• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

36. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
147
130
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
சென்னை

வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் இருந்தது! திலகத்தின் தோற்றம் பார்த்தோ என்னவோ , வழியில் நின்றவர்கள் ஒதுங்கி அவர் சந்நிதிக்கு செல்ல உதவினார்கள்!

சாந்திக்கு அன்று வருவதற்கு தோது இல்லை என்றதால், திலகம் தனியாக கோவிலுக்கு கிளம்பி வந்திருந்தார்! கடவுளை வணங்கிவிட்டு, பிரகாரத்தை வலம் வந்து விட்டு, ஒரு தூணின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டார்! சாந்தி வந்திருந்தால் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்! இன்றைக்கு பேச்சு துணைக்கு யாரும் இல்லை!

கணவரின் மறைவுக்குப் பிறகு அவருக்கு, சுரேந்திரனின் குடும்பம் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகியிருப்பேனோ? என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வார்! உண்மையில் கணவரின் பிரிவை இந்த குடும்பத்தின் துணை இருந்ததால் தான் தாங்கிக் கொள்ள முடிந்தது! அதிலும் இன்பசுரபியின் பங்குதான் அதிகம்! சாந்தி பெற்றவர் என்றாலும் திலகத்திடம் அவளை ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்வார்! அவரது மனது அத்தனை தாராளம்!

சாந்தியும் குழந்தைக்காக சில ஆண்டுகள் தவித்தவர் என்பதால் அம்மாளின் ஏக்கத்தை போக்குவதற்கு தன்னாலான அந்த தியாகத்தை செய்தார் எனலாம்!

இன்பாவிற்கும் பாட்டியிடம் தனிப் பிரியம் தான்! அவர்களது பிணைப்பை பார்ப்பவர்கள் யாரும் இருவருக்கும் ரத்த சொந்தமில்லை என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்! விடுமுறையில் இன்பா வந்துவிட்டால் போதும், இருவரும் குழந்தையாக மாறிவிடுவார்கள்! கடற்கரையில் அவர்கள் அடிக்கும் லூட்டி கண்கொள்ளா காட்சி! சாருபாலாவும் சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம்!

திலகம் புன்னகையுடன் மெல்ல எழுந்து நடக்க துவங்க, திடுமென தலை சுற்றியது! கீழே விழப் போனவரை யாரோ தாங்கிப் பிடித்தார்கள்! அவ்வளவு தான் அவருக்கு தெரியும்! சில கணங்கள் கழித்து முகத்தில் சில்லென்று தெறித்த நீரின் விளைவாக கண்களை திறந்தார்! எதிரே ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியும், அழகிய இளம் பெண்ணும் அவரது முகத்தை கவலையாக பார்த்திருந்தனர்!

"இப்ப எப்படி இருக்குமா? " என்றார் அந்த பெண்மணி!

"பரவாயில்லைமா! என்னவோ தெரியலை மா, திடீர்னு தலை சுத்திடுச்சு! வயசாகுதில்லையா? அதான், உங்க இரண்டு பேருக்கும் ரொம்ப நன்றிம்மா!"

"தனியாகவா வந்தீங்கமா? இந்த வயசுல தனியா வரலாமா மா?"

"எப்பவும் மருமகள் வருவாள் மா! அவளால் இன்னிக்கு வரமுடியாத நாள்! காரில் தானே போகிறோம், ஏதும் என்றால் டிரைவர் இருக்கிறார், போன் வேற கையில இருக்கு அப்புறம் என்ன என்று கிளம்பி வந்துட்டேன்" என்று லேசாக சிரித்தார்!

சற்று நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்! அந்த இளம் பெண் மௌனமாக அமர்ந்திருந்தாள்! அவர்கள் பரஸ்பரம் தங்களை பற்றி விவரங்களை பகிர்ந்து கொண்டதுடன், கைப்பேசி எண்களையும் பரிமாறிக் கொண்டனர்!

திலகத்திற்கு அவர்களை மிகவும் பிடித்து விட்டது! ஒருநாள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்ற போது,கார் வரை அம்மாளை கூட்டி வந்து
ஏற்றிவிட்டடனர்!

"நீங்களும் வீட்டுக்குத் தானே போகணும்? வாங்க நானே கொண்டு விட்டுட்டு போகிறேன்"என்றார் திலகம்!

"எங்கள் வீட்டிற்கு அந்த பக்கமாக போக வேண்டும்! அத்தோடு வீட்டுக்கு வேண்டியதும் வாங்கிட்டு போகணும் அம்மா! அப்புறமா ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு வரணும் மா!நீங்க பத்திரமா போய் வாங்க! போனதும் ஒரு போன் பண்ணிச் சொல்லுங்கமா!"

"அவசியம் மா, சொல்றேன்மா" கார் கிளம்பவும், சாய்ந்து அமர்ந்தவரின் முகத்தில் யோசனை வந்தது!

🩷🩵🩷

சென்னை

திருவான்மியூர்!

பழைய காலத்து காம்பவுண்டு வைத்த தனி வீடாக இருந்தது வசந்தன் வீடு! காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப வீட்டிற்குள் கொஞ்சம் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது! பின் கட்டு துளசி மாடம், கிணறு, என்று அந்த காலத்தில் வசந்தனுடைய தந்தைவழி தாத்தா கட்டிய வீடு!

அன்று ஞாயிற்றுக்கிழமை

காலை உணவை முடித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார் வசந்தனின் தந்தை வரதன்!

வாஷிங் மெஷினில் இருந்து துவைத்த, துணிகளை எடுத்து பக்கெட்டில் போட்டுக் கொண்டிருந்தாள்,அந்த வீட்டு இளவரசி வித்யா!

மதிய சமையலில் ஈடுபட்டிருந்த அன்னை பவானி, கணவரிடம் வந்தார்! "என்னங்க, தரகர், இன்னிக்கு ஏதோ வரன் இருக்கு, நேரில் வர்றேன்னு சொன்னாரே! இன்னும் காணோம்? நீங்க அவருக்கு ஒரு போன் போட்டு கேளுங்க!" என்றார்

"ஆமா, பையன் ரொம்ப பெரிய இடம்னு சொன்னார்! நான் நமக்கு ஏத்த இடமாக பாருங்கள்னு சொல்லிட்டேன்!"

"ஏங்க, பெரிய இடமாக இருந்தால் என்ன ? நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தானே? அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்ல? இப்ப போன் போட்டு அவரை வரச் சொல்லுங்க! தோதுபட்டா மேற்கொண்டு பேசுவோம், இல்லைன்னா, விட்டுடலாம்!" என்றார் பவானி!

"சரி,இப்பவே வரச் சொல்றேன்! என்று கைப்பேசியுடன் எழுந்து சென்றார்!

"அம்மா, நான் மேலே படிக்கிறேன் என்றால் ஏன் கேட்கவே மாட்டேங்கிறீங்க! " என்றவாறு வித்யா வந்தாள்!

"என்ன வித்யா, புரியாமல் பேசுறே? உனக்கு முடிச்சாதான், வசந்தனுக்கு முடிக்க முடியும்! அவனுக்கு இப்ப 26 முடிஞ்சிடுச்சு, அடுத்த வருஷம் அவனுக்கு கல்யாணத்தை முடிக்கணும்!"

"அண்ணனுக்கு பொண்ணு பார்த்து முடிங்களேன் அம்மா! எனக்கு இவ்வளவு சீக்கிரமாக எதுக்கு கல்யாணம்? "

"உன்னை வீட்டுல வச்சுட்டு, அவனுக்கு கல்யாணம் பண்ணினா, சரி வராது வித்யா! நீ மேல படிக்கிறதுன்னா, இன்னும் இரண்டு வருஷம் ஆகும்!" பவானி சொல்லிக் கொண்டிருந்த போது,போன் பேசச் சென்ற வரதன் வந்தார்!

"அரைமணி நேரத்தில் வர்றேன்னு சொன்னார்! நான் அதுக்குள்ள கொஞ்சம் படுக்கிறேன்!" என்று அவர் அறைக்கு சென்றுவிட்டார்!

"நீ வா வித்யா, அவர் வர்றதுக்குள் சமையலை முடிச்சிடலாம்!"என்று உள்ளே சென்றுவிட, வித்யா ஒரு பெருமூச்சுடன் பின் தொடர்ந்தாள்!

வித்யா கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த போதே அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக, திருமண சேவை மையத்தில் பதிவு செய்து வைத்துவிட்டனர்! அது தவிர, அவர்களுக்கு பரிச்சயமான தரகரிடமும் அவளது படத்தையும் விவரங்களையும் கொடுத்து வைத்தனர்!

ஒரு சில வரன்கள் வரத்தான் செய்தது! ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது! அல்லது மணமகன் வயது அதிகமாக இருந்தது! இரக்கமே இல்லாமல் எப்படி இப்படி பெண் கேட்கிறார்கள் என்றுதான் தோன்றியது!

வித்யா படிப்பை முடித்து, ரிசல்ட் வந்துவிட்டது! அதிக மதிப்பெண்களுடன் தேர்வாகியிருந்தாள்! அந்த வகையில் பெற்றோருக்கு மகிழ்ச்சி தான்! அவளது மேலே படிக்கும் ஆசையை அவர்களால் நிறைவேற்ற முடியும் தான்!ஆனால் அதற்கேற்ற வரன் பார்க்க வேண்டுமே! நடுத்தர குடும்பத்தில் நியாயமான ஆசைகள்கூட பல நேரங்களில் நிராசையாகத்தான் போய்விடுகிறது!

 

Attachments

  • Picsart_24-05-04_15-06-20-975.jpg
    Picsart_24-05-04_15-06-20-975.jpg
    69.1 KB · Views: 16