• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (2)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

2

கணபதி மனம் பாட்டியின் மரணத்திற்குப் போவதா? வேண்டாமா? எனப் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்தது. அதற்கான காரணம் இல்லாமல் இல்லை.

அவன் தம்பி பாலு “நான் ரஞ்சனிக் கிட்ட வேலை விஷயமா போறதா சொல்லிடறேன். நீயும் அதே மாதிரி அம்மா கிட்ட சொல்லு அண்ணே” என்று விட்டு தன் மனைவியை நோக்கிச் சென்றான் பாலு.

தன்னுடைய அரிசி வியாபாரம் தொடர்பாக ஒருவரைக் காணச் செல்வதாக அம்மாவிடம் சொன்னான் கணபதி. தொலைக்காட்சி சீரியலில் லயித்திருந்த அம்மா “சரி போயிட்டு வா” என்றார். கணபதி உடனே கிளம்பிவிட்டான்.

பாலுவும் இதே ராகத்தை வேறு ஸ்வரத்தில் சுந்தரியிடமும் தன் மனைவி ரஞ்சனியிடமும் கூறி ஓப்புதல் வாங்கினான்.

கிளம்புகையில் “ஏன்மா உன் மாமியார் மண்டையை போட்டிருக்கு .. நீ கவலையே இல்லாம சீரீயல் பாக்குற .. கொஞ்சமாவது அழுமா” பாலு கிண்டலாக சொல்ல

“அந்த கெழவி லேசுபட்ட ஆளு இல்ல .. என்னா ஆட்டம் போட்டிச்சி தெரியுமா? அதுக்காக அழுணுமாம் … போடா” எனச் சுந்தரி விரட்டிவிட்டார்.

“சரி நான் போயிட்டு வரேன்மா” என்றவன் தன் மனைவி ரஞ்சனியைப் பார்த்துக் கண்ணடித்து பறக்கும் முத்தத்தை போனசாக அனுப்பினான்.

“அம்மா பாக்குறாங்க”என வெட்க பதட்டத்துடன் ரஞ்சனி அறை வாசலில் நின்றபடி செய்கை செய்தாள்.

“இதெல்லா ரூம்லயே செய்யக் கூடாதா?” எனச் சுந்தரி தொலைக்காட்சியைப் பார்த்தபடியேப் பேசினார்.

பாலு ”யம்மோவ் நீ கில்லாடி கெழவிக்கு மேல இருப்ப போலயே” என்றவன் புன்னகையுடன் கிளம்பினான்.

தெருவோரத்தில் கணபதி பாலுவிற்காகக் காத்திருந்தான்.

அடுத்த பத்தாவது நிமிடம் இருவரும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தனர்.

”பாலு நீ மட்டும் போயிட்டு வாயேன் .. நான் வரலை” கசப்பான பழைய நிகழ்வுகள் மனதில் நிழலாடக் கணபதி குழப்பத்துடன் சொன்னான்.

“யாரா இவன்?” பல்லைக் கடித்துச் சலிப்புடன் “நீ வந்தே ஆகணும்” என்றான் பாலு

“இந்த வெக்கம் மானம் சூடு சொரணை இதெல்லா போகவிடாம தடுக்குது டா.”

“அதெல்லாத்தையும் மூட்டக் கட்டி ஓரமா வெச்சிட்டுக் கிளம்பு”

முகத்தைச் சுளித்து “அசிங்கமா இருக்கு .. அவங்க யாராவது இங்க வராங்களா? நாம எதுக்கு போகணும்”

“தாத்தா சார்பா தான் யாரோ போன் செய்து துக்க விஷயத்தைச் சொல்லி அப்படியே கண்டிப்பா வந்திடுங்கனு கூப்பிட்டு இருக்காங்க. அம்மா சொன்னாங்களா இல்லையா?”

“அவங்க வரச் சொன்னதினால போறோம். நாம சாவுக்கு போறோம் அவ்வளவுதான் .. இதுக்கு எதுக்கு சங்கடபடணும். அப்படியே நம்மப் பங்கையும் வாங்கிப்போம்” பாலு தன் பக்க வாதத்தை வைத்தான்.

கணபதி சிரித்தபடி “ கொடுப்பாங்க ஆசைதான் உனக்கு .. அம்மா அப்பாவையே ஒதுக்கிட்டாங்க இதுல இப்ப சொத்து தான் பாக்கி ”

“கணக்கு சரியா இருக்கா பாத்திடுவோம்” பாலு பழைய நோட்டு புத்தகத்தை எடுத்தான்.

“என்ன இது?”

“அந்த வீட்டுல கணக்குப்பிள்ளையா இருந்தது யார்? நம்ம தாத்தா அதாவது அம்மாவுடைய அப்பாதானே .. இப்படி எதாவது பிரச்சனை வரும்னு தெரிஞ்சிதான் போல அப்போ அங்கிருந்து வரும்போது முக்கியமான கணக்கு வழக்கு நோட்டு புத்தகத்தைக் கொண்டு வந்துட்டார்.அதுதான் இது” எனப் பழைய புத்தகத்தைக் காண்பித்தான்.

“கணக்கு அப்படியேவா இருக்கும் போடா..தூக்கி குப்பலைப் போடு ”

“காதலிச்சது தப்பா .. அம்மா அப்பா ஒரே ஜாதிதான். பணக்காரன் ஏழை. இந்தவித்தியாசம் மட்டும்தான். ஏன் அம்மாவை ஏத்துகவேஇல்ல ?” உணர்வுப் பூர்வமாகத் தம்பி பேசவும் வாயடைத்துப் போனான்.

“நாம எத்தனை கஷ்டப்பட்டோம். உரிமையோடு இல்லாம ரகசியமா தாத்தா வந்துப் பார்க்கிறதும் பேசறதும் என்ன நியாயம்? நாம உரிமையோட தான் போறோம்.”

பாலு சொன்னது அத்தனையும் உண்மை. யாருமே அவர்களை குடும்பத்தில் ஒருத்தராக ஏற்று அங்கீகாரம் கொடுக்கவில்லை. ரகசியமாக அந்த வீட்டிலிருந்து தாத்தா மற்றும் ஏதேனும் வேலையாட்கள் பேசுவார்கள். இதென்ன முறை என்றுதான் தோன்றியது. தன் அன்னைக்கு அந்த வீட்டின் மருமகள் என்ற அந்தஸ்து என்றுமே கிட்டியதில்லை.

கார் ஹாரன் சத்தம் கேட்டது. ஒரு வெள்ளை அம்பாசிடர் கார் ஓரமாக நிறுத்தப்பட்டு வயதான நபர் இறங்கினார். அது ஜமீன்தார் வீட்டு கார்.

”வாங்க அண்ணே” எனக் கணபதி அழைத்தான்.

காரிலிருந்து இறங்கியவர் தலையைத் தாழ்த்தி வணங்கினார்.

கணபதி முதலில் அவர் கீழே எதையே தேடுகிறார் எனத்தான் நினைத்தான் பின்புதான் அது வணக்கம் எனப் புரிந்தது. தாங்கள் ஜமீன்தார் வம்சம் இல்லையா என நினைக்கச் சிரிப்பு வந்தது.

“முத்து அண்ணே அங்க நிலவரம் எப்படி?” கணபதி வினவ

“நாளைக்குத்தான் தகனம்” என்றார் பணிவாக முன் மண்டை சொட்டையாக பின்னனிருந்த சொற்ப முடிகளும் நன்றாக துவைத்தெடுத்து போல வெள்ளையாக இருந்தது.

“ தம்பி, தாத்தா உங்களை கூட்டியார தான் வண்டி அனுப்பி இருக்காங்க”

“இல்லங்க நாங்க பஸ்ல போயிடுவோம்” என மறுத்தான் பாலு.

“தம்பி ஜமீன்தார் எதோ முக்கிய விஷயம் சொல்லணுமாம். எல்லாரும் அங்க நேரத்துக்கு இருக்கணும். அதனால் கார்ல போனா வெரசா போயிடலாம். அதுவுமில்லாம மத்த காரியமும் நடக்கணுமில்லையா?” முத்து பணிவாக எடுத்துரைக்க

இதற்கு மேல் கணபதி எதுவும் பேசவில்லை. பின் இருக்கையில் அண்ணன் தம்பி அமர்ந்தனர்.

முத்து “அம்மாவை போற வழியில கூடிட்டு போயிடலாமா?”

“இல்ல அவங்க வரல” எனக் கணபதி கூற

அதற்குமேல் முத்து எதுவும் கேட்கவில்லை. முத்து அனைத்தும் அறிந்தநபர். எங்கே எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனத் தெரிந்தவர்.

பயணம் தொடங்கியது ...

கணபதி குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்தவன். நெடுநெடுவென உயரம் மெலிந்த தேகம். மூக்குக் கண்ணாடி. அதனால் அவன் தோற்றம் வயது அதிகமாய் காட்டியது. சுந்தரி மகனின் திருமணத்திற்காகப் பார்த்த பெண்கள் நிராகரித்தார்கள். காதலிக்க நேரமும் பெண்ணும் கிட்டவில்லை.

வாழ்க்கை கணபதிக்கு நிறையவே கற்றுத் தந்திருந்தது. முதலில் கடினமாக இருந்தாலும் மெல்ல மெல்ல அவற்றோடு இணைந்து ஏற்றும்க் கொண்டுவிட்டான். அவன் படித்த பி.காம் பட்டத்துக்கு வேலை கிடைக்கவில்லை.

பின்பு அரிசிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான் பல வருடங்கள் வேலை செய்த அனுபவம் தானே மொத்தமாக அரிசி வாங்கி மண்டியில் சேமித்து விற்றான். ஓரளவு லாபம் கிடைத்தது. வாழ்க்கை அடிப்படை தேவைகள் பிரச்சனை இல்லாமல் ஓடியது. ஆனால் அனைத்திற்க்கும் போதுமானதாக இல்லை.

கணபதியின் தந்தை சிவநேசன் ஜமீன்தார் வம்சம். சிவநேசனுக்குக் கூடப் பிறந்தவர் ஐவர். சிவநேசனின் முன்னோர்கள் சுகமான வாழ்க்கை வாழ்ந்தவர்.

சிவநேசனின் அப்பா வைரவன், அம்மா காந்தவள்ளி. பகட்டான வாழ்க்கைக்கு இருவரும் அடிமை என்றே கூறலாம்.

சிவநேசன் தங்களின் கீழ் பணிபுரியும் கணக்குப்பிள்ளையின் மகளான சுந்தரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் விளைவாக சிவநேசன் மற்றும் சுந்தரி வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர். சுந்தரி அப்பாவின் கணக்குப்பிள்ளை வேலையும் பறிபோனது.

சிவநேசனுக்குச் சாதாரண குடிமகனின் வாழ்க்கை புரிந்து அதில் தன்னை மிகவும் நன்றாக இழைத்துக் கொண்டார்.தொடக்கத்தில் வேலைக்குப் பழக்கப்படாத சிவநேசன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

சிவநேசன் மற்றும் சுந்தரியின் காதல் என்றுமே உண்மையும் உறுதியுடனும் ஸ்திரமாக நின்றது. வருடங்கள் உருண்டோட இருவருக்கும் ராஜகணபதி, பாலசந்திரன் என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் காலம் கழிந்தது. தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைக் கண்டு ரசிப்பார்.

ஜமீன்தார் குடும்பத்தின் நடக்கும் நல்லது கெட்டதுக்கும் அழைப்பு வரும். ஆனால் சிவநேசன் சென்றதில்லை. சுந்தரியைக் காதலித்ததைக் குற்றமாகக் கருதி தன் பெற்றோர் தள்ளி வைத்தது. அதை அத்தனை எளிதாக மறக்க முடியவில்லை.

அதுவே சிவநேசனுக்கு மனஉளைச்சலைத் தந்தது. இதைச் சுந்தரி புரிந்து கொண்டு தன் கணவனுக்கு ஆறுதல் கூறினார். அவரும் மனைவிக்காக தன் மனத்துயரை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் வளம் வந்தார். ஒருமுறை நேரில் சென்று பேசவும் என்றும் சுந்தரி கூறியதை சிவநேசன் ஏற்கவில்லை.

“நான் வாழ்க்கையில தோத்து போயிட்டேன் சுந்தரி. . எந்த முகத்தை வெச்சிட்டு அங்க போக … ” என மனமுடைந்து அழுதுவிட்டார்.

அவர் ஒருமுறைச் சென்று பேசியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கலாம். தன்ப் பெற்றோர் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்பார்த்தார். அவர்களும் இதே மனநிலையிலிருந்தனர் என்பது தெரியவில்லை.

ஒருநாள் இரவு சிவநேசன் படுத்தவர் காலை எழுந்திருக்கவில்லை. மரணம் அவரைத் தழுவியது. சுந்தரி நிலை குலைந்து போனார். முறையாக யாரும் இறப்புக்கு வரவில்லை. ஆனால் அதன் பின்னால் சிலர் மறைமுகமாக உதவி செய்ய வந்தனர். ஆனால் சுந்தரி ஏற்கவில்லை.

கணபதி தன் தம்பி திருமணத்திற்கு அவர்களை அழைக்கவில்லை.பாலு படித்து தன் குடும்பத்திற்குத் துணையாக நின்றான்.

சுந்தரியின் இளைய தம்பியின் மகள் ரஞ்சனி. அவளை பாலு காதலித்தான். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தது. சுந்தரியின் கடினமான அத்தியாயங்களில் அவர் தம்பி துணை நின்றார். பணம் அதிகம் இல்லை ஆனால் மனம் மிகப் பெரியது.

கணபதியும் அவன் தம்பி பாலுவும் தங்கள் பரம்பரை வீட்டைச் சென்றடைந்தனர். திருச்சி அருகில் உள்ள உறையூரில் இருந்தது ஜமீன்தார் மாளிகை. ஆறு மணி நேரப் பயணம் முடிவுக்கு வந்தது. காரை பார்த்ததும் காவலாளி ஒருவன் பிரம்மாண்ட கேட்டை திறந்துவிட்டான்.

மாலை நேரத்திலும் பகல் போல விளக்குகளால் ஜொலித்தது மாளிகை.

பெரிய மாளிகை முன்னே வட்ட வடிவில் நீரூற்று. சுற்றி நன்கு பராமரிக்கப்பட்டு சீரான உயரத்தில் செடி கொடிகளைக் கொண்ட தோட்டம்.

மாளிகை முன்னே பெரிய படிகள் அடுத்து ராட்ச தூண்கள் இரண்டடுக்கு மாளிகை தாங்கி நின்றன. ஏதோ திரைப்படத்தில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

புறாக் கூண்டைப் போன்றுஆயிரம் வீடுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட், தண்ணி லாரி, செல்போன், போக்குவரத்து நெரிசல் என இருக்கும் உலகிலிருந்து மாறுபட்ட சூழல். வேற்று கிரகத்தைப் போலத் தோன்றியது.

அதுசரி இன்னுமா இவ்விடத்தை அரசியல் வாதிகள் விட்டுவைத்துள்ளனர்?? எனச் சாமானியனுக்குத் தோன்றாமல் இருக்க வாய்ப்பே இல்லை. காரணம் யாரைச் சொல்வது? அவர் அவர் மனதிற்கு ஏற்ப பதில்.

முதல் முறையாக இருவரும் அந்த மாளிகைக்குள் நுழைகின்றனர். ஆசை தயக்கம் துக்கம் எனப் பல உணர்வுப் போராட்டங்கள். பாலு அதிசயமாய் சுற்றுலா பொருட்காட்சியை பார்ப்பது போலப் பார்த்தான்.

முத்து “தம்பி இரண்டு தலைமுறை .. அவங்கள்ல பொண்ணு பையன் கொடுத்தவங்க எடுத்தவங்கனு உள்ள நிறைய பேர் இருப்பாங்க .. எல்லாரும் நல்லவங்களும் இல்ல எல்லாரும் கெட்டவங்களும் இல்ல .. பார்த்து நடந்துக்கோங்க .. தம்பி பத்திரம்”என்றுவிட்டு அகன்றார்.

தங்கள் பெற்றோரை யாரேனும் பழித்தால் சும்மா விடக் கூடாது என இருவரும் தங்களுக்குள் சூளுரைத்துக் கொண்டனர்.

இவர்களில் பலர் தனக்கு ரத்த சொந்தம். ஆனால் யார் என்ன உறவு என இனங்காண முடியாத ஒரு சூழ்நிலை. அத்தனையாய் யாரையும் சந்தித்ததில்லை. எப்பொழுதோ சந்தித்தவர்கள் சிந்தையிலும் இல்லை.

மண்டபம் போன்ற இடத்தில் காந்தவள்ளியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பூரண அலங்காரத்துடனும் மரியாதையுடனும் காந்தவள்ளி கிடந்தார். மரணத்திலும் அவர் முகம் கம்பீரமாகக் காணப்பட்டது.

அப்போதுதான் தங்களுடன் உள்ளே வந்த சிலர் செய்வதைக் கண்ட கணபதி அவர்களைப் போலவே தன் பாட்டி உடலுக்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினான். பின்னே அவனைத் தொடர்ந்து பாலுவும் அவ்வாறே செய்தான்.

அண்ணன் தம்பியைப் பார்த்த சில கண்களில் ஆனந்தம், சிலவற்றில் அசூயை, சிலவற்றில் பொறாமை, போட்டி என மௌனம் யுத்தம் நடைபெற்றது.

அங்குப் பலர் சொத்துக்காக முகாம் இட்டுள்ளனர் என்ற எண்ணம் அப்பட்டமகத் தெரிந்தது. கணபதிக்கு அங்குள்ளவரைக் காண ஆயிரம் காலியிடங்களுக்கு ஐந்து லட்சம் பேர் தேர்வு எழுத வந்திருப்பது போலத் தோன்றியது.

இறுதியாக வைரவன் தாத்தா அருகே தயக்கத்துடன் சென்றான். பட்டென்று அவர் அவனை தன்னுடன் அணைத்து அழத் தொடங்கினார்.

பல வருடங்களுக்கு முன் கணபதி சந்தித்து உள்ளான். இன்று பொக்கை வாய், இடுங்கிய கண்கள், சுருங்கி மெலிந்த தேகம். வெள்ளை முடியுடன் காணப்பட்டார். அவரிடம் மிடுக்கு மட்டும் குறையவில்லை.

“தாத்தா .. தாத்தா” என அவரை சமாதானம் செய்ய முயன்றான்.

கண்களைத் துடைத்தவர் “இங்க வர உனக்கு இத்தனை வருஷமா?” என்றவர் உரிமையும் ஆதங்கமுமாய் கேட்டார். அவனை நேருக்கு நேராகப் பார்த்தார்.

தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது போலச் சங்கடமாக உணர்ந்தான்.



தொடரும் …



























 
  • Like
  • Love
Reactions: ADC and Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
தாத்தா ஏதோ காரணகாரியமா தான் வரச்சொல்லி இருக்கார். என்னவா இருக்கும்? 🤔

ஒருவேளை ஜோசியர் சொன்னதுபோல பணம் சொத்து வரப்போகுதோ? 🤔🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி ❤️
 
  • Like
  • Love
Reactions: ADC and MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
தாத்தா ஏதோ காரணகாரியமா தான் வரச்சொல்லி இருக்கார். என்னவா இருக்கும்? 🤔

ஒருவேளை ஜோசியர் சொன்னதுபோல பணம் சொத்து வரப்போகுதோ? 🤔🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி ❤️
Aama sis .. viraivil teriyavarum
Thank you so much sis 🙏