சத்யபாரதி இரண்டு தினங்களுக்குப் பிறகு கிருஷ்ணாவை காணும் ஆவலோடு அலுவலகம் சென்றாள். வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அவனது கார் நிற்பதை பார்த்ததும் சந்தோஷமாக அலுவலக அறையை நோக்கி சென்றாள்.
அங்கே அவள் அனுமதி கேட்டு கதவைத் தட்டியும் பதில் வராது போக, மெல்ல தானே திறந்து கொண்டு நுழைந்தாள். அதைக்கூட கவனிக்காமல் அவன் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தான்.
என்னவென்று கேட்பதா வேண்டாமா என்று தயங்கியபடி அவளது இருக்கையில் அமர்ந்தாள்.
மேஜையை ஒதுங்க வைத்தபோது அவளது கைப்பட்டு பென் ஸ்டாண்ட் தவறி கீழே விழுந்து சிதற, அப்போதுதான் சுற்றுப்புறம் உணர்ந்தாற்போல் நிமிர்ந்தான் கிருஷ்ணா.
அதற்குள் சத்யபாரதி கீழே விழுந்தவற்றை எடுக்கக் குனிந்திருந்தாள். அவனும் எழுந்து அவள்புறமாக வந்து, அவளுக்கு உதவியவாறு, "பாரதி நீ வந்து ரொம்ப நேரமாச்சா?" என்று கேட்டான்.
"இப்ப தான் வந்தேன் சார்". என்று மறுபடியும் உரிய இடத்தில் அந்த பென் ஸ்டாண்ட்டை வைத்தவள், "ஏதாவது பிரச்சனையா சார்?" என்று தயங்கியபடி கேட்டாள்.
பொருள் விளங்காத பாவனை ஒன்று கிருஷ்ணாவின் முகத்தில் தோன்றி மறைய, அவளது மேசை அருகில் ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தவன். நீயும் உட்கார்,” என்றுவிட்டு தொடர்ந்து, "பிரச்சனை தான் பாரதி. அதை எப்படி தீர்ப்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவழியும் புலப்படவில்லை" என்று சோகமாக சொல்ல,
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னிடம் சொல்லுங்க சார். என்னால் உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்" மேஜையில் பார்வையை பதித்தபடி சத்யபாரதி வினவ,
கிருஷ்ணா விழிகள் பளிச்சிட்டது. சன்னமாய் முறுவலித்து "என்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி வீட்டில் வற்புறுத்தறாங்க" பாரதி.
சத்யபாரதி ஒருகணம் சொல்வதறியாது தடுமாறிப் போனாள். ஏனோ அவனுக்கு கல்யாணம் என்றதும் மனதுக்குள் ரயில் தடதடப்பது போல ஒருவித படபடப்பு. தன்னை சமனப்படுத்திக் கொண்டு, முடிந்தவரை உணர்ச்சி காட்டாத குரலில் சொன்னாள். "கல்யாணம் தானே சார்? பண்ணி க்கொள்வது தானே? இதில் பிரச்சனை என்ன இருக்கிறது?" என்றாள்.
"கல்யாணம் பண்ணிக்கிறது சுலபம்தான் பாரதி. ஆனால் வாழ்நாள் முழுதும் வாழப்போவது நான்தானே. எல்லா நல்லது கெட்டதையும் நான்தானே அனுபவிச்சாகணும்" என்றான்.
சத்யபாரதிக்கு ஏனோ சிரிப்பு வந்தது. இத்தனை பெரிய நிறுவனத்தின் தலைவன், கல்யாணம் செய்து கொள்ள இப்படி பயப்படுகிறானே என்று வேடிக்கையாககூட இருந்தது. "கல்யாணம் செய்து கொள்ளத்தானே சொல்கிறார்கள். நீங்கள் ஏதோ புலி,சிங்கத்தை அடக்கச் சொல்வது போல பயப்படுகிறீர்களே சார்" என்றாள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவாறு.
"ம்ம்ம்.. உனக்கு சிரிப்பாக இருக்கிறதா? நான் பயப்படறதா எப்ப சொன்னேன் பாரதி? அவர்கள் போடும் கண்டிஷன்தான் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போது அதுதான் பிரச்சனை"
"கண்டிஷனா யாரு போடுறாங்க? எதுக்கு சார்?" சத்யபாரதி புரியாமல் விழித்தாள்.
"வேறு யார்? என் அக்கா தான். அவர்கள் சொல்லும் பெண்ணைத்தான் கட்டணும் என்று கண்டிஷன் போட்டால் எப்படி? கல்யாணம் செய்து கொள்ளப் போவது நான்தானே? பெண் என் மனசுக்கு பிடித்தவளாக இருக்கணுமா இல்லையா? அதுதான் இப்ப பிரச்சனை"
"நீங்கள் சொல்வது நியாயம் தான் சார். ஆனால் உங்கள் அக்கா உங்களுக்கு நல்லதுதானே செய்வார்கள். அவர்கள் சொல்லும் பெண்ணை முதலில் பாருங்கள். பிடித்தால் ஓகே சொல்லுங்க. இல்லை என்றால் கையை காலை கட்டியா கல்யாணம் செய்வார்கள்? சத்யபாரதிக்கு உள்ளூர ஒரே வியப்பு திருமணம் பற்றி அந்நிய ஆடவனுடன் பேசுவது அவள்தானா? இதெல்லாம் அவள் பேசியறியாத விஷயம்.
"உனக்கு விஷயமே புரியவில்லை பாரதி. நான் ஏற்கனவே ஒரு பெண்ணை என் வருங்கால மனைவியாக தேர்வு செய்துவிட்டேன். ஆனால் அக்கா அந்தப் பெண்ணை ஏற்க மறுக்கிறாள். அந்த பெண்ணை மறந்துவிட்டு அவள் சொல்லும் பெண்ணை கட்டிக்கொள்ள சொல்கிறாள். இப்போது நீதான் சொல்லேன், மனசுல நினைச்சவளை விட்டுவிட்டு அக்கா ஆசைக்காக நான் கல்யாணம்... என்று சொல்லிக் கொண்டே வந்த கிருஷ்ணா அவளது முகத்தை பார்த்துவிட்டு நிறுத்தினான்.
சத்யபாரதிக்கு கிருஷ்ணா ஒரு பெண்ணை விரும்புகிறான் என்ற விஷயத்தை கேட்ட பிறகு அவன் மேலே சொன்னது எதுவும் அவள் மனதில் படவில்லை. இன்னதென்று விவரிக்க இயலாத உணர்வு உண்டாயிற்று. கூடவே முன்னிரவில் கண்ட கனவு அசந்தர்ப்பமாக மனதில் நிழலாட சிலகணங்கள் அவள் பேச்சற்றுப் போனாள். இதற்கு என்ன பொருள் என்று அவள் குழம்பிய வேளையில்...
கிருஷ்ணா "அவளது தோளை பற்றி லேசாக உலுக்கி "பாரதி, என்னாச்சு?"என்று பதற்றமாய் விளிக்க,
தன்னை ஒருவாறு சுதாரித்தவளாக நிகழ்விற்கு வந்த சத்யபாரதியின் முகம் சங்கடத்தில் லேசாக சிவந்தது.
"முதலில் இந்த தண்ணீரை குடி" என்று கண்ணாடி தம்ளரில் இருந்த நீரை எடுத்து குடிக்க கொடுக்க மௌனமாக வாங்கி குடித்துவிட்டு "நன்றி சார் என்றவள் “மன்னிக்கணும் சார், நீங்க முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருந்தீங்க, நான் ஏதோ ஞாபகத்தில். ... என்ற அவளது பேச்சில் குறுக்கிட்டு,
"ம்ம் பரவாயில்லை பாரதி” என்றவன், தொடர்ந்து, "உன்னை ஒன்று கேட்கலாமா பாரதி?"என்று அவளை நேராகப் பார்த்து வினவ,
சத்யபாரதிக்கு என்ன கேட்கப்போகிறான் என்று இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. சற்று முன் அவள் என்ன எண்ணிக் கொண்டிருந்தாள் என்று கேட்டால் என்னவென்று பதில் சொல்வது? என்று படபடக்கும் மனதோடு, "கேளுங்கள் சார்" என்றவள் அவனிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். சும்மாவே அவள் மனதில் எண்ணுவதை சட்டென்று யூகிப்பவன், இப்போதும் அப்படி எதையும் யூகித்து கேட்டுவிட்டால் அவள் பாடு திண்டாட்டம் தான்.
"இதை ஒரு நண்பனாக கேட்கிறேன் பாரதி. அதனால் தயங்காமல் சொல்லு. நீ யாரையும் விரும்புகிறாயா ?"
சத்யபாரதி திடுக்கிட்டுப் போனாள். கிட்டதட்ட அவள் குழம்பிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டானே. உண்மையில் பாரதி இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை? அவளுக்கே அதுபற்றி தெரியாத நிலை. கண்ணனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருக்கையில் அந்த கனவு வந்ததும் கண்ணனின் மங்கலான உருவம்கூட கிருஷ்ணாவினது போல தோன்றியதும் ஏன் என்ற காரணம் விளங்காத நிலையில் அதற்குள்ளாக இவன் இப்படி ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என தடுமாறிக் கொண்டிருக்கையில்….
இன்டர்காம் ஒலிக்க... கிருஷ்ணாவிற்கு சற்று எரிச்சல்தான், வேறு வழியின்றி தன் இருக்கைக்கு சென்று எடுத்தான். வரவேற்பில் இருந்த சாந்தனு பேசினான்," சார் உங்க மாமா என்று ஒருவர் வந்திருக்கிறார். உடனே பார்க்கணும்னு சொல்கிறார்"
"சரி சாந்தனு, அவரை மீட்டிங் ஹாலில், உட்கார வைச்சிட்டு, கந்தசாமிக்கிட்ட, சர்க்கரை குறைவாக போட்ட பழரசம் கொடுக்க சொல்லுங்க. நான் 10நிமிடத்தில் வருவதாக அவரிடம் சொல்லுங்க" என்று ரீசீவரை வைத்துவிட்டு யோசனையுடன் சத்யாபாரதியிடம் வந்து,"பாரதி, அந்த விஷயம் பற்றி பிறகு கேட்கிறேன். இப்போது நான் ஒரு முக்கியமானவரை சந்திக்கப் போக வேண்டும். நான் வருவதற்குள்ளாக, நாம் ஆர்டர் கொடுத்திருந்த ஆண்கள் ஆடைகளுக்காக பட்டன்கன், ஸிப்கள் எப்போது டெலிவரி தருவார்கள் என்று கேட்டு, தாமதமில்லாமல் அனுப்பச் சொல். அப்புறம் பெண்களின் உடைகள் பிரிவில் ஒரு புது சுடிதாருக்கு டிசைன் போடச் சொல்லியிருந்தேன். நீ கொஞ்சம் அதில் எதுவும் திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அப்படி இருந்தால் அதை மிஸ்டர் திவாகரிடம் சொல்லு" என்று நகரப் போனவனிடம்...
"சார், நான் அபிப்ராயம் சொன்னால் அவர் கோபித்து கொள்ள மாட்டாரா?"தயக்கத்துடன் கேட்டாள். அவளுக்கு அந்த நிறுவனத்தில் அலுவலக ஊழியர்களுடன் மட்டும்தான் பேசி பழக்கம். அதுவும் கூட அநேகமாக கிருஷ்ணா உடன் இருப்பான். உண்மையில் இப்போது அந்த திவாகரிடம் போய் எப்படி பேசுவது என்று அவளுக்கு உள்ளூர திகைப்பு. அதுமட்டுமல்ல தையற்கலை ஊழியர்களும் வேறு இருப்பார்கள். அங்கே போவதை தவிர்க்கத்தான் அவள் இந்த கேள்வியை கேட்டது.
அதை புரிந்துகொண்டவனாக, கண்ணில் சிரிப்புடன், "அவர் ஒன்றும் தவறாக எண்ணமாட்டார் பாரதி. சொல்லப்போனால் அவருக்கு கொஞ்சம் குழப்பமாக இருப்பதாக என்னிடம் சொன்னார். நானும் அந்த டிசைனைப் பார்த்தேன். பெண்களுக்கு அந்த டிசைன் பிடிக்குமா என்று எனக்கும் கொஞ்சம் யோசனை. ஒரு பெண்ணிடம் அபிப்ராயம் கேட்டால் சரியாக இருக்கும் என்று தோன்றவும் உன் நினைவு வந்தது. வேறு பெண்ணை ஏன் தேடுவானேனு நான்தான் உன்னைப்பற்றி சொல்லி, அனுப்பட்டுமா என்று கேட்டேன். அனுப்புங்க சார்னு கேட்டுக்கிட்டார். என் சொந்த விஷயத்தில் இது மறந்துவிட்டேன். சரி, நான் போய் வருகிறேன்”. என்று நில்லாமல் வெளியேறிவிட்டான்.
சத்யபாரதி சோர்வுடன் முதல் வேலையை அவன் கேட்டுக்கொண்டபடி செய்து முடித்து விட்டு தடதடக்கும் இதயத்துடன் பெண்கள் ஆடைப்பிரிவுக்கு சென்றாள். கண்ணாடி தடுப்புகளால் அமைந்திருந்த அந்த அறைக்குள் ஏசியிலும் வியர்க்க தொடங்கியது. அங்கே பெரிய மேசைமீது துணியை விரித்து வரைந்து கொண்டு இருந்த இன்னும் இருவர் அவளைப் பார்த்ததும் முகமன் கூறிவிட்டு தங்கள் வேலையை தொடர,
அங்கேயே அலுவல் மேசையும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. திவாகர் அவளை ஒரு நாற்காலியில் அமரச் சொல்லி தான் மறுபுறம் சென்று அமர்ந்து அவன் போட்டிருந்த டிசைனை காட்டினான். சுடிதார் டிசைன் அழகாக இருந்தது. அதை ஆராய்ந்துவிட்டு இரணடு சின்ன திருத்தம் சொன்னவளுக்கு வந்த போது இருந்த தயக்கம் மாறி மனதில் திடம் உண்டாயிற்று.
திவாகர் மேலும் சில சந்தேகங்களை அவளிடம் கேட்க தனக்கு தெரிந்த சிலவற்றை அவனிடம் தெரிவித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டு அவளது இருப்பிடத்திற்கு செல்லவதற்காக வரவேற்பறையை கடக்கும்போது எதேட்சையாக வாசல்புறம் திரும்பிய சத்யபாரதி அங்கே கிருஷ்ணாவின் தோளை ஆதரவுக்காகப் பற்றியபடி நின்ற மனிதரைக் கண்டு துணைக்குற்றாள். லேசாக குனிந்து கிருஷ்ணா தனிந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.
இவர் எதற்காக இங்கே வந்திருக்கிறார்? இவருக்கும் கிருஷ்ணாவிற்கும் என்ன சம்மந்தம்? என்ற கேள்விகள் ஒருபுறம் எழ, இன்னொரு புறம் அவர் தன்னை பார்த்துவிடக் கூடாது என்ற பதற்றம் தோன்ற அவசரமாக லிஃப்டிற்குள் நுழைந்தாள்.