• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
670
இரண்டு நாட்கள் எந்த வித குழறுபடியும் அற்று நன்றாகத்தான் நகர்ந்தது. இரவு வேளைகளில் அவளை தொந்தரவு செய்யும் அந்த அழைப்பினை தவிர.
முதல் நாள் இரவின் மடியில் என்ன சுகத்தை கண்டாளோ? தன்னை மறந்து நீண்ட நேரமாக தூங்கி எழுந்து நேரத்தை பார்க்கையில், வழக்கத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாகவே எழுந்தாள்.

"அய்யோ.... போச்சா... இன்னைக்கு யாரு வாய்க்கு அவலாக போறேனோ?" தனக்குள் முணுமுணுத்து கொண்டவளுக்கு, தலமை ஆசிரியர் தன்னை கண்டிப்பார் என்ற கவலை இல்லை. அவர் திட்டுவது போல் அவளும் நடந்து கொண்டதில்லை.


சொல்லப் போனால், தனக்கான கடமையினை, கால தாமதமின்றி செய்வதில், அந்த பாடசாலையில் அவளுக்கு நிகரானவர் எவரும் இல்லை என்று தான் கூறவேண்டும்.
அதனாலேயே இந்த விடையத்தில் அவளை யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது. எப்படி பிடிக்கும்?
எதற்கெடுத்தாலும் பிரியாவின் சின்சியாரிட்டி இந்த ஸ்கூலில் யாருக்காவது இருக்கா? சின்ன வயசா இருந்தாலும், பொறுப்பா நடந்துக்கிறா... சின்ன பொண்ணு தான்... ஆனா இதை இப்பிடி தான் செய்யணும்னு சொல்லுறதுக்கு முன்னாடி, அதை புரிஞ்சுக்கிட்டு தன்னோட கடமைகளை செய்யிறா.. நீங்களும் அவளை பாத்து பழகிக்கங்க.." என தலமை ஆசிரியரில் இருந்து, பிறின்சிப்பல் வரை, அவளை புகழ்கையில், மற்றவர்களுக்கு கண்டாகத்தானே செய்யும்.


அவள் முன்பு அதை காண்பிக்கா விட்டாலும், ஏதாவது ஓர் இக்கட்டான சூழ்நிலையில், ஒரு வார்த்தை அவள் கூறி விடக்கூடாது.


"உனக்கென்னம்மா.... இந்த ஸ்கூல்ல இருக்கிற பெரிய தலைகள் பூராத்தையும், கைக்குள்ள போட்டு வைச்சிருக்க... நீ என்ன சொன்னாலும் கேட்பாங்க.. நாங்க அப்பிடியா?" என ஜாடை மாடையில் பேசுகையில், அவர்களது பொறாமை அப்பட்டமாகவே தெரியும்.


இன்று அவளது தாமதம் அவர்களுக்கு சாதகமாக போவதை நினைக்கையில், உள்ளுக்குள் பதட்டமாகத்தான் செய்தது.
மேலும் தாமதிக்காது தயாராகி வெளியே வந்தவள் கண்களில் தென்பட்டான் சத்தியன்.

இப்போதெல்லாம் இது அவளுக்கு புதிதல்ல. எப்போது எதிர் வீட்டில் குடி வந்தானோ, மறு நாள் காலையில் இருந்தே, இந்த சந்திப்பு நடந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. கண்டும் காணாதவள் போல் சென்று விடுவாள்.
இன்றும் அதே போல் கேட்டினை பூட்டி விட்டு விறுவிறுவென நடந்தவளுக்கு, வழமை போல் நடந்தே பாடசாலைக்கு செல்வதற்கான அவசாகம் போதாத காரணத்தினால், அருகில் இருந்த பஸ் ஸ்ராண்டில் தஞ்சம் புகுந்தாள்.


பாவம் அவளது போதாத காலமோ என்னமோ! பஸ்ஸும் நீ நினைத்த மாத்திரத்தில் என்னை புடித்து விட முடியாது என நினைத்ததோ என்னமோ!


'இதுங்க வேற இன்னைக்கு வச்சு செய்யுதே! பஸ் தான் வேண்டாம்... இந்த ஆட்டோக்கள் எங்க போச்சு? ஸ்கூல் போய் சேருறதுக்குள்ள பதட்டத்திலயே நெஞ்சு வெடிச்சிடும் போலயே!' தனக்குள் முனு முனுத்தவளாய், கை கடிகாரத்தையும் வீதியையும் நொடிக்கு ஒரு முறை பார்த்திருந்தவள், கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் எதிரே வந்து நின்றான் அவன்.


அவன் வேறு யாருமல்ல.. அன்று யாரை பார்த்து பயந்தாளோ, அவனே தான். அவன் பெயர் சந்ரு...


இயற்கையிலேயே பெண்களை ஈர்க்கும் அழகு கொண்டவன். இப்போது ஏனோ வாழ்வை வெறுத்து சன்னியாசம் செல்ல தயாராகியவன் போலொரு தோற்றம்.

பாவமாய் அவள் முன் நின்றவனை கண்டவளுக்கு உள்ளுக்குள் பீதியாக, அதை மறைப்பதற்காய், காற்றின் திசைக்கு ஏற்றால் போல், நெற்றியினை வருடி நின்ற முடியினை ஒதுக்கியவாறு, அவன் நின்ற திசைக்கு எதிராக திரும்பி நின்றவள் மணதினுள் எண்ணற்ற வினாக்கள்.....!
அந்த வினாக்களும் என்னவென ஆராயும் மனநிலை இப்போது அவளிடமில்லை. அதே சமயம் எதற்கு என்னையே பின் தொடர்கிறாய் என்று அவளால் கேட்கவும் முடியவில்லை.

அப்படி கேட்பதற்கு அது ஒன்றும் அவள் வீடு இல்லையே! மற்றவர்கள் கண்களுக்கு காட்சிப் பொருளாக விரும்பாது, வீதியை பார்த்து நின்றவளை மீண்டும் நெருங்கினான் அவன்.

"பிரியா...." ஒரே முறை தான் அழைத்தான். தனக்கான அழைப்பு இல்லாதது போல், மீண்டும் பஸ் வரும் திசையினை பார்த்தவள், அருகே நின்ற பெண்ணிடம்,

"இன்னைக்கு ஏன் பஸ் இவ்ளோ லேட் பண்ணுது?"


"தெரியலையேங்க... எனக்கும் ஆஃபீஸ் போக லேட்டாகிடிச்சு... தெரிஞ்சவங்க யாராச்சும் போனா, அவங்கள்ல தொத்தி போயிடலாம்ன்னு பார்த்தா, என் நேரமோ என்னமோ, யாரையுமே காண கிடைக்கல..." பாவம் அவள் அவஸ்தை அவளுக்கு... புலம்பவே ஆரம்பித்து விட்டாள்.

"ஓ..." என்றவளுக்கு ஏற்கனவே கால தாமதம் என்ற பதட்டம், இதில் அருகில் நிற்பவன் என்ன வில்லங்கத்தை இழுத்து வைப்பானோ... அத்தனை பேர் மத்தியில் அசிங்கப்பட நோருமோ என எண்ணியவளாய், பஸ்ஸுற்காக காத்திராது நடந்தவளை பின் தொடர்ந்தவன், சற்று தூரம் வந்ததுமே,

"பிரியா... இன்னும் எத்தனை நாளைக்கு என்னை தெரியாதது போல நடந்துக்க போற...? என்ன தான் நீ என்னை உதாசீனம் செய்தாலும், உன் பின்னாடி நான் வருவேன் பிரியா... நீ இல்லாம இங்க இருந்து போறதா இல்லை." என்றான் உறுதியான குரலில்.
அவனது வார்த்தைகள் அவளுக்கு நெருப்பினை கொட்ட, நின்று அவனை நோக்கி திரும்பியவள்,

"அப்பிடியா...? எத்தனை நாளைக்கு இது சாத்தியமாகும்ன்னு இப்பிடி ஒரு வார்த்தையை யோசிக்காம விடுறீங்கள் மிஸ்டர் சந்ரு..? ஊர்ல உங்க குடும்பம் உங்களை தேடாது?" நக்கலாய் விழுந்தது வார்த்தைகள்.


"நிச்சயமா இல்லை... நான் தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கனே! அவங்களோட அன்பு உண்மையானதில்லை... எல்லாமே பொய்... உன்னையும் என்னையும் பிரிக்கிறதுக்காக அவங்க போட்ட பிளான்...." அவளது நக்கல் தொணியை கண்டு கொள்ளாது சாதாரணமாக பதிலளித்தான்.

"எது ப்ளான் என்கிறீங்க மிஸ்டர் சந்ரு...? உங்களோட அந்த கு......" ஆத்திரத்தில் சட்டென வார்த்தையை விட இருந்தவள், இறுதி நேரத்தில் சுதாரித்து,

"இத பாருங்க மிஸ்டர்... உங்களோட சொந்த கதையையோ, சோக கதையையோ கேட்கிற நிலமையில நான் இல்ல... இதுக்கு மேல என்னை தொல்லை பண்ணாதிங்க.." எடுத்தெறிந்து பேசிவிட்டு, திரும்பி நடந்தவள், கையினை சட்டென பற்றிக் காெண்டான்.


"ப்ளீஸ் பிரியா.... ஏதோ என் போதாத காலம்... நடக்க கூடாதது எல்லாம் நடந்து போச்சு.. இப்போ எல்லாத்தையும் விட்டுட்டு, நீ தான் எல்லாமேன்னு வந்திருக்கேன். நடந்தது எல்லாத்தையும் கனவா நினைச்சு மறந்திட்டு, என்னை ஏத்துக்கோ பிரியா.. ப்ளீஸ்" காலில் விழாத குறையாக கெஞ்சியவனை பார்க்கும் போது பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் இரங்கவில்லை அவள்.
சுற்றும் முற்றும் பார்வையை பதித்தவளோ,

"முதல்ல என் கையை விடு! யாராவது பார்த்துட்டா எனக்குத்தான் பிரச்சினை" அவசர அவசரமாக அவனது கையினை விலக்க போராடினாள்.

"என்னை நீ ஏத்துக்குறேன்னு சொல்லு.. கைய விடுறேன்." உடும்பிற்கு சளைத்தவன் இல்லை என்பது போல் அவன் பிடி இறுகியது.


"மறுபடியும் மறுபடியும் ஏமாற நான் என்ன மதி கெட்டவளா? மரியாதையா கையை விடு! இல்லன்னா கூச்சல் போட்டு அசிங்க படுத்திடுவேன்."


"கூப்பிடு பிரியா! அவங்க கிட்டயே நடந்தத சொல்லி நியாயத்தை கேட்போம்." இதற்கெல்லாம் பயப்படுபவனா அவன்? தெரிந்தும் வார்த்தையை விட்டதை எண்ணி வருந்தியவளுக்கு, ஊரை கூப்பிட பயமாக இருந்தது.
பின்னே... நீதி கேட்கிறேன் என்கின்ற பெயர் வழியில், எல்லாவற்றையும் போட்டுடைத்து விட்டு இவன் சென்று விடுவான், நாளை பொழுதுகளில் அவள் அல்லவா அவர்களை எதிர் கொள்ள வேண்டும். முன்னால் போக விட்டு, பின்னால் அவளை அவதூறாக பேசிட மாட்டார்கள்?

"உனக்கு மரியாதை அவ்வளவு தான் சந்ரூ.... இப்போ நீ கைய விடல, நானே செருப்ப கழட்ட வேண்டியிருக்கும்" கோபம் கொப்பளித்தது அவள் கண்களில்.

"அடி பிரியா... உன் கோபம் தீருற வரை அடி! ஆனா என்னை வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாத"
இதற்குமேல் இவனிடம் அவள் எதை பேசுவாள்.
பேசப்போனால் உச்ச கட்ட கோபம் தான் உண்டாகும். அதனால் பயணும் இருக்க போவதில்லை. முடிந்தவரை யார் கண்களுக்கும் விருந்தாகாது, இவனை கடந்து சென்றிட வேண்டும் என மூளை எச்சரிக்க, அவனிடமிருந்து கையினை உருவப் போராடிய வேளை தான், அருகே சர்க்.... என்ற சத்தத்தோடு கார் ஒன்று வீதியினை தேய்த்து நின்றது.
பயத்தில் அவசரமாக திரும்பியவள் கண்களில் காரிலிருந்து இறங்கிய சத்தியன் தான் விழுந்தான்.

விழி மடல்களும் இரண்டும் இரத்தமென சிவந்திருக்க, விழிகளின் கவனமோ, அவள் கையினை பற்றியிருந்த அவனது கைகளில் அழுத்தமாக பதிந்தது.
இரண்டே அடிதான்... அவர்களை நெருங்கியவன், பிரியாவின் விழிகளுக்கு பார்வையை மாற்றி,

"யாரிது...? உனக்கு தெரிஞ்சவனா?" என்றான் இடிபோல் இரைந்து.

என்ன சொல்வாள் அவள்...? அவளுக்கு அவனை தெரியாதா...? ஆனால் அவனை தெரிந்தவன் போல் காட்டிக் கொள்ள மனம் வரவில்லை. தெரியும் என்றால் அவன் யார் என்ற கேள்வி வரும்.
உண்மையினை சொல்லும் தைரியம் அவளிடம் இல்லை. சொன்னால் அதன் பின் அவளால் அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க முடியாது குறுகித் தான் போக வேண்டும். சொல்லத் தெரியாது விழித்தவள் தலையானது.

"இல்லை..." என்பதாகவே அசைந்தது.

"யாருன்னு தெரியாதவன் தெருவில கையை பிடிச்சு இழுக்கிறான், கால்ல கிடக்கிறத கலட்டி குடுக்கிறத விட்டுட்டு..." பற்கள் நறநறவென கடிபட, அதன் இடுக்குகளில் வார்த்தையினை துப்பியவன், அவன் பற்றியிருந்த அவளது கையை வலுகட்டாயமாக அவனிடமிருந்து பிடுங்கி விட்டு,

"போய் கார்ல ஏறு பாரதீ...." என்றான் அவன் மேலிருந்து அனல் பார்வையை விலக்காது.
எப்போதும் சத்தியன் என்றால், வார்த்தைக்கு வார்த்தை எதிர் வாதம் செய்பவள், இன்று மகுடிக்கு கட்டுண்ட பாம்பாய், அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டவள் போல், அவனிடம் இருந்து தப்பித்தால் போதுமென ஓடிச் சென்று காரில் ஏறிக் கொண்டவள், வெளியே என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தாள்.

"யார்றா நீீ... எதுக்கு அவ பின்னாடி சுத்துற...?" அவள் மேலான அவனது உரிமை பேச்சில் குழம்பிப் போனான் சந்ரு.

"நா... நான்....." என முதலில் தடுமாறியவன்,

"அவளுக்கு என்னை நல்லா தெரியும் சார்.... ஆனா அதை கேக்க நீங்க யாரு...?" பயம் தான்... ஆனால் அதை வெளிக்கட்டவில்லை அவன்.

"கட்டாயம் நான் யாருன்னு தெரியுமா.. அவ புருசன்." என்றான் சற்றும் யோசிக்காது.

அவனது பதிலில் அதிர்ந்து, பேந்த விழித்தவன், "அது.... எ... எப்பிடி....? நான் நான்.... இரு.." ஏதோ சொல்ல வந்தவனை கையமர்வில் நிறுத்தக் கூறியவன் விழிகளில் அத்தனை கோபம்.

"இதுக்கு மேல ஒரு நிமிஷம் இங்க நின்னேன்னு வையி! அப்புறம் உன் உயிர் உனக்கே சொந்தமா இருக்காது. மரியாதையா போயிடு!" எச்சரித்தவன் உதடுகள் பேசியதோ என்னமோ! அவன் கோபத்தை இரு மடங்காக பறை சாற்றிய விடைத்து நின்ற நாசி பேசியது. அதில் பயந்தவன், வெளிறிய முகத்திடன் அவ்விடத்தை விட்டு போக திரும்ப,

"ஒரு நிமிஷம்...." என அவனை நிறுத்தியவன், அவன் நின்று திரும்ப, அவன் அருகில் சென்ற சத்தியன்.

"இன்னைக்குத் தான் உன்னை முதலும் கடைசியுமா அவகூட பார்க்கணும்.... இல்லன்னு வையி.... சொல்லிட்டு இருக்க மாட்டேன்..." என தொண்டையில் கீறு போடுவது போல் கைகளால், நாக்கினையும் கடித்து மிரட்டிய, அடுத்த நொடியே திரும்பி காரினை நோக்கி நடந்தான்.
 
Top