• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

22. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
மதுரை!

காலை ஏழு மணிவாக்கில் சுரேந்திரன் கண் விழித்தான்! சற்று நேரம் பேசியிருந்து விட்டு, அவனுக்கு துணைக்கு இருந்த சகாயம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிச் சென்றார்!

"என்ன தம்பி, இப்படி பண்ணிட்டே? ஜாக்கிரதையாக ரோட்டை கிராஸ் பண்ணியிருக்கலாம்ல?" என்றாள் சாருபாலா!

"நான் பார்த்து தான், அக்கா போயிட்டு இருந்தேன் எதிர்பாராதவிதமாக, சின்ன வயசுப் பசங்க, ஓட்டத் தெரியாமல், கொண்டு வந்து மோதிவிட்டார்கள்! கடைசி நிமிடத்தில் நான் சுதாரிச்சதால் இத்தோடு போச்சு!"

"என்ன சொல்றது தெரியலை! இப்ப உள்ள பெத்தவங்க பிள்ளை கேட்டதும் எல்லாம் வாங்கி கொடுத்துவிடுவதால், வரும் விளைவு! அது அவங்க பிள்ளைக்கும் ஆபத்து என்று உணர்வதில்லை! என்ற சாரு, "சரிடா, சாயந்திரம் உன்னை டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லிட்டாங்க! இன்னும் இரண்டு மாசத்துக்கு ரெஸ்ட் இருக்கச் சொல்லியிருக்கார்! உடம்பை பார்த்துக்கோடா"

"ரொம்ப நன்றிக்கா! தனியா எப்படி சமாளிப்பளோனு,சாந்தியை நினைத்து தான் கலக்கமாக இருந்தது! உன்னைப் பார்த்ததும் தான் தெம்பாக இருக்கு!"

"உன் நன்றியை நீயே வச்சுக்கோ!
எனக்கு ஒன்னுன்னா நீ வரமாட்டியாடா? அந்தப் பேச்சை விடு! ரிஷியை விட்டுட்டு வந்திருக்கேன்! இல்லைன்னா, இன்னும் ஒரு வாரம் கூடவே இருந்து கவனிச்சிருப்பேன்"

"எனக்கு கையில் தானே அடி! நான் சமாளிச்சுக்குவேன் அக்கா! நீ டிராவல் பண்ணி வந்ததுல களைப்பா இருப்பாய்! வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கா! சாந்தி என் கூட இருக்கட்டும்!"

"இல்லை சுரேன்! நான் உன்கூடவே இருக்கிறேன்! எனக்கு இதெல்லாம் பழக்கம் தான்! சாந்தி தான், நான் வர்ற வரைக்கும் பயத்துல ராத்திரி பூராவும் உன்னை நினைச்சு தூங்கக்கூட இல்லாமல் அழுதுட்டே இருந்திருக்கிறாள்! அதனால வீட்டுக்குப் போய் சாப்பிட்டு, ஓய்வு எடுத்து வரட்டும்!" என்றாள் சாருபாலா!

மாலை வரை தம்பியுடன் இருந்து, கவனித்துக் கொண்டதோடு, அவனது டிஸ்சார்ஜ் விதிமுறைகளை முடித்து,இரண்டு மாதங்களுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து
கணவன் மனைவி இருவரையும் கொணர்ந்து வீட்டில் இறக்கிவிட்ட பிறகு, ஊருக்கு கிளம்பிவிட்டாள் சாருபாலா!

சாரு,வேலைக்கு போகிறவள் தான் என்றாலும், மகனைப் பாராது ஒரு நாள்கூட இருந்ததில்லை! ஆகவே உடனடியாக கிளம்பிவிட நினைத்தாள்! அதிலும் கணவனின் நடவடிக்கையில் அவள் மனம் சற்று கலங்கிப் போனது!

ஊருக்கு திரும்பும் விஷயத்தை அவள்,கணவனுக்கும் சரி வீட்டில் உள்ள மற்றவருக்கும் சரி தெரிவிக்கவில்லை! அவளுக்கு உள்ளூர கணவனின் மீது தார்மீக கோபம் இருந்தது!

என்ன தான் சுரேந்திரன் அவளுடன் பிறக்கவில்லை என்றாலும் அவன் அவளுக்கு தம்பிதானே? அவனுக்கு விபத்து என்று அவள் கிளம்பி வந்திருக்கிறாள்! ஒரு வார்த்தை அவன் எப்படி இருக்கிறான் என்று அவளிடமோ தம்பியிடமோ ஆனந்தன் கேட்கவில்லை! அவள் அறிந்த ஆனந்தன் இப்படிப்பட்டவன் இல்லை! மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறவன்! அவளது குறுஞ்செய்திக்கு கூட, அவன் "ஓகே டேக் கேர்" என்று பதில் தான் அனுப்பியிருந்தான்! ஏன் இப்படி மாறிவிட்டான்?

காலையில் தான், தனக்காக ஆனந்தன் இருக்கிறான் என்று முழு நம்பிக்கையோடு எண்ணினாள்! அந்த நம்பிக்கை இப்போது ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது!

முன்பெல்லாம் எவ்வளவு வேலை என்றாலும் அவளை அழைத்து பேசாமல் இருக்க மாட்டான்! ஆனால்.. இன்று?? மேற்கொண்டு யோசிப்பதை நிறுத்திவிட்டு, கண்களை மூடி சாய்ந்து கொண்டாள்! களைப்பில் சிறிது நேரத்தில் அப்படியே தூங்கியும் போனாள்!

ஊருக்குள் வருவதற்கு முன்பே, சாரு விழித்துக் கொண்டாள்! காலை மணி ஆறாகியிருந்தது! அவளது கைப்பேசி ஒலித்தது! அனிதா தான் அழைத்திருந்தாள்!
ஹலோ! ரிஷிக்கு என்னாச்சு?"

"ரிஷி, நல்லா இருக்கான் அக்கா! உங்க தம்பி எப்படி இருக்கிறார்? நீங்க எப்ப கிளம்பி வர்றீங்க?"

"தம்பி நல்லா இருக்கிறான், என்ன... சரியா கேட்கலை மா! ஹலோ.. ஹலோ.. ! என்றவள் தொடர்பை துண்டித்தாள்!

அவள் வருவதை பற்றி அக்கறையாய் கேட்க வேண்டியவன் கேட்கவில்லை! நேற்று வந்தவள் கேட்கிறாள்! அவளும் ஒன்றும் அக்கறையால் கேட்பது போல தெரியவில்லை! தகவல் அறிந்து மாமியாரிடம் தெரிவிக்க கேட்பது போலத்தான் இருந்தது!

கோபத்தில் முகம் கன்றியது! காரோட்டியின் முன்பு காட்டிக் கொள்ளக்கூடாது என்று அவளாக டயல் செய்து மருத்துவமனைக்கு பேசுவது,போல பேசி நடித்து முடித்தாள்!

போர்டிகோவில் கார் நின்று சாருபாலா இறங்கினாள்! கார் ஷெட்டில் கணவனின் கார் நிற்பதை பார்த்தாள்! வேகமாக இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவள், கூடத்தை கடந்து மாடிப் படியை நோக்கி நடந்தபோது, அனிதாவின் அறையில் இருந்து ரிஷியை தூக்கியபடி வெளியே வந்து கொண்டிருந்தான் ஆனந்தன்! ஒரு கணம் அவன் சிலையானான் என்றால் அவனைப் பார்த்த சாருவும் சிலையாகிப் போனாள்!

ஆனந்தன் சட்டென்று சுதாரித்துக் கொண்டான்! "வா, சாரு! நீ நாளைக்கு தான் வருவேன்னு அம்மா சொன்னாங்க! ஆமா, இன்னிக்கு நீ வர்றதா ஒரு தகவல் கூட சொல்லலை ஏன்?"

"சும்மா, உங்களுக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு தான்!" என்றவள் மகனை வாங்கி, அணைத்து, உச்சிமுகர்ந்துவிட்டு, கணவனிடம் திருப்பி தந்துவிட்டு, மாடிக்கு விரைந்து விட்டாள்!

அவள் பின்னோடு ஆனந்தன் செல்லவில்லை! மனைவியின் குரலில் இருந்தது என்ன என்று ஆனந்தனுக்கு புரியவில்லை!யோசனையாக நின்றிருந்தான்!

சில கணங்கள் அங்கே பெருத்த நிசப்தம் உண்டாயிற்று!

"என்ன அத்தான், ஏன் இங்கேயே நிற்கிறீங்க? ரிஷியை இப்படி கொடுங்க! நான் அவனுக்கு பாலாத்தி வச்சிருக்கிறேன்! அதை அவனுக்கு கொடுத்தப்புறம் தான், டிபன் வேலையை பார்க்கப் போகணும்!" என்றவள் அவனை நெருங்கி உரசியபடியே உரிமையுடன் குழந்தையை வாங்கினாள் அனிதா!

ஆனந்தனால் சாரு வந்த விஷயத்தை சொல்லி அவளை எச்சரிக்கை செய்ய முடியவில்லை! அவனுக்கும் தெரியும் மனைவி மேலே நிற்கிறாள் என்று அவனுக்கு ஒருபுறம் குற்றவுணர்வு மறுபுறம் அவள் பார்த்தால் முடிவு வந்துவிடும், என்ற நினைப்புமாக தத்தளித்தான்!

மேலே சென்ற சாரு, அனிதாவின் குரல் கேட்டு, நின்று, கீழே கவனித்தாள்! அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து போனாள்!
இதற்கு முன்பு கணவனுடன் அபூர்வமாக பார்ட்டிக்கு செல்லும் போது, சில பெண்கள் வலிய வந்து அவனிடம் பேசுவார்கள் ! அப்போதெல்லாம் அவள் ஒரு பார்வையாளராக பார்த்திருந்திருக்கிறாள்! ஆனால் இன்றைக்கு .. உடம்பில் தீப்பற்றி எரியும் உணர்வு!

அவளுக்கு தான் அறிவில்லை! இவருக்கு என்ன வந்தது? என்று அவளுக்கு கொதித்துக் கொண்டு வந்தது! இப்போது இதைப் பற்றி கேட்டால், அவளது பார்வையில் தான் கோளாறு என்று முடித்து விடுவார்கள்! ஒருவேளை அனிதா இயல்பாக செய்ததை தான் தவறாக எண்ணியிருந்தால்.. தலையை குலுக்கிவிட்டு தங்கள் அறைக்குள் புகுந்துவிட்டாள்!

அன்றைக்கு வேலைக்கு விடுமுறை சொன்னது நினைவுக்கு வந்தது! குளித்து முடித்ததும், பணியாளிடம் சொல்லி, குழந்தை தூக்கி வரச் சொன்னவள், காலை உணவையும் அறைக்கே வரவழைத்து உண்டு விட்டு மகனுடனே நேரத்தை கழித்தாள்! மாலையும் கடந்து போனது, ஆனால் ஆனந்தன் அவர்கள் அறை பக்கமே வரவில்லை!

பெண்களுக்கே உரிய நூதனமான உணர்வு அது! கடந்த சில தினங்களாக நடந்தவற்றை அவள் மனம் ஆராயத் தொடங்கியது! அதில் கிடைத்த விடை அவளை விக்கித்துப் போக வைத்தது!
என்றைக்கு அவள் நடு இரவில் மருத்துவமனைக்கு சென்றாளோ
,அன்றில் இருந்து, ஆனந்தன் அவளிடம் இயல்பாக நடந்து கொள்ளவில்லை ! எப்போதும் ஒரே ஓட்டம் தான்! வீடு தங்குவதே குறைந்து போயிற்று! எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இன்றைக்கு, அவன் நடந்து கொண்டது தான்! ஒருவேளை இதெல்லாம் அவளது பிரம்மையாக கூட இருக்கலாம்! ஆனால் சஞ்சலமாகிப் போன மனதை அவளால் திசை திருப்ப முடியவில்லை!

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 13