வீட்டின் பின்புறமாக அன்று சத்யபாரதி சென்று அமர்ந்த தோட்டத்து கல் பெஞ்சில் அமர்ந்த வசந்திக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலங்கியவளை பின் தொடர்ந்து வந்த தம்பி தன்னோடு அரவணைத்து,
"அக்கா, ப்ளீஸ். . அழாதே. உன்னை இப்படி என்னால் பார்க்கமுடியாது என்று உனக்கு தெரியாதா? எதுவென்றாலும் என்னிடம் சொல் அக்கா."
வெகு நாட்களுக்கு பிறகாக தம்பியின் அன்பான வார்த்தையில் மேலும் நெகிழ்ந்து, "வேண்டாம் கண்ணா, நீங்க ரெண்டு பேரும் எனக்கு உயிரோடு வேணுமடா" என்று கதறிவிட்டாள்.
அவர்கள் பின்னோடு வந்த சித்தார்த்தும் அதை கேட்டு அதிர்ந்து போனான்.
"ஏய்.. வசு, என்ன சொல்றே நீ? என்ன நடந்தது? விவரமா சொல்லு என்று அதட்டினான்.
இதற்கு மேலும் மறைக்கலாகாது என்று வசந்தி விபரம் சொன்னாள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன். ...
மாமனார் மாமியாரின் எதிர்பாரத மறைவு வசந்தியை நிலைகுலைய வைத்தது. படித்திருந்த போதும் வசந்திக்கு சில மூடநம்பிக்கைகளும் இருந்தது. திருமணம் பேசியபின் பெரியவர்கள் மறைந்தது அவளுக்கு மனதில் சஞ்சலமாக இருந்தது. அப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று தனக்குள் வலியுறுத்திக் கொண்ட போதும் அவளுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.
தெரிந்தவர்களிடம் அது குறித்து ஆலோசனை செய்தாள். பலர் பலவாறு கருத்து சொல்ல, ஒரு முடிவிற்கு வர இயலாமல் குழம்பினாள்.
அப்படித்தான் மாமன் மனைவி கனகவல்லியிடம் விஷயத்தை கூறினாள். அவளுக்கு இது சற்று அதிர்ச்சி தான் என்றாலும் காட்டிக் கொள்ளாமல், வேகமாய் யோசித்து, இருவரின் ஜாதகத்தையும் தனக்கு தெரிந்த ஒரு ஜோசியரிடம் காட்டி கேட்டு சொல்வதாக ஜாதகத்தை வாங்கி சென்றாள்.
மறுநாள் ...
அந்த ஜோதிடர் ஜாதகங்களை பார்த்துவிட்டு இருவருக்கும் பொருந்தாது. மீறி திருமணம் செய்தால் மணமகள் உயிருக்கு ஆபத்து. ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டுவடுவது உத்தமம் என்று கூறியதாக கனகவல்லி தெரிவிக்கவும் வசந்திக்கு மனம் நடுங்கிவிட்டது.
உண்மையில் தம்பியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போகும் என்பதால் மட்டும் கலங்கவில்லை,முக்கியமாக சத்யாவின் உயிருக்கு ஆபத்து என்பது தான் வசந்திக்கு பேரிடியாக இருந்தது. கனகவல்லி, அதுதான் சமயம் என்று அவளது பெண்ணின் ஜாதகம் தான் நன்றாக பொருந்துகிறது என்று சொல்லி, இவர்களுக்கு திருமணம் செய்தால் வாழ்க்கையில் பல படிகள் பையன் மேலே போக வாய்ப்பு இருக்கிறது. என்றும் தெரிவித்து, "ஜோசியர், சொன்னாருன்னு நீ ஏதும் மனசுல வச்சிக்காதே வசந்தி. யாருக்கு என்ன எழுதியிருக்கோ அதுதான் விதிக்கும் நீ மனசை குழப்பிக்காதே" என்றுவிட்டு போனாள்.
வசந்திக்கு அன்றிலிருந்து மனது குழம்பிய குட்டையாகிப் போயிற்று. நீண்ட பெருமூச்சுடன் சொல்லி முடித்தவளை இரண்டு ஆண்களும் பார்த்த பார்வையில் வசந்தி குழம்பிப்போனாள்.
"அக்கா, நீ படித்தவள், எவனோ ஏதோ சொன்னான் என்று உன்னையும் வருத்திக் எங்களையும் வருத்திவிட்டாயே?
"டேய் அவர் யாரோ இல்லை. பிரபலமான ஜோசியர். அவர் சொன்னது அப்படியே நடக்குமாம்டா. ப்ளீஸ் கண்ணா, விஷப்பரிட்சை வேண்டாம்..." என்று அவள் மேலே சொல்ல முயல, சித்தார்த் குறுக்கிட்டான்,
"அறிவு இருக்கா வசு? என்ன பேசுறே? எந்த யுகத்தில் இருக்கிற? ஜோசியம் ஜாதகம் எல்லாம் அப்படியே பலிச்சா ஏன் இன்னும் நிறைய பேர் மரத்தடியில் துண்டை விரித்து உட்கார்ந்து இருக்கிறாங்க? ? உன்கிட்ட நான் இதை சத்தியமா எதிர்பார்க்கவில்லை வசு, நம்ம கல்யாணம் எப்படி நடந்தது? ஜாதகம் பார்த்தாங்களா? அம்மா சொல்லத்தான் செய்தாங்க, ஆனால் அப்பா, மனசு ஒத்துப்போன பிறகு அதெல்லாம் தேவையில்லைனு சொல்லிவிட்டார். இப்ப நாம் சந்தோஷமா வாழலையா? என்று படபடத்தான்.
அவன் அன்று வரை அப்படி பேசி வசந்தி அறிந்ததில்லை. அவனது குரலும் முகமும் அவள் பெரிய தப்பு செய்துவிட்டதை உணர்த்த,
"மன்னிச்சிடுங்க அத்தான். அது நம் அத்தை அந்த ஜோசியர் பத்தி சொன்னதால் என்னால நம்பாமல் இருக்க முடியவில்லை."
"சரி, சரி, மாமாவை அங்கே தனியாக விட்டு இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. உள்ளே போய் மற்றதை பேசிக் கொள்ளலாம் என்று மனைவியை அழைத்துக்கொண்டு சித்தார்த் உள்ளே செல்ல...
கிருஷ்ணா பின் தொடர்ந்தான்.
தர்மலிங்கத்திடம் விவரம் சொல்ல அவர் சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு பின், "தயவு செய்து கனகாவை எல்லோரும் மன்னிச்சிருங்க. இந்த சொத்து பத்து எல்லாம் அவள் மகள் அனுபவிக்கணும் என்ற ஆசையில் வசந்தி மனதை கலைத்து விட்டிருக்கிறாள். மற்றபடி அவளுக்கு எந்த ஜோசியரையும் தெரியாது, என்றவர் தொடர்ந்து, "அனிஷாவை கண்ணனுக்கு கட்டி வைக்க எண்ணினாள். இது எனக்கும் தெரியும். கனகா இல்லாதப்பட்ட இடத்தில் வளர்ந்தவள். அதனால் இத்தனை ஆஸ்தியை கண்டதும் அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்து விட்டாள். அதற்கு ஒரு வகையில் நானும் காரணமாகிவிட்டேன். எனக்கு கண்ணன் மருமகனாக வந்தால் என் மகள் கஷ்டப்படாமல் வாழ்வாள் என்ற எண்ணம், இரண்டு பேருக்கும் உறவு முறையும் இருந்ததால் தவறாக தோன்றவில்லை. வசந்தி மனசு கஷ்டப்பட நானே காரணமாகிவிட்டேன். மன்னிச்சிருமா.. தர்மலிங்கம் குற்ற உணர்வில் குறுக. ..
அது பொறுக்காமல் "ஐயோ மாமா என்ன இது மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு? இத்தனை நாள் மனசுல கஷ்டப்பட்டிருந்தாலும் இப்ப உங்க மூலமா அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததில் ரொம்ப நிம்மதியாக இருக்கிறது. எங்களை அம்மா அப்பா இல்லாத குறை தெரியாமல் வளர்த்திருக்கீங்க. அத்தையோ நீங்களோ அப்படி நினைச்சதுல தப்பே இல்லை. அதுக்காக அத்தை இப்படி செஞ்சது சரியும் இல்லை தான். அதனால் இந்த பேச்சை இத்தோடு விட்டுவிடுவோம், என்றவளிடம் கண்ணன் சொத்து பிரிப்பது பற்றிய தன் யோசனையை சொன்னான்.
"நல்ல யோசனைடா கண்ணா. அப்படியே செய்துவிடலாம். அனிஷாவின் திருமணமும் என் பொறுப்பு மாமா. நீங்கள் நல்லபடியாக எங்களோடு இருந்து வழி காட்டினால் போதும். இனி நீங்கள் வருத்தமே படக்கூடாது மாமா "என்றதும் தர்மலிங்கத்திற்கு மனது நிறைந்து விட்டது. அக்கா இருந்திருந்தால் கூட இதைத்தான் செய்திருபபாள், அவளுடைய பிள்ளைகளுக்கும் அதே போன்ற பரந்த மனது என்று எண்ணிக்கொணடார்.
"இல்லையம்மா,என் பிள்ளைகள் சந்தோஷமாக வாழ்வதை கண்ணார காணும் பாக்கியம் கிடைத்திருக்கும் போது நான் ஏன்மா வருந்தப் போகிறேன்?
"ம்ம் இதுதான் எங்கள் மாமா, என்றவள், அடடா இனிமேல் எனக்கு நிற்ககூட நேரமிருக்காது, கல்யாண வேலை நிறைய இருக்கு. இரண்டு வீடும் ஒன்றாக இருக்கிறால இரண்டு பக்கமும் எடுத்து நான்தானே செய்யனும்" என்று வசந்தி சொல்ல அனைவரின் முகத்தில் புன்னகை அரும்பிற்று.
சில தினங்கள் கழித்து...
திருமண மண்டபம். ..
கனகவல்லி தர்மலிங்கம் தம்பதி சமேதராக வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். வசந்தியும் சித்தார்த்தும் மணமகளையும் மணமகனையும் தயார் செய்வதில் மும்முரமாக இருக்க, மறுபுறம் ரவியும் ரூபாவும் அவ்வப்போது கண்களால் பேசியபடி மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
எல்லாருமே அதை கண்டும் காணாதது போல புன்னகையுடன் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அதற்கு காரணமும் இருந்தது. முன்தினம் கிருஷ்ணா- சத்யபாரதி நிச்சயதார்த்த விழாவிற்கு வந்திருந்த ரவியின் தாயார் திலகவதிக்கு ரூபாவை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போய்விட, அப்போதே முறைப்படி பூவைத்து நிச்சயித்து விட்டார். அது அனைவருக்குமே மனம் நிறைவான நிகழ்ச்சியாக அமைந்தது.
கிருஷ்ணா- சத்யபாரதி திருமணத்தோடு அவர்கள் திருமணத்தையும் நடத்திவிடத்தான் விரும்பினார்கள். ஆனால் இது அவர்கள் வைபவம். அதில் தாங்கள் பங்கு கொள்ள முடியாது என்று இருவரும் ஒரே குரலாக சொல்லி விட அடுத்த முகூர்த்தத்தில் அவர்கள் திருமணத்திற்கு தேதி மட்டும் குறித்து திருப்திபட வேண்டியதாயிற்று.
"பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ" என்ற ஐயர் விளிக்க, ரூபா, அழகு பதுமையாய் ஜொலித்த சத்யபாரதியை அழைத்து வந்து மனையில் அமர வைக்க, கிருஷ்ணா அது சபை என்பதையும் மறந்தவனாய் வைத்த கண் எடுக்காமல் நோக்க, அங்கே மெல்லிதாக ஒரு சிரிப்பலை எழுந்தது. கிருஷ்ணா அசடு வழிய, சத்யபாரதி வெட்கத்துடன் தலை குனிந்தாள். ஒருவாறு சம்பிரதாய சடங்குகள் முடிந்து, ஐயர் மந்திரம் சொல்ல, கெட்டி மேளம் முழங்க, உற்றார் உறவினர் சுற்றம் நட்பும் அட்சதை தூவி வாழ்த்த..
மங்கலநாண் பூட்டி தன் மனம் நிறைந்தவளை மனைவியாக ஏற்றுக்கொண்டான்.
கிருஷ்ணா என்கின்ற கண்ணனின் தோள்களில் பூமாலையாக சேர்ந்தாள் சத்யபாரதி !!
" சுப மங்களம் "