• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
பிற்பகல் இரண்டு மணிக்கு அவளுக்கு விழிப்பு வந்தது! தான் எங்கே இருக்கிறோம் என்று ஒரு கணம் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவள், அது அவர்களது அறை தான் என்றதும் ஆசுவாசமாக புரண்டு படுத்தாள்! கணவனின் நினைவு வர சட்டென்று எழுந்து அமர்ந்தாள்!

வேகமாக அவளது கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்! ஆனந்தனின் அழைப்பு வந்திருக்கவில்லை! வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு ஏதும் நேர்ந்து விட்டதா? மீண்டுமாக அவனுக்கு அழைப்பு விடுத்தாள்! அது அணைத்து வைப்பபட்டிருப்தாக தெரிவிக்க,அவளுக்கு லேசாக மனம் பதற ஆரம்பித்தது! நிறுவன எண்ணில் தொடர்பு கொண்டாள்! வரவேற்பில் இருந்த ஆண்," சார், போன் சரியில்லை மேம்! அவர் இப்போது பிஸினஸ் லஞ்சிற்கு சென்றிருக்கிறார்! மிகவும் அவசரம் என்றால் அவரது காரியதரிசிக்கு அழைக்க சொல்லி உத்தரவு! அநேகமாக சார் மீட்டிங் முடிந்து, மாலை தான் ஆஃபீஸ் வருவார் மேம்!" என்றான்!

"ஓகே! வந்ததும் எனக்கு பேச சொல்லுங்க!" என்று அழைப்பை துண்டித்தாள்! கணவனுக்கு ஒன்றும் இல்லை என்றதும் நிம்மதி உண்டானது! ஆனால் அவள் அழைத்திருந்தும், அதை மதித்து அவனே அவளுக்கு இந்த விபரத்தை சொல்லியிருக்கலாமே! அவள் அப்படி என்ன பெரிய குற்றம் செய்துவிட்டாள்? தனியாக சென்றது அவ்வளவு பெரிய தவறா?
மிகவும் வருத்தமாக இருந்தது! அந்த வரவேற்பு ஆண் என்ன நினைத்திருப்பான்? என்று சற்று குன்றலாக இருந்தது!

கணவனின் பாரா முகம் அவளை மிகவும் பாதித்தது! அவன் பேசாமல் இருப்பது இத்தனை வலியை தருகிறதே! அப்படி என்றால், அவளது மனதில் இனம்புரியாத உவகை தோன்றியது! சாருபாலா திருமணமான பின்னான வாழ்க்கையை பற்றி நினைத்து பார்த்தாள்!

திருமணத்திற்கு பிறகான வாழ்வில் அவளுக்கு ஆனந்தன் மீது அன்பு பெருகியுள்ளது! அதை அவனிடம் வெளிப்படையாக காட்டி கொள்ளத் தெரியவில்லை! ஆனால் அவன் சொன்ன மஞ்சள் கயிறு மேஜிக் நடந்துதான் இருக்கிறது!

ஆனந்தன் அவள் மீது அளவு கடந்த அன்பு வைத்ததால் தான், அவள் காதல் இல்லை என்றபின்னும் பிடிவாதமாக அவளை கைப்பிடித்தான்! திருமணம் முடிந்து வந்த பிறகு, அடுத்த கட்டமான தாம்பத்திய வாழ்க்கையில் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தது, அவள் தாய்மை அடைந்த போது அவளை அவன் அனுசரணையாக கவனித்துக் கொண்டது! அவள் இரவு,பகல் என்று பணிக்கு சென்று வந்தபோது, இயல்பாக நடந்து கொண்டது! அவளுடன் பணிபுரிந்த பெண்கள் சொன்ன போதுதான், அவளுக்கு கணவன் மனைவி உறவு பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்தது! அதில் ஒரு பெண், இரவு பணிக்கு கிளம்பினால் அவளது கணவன் அந்த வாரம் முழுவதும் அவளிடம் முகம் கொடுத்தே பேச மாட்டான் என்று சொன்னதைக் கேட்ட போதுதான் அவளது கணவன் பெருந்தன்மை புரிந்தது!

எப்போதும் அவளை எதற்கும் காயப்படுத்தியது இல்லை!

எழுந்து உடையை திருத்திக் கொண்டு கீழே சென்றாள்! நேராக சாப்பாட்டு கூடத்திற்கு சென்றாள்! அவளுக்காக உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்தது!

கணவனின் செயலால் அவளுக்கு சாப்பிட பிடிக்கவில்லை! ஆனால் அவளது நலனை அவள்தான் பேணியாக வேண்டும்!

பெயருக்கு எடுத்துப் போட்டு சாப்பிட்டு எழுந்தாள்! பணியாள் மாமியார் விளிப்பதாக தெரிவிக்க, உள்ளூர மூண்ட எரிச்சலை அடக்கியபடி கூடத்திற்கு சென்றாள்!

அங்கே...

அவளது வருகையை எதிர்பார்த்தது போல மாமியார் மட்டும் கூடத்தில் அமர்ந்திருந்தார்!
அவர்களுள் சுமூகமான உறவு என்பது ஆரம்பத்தில் இருந்தே இல்லை! அவள்தான் விட்டுக் கொடுத்து பெரும்பாலும் ஒதுங்கிச் சென்றாள்! ஆனால் காலையில் ஒருபாடு பேசியதே அவளுக்கு உள்ளூர கடுப்பாக இருந்தது! இப்போது மீண்டும் அவரிடம் பேச அவளுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை! ஆனால் வயதுக்கு மதிப்பு கொடுத்து போய் நின்றாள்

"உனக்காகத்தான் இங்கே காத்துட்டு இருந்தேன்! மகாராணிக்கு ஒருவழியா விழிப்பு வந்துடுச்சா? ஆமா,உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்கிறே? உனக்கு புருஷன், பிள்ளை இருக்கிறது நினைப்புல இருக்கா இல்லையா? மதியம் சாப்பிட வருவானேங்கிற எண்ணம் இருந்திருந்தால் இப்படி படுத்து தூங்குவியா நீ? நீ பெத்த பிள்ளைக்கு சாப்பாடு தரணும்னு ஞாபகம் இல்லைன்னா என்ன அம்மா நீ? இன்னிக்கு என்று சொல்லவில்லை ரொம்ப நாளாக நான் பார்த்துட்டு தான் இருக்கிறேன்! அனிதா தான் உன் பிள்ளையை கவனித்து கொள்கிறாள்! அவள் என்ன உன் பிள்ளைக்கு ஆயாவா? இல்லை இந்த வீட்டு வேலைக்காரியா? அவள் ஏதோ மன ஆறுதலுக்காக வந்திருக்கிறவள்! வீட்டு பொறுப்பை அவள்கிட்ட விட்டுட்டு, நீ என்னம்மோ எஜமானி மாதிரி திரியிறே!"

"அத்தை, நிறுத்துங்க! நான் இன்னிக்கு ஏதோ அசதியில் கொஞ்சம் தூங்கினேன்! மற்றபடி என்னோட வேலையை நான் எப்பவும் தட்டி கழிச்சது இல்லை! அது உங்களுக்கு நல்லா தெரியும்! அனிதா எனக்கு தங்கை மாதிரி! அவளோட இழப்பை மறக்கத்தான் கேசவ்வை அவகிட்ட விட்டிருக்கிறேன்! அவளும் பாசமா பார்த்துக்கிறா! வேணும்னு என்னை திட்டறதுக்குனு காரணம் தேடாதீங்க!" என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்!

"அப்படி என்னடி அசதி ? ராத்திரி பூரா அப்படி என்னத்தை வெட்டி முறிச்சேனு சொல்லு தெரிஞ்சுக்கிறேன்!

"அத்தை,போதும்! நீங்க அதிகமா பேசுறீங்க! இதுக்கு மேல நீங்க என்கிட்ட பேசாதிங்க! எதுவா இருந்தாலும் நான் அவர் வந்தப்புறமா பேசிக்கிறேன்!" என்றுவிட்டு நிற்காமல் மாடிக்கு நடந்துவிட்டாள்!

"போடி போ, இன்னும் எத்தனை நாளைக்கு உன் பவிசு என்று நானும் பார்த்துடுறேன்!

🩷🩵🩷

அன்று இரவு ஆனந்தனின் வருகைக்காக காத்திருந்தாள் சாருபாலா!

ஆனால் அவன், கைப்பேசியில் சாருவை அழைத்தான்! அதை ஏற்றவள் அவன் பேசுமுன்பாக"ஆனந்த், என்னாச்சு இன்னும் நீங்க வீட்டுக்கு வராமல் போன் செய்றீங்க" என்றாள் படபடவென்று!

இது சாருவின் இயல்பு அல்ல! ஆனந்தனுக்கு வியப்பு உண்டாயிற்று! ஆனாலும், காட்டிக் கொள்ளாமல்,"வீட்டுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன் சாரு! பெங்களூர் சைட்ல ஏதோ பிரச்சினை என்று மானேஜர் போன் செய்தார்! நான் போய் தான் அங்கே என்ன நிலைமை என்று பார்க்க முடியும்! உன்கிட்ட விவரம் சொல்லத்தான் கூப்பிட்டேன்!"

"உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்! ஆனால் அதை போனில் பேச முடியாது ! நேரில் தான் பேசணும்! அதனால நீங்க எப்ப திரும்புவீங்கனு சொல்லுங்க"?

ஆனந்தனின் இதயம் வேகமாக துடித்தது!இத்தனை நாட்களாக இது போன்ற கேள்விகளுக்காக அவன் மனம் ஏங்கியிருந்தது!
முன்பு எல்லாம், அவன் போய் வருகிறேன் என்றால் சரி, ஹெல்த் பார்த்துக்கோங்க என்றதோடு முடித்துக் கொள்வாள்!

"இன்னும் இரண்டு நாட்கள் அங்கே இருந்து பார்த்துட்டு வரணும்! அதுக்கு மேலே கூட ஆகலாம்! லேபர் பிராப்ளம்! "

"யாருக்கும் ஏதும் விபத்து நடந்துவிட்டதா ஆனந்த்?"

"இல்லை, இது வேற வகை பிரச்சினை, இன்னொரு நாள் சொல்றேன்! இப்ப கிளம்பினால் தான் சரியாக இருக்கும்! காலையில் உனக்கு டூட்டிக்கு போகணுமே! நீ போய் தூங்கு! " என்று தொடர்பை துண்டித்தான்!

காரில் ஏறி அமர்ந்த ஆனந்தனுக்கு இப்போது மனம் தூலாபாரமாக ஆடியது! அவளோடு வாழ்ந்த வாழ்வு உண்மை! அதில் எந்த பொய்மையும் கிடையாது! சாரு ஒருநாள் மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது தான்! ஆனால் அவன் இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்காமல் அவசரப்பட்டுவிட்ட குற்றவுணர்வில் இப்போது தவித்தான்! அனிதாவை புறக்கணிக்கவும் முடியாமல், சாருவின் இந்த புதிய பரிமாணத்தை ஏற்கவும் முடியாமல் ஆனந்தனின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாயிற்று!

ஆனந்தன் இப்படி செல்வது வழக்கம் தான்! அதற்காகவே அவனது அலுவகத்தில் அவனுக்கான உடைகள் தயாராக இருக்கும்!

ஆனால் இந்த முறை அவன் சென்றதை, சாருவால் இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை!

இன்னும் இரண்டு தினங்கள் கணவனை காண முடியாதே என்ற தவிப்பு உண்டாக, அதை அவளால் இயல்பாக எடுக்க முடியாமல் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது!

காலம் கடந்துவிட்டால் எந்த ஒரு விஷயத்திற்கும் மதிப்பற்றுப் போகும்..காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ஏன் சொன்னார்கள்.. பெரியவர்கள்?
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 11