• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கிருஷ்ணா தனக்காக ஒரு புடவையை தேர்வு செய்து தரக் கேட்டதும், அது யாருக்காக இருக்கும் ? ஒருவேளை மனைவிக்காக இருக்குமோ?? என்று எண்ணும்போதே இனம் புரியாமல் மனது படபடத்தது. அதை காட்டிக் கொள்ளாமல், " ஷ்யூர் சார், என்ன விலையில் எடுக்கப் போறீங்க ? என்றவாறு சேலை குவியலை நோக்கி நகர்ந்தவளோடு நடந்தபடி,

"ப்ளீஸ், சார் வேண்டாமே,பாரதி, என் நண்பர்கள், அறிந்தவர்கள் கிருஷ்ணா என்று அழைப்பது வழக்கம். நீயும் அப்படியே அழைக்கலாம்" என்றதும்

"அது சரிவராது சார். அதே பழக்கம் அலுவலகத்திலும் வந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ? "

"நீ அப்படி சுயகட்டுப்பாடு இல்லாதவள் இல்லை பாரதி, சொல்லப்போனால் மற்ற ஊழியர்களுக்கும் நான் இப்படித்தான் சொல்வேன். அதனால் நாம் வெளியிடங்களில் சந்திக்க நேரும் போது பெயர் சொல்லி அழைக்கலாம். சார் என்றால் அலுவலக நினைப்பு தான் வரும்" அவன் அழுத்தமான குரலில் சொல்லவும் லேசாக புன்னகைத்துவிட்டு, "ஓகே ஓகே.. சா.. இல்லை, கிருஷ்ணா, இப்போது சொல்லுங்க என்ன விலையில் தேர்வு செய்யணும்?" என்று விஷயத்திற்கு வந்தாள்.

"ம்,ம்....that's good பாரதி, என்றவன் விலை விவரம் கூறிவிட்டு," டிசைனர் சேலைகள் என்பதால் விஷேசங்களுக்கு உடுத்துவது போல சற்று கனமில்லாததாக ஒன்றை தேர்வு செய்து கொடு"

"யாருக்கு தரக்கூடும் ? என்று மறுபடியும் தாவியது மனது. அதைவிடவும் அவனுக்கு மனைவி இருக்கிறாளா இல்லையா என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவல் தீவிரமாக உண்டாகிவிட, சிலகணங்கள் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசித்துவிட்டு ஒருவாறு திடத்தை வரவழைத்துக்கொண்டு,

"உங்கள் மனைவி எப்படி இருப்பார்கள் என்று சொன்னால் அதற்கு ஏற்ப புடவையை தேர்வு செய்வது சுலபமாக இருக்கும், ச..கிருஷ்ணா, என்று கேட்டுவிட்டு படபடக்கும் மனதுடன் அவன் பதிலுக்காக காத்திருந்தாள் சத்யாபாரதி.

அவளது கேள்வியும் முகபாவனையையும் கவனித்துவிட்டு,"இது என் சகோதரியின் திருமண நாளுக்காக பரிசு தர வாங்குவது பாரதி"என்றவனின் இதழ்களில் மர்மப் புன்னகை ஒன்று தவழ்ந்தது.

"ம்க்கும், அதை யாரு கேட்டார்கள்? சரியான அழுத்தக்காரன், மனைவி இருக்கிறாளா இல்லையா என்பது பற்றி சொல்லாது விட்டுவிட்டானே? என்ற ஆதங்கம் உண்டான போதும், மேற்கொண்டு கேள்வி எழுப்ப தைரியம் இன்றி சேலையை தேர்வு செய்வதில் முனைந்தவள், சில நிமிடங்களிலேயே அடர்பச்சை நிறத்தில் இள மஞ்சள் நிறப் பூக்களால் வேலைப்பாடுகள் செய்திருந்த சேலை ஒன்றை தேர்வு செய்து அவனிடம் தந்தாள் சத்யாபாரதி.

"வ்வாவ்.. இது அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் பாரதி, தாங்க்யூ சோ மச்" என்ற கிருண்ணா அதை தனியே வைக்க சொல்லிவிட்டு சத்யபாரதி தேர்வு செய்வதை பார்த்திருந்தான்

அண்ணி வசந்திக்கும் அதே மாதிரியாக ஒரு புடவையை அவள் தேர்வு செய்ய முயன்ற போது, "ம்ஹூம் பாரதி. அதே.. என்று கிருஷ்ணா மேற்கொண்டு பேசுமுன்பாக அவனது கைப்பேசி ஒலிக்க,"மன்னிக்கணும் பாரதி, ஒரு முக்கியமான கால் பேசிவிட்டு வர்றேன், நீ செலக்ட் பண்ணு நான் இதோ வருகிறேன், என்றுவிட்டு வேகமாக அகன்று சென்றான்.

சத்யபாரதி குழப்பத்துடன் அவன் போன திசையை சில கணங்கள் பார்த்துவிட்டு, அவன் சொல்ல வந்தது என்ன என்று யோசித்தவாறு அந்தப் புடவையை எடுக்கத் தயங்கி அடுத்ததாக இருந்த மாம்பழ நிறத்தில், அடர்வயலட் நிற பூக்களால் வேலைப்பாடு செய்திருந்த சேலையை தேர்வு செய்து முடிக்கையில் வந்தான் கிருஷ்ணா

சத்யபாரதி கையில் இருந்த சேலையை பார்த்துவிட்டு, "ரொம்ப அழகாக இருக்கிறது பாரதி, என்றவன் இரண்டு புடவைகளையும் பில் போட அனுப்பிவிட்டு, "உன் ஷாப்பிங் முடிந்து விட்டதானால் நீ கிளம்பு பாரதி. எனக்கு இன்னும் ஒரு வேலை பாக்கி உள்ளது, அத்தானுக்கும் உடை எடுக்க வேண்டும்" என்று கிருஷ்ணா சொல்ல

"நானும் தான், அண்ணாவிற்கு உடை, அப்படியே அவர் பையனுக்கும் வாங்க வேண்டும்," என்று புன்னகைத்தாள்.

"அப்புறமென்ன? அடுத்த தளத்தில் தான் ஆண்களுக்கான உடைகள், அங்கே போகலாமா? என்றவனிடம், 'போகலாம் சார், ஒரு நிமிஷம் பொறுங்க, என்று சற்று தள்ளி நின்று சுற்றிலும் வேடிக்கை பார்த்திருந்த ரூபாவை அழைத்து, “நாங்கள் இன்னும் வாங்க வேண்டியது இருக்கிறது ரூபா, "நீ ஏதோ வாங்கணும்னு சொன்னியே, இந்தப் பணத்தை வச்சுக்கோ. வேண்டியதை வாங்கிட்டு கீழே வெய்ட் பண்ணு" என்று அவளை அனுப்பிவிட்டு கிருஷ்ணாவுடன் அடுத்த தளத்திற்கு சென்றாள்.

என்னதான் அலுவலகத்தில் பார்த்துப் பேசி பழக்கமே என்றபோதும், இப்படி அவனுடன் தனியாக செல்வதை எண்ணி மனதுக்குள் லேசாக படபடப்பு உண்டாயிற்று. ..

கிருஷ்ணாவுடன் ஆண்களுக்கான ஆடைகள் பிரிவுக்கு சென்ற சத்யபாரதிக்கு தன்னை எண்ணி வியப்பாகத்தான் இருந்தது. சொல்லப் போனால் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வரை அவளுக்கு அந்நிய ஆடவருடன் பேசி பழகும் வாய்ப்பே கிடைக்கவில்லை எனலாம். வேலையில் சேர்ந்த பிறகு அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்றாலும் அது பணி சம்பந்தமாக மட்டுமான பழக்கம்.

ஆனால்.. இது அப்படி அல்ல, பார்ப்பவர்களுக்கு அவர்கள் யார் என்று என்ன தெரியும் ?? அவளை வேண்டுமானால் யாரும் அறியாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. கிருஷ்ணா அப்படி இல்லையே. அவனை அறிந்தவர்கள், ஏன் அவனது உறவினர்கள் யாரேனும் அவனோடு தன்னை காண நேர்ந்தால் என்ன நினைக்ககூடும். இந்த எண்ணம் தோன்றவும் சத்யபாரதிக்கு மனம் பரிதவித்தது. அதுவரை இல்லாத தயக்கமும் தோன்றிவிட நடையின் வேகத்தை குறைத்து அக்கம் பக்கம் பார்க்கும் பாவனையில் அவனை முன்னே செல்லவிட்டாள்.

தனது வேகநடையுடன் சற்று முன்னால் சென்று விட்ட கிருஷ்ணா அவளது பின்னடைவை சிறு தாமதத்திற்கு பிறகு உணர்ந்து, நின்று திரும்பி பார்த்து "பாரதி? ஆர் யூ ஆல்ரைட்?" என்றவாறு அவளை நோக்கி திரும்பி வரவும் வேறு வழி தோன்றாமல் தன் முயற்சியை கைவிட்டு, " எஸ், ஐ'ம் ஆல்ரைட் சார் " என்று அவனுடன் இணைந்து நடந்தாள். ஆனால் மனதின் படபடப்புதான் அதிகமாகிப் போயிற்று.

கிருஷ்ணா எதிரில் இருப்பவர்களை துல்லியமாக எடை போடக்கூடியவன் என்பதை அவனோடு பணிபுரிந்த கொஞ்ச நாளிலேயே சத்யபாரதி உணர்ந்திருந்ததாள். இப்போதும்கூட எங்கே அவளது மனவோட்டத்தை அறிந்து விடுவானோ என்ற தவிப்பில் ஊடே முகபாவனையை இயல்பாக வைத்துக் கொள்ள முயன்றாள்.

இருவருமாய் தொடர்ந்து நடக்க, மௌனத்தில் சிலகணங்கள் கழிந்த நிலையில்,கிருஷ்ணா சட்டென நிற்கவும் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்த சத்யபாரதி மலங்க விழித்தாள். அவளது முகத்தை பார்த்தவனின் முகம் கனிந்தது,

சிறு புன்னகை அரும்ப “என்னாச்சு பாரதி, பணம் எடுத்து வர மறந்து விட்டாயா? ஏன் இப்படி வியர்க்குது?" என்று கேட்டு தனது கைக்குட்டையை நீட்டினான்.

அவன் கேட்டது முதலில் ஒன்றும் விளங்கவில்லை. விஷயம் புரியவும் லேசாக முகம் சிவக்க, பார்வையை அவசரமாய் விலக்கி, "பணமெல்லாம் இருக்கிறது சார்,”என்று பதிலளித்தாள்.

"ம்ம்... அப்புறம் ஏன் இந்த பதட்டம்? உனக்கு தெரிஞ்சவங்களை இங்கே பார்த்தாயா?" என்று கிட்டத்தட்ட அவனுக்காக அவள் யோசித்ததை அவளுக்காக அவனும் எண்ணி கேள்வி கேட்கவும் ரொம்பவும் திணறிப் போனாள்.

" அ...அப்படி இங்கே எனக்கு உறவென்று யாரும் கிடையாது சார்" என்று ஒருவாறு சுதாரித்துக்கொண்டு பதில் சொன்னவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன் மேற்கொண்டு அவளை கேள்வி கேளாது விடுத்து,"அத்தானுக்கு நான் வேஷ்டி தான் வாங்கப் போறேன், உன் அண்ணாவிற்கு என்ன வாங்கப்போறேன்னு கேட்க வந்தேன்"

"வேஷ்டி,சட்டை தான் வாங்கலாம்னு நினைச்சேன், ஆனால் இங்கே ஃபார்மல்ஸ் எல்லாம் நல்லா இருக்கிறது. அதனால் அதையே வாங்கிடலாம்னு நினைக்கிறேன் சார்" இயல்புக்கு திரும்பிவிட்ட குரலில் அவள் கூறவும்,

"அப்போ அதை முதலில் எடுத்துவிடலாம், வா" என்று அளவு விபரம் கேட்டுக்கொண்டு அவனே ஒரு இளம் க்ரீம் பச்சை வண்ணத்தில் அழுத்தமான கோடுகளிட்ட முழுக்கை சட்டையும் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு ஜீன்ஸ் பேன்ட்டையும் தேர்வு செய்து வைத்துவிட்டு, மேல் தளத்தில் குழந்தைகள் ஆடைகள் இருப்பதாக தெரிவித்து, தானும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்து கொள்வதாக சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

அடுத்த தளத்திற்கு சென்ற பிறகே சத்யபாரதிக்கு சற்று ஆசுவாசம் உண்டாயிற்று. விதவிதமான குழந்தைகளுக்கான ஆடைகளை காண காண அவளது இறுக்கம் தளர்ந்து, குதூகலம் உண்டாக, அண்ணன் மகனுக்காக இரண்டு செட் புது வகை உடைகளை அவள் தேர்வு செய்து முடித்த பிறகே கிருஷ்ணா அங்கே வந்து சேர்ந்தான். அவனிடம் உடைகளை காட்டி அபிப்ராயம் கேட்டு அவன் நன்றாக இருப்பதாக சொன்னதும் பில் போட கொடுத்துவிட்டு, படிகள் வழியாக கீழ் தளம் நோக்கி இறங்கும்போது படிகளின் வளைவில் மேலே ஓடிவந்த சற்று பெரிய வயது பையன் எதிர்பாதவிதமாய் அவள் மீது மோதிவிட, தடுமாறி விழப்போனவளை பின்னால் வந்து கொண்டிருந்த கிருஷ்ணா சட்டென்று முன்னால் வந்து விழாது தாங்கிக்கொண்டான். பிடிமானம் இன்றி துலாவிய அவளுடைய கைகள் அவனது தோளைப்பற்றியது. நல்ல வேளையாக இருவரும் சமதளத்திற்கு வந்துவிட்டிருந்தனர், இல்லாவிட்டால் இருவருமே படிகளில் உருண்டு அசம்பாவிதம் நேர்ந்திருக்கும்.

படபடத்த மனதுடன் சிலகணங்கள் அவனது பிடியில் நின்றவள் சுய உணர்வு பெற்றதும் சட்டென விலகி வாசல் புறமாய் சென்றுவிட்டாள், கிருஷ்ணா அவள் போவதை சிறு புன்னகையுடன் நோக்கிவிட்டு பணம் கட்டும் இடத்திற்கு சென்றான்.

சத்யபாரதிக்கு எதிர்பாராமல் ஒரு ஆணின் அருகாமையில் சிலகணங்கள் நிற்க நேர்ந்ததும், அதை எத்தனைபேர் என்னவிதமாய் பாரத்தார்களோ என்ற தவிப்பும் படபடப்பும் அடங்கவில்லை. மேற்கொண்டு அங்கே நிற்க முடியாமல் அவசரமாக வெளிவந்த பிறகே, அவள் பணம் செலுத்தாமல் வாங்கிய உடமைகளை உள்ளேயே விட்டு வந்தது உறைத்தது...

 

Attachments

  • images (10)-1.jpeg
    images (10)-1.jpeg
    31.5 KB · Views: 14