• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (1)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

1

ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணி, வெயில் மண்டையைப் பிளந்தது. சைக்கிளை ஓட்டிய கணபதிக்கு வியர்வை ஆறாக வழிந்தது. ஒவ்வொரு முறை பெடலை மிதிக்கையிலும் சைக்கிள் கொயி கொயி என முனகியது.

ஒரு நல்ல கைனடிக் ஹோண்டா வண்டி வாங்க ஆசைதான். ஆனால் வரும் பணம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாகி போய்விடுகிறது என எண்ணியபடி அந்த தெரு முனையில் தேடி வந்த வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தினான்.

அதுவொரு அடுக்கு மாடிக் குடியிருப்பு, அழுக்கு சட்டையை அணிந்திருந்தது. உள்ளே சென்றான். லிப்ட் உள்ளதா என நாலா பக்கமும் பார்க்க இல்லையெனத் தெரிந்து மாடி ஏறத் தொடங்கினான்.

மூன்றாவது மாடி ஏறிவருவதற்குள் மூச்சு முட்டியது “ஸ்ஸ்ஸப்பா முடியல” முணுமுணுக்க ஏறினான்.

எப்படிதான் தினமும் இவர்கள் சென்று வருகின்றனரோ என வியக்காமல் இருக்க முடியவில்லை.

சுவரில் ஆங்காங்கே துகிலுரிந்து வண்ணப்பூச்சு, மாடியின் ஓரங்களில் ஆங்காங்கே ரத்த துளிகளாய் மென்று துப்பிக் காய்ந்த வெற்றிலை.

ஜோதிடர். வேலாயுதம் என்னும் பெயர்ப் பலகை கண்ணில் பட்டதும் நிம்மதியானது. எழுத்துகள் கண்ணாமூச்சி ஆடியபடி அழுதுவடிந்தன.

வெளியே மாடிப்படியில் ஒரு சிறுவன் தன்னை மறந்த மோன நிலையில் அமர்ந்து தன் இடது கை ஆள்காட்டி விரலை மூக்கில்விட்டு முண்ணூற்றி அறுபது டிகிரிக்கும் சுழற்றிக் கொண்டிருந்தான். மற்றொரு கையில் செல்போனில் விளையாட்டு.

“தம்பி ஜோசியர் இருகாரா?” கணபதிக் கேட்க

“. .......”

“தம்பி . . .தம்பி”

எந்த பதிலும் சொல்லாமல் ஒரு முறைப்புடன் இறங்கிப் போய்விட்டான்.

“போய் படிடா” எனச் சொல்ல எத்தனித்த நாக்கை அடக்கி நமக்கெதற்கு என காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்தார் ஒரு பெண்மணி.

“ஜோசியரை பாக்கணும்” கணபதி சொல்ல

“வாங்க இருக்கார்” என்றார் கதவைத் திறந்தவர். “உட்காருங்க” என நாற்காலியைக் கைகாட்டிவிட்டு “என்னங்க” எனக் குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

அந்த அறை முழுவதும் பல பல கடவுள் புகைப்பட சட்டத்துக்குள் பூ மாலையுடன் அருள்ப் புரிந்த வண்ணமிருந்தனர். அறை நிரம்ப வாசனை வீசியது. அது சந்தனமா அல்லது ஊதுபத்தி வாசமா? எனக் கணபதியால் இணங்கான இயலவில்லை.

இரண்டொரு நிமிடங்களில் ஜோதிடர் வேலாயுதம் மலர்ந்த முகத்துடன் வந்தார்.

“வணக்கம்” மஞ்சள்ப் பற்கள் எட்டிப்பார்க்க ஜோதிடர் புன்னகைத்தார். அவர் நெற்றியில் பட்டையாய் மூன்றடுக்கு விபூதி நடுவே வட்டமாகச் சந்தனம். அதற்குள் மற்றொரு தேய்பிறை சந்திரனாகக் குங்குமம். கும்மென்று ஜவ்வாது வாசம் அவர் சட்டையில் வீசியது.

“வணக்கம்” கணபதி பவ்வியமாய் எழுந்து சொன்னான்.

“உட்காருங்க ..சொல்லுங்க என்ன விஷயமா?” என தன்னை இருக்கையில் அமர்த்திக் கொண்டார்.

“ஜாதகம் பாக்கணும்”என்றபடி நாற்பது பக்க நோட்டை நீட்டினான்.

“பாத்திடலாம் .. கடவுள் அருள் உங்களுக்குக் கிடைக்கட்டும்” என நோட்டை வாங்கியபடி ”என்ன விஷயமா பார்க்கணும்?” கேட்டார்.

“கல்யாணம் எப்பனு?”

”உங்க பையனுக்கா? பொன்னுக்கா?” ஜோதிடர் கேட்க

”எனக்குத்தான்” நானிகோனி கணபதிக் கூற

தன் லேசான அதிர்வலைகளை மறைத்தார் ஜோதிடர். அவன் தோற்றம் அப்படி ஜோதிடரை எண்ணத் தோன்றியது.

ஜாதகத்தை முதலில் மேலோட்டமாகப் பார்த்தவர் பின்பு கணிக்கத் தொடங்கினார்.“உங்களுக்கு இப்ப முப்பத்திரண்டு வயசு”

“ஆமா.என் அரிசி மண்டியில இரா பகலா வேல வேலனு இருந்துட்டேன். இப்ப திரும்பிப் பார்த்தா முப்பத்திரண்டு வயசு. சரி நாமளும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி பாத்திடலாம்னு பொண்ணு தேடினேன். ஓண்ணும் கிடைக்கல்ல அதான் உங்ககிட்ட எப்பனு ..” வருத்தமும் அடக்கமுமாகப் பேசினான்.

ஜோதிடர் ஜாதகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் “ சுக்கிரன் நாலாம் வீட்டில் இருக்கான். சூரியன் ஆறு குரு இரண்டாம் வீட்ல இருக்கு” என அவர் சொல்லிக் கொண்டே போக

“எவன் எந்த வீட்ல இருந்தா எனக்கென்ன .. என் வீட்டு ஓனர் வீட காலி பண்ணு காலி பண்ணுனு உசுர வாங்குறான்.” என மனதிற்குள் புலம்பினான்.

“உங்க ஜாதகம் ராஜ ஜாதகம் தம்பி” முகம் மலர கூறினார்.

“சார் பச்சரிசி இட்லி அரிசி னு எல்லாத்தையும் வாங்கியாந்து கோடோன்ல பெருச்சாளி கூட குடும்ப நடத்தாத குறை இதுல ராஜ ஜாதகமா?” என வேதனை புன்னகையுடன் கேட்டும் விட்டான்.

“உண்மைதான் தம்பி அது கடந்தகாலம். இனிமே பாருங்க .. உங்க பேரிலேயே ராஜா இருக்கு இப்படி சொல்றீங்களே” என்றார் ஜோதிடர்.

“நான் பிறந்தது பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு. நான் ராஜா மாதிரி இருக்கணும்னு ராஜகணபதினு என்னை பெத்தவங்க பேர் வெச்சாங்க. பேர்ல தான் ராஜா ஆனா வாழ்க்கையில் கூஜாவா கூட இல்லை”

“தம்பி முடிஞ்சது முடிஞ்சி போச்சி அதைப் பத்தி பேசாதீங்க இனி உங்களுக்கு ராஜ வாழ்க்கை அமைய போகுது. நான் சொல்லலைக் கட்டம் சொல்லுது” அழுத்தந்திருத்தமாக சொன்னார் கடைசி வார்த்தைகளை

ராஜா நம்பாமல் லேசாக புன்னகைத்தான். அவன் வாழும் வாழ்க்கை அவனுக்கு நம்பிக்கை அளிக்கவில்லை.

“தம்பி உங்களுக்கு லட்ச கணக்கில் சொத்து சேர போகுது. மகாலட்சுமி மாதிரி மனைவி அமையப்போகிறாங்க. சந்தோஷமா இருப்பீங்க. கவலைப்படாதீங்க”

அவனுக்குச் சர்க்கரை நோயாளி எந்த மருந்துமின்றி இனிப்பைத் தாராளமாகச் சாப்பிடலாம் எனச் சொல்வது போல இருந்தது. இன்னும் எதையும் கேட்கும் பொறுமை அவனிடம் இல்லை.

“தெரியாத்தனமா வந்துட்டோம் .. எஸ்கேப் ஆகிடுடா .. ” என உள்ளம்உரைக்க “சரிங்க .. நான் கிளம்புறேன்.. எவ்வளவு தரணும்” எனச் சட்டை பாக்கெட்டிலிருந்து சில ரூபாய்த் தாள்களைக் கையில் எடுத்தான்.

கணபதி நம்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டவர் “இன்னும் ஒரு மாசத்துல நான் சொன்னது நடக்கும். நான் சொன்னது நடந்தபின்ன பணம் கொடுங்க. இப்ப வேண்டாம்” என ஜாதக நோட்டை மூடி திரும்பிக் கொடுத்தார்.

“ஐயா நான் அரிசி மண்டி வெச்சு நடத்துறேன். நான் டிகிரி முடிக்கும் போது என் அப்பா இறந்துட்டார். என் தம்பி தங்கை என் அம்மா இவங்க எல்லாரையும் பார்த்துக்கிற பொறுப்பு என் தலைல விழுந்தது. என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கல்ல அதனால் கிடைச்ச வேலையப் பார்த்தேன். தம்பி தங்கையைப் படிக்க வெச்சி கல்யாணம் கட்டிக் கொடுத்தேன். இப்படி இருக்கையில …”

“அதான் அது பழைய கதைனு சொல்லிட்டேன்ல .. இனிமே பாருங்க .. உங்களுக்கு லட்ச லட்சமா பணம் வரும் அப்போ என் பணத்தை கொடுங்க” என அவர் ஸ்திரமாகக் கூறினார்.

இனியும் இதைக் கேட்க இயலாது என “சரிங்க நான் நம்புறேன்” என அவசரமாக ரூபாய் தாள்களை நீட்டினான்.

மறுப்பாகத் தலையசைத்து “நான் சொன்னது பலிக்கும் வரை உங்ககிட்ட பணம் வாங்க மாட்டேன்” என்றுவிட்டார்.

பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் பணம் வாங்க மறுத்துவிட்டார்.

”டேய் அந்த ஜோசியர் இன்ன தேதியில் இது நடக்கும்னு சொன்னா அப்படியே நடக்குமாம்” என கணபதியின் தாயார் காலையில் சொன்னது அசரீரியாய் காதில் ஒலித்தது.

“அட போம்மா உனக்கு வேற வேலை இல்ல” எனத் தாயை வசைபாடினான். ஆனால் யாருக்குத்தான் தன் எதிர்காலத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்காது. அதனால்தான் இங்கு வந்து சேர்ந்தான்.

ஆனால் ஜோதிடர் வார்த்தைகள் அவனுள் லேசாய் நம்பிக்கை என்னும் விதையை விதைத்தது. தன் வாழ்க்கையிலும் மாற்றம் வருமா? எனச் சின்ன ஆசை துளிர்விட்டது.

காஞ்சிபுரத்தில் குறுக்குசந்தில் உள்ளதன் வீட்டிற்குத் திரும்புகையில் வெயிலின் தாக்கம் அல்லது சைக்கிளின் முனகல் எதுவும் தெரியவில்லை. அனைத்தும் இன்பமாய் இனித்தது.

வீட்டிற்குள் நுழைந்தவன் தன் தாயிடம் மகிழ்ச்சியைப் பகிர வாயைத் திறக்க அதற்குள் தாய் சுந்தரி “டேய் உன் பாட்டி செத்துப் போயிட்டாங்க.. இப்பதான் போன் வந்துச்சி” எனச் சொல்லவும்

கணபதியின் அத்தனை மகிழ்ச்சியும் வடிந்து மீண்டும் பாலைவன நிலைக்குத் தள்ளப்பட்டான்.

மகனின் முக மாறுதலைக் கண்டு“ஜோசியர் என்னடா சொன்னாரு?” அம்மா சுந்தரி ஆவலாய் கேட்க

“ கல்யாணத்தைப் பத்தி பேச வந்த கருமாதி செய்தி சொல்ற” எனக் கோபமாகப் பதிலளித்தான்.

கண்கள் அகல அவன் அம்மா “ சரி சரி விடு கிழவிக்கு வயசாச்சு .. நீ சொல்லு கல்யாணம் எப்பவாம்?” குதூகலத்துடன் வினவினார்.

“லட்ச கணக்குல பணம் சேருமா.. கல்யாணமும் ஆகுமாம் .. இன்னும் ஒரே மாசத்துல” என அவர் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான்.

மகிழ்ச்சியுடன் “ ஜோசியர் சொன்னா அப்படியே நடக்கும் டா. சந்தோஷமா இருக்கு” எனும்போது அவரின் போன் அலற ”ஹலோ” எனப் பேசிக் கொண்டே சென்றுவிட்டார்.

அப்போது கணபதி தம்பி பாலு வீட்டிற்குள் நுழைந்தான். அண்ணன் முகம் சரியில்லையென கண்டதும் “என்ன?” எனப் புருவத்தை உயர்த்த

கணபதி “திரும்ப முத்தல்ல இருந்தா” எனச் சலிப்புடன் அனைத்தையும் சொன்னான்.

சந்தோஷமாக “அவர் சொன்ன அத்தனையும் நடக்கத்தானே கெழவி அதான் நம்ம பாட்டி மண்டையை போட்டிருக்கு” என்ற தம்பியை அவன் சந்தேகமாக முறைக்க

“அண்ணே நாம ஜமீன்தார் பரம்பரை .. கோடி கோடியா சொத்து நிலம் இருக்கு” எனப் பழைய பல்லவியை பாலு பாட

“அதன் நம்ம அம்மா அப்பா காதல் கல்யாணம் பண்ணதனால சொத்துல பங்கு இல்லனு சொல்லி விரட்டி விட்டுடாங்கள?” கணபதி வழக்கறிஞராய் வாதாட

“அதைச் சொன்னது பாட்டி .. அதான் போயிடுச்சே .. தாத்தாகிட்ட இருக்கிற சொத்தை ஆட்டையைப் போடுவோம்” பாலு அசால்டாக சொல்ல

“டேய்,,,” அதிர்ந்துவிட்டான் கணபதி

“மரம் மாதிரி நிக்காம யோசி அண்ணே” எனத் தம்பி திட்ட

தன் தம்பியின் புதிய அவதாரம் அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

“பாலு நீ ஓவரா ஆசையை வளர்த்துகாத .. நம்மளை வீட்டுக்குள்ள விடுவாங்களானு தெரியாது”

“அப்படிச் சொல்லாத கெழவி பயங்கரமான ஆளு … அதுவே மண்டையை போடுச்சி .. இனி நமக்குப் பிரச்சனை இல்ல” நாம அங்க போய்ப் பார்க்கலாம்.

“சரி நீ வேணா போ .. பஸ் ஏத்திவிடவா?”

“என்னது? நான் மட்டுமா? நாமனு சொல்லு எல்லாரும் போகணும் அப்பத்தான் வேலையை சட்டுபுட்டுனு முடிக்க முடியும்” பாலு கனவில் மிதந்தான்.

“இல்லடா நீ போ .. நான் வரல … ”

சுந்தரி “அங்க யாரும் போகக் கூடாது. என்னையும் உன் அப்பாவையும் விரட்டிவிட்ட வீடு அது” என ஆணையிடாத குறையாக சொல்லிவிட்டு இருவரையும் சற்றும் கண்டு கொள்ளாமல் மீண்டும் போனில் பேசியபடி சமையலறைக்குள் நுழைந்துவிட்டார்.

“ராஜமாதா சொல்லிட்டாங்க கேட்டுக” எனக் கணபதி பதில் சொல்லி நகரப் பார்த்தான்.

“அண்ணே .. நில்லு ஒரே ஒரு தடவை பார்த்திட்டு வரலாம்” பாலு கெஞ்சினான்.

“இப்பதானே அம்மா சொன்னாங்க”

“அம்மாவுக்குத் தெரியாம போயிட்டு சீக்கிரமா திரும்பிடலாம். சாவுக்குத் துக்கம் விசாரிக்கத் தானே போறோம். என்ன இருந்தாலும் நம்ம பாட்டி இல்லையா?” சட்டெனப் பாசம் பொங்கி வழியப் பேசினான்.

தம்பியின் போக்கு அறியாதவனா அண்ணன்?

கணபதிக்கும் வெகு நாட்களாகவே மாளிகை தங்கள் பரம்பரை மனிதர்களைக் காண ஆசைதான். ஆனால் அம்மாவின் கட்டுப்பாடு அவனைக் கட்டிப் போட்டது.

தற்பொழுது சாவுக்குத் துக்கம் விசாரிக்கத் தானே போகப் போகிறோம் எனத் தம்பிச் சொன்ன காரணத்தை தனக்கும் கற்பித்துக் கொண்டான்.

“சரி அம்மாவுக்குத் தெரியாம போயிட்டு வந்திடலாம்” என ரகசியமாய் தம்பியிடம் சொன்னான்.

ஆனாலும் அவனுள் குழப்பம் இன்னும் நீங்கியபாடில்லை.



தொடரும் …

























 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
கலக்கலா ஆரம்பிச்சு இருக்கீங்க 😍

அந்தப் பையனோட செயலைக்கூட ரசனையோட சொன்னவிதம் 🤣🤣

ஜோசியர் சொன்னதுல கொஞ்சம்கூட நம்பிக்கையே வரல அவனுக்கு 🙄

ஒருவேளை கெழவி வில்லங்கமா ஏதாவது செஞ்சு வெச்சிட்டு மண்டைய போட்டிருக்குமோ? 🤔

ராஜகணபதிக்கு ராஜவாழ்க்கை அமையுமா 🧐

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
கலக்கலா ஆரம்பிச்சு இருக்கீங்க 😍

அந்தப் பையனோட செயலைக்கூட ரசனையோட சொன்னவிதம் 🤣🤣

ஜோசியர் சொன்னதுல கொஞ்சம்கூட நம்பிக்கையே வரல அவனுக்கு 🙄

ஒருவேளை கெழவி வில்லங்கமா ஏதாவது செஞ்சு வெச்சிட்டு மண்டைய போட்டிருக்குமோ? 🤔

ராஜகணபதிக்கு ராஜவாழ்க்கை அமையுமா 🧐

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
Thank you so much sis ❤️
Adutha epiyil teriyavarum
 

MK14

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
16
13
43
Tamilnadu
செம்மையா ஆரம்பிச்சிருக்கீங்க பா
வாழ்த்துக்கள்
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
செம்மையா ஆரம்பிச்சிருக்கீங்க பா
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சிஸ் 🙏