• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. சொந்தமடி நானுனக்கு!சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
விசாலாட்சி கேட்ட கேள்வியில் சாருபாலா, மட்டுமல்ல, அனிதாவும்
திடுக்கிட்டுப் போனாள்!

"அத்தை, என்ன பேசுறோம்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா?" இதை கேட்டவளும் அனிதா தான்!

"புரியாமல் பேச எனக்கு என்ன புத்தி பிசகியிருக்கா? எல்லாம் தெரிஞ்சு தான் பேசுறேன், அனிதா! உன்னை உள்ளே போகச் சொன்னேன்! " என்றவர், மருமகளிடம் திரும்பினார்!

"ஏன்டி! நடு ராத்திரியில் துணைக்கு ஒரு ஆள் கூட இல்லாமல் காரை ஓட்டிட்டு போற அளவுக்கு எங்கே இருந்துடி உனக்கு துணிச்சல் வந்தது? ஆமா அப்படி எவனைப் பார்க்க போனே? "

சாருவுக்கு, அவரது பேச்சே எப்போதையும் விட ஒரு தினுசாக தோன்றியது! "அத்தை, ஜாக்கிரதை! வார்த்தையை அளந்து பேசுங்க! நான் ஒரு டாக்டர்! என் நோயாளிக்கு சீரியஸ் என்றால் அதற்கு நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியாது! போய்தான் ஆகணும்! அப்படித்தான் ராத்திரி, நான் இத்தனை மாதங்களாக கவனித்து வந்த பேஷன்ட் கடைசி கட்டத்தில் இருப்பதாக, போன் வந்தது, உங்கள் மகனுக்கு சீட்டில் விஷயத்தை எழுதி வைத்து விட்டுத்தான் நான் போனேன்!"

"ம்க்கும்,நீ எழுதி வச்சதை என் மகன் சொன்னானே! ஆஸ்பத்திரியில் யாரோ வேண்டியவரைப் பார்க்கப் போய் இருக்கிறாள் அம்மா என்று சொன்னான்! அதுமட்டுமில்லை, ராத்திரியில் ஆனந்துக்கிட்டே, அவர் எந்த நிமிசமும் செத்துடுவார்னு சொல்லி அழுதியாம்! அதென்னடி இத்தனை வருஷமா இல்லாமல், எங்கேயிருந்துடி முளைச்சான் அந்த மனுஷன்! நேத்தே நான் கவனிச்சேன்டி, நீ ஆஸ்பத்திரில இருந்து வந்ததுல இருந்து, உன் முகமே சரியில்லை! பூஜை அறையில் வேற மணிக்கணக்கா உட்கார்ந்திருந்தே! ஒரு டாக்டருக்கு நோயாளிகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போறது சகஜம் தானே? ஆனால் இவரு மட்டும் அப்படி என்னடி உனக்கு உசத்தி?"

சாருபாலாவின் முகமும், விழிகளும் ஆத்திரத்தில் கன்றி சிவந்தது! ஆனாலும் அப்போதும் அவள் பொறுமையை கடைபிடித்து, "அவர் எங்க ஆஸ்பத்திரில கடந்த ஆறு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்! என் அப்பா வயசு இருக்கும்! அவருக்கு உறவு என்று யாரும் இல்லை! என்னை மகளே என்று தான் அவர் கூப்பிடுவார்! தினமும் நான் போய் செக்கப் பண்ணுவேன்! ஒரு நாய்க்குட்டிகூட நாலு நாட்கள் பழகினாலே,அதுக்கு நம்ம மேல மேலயும், நமக்கு அது மேலேயும் பிரியம் வருகிறபோது,
இவர் தினமும் பார்க்கிற மனிதர், எந்நேரத்திலும் இறந்து போகப் போகிறவர் எனும்போது ஒரு பற்று, அக்கறை, பரிதாபம் ஏற்படறது இயல்புதானே? அதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியலை அத்தை!"

"இங்கே பாருடி, நீ என்ன கதை வேணாடுமானாலும் சொல்லு! என்னை பொறுத்தவரை ஒரு நல்ல குடும்பத்து பொண்ணு, இப்படி நடுராத்தியில் யார் துணையும் இல்லாமல் வெளியே போக மாட்டாள்! அவள் டாக்டராகவே இருந்தாலும் சரி! அப்படிப் போனவள் வீட்டுக்கு ஒரு போன் செய்து பேசியிருக்கலாம் தானே? உன் புருஷனுக்கு விசயத்தை எழுதி வச்சுட்டு போனே சரி! வீட்டுக்குப் பெரியவள் நான், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோனுச்சா? யாரோ மூனாம் மனுசனை பெத்த தகப்பன் போலன்னு சொன்னியே, கல்யாணமாகி நாலு வருஷமாச்சு, என்னை உன் தாயா நீ என்னைக்காவது நினைச்சு நடந்து இருக்கியா? போலியா அத்தை சாப்பிடுங்க, மருந்து எடுத்துக்கோங்கனு நடிக்கத்தானே செய்தே!"

"அத்தை அபாண்டமாக பேசாதீங்க! நான் உங்களை மதிக்காமல் எப்ப நடந்துக்கிட்டேன்? உங்க பிள்ளை விஷயத்தை உங்ககிட்டே சொல்லிடுவார்னு நினைச்சேன்! நீங்களும் இதுவரை என்கிட்ட சொல்லிட்டுப் போகணும்னு சொன்னதே இல்லையே! அப்படியும் நான் தினமும் சொல்லிட்டுத்தானே போனேன்!"

"இப்ப பிரச்சினை அது இல்லை!
ஆனந்தனுக்கு தெரிஞ்சவங்க உன்னை அந்த நேரத்துல பார்த்திருக்காங்க! காலையில் போன் பண்ணி விசாரிக்கிறாங்க? "என்னப்பா ஆனந்த், உங்க மனைவி மிட் நைட்டில் தனியா காரை ஓட்டிட்டு போறதை பார்த்தேன், உங்களுக்குள்ள ஏதும் பிரச்சினையா என்று கேட்டிருக்கிறார்! அவன் இல்லை என்று விவரம் சொல்லியும் அவர் அரை மனசா, அப்படியா சரினு போனை வச்சுட்டாராம்! என் பிள்ளைக்கு எத்தனை அவமானமா போச்சு ! இன்னும் அந்த ஆளு எத்தனை பேர்கிட்ட சொல்லுவானோ? என்ன என்ன கதை கட்டி விடுவானோ? இன்னிக்கு ஆபீஸ் போறப்போ என் பிள்ளை முகமே களையிழந்து இருந்துச்சு!

"அத்தை இந்த காலத்துல பொண்ணுங்க விண்வெளிக்கே போய் வராங்க! போன் போட்டு கேட்டவருக்கு தான் அறிவில்லை! உங்க பிள்ளை என்ன பதில் சொல்லியிருக்கணும்? என் மனைவி ஒரு டாக்டர் என்று தெரியும்தானே? அவளோட தொழிலில் எமர்ஜென்சி என்றால் போய்தானே ஆகணும்? என்னிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றாள்!" என்று சொல்லி அவர் வாயை அடைச்சிருக்கணும்! என் மனசுக்கு தெரியும் நான் ஒரு தப்பும் பண்ணவில்லை என்று, ஏன் உங்க மகனுக்கும் என்னை பத்தி நல்லா தெரியும்!" அதனால இந்த பேச்சை இத்தோடு விடுங்க!" நான் போய் தூங்கப் போறேன்!" என்று மளமளவென்று மாடிக்கு சென்றுவிட்டாள்!

விசாலாட்சி, ஏளனமாக சிரித்தபடி," தூங்குடி தூங்கு.. இன்னிக்கு தான் கடைசி, நீ நிம்மதியாக தூங்கறது!" என்று தனக்குள் முணுமுணத்துக் கொண்டே தன் அறைக்கு,பகல் தூக்கம் போட சென்றார்!

அனிதா, குழப்பத்துடன் யோசனையாக நின்றிருந்தாள்!

🩵🩷🩵

மதுரை

சுரேந்திரனும், அவன் மனைவி சாந்தியும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்! ஆயினும் சின்ன மனக்குறை! திருமணமாகி இரண்டு ஆண்டுகளும் கடந்துவிட்டது! இன்னும் பிள்ளை செல்வம் உண்டாகவில்லை என்பதுதான் அவர்களின், முக்கியமாக சாந்தியின் பெரும்கவலை!

சாந்திக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப இஷ்டம்! திருமணம் முடிந்த கையோடு குறைந்தது மூன்று குழந்தைகள் பெற வேண்டும் என்று கணவனிடம் ஆசையாக சொன்னவள்! ஆனால் முதல் குழந்தையே உண்டாகவில்லை என்றதும் அவளது மனம் கவலையில் சோர்ந்தது! இரண்டு வருடங்களும் கடந்துவிட, அவள் சில மாதங்களாக, அவள் கோயில், விரதம் என்று தீவிரமாக குழந்தை வரம் வேண்டி தன்னை வருத்திக் கொண்டிருக்கிறாள்!

சுரேந்திரனுக்கு மனைவி தன்னை வருத்திக் கொள்வதை பார்க்க சகிக்காமல்,"சாந்தி, நமக்கு என்ன வயதா ஆகிவிட்டது? டாக்டர்கிட்டேயும் உன் திருப்திக்காக போய் வந்துட்டோம்! நமக்கு ஒரு குறையும் இல்லை, கூடிய சீக்கிரமே குழந்தை பிறக்கும்னு சொன்னாங்க தானே? இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுத்துப் பார்ப்போம்! எனக்கு நம்பிக்கை இருக்கு சாந்தி! அதுக்குள்ள நிச்சயமாக நமக்கு குழந்தை பிறக்கும்! நீ இப்படி உன்னை வருத்திக் கொள்வதை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறதுமா!" என்றான்.

"பார்க்கிறவங்க எல்லாம் என்ன இன்னும் குழந்தை இல்லையானு கேட்கிறப்போ எனக்கும் கஷ்டமா தான் இருக்கு சுரேன்! அதுதான் தெய்வத்துக்கிட்டே நான் சரணடைஞ்சுட்டேன்! என் வேண்டுதலுக்கு இரங்கி, நிச்சயமாக கடவுள் எனக்கு பிள்ளை வரம் தருவார்! அதுவரை என்னை தடுக்காதீங்க!" என்றுவிட்டாள்!

சுரேந்திரனுக்கு பள்ளியில் வேலை பளு அதிகமாக இருந்தது! பெயர் என்னவோ அரசுப் பள்ளி தான்! ஆனால் இப்போது நிறைய புதுத் திட்டங்களை அமலாக்கம் செய்கிறார்கள்! அதன் விளைவு ஆசிரியர்களை கசக்கிப் பிழிந்தது பள்ளி நிர்வாகம்! விடுமுறை நாட்களில் கூட அவன் பணிக்கு செல்ல நேர்ந்தது!

இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு வரவிருந்தது! அதற்கு மேற்பார்வையாளராக சுரேந்திரனுக்கு விருதுநகர் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது! பரீட்சை முடியும் வரை அங்கே தான் பணி!

வீட்டிற்கு வந்தவன் உடனடியாக விசயத்தை சாந்தியிடம் சொல்லவில்லை! ஒரு வாரம் பத்து நாட்கள் அவளை தனியாக விட்டுவிட்டு எப்படி செல்வது என்று ஒரே யோசனையாக இருந்தது!
அன்று ஏதோ ஒரு கோவிலுக்கு மா விளக்கு ஏற்றப் போயிருந்தவள் தாமதமாகத் தான் வந்தாள்! அன்று கடைசி நாள் என்று சொன்னாள்! ஆகவே சாப்பிட்டு பொதுவாக பேசிவிட்டு படுத்துவிட்டான்! சாந்தியும் ஏதோ யோசனையில் இருந்தாள்!

மறுநாள் காலையில் சுரேந்திரன் பணிக்கு செல்ல தயாராகி சாப்பிட அமர்ந்த போது, தயங்கி தயங்கி சாந்தி பேசினாள்!

"என்னங்க ஒரு விசயம் உங்ககிட்டே சொல்லணும்!"

"நானும் தான் சொல்லணும்! முதல்ல நீ சொல்லு!" என்று சாப்பிட்டான்

நேற்று கோவிலில் ஒரு அம்மாவைப் பார்த்தேன்! அவங்க பக்கத்து கிராமத்துல இருக்கிற ஒரு அம்மன் கோவிலுக்கு ஒரு வாரம், விரதம் இருந்து மண் சோறு சாப்பிட்டா கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு சொன்னாங்க! நாளையில் இருந்து நான் போகட்டுமாங்க!" என்றாள்!

"ஹூம்! நான் சொன்னா நீ கேட்கப் போறதில்லை! என்றவர், "நானும் நாளையில் இருந்து, ஒரு வாரம் பத்து நாள் போல விருதுநகரில் தங்கியிருக்கணும்! அங்கே இருக்கிற பள்ளியில் எனக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு சூப்பர்வைசர் வேலை கொடுத்திருக்காங்க! என்னோட துணிமணிகளை எடுத்து வச்சிடு!
இன்னிக்கு சாயந்திரம் நான் கிளம்பணும்! நீ பக்கத்து வீட்டு ராசாத்தி பாட்டியை, ராத்திரியில் துணைக்கு கூப்பிட்டுக்கோ ! நான் வர்ற வரை சமாளிச்சிடுவே தானே? அப்புறம் இந்த விரதத்தை நான் திரும்பின பிறகு வச்சுக்கலாம்! "

"என்னங்க நீங்க, அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன்! என்னைப் பத்தி கவலைப் படாமல் கிளம்பி போய் வாங்க! நான் எல்லாம் ரெடியா எடுத்து வைக்கிறேன்! "

"சாந்தி, நான் நடுவில் வந்துட்டு போவேன்! அதனால நீ விரதம் இருக்கிறேன்னு கிளம்பிப் போயிடாதே! பரீட்சை முடிஞ்சதும், நானும் லீவு போட்டுட்டு உன் கூட கோவிலுக்கு வர்றேன்! சரிதானா? என்றுவிட்டு சுரேந்திரன் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்

சாந்திக்கு உள்ளூர சற்று ஏமாற்றம்! ஆயினும் கணவனின் சொல்லை மீறும் துணிவும் இல்லை! ஆனால் மனம் ஏனோ ஒருவித சஞ்சலமாகவே இருந்தது! அது எதற்கு என்று தான் அவளுக்கு புரியவில்லை!

கடவுளே! யாருக்கும் எந்த சங்கடமும் வந்துடாமல் நீதான் காப்பாற்றணும் என்று இறைவனிடம் வேண்டுதல் வைத்த பிறகே சற்று தெம்பாக உணர்ந்தாள் சாந்தி!

ஆனால் சாந்தியின் உள்ளுணர்வு கலங்கியதற்கான சம்பவம் அடுத்து வந்த சில நாட்களில் நடந்துவிட்டது!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 19
Last edited: