திருமணத்திற்கு இன்னமும் இரண்டு தினங்கள் இருந்தது!
வசந்தனின் குடும்பத்தினர், மற்றும் அவர்களது உறவினர்கள் தங்குவதற்காக தனி பங்களா கொடுத்திருந்தார் தமிழரசன்! சுரேந்திரன் குடும்பத்தினர், பெண் வீட்டினர் என்பதால் தமிழரசனின் வீட்டில் தங்கியிருந்தனர்!
ஒரு புறம் திருமண வேலைகள், அனைத்தும் தமிழரசன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது! அவருடன் வரதனும் சேர்ந்து கொண்டார்!
ரிஷியும் வசந்தனும் குற்றால அருவிகளில் குளிப்பதும், நன்றாக சாப்பிடுவதும், அரட்டை அடிப்பதுமாக சுற்றுலாவிற்கு வந்தவர்கள் போல சுற்றிக் கொண்டிருந்தனர்!
இன்பாவிற்கும் அருவியில் சென்று குளிக்க ஆசையாக இருந்தது! அது மட்டும் இல்லாமல் ரிஷியை பார்க்கவும் நினைத்தாள்! நேரடியாக பேச முடியவிட்டாலும் பார்கவாவது செய்யலாமே! அவனும் அதைத்தான் கேட்டிருந்தான்! வீட்டில் பெண்களாக என்றாலும் தனியாக அனுப்ப மாட்டார்கள் என்பதால் ப்ரியனிடம் யோசனை கேட்டாள்!
ப்ரியரஞ்சனுக்கும் உள்ளூர வித்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை ! அவள் வந்தது முதலாக வெளியே எங்கேயும் வரவே இல்லை! அந்த பங்களாவிற்கு செல்ல அவனுக்கு தடை விதித்துவிட்டிருந்தார் செண்பகம்!
"நீ கட்டிக்கப் போற பிள்ளை தான்! ஆனால், பார்க்கிறவுக என்ன சொல்வாக தெரியுமா ரஞ்சி? இப்பவே மாப்பிள்ளை பொண்ணு பின்னாடி சுத்துறான் என்பார்கள்! அதுவும் நம்ம ஊரில் சின்ன விசயத்தை ஊதி பெரிசாக்கிறதுல எல்லாரும் பட்டமே வாங்கியிருக்கானுவ! தாலியை கட்டினப் பிறவு நீ அவள் முந்தானையை பிடிச்சுட்டு திரிஞ்சாலும் எனக்கு கவலை இல்லை! அதனால தான் சொல்லுதேன்! அந்தப் பக்கமாக போயிடாதே ரஞ்சி"
ப்ரியன் தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அந்தப் பக்கமாக போகாமல் இருந்தான்! அவளாக வெளியே எங்கானும் சென்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியை காணோம்! இப்போது இன்பா வந்து கேட்கவும், அவனுக்கு இதுதான் சரியான வாய்ப்பு என்று தோன்றியது!
அவன் நேராக தந்தையிடம் சென்றான்! இன்பாவின் மீது அவருக்கு தனி பிரியம் உண்டு! அவளுக்காக என்றால் தயங்க மாட்டார்!
"அப்பா, இங்கே வந்ததுல இருந்து இன்பா அருவிக்கு போக முடியலைன்னு வருத்தமாக இருக்கிறாள்! அவளோட சினேகிதி இது வரை குற்றாலம் வந்தது இல்லையாம்! கல்யாணம் முடிஞ்சதும் எல்லாரும் ஊருக்கு போகணும்னு கிளம்பிடுவாங்க! அப்புறமா எப்போ அருவிக்கு போக? என்று கேட்கிறாள்! நான் உங்ககிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்!"
"ஏன்டா, அவளுக்கு தான் அருவியில் குளிக்கிறது என்றால் நாள் பூராவும் பத்தாதுனு நமக்கு தெரியாதா? நான் தான் கல்யாண சோலியா ஓடித்திரியுறேன்! நீ தான் கூட்டிட்டு போகிறதுக்கு என்ன? நாளைக்கு, வெள்ளன வீட்டு பெண்டுகள் எல்லாரையும் அருவி கரைக்கு அழைச்சுட்டு போய்ட்டு பத்திரமா கூட்டிட்டு வா! என்னால வர முடியாது! சம்பந்தியும், சுரேந்திரனும் என்னோட கல்யாண வேலையா இருப்பாக, அதனால துணைக்கு,நீ உன்னோட வருங்கால மச்சானையும் கூட்டிக்கோடா! முக்கியமான விஷயம், நீயும் புது மாப்பிள்ளை! உனக்கு நலுங்கு வைக்கணும்னு அம்மா சொல்லிட்டு இருந்தாள்! அதால சாயங்காலம் 4மணிக்குள் எல்லாரும் வீட்டுக்கு வந்துடனும்!"
"அப்பா, அப்புறம் அத்தையும் வித்யாவும் அங்கே தனியா தானே இருப்பாங்க?" என்று இழுத்தான் ப்ரியன்!
தமிழரசனுக்கு சிரிப்பு வந்துவிட்டது! ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு, "மவனே எனக்கு உன் மனசு, புரியுது! ஆனால் அவள் கல்யாண பெண்! அருவி கரைக்கு எல்லாம் அவளை அழைச்சுட்டு போறது சரி இல்லைப்பா! ஒரு கண் போல ஒரு கண் இருக்காது! உன் அம்மா நிச்சயமா ஒத்துக்க மாட்டாள்! உன்னையே அனுப்புவாளா என்று எனக்கு கொஞ்சம் யோசனையா தான் இருக்கு!"
" அப்பா ப்ளீஸ், நீங்கதான் அம்மாக்கிட்டே பேசி அத்தையையும், வித்யாவையும் அனுப்பணும்!"
"எங்க காலத்தில் போன்ல கூட பேச முடியாது! அப்புறம் எங்கே பார்த்துக்கிறது? ஆமா நீங்க, இந்த காலத்து பசங்க, போன்ல எல்லாம் பேசிட்டு தானேடா இருக்கீங்க? அப்படியே வீடியோ காலும் பண்ணிக்கிறீங்க தானே? "
"ஐயோ அப்பா அதை ஏன் கேட்கிறீங்க? அத்தை படிச்சவங்க, உத்தியோகம் வேற பார்க்கிறாங்கனு தான் பேரு! வித்யா கூட பேசுறப்போ அவங்க கூடவே இருக்காங்க! சாப்பிட்டியா? தூங்கினியா? இதுக்கு மேல ஏதும் பேச வழியே இல்லை அப்பா! இதில் வீடியோ காலுக்கு எங்கே போறது? என்று ப்ரியன் அழாத குறையாக சொல்லவும்,
தமிழரசனுக்கு பவானியின் செய்கை ஆச்சரியமாக இருந்தது! கூடவே அதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை! அதுதான் கல்யாணம் ஆனபிறகு காலம் முழுக்க பேச போறாங்களே! இப்படியான இடைவெளி இருந்தால் தான், முதல் முறை தனிமையில் சந்திக்கும் போது இந்த ஆர்வம், தவிப்பு எல்லாம் இருந்தால் தானே சுவரசியமாக இருக்கும்!
அதை இப்போது பிள்ளையிடம் சொல்ல முடியாது ! ஆகவே,"ரஞ்சி, நம்ம ஊர் ரொம்ப சின்னது! இங்கே சில கட்டுப்பாடுகள் இருக்கு! நாம் அதை மீறிட முடியாது! அதனால இன்னும் இரண்டு நாள்தானே இருக்கு? அதுவரை நீ கொஞ்சம் பொறுத்துக்கொள்!"என்றார்.
அவர்கள் ஊர் பற்றி நன்கு அறிந்தவன் என்பதாலும், தந்தை சொல்வதில் அர்த்தம் இருக்கும் என்பதாலும், மேற்கொண்டு வாதாடும் விட்டுவிட்டான்! ஆயினும்"ஓகே அப்பா, புரியுது! ஆனால் நான் வித்யாவுடன்,போனிலாவது பேச வேண்டும், அத்தையையும் நாளைக்கு எங்ககூட வர வைங்க! பாட்டியை வித்யாவுக்கு துணையா அனுப்பி வச்சிடலாம்!" என்று தன் விருப்பத்தை சொன்னான்!
மகனுடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தமிழரசன் தகுந்த ஏற்பாடுகளை செய்வதாக வாக்களித்தார்!
🩷🩵🩷
அன்றிரவு தமிழரசன் மனைவியிடம் விஷயத்தை சொல்லவும், அந்தம்மாள், " என்னங்க நீங்க விவரம் புரியதவராக இருக்கீங்க, இந்த சமயத்தில, ரஞ்சியை ஏன் அருவி பக்கமாக அனுப்பனும் சொல்றீங்க? அவன் புது மாப்பிள்ளை , இரண்டு நாளில் கல்யாணத்தை வச்சுட்டு , வெளியில எல்லாம் அனுப்ப முடியாதுங்க, சம்பந்தியம்மா போறாங்கன்னா, அவங்க மகனை துணைக்கு அனுப்பிடலாம்! அதுலயும் ஒரு சிக்கல், சாந்தி, மகளை அவங்க கூட அனுப்ப சம்மதிப்பாளானு தெரியலை! நான் வீட்டை விட்டு நகரமுடியாது!"
"சாந்தியையும் கூட போகச் சொன்னால், அவள் மகளை அழைச்சிட்டு போயிடுவாள்! வசந்தன்கூட , அந்த பிள்ளை ரிஷியும் இருக்கிறான்! அதனால பிரச்சினை ஒன்றும் இல்லை! நாளைக்கு கட்டுச் சோறு மட்டும் , வழக்கம் போல, தயார் செய்து அனுப்பிடு செண்பா!" என்றார்
" அதெல்லாம் பண்ணிடுறேங்க!
பட்டணத்தில் இருக்கிற பிள்ளைகளுக்கு அருவிக்கரையும், கட்டுச் சாதம் ருசியும் எங்கே கிடைக்கப் போகுது? ப்ரியன்கிட்டே கன்டிசனா போகக்கூடாதுன்னு சொல்லிடுங்க அத்தான்!"
"நானே சொல்லிட்டேன் செண்பா! உன்கிட்டே சும்மா கேட்டுப் பார்த்தேன் ! அவ்வளவுதான்! சரி நாளைக்கு காலையில் வெளியே போகணும் !" என்றவாறு மனைவியின் முறைப்பை தவிர்க்க, அவசரமாக கண்களை மூடிக் கொண்டார்!
செண்பகம் நமட்டு சிரிப்புடன் சென்று படுத்துக்கொண்டார்!
🩵🩷🩵
மறுநாள்
பவானி, வசந்தன்,சாந்தி, இன்பா, நிகிலா நான்கு பேரும் அவரவர் பைகளுடன் தயாராக நின்ற தமிழரசன் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் ஏறிக்கொண்டனர்!
நம்பகமான ஓட்டுநர், வண்டியை செலுத்தினார்! வழியில் ரிஷியும் ஏறிக் கொண்டான்!
பவானிக்கு ரிஷியின் மீது தனிப் பிரியம் உண்டு! பணக்காரன் என்ற பெருமையோ, கர்வமோ என்றும் காட்டியதில்லை! அவர்கள் வீட்டுப் பிள்ளை போல பழகுவான்! வெகு நாட்கள் கழித்து, அவனை பார்த்ததும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்!
"ரிஷி, எப்படிப்பா இருக்கிறே? ரொம்ப நாளாச்சு உன்னை நேரில் பார்த்து!"
"நான் நல்லா இருக்கிறேன் ஆன்ட்டி! எனக்கும் உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ! அங்கிள் நம்ம கூட வருவார் என்று நினைச்சேன்!"
"கல்யாண வேலையாக போயிருக்காங்க! இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிறே? நீ கோவையில் இருக்கிறேனு வசந்த் சொன்னான்! இப்பவும் அங்கேதான்
இருக்கிறாயா?"
"கான்ட்ராக்ட் முடிஞ்சது ஆன்ட்டி, இனி சென்னையில் தான்! அப்பாவுக்கு ஏற்கனவே வேலை பிரஷர் அதிகமாகிட்டு! அதான் நான் கூட இருந்து பார்த்துக்கலாம்னு இருக்கிறேன்!"
"நல்ல முடிவு தான்! வசந்த்துக்கு இன்னும் ஒரு வருஷம் கான்ட்ராக்ட் இருக்கு ! அதை முடிச்சதும் இங்கேயே ஒரு வேலையை தேடிக்க சொன்னேன்! அவன் கேட்கிறாப்ல இல்லை! அவனுக்கும் வயசாகுது, வித்யா கல்யாணம் முடிஞ்சதும் , அடுத்து அவனுக்கும் முடிச்சுடணும்னு நினைக்கிறோம்! என்றவர் "ஆமா, நீ எப்போ கல்யாண சாப்பாடு போடப்போறே? உனக்கு எந்த பொறுப்பும் இல்லையே! சீக்கிரமாக பண்ணிக்கிறதுதானே? உனக்கு ஆகிட்டா, இவனும் சரின்னுடுவான்ல!"
"பலே ஆள்தான் ஆன்ட்டி நீங்க!"என்று சிரித்த ரிஷி, நான் இப்போதைக்கு அப்பாவோட தொழிலை கவனிக்கணும் ஆன்ட்டி! அப்படியே எனக்குன்னு தனியா ஒரு தொழிலை சொந்தமா ஆரம்பிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு! அது நிறைவேறிட்டா உடனே கல்யாணம் தான்!"
"ஏன் ரிஷி, உன் அப்பாவுக்கு இருக்கிற ஏகப்பட்ட தொழில்களில் ஒன்றை எடுத்து நடத்தலாமே? தனியா எதுக்கு ஒரு தொழில்? அந்த பணம் அப்பாவிடம் இருந்து வாங்கிறதுதானே?"
"இல்லை ஆன்ட்டி இது ,என் சொந்த பணத்தில் , அதாவது நான், நாலு வருசம் வேலை பார்த்து சேர்ந்து வைத்தது! இதை வச்சு வங்கியில் கடன் வாங்கி செய்யலாம்னு இருக்கிறேன்! இதை அப்பாக்கிட்டே கூட நான் சொல்லவில்லை! எல்லாம் முடிஞ்சப் பிறகு தான், அவருக்கு சர்ப்ரைஸா சொல்லணும்னு இருக்கிறேன்! "
பவானிக்கு மட்டுமல்ல, சாந்திக்கும் ரிஷியின் தன்னம்பிக்கை அவ்வளவு பிடித்துப் போயிற்று ! அப்பாவின் காசில் வாழும் பிள்ளைகளுக்கு மத்தியில் ரிஷி தனித்து தெரிந்தான்!
சாந்திக்கு ஏனோ, அவனது தோற்றமும் பேச்சும், மனதில் தானாக அந்த ஆசையை தோற்றுவித்தது ! இன்பாவிற்கு இவன் ரொம்ப பொருத்தமாக இருப்பான் ! இந்த கல்யாணம் முடிந்த கையோடு வீட்டில் இது பற்றி பேசி முடிவு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்!
"உண்மையில் தம்பி, உங்களுடைய இந்த தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது! நீங்க அமோகமா இருப்பீங்க!" என்று சாந்தி மனதார வாழ்த்தினார்!
அத்தனை நேரமும் அங்கே உடன் இருந்து இந்த பேச்சுக்களை கேட்டிருந்த இன்பாவிற்கு சிறகு இல்லாமல் வானத்தில் பறப்பதான ஒருவித பரவசம் உண்டாயிற்று! ரிஷியின் நிலையோ, பழம் நழுவி பாலில் விழுந்தது போல, அவன் மீதான ஒரு நல்ல அபிப்பிராயம் பெண்ணை பெற்றவரிடம் உண்டாகிறது என்றால் என்ன அர்த்தம்? அவனுக்கு தன் காதலுக்கு போராடும் அவசியம் ஏற்படாது என்று தோன்றியது!
"முதலாளி, உங்க கம்பெனியில் எனக்கும் ஒரை வேலை போட்டு கொடுப்பீங்களா ?"என்று வசந்தன் கேலியில் இறங்க, அந்த இடம் கலகலப்பாயிற்று!
மனிதன் எத்தனை திட்டங்களை போட்டாலும் , இறைவனின் திட்டம் தான் ஜெயிக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணர வேண்டியிருக்கிறது!
🩵
58. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!
இன்பாவும், நிகிலாவும் பார்வையில் தங்கள் இணைகளை தொடர்ந்தனரே தவிர,பேச முயற்சிக்கவில்லை! ஆண்கள் இருவருக்கும் அதுவே போதுமானதாக இருந்தது! அவர்களுக்குள் புரிதல் இருந்தது!
பொதுவாக வயது பெண்கள் உடன் வந்திருக்கும் போது இளைஞர்கள் அவர்களிடம் பேசத்தான் வாய்ப்பை தேடுவார்கள்! ஆனால் அப்படி இல்லாமல் அவர்கள் தங்களுக்குள் கலாய்த்து காலைவாரி என்று கலகலப்பாக இருந்தார்கள்! பெரியவர்கள் இருவருக்கும் கூட அது கருத்தில் படத்தான் செய்தது!
பெண்களை முன்னால் நடக்க விட்டு சற்று பின்தங்கியே இரு ஆண்களும் வந்தார்கள்!
பெற்றவராக பவானிக்கு அவர் மகனின் மீது பெருமிதமாக இருந்தது! அதே போல அவர் நிகிலாவை கவனித்த விதத்தில், இந்த காலத்தில் மருத்துவம் படிப்பு படித்தும் அதற்கான எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் சாந்தமாக இருந்தவளை அவருக்கு பிடித்திருந்தது! இன்பா,நிகிலா இருவரின் உடையும் கூட பாந்தமாகவே இருந்தது!
குற்றாலத்திற்கு சென்று சேர்ந்தபோது கூட்டம் அவ்வளவாக இருக்கவில்லை! இரண்டு அருவிகளில் ஆசை தீர குளித்து விட்டு மதியம், செண்பகம் கட்டிக்கோடுத்த சாப்பாட்டை எல்லாரும் ஒரு கை பார்த்தனர்! சாப்பிடும் போது குரங்குகள் குறுக்கிடும் என்று ஓட்டுனர் சொன்னதால் அனைவரும் வண்டிக்கு உள்ளாக அமர்ந்து தட்டுகளில் ஒருவருக்கு ஒருவர் பரிமாறி இயல்பாக சாப்பிட்டனர்!
தட்பவெப்ப நிலை இதமாக இருந்தது! அவ்வப்போது வெயில் வருவதும் போவதுமாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது! ஆனாலும் ஈரத்துணிகள் சடுதியில் காய்ந்து போனது! நிகிலாவுக்கு, பவானி தலை பின்னிவிட்டார்! அவளைப் பற்றி சாந்தி மூலம் அறிந்திருந்தார்! ரிஷி ஒருவிதத்தில் பாவம் என்றால் இவள் இன்னொரு விதத்தில் பாவம் தான், என்று நினைத்தார்! தாயில்லாமல் வளர்ந்த பெண் என்பதாலேயே அவள் மீது அவருக்கு ஒரு வாத்சல்யம் உண்டாயிற்று! கூடவே,அவருக்கு ரிஷியின் பெற்றோர் நினைவு வந்தது, திருமணத்தில் கலந்து கொள்ள வருவார்களா என்று தெரிந்து கொள்ள ரிஷியிடம், "ஆமா ரிஷி, உன்னோட வீட்டில் இருந்து, நாளைக்கு யாரெல்லாம் வர்றங்க?" விசாரித்தார்!
பவானிக்கு, எப்போதுமே ரிஷியின் மாற்றாந்தாய் அனிதாவை கண்டால் ஆகாது! அதற்காகவே அவர் வீட்டில் நடக்கும் எந்த விசேஷம் என்றாலும், வசந்தனை மட்டும் அனுப்பிவிடுவார்! அவர்களும் மகன்களை மட்டும் அனுப்பிவிடுவார்கள்! ஆனால், இது மற்ற விசேஷம் போல இல்லை! திருமணம்! இதில் அந்தம்மாள் கலந்து கொள்ள வரலாம், நினைக்கும்போதே சற்று சங்கடமாக உணர்ந்தார்! உள்ளூர, அவனது பெற்றோர் வராமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது! அது தவறு என்றாலும் அவர்கள் செய்திருந்த அந்த காரியம் இன்னும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை!
"யாரும் வரவில்லை ஆன்ட்டி!" என்ற ரிஷி, விவரம் சொன்னான்!
"அப்பாடா" என்று நினைத்துக்கொண்டர் பவானி! ஆனால் அதை காட்டிகொள்ளாமல், "ரகு, வருவான் என்று நான் ரொம்ப எதிர்பார்த்தேன்!" என்றார்.
"நானும் அப்படித்தான் நினச்சேன் ஆன்ட்டி! ஆனால் பாருங்க, கிளம்பும் போது, போய்ட்டு வரேன்னு சொல்றான்! அந்த நேரத்துல அவனை, என்ன சொல்லி என்ன பயன்?இன்னும் அவன் சின்ன பையன் தான் ஆன்ட்டி ! சென்னை தவிர்த்து வேறு எங்கயும் அவனுக்கு பழக்கம் இல்லை ஆன்ட்டி! அப்படி அவன் போனதே, ஸ்கூல், காலேஜ் tours மட்டும் தான்! But, northside பாஷை தெரியாத ஊருக்கு போனால், திடீர்னு,ஏதும் பிரச்சனை என்றால் சமாளிக்கிற அளவுக்கு அவனுக்கு திறமை கிடையாது! அதனால தான் நான் ஏற்கனவே போக வேண்டாம்னு சொல்லி இருந்தேன், அதையும் மீறி, அவனை அனுப்பி விட்டுட்டாங்க! அது பத்தி, அம்மாகிட்டே கேட்டால், "உன்னையும் தான், முன்னே பின்னே தெரியாத வெளிநாட்டுக்கு அனுப்பினோம், நீ உலகத்தை புரிஞ்சுக்கிட்டு வரலையா? அதே போல, அவனும் உலகத்தை புரிஞ்சுக்கணும் தானே? போய்ட்டு வரட்டும்னு
சொல்றாங்க! அவங்களும் வெளிநாடு கிளம்பறதில் மும்முரமாக இருந்தாங்க, அதனால நானும் அழுத்தி ஏதும் கேட்கலை!"
"அவங்களுக்கு தெரியாததா? எல்லாம் யோசிச்சு தான் முடிவு பண்ணியிருப்பாங்க! நீ வீணாக அவங்களுக்கு சேர்த்து, நீ வந்திருக்கியே அதுவே போதும்!" என்றார் பவானி!
ஆனால் அவனும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள மாட்டான் என்பதை ரிஷி உட்பட யாரும் அப்போது அறியவில்லை!
குற்றாலதில், இதற்கு முன்பும் இன்பா குளிக்க வந்திருக்கிறாள் தான்! அதெல்லாம் விட இந்த முறை, ரிஷியுடன்,வந்தது தான் மறக்க முடியாத நிகழ்வாக மனதில் பதிந்து போனது!
ஒருவாறு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி எடுத்துக் கொண்டு, கடைத் தெருவுக்கு சென்றனர்! மங்குஸ்தான், போன்ற அரிய வகை பழங்களை வாங்கிக் கொண்டவர்கள், இளம்பெண்களுக்கு உரிய ஆசையாக, கண்ணாடி வளையல்களை வாங்கி அடுக்கிக் கொண்டனர்! இன்னும் சில பொருட்களையும் வாங்கினர்!
பவானியும் சாந்தியும் எவ்வளவோ மறுத்தும், பிடிவாதமாக," அப்படின்னா என்னை வெளி ஆளாகத்தான் பார்க்கிறீங்களா?" என்ற ஒற்றை கேள்வியில் அவர்களின் வாயை அடைத்து விட்டு, அனைத்திற்கும், ரிஷியே முன்வந்து பணம் செலுத்தினான்!
மாலையில் இரு வீட்டிலும், நலுங்கு வைக்கும் வைபவம் இருப்பதால் மூன்று மணிக்கு, அனைவரும் மனமின்றியே வீடு திரும்பினர்!
வீடு வந்ததும், இன்பாவின் கைபேசிக்கு அந்த தகவல் வந்தது! திருமண நாளுக்கு முன் தினம் வருவதாக இருந்த சாருபாலாவுக்கு, ஏதோ அவசர வேலை வந்துவிட்டதால் பயணத்தை தள்ளி போட்டிருப்பதாக தகவல் அனுப்பியிருந்தார்! அவர் வராதது இன்பாவுக்கு மிகுந்த வருத்தமளித்தது! இந்த கல்யாண சாக்கில் ரிஷி அவருக்கு அறிமுகம் ஆகிவிட்டால் பின்னால் அவளது காதலைப் பற்றிச் சொல்ல ஏதுவாக இருக்கும் என்று நினைத்திருந்தாள்! இப்போது அதற்கு வழியின்றி போனதில் வருத்தமடைந்தாள்!
🩷🩵🩷
ஹோட்டல்!
திருமணத்திற்கு முன் தினம், மாலை தொடங்கிய போதே ரிஷிக்கு, குளிர் ஜுரம் வந்துவிட்டது! வசந்த் நிச்சயதார்த்தம் விழாவில் மும்முரமாக இருப்பான் என்று தெரியும்! அதனால், அவன் ஹோட்டல், வரவேற்பில் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிக்க, மானேஜர் அவனது அறைக்கு வந்து பார்த்துவிட்டு, ஹோட்டல் டாக்டரை, அழைத்து பார்க்க சொன்னார்!
அவரோ முதல் உதவி செய்துவிட்டு உடனடியாக, அவனை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பணித்தார்!
பணியாளர்களின் உதவியோடு, அவனை கொண்டு போய் பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, ஒரு வேலையாளையும் துணைக்கு இறுத்திவிட்டு மேனேஜர் திரும்பினார் !
நேரம் ஆக,ஆக ரிஷிக்கு ஜூரம் குறைவதாக காணோம்! மருத்துவர், சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள செய்து, அவனுக்கு தூங்குவதற்கு ஊசிபோட்டுவிட்டு சென்றார்!
விடிந்தால் திருமணம், முன்இரவு நிச்சயதார்த்தம் வைத்திருந்தனர்!
வசந்தன் ரிஷியை எதிர்பார்த்தபடி வேலைகளில் ஈடுபட்டிருந்தான்! ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நடக்க ஆரம்பித்தும் அவன் வரவில்லை என்றதும் அவனது கைப்பேசிக்கு அழைக்க அது, எடுப்பார் இல்லாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது! அவனுக்கு என்னவோ என்று பதறிப்போனவனாக, அந்த ஹோட்டலின் எண்ணிற்கு அழைத்து விசாரித்தான்! அப்போதுதான் விஷயம் தெரிய வந்தது! ஆனால் உடனடியாக அங்கே செல்ல முடியாதபடிக்கு இங்கே பந்தி விசாரிப்பில் நிற்க வேண்டிய கட்டாயம்! எல்லாம் முடிந்து நெருங்கிய உறவுகள் மட்டும் என்றான பிறகு, வசந்தன் அன்னையிடம் விவரம் சொல்லிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றான்! அங்கே ரிஷி மருந்தின் உபயத்தில் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்!
மருத்துவர், தனக்கு சில சந்தேகம் இருப்பதாகவும், காலையில் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் எதையும் தீர்மானிக்க முடியும் என்றார்! அதனால் இப்போது யாரும் துணையிருக்க தேவை இல்லை, என்று அவனை அனுப்பி வைத்தார்!
இன்பசுரபியும் மாலையில் ரிஷியின் வரவை, மிகவும் எதிர்பார்த்து இருந்தாள்! சடங்குகள் நடக்க திடங்கிய பிறகும், அவன் வரவில்லை என்றதும் தொடர்பு கொள்ள முயன்றாள்! ஆனால் அவன் கைபேசி எடுக்கப்படவில்லை! அப்போதே அவளுக்கு சற்று கவலை பிடித்துக்கொண்டது! அதை கட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருக்க முயன்றாள்! நிச்சய விழா முடியவும், தலை வலி என்று அன்னையிடம் சொல்லிவிட்டு, அவர்களுக்கான அறைக்கு வந்துவிட்டாள்! அங்கும் நிகிலா தட்டில் உணவோடு வந்து, "ஆன்ட்டி, கொடுத்துவிதாங்கப்பா, சாப்பிட்டு, அப்புறம் மாத்திரை போட சொன்னாங்க " என்று வைத்துவிட்டு சென்றாள்! ரிஷிக்கு voice msg அனுப்பிவைத்த பின்னர் உணவை வீணாக்க கூடாது என்று வேறு வழியின்றி சாப்பிட்டாள்! உண்மையில் தலையை வலிக்க ஆரம்பிக்க அப்படியே படுத்து விட்டாள்!
இரவில் விழிப்பு வரவும், எழுந்தமர்ந்தாள்! அவளது அன்னையும் தோழியும், அடுத்தடுத்து, தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்! கைபேசியை பார்த்தாள்! ரிஷியிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை! மீண்டும் ஒரு முறை,ரிஷியை தொடர்பு கொள்ள முயன்றால், அவனது கைபேசி எடுக்கப்படாமல் போகவே, கவலைக்குள்ளானாள்!வசந்தனிடம் இன்னும் சரியாக பேசிப் பழகவில்லை! ஆகவே வேறு யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவும் வழி இல்லாமல் தவித்தாள்! அதனால், அதன் பிறகு அவளால் சரியாக உறங்கவும் முடியவில்லை!
காலையில் அன்னை எழுப்பிவிட்டு, குளித்து, உடுத்தி இயந்திர கதியில், திருமண நிகழ்வில் கலந்து கொண்ட போதும், அவளால் முழுமனதாக அதில் ஒன்ற முடியவில்லை! ப்ரியன், ஒரு நல்ல சகோதரனாக அவளிடம் பாசம் வைத்திருப்பவன்! அவனது சந்தோஷத்தில் பங்கு கொள்வது அவளது கடமை என்பதால்,முயன்று கல்யாண சடங்குகளில் கவனம் செலுத்தினாள்!
பிரம்ம முகூர்த்ததில் ப்ரியரஞ்சனுக்கும் - வித்யாவுக்கும் எந்த வித தடங்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வெகு, விமரிசையாக திருமணம் நடந்தேறியது! மணமக்கள் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்குவாதற்காக எழுந்தனர்!
அதிசயமாக திருமணத்தில் கலந்து கொள்ள நிகிலாவின் தந்தை மதன் வந்திருந்தார்! அவர் முன்னிரவில் வந்துவிட்டார்! ப்ரியனின் ரிசார்ட்டில் தான் தமிழரசன் அவரை தங்க வைத்திருந்தார்!
வசந்தன் அவ்வப்போது இன்பாவை தான் கவனித்துக் கொண்டிருந்தான்! அவனுக்கு, அவளது மனநிலை புரிந்தது! ஆனால், நிகிலாவிடம் அவள் இன்னும் தனது காதல் பற்றி சொல்லாத நிலையில், அவனால் நிகிலாவிடம், ரிஷியை பற்றி சொல்லி,இன்பாவிடம் தெரிவிக்க முடியது! எப்படியும் அவனாக தான் ஒரு வழியை கண்டுபிடித்தாக வேண்டும்!" என்று நினைத்தான்.
இன்பவிடம் விஷயத்தை சொல்ல, வசந்தன், சரியான தருணத்தை
எதிர்பார்த்திருந்தான்.