• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

63 & 64. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
நான்கு தினங்களுக்கு பிறகு ரிஷியின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது!

வரதனும், பவானியும் அவரவர் பணிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்! வசந்தன் நண்பனுடன் இருந்து பார்த்துக் கொண்டான்!

ரிஷியும் இன்பாவும் தினமும் செயலியின் மூலமாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்! அவளது அத்தை வருவதற்கு முன்பாக அவனிடம் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்தாள். சாருபாலா வந்து விட்டால், இந்த கைப்பேசி வழியாக கூட தகவலை பரிமாறுவது சற்று சிரமம் தான்! காதலைப் பற்றி அறிந்தால் கோபம் கொள்வது திண்ணம்! அவரது சொல் தான் அவளுக்கு வேதமாக இருந்து வந்திருக்கின்றது! இனியும் அப்படித்தான்! ஆனாலும் அதற்காக அவளால் ரிஷி இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது!

அன்றுவரை சென்னையில் இருக்கும் போது, அவள் சட்டென்று வெளியே எங்கேயும் தனியாக கிளம்பிவிட முடியாது! அப்படி போக வேண்டும் என்றால் கோவிலுக்கு திலகத்துடன் போகலாம்! சுரேந்திரனுடன் கடைகளுக்கு போய் வருவாள்! இப்போது வீட்டில் வேலைக்கு ஆள் இருப்பதால் அதுவும் போவதில்லை!

வசந்தனுடன், இப்போது சுமூகமாக பேசிப் பழகியிருப்பதால், ரிஷிக்கு உடம்புக்கு முடியாத இந்த சமயத்தில் அவனால் பேச முடியாத நிலையில் வசந்தன் தான் அவளுக்கு பாலமாக இருந்தான்!
எப்போது என்ன உதவி என்றாலும், தயங்காமல் கேட்க சொல்லியிருந்தான்!

ரிஷி, இயல்புக்கு வந்த பிறகு, போனில் இருவரும் பேசிக் கொள்கிறார்கள்! அவனிடம் தன் விருப்பத்தை சொல்லவும்,ஏதாவது ஐடியா பண்ணுவதாக தெரிவித்தான்!

ஆனால் ஒன்றும் சரியாக அமையக்காணோம்!

"என்னடா ரொம்ப தீவிரமாக யோசிச்சுட்டே இருக்கிறே? நானும் இரண்டு நாளா பார்க்கிறேன்! என்ன விஷயம் என்று என்கிட்டே சொல்லு! " என்றான் வசந்தன்.

ரிஷி விவரம் சொல்ல, "ம்ம்.. இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான்டா! எனக்கும் என் ஆளை பார்க்கணும்னு தான் இருக்கு! ஆனால் அவள் பயந்து சாகிறாள்!
நமக்கு பொதுவான ஒரு விழா, வைபவம் என்று இருந்தால் கலந்து கொள்வதில் சிரமம் இல்லை! சரி, ஃபிரியா விடு மச்சான் பார்த்துக்கலாம்!" என்று வசந்தன் டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்துவிட்டான்!

இன்னும் நான்கு நாளில் சாரு வருகிறார் என்ற நிலையில், இன்பாவுக்கு தான் ரத்த அழுத்தம் எகிறியது! மனம் நிலை கொள்ளாமல் தவித்தாள்!

அன்று மாலையில் நண்பர்கள் இருவரும், பீச்சிற்கு சென்று வரலாம் என்று கிளம்பினார்கள்!
அப்போது, நண்பன் அசோக்கிடம் இருந்து ரிஷிக்கு கைப்பேசி அழைப்பு வந்தது!

"ஹாய், அசோக் எப்படி இருக்கிறே? பிஸினஸ் மேன் ஆகிட்டியாமே, வாழ்த்துகள்! "என்றான் ரிஷி உண்மையான சந்தோஷத்துடன்!

" பிஸினஸ் மேன் தான்! ஆனாலும் இன்னும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியலையேடா!"

" நீ முயற்சி பண்ணுடா, உன்னால நிச்சயமாக முடியும்!"

" ம்ம், அதெல்லாம் பண்றேன் ரிஷி! ஆனால்.. சரி அது எப்போ முடியுதோ அப்போ பார்த்துக்கலாம்! இப்ப நீ எங்கே இருக்கிறாய்?
கோவையில் தானா?

"நான் சென்னையில் தான் இருக்கிறேன்! நாம பேசி ரொம்ப நாளாச்சு! வீட்டில் எல்லாரும் நலமா?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க! இப்ப உன்னை எதுக்கு கூப்பிட்டேன் என்றால், எனக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு! அதுக்கு ட்ரீட் கொடுக்கிறேன்டா, ஈசிஆர் ரோட்டில் இருக்கிற ஒரு ஃபைவ் ஹோட்டலில் நாளைக்கு மறுநாள், சாயந்திரம், பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கிறேன்! அவசியம் நீ வரணும்டா! என்றவன், தொடர்ந்து "வசந்தன் இங்கேதான் இருக்கானா ? இல்லை வெளிநாடு திரும்பப் போயிட்டானா?

"வாழ்த்துகள் அசோக்! வசந்தன்இங்கே தான் இருக்கிறான்!"

அவனோட சிஸ்டர் கல்யாணத்திற்கு போக முடியலை ! நீ போயிருப்பேனு தெரியும்! அவன்கிட்டே பேசணும், ஃபாரின் போன பிறகு, பேசவே இல்லையா? அவன் நம்பர் என்கிட்டே இல்லை, நீ கொஞ்சம் அனுப்பி வை, அவனையும் அழைக்கணும்!"

"நானும், கல்யாணத்துக்கு போகலைடா! எனக்கு உடம்புக்கு முடியலை! இப்பத்தான் கொஞ்சம் பரவாயில்லை! ஒரு நிமிஷம் பொறு, இந்தா வசந்தன்கிட்டே பேசு,"என்று கைப்பேசியை நண்பனிடம் தந்துவிட்டான்.

"ஹலோ வசந்த்,வெரி, சாரிடா வசந்த்! அந்த நேரம் அவசரமாக ஒரு வியாபார விஷயமா வெளிநாடு போக வேண்டியதாகிட்டுது! "

"இட்ஸ் ஓகேடா! இங்கே ரிசப்ஷன் வைக்கும்போது கலந்துக்கோ!"

"ஓ ! ஷ்யூர்டா! சரி, கல்யாணம் முடிவாகியிருக்கு,அதுக்காக பார்ட்டி வச்சிருக்கிறேன்! லோகேஷன் அனுப்புகிறேன், நீயும், ரிஷியும் கண்டிப்பாக வந்துடுங்க!"

"அட்வான்ஸ் வாழ்த்துகள் அசோக்! பார்ட்டியில் சந்திப்போம்!"

கைப்பேசியை அனைத்துவிட்டு, ரிஷியை பார்த்தான் வசந்தன்!

அவன் ஏதோ யோசனையில் இருந்தான்!

"என்ன மச்சான்? பார்ட்டிக்கு போகலாமா? வேண்டாமா? "

"போகலாம்டா, எனக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்! ஆனால், நான் அது பத்தி யோசிக்கவில்லை! இன்பாவோட, அத்தை வர்றதுக்கு முன்னாடி என்னை சந்திச்சு பேசணும்னு சொன்னாள்! எனக்கும் அவளை சந்திக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு! "

"ஆமா, காலையிலும் இதைத்தானே சொன்னே? நானும் யோசிச்சேன்! ஏதாவது மாலில் மீட் பண்ணிக்கலாம்டா!"

"மாலில் நிறைய பேர் வருவாங்கடா, யாராவது தெரிஞ்சவங்க பார்த்துட்டா வம்பாகிடும்டா!"

"அப்படின்னா, எங்க வீட்டுக்கு வரச் சொல்லுவோம்! ஆனால் வீட்டில் மாலுக்கு போவதாக சொல்லிவிட்டு வரட்டும்!"

"உங்க வீட்டுப் பக்கத்தில இருக்கிறவங்க பார்த்து, உங்க அம்மாகிட்டே விசாரிக்க மாட்டாங்களாடா?"

"அடேய்..! என்று பல்லை கடித்தான் வசந்தன்!

"ஏன்டா கோவிச்சுக்கிறே? உள்ளதைத்தானே சொன்னேன்? எனக்கு அடைக்கலம் கொடுத்து, அதனால உங்க குடும்பத்துக்கு ஏதும் கெடுதல் வந்துட கூடாதுல்ல?"

நண்பனை தோளோடு அணைத்துக் கொண்டான் வசந்தன்! சில கணங்கள் அங்கே அமைதி நிலவியது.

"உனக்கே இவ்வளவு எச்சரிக்கை உணர்வு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்? அதெல்லாம் மேட்டரே இல்லைடா! வித்யா பிரண்ட்ஸ் அப்பப்போ வீட்டுக்கு வந்துட்டு போவாங்க, அதுல முஸ்லீம் சிநேகிதிகளும் உண்டு! அவர்களை எனக்கும் நன்கு பழக்கம் தான்! வரவேற்பில் கலந்து கொள்ள வருவாங்க! அப்போ உனக்கு காட்டுறேன்! இப்ப அவங்க பெயரை நாம யூஸ் பண்ணிக்கப் போறோம்! அவங்ககிட்டேயும் விஷயத்தை சொல்லிட்டா, பின்னாடி எந்த பிரச்சினையும் வராது! பிளான் ஓகே வா!"


" டபுள் ஓகே மாப்பிள்ளை! நான் இப்பவே இன்பாவுக்கு தகவல் சொல்லிடுறேன், என்றவன், " ஆமா, அவங்க கருப்பா ஒரு அங்கி போடுவாங்களே? அதுக்கு எங்கேடா போறது?"

" சந்தேகத்துக்கு பிறந்தவனே! அதை யோசிக்க மாட்டேனாடா? நான் அதெல்லாம் பார்த்துக்கிறேன்! நீ தயவு செய்து மேலே, மேலே கேள்வி கேட்டு என்னை கடுப்பாக்காதே, சரி நீ வா, உன்னை வீட்டுல விட்டுட்டு,நான் அந்த பொண்ணை பார்த்துப் பேசிட்டு வர்றேன்! அம்மாக்கிட்டே எதையும் உளறிடாதேடா!" என்று வசந்தன் நண்பனுடன் வீட்டிற்கு பயணமானான்!

🩵🧡🩵

இன்பாவுக்கு சற்று பதற்றமாக இருந்தது! எப்படி வீட்டில் சொல்லிவிட்டு கிளம்புவது என்று யோசனை உண்டாயிற்று! இன்னொரு புறம், உள்ளூர ஆவலாக இருந்தது!

ரிஷி சொல்லும்போது வெகு எளிதாக தெரிந்த விஷயம், இப்போது ஏதும் சிக்கலாகி விட்டால் என்ன செய்வது என்று பயம் தோன்றியது!

காதலும் பொய்யும் சேர்ந்தே பிறந்த இரட்டையர்கள் என்பது போல காதலிப்பவர்கள் பொய்யை துணைக்கழைத்து தான் தீரவேண்டியிருக்கிறது! மெய் சொன்னால் பெற்றோர் சம்மதிப்பதில்லையே! வசந்தனின் வீட்டிற்கு இடையில் குடும்பத்துடன் இரண்டு தடவை போய் வந்திருக்கிறாள் தான்! ஆனால் ஏனென்று தெரியவில்லை! இந்த முறை செல்வது ஏனோ செய்யக்கூடாததை செய்யப் போவதைப் போலவே ஒரு கலக்கம்! ஒரு வகையில் உண்மையும் அதுதான்! பெற்றோரிடம் அவள் பொய் சொல்லும் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை! இது முதல் முறை என்பதால் இந்த பதற்றம் போலும், என்று நினைத்தாள்!

"என்னடாம்மா ரொம்ப நேரமா ஏதோ யோசனையா உட்கார்ந்திருக்கிறே? திலகம் தான் அவளிடம் வந்து அமர்ந்து கேட்டார்!

"அதுவா பாட்டி , அத்தை வர்றாங்களே! அவங்களுக்கு ஏதாவது பரிசு வாங்கி தரலாமான்னு யோசிக்கிறேன்!" வாயில் வந்ததை சொன்னாள்!

"உன் அத்தையோட, உடையும், தோற்றமும் ஒரு சாமியார் மாதிரி மாற்றிக் கொண்டிருக்கிறாள் ! அவள் உடுத்தறது எல்லாம், வெளுத்த நிறம்தான்! அவளோட நிறத்துக்கும் அழகுக்கும் அழுத்தமான நிறங்கள் அணிந்தால் அவ்வளவு அம்சமாக இருக்கும்! நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள், ஒரு சின்ன சிரிப்புடன், வேறு பேச்சுக்கு திருப்பி விடுவாள்! அது சரி, இப்ப நீ எதை வாங்கிக் கொடுக்கப் போறே?"

"பாட்டி, நானும் அத்தையைப் பத்தி கேட்கணும்னு நினைப்பேன்! பெரியவங்க பேச்சு என்று கேட்காமல் விட்டுவிடுவேன்! ஆனால் இப்ப நான் குழந்தை இல்லை! ஒரு டாக்டர் ஆகிவிட்டேன்!
இப்ப என்கிட்டே சொல்லுங்க, அத்தை ஏன் கல்யாணம் பண்ணிக்கவே இல்லை? காதல் என்றால் அவங்களுக்கு கோபம் அப்படி வருது! என்ன பாட்டி ஏன் என்னை அப்படி பார்க்ககறீங்க? ஓ அத்தை கோபப்பட்டது பத்தி எனக்கு எப்படி தெரியும்னு கேட்கிறீர்களா? அது முகநூலில் பார்த்திருக்கிறேன்! யாராவது உருகி காதல் ஸ்டேடஸ் போட்டால் கமெண்ட்ஸ்ல அட்வைஸ் மழை பொழிஞ்சிருவாங்க! அதைப் பார்த்துதான் தெரியும்! ம் சொல்லுங்க பாட்டி!"

"அப்ப உன் அத்தைக்கு பரிசு வாங்க நீ போகலையா?" என்றார் திலகம் ஒரு மாதிரி குரலில்!

" போகணும் பாட்டி! மாலுக்கு தான் போகணும்! அம்மா என்ன சொல்வாங்க தெரியலை! என்றவள் "ஹே.. பாட்டி பேச்சை முத்தப் பார்க்கிறீங்களா? அதுதான் நடக்காது! எனக்கு எல்லாம் சொல்லுங்க! ஆனால் சுருக்கமாக சொல்லுங்க!" என்றாள்!

"எனக்கு உன் தாத்தா, சொன்னது தான் தெரியும்! நான் உன் அத்தைக்கிட்டே கேட்டது இல்லை!
உனக்கு எப்படி சொல்றது என்று தெரியலை இன்பா, என்று சிலகணங்கள் யோசனையாய் இருந்தவர், "உன் அத்தையோட ரகசியம் இது! அவள் வரும்போது நீயே கேட்டு தெரிந்து கொள்! இப்பவே மணி பத்தாகப் போகுது, நீ சீக்கிரமாக போயிட்டு, சாப்பிட மதியம் வீட்டுக்கு வந்துடு, நான் போய் கொஞ்சம் படுக்கிறேன்!" என்றவர் நில்லாது சென்றுவிட்டார்!

இன்பாவிற்கு பாட்டி சொல்லாமல் சென்றதைவிட, அத்தையின் வாழ்க்கையில் ஏதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது புரிந்தது!
நிச்சயமாக காதல் தான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று தோன்றியது!

அது பற்றி அத்தை வந்ததும் கண்டிப்பாக கேட்டறிய வேண்டும் என்று நினைத்தபடி, அன்னையிடம் பரிசுப் பொருள் வாங்க செல்வதாகவும், அப்படியே நிகிலாவின் வீட்டுக்குப் போய்விட்டு, மாலையில் திரும்புவதாகவும் தெரிவித்து, மதியம் எதிர்பார்க்க வேண்டாம் என்று கிளம்பினாள் இன்பசுரபி!

அந்த நாளின் நிகழ்விற்கு பிறகான நாட்கள் எப்படி இருக்கும் என்று அப்போது எவருமே நினைத்தும் பார்க்காதது!



64. சொந்தமடி நானுனக்கு ! சொர்க்கமடி நீயெனக்கு!


மனிதன் என்ன திட்டம் போட்டாலும் அது அப்படியே நிறைவேறிடுமா என்ன??

முன் தினம், வசந்தன் வித்யாவின் தோழி வீட்டிற்கு சென்றபோது, அவள் வெளியூர் சென்றிருப்பதாக அவளது அன்னை சொல்லவும், வீடு திரும்பி, நண்பனிடம் தெரிவிக்க,

"வேறு யோசிக்கலாம்டா! இன்பாக்கிட்டே பிளான் மாறியதை சொல்ல வேண்டாம்! நாளைக்கு அவள் மாலுக்கு தான் போறதாக சொன்னாள்! அவள் அங்கிருந்து போன் பண்றதா சொல்லியிருக்கிறாள்! அப்போ சொல்லிக்கலாம்" என்றுவிட்டான் ரிஷி!

🩵🧡🩵

இன்பா முதலில் மாலுக்கு சென்றாள்! அவளது அத்தைக்காக கழுத்தில் அணியும் பெண்டென்ட்டு பொருந்திய மெல்லிய தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கினாள்! அதில்
வெள்ளை கற்களால் ஆறு இதழ்களில் சிறிய, அழகிய பூ போல வடிவமைக்கப்பட்ட pendent பொருத்தப்பட்டிருந்தது! அதை அவர் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்!

ரிஷிக்கும் kesav என்று எழுதிய ஒரு pendent செய்ய ஆர்டர் தந்தாள்! இரண்டு தினங்களில் கிடைக்கும் என்றார் கடைக்காரர்! வசந்தன் வீட்டு முகவரியை தந்து அங்கே அனுப்ப சொன்னாள்!

மாலில் சற்று நேரம் சுற்றிவிட்டு, ரெஸ்ட் ரூம் சென்றவள்,கண்களை தவிர்த்து, முகத்தை முழுவதுமாக துப்பட்டாவினால் மறைத்து 'பின்' செய்து கொண்டாள்! அதன் பிறகு அவள் மாலில் இருந்து வெளியே வந்த போது வானம் மந்தாரமாக இருந்தது! சித்திரை மாதத்தில் இதென்னடா அதிசயமாக இருக்கு என்று உள்ளூர நினைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள் இன்பா!

அப்போது அவளருகே அந்த இருசக்கர வாகனம் வந்து நின்றது! அதில் ஹெல்மட் அணிந்திருக்க ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான்! இன்பா தன்னிச்சையாக ஓர் எட்டு பின்னடைந்து நின்றாள்! மழை துளி ஒன்றிரண்டாக விழ ஆரம்பிக்க, அங்கே நின்றிருந்த மக்கள், நனைந்து விடாமல் இருக்க, ஆளுக்கு ஒரு பக்கமாக சென்றனர்! அந்த பரபரப்பான நேரத்தில், " சுபி,நான் தான்! சீக்கிரமாக வண்டியில் ஏறு!" என்ற ரிஷியின் குரலில் சற்றும் தாமதிக்காமல் ஏறிக்கொண்டாள்! தூறல் சற்று பெரிய துளிகளாக விழ ஆரம்பிக்க, மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது!

ரிஷியின் கையில், வண்டி ஈசிஆர் சாலையில் பயணித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்தது!

"கேசவ் இப்ப நாம எங்கே போறோம்? ரொம்ப இருட்டிட்டுச்சு! இன்னிக்கு மழை வெளுத்து ஊத்தப் போகுது போலிருக்கு !" என்றாள் கலவரமான குரலில்!

"நான் கூட இருக்கும் போது உனக்கு என்ன பயம் சுபி?"

"மழையில் நனையறது எனக்கு பிடித்தமான விஷயம் தான் கேசவ், ஆனால் நீங்க இப்பத்தானே காய்ச்சலில் விழுந்து எழுந்திருச்சீங்க! மழையில நனைஞ்சு, மறுபடியும் காய்ச்சல் வந்துட்டா என்ன பண்றது?"

"ஓ! எனக்காக கவலையா? மழை ஒன்றும் டேங்கில் பல நாள் சேமித்து வைத்திருக்கிற தண்ணீர் கிடையாது சுபி! இது இறைவனுடைய அருட்கொடை! சுத்தமான தண்ணீர் ஒன்றும் செய்யாது! நல்லா தலையை துவட்டிட்டு, சூடாக இஞ்சி டீ குடிச்சா போதும் ! எதுவும் அண்டாது!"

"ம்ம், நீங்க சொல்றது சரிதான். நான் இந்த மாதிரி யோசிச்சதில்லை கேசவ்!"என்ற இன்பா அப்போது தான் போகும் பாதையை கவனித்தவளாக,"ஆமா நாம, இப்ப எங்கே போறோம்? வசந்த் அண்ணா வீடு இந்தப் பக்கம் இல்லையே?"

"ஆமா சுபி, வித்யாவோட, தோழி ஊருக்கு போயிட்டாளாம்! அதனால் நான் பிளான் மாற்றிவிட்டேன்! உன்னை சரியாக மூன்று மணிக்கு நிகிலா வீட்டில் விட்டுவிடுகிறேன்!" ரிஷி சொல்லும் போதே மழை வலுக்க ஆரம்பித்தது!

ரிஷியின் குடும்பத்திற்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் ஒன்று அந்தப் பக்கத்தில் இருக்கிறதுது! அங்கே, பரமன் என்ற வேலையாள் மட்டும் காவலுக்கு இருக்கிறான் ! அந்தப் பக்கத்தில் உள்ள குப்பத்து ஆட்களை கொண்டு, இரண்டு நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்து வைப்பது வழக்கம்! ரிஷி பலவாறு யோசித்துவிட்டு கடைசியாக அந்த குட்டி கெஸ்ட் ஹவுஸிற்கு இன்பாவை அழைத்துப் போக முடிவு செய்திருந்தான்!

பரமன் அவனது தாத்தா காலத்தில் இருந்து வேலை செய்கிறவன், ரொம்பவும் விசுவாசமானவன் என்று ஆனந்தன் முன்பு சொல்லக் கேட்டிருக்கிறான்! பரமனுக்கு ரிஷியின் மீது மிகுந்த பிரியம் உண்டு, அவனை சிறு பிள்ளையில் தூக்கி வைத்து விளையாடியிருப்பதாக அவனை பார்க்கும் போதெல்லாம் சொல்வான்! அவர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால், பரமன் ஒத்தாசைக்கு வந்து விடுவது வழக்கம்! வேலை முடிந்துவிட்டால், அவனைத்தான் பரிவாக பார்த்துக் கொண்டே இருப்பான்! அவரது பார்வையின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது இல்லை!

வசந்தன் வந்து விஷயத்தை சொன்ன பிறகு, வெகுவாக யோசித்த ரிஷிக்கு கெஸ்ட் ஹவுஸ் தான் பாதுகாப்பான இடமாக தோன்றியது, ஆகவே, பரமனுக்கு போன் செய்து காலையில் அவன் அங்கே வருவதாக தெரிவித்து சில ஏற்பாடுகளை செய்து வைக்க சொல்லியிருந்தான் ! படிப்பதற்காக என்று அவனும் வசந்தனும் கிளம்பி அவ்வப்போது இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம் தான்! ஆனால், இப்போது ஒரு பெண்ணோடு சென்றால் என்ன நினைத்துக் கொள்வானோ என்று சற்று தயக்கம் தான்! ஆனாலும் வேறு மார்க்கம் இல்லை !

தெப்பலாக இருவரும் நனைந்தபடி அந்த வீட்டின் கேட் முன்பு பைக்கை நிறுத்தினான் ரிஷி! வாசல்புறம் வராண்டாவில் அமர்ந்திருந்த பரமன், குடையை பிடித்தபடி ஓடி வந்தவன் "சின்ன முதலாளி வாங்க ,வாங்க! ஐயோ இப்படி நனைஞ்சுட்டிங்களே? என்றவாறு வேகமாக வந்து கதவை திறந்து விட்டான்!

பைக்கை உள்ளே செலுத்தி நிறுத்துமுன் இன்னமும், காற்று வேகத்துடன் வீச, மழை தீவிரமடைந்தது! ரிஷியின் கையை இறுகப் பற்றியபடி அந்த வராண்டாவில் நுழைந்த இன்பாவின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது!

பரமன் உள்ளே ஓடி சென்று, திரும்பிய போது கையில் பெரிய துண்டுகள் இருந்தது!

"இரண்டு பேரும் உள்ளார வந்து தலையை துவட்டிக்கோங்க! என்றவன், "எங்கேயாவது மழைக்கு ஒதுங்கியிருக்கக்கூடாதா தம்பி?"என்று அன்போடு கடிந்து கொண்டான்!

"எங்கே போய் நிற்கிறது பரமா? வீடுகளே இல்லை, முழுக்க சவுக்கு தோப்பு! தூர, துரமாக ஒன்றிரண்டு பங்களாதானே இங்கே? நான் மட்டுமாக என்றால் பரவாயில்லை , இவள் உன் வருங்கால முதலாளியம்மா! இவளை எங்கே கூட்டிட்டு போக முடியும்? சரி, நான் சொன்னது எல்லாம் தயாரா இருக்கு தானே?"

"எல்லாம் வாங்கி வச்சுட்டேன் தம்பி, நீங்க இரண்டு பேரும் உடைகளை மாத்திட்டு வாங்க! பெரிய ஐயாவோட ரூமில் உங்க அம்மாவோட, உடைகள் இருக்குது, அதை பாப்பாவை உடுத்திக்கச் சொல்லுங்க!"

"என்ன சொல்றே பரமா ? அம்மா தான் இங்கே வரமாட்டாங்களே?
அம்மாவோட பழைய உடைகளா? அது எப்படி இங்கே வந்தது?" என்றான் ரிஷி குழப்பமாக!

அவை சாருலதாவின் உடைகள்! அவர் கிளம்பிச் சென்ற பின் அவரது ஆடைகள் அவர்களது வீட்டிலேயே தங்கிவிட்டிருந்தது! அப்போது அங்கே வேலை செய்து கொண்டிருந்த பரமனிடம், தந்து ஏதாவது ஆசிரமத்தில் கொடுத்து விடுமாறு அனிதா, சொல்லியிருந்தார்! ஆனால், ஆனந்தன், அவற்றை முன்பு தன் அலுவலகத்தின் அறையில் வைத்திருந்தவர், அதன் பிறகு இந்த வீட்டைக் கட்டியதும், இங்கே கொணர்ந்து வைத்து விட்டார்! அதுவும் சும்மா வைக்கவில்லை! உடைகள் பாழடையாத வண்ணம் பாதுகாத்து வைத்திருந்தார்! சொல்லப் போனால் சாருவின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு உடையை வாங்கி வந்து அங்கே வைப்பதும், அன்றைய தினம் அவர் பழைய நினைவுகளை அசைபோட்டபடி, தங்கியிருந்துவிட்டு செல்வது வழக்கம்! காதலித்த போது செய்தது போல இன்றும் அவர் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அவளது பிறந்த தினத்தில் உணவளித்து வருகிறார்! இது பரமன் மட்டுமே அறிந்த ரகசியம்!

சாருலதா,வேலையாட்களிடம் தோழமையுடன் பழகுவார்! அதிகாரம் செய்ய மாட்டார்! வேலையாட்களும் , அவர்களாக முன் வந்து வேலை செய்து கொடுப்பார்கள்! அனிதா அந்த வீட்டுத் தலைவி ஆனபிறகு, வேலையை விட்டுப் போவதாக சொன்ன பரமனை, தன் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்திக் கொண்டார் ஆனந்தன்!

பரமனுக்கு கடினமான வேலைகள் செய்ய முடியவில்லை என்றானதும் இங்கே வீட்டை காவல் காக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டார்!

பரமன் தான் உளறிவிட்டதை உணர்ந்து சுதாரித்தான்! " அது, பெரியம்மா, பழசாகிட்டது, ஆசிரமத்துக்கு கொடுக்கச் சொன்னாங்கய்யா! ஐயாதான், அதெல்லாம், இங்கேயே இருகட்டும்னு சொல்லிட்டார்! அதுவும் நல்லதாய் போச்சு பாருங்க! இப்ப பாப்பாக்கு உதவுதுல்ல? என்றவன், " சரி சரி, ஈரத்தோட நிற்காதீங்க, சட்னு போய் மாத்திட்டு வாங்க! நான் போய் சூடாக, குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்" என்று சமையல் அறைக்கு போய்விட்டான்!

இன்பா, அந்த அறைக்குள் சென்றாள்! அன்று வரை அவள் ரிஷியின் பெற்றோரை பார்த்தது இல்லை! அங்கே அவர்கள் படங்கள் இருக்கும் என்று ஆவலாக பார்த்தால், ஏமாற்றம் தான் மிஞ்சியது! ஒரு புகைப்படம் கூட இல்லை! மர அலமாரியை திறந்து, பார்த்தவள், திகைத்துப் போனாள்! ஒரு புறம் புதிதாக வாங்கிய உடைகள், ஒரு புறம் பழைய உடைகள் ஹேங்கர்களில் தொங்கிக் கொண்டிருந்தது! இன்பாவுக்கு சற்று முன்பாக ரிஷி சொன்னது நினைவு வந்தது! அவனது தாயார் இங்கே வருவது இல்லை என்றால் புதிய உடைகள் இத்தனை எதற்காக? "

அறை கதவு தட்டும் ஓசை கேட்டு, சென்று திறந்தாள் இன்பா!

"என்னம்மா இன்னும் உடையை மாற்றவில்லை?" சரி இந்தாங்க சூடாக, சூப் குடிங்க! ரெடிமேட் தான்! அவசரத்துக்கு வாங்கி வச்சேன்! "என்று கோப்பையை நீட்டினான் பரமன்!

"நான் இதை கேட்கலாமா என்று தெரியவில்லை ஐயா? புது உடைகள் நிறைய இருக்கிறதே ஐயா! அவரோட அம்மா இங்கே வரமாட்டாங்கன்னா எதுக்கு இத்தனை? அதுவும் சுடிதார்கள்!"

"இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது அம்மா! ஆனால் அந்த உடைகளை நீங்க தாராளமாக எடுத்து உடுத்திக்கலாம்! அதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு! அப்புறம் பாப்பா, நீங்க பார்த்த இந்த உடைகளைப் பற்றி தயவு செய்து தம்பிக்கிட்டே சொல்லாதீங்க! இது பெரிய ஐயாவோட ரகசியம்!" என்றுவிட்டு போய் விட்டான்!

இன்பா உண்மையில் மிகவும் குழம்பிப் போனாள்! வீட்டுப் பிள்ளைக்கு தெரியாதது, வேலையாளுக்கு தெரிந்திருக்கிறதே? இதில் வேறு ஏதோ மர்மம் இருக்க வேண்டும்! ஆனால் இப்போது எதையும் சிந்திக்கும் நேரமில்லை, குளிரில் உடம்பு தடதடத்துக் கொண்டிருக்கிறது! ஈர உடைகளை வேகமாக களைந்துவிட்டு, கையில் அகப்பட்ட, ஒரு சுடிதாரை எடுத்தாள்! பிங்க்கில், இளம் பச்சை நூலில், இலைகளும், கொடிகளுமாக வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த அந்த சுடிதார் அழகாக இருந்தது! அதை உடுத்திக் கொண்டு தலையை துவட்டி, ஓரளவுக்கு காயவைத்து தளர பிண்ணலிட்ட பிறகு, பரமன் கொடுத்த சூப்பை அருந்திவிட்டு, அவள் கூடத்திற்கு வந்தாள்!

இளம் நீல வண்ணத்தில், முழுக்கை வைத்த டிசர்ட்டும், வெள்ளை ட்ராக் பேண்ட்டும் அணிந்து, இருக்கை ஒன்றில் அமர்ந்து கைப்பேசியில் அரைக் கவனமாக அவள் வரவை எதிர்பார்த்திருந்த ரிஷி, அவளைப் பார்த்ததும் அசந்து போனான்! அதை கவனித்த இன்பாவின் முகம் லேசாக சிவந்தது! அவள் பார்வை வெளியே சென்றது! வெளியே மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது! உடையை உடுத்திய பின்னும், அவளுக்கு லேசாக குளிரடித்தது!

"கேசவ், ஜன்னலை கொஞ்சம் சாத்துங்க! எனக்கு குளிருது! என்றவாறு ஒரு சோபாவில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு, அங்கிருந்த குஷனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு கைகளை தேய்த்து சூடாக்கி கன்னத்தில் வைத்து எடுத்தாள்!

ரிஷி சன்னல்களை சாத்திவிட்டு," சுபி, ஏன் இப்படி ஒடுங்கி உட்கார்ந்திருக்கிறே ? ரிலாக்ஸாக உட்கார்வதற்கு என்ன? என்று எதிர் இருக்கையில் அமர்ந்தான்!

"இல்லை இது தான் வசதியாக இருக்கிறது கேசவ்! என்று பதில் சொன்னவாறு மீண்டும் கைகளை தேய்த்து சூடேற்றி குளிரை போக்க முயன்றாள்! ஆனால் ..

நேரம் செல்லச் செல்ல அவளது உடம்பில் காய்ச்சலுக்கான அறிகுறிகளை உணர்ந்த இன்பா, வந்த இடத்தில் என்ன சோதனை இது? என்று மனதுக்குள் மூண்ட கலவரத்துடன், நினைத்தாள்!