• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வேவாள் :அத்தியாயம் 1

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
வேவாள் 1

மிகப்பெரிய வீடு… வீடல்ல பங்களா அது…. "தெருவில் இருந்து வீட்டிற்கு செல்ல ஷேர் ஆட்டோ விடுவாங்களா சாமி?" உடன் வரும் நபருடன் வாயளந்து கொண்டு கேட்டை தாண்டி வந்தாள்…

அவர் அந்த பங்களாவில் பலவருடங்களாக சமையல் வேலை பார்ப்பவர்… சில தினங்களாக உடல் நிலை குறைவால் கூடமாட வேலை செய்ய ஆள் சேர்த்துகொள்ளவா என கேட்டு இருந்தார் அப்பெரியவர்… பெயர் நல்லசாமி… 30 வருடங்களாக இங்கு இருக்கிறார்…

அவரின் பை, இவளின் பைகள் என அனைத்தையும் ஒரே ஆளாக ஒரே கையில் சுமந்து வந்தாள்.. அவளின் சுடிதார் அவளை முழுதாய் மறைத்து தான் எப்படிபட்டவள் என ஆராய யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என கூறியது…

இருந்தும் பல மணி நேரம் ஜிம்மில் வியர்வை சிந்தும் உடல் என புஜங்களின் முருக்கில் உற்று பார்த்தால் தெரிந்து விடும்…

வீட்டிற்கு அருகில் வரும் பொழுதே காரிடரில் ஒரு 60 வயது மதிக்க தக்க பெரியவரும் அவரின் துணைவியாரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்…

அது ஒரு மழைக்கால காலை நேரம்…. சூடாக டீ அருந்தியவர்களின் முகத்தில் டீ குடிக்கும் ஆசுவாசம் சுத்தமாக இல்லை… ஏதோ சூடாக குடிக்கிறோம் எனும் பாவமே…

இவர்கள் நடந்து வந்து வாசலில் நின்ற நேரம் பெரியவர்களும் அவர்களை பார்த்தனர்…

வந்ததும் அவர்களின் பாதத்தை தொட்டு வணங்கி நின்றாள் மாரி (மமதி குமார்)... லதாவும் சேதுவும் அவளை ஆசிர்வதித்து எழுப்பினர்…

அதன் பின்னரே நல்லசாமி அவளை தனக்கு சமையலில் உதவிக்காக அழைத்து வந்ததாக கூறினார்…

அவளை பார்த்தால் கட்டாயம் சமையல் வேலைக்கு வந்தவள் போல் இல்லை…. நல்ல சுடிதார் அணிந்து முடியை குட்டியாக கொண்டை போட்டு சற்று இறுகிய உடல் வாகுடன் நின்று இருந்தாள்… அதிலும் பணிவு என்பது துளியும் இல்லாமல் நிமிர்வாய் ஆனால் அமைதியாய் நின்றாள்…

உன் பேர் என்னம்மா? இதுக்கு முன்னாடி எங்க வேலை பார்த்த? கல்யாணம் ஆகிவிட்டதா? பெற்றோர் பற்றி என அனைத்தையும் கேள்வியாய் பெரியவர்கள் கேட்கும் முன்னரே நல்லசாமி ஒப்பித்து விட்டார்…

அதை புன்னகை முகமாகவே கேட்டுக்கொண்டு இருந்தனர் லதாவும் சேதுவும்…

அவள் இங்கு கோயம்பத்தூரில் ஒரு நியூட்ரிஷியன் ஒருவரிடம் சமையல் வேலை செய்து வந்ததாகவும் அவள் மணம் ஆகாதவள், யாரும் அற்றவள்…..இது தான் அவள் பற்றி நல்லசாமி கூறியது…. (முக்கியமாக வயதை குறிப்பிட வில்லை..)

நல்லசாமி கூறியதற்காகவே வேறு எதையும் விசாரிக்காமல் வேலை வழங்கினார் லதா….

அவளை அவரே வீட்டின் உள்ளே அழைத்து சென்று சமையல் அறையில் உள்ள மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்….

பின்னர் கூடத்திற்கு அழைத்து வரும் போதே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கே வர ஆரம்பித்தனர்…

சேதுவின் தம்பி நீலன் அவரின் மனைவி விஜயா வந்திருந்தனர்..

இவர்களின் சீமந்த புதல்வன் ரகுமான்.. உடல் நிலை குறைவால் தனி அறையில் உள்ளான்… அனைத்துமே அங்கே தான் அவனுக்கு… அவனுக்கு ஒரு தங்கை துறுதுறுப்பாய் அங்கிங்கிங்கு ஓடிக்கொண்டு இருக்கும் ஓட்டப்பந்தய வீராங்கனை மான்விழி…

அடுத்து நீங்கள் ஆவலாய் எதிர்பார்த்த நபர் மாறன்… லதா சேதுவின் மகன் மணிமாறன்… சாதாரண உயரம், லதா குங்கும பூவை கரைத்து குடித்தாரா இல்லை சந்தனத்தை இழைத்து பூசி வளர்த்தாரோ அவரைத்தான் கேட்க வேண்டும்… அப்படி ஒரு கலர்…

தாயின் கலரையும் அன்பையும் தந்தையின் வியாபார உத்தியையும் சேர்த்து செய்த கலவை அவன்… வீட்டில் தனியாக ஜிம் வைத்து அயராது உழைப்பவன்… தொழிலில் ராஜா… ஒரு கையில் ஆப்பிள் கம்பெனி தயாரித்த அனைத்தையும் ஒரு சிறு கை அடக்க பையில் திணித்தும் மறுகையில் ஸ்டைலாக டையை சரி செய்த படியும் வந்து அமர்ந்தான்…

இவனுக்கு இரு அக்காக்கள்… மாலினி, நளினி… அண்ணன் தம்பிகளை திருமணம் முடித்து ஜெர்மனி நாட்டில் குடி புகுந்தவர்கள்…

நல்லசாமி அனைவருக்கும் உணவினை பரிமாற தொடங்கினார்… லதா தான் மாரியை அறிமுகம் செய்தார்…

கை எடுத்து கும்பிட்டு அனைவருக்கும் வணக்கம் சொன்னாள்… அந்த வணக்கத்தில் தெரிந்த நிமிர்வில்.. அவள் நேர்மையானவனள் , தைரியமானவள் என கணித்தான் மாறன்… ஒரே ஒரு வினாடி மாரியின் கண்கள் அவனை சந்தித்து மீண்டது… அதை யாராலும் பார்த்து இருக்க முடியாது… அந்த செயலில் அத்தனை நுணுக்கம்…

மற்றவர்கள் ஒரு தலை அசைப்புடன் உணவு உண்ணும் பணியை தொடர்ந்தனர்….

இவளும் நல்லசாமியுடன் சமயலரைக்கு சென்று விட்டாள்…

மாறனின் தொழில் டைல்ஸ் கம்பெனி… கம்பெனி என்றால் வெறும் வணிகம் நடைபெறும் இடம் அல்ல…

அவன் பெயரில் அவனே உருவாக்கிய டைல்ஸ் தயாரிக்கும் பேக்டரி… அவர்களின் குடும்ப தொழில் டைல்ஸ், க்ரானைட், கடப்பா கல் , மார்பல்ஸ் என அனைத்தையும் மொத்தமாக வாங்கி விற்கும் பெரிய ஷோ ரூம்ஸ் வைத்து இருந்தனர் அதுவும் தமிழ் நாட்டின் அநேக மாவட்டங்களில் இருக்கிறது…

முதலில் அவற்றை மேற்பார்வை செய்யும் பணியை செய்தாலும் மாறனின் மனம் வேறு யோசித்தது…

சிறு வயதில் இருந்து அவனுக்குள் இருந்த வரையும் ஆர்வமும் தொழிலையும் சேர்த்து வைத்து யோசித்ததின் பலனே டைல்ஸ் ப்ரொடக்சன் பேக்டரி…

கண்களை மூடி நெற்றியை சுருக்கினால் வருமே ஒரு பிம்பம் அதை கூட விட்டு வைக்காமல் வரைந்து வண்ணம் தீட்டி ஆசை பார்ப்பான்…

இவனின் இத்தைகைய டிசைன்ஸ் இவனுக்கான தனி இடத்தை தேடி கொடுத்தது…

மாறன் ஆபிஸ் சென்று சேரும் வரையிலும் இன்று வீட்டில் சந்தித்த பெண்ணே மனதில் வந்தாள்… வயது என்னவாக இருக்கும் பார்க்க 25 க்கு மேல் 30 குள்ளாக இருக்க வாய்ப்பு அதிகம்…

ஆனால் ஆனால் என்னவோ இடறுகிறதே அவளிடம்… அவளை பற்றிய எண்ணங்கள் இடறுகிறதா இல்லை அவளின் மீதான தனது எண்ணங்கள் இடறுகிறதா?

கண்டிப்பாக அவளை பற்றி நல்லசாமியிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என முடிவு கொண்டான்… அதன் பிறகே சாலையில் கவனம் செலுத்தினான்…

வீட்டில் :

அன்றே நல்லசாமியிடம் இருந்து சமையல் அறையின் ஒட்டு மொத்த ஆளுகையும் அவளின் கைகளுக்கு மாற்றி இருந்தாள் மாரி…

அவளுக்கு எதற்கும் காலம் தாழ்த்துவது பிடிக்காது… அதனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் மெனுக்கள் அவளிடம் ஏற்கனவே கொடுக்க பட்டு அது அவளுக்கு அத்துப்படியும் கூட…

உடனடியாக வேலையை தொடங்கினாள் மாரி…

ஆனால் அவள் எதிர் பார்த்த சந்தர்ப்பம் இன்று கிடைக்க வில்லை…

ஆம் அவளால் ரகுமானின் அறைக்குள் நுழைய முடியாதவாறு அத்தனை பாதுகாப்பு…

ஆனாலும் விடா முயற்சியாக கண்ணுக்கு தெரியாத ஆடியோ ரிசீவர் ஒன்றை கதவில் பொருத்தி விட்டாள்..

அதை கேட்பதற்கு அவளின் காதுக்குள் யாருக்கும் தெரியாதவாறு ஒரு இயர் செட் பொருத்தி இருந்தாள்..

யாராவது கேட்டாள் கூட காது மெஷின் என கூற எண்ணி இருந்தாள்…

அங்கு அறையில் பேசுவது தெளிவாக கேட்டது மாரிக்கு…

"மாம் இன்னும் எத்தனை மாசத்துக்கு இந்த ஜெயில் வாழ்க்கை? " ரகுமான் ஏகத்துக்கும் அலுத்துக்கொண்டான்..

"டேய் நீ செஞ்சி வச்சி இருக்கறத்துக்கு உண்மையான ஜெயில் கிடைக்க கூடாதுன்னு தான் டா இப்டி வச்சி இருக்கோம்… " அவன் அலுப்பை கிடப்பில் போட்டு கோபமாக பேசினார் தாய் விஜயா..

"அப்டி என்ன செஞ்சிட்டேன்… ஊருல நடக்காததா? நான் என்னமோ புதுசா செஞ்ச மாதிரி குத்தி காட்டி பேசிட்டு இருக்கீங்க? " தான் செய்தது எதுவும் தவறில்லை எனும் மனோபாவம் அகம்பாவமாக மாறி இருந்தது ரகுமானிடத்தில்..

"உன்ன குத்தி காட்டி பேச கூடாது டா… குத்திட்டு தான் பேசணும்… பெத்த மனசு அப்டி செய்ய விடலியே… நீ செஞ்ச பாவத்துக்கு என்னன்ன அனுபவிக்க போறோமோ? " அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவன் செய்த காரியத்தை…

"ச்சய்ய்…. சும்மா அழுது ஒப்பாரி வைக்காம வெளிய போங்க… " ரகுமான் தன் இரு கைகளால் இரு காதையும் அடைத்து கத்தினான்…

முந்தியின் ஒரு பகுதியை வாயில் திணித்து அழுகையை அடக்கி அவர் அறை சென்றார் …

இங்கு இதெல்லாம் கேட்டு கொண்டு இருந்த மாரிக்கு இப்பொழுதே அவனைக்கொல்லும் ஆத்திரம் பொங்கியது அது அவள் பிடித்து கொண்டு இருந்த பாத்திரம் நசுங்குவதில் தெரிந்தது…

சாமி தான் அவளை முதுகில் தட்டி நடப்புக்கு கொண்டு வந்தார்…

இரவு உணவு அவளின் கை பக்குவத்தில் அமர்க்களப்பட்டது..

அனைவரும் புகழ்ந்து கொண்டே சாப்பிட்டது அவளுக்கும் திருப்தியாக இருந்தது…

வேலையாட்களும் உணவு உண்டு அவரவர் தங்கும் இடத்திற்கு சென்றனர்..

இவளும் சாமியுடன் தங்கிக்கொண்டாள்… உழைத்த உழைப்பு பத்தவில்லை மாரிக்கு..

தூக்கம் வராததால் பான்ட் ட்ஷர்ட் கேப் சகிதம் வெளியே கிளம்பி விட்டாள்…

நடந்தே நெடுந்தொலைவு வந்து இருந்தாள்… தொலைவில் ஒரு பெண்ணை சுற்றி இரு ஆண்கள் நின்று ஏதோ அவளை சீண்டி வம்பலப்பது தெரிந்து அவ்விடம் மெதுவாகவே சென்றாள் மாரி..

"ஹேய் பாக் செயின் எல்லாம் கழட்டி குடு.. " திருட வந்தவனில் ஒருவன்

"டேய் அது மட்டும் போதுமா? பொண்ணு நல்லா கலரா அழகா இருக்கு டா… " இரண்டாம் திருடன்

"இல்லடா நமக்கு எதுக்கு வம்பு ஒரு நாள் செலவுக்கு மட்டும் போதும் டா… "முதலாமவன்

"இல்லடா பத்தாது எனக்கு… " இரண்டாமவன்

"அப்டியா மச்சி!!! வேற என்ன வேணும் தொரைக்கு ஹ்ம்ம்? " மாரி வந்து இரண்டாமவன் தோளில் கை போட்டு கொண்டு கேட்டாள்…

"ஹே நீ யாரு? கிளம்பு வம்புல மாட்டிக்காத… " அவளின் கைகளை விலக்க முயற்சி செய்து கொண்டே பேசினான்

"ஹாஹாஹா பயமா மச்சி உனக்கு? " அவனை வெறுப்பேற்றினாள் மாரி

"ஹே யாரு யாருக்கு மச்சி? " அவளிடம் மாட்டிக்கொண்டவன் வாயால் மட்டுமே எகிறினான்… அவள் பிடியில் இருந்து அசைய முடியவில்லை அவனால்…

"நீதாண்டா என் வென்று… ஹே பொண்ணே இவனுங்க ஒரு சோப்லாங்கி பசங்க ரெண்டு தட்டு தட்டிட்டு போவியா நின்னு கண்ண கசக்கி கிட்டு இருக்க? " அவனிடம் தொடங்கி அந்த பெண்ணிடம் பேசி முடித்தாள்

"ஹேய் என்ன தட்டிடுவியா? எங்க தட்டு பாக்கலாம்? " அவன் கைகளில் வைத்திருந்த கத்தியை உயர்த்தும் முன்னரே…

டமால்…

ஒரே அடிதான் வயிற்றில் குடுத்தாள் மாரி அவன் அப்படியே மடங்கி சரிந்தான்… கத்தல் சத்தம் கூட வரவில்லை…

இன்னொருவனுக்கு இவளிடம் சண்டைக்கு போனாள் நண்பனை காப்பாற்ற கூட நாம் இருக்க மாட்டோம் என புரிந்து நண்பனை எழுப்ப ஓடினான்…

மாரி சிரித்துக்கொண்டே அப்பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டு அவளுக்கு வண்டி ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தாள்…

இவை அனைத்தையும் ஒருவன் தூரத்தில் இருந்து பார்த்ததை மாரி பார்க்கவில்லை.. முக்கியமாக மாரியின் முகத்தை அவனும் பார்க்கவில்லை…

ஆம் அங்கு இருந்தது மாறன் தான்… சாப்பிட்டதும் அவசர வேலையாக வெளியே சென்றவன் திரும்பி வரும் வழியில் மாரி ஒருவனை லாவகமாக அவனின் கைகளில் இருந்த கத்தியை மடக்கி வயிற்றில் வெறும் கையை கதை என பாவித்து ( kadhai எனும் ஆயுதம் ) குத்தியதை தான்…

அது பெண் என்பது மட்டும் தான் தெரிந்தது… தனக்கான வேலை அங்கு இல்லை என்பதை புரிந்து நேரத்தின் பொருட்டு கிளம்பினான் மாறன்…

அவனுக்கு அந்த உதவிய பெண்ணை நினைத்து பெருமை.. அவளின் பால் சிறு ஈர்ப்பும் உருவானது…

மாறன் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் மாரியும் வந்தாள்… அவளுக்கு என தனி வழி அமைத்துக்கொண்டாள்…

நல்லசாமி உறங்காமல் இவளுக்காக காத்து இருந்தார்..

"என்னம்மா நாள் பூரா செஞ்ச வேலைக்கு படுத்ததும் தூங்க வேண்டாமா மமதிம்மா? " நல்லசாமி வாஞ்சையாக வினவினார்..

"தூக்கம் அது தூரம் போய் சில மாசங்கள் ஆகிடிச்சி சாமி அங்கிள்… " துக்கத்தையும் நிமிர்வாய் தெரிவித்தாள்…

"இரும்மா சூடா பால் கொண்டு வர்றேன் குடிச்சா கண்டிப்பா தூக்கம் வரும்… " தந்தையின் ஸ்தானத்தில் சாமி

"வேண்டாம் அங்கிள் மில்க் ல நிறைய பாட் (fat ) இருக்கும்… " அவளுக்கு அவள் கவலை போல்…

"அதெல்லாம் ஒரு நாளைக்குள்ள ஆகிடாது… நாளைக்கு இன்னும் கொஞ்ச நேரம் வெய்ட் தூக்கு சரியாகிடும்… " விடாமல் வாதாடினார் சாமி

"ஹாஹாஹா அங்கிள்… விட மாட்டீங்க… கொடுங்க… " சலுகையாக விட்டு கொடுத்தாள் மாரி…

ரகுமான் அறையில் :

"டாட் இப்போதான் உங்களுக்கு என்னோட நியாபகம் வந்துச்சா? " ரகுமான் தந்தையிடம் கோவமாக பேசினான்

"டேய் உனக்காக தான் டா அலைஞ்சிட்டு இருக்கேன்… " நீலன்

"அப்டி என்ன செஞ்சீங்க டாட்… "

"உனக்கு மெடிக்கல் செர்டிபிகேட் வாங்கி அது மூலமா டிரீட்மென்ட்ன்னு விசா வாங்கி இருக்கேன்…

இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சதும் நீ ஆசைப்பட்ட ஆஸ்திரேலியா போய்டலாம்… " இதுக்கு மேல என்ன செய்தால் இவன் திருந்துவான் எனும் பாவம் அவரிடத்தில்

"வாவ் சூப்பர் டாட்.. "

"போய்டலாம் போய்டலாம் சீக்கிரம் போய்டலாம் அனுப்ப போறது நான் தான… ஆனா நீ ஆசைப்பட்ட இடத்துக்கு இல்ல… நான் ஆசைப்பட்ட இடத்துக்கு டா" என தனியாக பேசிக்கொண்டு இருந்தாள் மாரி…

அவளின் கண்களில் தெரிந்த கொலைவெறி சாமியையே நடுங்க செய்தது அது அவர் கையில் இருந்த பால் டம்ளர் ஆடுவதில் தெரிந்தது…

யார் இவள்? விடை தெரியா புதிராக பெண்ணவள்… அவளே கேள்வியாய், அவளே பதிலாய்…

தொடரும் வேவு….
 

Attachments

  • download.jpeg
    download.jpeg
    11.8 KB · Views: 25
Last edited:

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️மமதி பெயர் அருமை சகி, lady புருஸ்லி 👍👍👍👍👍👍
ஆமா இது நிஜ பெயர்... இந்த பெயர் ல ஒரு லேடி பாடி பில்டர் இருக்காங்க 😍😍😍😍😍
 
Top