• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

08. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சத்யபாரதி பணியில் சேர்ந்த அன்று அவளுக்கு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை அறிமுகம் செய்து வைத்தான் கிருஷ்ணா.

அப்போதுதான் அங்கே அவளைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆண்கள் என்று புரியவும், இதில் ஏதும் உள் நோக்கமிருக்குமோ என்று நொடியில் ஏதேதோ கற்பனையில் மனம் கலங்கி நின்றபோது,

"ஹூம்.... இதைத்தான் நல்லதற்கு காலமில்லை என்பது" என்ற கிருஷ்ணாவின் சோகமான குரலில் நடப்புக்கு வந்தவள்,


"எ..என்.. என்ன சார்" வினவினாள்.

"மிஸ்டர் ராஜேந்திரன் உனக்கு இந்த வேலை மிகவும் தேவை என்று கேட்டுக் கொண்டதால் தான் என் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெண்ணான, உனக்கு இந்த வேலையைத் தந்தேன். நீயானால் வில்லனாக எண்ணுகிறாயே" என்றவன் தொடர்ந்து,

“உன் நிலையில் நீ எண்ணியதை தவறு என்றும் சொல்ல முடியாது தான் பாரதி. புதிய இடம்,புதிய மனிதர்கள், பழகிக் கொள்ள கொஞ்சம் நாளாகும். ஆனால் ஒன்றை மட்டும், எப்போதும நீ நினைவில் வை. உனக்கு என்ன உதவி என்றாலும் நீ என்னைக் கேட்க தயங்க வேண்டாம். ஒரு நல்ல நண்பனாக இருப்பேன்" என்றபோது அவளுக்கு கண்ணனின் நினைவு வந்தது

அவனும் இதைப்போலத்தான் சொன்னான். ஆனால் அவளுக்கு பெரிதும் தேவைப்பட்ட வேளையில் வரவில்லை. தூரம் ஒரு காரணமாய் இருக்கலாம், தொலைபேசியில் கூட ஆறுதல் சொல்ல முன் வரவில்லையே? அப்படி அவள் என்ன தவறு செய்துவிட்டாள்? வேதனையுடன் எண்ணியவள் உடனேயே "ம்ஹூம், தப்பு, அவனுக்கும் அவளுக்கும் இனி ஒரு சம்பந்தமும் கிடையாது" என மனதுக்கு கடிவாளமிட்டு விட்டாள். ஆனால் வருத்தத்தை ஒதுக்கமுடியவில்லை.

நண்பனாக ஏற்கச் சொன்ன கிருஷ்ணாவிற்கு "நன்றி தெரிவித்தாள் சத்யா.

அவளது வாடிய முகத்தை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, "யூ ஆர் மோஸ்ட் வெல்கம் பாரதி" என்ற கிருஷ்ணா தொடர்ந்து, "இன்னொரு விஷயம் பாரதி, வேறு எங்கேயும் விட இங்கே நீ எப்போதும் பாதுகாப்பாக இருப்பாய். அதற்கு நான் பொறுப்பு" என்று சொல்லவும்,

நிறுவனத்தின் தலைவனே அவளது பாதுகாப்புக்கு பொறுப்பேற்று கொள்கிறானே, இதற்கு மேல் என்ன வேண்டும்? ?மனதின் குழப்பம் நீங்க, பயம் விலகி அவளது முகத்தில் சின்னதாய் ஒரு புன்னகை உண்டாயிற்று.

பாராதது போல பார்த்திருந்தவனுக்கு நிம்மதி உண்டாக, மறுநாள்,வெளியே ஒரு முக்கிய வேலை இருப்பதால் அவனால் வர இயலாது என்று செய்ய வேண்டிய பணிகளை குறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அவளை கிளம்பச் சொன்னான் கிருஷ்ணா

☆☆☆

மறுநாள்


தர்மலிங்கத்திற்கு அறுவை சிகிச்சை நல்ல விதமாக நடந்ததாக தங்கைக்கு சித்தார்த் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தான்.

அடுத்த இரண்டு நாட்கள் கிருஷ்ணா நிறுவனத்திற்கு வரவில்லை. அவன் பணித்துவிட்டு சென்றிருந்ததால் தொய்வின்றி பணிகள் தொடர்ந்தது. அவளுக்கு இட்ட வேலைகளை திருத்தமாக செய்தாள். அவன் வராத இரண்டாம் நாளுக்கும் மின்னஞ்சல் மூலமாக செய்ய வேண்டிய பணிகளை அனுப்பியிருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து மாமாவைக் காண, பெங்களூரில் இருந்து, மகனுடன் வசந்தி வந்திருந்தாள். அவளுடன் மரியாதை நிமித்தமாக தர்மலிங்கத்தை நலம் விசாரிக்க சென்றாள் சத்யபாரதி. அப்போது கனகவல்லிக்கு அவள் அங்கே வேலை பார்க்கும் விவரம் தெரிய வர,

"இதென்ன கூத்து ? உன் அண்ணன் நல்லா சம்பாதிக்கிறார். உன் அண்ணிக்கும் தான் என்ன? கணக்கு வழக்கில்லாம சொத்து பத்து கிடக்குது. அதெல்லாம் போறாதுன்னு நீ வேற சம்பாதிக்க கிளம்பிட்டியாக்கும்??" என்றபோது சத்யாபாரதிக்கு முகம் மாறாமல் காப்பது சிரமமாகிற்று.

"அவள் சின்னப் பொண்ணுதானே அத்தை? பணத்துக்காக அவள் வேலை பார்க்க வரவில்லை. கொஞ்சம் நாள் வேலை பார்த்தால் வெளி உலகத்தை புரிஞ்சுக்க முடியும். தன்னம்பிக்கையோட எதையும் எதிர்கொள்வாள். வீட்டுக்குள் அடைச்சு வச்சுட்டா போற வீட்டையும் மனிதர்களையும் எப்படி பார்த்துக்கொள்ள முடியும்? என்று வசந்தி அழுத்தமாக சொல்லவும் மேற்கொண்டு கனகவல்லி பேசவில்லை. அவளைப் பொறுத்தவரை சத்யபாரதி அவளுடைய மகளுக்கு போட்டியாக வராமல் இருந்தாலே போதும். வீணாக வாயைக் கொடுத்து சீண்டிவிட்டால் விபரீதமாகி விடக்கூடும், என்று எண்ணினாள்.

தர்மலிங்கத்திடம் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு உடனடியாக கிளம்பிவிட்டனர். திரும்பும் வழியில் வசந்தி சத்யாபாரதியை சமாதானம் செய்ய முயன்ற போது "நீங்கள் சொல்ல வேண்டுமா அண்ணி ?அவர்கள் குணம் தெரிந்ததுதானே? நான் அதை பெரிதாக நினைக்கவில்லை" என்று முடித்து விட்டாள்.

வசந்தி அங்கே இருந்த நாட்களில் சத்யாபாரதி ஒதுக்கம் காட்டாமல் சுமூகமாக நடந்து கொண்டதில் அவளுக்கு நிம்மதியாக இருந்தபோதும், உள்ளுக்குள் ஒரு வருத்தம் மட்டும் விலக்க முடியாமல் இருந்தது. சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்....

☆☆☆

தர்மலிங்கத்திற்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர் கூறிவிட்டதால் அவர்கள், குடும்பத்துடன் சென்னையில் தங்கிவிட முடிவு செய்தனர். கனகவல்லிக்கு கண்ணன் அங்கே இருப்பது தெரிய வந்தபோது, அளவில்லா ஆனந்தம். காரணம் மகளையும் அங்குதானே கல்லூரியில் சேர்த்திருக்கிறாள். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினால் விரைவில் திருமணம் பேசி முடித்து விடலாம் என்று மளமளவென்று கற்பனைக் கோட்டையை கட்டிவிட்டாள். ஆனால் மருத்துவமனையில் சத்யாபாரதியை பார்த்ததும் உள்ளூர கொதித்துப் போனாள். இருந்தாலும் கண்ணன் அங்கே இருப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி சித்தார்த் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் வசதியாகிப் போனதால் வசந்தியிடம் கூட அவள் மூச்சு விடவில்லை.

தர்மலிங்கம் குடும்பத்துடன் சென்னையில் தங்கவிருப்பது சித்தார்த் மூலம் சத்யாபாரதி அறிந்த போது கொஞ்சம் துணுக்குற்றாள். மாமாவைக் காண வசந்தி வரப் போக இருப்பளானால், விலகிப் போக எண்ணி இங்கே வந்த அவளது நோக்கம் எப்படி நிறைவேறும் என்று கலங்கினாள். ஆனால் இனி அது பற்றி யோசிப்பதில் பிரயோஜனம் இல்லை. கூடவே அவளுக்கு ஒன்று நினைவு வந்தது, அது எப்போதும் தம்பி, தம்பி என்று பேசும் அண்ணி இப்போதெல்லாம் மறந்தும் அவனைப் பற்றி அவள் முன்பாக பேசுவதில்லை. அது ஒருவகையில் நிம்மதியாக இருந்தபோதும், இன்னொரு விதமாக கண்ணன் கேட்டுக் கொண்டதால் அப்படி அண்ணி நடக்கிறாளோ என்று தோன்றி அவளுக்கு வலிக்கவும் செய்தது. ஏனெனில் அண்ணி அப்படிப்பட்டவள் இல்லை என்று அவள் அறிவாள்.

சத்யாபாரதிக்கு இந்த மன சஞ்சலங்களை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட அவளது வேலை துணை செய்தது. அடுத்து வந்த நாட்களில் வேலையும் மெல்ல பழக்கமாயிற்று. ஒருவாறு அந்த நிறுவனத்தில் பொருந்திக் கொண்டாள்.

தினமும் வேலைக்கு செல்வதும் வீடு திரும்பினால் ரூபாவுடன் கடற்கரைக்கு காலாற நடந்துவிட்டு மறுநாளுக்கு தேவையானற்றை வாங்கி வருவதும், இரவு சாப்பிட்டபடி சற்று நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்குவதுமாக வழக்கமாகிவிட்டிருந்தது.

☆☆☆

இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில்..

விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக்கிழமை...

ரூபாவிற்கு சென்னையில் எல்லா இடங்களும் ஓரளவுக்கு பரிச்சயம் என்பதோடு இருசக்கர வாகனமும் நன்றாக ஓட்டுவாள் என்று அறிந்தபிறகு அவளை துணைக்கு அழைத்துக்கொண்டு ஜவுளி கடைக்கு சென்றாள் சத்யபாரதி.

அடுத்த வாரம் அண்ணன் - அண்ணி திருமண நாள் வருகிறது. தன் சம்பளத்தில் நல்லதாக அண்ணிக்கு ஒரு புடவையும் அண்ணனுக்கு டி-ஷர்ட் பேன்ட் வாங்கி பரிசளிக்க விரும்பினாள். சொல்லப்போனால் அண்ணியிடம் இல்லாதது என்று எதுவுமே இல்லைதான். இதுநாள் வரை பரிசாக அவளுக்கு எதுவுமே வாங்கி கொடுத்தது கிடையாது. வெறும் வாழ்த்துதான் அனுப்ப முடிந்தது. இன்றைக்கு தான் பரிசு அளிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புடவை பகுதிக்குள் சென்றால் அங்கே கிருஷ்ணா எதிரே புடவைகள் குவியலாக கிடக்க, இன்னும் எதையோ எடுக்க சொல்லிக் கொண்டிருந்தான்.

புடவையை அவன் யாருக்காக தேர்வு செய்கிறான் என்ற கேள்வி எழும்போதே மனதுக்குள் இனம்புரியாத ஒரு சிறு படபடப்பு உண்டாக, சத்யாபாரதி அவனை நோக்கி போவதா வேண்டாமா என்று தயங்கி நின்றாள்.

அலுவலகத்தில் கிருஷ்ணா அவளிடம் பாஸாக பந்தா காட்டியது கிடையாது. வேலை செய்வதை சுகமாக உணர்வதே அவன் அவளை தனக்கு கீழாக வேலை செய்யும் ஊழியராக பாவிக்காமல் சமதையாக நடத்துவதால்தான். ஆனால் இது பொது இடம். இங்கே அவனைத் தெரிந்தவர்கள் உடன் வந்திருந்தால் அவளாகப் போய் பேசுவதை தவறாக எண்ணக்கூடும், அவள் மேலும் யோசிக்குமுன்....

"சத்யாம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க? நான் கீழே தேடிட்டு இருந்தேன்" என்றவாறு வாகனத்தை உரிய இடத்தில் நிறுத்திவரச் சென்ற ரூபா வந்து சேர்ந்தாள். அவளது குரலில் திரும்பிய கிருஷ்ணாவின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

"ஹலோ பாரதி. வாட் எ சர்ப்ரைஸ்." என்றபடி அவளை நோக்கி வந்தான்.

சத்யபாரதி பதிலுக்கு புன்னகைத்துவிட்டு, ரூபாவையும் கிருஷ்ணாவையும் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்துவிட்டு, அவள் வந்த விவரம் சொல்ல, "ஓ! நல்லது பாரதி, என்றவன், ஒருகணம் தாமதித்து, "if u dnt mind எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ?" என்று வினவினான் கிருஷ்ணா.

"சொல்லுங்க சார், என்னால் முடிஞ்சா கண்டிப்பா செய்கிறேன் சார்,"

"ஒரு சேலை வாங்கணும், ரொம்ப நேரமா ட்ரை பண்றேன் ஒன்றுமே அட்ராக்டிவா இல்லை. நீ ஒரு சேலையை தேர்வு செய்து தர முடியுமா?" என்றதும்,


புடவையை தேர்வு செய்யச் சொல்கிறானே? யாருக்கு...??? சத்யாவின் மனதுக்குள் சிறு குறுகுறுப்பு உண்டானது...
 

Attachments

  • images (10)-1.jpeg
    images (10)-1.jpeg
    31.5 KB · Views: 10
Last edited: