• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

83 & 84. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
வசந்தன், திருமணம் முடிந்து வெளிநாட்டிற்கு சென்று ஒரு வருடம் கழித்து இந்தியா, திரும்பினான்! பெற்றோர் மற்றும் மனைவி நெல்லையில் இருந்ததால் அவன் நேரடியாக அங்கே தான் சென்றான்! அப்போது தான், இன்பாவின் குடும்பத்தினர் பற்றிய முழு விவரமும் தெரிய வந்துது!

இப்போது அவர்கள் எல்லாம் ஒருவாறு இயல்பு நிலைக்கு திரும்பக் காரணம் அந்த குழந்தை தான் என்று கேள்விப்பட்டிருந்தான்.

வசந்தனுக்கு அந்த குழந்தை வந்த விதம் கொஞ்சம் சுவரஸ்யமான விஷயமாகத்தான் தோன்றியது. கூடவே அவனுக்கு உள்ளுர ஒரு சின்ன நெருடல் இருந்தது ! ஆனால் அதை அவன் இதுவரை யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை!

"என்ன வசந்த், பதில் சொல்லாமல் ஏதோ யோசிச்சுட்டு இருக்கிறே?" என்று ரிஷி குரல் கொடுக்கவும் நிகழ்வுக்கு திரும்பினான்!

"ரிஷி, இன்பாவோட குடும்பம் பத்திதான்டா நினைச்சுட்டு இருக்கிறேன்! அவங்க வீட்டில் எல்லாருமே ரொம்ப நல்லவங்கடா! அவளோட அப்பா, அம்மா, அத்தை மூன்று பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையாக இருந்து கொண்டிருக்கிறார்கள்! அவளுக்கு ஒரு பாட்டியும் இருக்காங்க,இன்பாவின் பிரிவு அவங்களை படுத்த படுக்கையாக ஆக்கிடுச்சு!"

"அவங்க இப்போ வித்யாவோட புகுந்த வீட்டில் இருக்காங்க, வித்யாவோட மாமனார் தான், விடாமல் அவங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வைத்தியரை வரவழைத்து வைத்தியம் பார்த்துட்டு இருக்கார்! அதன் விளைவாக இப்பத்தான் சில மாதங்களாக, கை கால்களில் அசைவு வந்திருக்கிறதாம்! நான் இன்னும் அவங்களைப் போய் பார்க்கவில்லை! என்று பெருமூச்செறிந்தான்!

"நீ சொல்ல சொல்ல எனக்கு அவங்களை எல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆவலாக இருக்குடா வசந்த்! இன்பாவுக்கு எத்தனை அன்பான சொந்தங்கள் அமைந்திருக்கிறார்கள்? ஆனால், பாவம் இன்பா எங்கே எப்படி இருக்கிறாளோ?" என்றவன் "சரிடா, நாம் எப்போ அவள் வீட்டுக்கு போகலாம்னு சொல்லு!"

"ம்ம்.. போகலாம்டா, உனக்கு இன்னொரு விஷயம் சொல்லணும்! அது கொஞ்சம் விசித்திரமாக தான் இருக்கும்! ஆனால் உண்மை!"

"டேய், என்னடா பில்டப் எல்லாம் கொடுக்கிறே? என்ன விஷயம்னு சீக்கிரமா சொல்லு "

"அவங்க வீட்டில் ஒரு குட்டிப் பையன் இருக்கிறான்! என்ற வசந்தன் தனக்கு தெரிந்த விவரத்தை சொன்னான்!

"இதென்னடா கதை? திடீரென்று யாரோ ஒருத்தர் குழந்தையை, கொடுத்தால் அவங்க கேள்வி கேட்காமலா வாங்கியிருப்பாங்க? அதுவும் அவங்க ஒரு டாக்டர் வேற, அவங்களுக்கு சட்டம் பற்றி தெரியாதா என்ன? இதுல வேற ஏதோ விஷயம் இருக்குடா!" என்றான் ரிஷி,

"எனக்கும் அப்படித்தான் தோனுதுடா, ஏதோ ஒரு காரணத்தினால் தான் அந்த குழந்தையை வளர்க்க சம்மதிச்சிருக்காங்க என்பது என்னோட கணிப்பு!"

"சரி, அது அவங்க சொந்த விஷயம்! நாம எப்போ இன்பா வீட்டுக்கு போகலாம்னு சொல்லுடா!"

"அதைத்தான் சொல்ல வந்தேன்டா, நாளைக்கு அந்த குட்டிப் பையனோட பிறந்த நாளாம்! நான் இங்கே வர்றதா, என் அம்மா இன்பாவோட அம்மாவுக்கு தகவல் சொன்னப்போ, குட்டிப்பையனுக்கு மூன்றாவது பிறந்தநாள், அவசியம் வசந்தை வரச் சொல்லுங்கனு சொன்னாங்களாம்! அதனால நாளைக்கு சாயந்திரம் நீ ரெடியா இரு! நான் வந்து உன்னை கூட்டிக் கொண்டு போகிறேன்! சரி வா, இப்போ, போய் சாப்பிட்டு கிளம்பலாம்! உன் ஆபீஸ்ல என் கார் நிற்குது! நான் வந்த வேலையை பார்க்கணும்டா!"

"நாளைக்கு வரை காத்திருக்கணுமாடா.. ஹூம்? என்று பெருமூச்சுடன் எழுந்தான் ரிஷி!

"ஒரு ராத்திரி தானேடா? பொறுத்துக்கோ! " என்ற வசந்த் சாப்பாட்டுக்கான ஆர்டரை கொடுத்தான்!

"சரி, நீ ராத்திரி வேற எங்கேயும் தங்க வேண்டாம்! எங்க வீட்டுல வந்து ஸ்டே பண்ணனும் சொல்லிட்டேன்!" என்றதும் வசந்தனின் முகம் அதுவரை இருந்த இளக்கம் மாறி இறுகிப் போயிற்று!

"என்னாச்சு வசந்த்? ஏன் உன் முகம் மாறிடுச்சு? எங்க வீட்டுல வந்து தங்கிக்கிறதுல என்னடா பிரச்சினை?" நான் வந்து உங்க வீட்டில் தங்கியிருந்தேன்ல?"

"இல்லைடா, அது வேற, இது வேறடா! இன்பா வீட்டுல கூட வந்து தங்கிக்கத்தான் சொன்னாங்க! அவங்களுக்கு சிரமம் தரவேண்டாம்னு தான் நான் வெளியே ரூம் போட்டுட்டேன்! அதனால அங்கேயே தங்கிக்கிறேன்!"

"வசந்த், என்கிட்டே என்னடா மறைக்கிறே? எங்க வீட்டில் யாரும் உன்னை ஹர்ட் பண்ணிட்டாங்களாடா? எதுவானாலும் சொல்லுடா! உன்னை நான் எப்போதும் விட்டுத்தர மாட்டேன்டா! அது உனக்கே தெரியும்ல? ப்ளீஸ் வசந்த்!

"அப்படி ஏதும் நடக்கவில்லை ரிஷி. ஆனால் இது வேற விஷயம்டா. இப்ப நான் அதுபத்தி பேசுற மூடில் இல்லை! மன்னிச்சிடு ரிஷி!இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதே ப்ளீஸ்!"

"சரிடா, ஆனால் நானும் உன்கூட வந்து ரூம் ஷேர் பண்ணிக்கிறேன்! அது ஓகே தானே?"

"அது டபுள் ஓக்கேடா! ஆனால் உங்க வீட்டில் கேட்க மாட்டாங்களா?"

"நிச்சயமாக கேட்பாங்க! இது இப்போ எல்லாம் வழக்கமாகிவிட்டது வசந்த் ! கல்யாண பேச்சு எடுக்கும் போது பிஸினஸ்னு சொல்லிட்டு வெளியூர் போயிடறது! இப்பவும் அப்படித்தான் நினைச்சுப்பாங்க!" அவன் சொல்லும்போதே வெளியே பேச்சுக் குரல் கேட்டது! வசந்தன் எட்டிப் பார்த்தான்!

ஆர்டர் செய்திருந்த உணவு வந்திருந்தது! பரமனை அழைத்து வசந்தன் பணத்தை
கொடுத்தனுப்பினான்!

சற்று நேரத்தில் பரமன் வந்து சாப்பிட அழைத்தான்!

ரிஷியிடம் வசந்தன் உண்மை சொல்வானா? உண்மை தெரியும் போது அவனது நிலை என்னவாக இருக்கும்??
____
அன்று இரவு ரிஷி நண்பனுடன் ஹோட்டல் அறையில் தங்கிக் கொண்டான்!

வசந்தன் தன் மகள் சந்தனாவைப் பற்றியும் மருமகள் மகிளாவைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான்!
கல்லூரி நாட்களைப் பற்றியும் பேசினர்! ரிஷி, கோவையில் நடந்தவற்றை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டான்! இன்பாவின் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றான்!

தன் கைப்பேசியில் இருந்த வித்யாவின் வரவேற்பில் எடுத்த படத்தை அவனது

வசந்தனிடம் ரிஷி பகிர்ந்தவற்றை எல்லாம் மறைக்காமல் தெரிவித்தான்! அதில் முக்கியமான விஷயம் அவன் தனியாக தொழில் தொடங்க நினைத்தது, பிறகு அந்த கனிகா விஷயத்தையும் கூட தெரிவித்தான்!

அன்று இரவு ரிஷியின் கனவில் இன்பா வந்தாள், என்றுமில்லாதபடி , அவளது முகத்தில் சோகத்தின் சாயல்.. அவளது கண்கள் கண்ணீரில் பளபளப்பதைப் போலிருக்க.. "சுரபி.. என் சுரபி!" எங்கே இருக்கிறாய் கண்மணி? சீக்கிரமாக என்னிடம் வந்துவிடு, கண்ணம்மா! என்றவாறு சட்டென்று தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தான்!

அசைவை உணர்ந்து வசந்தனும் எழுந்து விளக்கை எரியவிட்டான்! ரிஷியின் கண்கள் கலங்கியிருந்தது கண்டு பதறிப் போனான்!

"என்னடா? ஏன்டா?

"சுரபி .. சுரபி கண்ணீரோடு கனவில் வந்தாளடா! இன்று வரை அவளது முகம் மட்டும், அதுவும் சிரித்தபடி தான் பார்த்திருக்கிறேன்! அவளது கண்ணீரை என்னால தாங்க முடியவில்லைடா!"

வசந்தன் செய்வதறியாது திகைத்துப் போனான்!


84. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!


ரிஷி கனவு கண்டு கலங்கிப் போய் அமர்ந்திருந்ததைப் பார்த்து வசந்தனுக்கு முதலில் உண்டானது திகைப்புதான்! அத்தோடு சற்று நிம்மதியும் ! ஒருவாறு சுதாரித்தவன்,

"ரிஷி, இன்பாவுக்கு ஒன்றும் ஆகியிருக்காதுடா, நீ மனதைப் போட்டு அலட்டிக்காதே! நாளைக்கு நாம் அவங்க வீட்டுக்கு போவோம். அதற்கு முன்பு நான் என் மாமனார் பிசினஸ் விஷயமாக ஒருத்தரை பார்க்க போகணும்! நீ ஆபீஸ் போறதுனா போய்விட்டு வா! ஈவினிங் நாம சேர்ந்து அவங்க வீட்டுக்கு போகலாம்! அதனால எதையும் நினைச்சு கவலைப்படாமல் பேசாமல் தூங்குடா!"

சிறு பிள்ளைக்கு சொல்வது போல சொல்லி படுக்க வைத்து தட்டிக்கொடுத்தான் வசந்தன்! நண்பன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு ரிஷி மெல்ல தூங்கிப் போனான்!

நண்பனின் ஞாபகம் விரைவில் மீண்டுவிடும் என்ற நம்பிக்கை வசந்தனுக்கு வந்துவிட்டது! ஆனால் இன்பா எங்கே? உயிரோடு தான் இருக்கிறாளா? அப்படி இருந்தால் ஏன் அவளது குடும்பத்துடன் வந்து சேரவில்லை?
கனவு கண்டுவிட்டு இதோ கலங்கி போய் இருக்கிறானே! இத்தனைக்கும் முழுதாக நினைவு வரவில்லை! ரிஷிக்கு நினைவு வரும்போது இன்பாவை காணவில்லை என்றால் அவன் எப்படி தாங்குவான்? ஏனெனில் காதல் சொல்லாத போதே அவளை விட்டுப் பிரிந்து இருக்க முடியாது என்றவன் அவன்!

பல்வேறு யோசனையுடன் படுத்து இருந்தான் வசந்தன்.

💗💗💗

பழைய நினைவின் தாக்கத்தில் இருந்தார் ஆனந்தன்! சாருபாலாவுக்கு செய்த துரோகமும் , அநியாயமும் அவருக்கு காலம் கடந்த உண்டான ஞானோதயம் காரணமாக, மனதுக்குள் மருகிக் கொண்டிருந்தார்! அதன் காரணமாக அவர் அனிதாவின் பக்கமே போகவில்லை! இரவு உணவைக் கூட மறுத்துவிட்டு படுத்துக் கொண்டார்! ஆனால், பணியாள் பால் கொணர்ந்து வைத்துவிட்டுப் போனான்! வேண்டா வெறுப்பாக குடித்துவிட்டு படுத்தவருக்கு தூக்கம் வரவில்லை! அதை அவர் தொலைத்து பல ஆண்டுகள் ஆகிறது என்பது வேறு விஷயம்! மிகுந்த அசதி காரணமாக தூங்கினால் தான் உண்டு! அல்லது மாத்திரையின் துணையோடு தான் தூக்கம்! ஆனால் இன்றைக்கு எல்லாம் நினைக்க நினைக்க தான் செய்ததின் அளவு என்றுமில்லாமல் மனதை குற்றுயிராக்கியது!

சும்மா இருந்தவளை காதல் சொல்லி பலவந்தமாக கல்யாண பந்தத்தில் இணைத்து, குழந்தையும் கொடுத்து, அவள் காதலை சொல்ல வந்தபோது, அவளுக்கு துரோகம் செய்து, பெற்ற பிள்ளையை பிரித்து, என்று ஒரு சின்னப் பெண்ணின் மனதை முறித்த பாவத்தை எப்படி கழுவப் போகிறேன்!" என்று படுக்கையில் அமர்ந்தபடி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்!

இப்போது அவள் எங்கே இருக்கிறாள் ? எப்படி இருக்கிறாள்? ஒரு விவரமும் தெரியாது! அவருக்கு இருக்கும் இன்றைய செல்வாக்கிற்கு, அதை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை! அப்படி கண்டுபிடித்த பின் இன்னும் அதிக சித்ரவதையை அனுபவிக்க நேரிடும் என்று தான் சும்மா இருந்துவிட்டார்! இனி அவள் இழந்த வாழ்க்கையை என்னால் திருப்பி தர முடியாது தான்! ஆனால் ஒரே ஒரு நல்ல விஷயமாக, பெற்ற பிள்ளையை அவளிடம் ஒப்படைக்க முடியும்! அதுதான் என்னால் இப்போது செய்யக்கூடிய ஒரே விஷயம்! அதனால ஏற்படப்போகும் பின்விளைவுகள் என்னை ரொம்பவே பாதிக்கும் தான்!

"உண்மைகளை எழுதி வைத்துவிட்டு ஒரு நொடியில் தற்கொலை செய்து கொள்ளலாம் தான்! ஆனால் அது கோழைத்தனம்! நான் உயிரோடு இருந்து, தண்டனையை அனுபவிக்க வேண்டும்!"

"சாருவுக்கு நான் செய்த அநியாயத்துக்கு ,எனக்கு கொடூரமான சாவே வந்தாலும் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்!"

இரவு முழுவதும் ஏதேதோ நினைவில் தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தவர், ஒரு முடிவுக்கு வந்த பிறகே உறங்கினார்!

❤️❤️❤️

மறுநாள்

காலையில் நண்பர்கள் இருவரும் கிளம்பி அவரவர் வேலைகளை பார்க்க சென்றனர்!

அலுவலகம் வந்த பின்னர், முக்கியமான கோப்புகளை எல்லாம் பார்த்து முடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பி சென்றான் ரிஷி!

மதிய உணவு தயார் செய்வதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த அனிதா, மகனை கண்டதும், வேலையாளிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வந்தார்!

"என்னாச்சு ரிஷி? ராத்திரி நீ ஏன் வீட்டுக்கு வரவில்லை? போன் செய்தாலும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது? ஏன் இப்படி பண்றே கண்ணா? எனக்கு ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை!" என்றார்.

ரிஷிக்கு தப்பு செய்த உணர்வு உண்டாயிற்று! கூடவே வசந்தன் வீட்டிற்கு வர மறுத்தது நினைவு வந்தது! லேசா முகம் இறுக,"வசந்த் வந்திருக்கிறான்! அதான் அவன் கூட ஸ்டே பண்ண போய்ட்டேன்!" தாயின் முகத்தை உன்றி கவனித்தாவாறே ரிஷி சொல்ல, அனிதாவின் முகம், ஒரு கணம் கடுத்தது, அதை நொடியில் மாற்றிக் கொண்டு, " ஓ! சந்தோசம் கண்ணா! ஏன் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கலாமே ராஜா? இவ்ளோ பெரிய வீட்டில் அவனுக்கு இடமில்லையா? " என்றார்!

ரிஷி தாயின் முக மாற்றத்தை குறித்துக் கொண்டான்! ஆக அவனுக்கு தெரியாமல் ஏதோ நடந்திருக்கிறது! அம்மாவிடம் கேட்டு பிரயோசனம் இல்லை! வசந்தனிடம் இது பற்றி கேட்டே ஆகவேண்டும், என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்!

"அவனுக்கு என்னவோ இங்கே வர பிடிக்கவில்லை அம்மா! காரணம் கூட சொல்ல மாட்டேன்னுட்டான்! அதான் நான் அவனோட போய் தங்கிட்டேன்!"

அனிதா அவசரமாக யோசித்து, " அது ஒன்னுமில்லை ரிஷி, வித்யா கல்யாணத்துக்கு நாம யாரும் போகலைல அந்த கோவம் இருக்கும்! கலயாணம் முடிஞ்சு பிறகும் நாம யாரும் போய் கல்யாணம் பற்றி விசாரிக்கவும் இல்லை! அதனால இருக்கலாம்!"

"ம்ம்ம்.. இருக்கலாம் அம்மா! சமையல் முடிஞ்சதும் சொல்லுங்க! நான் சாப்பிட்டதும் வெளியே கிளம்பனும்! என்றவன், " ஆமா ரகு எங்கம்மா? "

"இன்னும், 15 நிமிஷம் பொறுத்துக்கொள் கண்ணா! சாப்பாடு தயாராகிடும்! ரகு, இன்னிக்கு அதிசயமா சீக்கிரமா எழுந்து குளிச்சு சாப்பிட்டு எங்கேயோ கிளம்பி போனான்! மதியம் சாப்பிட வரமாட்டேன்னு சொன்னான்! ஏதும் முக்கியமான விஷயமா அவனை பார்க்கணுமா கண்ணா? "

"அதெல்லாம், இல்லைம்மா! சும்மா தான் கேட்டேன்! ஆமா அப்பா வீட்டில் தானே இருக்காங்க?"

முந்தினம் கணவர் வெகு நேரம் அறைக்குள் பூட்டிக்கொண்டு இருந்ததும், அதன் பிறகு அவர் மனைவியிடம் முகம் கொடுத்து சரியாக பேசாததும், சாருபாலாவின் நினைவு வந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டு வழக்கம் போல விலகி இருந்து கொண்டார்! மீறி போனால் நிச்சயம் எரிந்து விழுவார்! இன்றும் காலையில் அறைக்கு பலகாரம் கொடுத்து அனுப்பியதோடு சரி! மகன் கேட்டதும் என்ன சொல்வது என்று தடுமாறிய போது,

"ரிஷி, கொஞ்சம் என்னோட ரூம்க்கு வந்துட்டு போப்பா " என்று ஆனந்தன் குரல் கொடுக்க, அனிதா, அசுவாசமாகி தன் வேலையை பார்க்க போனார்!

ரிஷி தாயின் ஒவ்வொரு அசைவையும் இன்று உன்னிப்பாக அவதானித்தான்! இத்தனை காலமாக அவனுக்கு தெரியாமல் அந்த வீட்டில் ஏதோ நடந்து கொண்டிருக்கிறதோ? அம்மாவும் அப்பாவும் நேற்று அவனது கல்யாண விஷயத்தில் ஒரே குரலாக பேசினார்கள்! இன்று அவர்களுக்குள் என்ன பிணக்கு? கணவன் மனைவி என்றால் சண்டை ஊடல் எல்லாம் இருக்கும் தான்! ஆனால் இங்கே அதற்கான எந்த முகாந்திரமும் இல்லையே! வீட்டில் எந்த குறையும் இல்லை! சொல்லப்போனால், அவர்கள் வீட்டிற்கு சொந்த பந்தங்கள் என்று அதிகமாக வரப்போக யாரும் இருந்தது இல்லை!யோசனையுடன் தந்தையின் அறைக்குள் சென்றான்!

"உட்கார் ரிஷி!" என்று எதிரே இருந்த இருக்கையை காட்டினார் ஆனந்தன்!

"என்ன விஷயம்ப்பா? ஏன் டல்லா இருக்கீங்க? உடம்புக்கு முடியலையாப்பா? வாங்க, டாக்டர்க்கிட்டே போய் வரலாம்!" என்று பரபரத்தான்!

மெலிதாக புன்னகைத்தவர்," எனக்கு ஒன்றுமில்லை ரிஷி! நீ உட்கார்! அம்மாக்கிட்டே பேசும்போது கேட்டேன், வசந்த் வந்திருக்கிறான் என்று! எப்படி இருக்கிறான்? "

தந்தையின் புதிய பரிமாணம் ரிஷிக்கு, ஆச்சரியமாக இருந்தது! பொதுவாக அவர் பேசுவது பிஸினஸ் மட்டும்தான்! லாபம் நஷ்டம் கணக்குகளை பற்றி தான் கேட்பார்! அவன் நண்பர்கள் பற்றி என்றுமே கேட்டது இல்லை!

"நல்லா இருக்கிறான் அப்பா! அவன் குடும்பம் மொத்தமும் திருநெல்வேலிக்கு போய் செட்டில் ஆகிட்டாங்க! இப்ப அவனோட மாமனார் பிஸினஸ் வசந்த் பார்த்துக்கிறானாம்!"

"சந்தோஷம்ப்பா! நல்லா இருக்கட்டும்! உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ரிஷி!

"என்ன அப்பா? புது பிராஜக்ட் பத்தியா?"

"இல்லை ரிஷி ! அது பற்றி எல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை! உன்னைப் பற்றித்தான் எனக்கு கொஞ்சம் கவலை! எனக்கு வயது ஆகிக் கொண்டே போகிறதே! எப்போ என்ன ஆகும் என்று தெரியாது! அதற்குள்ளாக ஒரு பேத்தியோ பேரனையோ பார்த்துவிட்டால் கொஞ்சம் நிம்மதியாக கண் மூடுவேன்ல அதுதான்...!

"ப்ச்.. ஏன் அப்பா இப்படி பேசுறீங்க? உங்களுக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது? எதுக்கு இந்த பேச்சு இப்போ?"என்று கடிந்து கொண்டான்!

"வயசுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் இல்லை ரிஷி! ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் தானே? சரி சரி இரு நான் விஷயத்துக்கு வர்றேன், "என்னடா அப்பா மறுபடியும் கேட்கிறாரே என்று நினைக்காதே ரிஷி! உன் மனதில் யாரையாவது நினைச்சுட்டு இருக்கிறாயா? அப்படி இருந்தால் சொல்லு! அவளையே உனக்கு கட்டி வைக்கிறேன்! அவள் எப்படி இருந்தாலும் சரிதான், உனக்கு பிடிச்சிருந்தால் போதும் மற்றது எதுவும் பெரிசில்லை! சொல்லுப்பா!"

அன்றுவரை தந்தை இது போல அமர்த்தி பேசியதில்லை! ஆனால் இப்போது பேசுவது மனதுக்கு பிடித்திருந்தது! நெருக்கமாக உணர்ந்தான் ரிஷி! அத்தோடு அவர் தன் முடிவு பற்றி எல்லாம் பேசியதில் மனம் சற்று இளகியிருக்க, அது மட்டுமின்றி, அவனுக்கு இப்போது இன்பாவை தேட வேண்டிய சூழ்நிலை! அதனால் தொழிலில் அவனால் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றவில்லை! தன் மனதில் இருப்பதை சொல்ல விளைந்தான்!

"அப்பா எப்படி சொல்வது என்று தெரியவில்லை! நேற்று வரை என் வாழ்வில் ஒரு பெண் இருப்பதையே நான் அறியவில்லை! ஆனால் இப்போது என்னை விரும்பும் பெண்ணொருத்தி இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்! ஆனால் அவள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியவில்லை! நிச்சயமாக அவளை கண்டுபிடித்து நான் கைப்பிடிப்பேன் அப்பா! அவளுடைய சொந்தங்கள் பற்றி கேள்விப்பட்டேன்! முதலில் நான் அவர்களை சந்திக்க வேண்டும் அதன்பின் அவளை கண்டுபிடிப்பது எப்படி என்று பார்க்க வேண்டும்!"

"நீ சொல்றது புதிர் போல இருக்குது ரிஷி! ஆனாலும் உன்னை விரும்பும் அந்தப் பெண் தான் என் மருமகள்! அதில் எந்த மாற்றமும் இல்லை! உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன்!"

"சோ, நைஸ் ஆஃப் யூப்பா! என்றவன்,"அப்பா,கொஞ்சம் நாள் பிசினஸில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன்! அதற்கு மட்டும் நீங்கள் எனக்கு அனுமதி தரவேண்டும்!"

"அட, என்ன ரிஷி , இப்படி அனுமதி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? இப்படி விஷயம் என்று சொன்னால் போதாதா? உனக்கு வேண்டிய அவகாசம் எடுத்துக் கொள்! என் மருமகளை கண்டுபிடித்து கூட்டிட்டு வா! எனக்கு அது போதும்! பிஸினஸ் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்!"

"இல்லை அப்பா, இப்போதுதானே உங்களுக்கு வயதாகிறது என்றீர்கள்! அதனால் உங்களுக்கு வேலைப்பளு கொடுக்க மாட்டேன்! ரகுவை உங்களுக்கு உதவியாக இருக்கச் செய்வது என் பொறுப்பு! நான் சொன்னால் அவன் நிச்சயமாக கேட்பான்! அவனுக்கும் பொறுப்புக்களை ஏற்றுப் பழக வேண்டும்! என்ற ரிஷி லேசாக சிரித்துக் கொண்டு,"நேற்று நான்தான் அவன் இன்னும் கொஞ்சம் காலம் சுதந்திரமாக இருக்கட்டும் என்று சொன்னேன் ! இன்றைக்கு யோசித்துப் பார்த்தால் காலத்தால் பயிர் செய்வதே சிறந்தது என்று உணர்கிறேன்! அதனால தான் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது! நீங்கள் என்ன சொல்றீங்க அப்பா?"

"ஐ அக்ரி வித் யூ ரிஷி! ரகுவை பழக்கி விட்டுடு மேற்கொண்டு நான் பார்த்துக் கொள்கிறேன்!"
அவர் சொல்லும்போதே,

"ரிஷி சாப்பாடு தயாராகிடுச்சுப்பா, அப்பாவை கூப்பிட்டுக் கொண்டு நீயும் சாப்பிட வா ராஜா!" என்ற குரலில் ஆனந்தனின் முகம் சட்டென்று இறுகிப் போயிற்று! ரிஷி சரியாக அதை அவதானித்துக் கொண்டான்!

ரிஷிக்கு சுத்தமாக ஒன்றும் விளங்கவில்லை! என்ன நடக்கிறது? சாப்பிடத்தானே அழைத்தார்கள்? ஹூம், பொறுத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும், என்று நினைத்தவனாக, "அப்பா வாங்க சாப்பிடலாம்!" என்றவாறு எழுந்தான்!

"இல்லை, எனக்கு பசி இல்லை,நீ போய் சாப்பிடு கண்ணா! நான் அப்புறமாக சாப்பிட்டுக் கொள்கிறேன்! " என்றார்!

"நேரம் ஆகிவிட்டது அப்பா, இனி நானும், நீங்களும் இப்படி சேர்ந்து சாப்பிடுவது என்பது நடக்குமா என்று தெரியவில்லை!"

"ரிஷி!" என்றார் அதிர்ந்து போனவராக!

"ஆமாம் அப்பா, இத்தனை காலங்களை வீணாக்கிவிட்டேன்! இனி, ஒரு வினாடியை கூட வீணாக்க கூடாது என்று நினைக்கிறேன்! அதனால் நான் இன்றைக்கு இரவே வசந்தனுடன் கிளம்புகிறேன்!" என்றான்!

மகன் விளக்கம் கொடுத்த போதும் அவன் சொன்ன வார்த்தைகள் ஆனந்தனை உண்மையில் நிலைகுலைய செய்திருந்தது!