• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

212 (7)

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
212

7

இரண்டு நாட்கள் எந்தவொரு பெரிய நிகழ்வும் இல்லாமல் அமைதியாகச் சென்றது.

அன்று இரவு தாத்தா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். ஏதோவொரு ஒரு சத்தம் கேட்டு விழித்தார். தாத்தாவிற்கு யாரோ அழும் சத்தம் கேட்பதைப் போல உணர்ந்தார். தன் அருகிலிருந்த டார்ச் வெளிச்சத்தைக் கொண்டு நேரம் பார்த்தார் நள்ளிரவு இரண்டு மணி.

மீண்டும் விசும்பும் சத்தம் கேட்டது. எழுந்து அறையின் மின்விளக்கைப் போட்டுவிட்டு தள்ளாடியபடி அறையைவிட்டு வெளியே வந்தார். அழுகை சத்தம் நன்றாகவே கேட்டது. மாடியிலிருந்து கீழே நன்றாகப் பார்க்க முடியும்.

கீழே வரவேற்பறையில் நைட் லேம்ப் வெளிச்சத்தில் வள்ளி எப்போதும் அமரும் சாய்வு நாற்காலியில் யாரோ அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றியது. வள்ளியைப் போலத் தோன்றியது ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.

கண்களை இடுக்கிப் பார்த்தார் “ வள்ளி வந்துட்டயா?” என்றார் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் வழிய.

படிகளில் இறங்கிப் போய் தனியே பார்க்கும் அளவு உடலில் தெம்பு இல்லை. நள்ளிரவில் யாரையும் தொந்தரவு செய்யவும் தோன்றாமல் தவித்தார். சடுதியில் அனைத்தும் மறைந்து போனது. சுற்றிலும் பார்த்தார் அழுகை சத்தமும் இல்லை. நாற்காலியில் வள்ளியும் இல்லை. குழப்பமுடன் தாத்தா தன் அறைக்கு வந்து உறங்கிவிட்டார்.

மறுநாள் காலை “குட் மார்னிங் தாத்தா” என்னும் வார்த்தைகளைக் கேட்டு கண்களை விழித்தார் தாத்தா. புன்னகையுடன் மயூரி நின்று இருந்தாள்.

கண்களைத் திறந்தவர் குழப்பத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். தான் எப்போதும் விழிக்கும் நேரத்தைக் காட்டிலும் இன்று அதிக நேரம் உறங்கியதை உணர்ந்தார்.

அவர் எப்போதும் போல் இல்லாமல் போகவே “என்ன தாத்தா உடம்பு எதுவும் முடியலையா?” கவலையுடன் மயூரி வினவ

மெல்ல அமர்ந்தவர் “நேத்து ராத்திரி என் வள்ளி வந்திருந்தா .. கீழ ஹால்ல எப்பவும் அவ உட்காரும் சேர்ல உட்கார்ந்திருந்தா .. அவ அழுத மாதிரி எனக்கு தோனிச்சி .. ஆனா பக்கத்துல போயி பாக்க முடியலை .. எதோ கஷ்டத்துல இருக்கா ..மனசு கேட்கல மயூரிமா” என்றார் தாத்தா குழப்பம் துக்கம் கலந்த தொனியில்.

“நீங்க எப்பவும் பாட்டியை நினைச்சிட்டு இருக்கீங்க இல்லையா? .. அதான் கனவுல வந்திருக்காங்க தாத்தா” ஆதுரமாகப் பதிலளித்தாள். அவரை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

“இல்லமா கனவு இல்ல .. நான் விழிச்சியிருந்தேன். உண்மையா அவ வந்தா என்னால உறுதியா சொல்ல முடியும்” குழந்தையைப் போல அடம்பிடித்தார்.

மயூரிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

விக்ரமன் விஜயன் பார்த்திபன் மூவரும் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய அடுத்தடுத்த சடங்குகள் பற்றிக் கலந்தாலோசிக்கத் தந்தையைக் காண அறைக்கு வந்தனர்.

“அப்பா பத்தாம் நாள் காரியத்துக்கு ..” எனப் பேசத் தொடங்கினார் மூத்த பிள்ளையான விக்ரமன்.

ஆனால் தந்தை தான் சொன்னதைச் செவி மடுத்ததாகவே தெரியவில்லை. எப்பொழுதும் அதிகாலை எழும் வழக்கம் உடையவர் தற்பொழுது தான் எழுந்துள்ளார் என்றும் புரிந்தது. மேலும் மயூரியின் முகமும் சஞ்சலத்திலுடன் காணப்பட்டது.

“என்ன மயூரி?”

“டேய் நேத்து ராத்திரி உங்க அம்மா வந்திருந்தா” என பொதுவாக தன் மூன்று மகன்களையும் பார்த்துச் சொன்னார்.

அவர் சொல்வது புரியாமல் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஆமா டா அந்த சேர்ல” என மயூரியிடம் கூறியதை மீண்டும் கூறினார்.

விக்ரமன் மனம் கனக்க “அப்பா இது கடினமான சமயம் தான். நீங்கத் தைரியமா உண்மையை ஏத்துகணும். அம்மா நம்ம கூட இப்ப இல்ல. இந்த கையாளத்தானே கொள்ளி வெச்சேன். அம்மா கடவுள்கிட்ட பத்திரமா சந்தோஷமா இருக்காங்க ” எனக் கண்கலங்கக் கூறினார்.

மற்றவர்களும் கண்கலங்க மௌனமாகவே இருந்தனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? தாத்தா முகம் வாடிப் போனது.

அதற்குப் பிறகு தாத்தா இவ்விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. பாட்டியின் காரியங்களைச் சிறப்பாகச் செய்ய முடிவெடுத்தார். அதைப் போலவே செய்யவும் செய்தார்.

அதுமட்டும் அல்லாது ஏழை எளிய மக்களுக்கு தானங்களும் நிறையவே செய்தார். பதினாறாம் நாள் காரியத்திற்குக் கணபதி பாலு மற்றும் சுந்தரி வந்திருந்தனர்.

சுந்தரிக்குச் செல்ல சிறிதும் விருப்பமில்லை எனினும் வயதான தன் மாமனார் அழைத்தார் என்பதற்காகவே வந்தார். அந்த மாளிகைக்குள் நுழையும் போதே சுந்தரிக்குப் பழைய நினைவுகள் அலைமோதின.

தாத்தாவை நேருக்கு நேர் கண்ட சுந்தரிக்கு கண்ணீர் துளிர்த்தது. கம்பீரமாக இருந்த மனிதன் இன்று பொக்கை வாய், இடுங்கிய கண்கள், சுருங்கிய தோள், பஞ்சு போல மிச்சம் இருந்த தலைமுடி எனக் காணவே பரிதாபமாக இருந்தது.

தாத்தா தன் கடைசிக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தார். காலம் யாருக்காகவும் காத்திருக்காமல் தன் வேலையை செல்வனே செய்தது.

மயூரியை கண்ட சுந்தரிக்கு ஆச்சரியம். மயூரி அன்னை வைதேகியை உரித்து வைத்திருந்தாள். சுந்தரி அதிகம் யாரிடமும் பேசவில்லை. மென்னகையுடன் விலகி இருந்தார்.

அன்றைய நாள் செய்ய வேண்டிய சடங்குகளை விக்ரமன் தன் சகோதார்களுடன் சேர்ந்து செய்தார். மயூரி எந்த குறைவின்றி வேலையாட்களைக் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்திருந்தாள். அனைவருக்கும் வயிறார உணவு போட்டார்.

அனைத்தும் முடிந்து தூரத்து உறவினர்கள் கிளம்பினர். தாத்தா சிறிது நேர ஓய்வுக்கு பின்னர். தன் மூன்று மகன்கள் குடும்பத்தார் சுந்தரி குடும்பம் மற்றும் மயூரி என அனைவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சொன்னார்.

பூஜை அறை நன்றாக விசாலமாக இருந்தது. அறை நெடுகிலும் இறைவன் புகைப்படங்கள். வெண்கலம் மற்றும் வெள்ளியில் விக்ரகங்கள் பூஜை பாத்திரங்கள் என அறை முழுவதும் தெய்வீகமாகக் காணப்பட்டது. கடந்த மூன்று தலைமுறையாக அங்குப் பூஜை செய்துள்ளனர்.

அங்கு ஒரு பெரிய பழங்காலத்துப் பச்சை வர்ணம் பூசிய இரும்பு பீரோ இருந்தது. பீரோவிற்குச் சந்தனப் பொட்டு குங்குமெல்லாம் வைக்கப்பட்டிருந்தது. அந்த பீரோவிற்கு உண்டான சாவிகள் சிறிய கரணட்டியளவு காணப்பட்டது.

பீரோவுக்கு இரண்டு கதவுகள். இரண்டு கதவுகளிலும் துவாரங்கள் காணப்பட்டது. இரண்டு துவாரத்திலும் ஒரே சமயம் இரண்டு சாவிகளை நுழைத்து ஒரே மாதிரித் திருப்ப வேண்டும். தாத்தா லாவகமாகச் செய்தார்.

தாத்தா பீரோவைத் திறந்தார். உள்ளே சிறப்புப் பூஜை அன்று மட்டும் பயன்படுத்தப்படும் தங்க விக்ரகங்கள் இருந்தன. மேலும் நிலம் மற்றும் வீட்டுப் பத்திரங்கள் நகைகள் வெள்ளி பாத்திரங்கள் எனக் குபேரனின் பரிபூரண அருள் பெற்றிருந்தது பீரோ.

தாத்தா நடுங்கும் கைகளுடன் “என்னுடைய எல்லா நிலங்களும் உனக்குத்தான் விக்ரமா” என நிலப் பத்திரங்களைக் கொடுத்தார்.

“அப்பா இப்ப எதுக்கு இதெல்லாம்?” அவர் வாங்கத் தயங்க

“என் வள்ளி உனக்குக் கொடுக்க சொல்லிட்டா .. அவ பேச்சை எப்பவும் நான் தட்டினது இல்லை. நான் சில விஷயம் அவளுக்குச் சொல்ல நினைச்சேன் … ஆனா” என உதட்டைப் பிதுக்கினார்.

விக்ரமன் வாங்கத் தயங்க திலீப் “கொடுங்க தாத்தா .. அப்பாவால் வெயிட் தூக்க முடியாது” என அவற்றை தன் வசப் படுத்திக் கொண்டான்.

பின்பு “எனக்குச் சொந்தமா இன்னும் மூணு வீடு இருக்கு. அது உனக்கு விஜயா” எனத் தாத்தா அதற்கு உண்டான பத்திரங்களை நீட்ட அதை விஜயன் மகன் துருவ் வாங்கிக் கொண்டான்.

நகைப் பெட்டியை “நகைகங்க உனக்குப் பார்த்திபா” என நீட்ட … ”வேண்டாம் தாத்தா” எனச் சித்து மறுக்க

“ஆசையா பெரிவங்க கொடுக்கும் போது வேண்டாம்னு சொல்லக் கூடாது என திலீப் புன்னகையுடன் மிரட்ட “முடியாது” எனச் சித்து நின்றான். இறுதியாகப் பார்த்திபன் மனைவி வேறுவழியின்றி அதை வாங்கிக் கொண்டார்.

தாத்தா “இந்த மாளிகை எனக்கு அப்புறமா மயூரிக்குப் போகும். இதில் சில சிக்கல் இருக்கு.. அவளுக்குத் தெரியும்” என அவளைப் பார்க்க .. புரிந்ததெனத் தலையசைத்தாள்.

“என்னோட எல்லாத்தையும் கொடுத்துட்டேன் இன்னும் மிச்சமிருக்கிறது பேங்ல என் பணம் அதோடு கொஞ்ச வெள்ளி பாத்திரம் .. எனக்குப் பிறகு அதை யார் வேணா எடுத்துக்கோங்க” என்றார்.

பின்பு அந்த பீரோவை மூடி சாவியைத் தானே வைத்துக் கொண்டார்.

அனைவரும் பூஜை அறையைவிட்டு வெளியேறினர்.

திலீப் மற்றும் துருவ் இருவரும் கணபதியை யாரும் அறியா வண்ணம் ஏளனமாகப் பார்த்துச் சிரித்தனர். கணபதி தன் தாய் இருந்த காரணத்தால் அதற்கு எதிர்வினை ஆற்றாமல் மௌனமாக இருந்தான். எதையும் காணாதது போல நகர்ந்தான்.

தாத்தா “சுந்தரி உன் புருஷனுடைய சில பொருட்கள் இருக்கு அதை வாங்கிக்கமா” என்றார்.

கணபதி மற்றும் பாலுவுக்கு அந்த தூசி படிந்த அறையில் உள்ள பொருட்கள் எனப் புரிந்தது. முன்னே தாத்தா செல்ல அந்த அறையின் சாவியை மயூரி எடுத்து வந்தாள்.

தாத்தா மயூரி மற்றும் சுந்தரி குடும்பத்துடன் வேறு எவரும் அந்த அறைக்கு வரவில்லை. அவர்கள் தங்களுக்கு வேண்டியது கிட்டிவிட்ட மகிழ்ச்சியிலிருந்தனர்.

அவர்கள் முன்னே செல்ல பாலு மட்டும் “என்ன அண்ணே? சொத்து தரேன்னு சொல்லிட்டு இப்படி ஒரு பைசா கூடத் தராம ஏமாத்திட்டார் தாத்தா?” என பாலு அங்கலாய்த்தான்.

”சரி விடுடா” எனக் கணபதி தன் தாய் காதில் இந்த சம்பாஷணை விழாமல் பார்த்துக் கொண்டான்.

அறையைத் திறந்த பொழுது அன்று போல் அல்லாமல் சுத்தமாக இருந்தது. சுந்தரிக்கு இந்த அறையில் தானும் தன் காதல் கணவனும் யாரும் அறியாமல் காதல் வசனங்கள் பேசி சல்லாபித்தது சிணுங்கியது என அனைத்தும் நொடியில் நினைவுக்கு வந்தது.

இந்த அறையைச் சுத்தம் செய்யும் சாக்கில் சுந்தரி சிவனேசனைக் காண வருவாள். சிவனும் சுந்தரியைக் காணவேண்டுமெனில் வேண்டுமென்றே டீ காபியை வரவழைத்து அதைக் கீழே கொட்டிவிடுவான். சுந்தரிக்கு அது நன்றாகவே தெரியும்.

“அந்த போட்டோவ எடு மயூரி” எனத் தாத்தா சொல்லியபடி கதவை தாழிட்டார்.

212 என எழுதியிருந்த புகைப்படத்தை மயூரி எடுக்க முயன்றாள். அது உயரத்திலிருந்ததால் கால்களை எம்பி எடுக்க முனைந்தாள். கணபதி அதை விழாமல் பிடித்து எடுத்துக் கொடுத்தான். தனக்கு அத்தனை அருகில் கணபதி நிற்க மயூரிக்குச் சொல்ல முடியா உணர்வு.

கணபதி புகைப்படத்தைத் தாத்தாவிடம் கொடுத்தான். அதை வாங்கியவர் புகைப்படத்தை திருப்பி பின்னால் நான்கு பக்கமும் இருந்த மிகச் சிறிய ஆணி போன்ற ஒன்றை நீக்கினார். மற்றவர் இதை அதிசயமாய் பார்த்தனர்.

புகைப்பட பிரேமின் பின்னிருந்த மெல்லிய அட்டையை எடுத்தவுடன் உள்ளே போட்டோ மற்றும் பின் அட்டைக்கு நடுவில் ஒரு பிளாஸ்டிக் கவர் இருந்தது. அதனுள் சில காகிதங்கள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்துவிட்டு மீண்டும் புகைப்படத்தை பழையபடி அட்டை சிறிய ஆணி போன்றவற்றைப் பொருத்தினார். அதை மீண்டும் அங்கு மாட்டிவிட சொன்னார்.

“சிவா மதராஸ் மாகாணம் கூட கிரிக்கெட் விளையாடி 212 ரன் அடிச்சி ஜெயிச்சான். அதுக்கு அவன் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து மேட்ச் ஜெயிக்க வைச்சதுகாக ஒரு ஏக்கர் நிலம் பரிசாக் கொடுத்தாங்க. அதோட டாக்குமெண்ட் இது. அப்பவே நிலம் சிவா பேர்ல மாத்தியாச்சி .. இந்தா பத்திரம்” எனச் சுந்தரி கையில் கொடுத்தார். இன்ப அதிர்ச்சியில் அனைவரும்.

சுந்தரி கண்ணீர் மல்க வாங்கி கணபதி கையில் கொடுத்தார். கணபதி அதை பிரித்து பார்த்தான். நிலம் குறிப்பிட்டிருந்த இடம் எதுவெனத் தெரியவில்லை.

“எந்த இடம் தாத்தா?” எனப் பத்திரத்தைப் பார்த்து கேட்டான்.

“இப்ப அது பள்ளிக்கரணை .. அந்த இடம் பாதுகாப்பா இருக்க .. என்னுடைய நண்பன் குடும்பம் வீடு கட்டி அங்க இருக்காங்க. சுற்றிலும் காய்கறி தோட்டம் போட்டிருக்காங்க. காலி பண்ணச் சொன்னா உடனே காலி பண்ணிடுவாங்க. அது உன் விருப்பம்”

“என்னை மன்னிச்சிடு கணபதி என் எல்லா சொத்தையும் எல்லாருக்கும் சமமா கொடுக்க நினைச்சேன். ஆனா இந்த பத்து நாள்ல வள்ளி நேர்ல வந்து யாருக்கு என்ன கொடுக்கணும்னு சொன்னா அதுனால .. அவ பேச்சை மீற முடியலை”

“இந்த நிலம் வள்ளிக்கு ஞாபகம் இல்ல .. ஏன் யாருக்குமே ஞாபகம் இல்லை .. அதனால்தான் இதைப்பத்தி அவ சொல்லலை”

அதே சமயம் வேறொரு தனி அறையில் திலீப் மற்றும் துருவ் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். தங்களின் ஒவ்வொரு நகர்வும் இத்தனை பெரிய வெற்றியைக் கொடுக்கும் என அவர்களே எதிர் பார்க்கவில்லை.

மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருவரும் ஹைபை கொடுத்துக் கொண்டனர்.

பின்பு இருவரும் தாங்கள் முன்பே பேசி ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞரைக் காணச் சென்றனர்.



தொடரும் ….


















 

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
8
8
3
Bangalore
Oh no indha dilip and dhruv oda velaiya idhu 😡😡 Naa kuda yen indha granny ippadi oru oravanjanai pannuranganu ninaichen. How did they plan this?? Thatha ku idhu theriya varuma?? Indha sotha appove kuduthu iruka kudadha thatha, adhu sivanesan oda victory ku kedichadhu thane 😡
Interesting update ma'am 👏👏👏 waiting for next update.
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
Oh no indha dilip and dhruv oda velaiya idhu 😡😡 Naa kuda yen indha granny ippadi oru oravanjanai pannuranganu ninaichen. How did they plan this?? Thatha ku idhu theriya varuma?? Indha sotha appove kuduthu iruka kudadha thatha, adhu sivanesan oda victory ku kedichadhu thane 😡
Interesting update ma'am 👏👏👏 waiting for next update.
Thank you so much sis .. next epiyil teriyavarum 🙏
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அடப்பாவிங்களா திட்டம் போட்டு தாத்தாவ இப்படி செய்ய வச்சிருக்காங்களா? 😢

எல்லாருக்கும் இது தெரிய வருமா? 🤔

இவங்களுக்கு சரியான பாடம் புகட்டணுமே 🧐
 
  • Love
Reactions: MK12

MK12

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
36
24
18
Tamil nadu
அடப்பாவிங்களா திட்டம் போட்டு தாத்தாவ இப்படி செய்ய வச்சிருக்காங்களா? 😢

எல்லாருக்கும் இது தெரிய வருமா? 🤔

இவங்களுக்கு சரியான பாடம் புகட்டணுமே 🧐
Nichayama
Thanks a lot sis