• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

48. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
170
151
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கோவை

ஆட்டோவின் பின் தொடர்ந்த ரிஷி, ஒரிடத்தில், அவர்களை தாண்டிக் கொண்டு சென்று மறைந்து விட்டான்!

இன்பா அவனிடம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள்! ஆனால் அவன் அவளை சந்திக்காமல் சென்று விட்டதில், குழம்பிப்போனாள்! அவள் மீது ஏதும் அவனுக்கு கோவமா? அதற்கு காரணம் ஏதும் இல்லையே!"அவள் யோசித்துகொண்டிருக்கும் போதே அவளது விடுதி வந்துவிட்டது!

ஆட்டோக்காரர் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு, "அண்ணா, மிஸ்டர் ரிஷியை பார்த்தால் நான் நன்றி சொன்னேன்னு சொல்லுங்க " என்று உள்ளே சென்றாள்!

அன்றைய நாள் இன்பாவிற்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது என்றால் மிகை இல்லை! அவற்றை எல்லாம் பின்னே தள்ளிற்று ரிஷியின் செயல்!

ரிஷயை பார்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தது எல்லாம் மறந்து போனவளாக , அவன் அவளை பாராமல் போனது தான் கருத்தில் நின்றது!

இன்பா ஆழ்ந்து யோசித்திருந்தால் புரிந்து இருக்கும்! ரிஷி வந்தது அவளை பாதுகாக்க, அதற்கு அவசியம் இல்லை என்றாபோது, அவன் வந்தவழியே சென்று விட்டான் அவ்வளவு தான்!

ரிஷியும் அதற்காக மட்டுமாக அவளை பாராமல் செல்லவில்லை! அவன் எடுத்திருந்த முடிவின்படி தான் நடந்து கொண்டான்! இன்பாவின் மனதில் அவனை பற்றிய எண்ணம் நிர்மலமானது! நேசம் என்று எந்த உணர்வும் இல்லை என்பது தெளிவு! கண்ணில் படாதது கருத்திலும் படாது என்ற கணிப்பில் தான் அவன் தவிர்த்து சென்றது!

அதுவே ஒருவிதமாக இன்பாவை அவனது செயல் பாதிக்க போவதை அவன் அறியவில்லை!

அடுத்து ஒரு இரண்டு வாரங்கள் இயல்பாக சென்றது, இன்னும் இரண்டு மாதங்களில், மருத்துவப் படிப்பு முடிந்து விடும்! ஆகவே, மாணவ மாணவர்கள் கடைசி வருடம் என்பதால் ஒரு கல்வி சுற்றுலாவிற்கு போய் வரலாம் என்று கல்லூரியின் அனுமதியுடன் சுற்றுலா ஏற்பாடு செய்தனர்! கேரளாவிற்கு செல்வதாக முடிவு செய்தனர்!

இன்பாவிற்கு அதுபோல பயணங்களில் ஏனோ எப்போதும் விருப்பமில்லை! குடும்பத்துடன் என்றால் முதல் ஆளாக கிளம்பி விடுவாள்! அதிலும் அத்தை சாருபாலாவுடன் என்றால் கேட்கவே வேண்டாம்! இப்போது சக மாணவிகள் கடைசியாக சேர்ந்து செல்வது ஒருத்தர் கூட வராமல் இருக்கக்கூடாது என்று நிபந்தனையே போட்டுவிட்டார்கள்!
வேறு வழியின்றி சம்மதித்தாள்!

ஊருக்கு செல்லுமுன்பாக தேவையான சில பொருட்களை வாங்க வேண்டியிருந்ததால் சில மாணவிகள் சேர்ந்து நகரத்திற்கு கிளம்பினர்!

அன்று சனிக்கிழமை

இன்பாவின் குழுவுக்கு இரவு பணி கொடுக்கப்பட்டிருந்தது ! ஆதலால் சற்று தாமதமாக எழுந்து, பிற்பகலுக்கு முன்னதாக கிளம்பினர்!

அது நான்கு தளங்கள் கொண்ட பிரபல கடை அது! அங்கே சகலமும் கிடைக்கும்! சிலருக்கு உடைகள் வாங்க வேண்டியிருந்தது! சிலருக்கு காஸ்மடிக் பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது! ஆளாளுக்கு ஒரு தளத்திற்கு பிரிந்து சென்றுவிட்டனர்!

இன்பாவும், நிகிலாவும், உடைகள் வாங்க சென்றனர்! இருவரும், தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டு கடையின் கீழ்த்தளத்திற்கு வந்தபோது, இன்னும் மற்றவர்கள் வந்து சேரவில்லை! ஆகவே அவர்கள், பிரதான வாயிலின் பக்கம் சென்று, வெளியே வேடிக்கை பார்த்தபடி, நின்றிருந்தனர்!

அப்போது, தான் அங்கே ரிஷி ஒரு இளம் பெண்ணுடன் அங்கே வந்தான்! அவள் - கனிகா, வேலைக்கு புதிதாக அவனது, அலுவலகத்தில் சேர்ந்திருந்தாள்! தனியாக விடுதியில் தங்கியிருந்து வேலை செய்கிறாள்! அவனது குழுவில் இருப்பவள்! இந்த ஊர் புதிது என்று அவனை துணைக்கு வருமாறு கேட்டிருந்தாள்!

ரிஷியை பார்த்ததும் இன்பாவிற்கு, மனதுக்கு இனம்புரியாத ஒரு உணர்வு பிரவாகமாக எழுந்தது! அவளது முகமே சுவிட்ச் போட்டது போல பிரகாசமாகிப் போனது! ஆனால் அவனுடன் ஒட்டியபடி வந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உற்சாகம் எல்லாம் வடிந்துவிட, காரணமின்றி ஆத்திரம் உண்டாயிற்று! யார் இவள் ? என்னவோ உரிமை உள்ளவள் போல இப்படி பலபேர் பார்க்கிறாப்ல உரசிக் கொண்டு போகிறாள்! இன்பாவிற்கு அவள் யாரென்று தெரிந்து கொள்ளாவிட்டால் நிம்மதியாக இருக்க முடியும் போல தோன்றவில்லை! அவர்கள் பின்னோடு போக காரணம் தேடினாள்!

நிகிலாவோ அங்கே குடும்பமாக வந்திருந்தவர்களை ஏக்கமாக பார்த்தபடி நின்றிருந்தாள்! இன்பாவை அவள் கவனிக்கவில்லை!

"நிகில், நீ இங்கேயே இருப்பா, நான் இதோ வருகிறேன்! மற்றவர்கள் வந்துவிட்டால் எனக்கு போன் பண்ணு!" என்றவள் அவளது பதிலைக் கூட எதிர்பாராமல் உள்ளே ஓடிச் சென்று திறந்திருந்த லிப்டினுள் ஏறிவிட்டாள்!

நிகிலா சிலகணங்கள் திகைப்புடன் அவள் சென்ற திசையை பார்த்திருந்தாள்! திடீரென இவளுக்கு என்ன ஆயிற்று? அப்படியே ஏதும் வாங்க வேண்டும் என்றால், அவளையும் உடன் அழைத்து போக வேண்டியது தானே?" என்று யோசனையுடன் நின்றாள்!

அந்த லிஃப்ட்டில் தான் ரிஷி, அந்தப் பெண்ணுடன் நுழைந்திருந்தான்!
இன்பாவை பார்த்ததும் அவனது கண்ணில் மின்னல் வந்து போயிற்று! அதை இன்பா எதிரில் இருந்த கண்ணாடி வழியாக கவனித்துவிட்டாள்! ஆனால் அதற்குள் அந்த பெண் ஏதோ தாழ்ந்த குரலில் கேட்கவும், அவளுக்கு அதே குரலில் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்! அவன் அருகில் நின்றவளின் உடையை அப்போதுதான் பார்த்தாள், முட்டி வரையான கருப்பு ஸ்கர்ட்டும், கையில்லாத சிவப்பு டைட் டாப்பில் இருந்தாள்! எப்படி டிரஸ் போட்டிருக்கிறாள் பாரு! மேக்கப்பும் நன்றாக அப்பியிருப்பாள் போல.. வெளியே அந்நிய ஆணுடன் எப்படி வந்திருக்கிறாள் பார்? என்னைப் பார், என் அழகைப் பார் என்று, சுறுசுறுவென கோபம் எழுந்தது! அவர்கள் இறங்க வேண்டிய தளம் வந்துவிட, அவர்களை தொடர்ந்து இன்பாவும் வெளியேறினாள்!

அப்போது ரிஷி திரும்பி அவளைப் பார்க்க, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹலோ மிஸ்டர் ரிஷி!" என்றாள்! அவனை நோக்கி நட‌ந்தபடி!

ரிஷி, நிச்சயமாக அதை எதிர்பார்க்கவில்லை! உள்ளூர ஆச்சர்யம் உண்டாக, அப்படியே ஒரு ஓரமாக விலகி நின்றுவிட்டான்! காரணம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது!

இன்பா, விரைந்து அவன் அருகில் வந்ததும்,"எப்படி இருக்கீங்க இன்பா? பார்த்து நாளாச்சு!"என்று ரிஷியும் கேட்டான்!

"நான் நல்லா இருக்கிறேன் ரிஷி! நீங்க எப்படி இருக்கீங்கனு நான் கேட்க மாட்டேன்! நல்லா இல்லை என்றால் ஹாஸ்பிடல் பக்கம் வந்திருப்பீங்களே!" என்று புன்னகைத்தாள்!

ரிஷிக்கு உண்மையில் இன்பா இத்தனை இயல்பாக பேசியது ஆச்சரியமாகத்தான் இருந்தது! ஆனால் பிடித்திருந்தது!

"அது என்னவோ உண்மை தான்!" என்று பதிலுக்கு புன்னகைத்தவன், "ஆமா தனியாகவா வந்திருக்கீங்க?" என்றான், அவள் பின்னே ஆராய்ந்துவிட்டு!

"இல்லை, பிரண்ட்ஸ் வந்திருக்காங்க! அடுத்த வாரம் நாங்க டூர் போகிறோம்! அதற்காக சிலது வாங்க வந்தோம்! நான் பர்சேஸ் முடிச்சுட்டேன், மத்தவங்க இன்னும் காணோம், அவங்களை தேடி வந்தேன்! வந்ததும் நல்லதாயிற்று உங்களை பார்க்க முடிந்தது!" என்றாள்!

"என்னை எதுக்காகவும் பார்க்கணும்னு நினைச்சீங்களா?"அவளது முகத்தை குறுகுறுவென பார்த்தபடி வினவினான்!
ரிஷிக்கு இந்த இன்பா இன்னும் புதிதாக தோன்றினாள்!

"ஆமா, அன்னிக்கு ஹோட்டல் வரை எனக்காக வந்திருந்தீங்கனு, சேகர் அண்ணா சொன்னார்! அதுக்காக உங்களுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனால் .." என்றவளின் பேச்சில் குறுக்கிட்டான் ரிஷி!

"அதுதான் அவர்கிட்ட சொல்லி அனுப்பிட்டீங்களே இன்பா?"என்றான்!

"ஆமா,ஆனால் நேரடியாக சொல்றதுதானே மரியாதை?"

"என்னோட நம்பர் இருக்கிறதே, சொல்ல வேண்டியதுதானே?"
ரிஷிக்கு அவளுடன் இப்படி பேசுவது சுவாரஸ்யமாக இருந்தது!

"நான் சொன்னதை சரியாக கேட்கவில்லையா நீங்க? நேரில் பார்த்து சொல்லணும்னு இருந்தேன்! அது இன்று தான் முடிந்தது!" என்று அவள் முகமெல்லாம் பிரகாசமாக தோன்றியது! அதை அவன் ரசனையுடன் பார்த்திருந்த போது

"வாட் ஹாப்பென்ட் ரிஷி?" சில அடி தூரம் முன்னதாக சென்றுவிட்டு திரும்பி வந்த கனிகா, கேட்டாள்!

இன்பாவின் முகம் அவளை பார்த்ததும் சட்டென மாறி மீண்டதை ரிஷி கவனித்துவிட்டு உள்ளுர, வியந்து போனான்!

"கனிகா, இவங்க இன்பசுரபி, மெடிக்கல் பைனல் இயர் ஸ்டுடென்ட், எனக்கு தெரிஞ்சவங்க!" என்று அறிமுகம் செய்தவன்
,அப்படியே, இன்பா இவங்க, கனிகா! என்னோட ஒர்க் பண்றாங்க! புதுசா வந்து சேர்ந்திருக்காங்க! அவங்களுக்கு இந்த ஊர் புதுசு! துணைக்கு வர சொன்னாங்க!"

இருவரும் ஒட்டாமல் ஒரு ஹலோவை பரிமாறிகொண்டனர்!

"ம்க்கும், அதுக்கு ஒரு பொண்ணை துணைக்கு கூட்டிட்டு வரவேண்டியது தானே? " என்று தனக்குள் பல்லைகடித்துக் கொண்டாள் இன்பா!

அப்போது அவளது கைபேசி ஒலிக்க, லேசான எரிச்சலுடன் எடுத்து பார்த்தவள், அது நிகிலாவின் அழைப்பு என்று தெரிய, உடனே எடுத்து பேசினாள்!

" எல்லாரும் வந்துட்டாங்களா? சரிப்பா, இதோ வரேன்! " என்று கைபேசியை அணைத்து விட்டு, " ஓகே ரிஷி, சீ யூ! பை! என்றவள்,கனிகாவிடம் ஒரு தலையாசைப்புடன் நகர்ந்து,லிஃப்ட்டை நோக்கி சென்றாள்!

அவள் போவதையே பார்திருந்த ரிஷி, அவள் உள்ளே செல்லுமுன் அவனை பார்த்த அந்த பார்வையை ஒரு நாளும் மறக்க முடியது!

இன்பாவின் பார்வையில் எத்தனை செய்திகள்? இது உண்மையா? அல்லது அவனது ஆசை கொண்ட மனதின எதிர்பார்ப்பா ? ஏனோ மனது முழுவதும் சொல்லாத் தெரியாத உணர்வில் பரபரத்தது! அவள் பின்னோடு சென்றுவிட துடித்த கால்களை சிரமப்பட்டு நிறுத்தி, திரும்பி கனிகாவுடன் நடந்தான் ரிஷி!

கனிகாவை ஷாப்பிங் செய்ய அனுப்பி விட்டு, அவன் ஒரு இருக்கையில் அமர்ந்துவிட்டான்! அவனது மனது இருக்கும் இருப்பில் அவளுக்கு உதவ முடியும் போல தோணவில்லை!

அவனை விட்டு விலகி வந்த இன்பாவிற்கு, உள்ளுர ஒருவித பதற்றம் உண்டாகியிருந்தது! அது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை! தனது பொருளை யாரும் பறித்துக்கொள்வேர்களோ என்று பயந்து கொள்ளும் குழந்தையின் மனநிலையில் இருந்தாள்!
 

Attachments

  • Picsart_24-05-04_15-06-13-739.jpg
    Picsart_24-05-04_15-06-13-739.jpg
    69.1 KB · Views: 9