• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சத்யபாரதிக்கு அந்த நிகழ்விலிருந்து தன்னை இயல்புக்கு கொண்டு வர சில கணங்கள் தேவைப்பட்டது. அதன் பிறகே வாங்கிய உடைகளுக்கான பணத்தை செலுத்தாமல் வந்துவிட்டதை உணர்ந்தவளாக அவசரமாக கடைக்குள் நுழைந்தாள். அதற்குள்ளாக கிருஷ்ணா ரசீதுகளை கொடுத்து உடைகள் அடங்கிய பைகளை வாங்குவதை கண்டு அங்கே விரைந்தாள். அவன் இயல்பான குரலில், "நானே உனக்கும் பணம் கட்டிட்டேன் பாரதி. உடைகள் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்" என்று அவளது பைகளை கொடுத்தான்.

"சா..சாரி சார், பில் பணம் எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க நான் கொடுத்துடுறேன் " என்று தடுமாறியவளாய் அவனைப் பார்ப்பதை தவிர்த்து தன் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்தாள் சத்யபாரதி.

" It's ok, Cool, பாரதி", என்றுவிட்டு பணவிவரம் சொல்ல, அவன் சொன்ன பணத்தை கொடுத்துவிட்டு, "ரொம்ப நன்றி சார்" என்றாள் சத்யபாரதி.

"No formalities பாரதி. சரி இன்னும் வேறு எதுவும் ஷாப்பிங் பண்ணனுமா? அல்லது அவ்வளவுதானா ?" வாசல்புறமாக நடந்தவாறு கேட்டான்.

கூடவே நடந்தபடி,"அவ்வளவுதான் சார். இனி ஹோட்டலுக்கு சாப்பிடப் போகணும். நீங்களும் எங்களோடு சாப்பிட வாங்களேன்".

"ம்ம்...அழைத்ததற்கு நன்றி பாரதி. இன்றைக்கு வர முடியாது. ஆனால் ஏன் ஹோட்டல்? வீட்டில் சமைக்கவில்லையா? சன்டே ஸ்பெஷல் இருக்கும் என்று நினைச்சேன்".பேசியபடி கடையை விட்டு வெளி வந்தவர்களை பார்த்த ரூபா, சத்யாவிடம் நெருங்கி பைகளை வாங்கிக் கொள்ள, மூவருமாக பார்க்கிங் பகுதிக்கு நடந்தனர்.

"வழக்கமாக ஞாயிறு ஸ்பெஷல் நான்தான் செய்வேன். இன்று வெளியில் வர இருந்ததால் ஒரு மாறுதலுக்காக ஹோட்டல் சாப்பாடு" என்று சத்யபாரதி விளக்கவும்

"அட,உனக்கு சமைக்கக்கூட தெரியுமா பாரதி?"என்று கிருஷ்ணா ஆச்சரியப்பட்ட விதத்தில் சத்யபாரதிக்கு சிரிப்பு வந்துவிட்டது.

உடன் வந்து கொண்டிருந்த ரூபா, "அட என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க? சத்யாம்மா சமையல் சூப்பரா இருக்கும். பாவம் எப்படித்தான் என்னோட சமையலை தினமும் சாப்பிடுறாங்களோ?" என்று வருத்தமாக சொல்ல....

அவளது தோளில் ஆதரவாக கைவைத்து, "நீ என்னைவிட நல்லாவே சமைக்கிறே ரூபா", என்றவள்,"நீங்க அவசியம் ஒருநாள் எங்க வீட்டுக்கு சாப்பிட வரணும் சார்" என்று அழைப்பு விடுத்தாள் சத்யபாரதி.

"ம்ம், கண்டிப்பா வருவேன் பாரதி." ஓகே சீயூ " வருகிறேன் ரூபா " என்று கிருஷ்ணா விடைபெற்று கார் பார்க்கிங்கில் நுழைய, மற்ற இருவரும் தங்கள் வாகனப்பகுதிக்கு சென்றனர்.

அன்று இரவின் தனிமையில் அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சத்யபாரதியின் மனம் முழுவதும் கிருஷ்ணாதான் வியாபித்து இருந்தான். அதிலும் ஏனென்று புரியாமல் அவனோடு நெருக்கமாக நின்ற அந்த சிலநொடிகள் கண்முன் அடிக்கடி வந்து இம்சித்தது. ஒருவாறு அவனை ஒதுக்கி தாமதமாக தூங்கிப் போனாள்.

திங்கட்கிழமை நாள் முழுதும் வேலை பளுவினால் பரபரப்பாய் நகர, அடுத்த நாள் காலை சத்யபாரதி வழக்கமான நேரத்தில் அலுவலகத்தை அடைந்தபோது கிருஷ்ணா அவளுக்கு முன்னதாக வந்துவிட்டிருப்பதை அவனது வாகனம் உணர்த்த, வேகமாய் உள்ளே விரைந்தாள்.

" வா, வா பாரதி, உனக்காக தான் காத்திருந்தேன்", என்று கிருஷ்ணா கூறவும் இனம் புரியாத படபடப்புடன் அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.

" என்ன விஷயம் சார்?" தயக்கத்துடன் வினவினாள்.

"நீ உன் அண்ணனுக்கு திருமண நாள் வருவதாக சொன்னாயே ? அவர்களை காண ஊருக்கு போவதாக இருக்கிறாயா?"

அவன் சம்பந்தமே இல்லாமல் திடுமென அப்படி கேட்கவும் அதுவரை என்னவோ ஏதோ என்று எண்ணி பதறிய மனதின் இறுக்கம் தளர்ந்து, புன்னகையுடன், "நான் வந்து முழுதாக 2 மாதம்தானே ஆகிறது சார். அதனால் இப்போ ஊருக்கு போகவில்லை. பரிசுப்பொருள்களை கொரியரில்தான் அனுப்ப வேண்டும். இரண்டு நாளாக வேலை பரபரப்பில் அனுப்ப முடியவில்லை. இன்றைக்கு மாலையில் அனுப்பலாம் என்று எல்லாம் "பேக்" செய்து வைத்துவிட்டு வந்தேன்"

"ஓ! குட் பாரதி. அவர்கள் பெங்களூரில்தானே இருப்பதாக சொன்னாய்? இன்று இரவு நான் பெங்களூர் போகிறேன். வேண்டுமானால் நான் கொண்டு போய் கொடுத்துவிடவா?"என்றான்.

"ஐயோ, அதெல்லாம் வேண்டாம் சார். உங்களுக்கு எதற்கு வீண் சிரமம். நானே அனுப்பிக் கொள்கிறேன். உதவ முன்வந்ததுக்கு ரொம்ப நன்றி சார்”அவள் சொல்லிவிட்டு ஒரு வாக்குவாதத்திற்காக அவள் காத்திருக்க,

அவனோ, "இட்ஸ் ஓகே,ஜஸ்ட் ஒரு உதவி செய்யலாமே, என்று கேட்டேன், வெல்,பாரதி அஸ் யூ விஷ்" என்றவன், ஓகே இப்போ வேலையை பார்க்கலாமா? " என்று புன்னகைக்க,

சத்யபாரதிக்கு ஏனோ உள்ளூர ஒருவித ஏமாற்ற உணர்வு உண்டாயிற்று. அதை மறைத்து புன்னகைத்துவிட்டு தன் இருக்கைக்கு சென்றாள்.

ஆனாலும் சத்யபாரதிக்கு மனம் குழம்பிக் கொண்டே இருந்தது. அவன் உதவத்தான் கேட்டானா? அல்லது ஒப்புக்காக கேட்டானா? அவளுக்கு தெரிந்து கிருஷ்ணா ஒப்புக்காக என்று பேசுகிறவனில்லை. பிறகு ஏன் கேட்டான்?"

மனதுக்குள் கேள்வி எழ, வேலையில் கவனம் சிதறியது..

சத்யபாரதி அவனிடம் வேலை செய்பவள். தவிர அவளுக்கு உதவ வேண்டும் என்று அவனுக்கு என்ன கட்டாயம்? ஒப்புக்காக ஒரு வார்த்தை கேட்டு வைத்தான். அவள் மறுக்கவும் விட்டுவிட்டான். அவ்வளவு தான், ஒருவகையில் அவள் ஒத்துக் கொள்ளாததும் நல்லதுதான், இல்லாவிட்டால் அவன் அவளை அல்லவா தவறாக எண்ணியிருப்பான். தனக்குள்ளாக எதை எதையோ எண்ணி ஒருவாறு அமையுற்றவளாய் வேலையில் கவனமானாள்.

☆☆☆

பெங்களூர்...

இரவு நேரம்

சத்யபாரதி அனுப்பியிருந்த உடைகளை கணவனிடம் காட்டிக் கொண்டிருந்த வசந்தியின் மனதில் வழக்கமாக தம்பியிடம் இருந்து வரும் பரிசுகள் வராததால் வருத்தம் உண்டாயிற்று. அதையே எண்ணியவனாக "ஆமா உன் தம்பி அனுப்பியிருப்பானே வசு? அது எங்கே? என்று சித்தார்த் வினவ, வருத்தத்தை மறைத்து "அவன் அனுப்பவில்லை அத்தான். அதுதான் சத்யா அனுப்பியிருக்காளே. இந்த வருஷம் இதை கட்டி திருமண நாள் கொண்டாடுவோம்" என்று புன்னகைத்தவள், தொடர்ந்து " பாருங்கள் அத்தான் நம் கல்யாணத்தில் சின்ன பொண்ணாக இருந்தவள் சத்யா, இன்னிக்கு நமக்கு பரிசாக உடைகள் வாங்கி கொடுக்கிற அளவுக்கு பெரிய மனுஷியாகிவிட்டாள் "என்றவளின் குரலில் பெருமிதம் இருந்தபோதும் லேசான வருத்தமும் இருப்பதை உணர்ந்தான் சித்தார்த்.

சத்யா விலகி போனதும், வேலை பார்ப்பதும், தம்பியின் பாராமுகமும் இந்த வருடம் அவன் பரிசு அனுப்பாததும் எல்லாமுமாக மனைவி உள்ளூர வருந்துவது சித்தார்த்திற்கு புரிந்தது. ஆனால் இதில் அவன் செய்வதற்கு ஒன்றுமில்லை. வேலைக்கு போவது சத்யாவின் விருப்பம், அதே போல கண்ணனுக்கு என்ன சூழ்நிலையோ?" புரிந்து கொள்ளாமல் வருந்துகிறாளே, என்று எண்ணிவிட்டு

"எல்லாருக்கும் டிரஸ் வாங்கி அனுப்பியிருக்காளே சம்பளத்தை பூராவும் காலி பண்ணிவிட்டாள் போலிருக்கிறதே வசு? செலவுக்கு பணம் அனுப்பவான்னு ஒரு வார்த்தை கேட்டு சொல்லு" என்று சூழலின் இறுக்கம் தளர்த்த முயன்றவனாக, கூற அதை ஊகித்தவளாக லேசாக புன்னகைத்து,

“அதெல்லாம் அவள் கணக்கில் வேண்டிய அளவு பணத்தை போட்டுத்தான் வைத்திருக்கிறேன் அத்தான்" ஆனாலும் அவள் அதை தொடக்கூட இல்லை." என்றுவிட்டு போனாள் வசந்தி.

தங்கை மனதில் எதுவோ இருக்கிறது என்று முதல் முறையாக சித்தார்த்திற்கு தோன்றத் தொடங்கியது.

அதிகாலை....

நான்கு மணியளவில் அழைப்பு மணி ஒலிக்க, பணியாள் சென்று கதவை திறந்தான். அழைப்பு மணியின் ஓசை கேட்டு வசந்தியும் எழுந்து கூடத்திற்கு வந்தாள் "யார் வந்திருக்காங்க சீனு? "என்று குரல் கொடுக்க, பதில் சொல்லாது பணியாள் சீனு பெட்டியோடு அவளை கடந்து உள்ளறைக்கு செல்ல,

அதற்குள்ளாக சீனுவின் பின்னோடு வந்த நபரைப் பார்த்த வசந்தி அப்படியே பேச்சற்று நின்றுவிட்டாள்..
 

Attachments

  • images (10)-1.jpeg
    images (10)-1.jpeg
    31.5 KB · Views: 14