• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘5

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"ஹேய்.... நீ மட்டும் எப்படி இப்படி ஈவ்னிங் வரைக்குமே ஃபுல் எனர்ஜியோட இருக்கே?" என்று காலையிலிருந்தே ப்ராக்டிக்கல்ஸ் வகுப்பையும் சேர்த்து தியரியே எடுத்ததில் சற்று அதிகமாகவே கடுப்படைந்திருந்த ஸ்வாதி மித்ராவின் மிளிர்ந்த சிரித்த முகத்தைக் கண்டு வினவினாள்.

"பின்னே! சும்மாவா டியூரோனோனு நேம் வெச்சானுங்க எங்க பசங்க" என்று தன் பள்ளி மற்றும் இளங்கலை கல்லூரி தோழிகளை நினைத்து கெத்தாகக் கூறினாள் மித்ரா.

"அதென்ன அடிக்கடி உன்னை நீ டியூரோனு சொல்லிக்கிறே!" என்றாள் ஸ்வாதி.

"டியூரோசெல் விளம்பரத்துல வர்ற பொம்மை மாதிரி ஆல் டைம் ஆக்டிவ் டால் நானு" என்று தான் அணிந்திருந்த குர்தியின் காலரை தூக்கிவிட்டுக் கூறினாள்.

"ம்ம்ம்... சரி தான். பொருத்தமான நேம் தான். ஆனாலும் வேந்தன் சாரைப் பார்த்தால் மட்டும் இந்த டால்-லோட பேட்டரி இப்போலாம் ஆஃப் ஆகிடுதே!" என்று மித்ராவை கேலிபேசிட,

உண்மையாகவே வேந்தன் என்ற பெயரைக் கேட்ட உடனேயே அவளது முகம் வாடிவிட்டது தான். இருந்தாலும் இதழ்கள் மட்டும் "அப்படிலாம் ஒன்னும் இல்லையே" என்று நெற்றி சுருக்கி கூறினாள்.

"ஹேய்... என்ன!!! வேந்தன் சார் பேரைக் கேட்டாலே சும்மா அதிருது போல... ஹா ஹா ஹா" என்று சிரித்து மேலும் கொஞ்சம் கடுப்படையச் செய்தாள் ஸ்வாதி.

"சரியான CM... அந்தாளை நெனச்சாலே சம் டைம்ஸ் இரிட்டேங்கா தான் இருக்கு." என்று வரவழைக்கப்பட்ட கோபத்துடன் உரைத்தாள்.

"அய்யோடா... மேடமுக்கு ஏன் இவ்ளோ காண்டு. ரொம்ப கட்டாயப்படுத்தி கோப படுற மாதிரி இருக்கே!" என்று அதனையும் ஸ்வாதி சரியாக கணித்து விட, மித்ரா அமைதியடைந்தாள்.

"அவர் உன்னோட பசியும் சூழ்நிலையும் தெரிஞ்சு உன்னை வெளியே கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி கொடுத்ததுல இருந்து உனக்கும் அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர் வந்துடுச்சு தானே! அதை ஏன் என்கிட்ட இருந்து மறைக்கிறே!" என்றாள் நண்பியின் சலனம் தீர்க்கும் உயிர் தோழியாய்.

அன்று மட்டும் அல்லாமல் அதன் பிறகு வந்த நாளில் கூட ஒரு முறை வேந்தன் மித்ராவை மதிய உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றிருந்தான். அதனைக் கண்ட ஸ்வாதி என்னவென்று இடைவிடாது வினவிட, வேறு வழியில்லாமல் உணவுண்ணச் சென்றதாகக் கூறியிருந்தாள் மித்ரா.

அதன் பிறகும் ஸ்வாதியின் கேள்விக்கணைகள் தொடரவே, தன்னைப் பற்றிய உண்மைகளை மறைத்து, தன் தாமதத்தாலும், கேண்டின் உணவு உபாதை ஏற்படுத்துவதாலும் மட்டுமே வேந்தன் இந்த உதவியைச் செய்ததாக உரைத்திருந்தாள்.

"அந்த சாஃப்ட் கார்னர் அவர் மேலனு இல்லே... அன்னைக்கு இருந்த நிலைமைக்கு நம்ம சீனியர்... அதான் ஒரு அரலூசு என்னை அவனோட ஆளுனு சொல்லிட்டு சுத்துறானே!!!" என்று ஸ்வாதிக்கு நினைவூட்டுவதற்காகக் கூறிட,அவளோ " யாரு... புவன் சீனியரா?" என்றாள்.

"ம்ம்ம்.... அவனே தான்.... அவன் செய்திருந்தா கூட அவன் மேலயும் வந்திருக்கும்..." அதற்குப் பிறகு என்ன கூற நினைத்தாளோ, ஆனால் அதற்குள் வேந்தன் வகுப்பிற்குள் நுழைந்திருந்தான்.

அதில் தோழிகள் பேச்சு பாதியில் நின்றுவிட, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இருவரும் ஒரு சேர எழுந்து நின்றனர். மற்ற மாணவர்களும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றிட, தன் மேசைக்குச் சென்றவன், அப்போதும் மித்ராவை முறைத்துக் கொண்டிருந்தான்.

அது புரிந்த மித்ராவும் அமைதியின் திரு உருவமாய் பவ்வியமாக அமர்ந்து கொண்டாள். ஆனால் உடன் இருந்தவளுக்கு நாக்கில் ஏழரை போல.....

"ஹேய்..... மித்து நீ சொல்றது சரிதான். இவருக்குள்ள இப்படி ஒரு டெரர் பேஷ் இருக்கிறதே இன்னைக்கு தான் பார்க்கிறேன்... அப்படி என்ன தப்பா பேசிட்டோம்னு இந்த முறை முறைக்கிறார்!!!" என்று வாய் அசைவது கூட தெரியாதபடி முனுமுனுத்தாள்.

வேந்தனும் வந்ததும் வராததுமாக வரிசையாக மாணாக்கர்களிடம் கேள்விக்கணை தொடுத்தவன், ஸ்வாதியின் புறம் தன் பார்வையை திருப்பிட, அவளோ அவன் என்ன கேட்டான் என்று கூட தெரியாமல் திருதிருவென்று முழித்தபடி எழுந்து நின்றாள்.

உண்மையில் அவனது குறிக்கோள் மித்ரா தான். அவளைத் தான் சக மாணவர்கள் முன்னிலையில் திட்டி வகுப்பைவிட்டு வெளியேற்ற நினைத்திருந்தான். எனவே அவனது பார்வை மித்ராவின் மேல் படிய அவளோ கணங்கள் கூட யோசிக்காது விடையளித்திட ஸ்வாதி மற்றும் வேந்தன் இருவருமே வாய் பிழந்தனர்.

தன் எண்ணம் பலிக்காமல் போகவே வேந்தன் ஸ்வாதியை அமரச் சொல்லிவிட்டு தன் பாடத்தைத் தொடங்கினான்.

மீண்டும் ஸ்வாதி இதழ் கூட அசைத்திடாமல், "எப்படி டி? என்கிட்ட தானே பேசிட்டு இருந்த! அப்பறம் எப்படி பதில் சொன்னே? எனக்கு அவர் என்ன கேட்டார்னு கூட தெரியலே!" என்று அதிசயித்திட,

"இப்போ மட்டும் மூடிக்கிட்டு பாடத்தை கவனிக்கலேனு வை... ரெண்டு பேரையும் கொத்தா தூக்கி வெளியே வீசிடுவார்... அதுக்கு தான் காத்திட்டு இருக்கார்... சோ" என்று நிறுத்தி விரல்களால் வாயை அடைத்து பின் வேந்தன் புறம் சுட்டிக்காட்டி பாடத்தை கவனிக்கக் கோரினாள்.

பாடவேளை முடியும் நேரம் வகுப்பறை வந்த அலுவலகப் பணியாளர் பெண், வேந்தனிடம் சில சான்றிதழ்களை கொடுத்துச் சென்றார். கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் தான் அவைகள். மொத்தமே ஒரு பத்து சான்றிதழ்கள் தான் இருந்திருக்கும்.

ஒவ்வொன்றாக பெயர் வாசித்து கொடுத்துக் கொண்டிருந்தவன், இறுதி மூன்றிலும் மித்ராவின் பெயர் இருக்க, "ஆழி" என்றழைத்து அவள் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் மொத்தமாக நீட்டி நின்றான்.

அழைத்தவன் தன் அழைப்பை உணர்ந்திடவில்லை. ஆனால் பெயர் கொண்டவளுக்கு அதீத அதிர்ச்சி. தனது பெயர் அழைக்கப்பட்டதும் எழுந்து நின்று விட்டாள் தான். ஆனால் இருப்பிடம்விட்டு அசையவில்லை. இன்னும் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளப்படாமல் தன் கையிலேயே இருக்கவும், அவளை நிமிர்ந்து பார்த்தான் வேந்தன். அவளது அதிர்ச்சி அப்பட்டமாக முகத்தில் தெரிந்திட, உடனே "மித்ர ஆழினி" என்று முழுப்பெயர் உச்சரித்தான்.

அவனை வெறித்தபடியே நடந்து வந்தவள், 'இதுவரை மித்ரானு கூட அழைத்தது இல்லை. இன்னைக்கு என்னவோ ரெம்ப உரிமையா ஆழினு அழைக்கிறார்... யார் தந்தார்கள் அந்த உரிமையை... ஆழியாம் ஆழி...' என்று மனதிற்குள் திட்டியபடி வேந்தனை முறைத்துக் கொண்டே நெருங்கினாள்.

அவன் அருகே சென்றவுடன் மற்றவர்களுக்கு கேட்காத குரலில் ஆனால் வேந்தனுக்கு தெளிவாக புரியும்படி, "கால் மீ ஒன்லி மித்ரா. உங்களுக்கு நான் எப்பவும் மித்ரா மட்டும் தான். வெளி ஆளுங்க என்னை ஆழினு அழைச்சா எனக்கு பிடிக்காது" என்று கூறி மீண்டும் அவனை முறைத்துச் சென்றாள்.

மித்ர ஆழினி என்பவள் எப்போதும் தன் மனதிற்கு நெருங்கியவர்களுக்கு மட்டும் தான் ஆழியாக இருக்க விரும்புவாள். முதல்முறை பார்ப்பவர்களுக்கும், பழக்கம் இல்லாதவர்களுக்கும் மித்ரா மட்டுமே. தோழிகளுக்கு டியூரோ. இதுவரை அவள் குடும்ப நபர்கள் தவிர வேறு எவரும் அவளை ஆழி என்று அழைத்தது இல்லை. அந்த எண்ணம் மட்டுமே அவளது மனதில் வேந்தனுக்கு அந்த உரிமையை தர விடாது தடுத்திருந்தது.

வேந்தனுக்கோ எல்லாம் ஒரே குழப்பமாகவே இருந்தது. அவளது வார்த்தைகளில் கோபம் புதைந்திருப்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அது எதற்கு என்று தான் புரிந்திடவில்லை. ஆழி என்று அழைத்ததில் என்னவாகிப்போனது! அதற்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்! இத்தனை நாள் தான் தான் அவளை முறைத்து விழித்திருக்கிகறோம்... இன்று அவள் அவனை முறைப்படி மிரட்டிப் செல்கிறாளே! என்று நினைத்த நொடியில் அவன் இதழ்கள் கூட மெல்லிய சிரிப்பை உதிர்த்து... ஏன்? எதற்கு என்று தெரியாவிட்டாலும் குழப்பத்தில் தொடங்கி இளநகையுடன் முடித்திருந்தான் தன் மனதின் எண்ண ஓட்டங்களை...

०००००००००००००००

மாலை பணி முடித்து நேரே தன் Ph.D தேர்விற்கான கட்டணத்தை செலுத்தச் சென்றான். ஆனால் சற்று நேரத்திற்கு முன்பாக தான் ஒரு பெண் கட்டணம் செலுத்திச் செல்வதாகக் கூறபட, அவனது மனதில் சிறு நெருடல் ஏற்பட்டது.

'இந்த தேஜூ ஏன் இப்படிச் செய்கிறாள்! அவளிடம் இதுபற்றி பேசி, இந்த தொகையையும் கொடுத்துவிட வேண்டியது தான்' என்று மனதில் நினைத்துக் கொண்டு, ஈஸ்வரியுடன் தனிமையில் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தபடியே வீடு நோக்கி பயணித்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே ஆழி இல்லறம் திரும்பாமல் இருக்க, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, ஈஸ்வரியின் தயாரிப்பில் வந்த தேநீரை அருந்திவிட்டு, பேச்சை எப்படித் தொடங்குவது என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். முக்கியமாக அவளது செயல்களை எப்படித் தடுப்பது என்ற யோசனை தான் அவனுக்கு.

ஆனால் ஈஸ்வரியோ இங்கிருந்த இந்த ஒருவாரத்தில் அம்புதியின் மனதில் தன் மீதான காதல் குறையாமல் பார்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு இந்த மாலைப்பொழுதும் தனிமையும் அவளுக்கு நன்றாகவே கை கொடுத்தது.

ஈஸ்வரியைப் பொருத்தவரை ஆழி தாமதமாக இல்லம் திரும்புவதற்கு காரணம் தங்களுக்கு தனிமை ஏற்படுத்திக் கொடுக்கத் தான் என்றே நினைத்தாள். அதற்காக அம்புதியிடம் வரம்பு மீறியெல்லாம் பேசிவிட முடியாது.

அம்புதிக்கு தேஜூவின் மீதான காதல் பள்ளிப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டதால் தங்களது உரையாடல்கள் படிப்பிற்கு இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனத்துடன் தான் நடந்து கொள்வான். ஆனாலும் கூட சில நேரங்களில் அவளது வரம்பு மீறும் பேச்சுகளுக்கு சில நேரங்களில் செல்ல மிரட்டல்களும், சில நேரங்களில் பேசாமலும் கூட விட்டிருக்கிறான்.

இப்போது வேறொருத்தியுடன் திருமணம் ஆனப்பின்பு நிச்சயமாக துளியும் அது போன்ற பேச்சுகளை விரும்பமாட்டான் என்று அறிந்திருந்த ஈஸ்வரி, அன்றாட நிகழ்வுகளை மட்டுமே இதுவரை அவனிடம் பகிர்ந்துள்ளாள். ஆனாலும் இடையிடையே "என் வாழ்க்கை இப்படி மாறும்னு நினைக்கவே இல்லே மாமா" என்று அவளையும் அறியாமல் அழுதபடி உரைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொள்வாள்.

அன்றும் அதுவே தான் நிகழ்ந்தது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், அம்புதியின் அமைதியைக் கண்டு, அவளாகவே ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு,

"இந்த கல்யாணம் மட்டும் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம் நீங்க என் கூட சந்தோஷமா பேசிட்டு இருந்திருப்பிங்க மாமா... நானும் இப்படி தள்ளி இருந்து உங்களை வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்க தேவையில்லை... உங்க வாடிப்போன முகத்தை பார்க்கவே கஷ்டமா இருக்கு மாமா... எல்லாம் ஆழியால வந்த வினை" என்று கண்ணீரும் கடுப்புமாக உரைத்தாள்.

"நடந்து முடிஞ்ச விஷயம்... திரும்ப திரும்ப புலம்புறதுனால மாறப் போறதில்லை தேஜூ" என்றான் தன் மனமும் சோர்ந்து போகாமல் அவளையும் தேற்றும் விதமாக...

"எல்லாம் என் விதி... நான் ஆசைப்பட்டது எதுவும் எனக்கு கிடைச்சது இல்லே... எல்லாம் அக்காவுக்கு நான் கிடைக்கும். நீங்களாச்சும் எனக்கு கிடைப்பிங்கனு நம்பினேன்... அதையும் இல்லாம பண்ணிட்டா ஆழி..." என்று அவன் கூற்றையும் மீறி மீண்டும் புலம்பினாள்.

ஆழியின் இது போன்ற குணங்களை ஈஸ்வரியின் வாய்மொழியாக பலமுறை கேட்டு அறிந்திருந்தவன் தான் அம்புதி. ஆனாலும் இப்போதைய பிரச்சனைக்கு முடிவு காணாமல் ஏன் இந்த வீண் பேச்சு என்ற சலிப்பு தான் தோன்றியது அவனுக்கு.

எனவே "மாப்பிள்ளை பையன் ஓடி போனதுக்கு ஆழி என்ன செய்ய முடியும்!" என்றான் ஏனோ தானோ என்று.

"அந்த அமெரிக்க மாப்பிள்ளை தானாலாம் ஓடி போகலே... பெரியப்பா தான் விரட்டிவிட்டாங்க..." என்றாள் தன் கண்களை துடைத்தபடி.

"பின்னே! தன் பொண்ணை ஏமாத்தி கல்யாணம் செய்திட வந்திருக்கான்னு தெரிஞ்ச பின்னும் யாராச்சும் அவனை சும்மா விட்டு வைப்பாங்களா!" என்றான் அதே சலிப்போடு.

"அது தான் என் சந்தேகமே! பெரியப்பா மாப்பிள்ளை பையனை பத்தி விசாரிக்காமலா இருந்திருப்பாங்க! ஆழி தான் பெரியப்பாகிட்ட அந்த பையனைப் பத்தி இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லி பெரியப்பாவ விட்டே விரட்ட வெச்சிட்டா." என்று தானே நேரில் கண்டதைப் போல் தெளிவாக உரைத்தாள்.

நடந்த உண்மைகள் அடி முதல் நுனி வரை அம்புதிக்கு தெரிந்தவை தான். ஆனாலும் தன்னை திருமணம் செய்து கொள்ள ஆழி எப்படி சம்மதம் சொல்லலாம்! என்ற கண்மூடித்தனமான கோபம் தான் அம்புதிக்கு.

ஆனால் இப்போதைய பிரச்சனை அதுவல்லவே! தனக்காக இன்றளவும் செலவு செய்யும் தேஜூவிடம் இனி அந்த உரிமை உனக்கில்லை என்று எப்படி கூறுவது! என்று ஆழிக்கும் ஈஸ்வரிக்கும் நடுவில் கிடந்து தன் மனதை குழப்பிக் கொண்டான் அம்புதி.

முதலில் ஈஸ்வரியின் அதீத கற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்து, "அவ ஏன் பொய் சொல்லனும்? பொய் சொல்லி அந்த கல்யாணத்தை நிறுத்தினதுல அவளுக்கு என்ன கிடைச்சது!" என்றான்.

"அதான் நீங்க கிடைச்சிட்டிங்களே! அது தானே அவளுக்கு வேணும்." என்றிட அம்புதியின் சந்தேகம் வலுத்தது. முன்பு நிதானமில்லா கோபத்தில் எதனையும் யோசிக்க மறந்து கிடந்தவன், இன்றோ குழப்பத்திலும் நிதானமாக சிந்திக்கத் தொடங்கினான்.

"ஏன்? ஆழி என்னை விரும்பினாளா?" என்றான் ஒற்றைப் புருவம் உயர்த்தி.

அம்புதியிடம் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திடாத ஈஸ்வரி ஒரு நொடி அரண்டு விழித்து நிலைதடுமாறித் தான் போனாள்.



காதல் கரை எட்டுமா!!!