• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஷ்ரிஷிகேஷ் - பார்வை

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Jul 30, 2021
583
376
63
Tamil Nadu, India
பார்வை

அமைதியான காலை நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், எந்த வீட்டிலும் பரபரப்போ அவசரமோ இல்லை. ரகுநாத்தின் வீட்டில் அனைவரும் காலை உணவு சாப்பிட்டு முடித்திருந்தனர். ரகுநாத்தின் தாயார் லலிதாம்மாள், தன் பேத்தி சுமிக்கு படம் வரைய கற்றுக்கொடுத்து கொண்டிருந்தார்.

“சுமி குட்டி... கிளியோட மூக்கை கொஞ்சம் கவனமா கூர்மையா வரையனும். அப்பத்தான் அது கிளின்னே தெரியும்”

“கிளி ரொம்ப ஸ்பெஷலான பறவ போலிருக்கு.. அதான் அதோட மூக்கு மட்டும் வித்தியாசமா இருக்கு” என்று சொல்லி சிரித்தவளை ரசித்துக் கொண்டிருந்தார் லலிதாம்மாள்.

“ஆமாக் கண்ணு... சரி, இந்த கிளிய கலர் பண்ணலாமா?”

“ஹா... நானே பண்றேன் பாட்டி... பச்ச கலர்ல தான கிளி இருக்கும்? அப்புறம் அதோட மூக்குக்கு ரெட் கலர் தரனும்... சரியா பாட்டி?”

“நம்ம சுமி சொன்னா தப்பா இருக்குமா என்ன?”

“ஹைய்...” என்று மகிழ்வுடன் கைத்தட்டியபடி எழுந்து நின்று குதித்தாள்.

கிளி வரையப்பட்ட காகிதத்தை எடுத்துகொண்டு, உற்சாகமாக தனது உடைமைகள் இருக்கும் இடத்தை நோக்கி செல்லும் சுமிக்கு வயது நான்கு. அன்றலர்ந்த ரோஜாப் பூவின் புன்னகையை அவளிடம் எப்பொழுதும் காண முடியும். இதுவரை ஒரு முறை கூட பெற்றோரிடம் எதற்காகவும் அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணியதே இல்லை. அவள் கோபப்பட்டு கத்துவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் கனவில் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். ஒரு மறை சுமியை சந்திக்க நேர்ந்தால் போதும்; அவளது சுபாவம் நம்மை கவர்ந்து இழுத்துத்திடும்.

அதே அறையில் ஆழ்ந்த யோசனையில் தன்னை மறந்திருந்த ரகுநாத்தை ஆச்சரியத்துடன் பார்த்தார் லலிதாம்மாள்.

“என்னடா ரகு... ரொம்ப தீவிரமா எதையோ யோசிச்சுக்கிட்டிருக்க போல...” என்ற லலிதாம்மாளின் குரல் தான் ரகுநாத்தை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.

“ஒண்ணுமில்லை மா... எல்லாம் நம்ம சுமியோட எதிர்காலத்தை பற்றிதான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்”

“அதப்பத்தி இப்ப என்ன யோசனயாம்?” என்று கேட்டவாறே சமையலறையில் இருந்து வெளிப்பட்டாள் ஷர்மிளா.

“என்ன இப்படி கேக்குற ஷர்மி? சுமிக்கிட்ட இருக்குற ஸ்பெஷலிட்டியே நல்லா படம் வரையறது. இதே துறைல அவ ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல்ல சாதன பண்ண வேண்டாமா? வெறும் அம்மா சொல்லித்தரது மட்டும் அவளுக்கு பத்தாதே...”

“அதுக்கு?”

“அவள நல்ல கோச்சிங் சென்டர்லையோ அல்லது பெரிய ஸ்கூல்லையோ சேர்த்துன்னா என்னன்னு...”

“டேய், அது எல்.கே.ஜி படிக்குற குழந்தடா... அதப்போய்..”

“அம்மா, நான் நேத்து என் ஃப்ரெண்ட் சுரேஷையும் அவன் பையன் ராகுலையும் பார்த்தேன்... ரொம்ப கெட்டிக்கார பையன். அவன புது ஸ்கூல்ல சேர்த்தி ஒரு வருஷம் முடியப் போகுதாம்... அதுக்குள்ளயே நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கான்... நாங்க பத்தாவுதுல படிச்ச ஓம்ஸ் லாவ செகண்ட் ஸ்டாண்டர்ட்லயே என்ன அழகா சொல்றான் தெரியுமா...” என்று சொல்லி வியந்தான் ரகுநாத்.

“அவ்வளவு நல்லா கோச்சிங் கொடுக்கிறாங்களா ஸ்கூல்ல?” என்று தன் பங்குக்கு ஆச்சரியமடைந்தாள் ஷர்மிளா.

“ஆமா ஷர்மி.... நீ வேணா பாரேன்... ராகுல் படிக்குற ஸ்கூல்ல நம்ம சுமியையும் சேர்த்திட்டோம்ன்னு வையி, நிச்சயமா நம்ம பொண்ணு பெரிய ஆளா வருவா”

“ஆனா இப்ப சுமி படிக்குற ஸ்கூலுக்கு என்ன குறைச்சல்?” என்று இடமறித்தார் லலிதாம்மாள்.

“ஏதோ வீட்டு பக்கத்துல இருந்ததுனால சேர்த்திட்டோம்... அடுத்த வருஷத்தில இருந்து அங்கேயே சேர்த்திடலாம்னு இருந்கேன்... என்ன சொல்ற ஷர்மி?”

“ஃபீசெல்லாம் எப்படி?”

“அது மட்டும் கொஞ்சம் ஜாஸ்தி.. ரெண்டு லட்சம்”

“அம்மாடி! ரெண்டு லட்சமா...? உன்னை எல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல்ல ஃப்ரீயாத் தானடா படிக்க வச்சோம்.. அதுக்குள்ள இவ்வளவு அதிகமாயிடுச்சா?” என்ற அம்மாவின் கேள்விக்கு மெதுவாக சிரித்த ஷர்மிளாவை சற்றே கோபத்துடன் முறைத்தான் ரகுநாத்.

“அம்மா, ஃபீசைப் பார்த்தா குழந்தையோட எதிர்காலம் பாதிக்குமில்ல? சுமியோட திறமைய வெளிப்படுத்த இந்த மாதிரி ஸ்கூல் தான் நமக்கு தேவை! இன்னும் நல்லா ட்ரெயினிங் கொடுத்து ரொம்ப ஜீனியஸ் ஆக்கிடுவாங்க” என்று சமாதானப்படுத்தினான்.

தனது எதிர்காலத்தைப் பற்றிய தீவிரமான விவாதத்தில் அனைவரும் மூழ்கியிருக்க, அதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாது கிளிக்கு தனது மெழுகு க்ரையான்களால் உயிர் கொடுத்துக் முடித்திருந்தாள் சுமி.

நேராக தனது பாட்டியிடம் வந்து, “நான் முடிச்சிட்டேன் பாத்தீங்களா” என்றபடி தனது ஓவியத்தை நீட்டினாள்.

“பிரம்மாதமா இருக்குடா செல்லம்” என்று பாட்டியின் பாராட்டுதலை பெற்றவுடன், “அம்மா, அப்பா.. பாருங்க கிளி வரஞ்சிருக்கேன்” என்று பெற்றோரிடமும் காட்டினாள்.

“அற்புதமா இருக்கு தங்கம்” என்றபடி சுமியை தனது மடியில் வைத்துக் கொண்டாள் ஷர்மிளா.

ரகுநாத் எதுவும் உரைக்காது அமைதி காத்தான். அவன் சிந்தனை முழுவதும் சுமியின் பள்ளியிலே இருந்தது. தந்தையிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், அதை பெரிதாக பொருட்படுத்தாமல் மலர்ந்த முகத்துடனே காட்சி தந்தாள் சுமி.

ஷர்மிளாவிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு தனது பொம்மைகளுடன் விளையாட சென்றாள் சுமி. அவள் சென்ற பின், சற்று நேரம் மௌனம் நிலவியது. மூவரும் சிந்தனையின் மூழ்கியிருந்தனர்.

அசௌகரியமான அமைதியை உடைத்தார் லலிதாம்மாள். “என்னடா முடிவு பண்ணியிருக்க ஸ்கூலப் பத்தி?” என்று கேட்டார்.

“வேறென்ன, நாளைக்கு ஒரு தடவை சுரேஷ் சொன்ன ஸ்கூலுக்கு போயிட்டு வந்துடறேன். ஏன்னா இப்பவே ஏப்ரல் மாசம் ஆயிடுச்சு... இப்ப போய் அட்மிஷனுக்கு அப்ளை பண்ணாதான் யுகேஜி சீட்டு கிடைக்கும்”

மதியம் ஒய்வு எடுப்பது லலிதாம்மாளின் வழக்கம். ரகுநாத்தின் பதில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது லலிதாம்மாளுக்கு. தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

‘இப்ப சுமி படிக்கிற ஸ்கூலுக்கு என்ன குறைச்சல்? மதியம் ஒரு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்றா.. மத்தியானம் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சதுக்கப்புறம் பார்க்குக்கு போயிட்டு வரோம். இதெல்லாம் அந்த சுரேஷ் சொல்ற ஸ்கூல்ல நடக்குமா? கோச்சிங் அது இதுன்னு போனா சுமிக்கு என்கூட நேரம் செலவழிக்கவே முடியாதே!’ தனக்குத்தானே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டே குழப்பத்துடன் மெல்ல உறங்க ஆரம்பித்தார்.

உறக்கம் என்பது அன்பை விடவும் வலிமையானது என்று சொன்னால் அதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். உலகிலுள்ள பல கண்டுப்பிடிப்புகள், விஞ்ஞானிகள் உறங்கும் போது அவர்களின் கனவில் இருந்து பிறந்தவை என்றால் நம்ப சற்று கடினமாக இருக்கலாம். இன்னும் சிலர், தாங்கள் எப்போதாவது குழப்பான சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டால், நேரேச் சென்று சிறிது நேரம் உறங்கிவிட்டு வருவர். தூங்கி எழுந்ததும் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வழி பிறந்திருக்ககூடும். அதை பின்பற்றி, தங்களது சங்கடத்தை தீர்த்தக்கொள்வர். இதே நிலைமையில் தான் லலிதாம்மாவும் சிக்கியிருக்கிறார்.

தூங்கி எழுந்தவுடன் மிக தெளிவாக காணப்பட்டார் லலிதாம்மாள். ஆம். தற்போது உருவான சிக்கலிலிருந்து விடுபட சிறந்த வழி ஒன்று புலப்பட்டு விட்டது.

ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தப்படி போனில் ஆழ்ந்திருந்த ஷர்மிளாவிடம், “ஏம்மா, சுமிய அந்த ஸ்கூல்ல சேக்கறதுல உனக்கு சம்மதமா?” என்று சற்றே தயக்கத்துடன் கேட்டார்.

“இல்ல அத்த.. எனக்கு துளிகூட விருப்பமில்லை... இவருதான் ஏதோ புதுசா ஒரு விஷயத்தை கேட்டதும் அதுல குதிக்கணும்னு நினைக்கிறார். மத்தியானம் நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவர் புரிஞ்சுக்கவே இல்லையே” என்றவளின் குரலில் ஆழ்ந்த சோகம் இருந்ததை லலிதாம்மாவால் உணர முடிந்தது. தனது பாதை சற்று தெளிவடைந்ததையும் எண்ணி நிம்மதியானார்.

“பாட்டி... அடுத்த என்ன படம் வரையலாம்? புலி பொம்ம வரையலாமா?” என்று கேட்டுக்கொண்டே கரடி பொம்மை சகிதமாக லலிதாம்மாவை வந்தடைந்தாள் சுமி.

“ஓ.. தாராளமா வரையலாம் கண்ணு... பேப்பர், பென்சில், எரேசர் எல்லாம் எடுத்து தயாரா வச்சுடு.. பாட்டி இப்ப வந்திடறேன்”

வேகமாக நடந்து சென்று, பூஜை அறையை அடைந்தார். அந்த அறையை நித்தமும் சரிவர பராமரிப்பதால், மிகவும் சுத்தமாக காணப்பட்டது. சுவாமி படங்கள் அனைத்தும் ஆணிகளின் உதவியினால் சுவரில் ஒன்றுகொன்று இடித்து கொள்ளாமல் பொருத்தமான இடைவெளியில் மாட்டப்பட்டிருந்தன. தரையை ஒட்டியவாறு மரத்தாலான சிறிய புத்தக அலமாரி ஒன்று வைக்கப்பட்டிருந்த்தது. அதை திறந்து, அதிலிருந்து அந்த புத்தகத்தை வெளியே எடுத்தார் லலித்தம்மாள். மிகவும் கனமான புத்தகம் என்பதால் அதை இரு கைகளின் உதவியுடன் ஏந்த வேண்டியிருந்தது. பக்தியுடன் கண்களில் ஒத்தி கொண்டு மெதுவாக திறந்து உள்ளடக்க பக்கத்தை அடைந்தார். தனக்கு தேவையான பக்கத்தை எடுத்தார். தான் தேடி வந்த பகுதியை கண்டதும் அவரது கண்கள் பிரகாசித்தன. அந்த குறிப்பிட்ட பகுதியின் பக்க எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

ரகுநாத்தின் அறைக்கு விரைந்தார். அங்கு அவன் கண்ணாடி முன் நின்று தயாராகிக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை மாலை என்றாலே ரகுநாத்திற்கு எங்காவது வெளியே சென்று ஊர் சுற்ற வேண்டும். காரணம் கேட்டால் ‘வாரத்தில ஆறு நாட்கள் கடுமையா உழைக்கிறேன். இந்த ஒரு நாள் மட்டும் தான் எனக்கான நாள்’ என்பான்.

“ரகு, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் பா... எங்கயோ வெளிய போறேன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு திரும்பி வந்தப்புறம் இந்த புத்தகத்த கொஞ்சம் படிச்சுப்பாரேன்... ரொம்ப இல்ல... வெறும் ஒரு பக்கம் தான். முப்பத்தைந்தாவது பக்கம் மட்டும்”

பதிலேதும் கூறாமல் அமைதியாக அந்த புத்தகத்தை வாங்கி பிரித்துப் பார்த்தான். அட்டைப்போடப் பட்டிருந்ததால், என்ன புத்தகம் என்று அவனால் யூகிக்க இயலவில்லை. முதல் பக்கத்தை பார்த்ததும் புரியாமல் விழித்தான்.

“இப்ப எதுக்குமா இத படிக்கணும்?”

“காரணமாத்தான் பா... ராத்திரி தூங்க போறதுக்குள்ள படிச்சுடு..” என்று சொல்லிவிட்டு இதழ் பிரியாமல் சிரித்தார்.

ரகுநாத் தனது அம்மாவை நன்கறிந்தவன். காரணமின்றி எதுவும் பேசவும் மாட்டார்; எந்த செயலிலும் ஈடுப்படவும் மாட்டார். இப்போது அவர் குறிப்பிட்ட பக்கத்தின் மூலம் ஏதோ ஒரு அத்தியாவசிமான செய்தியை தான் தன்னிடம் பகிர முயல்கிறார் என்பதை புரிந்துக்கொண்டான். ‘வீடு திரும்பியதும் நிச்சயமாக இதை படித்தே ஆக வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

இரவு எட்டு மணிக்கு ரகுநாத் வீடு திரும்பிய போது, லலிதாம்மாள் தொலைக்காட்சி தொடரில் இலயித்திருந்தார். ஷர்மிளா சுமியை உணவு உண்ண வைத்துக் கொண்டிருந்தாள். சுமியின் கண்களில் தூக்கக் கலக்கம் தவழ்ந்தது. அவளது குழந்தைத் தனத்தை ரசித்தவாறு அவளை அள்ளிக் கொண்டான்.

“என்னடா செல்லம்... தூக்கம் வருதா? அப்பா கதை சொல்லட்டுமா?” என்று வாஞ்சையுடன் கேட்டான்.

“ம்ம்... சொல்லுங்க பா...” என்றவளின் மழலை குரல் ரகுநாத்தின் உள்ளத்தை என்னவோ செய்தது.

சுமியை தூங்க வைத்த பின், அம்மா சொன்ன புத்தகம் ரகுநாத்தின் ஞாபகத்திற்கு வந்தது. ‘என்ன தான் இருக்கு என்று படித்து விடலாமே’ என்று எண்ணியப்படி படிக்க தொடங்கினான். அதை படித்து முடித்ததும் சற்றே அதிர்ந்தான். ‘என்னைத் தான் அம்மா குறிப்பிட்டாரோ?’ என்று யோசிக்கலானான். சிறிது நேரம் சிந்தித்தான். அதன் விளைவாக அவனும் தெளிவுற்றான். இனி நிம்மதியாக உறங்க முடியும் என்று திருப்தியடைந்தான்.

நடந்தது ஏதும் தனக்கு தெரியாததால், தூங்குவதற்கு முன் எப்படியாவது ரகுநாத்திடம் சுமியின் விஷயத்தை பற்றி பேசியே ஆக வேண்டும் என்றிருந்தாள் ஷர்மிளா. ஆனால் அவனோ அவளுக்கு முன் தூங்கியிருந்தான். அவனது வதனத்தில் காலையில் இருந்த வருத்தமோ குழப்பமோ ஏதும் இல்லை. சலனமின்றி உறங்குபவனை வியப்புடன் பார்த்தாள். ‘போகட்டும், காலையில் பேசி அவனது மனதை மாற்றி விடலாம்’ என்று யோசித்தவாறு ஷர்மிளாவும் உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை. துயில் எழுந்ததிலிருந்தே உற்சாகமாக காணப்பட்டான் ரகுநாத். இவனது திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் இருக்கும் என்று யோசித்து குழம்பினாள் ஷர்மிளா.

“ரகு, சுமி ஸ்கூல் விஷயம் என்ன ஆச்சு? இன்னிக்கு போய் பார்கறதா சொன்னீங்களே...” என்று தொடங்கினாள்.

“அதுவா... என்னுடைய பார்வை அர்ஜுனனோடதா இருக்கட்டும்னு தீர்மானிச்சுட்டேன்”

“புரியல..”

“எனக்கு புரிஞ்சிடுச்சு மா...” என்றபடி சமையலறையில் இருந்து புன்னகையுடன் தவழ்ந்த முகத்துடன் வந்தார் லலிதாம்மாள்.

ஷர்மிளாவிற்கு புரியவைத்த பின், ரகுநாத்தின் அறைக்கு சென்றார் லலிதாம்மாள். தான் எடுத்து கொடுத்த பக்கத்தில் அவரது கண்கள் சாந்தமாக பரவின. அதில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

‘குருக்ஷேத்திரத்தில் பயிலும்பொழுது துரியோதனனுக்கும் அர்ஜுனனுக்கும் ஒரு தேர்வு நடத்தப்பட்டது. மரத்தில் அமர்ந்திருக்கும் கிளியின் கண்ணை குறி பார்த்து அம்பு எய்த வேண்டும் என்று அவர்களது குருவான துரோணாச்சாரியார் கூறினார். அர்ஜுனனால் செவ்வனே கிளியின் கண்ணை குறி தவறாது எய்த முடிந்தது. துரியோதனனோ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கான காரணத்தை துரோணாச்சாரியார் மொழிந்தார். துரியோதனின் கண்களுக்கு கிளி அமர்ந்திருக்கும் கிளையும், பச்சை நிற இலைகளும், கம்பீரமாக நின்ற மரமும் புலப்பட்டன. ஆனால் அர்ஜுனனின் கண்களுக்கோ கிளியின் கண் மட்டுமே தெரிந்தது. இந்த தேர்வு நடத்தப்பட்டதின் நோக்கமே ஒரு விஷயத்தை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து பார்கிறார்கள் என்பதாகும். அர்ஜுனனுக்கு கிளியின் கண்ணை தவிர இதர பொருட்களில் அவன் பார்வை பதியாததால் அவனால் வெற்றி பெற முடிந்தது.’

மேற்கூரிய நிகழ்ச்சி எந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்னொரு விஷயத்தை உங்களுக்கு சொல்வதில் என் கடமை நிறைவேறுகிறது. இப்போது ரகுநாத்தின் பார்வைக்கு சுமி குழந்தையாக மட்டும் காட்சியளித்தாள்; சாதனை படைத்து பதக்கத்தை குவிக்கும் சாதனமாக இல்லை. அவளது திறமையை மேன்மேலும் வளர்க்க, தான் முன்தினம் எடுத்த முடிவு இப்பொழுது தேவையற்றது என்று தோன்றியது. குறிப்பாக அவளது குழந்தைத் தன்மையை அவளிடமிருந்து பறிக்க அவனுக்கு மனமில்லை.

***

நன்றி.