• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

விழிகள் - 14

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur

அத்தியாயம் - 14 (நந்தினி சுகுமாரன்)



கடற்கரையில் மீராவைப் பார்த்த பின்பு, தான் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு வந்து சேர்ந்தான் ஆத்ரன்.‌ மனம், ஒரு வித வெறுமையில் உழன்று கொண்டிருந்தது. அவன், அங்கு வந்து‌ ஒரு வாரம் ஆகிறது.



அனைத்தையும் விட்டு விலகி, மறந்து தான் வாழ்ந்து கொண்டிருந்தான், கமலியின் திருமண தினத்தின் வரை.



துர்கேஷிற்கு உரிமையான மருத்துவமனைக்குச் சிறப்பு அழைப்பின் பெயரில், சில சிக்கலான அறுவை சிகிச்சையின் போது ஆலோசனை மருத்துவனாக அவ்வப்போது சென்று வருவான்.



ஆத்ரனின் திறமையும், கைராசியும், 'நோயாளின் உடலைத் தொட்டாலே, குணமாகி விடுவர்!' எனப் பெரும் பெயர் பெற்றுத் தந்தது‌. அதுவே, துர்கேஷுடனான அறிமுகத்திற்குப் பிள்ளையார் சுழி இட்டது.



பலரும் தங்களின் மருத்துவமனைக்காகப் பணிபுரியும்படி அழைப்பு விடுக்க, எவரிற்குக் கீழும் இருக்க விரும்பாது, சிறிய இடம் ஒன்றில் தொழிலைத் துவங்கி நான்கே ஆண்டுகளில், ஒரு பெரும் மருத்துவமனைக்கு உரிமையாளன் ஆனான்.



அந்தப் பழக்கத்தால், துர்கேஷ் தனது திருமணத்திற்கு விடுத்த அழைப்பின் பெயரில், விழாவிற்கு வந்திருந்தான். மூன்றாம் மனிதனாய் பெயருக்கு என்று கலந்து கொண்டவனின் பார்வையில் முதலில் விழுந்தது, தனது அத்தான்களோடு குறும்புத் தனம் செய்து கொண்டிருந்த மீரா தான்.



மீரா, ஆத்ரனின் முதல் நேசம். எவரிடமும், பகிராத உணர்வு. இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத ரசனை. ஆனால் தற்போது, தீராத பகையாக மாறிப் போனாள். இப்பொழுதும் அவளின் 'ஆது அத்தான்' என்ற அழைப்பில் மயக்கம் உண்டு.‌ அதன் காரணமாகவே 'எனது பெயரை உரிமையாய் உரைக்காதே!' என அத்தனை அழுத்தமாகவும் கட்டளையாகவும் உரைத்தான். மயக்கமானது,‌ மனவலிகளை மறக்கடித்து விடக் கூடாது அல்லவா.?



அளவு கடந்த அன்பை ஏற்காது போனாலும் பரவாயில்லை. ஆனால் அதை நம்ப மறுத்துச் சந்தேகம் கொள்ளும் பொழுது, எதிர் வினையாய் செயலாற்றி விடுகிறது, சில நேரங்களில். இதோ, ஆத்ரனுள் உருவாகி இருக்கும் வன்மத்தைப் போல்.



விருப்பும் வெறுப்பும் ஒருவரிடத்தில் ஒரே அளவிற்கு உண்டாகுமா என்ன? புரியாத விந்தை தான். அந்த விந்தைக்குச் சாட்சியானவன், ஆத்ரன்.



அவளிடம் கொண்டிருந்த வெறுப்பும், சினமும் காயப்படுத்தத் தூண்டியது என்றால், ஆண்டுகள் கடந்த பின்பும் நீர்த்துப் போகாது இருக்கும் அன்பு, அந்தக் காயங்களிற்கு மருந்திட்டுக் குடும்பத்தாரிடம் சேர்த்திட வைத்தது.



அவளை வைத்து ஆட்டி விட்டது, ஊஞ்சலில் அல்ல‌. நிலையற்று ஆடிக் கொண்டிருக்கும், அவனது மனதில்‌. எப்பக்கமும் நிலையாய் நிற்க இயலாது, இரண்டிற்கும் இடையே போராட்டம் நடத்திக் கொண்டிருந்தான், உணர்வுகள் என்னும் சங்கிலியின் வாயிலாய்.



நம் நாட்டில், மருத்துவரை இறைவனிற்கு அடுத்தபடியான, அவரிற்கு இணையான இறைத் தன்மை கொண்டவர் என்பர். ஆத்ரனும் அப்படித்தான். உயிரைக் காப்பாற்றிக் கொடுத்த பலருக்கும், அவன் இறைவன்.



படைத்தல், காத்தலோடு சேர்த்து அழிக்கும் வல்லமையும் இறைவனிற்கு உண்டு என்பதால், இவனும் அவ்வாறே, சுந்தர ராஜனின் குடும்பத்தாருக்கு காலனாய் மாறிப் போனானோ என்னவோ.? அலமேலுப் பாட்டி மட்டும், அவனின் பொது விதிகளுக்கு விலக்காகிப் போனார்.



விதியின் மூலமும், விலக்கின் காரணமும், கடந்த கால நினைவுகளாய் அவனின் மனதில் அரங்கேற்றம் செய்தது‍, பதினாறு ஆண்டுகளுக்கான வலியுடன்.



சுந்தர ராஜனும், செண்பக ராஜனும் சிறு வயது நண்பர்கள். சொல், செயல், சிந்தனை என அனைத்திலும் ஒன்று போல் இருப்பர்.



இருவரின் நடவடிக்கைகளைப் பார்த்து, "ரெண்டு பேரும் ஒரே வயித்துல பிறந்த மாதிரி, இவ்வளவு ஒத்துமையா இருக்கீங்களே? எப்பவும் அப்படியே இருக்கணும் என் ராஜாக்களா!" என அலமேலுவே பலமுறை நெட்டி முறித்து அவர்களிற்குத் திருஷ்டி கழித்திருக்கிறார்.



'அதன் பலன், சில காலம் மட்டுமே தாக்குப் பிடிக்கும்!' என்று‌, அப்போது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே அலுவலகத்தில் பணி‌ என்று தொடர்ந்து, ஒன்றாய் இணைந்து தொழில் துவங்கினர். விட்டுக் கொடுக்காமல் உழைத்து, வறுமையைத் துரத்தி மகிழ்ச்சியை வரவேற்றனர். ஒன்றுபோல் அருகருகே வீடு கட்டிக் குடியேறினர்.



மகனின் வளர்ச்சியைக் கண்டு தங்களது கடமையைச் செய்ய அவகாசம் கிட்டாது, மனநிறைவோடு செண்பகராஜனின் பெற்றோர் அடுத்தடுத்துக் காலனிடம் சென்று விட, நண்பனின் வீடு தான், அவரிற்கும் வீடு என்றானது. அலமேலு, பெறாத மகனிற்கும் அன்னையாய் மாறினார்.



தன் மகனை விடுத்து, செண்பக ராஜனிற்கு முதலில் திருமணத்தை முடிக்கப் பெண் பார்க்கும் படலத்தைத் துவங்க, அவரோ தங்களது அலுவலகத்தில் பணிபுரியும் ஷோபனாவை விரும்புவதாக உரைத்தார்.



ரகசியப் பரிமாற்றமாய் இருந்த அவர்களின் காதல், வெளியே எட்டிப் பார்த்தது. ஷோபனாவின் பெற்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, நண்பன் சுந்தரனின் உதவியோடு காதலியைக் கைப்பற்றினார் செண்பக ராஜன்.



அடுத்த ஆறு மாதத்தில் சுந்தர ராஜனிற்கும் விஜயலட்சுமி உடன் திருமணம் முடிய, அச்சமயம் ஷோபனாவிற்கு ஐந்து மாதம்.



குடும்பத்தின் முதல் வாரிசு. ஆத்ரன். அலமேலு,‌ அவனைத் தனது பேரனாகத் தான் பார்த்தார். சுந்தரராஜன் விஜயலட்சுமி தம்பதியோடு சேர்த்து, அவனுக்கு இரண்டு தாய் தந்தையர். தனது பெற்றோருக்கும், அவர்களுக்கும் இடையே எவ்வித வேறுபாடையும் கண்டதில்லை அவன். அவர்களும் அப்படித்தான், ஆத்ரனிடம் அன்பைப் பொழிந்து வளர்த்தனர்.



எப்பொழுதுமே அவனிற்கு,‌ அலமேலு அப்பத்தா வேண்டும்‌. பசியாறும் நேரம் தவிர, மற்ற தருணங்களில் எல்லாம் அவருடன் தான் இருப்பான். உறங்குவது கூட, அப்பத்தாவுடன் தான்.



ஆத்ரனின் பிறப்பிற்குப் பின்னர், தினமும் இல்லத்தில் கொண்டாட்டம் தான்‌. அதனை மூன்று மடங்காய் மாற்றுவதற்காகவே வந்து பிறந்தனர், ஆதவனும் மாதவனும். அதன் பின் உரைக்க வேண்டுமா என்ன? இளவரசர்களின் மாளிகை ஆனது, அவ்வீடு.



மூன்று வயது ஆத்ரன், கைக்கு ஒருவனாய் ஒரு வயது இரட்டையர்களைப் பிடித்துக் கொண்டு நடை பழக்கியது எல்லாம், தேர் ‌பவனி எனலாம். பார்ப்பவர்களின் கண்களைப் பறித்துச் கொள்ளும் (கொல்லும்) அழகியல்.



அடுத்ததாய் குமுதாவிற்கு மனோகரனுடன் திருமணம் முடிந்து, மீரா பிறந்தாள்.‌ மூன்று ஆண் பிள்ளைகளும், ரோஜாவைப் பாதுகாக்கும் முள்வேலியாய் மாறிப் போயினர். ரோஜாத் தண்டில் இருக்கும் முட்கள், அதனை என்றுமே காயப்படுத்துவது இல்லை.‌ மற்ற‌வர் நெருங்க முயன்றால், காயம் நிச்சயம். அப்படித்தான் இருந்தனர், நான்கு இளையவர்களும்.



மூவருமே, அவளிற்கு அத்தான்கள் தான். அப்படித்தான் அழைப்பாள், வேறுபாடு இன்றி.



'ஆது அத்தான்!' என்ற மழலை அழைப்பில், மூத்தவனின் மனம் பரசவம் கொள்ளும். இன்னும் கூட, அதற்குக் காரணம் என்ன என்று புரிபடவில்லை அவனிற்கு. மீராவிற்குமே, ஆத்ரன் என்றால், கொள்ளைப் பிரியம்‌.



பின்னே, 'கால் வலிக்கிது!' என்று உரைத்து முடிக்கும் முன்னரே தூக்கிக் கொள்வானே‌‌? மடியில் அமர வைத்துக் கைப்பற்றி வீட்டுப் பாடங்களை எழுத வைப்பானே? பிடிக்காது போகுமா என்ன?



"சிந்தாமல் சாப்பிடு, மீரு! வா, தலை சீவி விடுறேன். நீ ஊஞ்சல்ல உட்காரு, நான் ஆட்டுறேன்!‌ பரவாயில்ல, என்னோட ஐஸ்கிரீமையும் நீயே சாப்பிடு!" என அவளின் ஒவ்வொரு தேவையையும் உணர்ந்து செயல்படும் ஆத்ரன் தான், 'ஒரு பெண் குழந்தையிடம் எப்படிப் பழக வேண்டும்? அவளை எம்முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும்?' என்று இரட்டையர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் என்று உரைத்தால் மிகையாகாது.



மீராவின் ஆறு வயது வரையிலுமே, குடும்பத்தில் வேற்றுமை என்று எதுவும் இல்லாது, மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இன்றி இருந்தது.



அந்த வருடம் ஆத்ரனிற்குப் பதின் மூன்றாவது பிறந்தநாள். இரட்டையர்கள் தங்களது சேமிப்பில் வெள்ளி பிரேஸ்லெட் ஒன்றை வாங்கிப் பரிசளிக்க, "நான்தான் அத்தானுக்குப் போடுவேன்!" என்று மீராதான் அணிவித்தாள்.



பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகக் குடும்பத்தார் அனைவரும் இன்பச் சுற்றுலா ஒன்று செல்ல முடிவெடுக்க, அது அவர்களது வாழ்வையே புரட்டிப் போட்டு விட்டது.



தொழிலில் அந்த வருடம் அதிக லாபம் கிடைத்திருக்க, கோவாவிற்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தார் சுந்தரராஜன்.



"இந்த வயசான காலத்துல, எனக்கு எதுக்குப்பா இதெல்லாம்? நான் வரல. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க!" என அலமேலு மறுத்து விட, மூன்று தம்பதியரும் தங்களின் குழந்தைகளோடு கிளம்பினர்.



செண்பகராஜ், சுந்தரம், மனோகர் என ஆண்கள் அனைவரும், அளவாய் மது அருந்துவதற்குத் தத்தம் மனைவியரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.



முதல்நாள் பகல் பொழுது முழுவதும் வெளியில் சுற்றிவிட்டுத் தங்களின் அறைக்கு வந்து சேர, வெளிநாட்டவர்கள் இணைந்து இரவிற்கு இதமாய் நெருப்பை மூட்டி, அதனைச் சுற்றி அமர்ந்து பாடல் பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.‌ அதில், சில இந்தியர்களும் அடக்கம். அவர்கள் தங்கியிருந்த விடுதியின் சார்பில், இதை ஏற்பாடு செய்திருந்தனர்‌.



பொது வெளியில் அவர்களின் பார்வைக்கு முன்னேயே, நெருப்பில் வாட்டிய இறைச்சிகள் இரவு உணவாகப் பரிமாறப் பட்டது. மதுவின் அளவு இன்னதென்று சொல்வதற்கு இல்லை.



பிள்ளைகள் நால்வரும், "நாமளும் அதுமாதிரிச் சாப்பிடலாம் ம்மா, ப்ளீஸ் ப்பா.‌..‌" என்றிட அனைவரையும் அழைத்துச் சென்றார் மனோகர்.



பழக்கமற்ற புதிய முறை உணவால் மீரா, "அம்மா, எனக்கு வயிறு வலிக்கிது!‌" என்றிட, "சரி வா, நாம ரூமுக்குப் போயிடலாம்!" என மகளுடன் அறைக்குப் போனார் குமுதா.



குழந்தைக்கு உணவு ஒத்துக் கொள்ளவில்லை, போலும். வயிற்றுப் போக்கு ஏற்பட, அறையிலேயே இருந்து கொண்டனர். நேரம் கடந்ததால், ஷோபனாவும், விஜயலட்சுமியும் குழந்தைகளோடு, அவரவரிற்குப் பதிவு செய்திருந்த அறைக்குச் சென்று விட்டனர்.



மனைவியும் மகளும் போய் வெகு நேரம் ஆனதால், "சரி மச்சான், நான் கிளம்புறேன். அவளும் பிள்ளையும் தனியா இருக்காங்க." என மனோகர் தள்ளாடியபடி வாய் குழற உரைத்து விட்டுக் கிளம்ப… அதிகமாக மது அருந்தாததால் சற்றுத் தெளிவுடன் இருந்த செண்பகராஜ், "மாப்ள, இந்த நிலைமையில போனா, குமுதா கோவிச்சுக்கும்‌. அப்புறம் அவரோட சேர்த்து நாமளும், அவகிட்ட நல்லாத் திட்டு வாங்கணும். சுந்தரா, நமக்குத் தனியா ஒரு ரூமை இங்கேயே புக் பண்ணு‌. படுத்து இருந்திட்டுக் காலையில அவங்கவங்க ரூமுக்குப் போயிக்கலாம். நான் பிள்ளைகள் கிட்டச் சொல்லிட்டு வர்றேன்!” என்றுவிட்டு முன்னே சென்றார்.



முதலில் சென்றது குமுதாவிடம் சொல்லத்தான். அறைக் கதவு தாளிடப் படாமல் இருந்தது.



'தனியா இருக்கும் போது, இப்படித்தான் திறந்து வைப்பாங்களா?' எனச் சிந்தனையுடன் உள்ளே செல்ல, இருளே வரவேற்றது.‌



லைட்டைப் போட, படுக்கையில் உடை கலைந்து தலையில் இருந்து குருதி வெளியேற மயங்கிக் கிடந்தார் குமுதா. சற்றுத் தள்ளி அருகே தூங்கிக் கொண்டிருந்தாள், சிறுமியான மீரா.



"குமுதா, ஏய்! என்னம்மா ஆச்சு? இங்க பாரு!" எனச் செண்பகராஜ் பதறி அவரின் தலையைத் தொட்டுப் பார்த்துக் கன்னத்தில் தட்டி எழுப்ப முயல, ஓசை கேட்டு விழித்தாள் மீரா.



ஆத்ரனின் தந்தையை அங்கே திடீரெனக் கண்டவள், அன்னையின் நிலையைப் பார்த்து விட்டு, "மாமா, மாமா… என்ன அம்மாக்கு? ரத்தம் வருது?" என அழத் துவங்க, நீண்ட நேரம் ஆகியும் வராத நண்பனைத் தேடி, சுந்தரராஜனும் சரியாய் அங்கு வந்து சேர, பல ஆண்டுகால நட்பிற்கு இடையே, விதி தனது ஆட்டத்தைத் துவங்கி இருந்தது.



சுந்தர்… நண்பனை விடுத்து தங்கையின் மகளிடம், "மீரா என்னாச்சு?" என விசாரிக்க அறியாத குழந்தையோ, "மாமா அம்மாவை, ரத்தமா வருது!" என்று அரைத் தூக்கத்தில் பார்த்ததை உரைக்க, கலைந்திருந்த குமுதாவின் புடவை, பல சந்தேகங்களிற்கு வித்திட்டு விட்டது.



"இதுக்குத்தான் மாப்பிள்ளய என்கூட அனுப்பிட்டு, நீ இங்க வந்தியா?‌ அவ உனக்கும் தங்கச்சிதான? தங்கச்சிக் கிட்டப் போயி, இப்படி? குடிச்சா, பொண்டாட்டிக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதாடா உனக்கு? நீயெல்லாம் மனுசனே இல்ல!" என்று கை ஓங்கி விட, மனதளவில் நொறுங்கிப் போனார் செண்பகராஜ்.



சுந்தரனிற்குள் இருந்த மது தெளிவாய்ச் சிந்திக்க விடாது நண்பனைக் குற்றவாளி ஆக்கி விட, 'தன்மீது இருந்த நம்பிக்கையை ஒரே நொடியில் இழந்து விட்டானே, தனது நண்பன்?' எனச் செண்பக ராஜ் தவித்தார்.



அவர் உரைத்த எதையும், செவியில் வாங்கும் நிலையில் இல்லை சுந்தர். ஒலி கேட்டு மற்றவர்களும் வந்து சேர, பிரச்சனை பெரிதாகியது‌.



ஷோபனா கணவனை ஒரு பார்வை தான் பார்த்தார். செண்பகராஜ் 'இல்லை.' என்பதைப் போல் தலையசைக்க, "என்னோட புருஷனை அடிக்க, உங்களுக்கு உரிமை இல்லை. முதல்ல, உங்க தங்கச்சியை என்னனு பாருங்க!" என்று அவரின் கைப்பற்றி அழைத்துச் சென்று விட்டார்.



சுந்தரிற்கு மனதில் ஒரு விஷயம் பட்டு விட்டால், அதை இறுதி வரையில் மாற்றிக் கொள்ளவே மாட்டார்.‌ அவரைப் போல் அன்பு காட்டவும் இயலாது, அதேபோல் வெறுத்து ஒதுக்கவும் முடியாது. மகன், ஆதவனின் ஒற்றைச் செயலில் அவனை விலக்கி வைத்ததே அதற்குச் சான்று.



அன்றோடு இரு ராஜன்களிற்கும் இடையேயான நட்பு, முறிந்து போனது‌. மற்றவர்களும் மீராவின் குழந்தை மொழியைக் கேட்டு, அதுதான் உண்மை என்று நம்பி விட்டனர்.



செண்பக ராஜ் எவ்வளவோ முயன்றும், நண்பனின் குடும்பத்தார்கள் உடைய எண்ணத்தை மாற்ற முடியவில்லை.‌ அவர் தவறிழைக்க வில்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுத்தனர்.



குமுதாவிற்கும் கூட அன்றிரவு என்ன நடந்தது என்று தெரியவில்லை‌. ஆனால் எவனோ ஒரு கயவன், அவரின் பெண்மையைக் களவாடி விட்டான் என்பது மட்டும் நிஜம்‌. அந்நிகழ்வில் இருந்து அவரை மீட்டெடுக்கக் குடும்பத்தார் பெரும்பாடு பட்டனர்.



சுந்தர ராஜன், பணத்தைக் கொடுத்துச் செண்பக ராஜை தொழிலில் இருந்து விலகிக் கொள்ளச் சொல்ல, மனம் உடைந்த அவரும் ஊரை விட்டுப் பாண்டிச்சேரிக்குக் குடி பெயர்ந்தார்.



நடந்த நிகழ்வு, அவரின் மனதைப் பெருமளவு பாதித்து இருந்தது. அந்த வலியிலேயே நோய் வாய்ப்பட்டு மூன்று ஆண்டுகளில் இறந்துவிட, ஷோபனாவும் ஆத்ரனும் யாரும் அற்ற‌ அனாதைகளாயினர்.



பிறந்த வீட்டு உறவுகள் என்று எவரும் இல்லாது, கையில் இருந்த பணம் மொத்தமும் கணவனது மருத்துவச் சிகிச்சையிலேயே கரைந்து விட, வாழ்வை நடத்தப் பணிக்குச் செல்லத் துவங்கினார் ஷோபனா.



வேலி அமைத்துக் காவல் காத்தாலுமே, சில நேரங்களில் பயிரை மேய்ந்து விடும் ஆடுகள். இதில் எவ்விதப் பாதுகாப்பு முறையும் இல்லாது போனால்? ஷோபனாவின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது‌. நாட்கள் நகர நகர, உடன் பணி புரிந்த ஆண்களின் அத்து மீறல்களால், அவரின் தைரியம் குறைந்து பயம் கவ்வத் துவங்கியது.



செண்பகராஜ் இருந்த வரை மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் இல்லாமை, மாபெரும் இழப்பாய் மாறியது‌‌. அதில் இருந்து மீளவே இயலவில்லை, தாய் மகன் இருவராலும்.



அப்போது, ஆத்ரனிற்கு நன்றாய் விபரம் தெரியும் வயது‌.



"இளவரசனாய் இருந்த தான், நடுத்தெருவில் நிற்பதற்கான காரணம் யாது? உயிரிற்கு உயிராய் இருந்தவர்கள் எல்லாம், ஒரே நாளில் பகைவர்களாய் மாறிப் போனதன் பின்னணி என்ன?" என அன்னையிடம் விசாரிக்க, அதுநாள் வரை மகனிடம் மறைத்து வைத்திருந்த உண்மையை உரைத்தார் ஷோபனா.



அன்றைய தினம் மீராவைத் தவிர மற்ற மூவரும் உறங்கி இருந்ததால், எதைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை ஆத்ரன். பின்னரும் கூட, அலமேலுவின் குடும்பத்தார் எவரிடமும் பேசும் வாய்ப்பு அமையவில்லை.



அனைத்தையும் கேட்டவன், "அப்பா, தப்பு செஞ்சாரா அம்மா.?" என வினவ, "ஐயோ ஐயோ! இல்ல ஆது,‌ இல்ல! உன்னோட அப்பாவுக்குத் தப்பு, தவறுனா என்னன்னே தெரியாதுடா.‌ அவர் எந்தத் தப்பும் செய்யல. குமுதாவோட அண்ணன் தான் எல்லாத்தையும் தப்பாப் புரிஞ்சிக்கிட்டு, நம்மளைக் குற்றவாளியா ஆக்கிட்டாரு!" என்று உரைத்து அழ, அப்பொழுது தான் நடந்தவையின் முழு விபரமும் ஆத்ரனிற்குத் தெரிய வந்தது.



"அப்பவே ஒரு போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திருந்தா, உண்மை என்னனு தெரிய வந்திருக்குமே? ஏன்மா செய்யல?"



"குடும்பத்துக்கு அவமானமாப் போயிடும்னு ஆதவனோட அப்பா, அமைதியா இருந்துட்டாரு. உன்னோட அப்பாவும் குமுதாவோட மனநிலை, இதுனால கூடக் கொஞ்சம் பாதிக்கப்படும்னு என்னைக் கம்பிளைன்ட் கொடுக்க விடல‌‌. அவளைத் தன்னோட தங்கச்சியா தான் நினைச்சாரு. ஆனா?‌ அன்னைக்கு மீரா மட்டும் என்ன‌ நடந்துச்சுனு தெளிவாச் சொல்லி இருந்தா, நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது‌. அப்ப, அவ குழந்தை வேற.‌ அவளை எப்படிக் குத்தம் சொல்ல முடியும்?" என அன்றைய சூழலை உரைக்க,‌ ஆத்ரனிற்கு 'மீராவிடம் தற்போது பேசிப் பார்த்தால் என்ன?‌ தனது தந்தையின் மீதான தவறான புரிதலையும், கலங்கத்தையும் சரி செய்திட நல் வாய்ப்புக் கிட்டும்!' என்ற எண்ணம் தோன்றியது.



ஷோபனாவிடம் அதைப் பற்றி‌ச் சொல்லாது, பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சுந்தர ராஜனின் குடும்பத்தாரைப் பார்க்கச் சென்றான்.



நான்கு வருட இடைவெளியில் நிறைய மாற்றங்கள். அருகில்‌, முன்பு அவர்கள் குடியிருந்த இல்லம், தற்போது வேறு ஒருவருக்கு உரிமையாகி, தோற்றத்திலும் வேறு மாறி இருந்தது. பணத் தேவைக்காக, அதனை முன்னரே விற்று விட்டார் ஷோபனா‌.



சுந்தர ராஜனின் வீடோ, பொழிவு இழந்து தென்பட்டது. ஓர் இல்லத்தின் அழகு என்பது அதன் தோற்றம் மற்றும் கலைநயம் மிக்க வேலைபாடுகளைக் காட்டிலும், அதில் வசிப்போரின் மகிழ்ச்சியிலேயே மிளிரும். அதை ஆத்ரனுமே அறிவான் தான்.



வாயிலில் நின்ற, பதினேழு வயதுச் சிறுவனிற்கு யாரை அழைப்பதென்றே தெரியவில்லை.



தாய், தந்தையருக்கும் மேலாய் அன்பு செலுத்திய அலமேலுவின் முகம் அனிச்சையாய் நினைவிற்கு வர, "அப்பத்தா‌..." என்றான்.



அடுத்த இரண்டாவது நிமிடமே வெளியே வந்தவருக்கு, இடைப்பட்ட காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் மறந்து போனது‌.



"ஆது.‌.. ஆது கண்ணா.‌.." எனப் பெரியவர் அன்புடன் அருகே செல்ல, குடும்பத்தார் ஒவ்வொருவராய் வெளியே வந்தனர்.



மனோகரன், "அத்தை..."‌ என்றிட, மருமகனின் அழைப்பில் மூத்தவரின் முகம் சிறுத்துப் போனது.



"மறந்துட்டீங்களா? குமுதா, உங்க பொண்ணு அத்தை!" என்று வினவ, வந்த அழுகையை அடக்கிய படி, "ஆது கண்ணா." என‌ கண்களில் நீருடன் அறைக்குச் சென்று விட்டார்.



மனோகர், "போயிடு!" என உரைக்க, "மாமா.‌.." என்றான் தவிப்புடன்‌.



"யாருக்கு யாருடா மாமா‌?"



"அப்பா, எந்தத் தப்பும் செய்யல மாமா. நீங்க, சுந்தர் அப்பா எல்லாம் கண்ணால பார்த்ததை வச்சுத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்னு... நீங்க கேள்விப்பட்டது இல்லையா? விசாரிக்காமல் தண்டனை தர்றது, அநியாயம் மாமா. நீங்க எல்லாரும், எங்களுக்கு அதைத்தான் செஞ்சுட்டு இருக்கீங்க.‌ மீரா... மீராகிட்ட ஒரு தடவை பேச விடுங்க மாமா என்னை‌‌. நான் உங்களுக்கு எல்லா உண்மையையும் புரிய வைக்கிறேன்!" என அவன் நீளமாய்ப் பேசியதற்கு, "மரியாதையா வெளிய போயிடு!" என்ற பதில் மட்டுமே வந்தது மனோகரனிடம் இருந்து.



மாமன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் வெளியே சென்றிருந்த மீரா, சரியாய் அந்நேரம் வீட்டிற்கு வந்து சேர, ஓடிச்சென்று அவளின் கரத்தைப் பற்றிக் கொண்டான் ஆத்ரன்.



"மீரு…‌ நான் உன்னோட ஆது அத்தான் தான?‌ நான் சொன்னால் கேட்பதான செல்லம்? அத்தானுக்கு ஒரே ஒரு விசயம் சொல்லுறியா? நாலு வருசத்துக்கு முன்னாடி, நாம எல்லாரும் ஊருக்குப் போனோம்ல? அங்க..."



அடுத்த சொல் உதிர்ப்பதற்கு முன்னர், சுந்தர் அடித்த அடியில் மூக்கில் இருந்து குருதி வெளியேறக் கீழே விழுந்தான் ஆத்ரன்.



"என்னடா? அத்தான் சொத்தான்னு சொல்லிக்கிட்டு இருக்க? உன்னோட அப்பன் செஞ்ச அசிங்கத்துக்கு, அன்னைக்கே கொன்னு போட்டிருக்கணும்‌. பழகுன பழக்கத்துக்காகச் சும்மா விட்டா, உறவு கொண்டாடுறியோ? இந்த வயசுலயே, என்ன பேச்சுப் பேசுற?‌ செல்லமாம் செல்லம், என்ன தைரியம் இருந்தா எங்க பொண்ணோட கையைப் பிடிப்ப? நன்றி கெட்ட, உங்கப்பனை மாதிரி தான, நீயும் இருப்ப? போடா வெளிய!" என அவனை இழுத்துச் சென்று வெளியே தள்ள, "சுந்தர் அப்பா!" என்றான் ஏக்கமாய்.



"என்னை, வீணாய் கொலைகாரனா ஆக்காத!" என்று அவர் மிரட்டி விட்டுச் செல்ல, பலர் வேடிக்கை பார்க்க அவமானத்துடன் தலை கவிழ்ந்தான் ஆத்ரன்‌. நடந்த எதற்கும் சிறு சலனத்தைக் கூட முகத்தில் காட்டாது, பதுமையாய் நின்றிருந்த பத்து வயது மீராவின் மீது, இன்னதென்று அளவில்லாது சினம் பெருக்கெடுத்தது.



விசயம் அறிந்த ஷோபனா, "உன்னை யாருடா, அங்க போகச் சொன்னா? இப்ப‌டி அசிங்கப் பட்டு, வந்து நிக்கிறியே?" என்று இரத்தக் காயத்தோடு வந்த மகனைக் கண்டு மனம் நொந்தார்‌. கணவன் மகன் என இருவரும் சந்தித்த அவமானங்கள், சில தினங்களிலேயே அவரிற்கு மாரடைப்பைக் கொடுத்துக் காலனிடம் அழைத்துக் கொண்டது.



ஆதரவு இன்றி, வீதியில் நின்றான் ஆத்ரன். 'எங்குப் போவது, என்ன செய்வது?' என்று புரியாது காவல் நிலையத்திற்குத் தானாகச் சென்று உதவி வேண்டி நிற்க, ஆதரவற்றோர் இல்லத்தில் இணைத்து விட்டனர்.



அன்னையின் இறுதி நொடிகளை அருகில் இருந்து கண்டதால், மருத்துவம் படிக்க விருப்பம் கொண்டான்‌. பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண் பெற்று, பலர் நீட்டிய உதவிக் கரத்தோடு மருத்துவக் கல்லூரியில் இணைந்தான்.



அருகில் கேட்ட கைப்பேசி ஒலி,‌ அவனைப் பழைய நினைவுகளில் இருந்து மீட்டு வர, அதை எடுத்துப் பேசினான்.



"ஹலோ‌‌…"



"சார், ஐம் தாரா..."



"எஸ், சொல்லுங்க மிஸ் தாரா."



"நாளைக்கு லாஸ்ட் சண்டே, ஹெல்த் செக்கப் பண்ண நீங்க வர்றீங்களானு கேட்கலாம்னு…" என அவள் இழுக்க, அதில் அனிச்சையாய் புன்னகை மலர்ந்தது அவனிற்கு.



"ஷ்யூர் வர்றேன்!"



"ஹோ.‌.. தேங்க்யூ...‌ தேங்க்யூ சோ மச்… சார்!" என இணைப்பைத் துண்டிக்க 'வர்றேனு ஒரு வார்த்தை சொன்னதுக்கு, இந்தப் பொண்ணு எதுக்கு இவ்வளவு எக்ஸைட்மெண்ட் ஆகுது?' என்ற சிந்தனையுடனே அறைக்குச் சென்றான்.



தான் தங்கிப் படித்த ஆதரவற்ற இல்லத்திற்கு மாதம் ஒருமுறை சென்று அங்கு இருப்பவர்களின் உடல் நிலையைப் பரிசோதித்து, வேண்டிய மருந்து மாத்திரைகளை இலவசமாய்த் தருவதைப் பழக்கமாய் வைத்திருந்தான் ஆத்ரன்.



சில நேரங்களில் பணியின் அழுத்தம் காரணமாக, அவன் மறந்து விடுவான் என்பதால், "மாசத்துக்கு ஒரு தடவை கால் பண்ணி, என்கிட்ட கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!" என்று இல்லத்தின் பொறுப்பாளரிடம் உரைத்து இருந்தான்.



அவரது மகள் தான் தாரா. பட்ட மேற்படிப்பை முடித்த பின்னர், தந்தையுடன் இணைந்து, சேவை மனப்பான்மையுடன் அங்கு இருப்பவர்களிற்குத் தன்னால் ஆன உதவிகளைச் செய்து வருகிறாள்‌‌. அந்த இல்லத்தின் கணக்கு வழக்கைப் பார்த்து, நிர்வாகத்தைக் கவனிப்பதும் அவள்தான்.



ஆத்ரனை அங்குப் பார்த்த பின்னர், கடந்த ஒரு வருட காலமாய் அவளின் சேவை எண்ணம் சற்று அதிகரித்துத் தான் விட்டது. காரணத்தை அவள் அறிவாள் தான். ஆனால், அவன் புரிந்து கொள்ள வேண்டுமே?



பகை உணர்ச்சித் தாண்டவமாடும் மனதில், பக்குவம் வந்தால் அன்றோ பாவையின் மனம் புரியும்?



மறுநாள் பாண்டிச்சேரி செல்வதற்காக, மருத்துவம் சார்ந்த பொருட்களை எடுத்து வைத்தான் ஆத்ரன்.‌ அடுத்ததாய் உடை அலமாரியைத் திறந்ததும் அனிச்சையாய் அவனது விரல்கள் செய்வதைத் தற்போதும் செய்திட, தனது சிறு வயது பிரேஸ்லெட்டைக் காணாது திகைத்தான்.



ஏனோ மீரா அணிவித்த அந்தப் பிரேஸ்லெட்டை, அவனால் தூக்கி எறிய இயலவில்லை. சிறியதாய்ப் போனாலும் பத்திரமாய் வைத்திருந்தான்‌. தினமும் அதை ஒரு முறையேனும், எடுத்துப் பார்ப்பது அவனது வாடிக்கையாய் இருந்தது.



'எங்க போச்சு? வேற எங்கேயும் வச்சிட்டோமா?' எனச் சிந்தித்திட, சுந்தர ராஜனின் இல்லத்தைக் கவனிக்கச் சென்ற பொழுது, அதனைத் தனது கால்சராயின் பாக்கெட்டில் வைத்துச் சென்றது நினைவிற்கு வந்தது.