சாருபாலா கணவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள்! தன்னை கவனமாக அலங்கரித்துக் கொண்டாள்! அலங்காரம் என்றால் ஒப்பனை அல்ல. வழக்கமாக அவள் அசட்டையாக தலையை வாரி ஒரு பாண்ட் போட்டு முடியை அடக்கிக் கொள்வாள்! நெற்றியில் லேசாக குங்குமம்! மற்றபடி அவளது முகம் மாசு மருவற்று பளிச்சென்று தான் தோன்றும்!
இப்போது கூந்தலை வாரி பின்னலிட்டிருந்தாள்! அதில் கொஞ்சமாய் பூ! காதோரம் ஒரு ரோஜா என்று அவளைப் பார்க்கவே மனதை கவர்ந்தாள்!
விசாலம்கூட அவளது தோற்றம் கண்டு சற்று உள்ளூர கலங்கிவிட்டார் எனலாம்! அனிதாவிற்கு அப்படி எந்த கலக்கமும் இல்லை! மாறாக இத்தனை அழகை மறைத்து வைத்திருந்திருக்கிறாளே என்று தான் நினைத்தாள்!
பெங்களூரில் மேலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு ஆனந்தன் வீடு திரும்பினான்! அவன் வருவதை முன்னதாக சாருவுக்கு வழக்கம்போல தெரிவிக்கவில்லை! அன்று பகல் வேலைக்கு கிளம்பிச் சென்றிருந்தாள்! அவன் அதை உத்தேசித்து தான் வந்தான்!
அனிதாவுடன் கலந்து பேசினான்! தன் திட்டத்தை அவளுக்கு விளக்கினான்! அவளுக்கும் உறுத்தலாகத் தான் இருந்தது! மனிதர்கள்,எந்த ஒரு பாதிப்பும் தனக்கென்று வரும்வரை அதைப் பற்றி உணர்ந்து கொள்வதில்லை! அடுத்தவருக்கு என்றால் அதை வெறுமனே அவர்கள் விதி என்று பழியைப் போட்டு விலகிக் கொள்வார்கள்! அப்படித்தான் அவளுக்கும், சாருவின் வாழ்க்கையை பறிக்கிறோமே என்று சற்று குன்றலாக இருந்தபோதும், கிடைத்த வாய்ப்பை விட்டுக் கொடுக்க மனம் இல்லை!
பிற்பகல் வீடு திரும்பினாள் சாரு!
அப்போது தான் ஆனந்தன் மதிய உணவுக்குப் பிறகு உறங்க ஆரம்பித்து இருந்தான்! அறைக்குள் வந்தவள் கணவனை கண் நிறையப் பார்த்துவிட்டு அவனது தூக்கம் கலையாமல் தன் வேலைகளை முடித்துக் கொண்டு உணவருந்தச் சென்றாள்!
மாலை சிற்றுண்டியை அவளே தயார் செய்வதாக, அனிதாவிடம் தெரிவித்தாள்! அவளும் சரிதான் என்று ஒதுங்கிக் கொண்டாள்!
ஆனந்தன் எழுந்து வந்து மாலை சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தவன், "ஆமா, எங்கே அனிதாவையும், ரிஷியையு காணோம்? "
"ரிஷியை அனிதாவோட கோவிலுக்கு அனுப்பி வச்சேன்! அத்தையும் கூடப் போயிருக்காங்க!
எனக்கு உங்ககிட்டே தனியாக பேச வேண்டியிருக்கு ஆனந்த்! முதலில் நீங்க டிபன் சாப்பிடுங்க! நான் போய் உங்களுக்கு டீ போட்டு எடுத்து வர்றேன்!" என்று உள்ளே சென்றாள்!
ஆனந்தனுக்கு சாருவின் எளிமையான அலங்காரமும், நடத்தையும், பார்த்து அவனது மனது சிறிது ஆட்டம் காணச் செய்தது உண்மை! ஆயினும்
"டீயுடன், திரும்பி வந்தவளிடம்,
எப்போதும் போல பொதுவான பேச்சுக்களைப் பேச, முயன்றபோது,
"ஆனந்த், எனக்கு உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்! ரொம்ப முக்கியமான விஷயம்! அதற்கு முன்னால நான் உங்ககிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன்! என்றபோது குழப்பமாக ஏறிட்டான்!
"என்ன மன்னிப்பு ? எதுக்காக சாரு?
என்றான்!
"ஆனந்த், நான், வளரந்த சூழல் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை! என் அம்மா இறந்தபின், அப்பா சுரேந்தினின் அம்மாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்! அவங்க என்கிட்டே அம்மாவா நடந்துக்கலை ஒரு கார்டியனா நடந்துக்கிட்டாங்க!எனக்கு எந்த அட்வைஸும் செய்தது இல்லை! சொல்லப் போனால் ஒரு குடும்பத்தின் அமைப்பு எப்படி இருக்கும், ஒரு பொண்ணு கணவன் வீட்டிற்கு போகும் போது எப்படி நடந்துக்கணும் என்று எனக்கு தெரியாது! அதனால் தானோ என்னவோ எனக்கு கல்யாணம், குடும்பம் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படவில்லை! உங்களை திருமணம் செய்தபின் நீங்கள் காட்டித் தந்திருந்த போலதான் நான் வாழ்ந்துட்டு வர்றேன்! குடும்பம் என்றால் இப்படித்தான் என்று நினைத்து விட்டேன்!
ஆனந்தன் உண்மையில் அவள் சொல்லச் சொல்ல, உள்ளூர வெகுவாக அதிர்ந்து போனான்! அவள் போக்கில் விடுகிறேன் என்று அவளை அறிந்து கொள்ள முயற்சியே செய்யாமல் விட்ட தன் பிழையை நினைத்து நொந்துகொண்டான்! ஆனால் தலைக்கு மேலே வெள்ளம் வந்துவிட்டதே, ஒருவாறு தன்னை சுதாரித்தவன்,
"சாரு, இப்ப எதுக்காக இதெல்லாம் சொல்றே? மன்னிப்பு எதுக்கு கேட்டே ? அதுக்கு பதில் சொல்லு என்றான் அழுத்தமான குரலில்!
"அது.. அன்றைக்கு ராத்திரி நான் யார் துணையும் இல்லாமல் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்ததுக்கு! அத்தை ரொம்ப திட்டினாங்க! அந்த நேரத்தில் நான் தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் அந்த நோயாளியை இறுதியாக உயிரோடு பார்ப்பேனோ மாட்டேனோ என்று எனக்கு கொஞ்சம் பயம்! அதனால அப்படி கிளம்பிட்டேன்! அதை, பார்த்துட்டு யாரோ உங்ககிட்டே விசாரிச்சாங்கனு அத்தை சொன்னாங்க! அதனால நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம்! உங்களுக்கும் என் மேலே கோபம் என்றும் சொன்னாங்க!
" ம்ம்.. கொஞ்சம் கோபம் தான்! அந்த நேரத்துல நீ போனது தப்பு இல்லை! துணை இல்லாமல் போனது தான் தப்பு! அப்படி பாக்கிற யாருக்கும் நீ ஆஸ்பிடல் தான் போறேன்னு எப்படி தெரியும்? வீட்டுக்கு தெரியாமல்.. முக்கியமாக எனக்கு தெரியாமல் நீ யாரையோ ரகசியமாக சந்திக்கப் போறேன்னு தான் நினைப்பாங்க!
"ஆனந்த்!" அதிர்ந்து போனாள் சாரு!
"நிஜம் சாரு! ஆண் அப்படி வெளியே போனால் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க! அதே பெண் என்றால் சமூகத்தின் பார்வை மாறுபடும்! அத்தோடு நிற்க மாட்டாங்க, அவங்களுக்கு தெரிஞ்சவங்க தெரியாதவங்கனு எல்லார்கிட்டேயும் பரப்புவாங்க! இன்னார் மனைவினு, நம்ம பெயர் அடிபடும்! அப்புறமாக பொதுவாழ்வில் என் செல்வாக்கு குறையும் சாரு! அது என் தொழிலை பாதிக்கும்! "
சாருவிற்கு இப்படியும்கூட நினைப்பார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது! கூடவே ஆனந்தனுக்கு கெட்ட பெயர் உண்டாக அவள் காரணமாகிவிட்டாளே என்று சற்று வருத்தமும் உண்டாயிற்று!
"ஓ ! ஐ'ம், வெரி வெரி சாரி ஆனந்த்! எனக்கு இது இத்தனை பெரிய பிரச்சினையாகும்னு தெரியாது!"
"சரி, சரி! நீ வேண்டும் என்று செய்யவில்லை! தெரியாமல் தானே! அதை விடு, ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே! என்ன அது?
"நான் சொன்னேனே அந்த பெரியவர் வாசன், அவர் அன்றைக்கு இறந்து போறதுக்கு முன்னால என்னை பார்க்கணும்னு கூப்பிட்டிருந்தார்னு போனேன்ல.. என்றவள் ,அன்றைக்கு நடந்த விஷயங்களை விவரமாக சொன்னாள்!
ஆனந்தனுக்கு அந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை! ஒருவகையில் அது சாருவுக்கு நல்லது தான்! ஆனால் அதை விசாலாட்சியிடம் சொன்னால் நிச்சயமாக தவறாகப் தான், பேசுவார்! அவரைப் பொறுத்தவரை, நட்பு எல்லாம் சும்மா, வேஷம், அல்லது உள் நோக்கத்துடன் பழகுவது! இப்படித்தான் அவரது கண்ணோட்டம்!
"இது அம்மாவுக்கு தெரியுமா சாரு?"
"தெரியாது! நான் சொல்லத்தான் நினைத்தேன்! சும்மாவே அவங்க என்னை ரொம்ப .. தப்பா பேசினாங்க! அதனால சொல்லவில்லை! என் மனசுக்கு தெரியும் நான் தப்பு செய்யவில்லை என்று! உங்களிடம் சொன்னால் நீங்கள் சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நினைத்தேன்!
"நீ சொல்லதும் சரிதான், சாரு! நீயோ நானோ சொல்லாவிட்டால் அவங்களுக்கு தெரியப் போறது இல்லை! அதனால அம்மாவிடம் சொல்ல வேண்டாம்!"
"என்ன ஆனந்த் சொல்றீங்க? அவங்க வீட்டுக்கு பெரியவங்க! அவங்களுக்கு தெரியாமல் எப்படி மறைக்க முடியும்? அவங்களுக்கு பின்னாடி,தெரிய வரும்போது, அவங்க என்னைத் தான் தப்பா பேசுவாங்க!"
"அதுக்கு வாய்ப்பே வராது! நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையா?
"நிறைய இருக்கு! "
"அப்போ இந்த பேச்சை விடு! நான் ஆஃபீஸ் வரை போய் வர்றேன்! என்று எழுந்தான்!
"ஆனந்த்! நீங்க நைட் சாப்பிட வந்துடுவீங்கள்ல? உங்களுக்கு பிடிச்சது சமைச்சு வைக்கிறேன்! "
ராத்திரி நான் வர லேட் ஆகும் சாரு! எனக்காக சமைக்கிறது எல்லாம் எதற்கு சாரு? நீ ஆஸ்பிடலில் வேலை செய்துவிட்டு வீட்டிலும் செய்ய வேண்டாம் என்று தானே சமையலுக்கு ஆள் வச்சிருக்கிறேன்!
"ஏன் நான் உங்களுக்காக சமைக்க கூடாதா ஆனந்த்? சாருவின் குரல் ஏமாற்றமாக ஒலித்தது!
"செய்யலாம் சாரு! இப்ப இருக்கிற வழக்கத்தை நீ ஏன் மாற்ற நினைக்கிறே? உனக்கு ஆசை என்றால் ஞாயிறு அன்று சமைத்துப் போடு! வேலை நாட்களில் நீ மெனக்கெட வேண்டாம்!" என்றவன், " அப்புறம் சாரு,"புதுசா ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு! இன்னும் ஆறு மாதங்களுக்கு எனக்கு வேலை ரொம்ப டைட்டாக இருக்கும்! சொல்லப்போனால், வேலை மகாபலிபுரத்தில் தான்! அதனால் நான் வீட்டிற்கு வருகிற சமயங்கள் குறையும்! கேப் கிடைக்கிறப்போ தான் வீட்டில் தங்க முடியும்! இதெல்லாம் உனக்கு ஏற்கனேவே தெரியும் தானே? இதில கூடுதலாக, இடையில் பெங்களூருக்கும் போக வேண்டியிருக்கும்! அங்கே பிரச்சினை சரியாகிவிட்டது தான், என்றாலும் நான் அங்கே அப்பப்ப கண்காணிக்க வேண்டியிருக்கு!
ஆனந்தன் சொன்னதை கேட்டு இத்தனை நாட்கள் இல்லாமல்,புதிதாக முளைத்திருக்கும் நேசத்தின் விளைவாக சாருபாலாவுக்கு மனம் வேதனை அடைந்தது! அதை அவள் முகம் பிரதிபலித்தது!
ஆனந்தனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது! ஆனால் அவனுக்கு வேறு மார்க்கம் தெரியவில்லை!
"நாளைக்கு காலை டூட்டி தானே உனக்கு?
"ஆமா, ஆனந்த்! ஏன் கேட்கிறீங்க?"
"ராத்திரி எனக்காக காத்திருக்காமல் சாப்பிட்டு தூங்கு சாரு! எதையும் போட்டு மனதை குழப்பிக்காதே! சரியா? என்று அவளது கன்னத்தில் தட்டிவிட்டுச் செல்ல..
அந்த ஸ்பரிசத்தில், ஒரு கணம் தன்னை மறந்து நின்றாள் சாரு! உடனடியாக சுதாரித்து வாசலுக்கு ஓடினாள்! அதற்குள்ளாக கார் மதில் கதவை அடைந்து விட்டிருந்தது! கன்னத்தில் கையை வைத்தபடி சில கணங்கள் அங்கேயே நின்றாள்! இதற்கு முன்பும் இப்படி நடந்திருந்தாலும், அப்போதெல்லாம், இப்படியான உணர்வு உண்டாகவில்லை!
பழைய நினைவுகளில்,லேசாக முகம் சிவக்க தன்னறைக்கு திரும்பினாள்!
சாருவுக்கு இந்த காதல் ஆரம்ப காலத்தில் வந்திருந்தால்.. அனிதாவை அவள் இனம் கண்டு கொண்டிருப்பாள்! கண் கெட்ட பின் சூர்யநமஸ்காரம்.. என்பது இதுதானோ?
நம்பிக்கை துரோகம் செய்வது பெரும்பாலும், உடன் இருப்பவர்கள் தான் என்ற ஒரு சொலவடை உண்டு !