• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அம்புதியின் அட்டூழியங்கள் அறை பரிமாற்றலோடு நின்றிடவில்லை. அடுத்த அதிர்ச்சி நாடகத்தை சமையலறையில் அரங்கேற்றியிருந்தான் தனக்கு நேரப்போகும் அதிர்ச்சைகளைப் பற்றி அறியாமல்...

இரவு உணவிற்கு தன் ஒருத்திக்காக சட்னி அறைக்க விருப்பமின்றி துருவிய தேங்காயை வார்த்திருந்த தோசையின் மேல் பரவிவிட்டு, அதன் மேல் நாட்டு சர்க்கரை தூவி, இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு மொறுமொறு சுருள் தோசையாக சுருட்டி எடுத்து வைத்திருந்தாள். பார்ப்போருக்கு உமிழ்நீர் நிச்சயம் சுரந்திடும் அந்த மொறுமொறுப்பிற்கு. தோசை வார்த்த கையோடு அடுப்புமேட்டை ஒதுங்க வைத்துவிட்டு, காலியான மாவு பாத்திரத்தை கழுவிக் கொண்டிருந்தாள் ஆழி.

அது தெரியாது அடுப்பறை நுழைந்தவன் அவள் மறுப்பு கூறுவதற்கு முன்பாக அவள் வார்த்து வைத்திருந்த இரண்டு தோசைகளையும் எடுத்துக் கொண்டு, "எனக்கு இன்னும் ரெண்டு தோசை" என்று கூறி மீண்டும் கூடம் வந்து அமர்ந்து கொண்டான்.

அம்புதியின் செயல்கள் அவளுக்கு அதிர்ச்சியூட்டுவதற்கு பதிலாக அளவிற்கு அதிகமாக சிந்திக்க வைத்திடவே, இம்முறை அவனை விரட்டிச் சென்று என்னவென்றெல்லாம் கேட்டிடவில்லை. மாறாக இன்னும் சில நொடிகளில் தன்னைத் தேடி வருவான், அப்போது கேட்டுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்போடு, குளிர்பெட்டியிலிருந்து கேரட் ஒன்றை எடுத்து தோலுரித்து இழைக்கத் தொடங்கினாள்.

அவள் எண்ணங்களை பொய்யாக்காமல் சற்று நேரத்திற்கெல்லாம் அடுப்பறை வந்து அவளுக்குப் பின்னால் சத்தமில்லாமல் நின்றிருந்தான் அம்புதி. ஒருமுறை தன் பார்வையை சுழற்றிட அப்போது அவன் கண்ணில் பட்டது கழுவி கவிழ்த்தி வைக்கப்பட்டிருந்த மாவு பாத்திரம்.

'மாவு காலி என்றால் இவள் என்ன செய்கிறாள்!' என்ற சந்தேகத்தில் பின்னால் நின்றபடியே அவளை எட்டிப் பார்த்தான். பெண்ணவள் செய்யும் பணிகளைக் கண்டு தன் தேவையைக் கூற வந்தவன் கூட மௌனியாகினான்.

ஒரே நாளில் அதுவும் கடந்து சென்ற இந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் அளவிற்கதிகமாக உரிமை எடுத்துக் கொண்டது போல் தோன்றிட, எதுவும் பேசாமல் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து ஒரு கவளம் எடுத்து உண்டான்.

"உங்களுக்கு இனிப்பு பிடிக்காதுனு எனக்கு தெரியும்... சோ வம்படியா சாப்பிட வேண்டாம்... வெச்சிடுங்க..." என்று அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே அவன் வந்து நின்றதை அறிந்து, அவனுக்கு தித்திப்பான உணவுகளில் அவ்வளவாக நாட்டம் இல்லை என்பதையும் தெரிந்து, அவனது திணறல்களைப் புரிந்து பதிலுரைத்திட, ஆடவன் அதிசயித்து நின்றான்.

தான் வந்து நிற்பதை எப்படி அறிந்து கொண்டாள் என்ற யோசனையுடனேயே கைகளைக் கழுவிக் கொண்டு, அவனும் தனக்குத் தெரிந்த புளி சட்னி அரைப்பதாகக் கூறி அவளுக்கு உதவ முன் வந்தான். மனதில் ஒரு ஓரத்தில் தன் காதல் கனவுகள் வந்து செல்ல, சிறு வலியுடனேயே அதனைக் கடந்து சென்று தன் பணியைத் தொடர்ந்தான்.

துருவிய கேரட் மற்றும் இஞ்சியுடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் அனைத்தையும் கோதுமை மற்றும் சம அளவு பச்சரிசி மாவில் கலந்து, அவனுக்கு பிடித்தது போல் அதிக நெய் சேர்த்து மொறு மொறு தோசையாக வார்த்து, அவன் அரைத்து வைத்திருந்த சட்னியோடு சேர்த்து பரிமாறிட, பல நாட்களுக்குப் பிறகு இரவுணவு வயிறு நிறைய உண்டான் அம்புதி.

ஆழியுமே அவன் அரைத்த சட்னியின் ருசியில் ஒரு தோசை அதிகமாகவே உண்டதோடு அதற்கு அவனுக்கு நன்றியும் உரைத்தாள்.

கணவன் மனைவி போல் அல்லாமல் ஓரறை நண்பர்களைப் போல் அவள் நன்றியுரைத்து நட்பு பாராட்டிய விதம் அம்புதியின் மனதில் அதே நட்புணர்வுடன் ஒரு நல்லதிர்வை ஏற்படுத்தியிருந்தது.

எனவே சிறு புன்னகையோடு அதனை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவனும் நன்றியுரைத்தான்‌.

தன் செயலுக்கு எதிர்வாதம் புரியாமல் நன்றியுரைத்ததோடு தனக்காக மெனக்கெட்டு தன் விருப்பம் அறிந்து செயல்பட்டவளைக் கண்டு அதிசயித்தவன் தன் அகம்பாவம் விடுத்து தானாகச் சென்று அவளிடம் காரணம் கேட்டான்.

"நீ என் கூட சண்டை போடுவேனு நெனச்சேன்" என்று பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று நின்று, அவள் தேய்த்து வைத்திருந்த பாத்திரத்தை நீரில் கழுவியபடி வினவினான்.

இதுவரை இப்படி இலகி நிற்கும் அம்புதியைக் கண்டிராதவள், அவனது செயலை சற்றே மிரட்சியோடு பார்த்தபடி "எதுக்கு?" என்றாள்.

அவளது ஒற்றை வார்த்தை வினாவிற்கு, 'இரவுணவு இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியாமல் தனக்கு இன்னும் வேண்டும் என கேட்டு நின்றதற்காக என்று சொல்வதா அல்லது இனிப்பு தோசை பிடிக்காது என்று மீதம் வைக்க வந்து நின்றதைச் சொல்வதா இல்லை வடையைத் திருடிக் சென்ற காகத்தைப் போல் தான் தோசையை திருடிக் சென்றதற்கு என்று சொல்வதா என்று திருதிருவென முழித்தபடி, "அது.... வட..... காக்கா..." என்று தன் மனதின் மொழிகளை தன்னையும் அறியாமல் உளறினான்.

சரியாக பாத்திரங்கள் தேய்த்து முடித்து, கைகளை தழுவி விட்டு அருகிலிருந்த துண்டில் துடைத்துக் கொண்டிருந்த ஆழி பக்கென சிரித்துவிட, அப்போது தான் தான் உளறியதை உணர்ந்தான் அம்புதி.

இவ்வளவு நேரம் இருந்த இணக்கமும் நட்புணர்வும் நொடியில் மாறிப் போனது. அவளது சிரிப்பில் மூண்ட கோபத்தை இதழ் மடித்து மறைத்து, வெண்பற்களை கடித்து "போதும் டி.... ஓவரா சிரிக்காதே! வாய் சுளிக்கிக்க போகுது... கருவாடு" என்றவனது முகத்தில் கோபம் கடுகுளவும் குறைவில்லாமல் தெரிய, அவ்வளவு நேரம் சிரித்து அவனை கடுப்பேற்றியவள், அவனது கடைசி வார்த்தையில் மூக்கு சுளித்து "நான் கருவாடுனா நீங்க காஞ்ச மிளகா" என்று கூறி நாக்கு துருத்தி மீண்டும் சிரித்தாள்.

கைகழுவிக் கொண்டிருந்தவன், இரு கைகளையும் சேர்த்து வைத்து உள்ளங்கை நிறைய தண்ணீர் பிடித்து அவள் முகத்தில் இறைத்தான். திடீரென முகத்தில் தெறித்த நீரில் அதிர்ந்து சிரிப்பை நிறுத்தியிருந்தாள் ஆழி.

தன் சீமாட்டியின் சிரிப்பொலி நின்றிட, அதனை நிறுத்திய பெருமை தனக்கே என்பது போல் இதழ்கடை வளைத்து அவளை ஏற இறங்க பார்த்தபடி நின்றிருந்தான் அம்புதி.

தன் மேலாடை முழுதும் நனைந்திருப்பதைக் கண்டு புசுபுசுவென பெருமூச்சு விட்டுக்கொண்டு அவளும் பதிலுக்கு அவன் முகத்தில் தன்னால் முடிந்தமட்டும் ஒற்றை கையால் தொடர்ச்சியாக தண்ணீரை வாரியிறைத்தாள்.

"ஏய்... நிறுத்து டி... நீ தானே டி ஃபஸ்ட் சிரிச்சே!"

"அதுக்காக இந்த குளிர்ல பச்சைத் தண்ணிய என் மேல தெளிப்பிங்களா!!! எனக்கு எப்படி குளிரும்னு உங்களுக்குத் தெரிய வேண்டாம்!!!" என்று கேட்டபடி இன்னமும் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தாள். மகிணனவனும் பதிலுக்கு அவள் மேல் மீண்டும் நீரை இறைத்தான்.

ஒருவர் மாற்றி ஒருவர் தண்ணீரை முகத்தில் சிதறடித்துக் கொள்ள, அடுப்பறை தண்ணீரில் குளித்தது தான் மிச்சம். ஒரு கட்டத்திற்கு மேல் குளிர் தாங்காமல் பெண்ணவள் தான் முதலில் தன் விளையாட்டை நிறுத்தினாள். மடவோளின் இதழ் நடுக்கம் கண்டு அறைக்குள் சென்று துவாலைத் துண்டு எடுத்து வந்து கொடுத்தான் அவள் மணாளன்.

முகத்தைத் துடைத்தபடி தண்ணீர் சொட்ட சொட்ட நின்றிருக்கும் தன் பதியவனைக் கண்டு அவனுக்கும் முகம் துடைக்கக் கொடுத்தாள் தன் கையிலிருந்த துவாலைத் துண்டை. அவனது முகத்திலும் இப்போது மென்முறுவல் தோன்றிட, ஆழி இப்போது இவனோடு சேர்ந்து சிரிப்பதா! கூடாதா! என்ற குழப்பத்திற்குச் சென்றாள்.

அந்த அசாத்தியப் பொழுதை தன் மனம் மாறாமல் கடந்திட நினைத்து அவ்விடம் விட்டு நகர்ந்து உடைமாற்றவென்று கூறி அறைக்குள் அடைந்து கொண்டாள் விறலியவள்.

அவள் உடை மாற்றி வருவதற்குள் அடுக்களையில் சிதறிக் கிடந்த தண்ணீரை பாதி துடைத்து எடுத்திருந்தான் அம்புதி. மீதியை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவனை உடைமாற்ற அனுப்பி வைத்தாள் மாயோள்.

அன்றைய இரவு இருவருக்கும் தூங்கா இரவாகத் தான் இருந்தது. அதனை ஒருவரிடமிருந்து மற்றவர் மறைக்க நினைத்து இருவரும் கண்களை மூடிப் படுத்திருந்தனரே ஒழிய தூக்கம் துரும்பிற்கும் இல்லை‌.

ஆழியின் மனமோ நாளை யார் வரப் போகிறார்கள் என்று ஓரளவு கணித்திருந்தது. யாருக்காக அவன் காதலையும் மறந்து, மறைத்து தன்னை ஏற்றானோ அவருக்காக மட்டுமே தான் தன் ஐயானவனும் தன்னிடம் பேசக் கூடியவன் என்று நன்கு அறிந்தவளாயிற்றே! ஆனால் தன் தந்தை வருவதை தன்னிடம் மறைக்கக் காரணம் என்ன? என்று தான் அவளுக்குப் புரியவில்லை.

அம்புதியின் மனமும் அதனையே தான் நினைத்துக் கொண்டிருந்தது. நாளை வரப்போகும் தன் மாமன் எத்தனை நாள் தங்குவார்! அத்தனை நாளுக்கும் அவர் மனம் நோகாமல், அவருக்காக மட்டுமே நடந்த திருமணம் என்று காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். 'மேடை ஏறியப்பின் நாடகத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் அல்லவா!' என்ற எண்ணம் அவனுக்கு.

ஆனால் அவன் அறியாமல் போனது, இது ஒன்றும் ஒரே நாளில் தொடங்கி ஒரே நாளில் முடியக் கூடிய மேடைநாடகம் இல்லையே! வாழ்நாள் முழுதும் தொடரக் கூடிய புனித பந்தத்தின் வாழ்க்கைப் பயணமாயிற்றே! இதில் நடிக்க மட்டுமே செய்வது அவ்வளவு எளிதல்லவே! தன் கதாப்பாத்திரத்தை தானாகவே வாழ்ந்தால் மட்டும் தான் நாடகம் முற்றுபெரும் என்பதை எப்போது அறிவான்!

நீண்ட நெடிய இரவுப்பொழுதுகள் எப்போதடா முடியும் என்று சலிப்பு தட்டியது இருவருக்கும். விடியலுக்கு முன்பாகவே அழைப்பு மணி, ஒலி எழுப்பிட, அதற்காகவே காத்திருந்த இருவரும் விழுந்தடித்துக் கொண்டு எழுந்து கொண்டனர். அவள் சென்று திறப்பாள் என்று அவனும், அவன் சென்று திறப்பான் என்று அவளும் காத்திருக்க, மீண்டும் ஒருமுறை ஒலி எழுப்பப்பட அம்புதி எழுந்து சென்றான்.

அவனைத் தொடர்ந்து கூடம் வந்தவள், மின்விளக்கு சொடுக்கியைத் தட்டினாள். அதற்குள் ஆழியின் மனமோ அன்னை தந்தையை எதிர்பாராதது போல் நடிக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு அவளை தயார்படுத்திக் கொண்டிருந்தது.

'ப்பா... என்ன ப்பா சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிறிங்க!' ஆங் இந்த மாடுலேஷன் ஓகேவா இருக்கும்... இப்படியே கேட்க வேண்டியது தான் என்று மனகணக்கு போட்டபடி நின்றிருக்க, அதே மாடுலேஷன் ஆணின் குரலில் வந்து அவள் செவிகளை நிறைத்தது.

"மாமா... என்ன மாமா சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கிறங்க... வாங்க அத்தை... ரெண்டு பேரும் வர்றிங்கனு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானே ஸ்டேஷன் வந்து அழைச்சிட்டு வந்திருப்பேனே!" என்று இன்முகமாக கண்ணில் சுவாரசியம் கலந்த பார்வையுடன் ஞானபாண்டியனையும், வெங்கடேஸ்வரியையும் வரவேற்றான் அம்புதி.

ங்ஙே...வென விழித்தபடி திறந்த வாய் மூடாது அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆழி.

'இவருக்கு தெரியும் தானே! இவர் தானே நேத்து சொன்னாரு... அந்த ரூமுக்கு ஆள் வர்றாங்கனு! ஒருவேளை வேற யாரையாச்சும் எதிர்பார்த்திருந்திருப்பாரா!!! ஆனா நைட் நான் சமைச்சதை சாப்பிட்டது மட்டும் எப்படி! வேற யாருக்காகவும் இதெல்லாம் செய்யமாட்டாரே!' என்று அவளது மனம் கேட்ட எந்த கேள்விக்கும் அவளுக்குமே பதில் தெரியாமல் இன்னமும் அதிர்ச்சியோடேயே நின்றிருந்தாள்.

மேலும் 'ஒருவேளை நேத்து நடந்தது எல்லாம் நம்ம மனப்பிரந்தியா இருக்குமோ!! இல்லே இல்லே.... கட்டிங்கோ! குவாட்டரோ! எதுவா இருந்தாலும் இந்த மனுசஷனையே கேட்டிட வேண்டியது தான்.' அத்தனையும் மனதின் குரலாக மட்டுமே இருக்க, ஆழி இன்னமும் தன் அதிர்விலிருந்து வெளிவராமல் அப்படியே தான் நின்றிருந்தாள்.

"ஏய்... ஆழி... என்னடி கண்ண திறந்து வெச்சு கனவு கண்டுட்டு இருக்கியா! அப்பா கேட்குறது உன் காதுல விழுதா இல்லேயா!" என்று அவளது அன்னை வந்து உளுக்கியப் பின் தான் சுயவுணர்வு பெற்றாள்.

"அது ஒன்னு இல்லே அத்தே... நீங்க வர்றது தெரியாதுல... அதான் ஷாக்ல இருக்கா... ஆழி... மாமா 'நீ எப்படி இருக்கே'ன்னு கேட்டாங்க... மொதோ அவங்களை கவனி" என்று அவள் அருகில் வந்து நின்று அடுத்து அவள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொடுத்தான்.

போதாகுறைக்கு அவளது காதில் 'வழக்கம் போல இப்படி திருதிருனு முட்டகண்ணை வெச்சு முழிச்சே காட்டிக் கொடுத்திடாதே! போய் உன் அப்பாகிட்ட பேசு' என்று ரகசியம் மொழிந்தான். அவனுக்கும் தன் ஆம்படையாள் ஏன் இப்படி சிலையாக நிற்கிறாள் என்று தெரியும் தானே!

'என்னமா நடிக்கிறாரு... சினிமாக்காரன் தோத்துப் போயிடுவான். டிரைக்கடர்ஸ் பார்த்தா அப்படியே அள்ளிக்கிட்டு போயிடுவானுங்க... நானே கேடி... இவரு கேடிக்கும் கேடியா இருப்பாரு போல்' என்று ஆழியின் மீண்டும் மேலெழுந்த மனதின் குரலை அடக்கி, சிரித்த முகமாக வேக எட்டுகள் வைத்து தந்தையின் அருகே சென்று, அவர் தோளில் சாய்ந்து,

"ப்பா..." என்று அழைத்திட, அவரும் கண்ணில் நீர் அரும்பியபடி தன் புத்திரியை பாந்தமாக அணைத்துக் கொண்டார்.



காதல் கரை எட்டுமா!!!
அடுத்த பதிவு இன்னும் சில மணி நேரங்களில்❤️
 
Top