• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

73 & 74. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
மருத்துவர் சொன்னது போல மறுநாள் முழுவதும் திலகம் மருத்துவமனையில் இருந்தார்! பரிசோதனை முடிவில் அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருப்பதாக தெரிந்தது! அதற்கு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர் ஆலோசித்தார்!

திலகம் அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டார்! அவரை எப்படியும் சம்மதிக்க வைப்பதாக சொல்லி, டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் சாருலதா! ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்று பிறகு தான் புரிந்தது! ஆம் ! திலகம் தனக்கு சிகிச்சையே தேவை இல்லை! இருக்கும் வரை இருந்துவிட்டு போய் சேர்கிறேன்! என்று ஒரே பிடியில் நின்றார்!

"என்ன அம்மா இது சின்ன பிள்ளை மாதிரி இப்படி அடம் பிடிக்கிறீங்க? நான் வேறு ஊருக்கு கிளம்பியாகணும்! மற்றவர்களுக்கும் உங்கள் கவலை இருக்காதா? ப்ளீஸ் அம்மா, நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்!"

"என் பேச்சுக்கு மதிப்பு இல்லை எனும்போது, நான் ஏன் உங்கள் பேச்சை கேட்கணும்?"

"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அம்மா! நான் முடிஞ்சால் கண்டிப்பா செய்வேன்!"என்றார் சாருபாலா!

"பார்த்தாயா? முடிஞ்சால் என்று ஒரு கொக்கி போடுகிறாய்! உன்னால அது நிச்சயமாக முடியாது சாரு! எனக்கு வாழ்ற ஆசை இப்ப சுத்தமாக இல்லை! அதனால, என்னை இப்படியே இருக்க விட்டுவிடும்மா! அப்படியே மூச்சு நின்னுடுச்சுன்னா, உன் கையால் எனக்கு கடைசி காரியம் பண்ணிடுமா! அது மட்டும் போதும்!" என்றவர் அவரது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டார் திலகம்.

சாருபாலாவிற்கு வருத்தமாக இருந்தது! திலகம் சொல்வதை அவரால் செய்ய முடியாது! என்னதான் அவர் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், இத்தனை வருடங்கள் வளர்த்தவளை விட்டு வந்துவிடு என்று சொன்னால், பிள்ளை முதலில் விஷயத்தை நம்ப வேண்டும்! அப்படியே அவன் நம்பினாலும், இத்தனை காலம் பெற்ற பிள்ளை என்ற நினைப்பு வரவில்லையா? என்னதான் அன்றைக்கு விசாலாட்சி நிபந்தனை போட்டிருந்தாலும், பெற்ற பிள்ளையை விட்டுப் போக முடியாது என்று போராடியிருக்க வேண்டாமா? பிள்ளையே கேட்பான்! அது நியாயம் தான் ! அப்போது இருந்த அவரது மனநிலையை புரிய வைப்பது என்றால், முடியாத காரியம்!

சிறு வயது முதலாக சாருபாலாவுக்கு பெற்றவர்கள் பாசம் சரியாக கிடைக்கவில்லை! தந்தை பணம் சேர்ப்பதில் கவனமாக, தாய் நோயில் போய் சேர்ந்தார்! அடுத்து வந்த மகராசியோ, வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டாரே தவிர, எந்தவித பாசத்தையும் உணரச் செய்யவில்லை! விசாலாட்சி பேரனை தரமாட்டேன் என்றபோது மிகுந்த வேதனை உண்டானது நிஜம்தான்! அவனை பிரிந்து எப்படி வாழ்வது என்ற தவிப்பு இருந்தது! ஆனால் மகனை தூக்கிப் போனால், தனக்கு ஒரு குழந்தையை வளர்க்கத் தெரியுமா ? என்ற கேள்வி தான் பூதாகரமாக எழுந்து நின்று பயமுறத்தியது! அவரைப் போன்ற பெண்ணிற்கு மகனாகப் பிறந்த பாவத்திற்கு, மற்ற உறவுகள் இருந்தும் அவன் இப்படிப்பட்ட தாயிடம் வளர்வதை விட, அவர் தனிமரமாக நிற்பதே மேல் என்று தான், அவர் குழந்தையை விட்டுவிட்டு கிளம்பியது!

மாடியில் இருந்த ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தபடி கடலை, பார்த்தவாறு கண்களில் பெருகிய நீருடன் சாருபாலா அமர்ந்திருந்தார்!

அவரால் தரம் இறங்கி, அனிதாவும் ஆனந்தனும் செய்த காரியத்தையும் அதனால் அந்த பெரிய மனிதர்கள் மறைந்து போனதையும், சொல்ல முடியாது! அவனிடம் உன்னைப் பெற்ற தாய் இருக்கிறாள் என்று அவர்கள் சொல்லியிருந்தால், அவளைத் தேடி அவன் எப்போதோ வந்திருப்பான்! இன்றளவும் அவர் மகனை பாராமல் இருப்பதற்கு காரணம், பார்த்த பிறகு அவரால் அவனை விட முடியாது! தாய் மனது பித்து பிடித்து விடும்! பிள்ளை மனம் இளகி வந்தால் பரவாயில்லை! ஒரு வேளை கல்லாக இருந்தால், அவர் நிலை தான் கவலைக்கிடமாகிவிடும்! அதற்கு தூரத்தில் இருந்து அவன் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வதோடு நிறுத்திக் கொண்டார்! அவர் வெளிநாட்டிற்கு சென்று ஏன் வேலை பார்க்க வேண்டும்? தமிழ்நாட்டில் இல்லாத மருத்துவமனைகளா? இங்கே இருந்தால், நிச்சயமாக அவர் மனது மகனுக்காக தவிக்கும், ஏதோ ஒரு தருணத்தில் மறைந்து பார்க்கச் சொல்லும்! அதன் பிறகு ஏக்கமும் வலியுமாக நாட்களை கடக்க வேண்டும்! அதனை தவிர்க்கத் தான் அவர், படிப்போடு வேலை என்றதும் கிளம்பிப் போய்விட்டார்! இங்கே இருந்தவர்களும் அவரது மனநலன் கருதியே இங்கேயே தங்கும்படி வற்புறுத்தவில்லை ! அப்படி இத்தனை நாட்களும் இருந்துவிட்டு இப்போது போய் உரிமையை கோரச் சொன்னால் அவர் என்ன செய்வார்!

திலகத்திற்கும் சாருபாலாவிற்கும் விவாதம் நடந்த போது, வசந்தனிடம் முன்தினம் நடந்த விபரத்தை சொல்லிக் கொண்டிருந்தாள் இன்பா! ஆகவே அவள் அவர்களது பேச்சை கேட்கவில்லை! பேசி முடித்து வந்த பிறகு, பாட்டி அறைக்குள் பூட்டிக் கொண்டிருந்தார்! அத்தையை காணவில்லை, அவரை நாடி இன்பா மாடிப் படிக்கு செல்ல, " சுபி, அத்தையை இப்ப தொந்தரவு செய்யாதேம்மா! உனக்கு ஏதும் வேலை இருந்தால் பார்! இல்லைன்னா எனக்கு சமையலுக்கு உதவி செய்! " என்று சாந்தி சொல்ல, அதைச் செய்து கொடுத்தாள்! சமையல் வேலை முடியவும் அவள் அத்தையிடம் வந்தால், அவர் சோகச் சித்திரமாக அமர்ந்திருந்தார்!

"அத்தை அழுதீங்களா? உங்க முகமே சிவந்து போயிருக்கே? இந்த பாட்டி, அப்படி என்ன சொன்னாங்க? எழுந்து வரட்டும் நான் கேட்கிறேன்!" என்று அவரை தன்னுடன் அனைத்தவாறு சொன்னாள் இன்பா!

"பாட்டி ஏதும் சொல்லவில்லைடா! "

"அப்புறம்? ஏன் அழறீங்க? "

" பாட்டிக்கு என்னைப் பத்தின கவலை! நான் குடும்பம் குழந்தைன்னு வாழவில்லை என்று அவங்களுக்கு ரொம்ப வருத்தம்!"

"பாட்டி வருத்தப்படுவது நியாயம் தானே அத்தை? நானே நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கவில்லை என்று நினைச்சு இருக்கிறேன் தெரியுமா? நான் ஒன்னும் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை! இப்ப நான் ஒரு டாக்டர்!"

"டாக்டர் படிச்சு முடிச்சிருக்கிறே , அவ்வளவுதான்! பெரிய மனுஷி ஆகிவிடவில்லை! இந்த உலகத்தை பத்தி உனக்கு எதுவும் தெரியாது! அதனால பெரியவங்களோட பிரச்சினை பற்றி உனக்கு புரியாது!"

"சரி தான் அத்தை! அப்போ எனக்கு புரியும்படியா சொல்லுங்க, நீங்க கிளம்பிப் போயிட்டா, பாட்டியை நான் சமாதானம் செய்யணும்ல?" என்றாள்

சாருபாலாவுக்கு சிரிப்பு வந்தது! "உன் பாட்டியை யாரும் சமாதானம் செய்ய முடியாது! அவங்க ரொம்ப பிடிவாதக்காரங்க! அவங்களுக்கு அறுவை சிகிச்சையை செய்துவிட்டால் நான் கொஞ்சம் நிம்மதியாக கிளம்ப முடியும்! எனக்கும் இங்கே இருக்கிற நாட்கள் குறைவு, நான் அந்த டென்ஷன்ல இருக்கிறேன்! நீ வேற புரியும்படியா சொல்லுங்கிறே!"

"அப்பாக்கிட்டே நான் கேட்டேன்! அவர், அப்படித்தான் சொன்னார்! அது உன் அத்தையோட ரகசியம், அவங்க சொல்லும்போது கேட்டுக்கொள்" என்றுவிட்டார்! அப்போ, அது எனக்கு தெரியக்கூடாத ரகசியமா?"

சாருபாலா சற்று யோசித்தார்! ஒரு வேளை தன் கதையை சொன்னால், அதில் படிப்பினை கிடைத்து, மருமகள் காதல், கணறாவியில் போய் விழாமல் இருப்பாள் என்று தோன்றியது! அதே சமயம், அவருக்கு யார் மீதும் குற்றம் சுமத்தும் எண்ணம் இல்லை! முதல் குற்றவாளியே அவர்தான், அவரது அஜாக்கிரதையால் தானே இன்னொரு பெண் அவர் வாழ்க்கைக்குள் வர முடிந்தது! கணவன் மனைவி என்ற உறவைப் பற்றி தெரியாமல் ஒரு பெண் இருக்கலாம், ஆனால் உணராமல் இருக்கலாமா? செய்யும் தொழில் மீது பக்தி இருக்க வேண்டும்தான்! அதற்காக அக்கம்பக்கம் நடப்புகளை கவனிக்காமல், இருந்தது தவறு அல்லவா? கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவராக இன்பாவை அவர் பார்த்தார்

"என்ன அத்தை?"

"என்னைப் பத்தின விஷயம், நம்ம வீட்ல உன்னைத் தவிர, எல்லாருக்கும் தெரியும்! ப்ரியன் குடும்பத்திற்கும் மேலோட்டமாகத் தெரியும்! அவங்க யார்? என்ன? எங்க இருக்காங்க என்று உன் அப்பாவுக்கும் எனக்கும் தான் தெரியும்! உன் அம்மாவுக்கு,இப்போது நேரில் அவர்களைப் பார்த்தால் அடையாளம் கூட தெரியாது! ஆக உனக்கும் அந்த விபரங்களை சொல்லப் போவது இல்லை! ஆனால் என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியணுமோ அதை மட்டும் உனக்கு சொல்றேன்!
கேட்ட பிறகு உன் பாட்டியை நீ சமாதானம் செய்து ஆபரேஷனுக்கு சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு!" என்ற சாருபாலா, யார் பெயர்களையும் குறிப்பிடவில்லை!
அதே சமயம் நடந்தவை அனைத்தையும் கூறாமல் அனிதாவின் வருகை அதன் பிறகான நடப்புகள், தான் ஏமாளியாக இருந்தது! என்று முக்கியமான விஷயங்களை சொல்லி முடித்தார்!

இன்பா சாருபாலாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள்! அவளால் பேசக் கூட முடியவில்லை!

அத்தை எத்தனை அப்பாவியாக இருந்திருக்கிறார்? கடைசியில் வாழ்வையும் தொலைத்து, பெற்ற பிள்ளையையும் விட்டுக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாரே! அதற்கு அவர் சொன்ன காரணங்கள் நியாயமாக இருப்பினும், பெற்ற பிள்ளையை பிரிக்கிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் வாழ்கிறார்களே இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான பிறவிகள்??

சம்பந்தப்பட்ட அத்தனை பேர் மீதும் ஆத்திரமாக வந்தது! ஆனால் இப்போது பிரச்சினை பாட்டிக்கு நடக்க வேண்டிய சிகிச்சை ! இதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இன்பா திகைத்தாள்!

74. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

சாருபாலாவின் வாழ்க்கையில் ஏதோ காதல் தோல்வி ஏற்பட்டிருக்க வேண்டும் அதனால் தான், அவருக்கு காதல் பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தாள்! ஆனால் இப்படி எல்லாம் நடந்திருக்கும் என்று அன்றுவரை இன்பா கற்பனை செய்தது கூட இல்லை!

உண்மையில் அத்தை கிரேட் தான்! வைராக்கியமாக இத்தனை ஆண்டுகளை கழித்திருக்கிறாரே! இப்போது போய் பேரனை அழைத்து வந்துவிடு என்று இந்த பாட்டி சொல்வது கொஞ்சமும் சரியே இல்லை! ஆனால் அவரது கோணத்திலும் சிந்திப்பது அவசியம் தான்!

சாருபாலா தனி ஒரு பெண்ணாக இத்தனை காலம் வாழ்ந்திருக்கிறார் என்றால், அதற்கு அவரது தன்னம்பிக்கையும், தைரியமும் தான் முக்கிய காரணம்!

இனி, இன்பா திருமணமாகி அடுத்த வீட்டுக்கு போய் விடுவாள்! அதன் பிறகு, சாருபாலாவுக்கு துணையாக கடைசி காலத்தில் யார் இருப்பார்கள் என்று பாட்டிக்கு ஒரு கவலை இருக்கும்! அதை தப்பு சொல்ல முடியாது! ஆனால் பாட்டிக்கு ஒரு விஷயம் தெரியாதே, அவரோட இந்த பேத்தி திருமணம் என்று ஒன்றை செய்துகொள்ளப் போவதில்லை என்பது! ரிஷியை சுமந்த மனதில் வேறு ஒருவரை சுமக்க முடியாது!கனவோ, மயக்கமோ அவனோடு வாழ்ந்த அந்த ஒரு நாள் போதும்! இனி அத்தையைப் போல அவளும் தன் வாழ்வை மருத்துவம் பார்ப்பதில் அர்ப்பணிக்கப் போகிறாள்! முன் தினம் வரை அவளுக்கு என்ன முடிவு செய்வது என்ற குழப்பம் இருந்தது! இப்போது அந்த குழப்பம் நீங்கிவிட்டது!

இன்பா வேலைக்கு போக முடிவு செய்தாள்! இந்த ஊரில் இருந்தால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவள் ரிஷியை பார்க்க நேரிடும்! அதை தவிர்க்க அவள் வெளியூரில் தான் வேலை தேட வேண்டும்!

சாருபாலா தன்னை சுதாரித்துக் கொண்டு, நேராக அமர்ந்தார்!

"அத்தை, நான் வேலை செய்ய நினைக்கிறேன்! ஆனால் சென்னையில் வேண்டாம்! அப்பா அம்மா இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க! நீங்கதான் எனக்கு இதுல சப்போர்ட் செய்யணும்! "

"இங்கே எனக்கு தெரிஞ்ச எத்தனையோ மருத்துவ நண்பர்கள் இருக்காங்க! உனக்கு வேலை எளிதாக கிடைத்துவிடும்! ஐந்து வருஷமாக நீ அவங்களை பிரிஞ்சி இருந்திருக்கிறாய்! இப்ப மறுபடியும் நீ பிரிந்து செல்ல வேண்டும் என்றால் அதற்கு சரியான காரணம் சொல்ல வேண்டும் கண்ணம்மா!"

இன்பாவிற்கு உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன என்று தோன்றியது! அத்தை சரியாக புரிந்து கொள்ளக்கூடியவர் தான்! ஆனால் பெற்றவர்களிடம் என்ன காரணம் சொல்வது?

"அத்தை , இப்போதைக்கு, கல்யாணம், குடும்பம் என்று எதிலும் சிக்கிக்கொள்ள நான் தயாரில்லை!"

சிலகணங்கள் அவளை கூர்ந்து பார்த்தவர், "யாரையாவது நீ விரும்புகிறாயா கண்ணா?" என்றார் சாருபாலா

ஒருகணம் திகைத்து உடனடியாக முகபாவத்தை மாற்றிக் கொண்டதை சாருபாலா கவனித்துக் கொண்டார்!

"உன் அத்தை காதலுக்கு எதிரி இல்லைடா! அதனால் காதலிப்பது தவறு என்று நான் சொல்ல வரவில்லை! இரண்டு பேரும் நல்ல புரிதலுடன் காதலித்தால், திருமணத்தில் இணைந்து வாழ வேண்டும் என்பது தான் என் வாதம்! சொல்லு, நீ யாரையாவது விரும்புகிறாயா? வேற மதமா? ஜாதியா? ஏழையா? எப்படி என்றாலும் சரி, நீ உன் மனசுக்கு பிடித்தவனோடு வாழ்ந்தால் எனக்கு சந்தோஷம்டா!"

இன்பாவிற்கு அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலவில்லை! அவரைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்!

சாருபாலா பதறிப் போனார்! சற்று நேரம் அவளை அழவிட்டவர், அருகில் இருந்த தனது அறைக்குள் அழைத்துப் போய் குடிக்க தண்ணீர் கொடுத்தார்! மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்!

அங்கிருந்த சோபாவில் அவளை வசதியாக அமர வைத்தார்!

"யார் என்று சொல்லுடாம்மா! உன்னை காதலித்து கைவிட்டுட்டானா?" சாருபாலாவின் குரலில் அவள் அன்று வரை பார்த்திராத ஆத்திரம்! திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள்! உண்மையை அப்படியே சொன்னால், அடுத்த கட்டமாக ரிஷியின் வீட்டில் போய் நின்றுவிடுவார் என்று தோன்ற, இன்பா அவசரமாக யோசித்தாள்!

"யார்னு சொல்லுமா! என்கிட்ட என்ன தயக்கம்?"

"அத்தை, நான் தான் ஒருவரை காதலிச்சேன். அவர் என்னை காதலிக்கவில்லை! அவருக்கு என்னை யார் என்றே தெரியாது! நான் கோவையில் அவரை பார்த்து விரும்ப ஆரம்பிச்சேன்! ஆனால், அவர் யார், என்ன எங்கே இருக்கிறார் என்று எதுவும் தெரியாது அத்தை! ஆனால் என் வாழ்வில் திருமணம் என்பது இல்லை! அவர் நினைவோடு வாழ்ந்து விடுவேன்! சொல்லப் போனால் மருத்துவப் பணிக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்! இதில் எந்த மாற்றமும் கிடையாது! "

சாருபாலா அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டார்! அவரால் சட்டென்று பேச முடியவில்லை! அவர்கள் வீட்டு வாரிசு இன்பாதான்! அவள் திருமணம் வேண்டாம் என்பதற்கு சொல்லும் காரணம் தான் அவரை திகைக்க வைத்தது! யாரென்று தெரியாத ஒருவனுக்காக வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாளே! அவன் யார் என்று தெரிந்தால் முறைப்படி பேசி திருமணத்தை நடத்த முயற்சி செய்யலாம்! ஆனால் இது என்ன விசித்திரமான காதல்? ஒரு தலையாக ஏற்பட்ட காதலுக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறாளே!" சிலகணங்கள் தீவிரமாக யோசித்தார், " இந்த காதல் நாளடைவில் மறைந்து போக அதிக வாய்ப்பு இருக்கிறது! அதை இப்போது சொன்னாலும் அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்! ஆகவே அவள் வழியில் சென்று தான், அவளை திசை திருப்ப முயற்சிக்க வேண்டும் என்று தோன்றியது!

"சரிடாம்மா, நீ வேலைக்குப் போ, என் பிரண்ட்ஸ்கிட்டே சொல்லி வைக்கிறேன்! நான் கிளம்பிவிட்டாலும் கூட உன் வேலைக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன்! இப்ப பாட்டியை சிகிச்சைக்காக எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறாய்?"

இன்பா புன்னகையுடன், "நீங்க முகத்தை கழுவிட்டு கீழே வாங்க அத்தை! நானும் போய் பிரஷ்ஷப் ஆகிட்டு வந்துடுறேன்! நான் சொல்றதுக்கு நீங்க மறுக்காமல் ஆமா மட்டும் சொன்னா போதும், பாட்டி ஓகே சொல்லிடுவாங்க!"
என்றாள் உறுதியான குரலில்

அத்தையும் மருமகளும் கீழே சென்றனர்! அப்போது வசந்தன் திலகத்தின் அறையில் இருந்து வந்தான்!

"வசந்த் அண்ணா, நீங்க எப்போ வந்தீங்க?" என்று அவனை வரவேற்றாள் இன்பா!

திலகமும் வசந்தனை தொடர்ந்து கூடத்திற்கு வந்திருந்தார்!

சாருபாலாவும் அவனை வரவேற்கும்விதமாக தலைசைத்துவிட்டு , மருமகளிடம் கண்ணைக் காட்டிவிட்டு, சமையலறைக்கு சென்றுவிட்டார்!

💖💖💖

வசந்தன் ஊருக்கு கிளம்பும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது! வித்யா புகுந்த வீடு செல்லும் முன்பாக, அவளிடம் நிகிலாவைப் பற்றி சொல்லிவிட்டிருந்தான்!

ஊருக்கு சென்ற பிறகு, கிடைத்த சமயத்தில் அண்ணன், நிகிலாவை விரும்பும் விஷயத்தை வித்யா முதலில் கணவனிடம் சொன்னாள்! அவன் தன் தந்தையிடம் சொன்னான்!

தமிழரசனுக்கு இன்பாவை வசந்தனுக்கு கட்டி வைக்கும் எண்ணம் இருந்தது! ஆனால் அவன் நிகிலாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவது தெரிந்ததும், திலகத்திடம் விஷயத்தை தெரிவித்திருந்தார்!
அதுபற்றி, வசந்தனிடம் பேசுவதற்குள் அவரது உடல்நலம் சரியின்றிப் போயிற்று!

சற்றுமுன் இன்பா, அவரது உடல்நலம் பற்றி தெரிவிக்கவும், வசந்தன் அவரைப் பார்த்துவிட்டு, அப்படியே தன் யோசனையையும் தெரிவிக்க வந்திருந்தான்!

"பாட்டிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீ சொன்னாயே! அதான் நலம் விசாரிச்சுட்டு, அப்படியே என் கல்யாண விஷயத்தைப் பத்தியும் சொல்லி யோசனை கேட்க வந்தேன்! நிகிலா வீட்டுல அவள் அப்பாவை நினைச்சு தான் எனக்கு கவலை!

"பாட்டிக்கிட்ட சொல்லிட்டிங்களே, எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, நீங்க கவலையே படாதீங்க, நிகிலா அப்பா சம்மதம் சொல்லிடுவார்! அட்வான்ஸ் வாழ்த்துகள் அண்ணா!" என்றாள் உற்சாகமாக

இன்பா மனதுக்குள் வேதனையை வைத்துக் கொண்டு அதைக் காட்டிக் கொள்ளாமல் வளைய வருகிறாள்! வசந்தனுக்கு அவளைப் பார்க்க ஒருபுறம் பிரமிப்பாகவும் மறுபுறம் கஷ்டமாகவும் இருந்தது!

"எல்லாரும் சாப்பிடலாம் வாங்க, என்று சாந்தி வந்து அழைத்தார்!

சாப்பிடும் போது, திலகம்,"வசந்த், நீ அவசரப்பட்டு முடிவு எடுக்கவில்லை தானே?" என்றார்

"இல்லை பாட்டி, நிகிலாவை இங்கே விட்டுப் போனால், திரும்ப அவள் எனக்கு கிடைக்க மாட்டாள் என்று என் உள்ளுணர்வு சொல்லுது! அதனால தான் இந்த முடிவு! இல்லாவிட்டால் நிச்சயம் மட்டும் பண்ணிட்டு கிளம்பிவிடுவேனே!"

"அப்ப சரி, நாளைக்கு உங்க அப்பா அம்மாவை வரவைத்து நான் பேசுறேன்! பெத்தவங்க முடிவு முக்கியம் இல்லையா? "

"ஆனால், பாட்டி உங்களுக்கு இப்ப உடல்நிலை சரியில்லை ! டாக்டர் உடனடியாக ஆபரேஷன் செய்யணும்னு சொல்லியிருக்கார்! "

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இன்பா? ஒரு நல்ல விஷயத்தை தள்ளிப் போடுவானேன்?"

"பாட்டி, நல்ல விஷயம் தான், ஆனால் அதை முன்னே நின்று நீங்க நடத்திக் கொடுக்க வேண்டாமா? என்ன அண்ணா நான் சொல்றது சரிதானே?"

"இன்பா சொல்றது ரொம்ப சரி பாட்டி! ஆபரேஷன் பண்ணிக்கோங்க, ப்ளீஸ்!" என்றான் வசந்தன்!

"என் பிள்ளைகளுக்கு ஒரு நல்லது நடக்கிறதைப் பார்க்கணும்னு தான் என்னோட ஆசையும்! ஏன் இன்பா, நிகிலாவுக்கும் உன் வயசு தானே ஆகுது? அவள் கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கும் போது நீயும் பண்ணிக்கிட்டா, இந்தப் பாட்டி நிம்மதியாக கண்ணை மூடுவேன்ல?" என்றார் திலகம்!

"நல்ல விஷயம் போசுறப்போ என்னம்மா இப்படி எல்லாம்" என்று சாருபாலா கடிந்து கொள்ள..

இன்பா பாட்டியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், தொண்டையில் உணவு சிக்கிக்கொள்ள, கண்ணில் நீர் நிரம்பி புரையேறிவிட்டது.