துர்கேஷ்.



"கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அதுவும் ஒரு பிச்சைக்காரப் பயல? நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. அந்த ஓடுகாலிக் கழுதைய இழுத்து வந்து உங்க கிட்ட நானே ஒப்படைக்குறேன்." என்றார் இராதா கிருஷ்ணன் வன்மத்துடன்.



இராதா கிருஷ்ணன் யாருக்கோ கைப்பேசியில் அழைத்தவாறு அங்கிருந்து சென்று விட, "போய் உன் பேத்தியக் கூட்டிட்டு வாய்யா. அப்புறம் காட்டுறேன் அவளுக்கு இந்த துர்கேஷ் யாருன்னு. என்னை வேணாம்னுட்டு ஓடிப் போனேல்ல நீ. உன்னை வாழ்க்கை பூரா என் காலுக்குக் கீழயே அடிமையா இருக்க வைக்கிறேன் டி." என்றான் துர்க்கேஷ் கோபம் கொப்பளிக்க.



*******************



மீராவை மாதவனுடன் அனுப்பி வைத்து விட்டு ரெசார்ட் வந்து சேர்ந்தான் ஆதவன்.



தன்னிடம் இருந்த மாற்றுச் சாவியின் உதவியுடன் அறையைத் திறந்து உள்ளே சென்றவன் கண்டது என்னவோ அழகுப் பதுமையாய் கட்டிலில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த தன் மனையாளைத் தான்.



கமலியின் அருகே நெருங்கிய ஆதவனுக்கு அவளின் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர்த் தடமும் தலையணையில் இருந்த ஈரமும் அவனின் மனதை வதைத்தன.



'சாரி கமலி.' என மனதில் தன்னவளிடம் மன்னிப்பு வேண்டியவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, அரவம் கேட்டு எழுந்தமர்ந்த கமலி குளியலறைக் கதவையே வெறித்தாள்.



சில நிமிடங்கள் கழித்து இடுப்பில் ஒரு டவலைச் சுற்றிக் கொண்டு இன்னொரு டவலால் முகத்தைத் துடைத்தபடி வந்த ஆதவன் தன்னையே வெறித்துக் கொண்டிருந்த கமலியைக் குழப்பமாக ஏறிட்டு விட்டு மறு நொடியே, "என்ன பேபி, மாம்ஸை இவ்வளவு லவ்ஸோட பார்க்குற?" எனக் கேட்டான் குறும்பாக.



அவனை மேலிருந்து கீழாக நோக்கிய கமலிக்கு, வழமையாக அவனைக் காணும் போது வரும் எந்தவிதப் படபடப்பும் அச்சமயம் வரவில்லை.



மனம் முழுவதும் ஆதவன் மீது கோபமும் ஆதங்கமுமே நிறைந்து இருந்தது.



கமலி பதில் பேசாது இருக்கவும் மாற்றுடையை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தான் ஆதவன்.



மேசையில் அருண் கொண்டு வந்து கொடுத்த உணவு கை படாது அப்படியே இருக்க, "ஏன் சாப்பிடல?" எனக் கேட்டான் ஆதவன் குழப்பமாக.



"உங்க கூடக் கொஞ்சம் பேசணும்." என்றாள் கமலி ஆதவனின் கேள்விக்குப் பதலளிக்காது.



"முதல்ல சாப்பிடு கமலி, அப்புறம் பேசலாம்." என்ற ஆதவன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு அவளை நெருங்க, பட்டென அதனைக் கமலி தட்டி விடவும், "ஏய்…" எனக் கத்திக் கொண்டு கோபத்தில் கை ஓங்கினான் ஆதவன்.



ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கையைக் கீழே விட்டவன் கமலியின் அருகே இருக்கை ஒன்றைப் போட்டு அமர்ந்து, "சொல்லு, என்ன பேசணும்?" எனக் கேட்டான் ஆதவன்.



"ஏன் இப்படி பண்ணீங்க?" என மட்டும் தான் கேட்டாள் கமலி.



அதில் கோபம், ஆதங்கம், கவலை, ஏமாற்றம், துரோகம், வலி என ஏகப்பட்ட உணர்வுகள்.



"சாரி கமலி." என்றான் ஆதவன் தயக்கமாக.



"எனக்கு உங்க சாரி வேணாம். ஏன்? இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க." எனக் கேட்ட கமலியின் குரலில் வெறுமை.



ஆதவன் மௌனமாக இருக்கவும், கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த கமலி, "அதான் தாலி கட்டிட்டேன்ல, இவ கிட்ட எதுக்குச் சொல்லிட்டுன்னு நினைக்குறீங்கல்ல. கடைசியில நீங்களும் என் மனசைப் புரிஞ்சிக்கல இல்ல." எனக் கேட்டாள் ஆதங்கமாக.



"அப்படி இல்ல கமலி. நான்…" என ஆதவன் ஏதோ கூற வரவும், அவன் முன் கரம் நீட்டித் தடுத்த கமலி, "சொந்த வீட்டுலதான் நான் தேடின அன்பும் அரவணைப்பும் கிடைக்கல. கொஞ்ச நாள்னாலும் நான் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாகவே என் மேல அந்த அன்பைக் காட்டினாங்க உங்க ஃபேமிலி. தன்னோட வீட்டுப் பொண்ணாவே என்னைப் பார்த்துக் கிட்டாங்க. என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்சிருந்தாங்க‌. ஆனா உங்களோட ஒரு செயல்… உங்களோட இட்டுக் கட்டப்பட்ட கதை… அது எல்லாத்தையும் மொத்தமா இல்லாமல் பண்ணிடுச்சு. கடைசியில என்னோட ஃப்ரெண்ட் கூட என்னை நம்பல." எனும் போதே அவளின் விழிகள் கண்ணீரைச் சிந்தின.