• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘2

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
நால்வழிச் சாலைபோல் உள்ளே மற்றும் வெளியே என்று ஆங்கிலம் மற்றும் மராத்தியில் எழுதப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்த நடைபாதையில் அதன் அழகை ரசித்த படி ஒரு இளவரிசியைப் போல் நடையிட்டாள் மித்ரா. சிவப்புக் கம்பளம் மட்டும் தான் இல்லாத குறை.

பக்கவாட்டில் பரந்து விரிந்திருந்தது புல்வெளிகளுக்கு அரணாய் அடுக்கி வைத்தது போல் வரிசை கட்டி நின்றிருந்த அழகிற்கு வளர்க்கப்படும் காய்க்காத தென்னை மரங்கள் ஒருபுறமும், திருத்தம் செய்யப்பட்ட அழகுச் செடிகள் மறுபுறமும், அதனை அடுத்த நடைபாதையும் இதே அலங்காரத்துடன் இருப்பதை மெய் சிலிர்த்து பார்த்தபடி அந்த பெரிய பழமைவாய்ந்த பல்கலைக்கழகத்தில் தன் கால் தடங்களை பதித்தாள்.

500மீ தொலைவு நீண்டு செல்லும் அந்த நடைபாதையை அடுத்து நட்ட நடுவே வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த ஆர்னமெண்ட் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பூங்காவைக் கண்டு மேலும் கொஞ்சம் வாய் பிளந்தபடி நின்று விட்டாள்.

"மகாராணிக்கு பட்டு கம்பளத்துல பூ தூவி வரவேற்கணுமோ ? சீக்கிரம் வா பொண்ணே! காலங்கார்த்தாலேயே உயிரை வாங்க வந்திடுச்சு" என்று காவலாளி மராத்தியில் சத்தமிட்டப்பிறகே அவர் பின்னால் விறுவிறுவென்று விரைந்தாள்.

'விரசா வா-னு சொல்றதுக்கு எதுக்கு இந்த வாட்ச்மேன் இவ்ளோ லென்த்-ஆ பேசுறாரு...' என்று சிந்தித்தது ஒரு நொடி தான்.

அடுத்த நொடியே 'ஏட்டி டியூரோ இந்த ஆளு திட்டுதா இல்லேயானு கூடத் தெரியாம மொழி தெரியாத இந்த புனே-ல எப்படி டி நீ காலம் தள்ளப்போறே! எல்லாம் எங்க அப்பாரச் சொல்லனும்... வேண்டாம் விட்டுடுங்கனு காலுல விழுந்து கதறுன புள்ளைய, சேத்தா இந்த காலேஜ்ல தான் சேப்பேனு பிடிவாதமா சேத்துவிட்டாரே... மிஸ்டர்.முறுக்குமீசை, ஊருக்கு வந்து கவனிச்சுக்கிறேன் உங்கள...

எவன் என்ன சொன்னாலும் ஈஈஈ னு இளிச்சுட்டு நின்னு தான் இன்னைக்குப் பொழுதை கடத்தனும் போல போ... மொதோ வேலையா மராத்தி படிக்கணும்... இன்னைக்கே ஓல்டு புக் ஸ்டால் போறேன்... "30 நாளில் மராத்தி" புக் வாங்குறேன். ஒரு மாசத்துல மராத்தி கத்துக்கிறேன்...' என்று தன் போக்கில் தன் மனசாட்சியிடம் புலம்பியபடி நடந்தவள் எதிரே இருந்த தூணில் முட்டிக்கொள்ள, "அம்மே..." என்ற கூவலோடு பின்னால் நகர்ந்து நின்றாள்.

தன் முன் நெற்றியைத் தேய்த்துவிட்டுக் கொண்டே 'என்ன தைரியம் இருந்தா என்னையே முட்டுவே நீ!' என்று வினாத் தொடுத்த படி எத்துவதற்காக கால்களை ஓங்கிவிட்டு அதற்கு எதிர்மறையாக பட்டும்படாமலும் பாத அணிகள் பட்டதா என்று கூடத் தெரியாத அளவில் மெல்லமாக அந்த தூணை உதைப்பது போல் செய்துவிட்டு மீண்டும் அவளே தொடர்ந்தாள்.

'உன்னை எத்திட்டு என் கால் வலிக்கிறதுக்கா! இன்னொரு முறை என் கண்ணு முன்னாடி வந்திடாதே! மீறி வந்தே உனக்கு இந்த யூனிவர்சிட்டிலயே இடம் இல்லாதபடி பண்ணிடுவேன், ஜாக்கிரதை... போ போ' என்று அந்த காவலாளியின் மேல் காண்பிக்க முடியாத அதிகாரத்தை தூணின் மேல் காண்பித்துவிட்டு அதனை சுற்றிக் கொண்டு நகர்ந்து சென்றாள்.

அலுவலக அறையில் தனது விண்ணப்ப படிவத்துடன் சிபாரிசு கடிதத்தையும் சமர்ப்பித்து விட்டு, அவர்கள் கூறிய இடத்தில் கையொப்பம் இட்டுவிட்டு, தனது வகுப்பறை எங்கே என்று கேட்டுக்கொண்டு பாடசாலை நோக்கி நடையிட்டாள் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடனும், பயத்துடனும்.

வகுப்பறையில் நுழைவதற்கு முன்பே வெளி வாயிலில் வைத்தே அவளை மடக்கிப் பிடித்தனர் எட்டு எதிர் பாலின மாணவர்கள். அதில் ஒரு நொடி பயந்து தான் போனாள் மித்ரா.

அவளுக்கு நேர் எதிரே நின்றிருந்தவன், "துஜன் நாவ் காயா ஆஹே?" என்றான்.

அவளது குண்டு விழிகள் வெளியே வந்து விழுந்திடும் அளவிற்கு கண்களுக்குள் உருண்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மற்றொருவன், "உன் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் வினவினான்.

"இங்கே ஈவ்டீசிங் இல்லைனு சொன்னாங்க!" என்று அவள் தயங்கித் தயங்கி எதிர் கேள்வி கேட்டாள்.

"அப்படித் தான் சொல்லனும்னு சொல்லி வெச்சிருக்கோம்... ஆனா இது ஈவ்டீசிங் இல்லே... நியூ ஸ்டூடண்ஸ எங்க முறைல வெல்கம் பண்றோம்" என்று முழுக்க முழுக்க ஆங்கிலம் கலக்காத மராத்தியில் பேசிட, மித்ராவிற்கு அதில் அ-னா கூடப் புரியவில்லை.

"எங்கப்பா சத்தியமா நீ என்ன பேசுறேனு புரியவே இல்லே டா! ஒரு பச்சபுள்ளைய ஏன்டா காலைல இருந்து எல்லாரும் சுத்தி சுத்தி அடிக்கிறிங்க! வாட்ச்மேன் ல ஆரம்பிச்சு, காலேஜ் பில்லர் கூட என்னை விட்டு வைக்கலே... இப்போ நீங்க வேற ஆரம்பிச்சுட்டிங்க... ஆனா ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்கடா மலமாடுகளா! எண்ணி முப்பதே நாள்ல மராத்தி கத்துக்கிட்டு உங்களைவிட நல்லா மராத்தி பேசுறது மட்டும் இல்லாம, உங்களையும் தமிழ் பேச வெக்கலே நான் டியூரோ இல்லேடா! இருக்குடா சம்பவம் உங்க எல்லாருக்கும்..." என்று அவளும் ஒரு படி மேலேயே சென்று மராத்திக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தமிழில் புலம்ப ஆரம்பித்தாள்.

மாணவர்கள் கூட்டம் இப்போது திருதிருவென்று முழித்தபடி, "க்யா?" என்றிட, அவர்களது முழி மித்ராவிற்கு சற்றே வெற்றி உணர்வைக் கொடுத்தது. கடைஇதழ் வளைத்து நக்கலாக சிரித்தபடி, "இப்போ போலோ" என்று தான் பேசுவது என்ன பாஷை என்று அவளுக்கே புரியாத புதிராக இருந்தபோதும் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தாள்.

மாணாக்கர் கூட்டம் தலையை சொறிந்து கொள்ள, மற்றொருவன் ஆங்கிலத்திற்கு தாவினான். "ஜஸ்ட் ஆனார் மை க்வஸ்டீன்ஸ் அன்ட் லீவ் ஃப்ரம் ஹியர். வாட்ஸ் யுவர் நேம்? ஆர் யூ கமிட்டடு ஆர் நாட்?"

மித்ரா அப்போதும் அமைதியாகவே இருக்க, பசங்கள் கூட்டம் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். "யாருடா இது சரியான லூசு போல... இங்கிலீஷ் ல கேட்டாலும் முழிக்குது, மராத்தில கேட்டாலும் முழிக்குது, நேஷனல் லாங்குவேஜ் ஹிந்தியும் தெரியலே... இது என்ன மாதிரி பீஸு?"

"ஒரு வேலை காது கேக்காதோ!"

"அப்படியா தான் இருக்கும்... ஏய் பேபி ஹியரிங் எய்ட் வெச்சிருந்தா எடுத்து காதுல மாட்டிக்கோ" என்று செய்கையோடு கூறினான் ஒருவன்.

"டேய் அதெல்லாம் இருக்காது. சவுத் இந்தியன் திமிர் டா இது... நாம கேக்கிறது புரிஞ்சும் பதில் சொல்லாம இருக்கா... இவ மேல கண்ணு வெச்சிட வேண்டியது தான். ஆளும் சும்மா சூப்பரா இருக்கா..... இவளுக்கு ஆள் இருந்தாலும் இல்லாட்டாலும் இவ எனக்கு தான்" என்றான் அவளை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு மாதிரியாக பார்த்தபடி...

"இங்கே என்ன பண்ணிட்டு இருக்கிங்க? உங்க க்ளாஸ்ரூம் போங்க எல்லாரும்" என்ற கணீர் குரலில் நொடியில் மறைந்திருந்தனர் அவளைச் சூழ்ந்திருந்த முதுகலை இரண்டாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பவியல் மாணவர்கள்.

குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா. இறுகிய முகத்துடன் நின்றிருந்த வேந்தன் இவளை நோக்கி வந்தான்.

"பாஷை தெரியாத ஊர்ல நீயெல்லாம் ஏன் படிக்க வந்தே! அவன் என்ன சொன்னான்னு தெரியுமா!" என்று ஆதங்கமாக தமிழில் கேட்டவனுக்கு, குனிந்த நிலையில் இடவலமாக தலையசைத்தாள்.

"படிப்பு முடியுற வரையும் தனியா எங்கேயும் சுத்தாதே!" என்று கட்டளை பிறப்பித்துவிட்டு, வகுப்பறைக்குள் எட்டிப் பார்த்து ஒரு பெண்ணை அழைத்து, மித்ராவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

"இது ஸ்வாதி... உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணுனாலும் இவங்களை கேளுங்க..." என்று கூறினான்.

"தெரிஞ்ச பொண்ணா சார்? நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப்படாதிங்க" என்று அவனுக்கு வேண்டப்பட்டவள் என்ற எண்ணத்தில் கூறினாள் ஸ்வாதி.

"ஏன் தெரிஞ்ச பொண்ணுனா தான் கேர் எடுத்துக்கனுமா! வெளியூர்-ல இருக்கும்போதாச்சும் தமிழனுக்கு தமிழன் ஹெல்ப் பண்ணுங்க..." என்று கூறிச் சென்றான்.

வேந்தன் அங்கிருந்து சென்றவுடன், ஸ்வாதியைப் பார்த்து புன்னகைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடன் இணைந்து வகுப்பறை நுழைந்தாள் மித்ரா.

"அந்த பசங்க என்ன பேசினாங்க? ஏன் சார் உனக்கு தனி கவனிப்பு தர்றார்? சாரை முன்னமே தெரியுமா?" என்று மீண்டும் வினவினாள் ஸ்வாதி.

"அவனுங்க பேசினது எனக்கு சுத்தமா புரியலே, ஆனா இந்த சிடுமூஞ்சி சிங்காரத்துக்கு அவனுங்களே பரவாயில்லை தெரியுமா!" என்று வேந்தனை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனதை சொல்லாமல் வலியுறுத்தினாள்.

"வேந்தன் சாரையா சிடுமூஞ்சி னு சொல்றே!" என்று அதிசயித்து ஆதங்கமாக வினவினாள் ஸ்வாதி.

"ஆமா... பின்னே அவர் மூஞ்சில ரொமான்ஸ்-ஸா வழியிது! சரியான CM."

"ஏய்... அவரை பத்தி தெரியாம அப்படி சொல்லாதே! என்னமோ முன்னமே பழக்கம் மாதிரி இவ்ளோ சாதாரணமா திட்டுறே! ஆனாலும் அவர் நீ சொல்ற மாதிரி டைப் இல்லே! ரொம்ப ஜாலியான ப்ரொஃபஸர்-னா அவர் தான் தெரியுமா! நான் இதே காலேஜ்ல தான் யூ.ஜி படிச்சேன். அவர் பின்னாடி சுத்தாத பொண்ணுங்களே இல்லே. ஆனால் அவர் எல்லா பொண்ணுங்ககிட்டேயும் எவ்ளோ ஜெனியூனா நடந்துப் பார் தெரியுமா! ஸ்டூடண்ட் டீச்சர் ரிலேஷன்ஷிப் கரெக்டா மெய்ண்டெய்ண் பண்ணுவார்.

இன்ஃபேக்ட் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் இல்லே. சில லேடி லெக்சரர்ஸ் கூட அவர் பின்னாடி சுத்திருக்காங்க... ஆனா அவர் எல்லார்கிட்டேயும் ஒரே மாதிரி தான் பழகுவார். இதுவரை அவரைப் பத்தி ஒரு தப்பான ரூமர் கூட வந்தது இல்லே." என்று வேந்தனுக்கு பரிந்து பேசி, அவனைப் பற்றி நற்குணங்களை அடுக்கி வைத்து சண்டைக்கு வந்தாள் ஸ்வாதி.

ஆனாலும் மித்ராவிற்கு வேந்தன் மீதான எண்ணம் சற்றும் மாறவில்லை. அவனைப் பற்றிய புகழாரம் பிடிக்காதவள், பேச்சை மாற்ற வேண்டி "அது சரி... அந்த பசங்க என்கிட்ட அல்ரெடி ஆள் இருக்கானு கேட்டானுங்க... அது எதுக்கு?"

"சீனியர் பசங்க நார்மலாவே நியூ ஸ்டூடண்ட்ஸ்-ஸ கலாய்க்கிறது வழக்கம் தான். சிங்கிளா சுத்துற பொண்ணுங்களை சும்மானாலும் 'என் ஆளு' னு சொல்லி வதந்தி கிளப்பிவிட்டுடுவாங்க... ஆனா இதுக்காக டெய்லி டார்ச்சர்லாம் பண்றது இல்லை. அனேகமா உன்கிட்டேயும் இது தான் செய்திருப்பாங்க."

"ம்ம்ம்" என்று கேட்டுக் கொண்டவள் முகத்தில் சிறிய சிரிப்பு தோன்றி மறைந்தது.



காதல் கரை எட்டுமா!
யார் இந்த மித்ராவும், வேந்தனும்? இவர்களால் ஆழி மற்றும் அம்புதி வாழ்வில் ஏதேனும் மாற்றம் நிகழுமா! யாருடைய காதல் வெல்லும்! யாருடையது கொல்லும்!

இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்.​