• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

31. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அடுத்து வந்த மாதங்களில் சாருபாலாவுக்கு, தம்பி மனைவியையும் தம்பியையும் கவனித்துக் கொள்வதில் நேரம் சரியாக இருந்தது! பழைய நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், அதை ஒதுக்கிவிட்டு படிப்பதில் கவனம் செலுத்தினாள்!
இடையில் திலகமும் கருணாகரனும் மதுரைக்கு வந்துவிட்டுப் போனார்கள்!

சாந்திக்கு நெருங்கிய உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லை! ஒன்று விட்ட உறவுகள் தான் அவளை வளர்த்து ஆளாக்கியிருந்தனர்! இப்போது அவர்களில் யார் வீட்டில் வைத்து அவளுக்கு பிரசவம் பார்ப்பது என்று ஒரு பிரச்சினை கிளம்பியது! சாருபாலா, அந்த பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டாள் ஆகவே,வேறு சர்ச்சை இல்லாமல் சொந்தங்கள் வந்திருந்து சிறப்பாக ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்திவிட்டு, சென்றனர்!

சாந்திக்கு ஓர் அதிகாலை வேளையில் மகளெனும் தேவதை பிறந்தாள்! அவளை முதலில் கையில் வாங்கிய சாருபாலாவின் கண்களும் மனமும் நெகிழ்ந்தது! மகனை பிரிந்து விட்ட, ஏக்கமெல்லாம் அந்த தளிரின் வரவில் கரைந்து போனது!

சுரேந்திரனுக்கு அன்று வரை குழந்தை இல்லை என்று தவித்த அவர்களது குறை, அந்த குட்டி நிலவைப் பார்த்த கணத்தில் மாயமாய் மறைந்துபோனது!
குழந்தைக்கு இன்பசுரபி என்று பெயரிட்டனர்

மகள் பிறந்து இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தது! சுரேந்திரன் வேலை செய்து கொண்டே மேற்படிப்பை முடித்திருந்தான்! அதன் அடிப்படையில், அவன் விண்ணப்பித்திருந்த சென்னை கல்லூரியில் பேராசியர் வேலை கிடைத்தது!

ஆகவே அனைவரும் சென்னைக்கு திரும்பினர்! கருணாகரன், பெரியவர் வாசன் தந்திருந்த, கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் அவர்களை தங்கிக்கொள்ள சொன்னார்! சாருவுக்கும் அது சரி என்று பட்டது! அவள் இன்னும் சில மாதங்களில் வெளிநாட்டிற்கு கிளம்பிப் போய்விடுவாள்! இங்கே கருணாகரனும் திலகமும் அவர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்! என்று அவளுக்கு சற்று நிம்மதியாக கூட இருந்தது!

சாருபாலா அங்கிருந்தவரை, சாந்தியையும் மருமகளையும் கவனித்து கொண்டாள்!
திலகத்திற்கும் அந்த சின்னக் குழந்தை மீது கொள்ளை பிரியம் உண்டாயிற்று! அதனால் அவரும் அவ்வப்போது வந்து குழந்தை இன்பசுரபியை பார்த்துவிட்டு போனார்! சாந்திக்கு திலகத்தை மிகவும் பிடித்துவிட்டது! அத்தை என்று உறவு வைத்து அழைத்தாள்! தாய்மை அடைய முடியாமல் அத்தனை காலமும் உள்ளூர ஒரு வறண்ட வாழ்க்கை வாழ்ந்த அந்த பெண்மணிக்கு,இந்த சொந்தங்கள் கிடைத்ததில், பெரும் திருப்தியும் சந்தோஷமும் உண்டாயிற்று!

இன்பாவிற்கு ஆறு மாதங்கள் நிறைவு பெற்ற போது சாருபாலா, வெளிநாடு கிளம்பி சென்றாள்! அவள் விரும்பியது போல, படிப்போடு, வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்திருந்தது!

🩵🩷🩵

ஆனந்தன் - அனிதாவின் வாழ்க்கையும் சுமூகமாக சென்றது!பிள்ளைகளையும், கணவனையும் கவனிப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று அனிதாவுக்கு நாட்கள் பரபரப்பாக நகர்ந்தது என்றால், ஆனந்தனும் சக்கரம் கட்டாத குறையாக மும்முரமாக, தொழிலில் முன்னேறத் தொடங்கியிருந்தான்!

மருமகள் தான் முகம் கொடுத்து பேசுவதில்லை என்றால், மகனும் வந்து விசாலாத்திடம் அமர்ந்து பேசுவதில்லை! அவருக்கு என்று பணிவிடை செய்ய ஒன்றுக்கு இரண்டு வேலையாட்களை நியமித்திருந்தனர்! எந்த மகனுக்காக ஒரு நல்ல பெண்ணை கொடுமை படுத்தி, அவளது பிள்ளையையும் பிரித்தாரோ, இன்று அந்த மகனும் நாலு நாட்களுக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் நின்று வெற்று பார்வை பார்த்து விட்டு போகிறான்! ஆரம்பத்தில் பொறுத்துதான் போனார்! ஆனால் நாளாக ஆக தனிமை அவரை கொன்றது!

ஆகவே,"பெற்ற தாயிடம் உட்கார்ந்து பேசக்கூட உனக்கு நேரமில்லையா ஆனந்தா? நான் உனக்கு நல்லது செய்யத்தான்.." அவர் மேலே பேசுமுன் குறுக்கிட்டான்,

"நிறுத்துங்கம்மா, ஒரு அம்மாவா நீங்க எனக்கு என்ன நல்லது செய்தீங்க? நான் ஆண்பிள்ளை கொஞ்சம் தடுமாறிட்டேன்! அது தெரிஞ்சதும், நீங்க என்ன செஞ்சிருக்கணும்? ப்ச்சு.. போனதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது ?? பணத்துக்காகத் தானே நீங்க இப்படி செய்தீங்க? அதை சம்பாதிக்கத் தான் நான் ஓடிட்டு இருக்கிறேன்! உங்களுக்கு எந்த குறையும் வைக்கலையே! சந்தோசமா இருங்க!" என்றுவிட்டு போனான்!

விசாலாட்சிக்கு தான் செய்த தப்பு பெரிதென்று ஏற்கனவே உணர்ந்துதான் இருந்தார்! ஆனால் அதையே மகன் வாயால் குறிப்பிட்டு சொன்னதும், அவரது இதயம் அதிர்ச்சியை வாங்கியது! அதன் விளைவாக, தான் செய்த பாவத்திற்கான பலன் இது என்று மனதளவில் தளர்ந்தவர் பக்கவாதம் வந்து, ஒரு பக்கத்து கை கால் விளங்காமல் போய் படுத்த படுக்கையானார்!

அதன் பிறகு அவர் அதிக காலம் வாழவில்லை!

நீலாங்கரை

ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன், ஆனந்தன் தன் கண்களை துடைத்துக் கொண்டார்! இன்றும் அவர் மனதில் சாருபாலாவுக்கு செய்த துரோகத்தை, நினைத்து வருந்தாத நாளே இல்லை! அவளை ஒரு முறை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தார்! மன்னிப்பால் அவர் செய்தது இல்லை என்று ஆகிவிடாது தான்! ஆனாலும் அவரது குற்றவுணர்வு அவரை தினம் ஒருமுறையாவது, குன்றவைத்துக் கொண்டிருக்கிறதே, அதில் இருந்து விடுதலை கிடைக்காதா என்ற சின்ன நப்பாசை!

அவர் ஒரு சாருபாலாவை காதலித்தது போல் இன்று , மகனுக்கும் ஒரு காதல் இருக்குமோ, என்று அவருக்குள் லேசாக சந்தேகம் ! அதை எப்படி தெளிவுபடுத்திக் கொள்வது என்று சிந்திக்கலானார்!

🩷🩵🩷

சாருபாலா மேற்படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலையை தொடர்ந்தாள்! இந்தியாவிற்கு விடுமுறையில் மட்டும் வந்து சென்றாள்! அதுவும் கூட தம்பியின் குடும்பத்திற்காகவும், திலகத்திற்காகவும் தான்!

நாலைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் கருணாகரன் காலமாகிவிட, சுரேந்திரன் திலகத்தை தங்களுடன் அழைத்துக் கொண்டான்! அவருக்கு இன்பசுரபியை பார்த்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி! சொந்த பேத்தியாகவே பாவித்தார்! அவளுக்கு பாட்டி என்றால் பிரியம் அதிகம்! ஆயினும் துரத்தில் இருக்கும் டாக்டர் அத்தை மீது அலாதியான பாசம்! இன்பாவுக்கு அத்தையைப் போல ஒரு மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை! அதை பெற்றோரும்
ஊக்குவித்தனர்! ஆண்டிற்கு ஒரு முறை சாருபாலா வந்துவிடுவாள்! மருமகளின் விடுமுறை நாட்களை கணித்தே அவள் இந்தியாவிற்கு வருகை தருவாள்!

இன்பா பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தாள்! அது டிசம்பர் மாதம், அவளுக்கு மாதிரித் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தது! சுரேந்திரனும்,சாந்தியும் ஒரு திருமணத்திற்காக மதுரைக்கு சென்றிருந்தனர்! திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பும் நேரம் நல்ல மழை! ஆகவே அங்கேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது! ஊரெல்லாம் வெள்ளக்காடாக இருந்தது! மழை ஒருவழியாக நின்றதும் ஊருக்கு கிளம்பினர்! மின்சாரம் வேறு நிறுத்தப்பட்டிருந்தது!
காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்! பின் இருக்கையில் கணவனும் மனைவியும் மகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்!

ஓட்டுனர் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்!
மதுரை எல்லையை தாண்டியதும் எதிர்பாராதவிதமாக அந்த விபத்து நேர்ந்தது!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 11