• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

85 & 86. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ரிஷி உணவருந்திவிட்டு, பிற்பகலில் வெளியே கிளம்பினான்! வசந்தனை தொடர்பு கொண்டால், அவன் வந்த வேலை இன்னும் முடியவில்லை என்று சொன்னான்! அத்துடன் அவன் ஒரு வேலையும் கொடுத்தான்!

"ரிஷி, நான் வந்து கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும்போல.. அதனால் நீ அந்தக் குட்டிப் பையனுக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கி வந்துவிடுடா!" என்றான் வசந்தன்!

"சரிடா, வாங்கிட்டு வர்றேன்! நீ லேட் பண்ணிடாதே!" என்ற ரிஷி, கொட்டிவாக்கம் பிரதான சாலையில் இருந்த குழந்தைகளுக்கான கடையின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்!

ரிஷி இப்படி கடைகளுக்கு சென்று குழந்தைகளுக்கு என்று பரிசுப் பொருள் வாங்கிப் பழக்கம் இல்லை! ஆகவே என்ன வாங்குவது என்று அவனுக்கு புரியவில்லை! கடையில் நிறைய பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் என்று விதவிதமாக இருக்கத்தான் செய்தது! சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது கடைச்சிப்பந்தி உதவிக்கு வந்தான்!

"சார், என்ன வேணும்னு சொல்லுங்க "

"அது.. அதுதான் தெரியவில்லை! பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க வேண்டும்!"

"சரி சார், எத்தனை வயசு குழந்தை ?"

"ம்.. சின்ன பையனைக்கு மூன்றாவது பிறந்தநாள்!"

"பையனுக்கா சார்? விளையாட்டு சாமான் தான் பசங்க விரும்புவாங்க!" என்ற சிப்பந்தி, என்ன விலையில் என்று சொல்லுங்க"

ரிஷி சொன்னதும், சிப்பந்தி, ஆண்பிள்ளைகள் விளையாடும், பேட்டரியில் இயங்கும் நவீன விளையாட்டுப் பொருள் ஒன்றை தேர்வு செய்து, அதை செயல்படுத்தியும் காட்டினான்!

ரிஷிக்கு அந்த பொருள் பிடித்துவிட்டது! அதை பேக் செய்யச் சொன்னவன், குழந்தைகள் ஆடைகள் பகுதிக்கு சென்றான்! சிறுவர்கள் அணியும் வேஷ்டி - சட்டை செட் ஒன்றை வாங்கி அதையும் பரிசுப் பொருள் போல காகிதம் சுற்றி பேக் செய்ய சொன்னான்!

அவன் கடையில் இருந்து வெளியே வரும் போது, வசந்தன் போன் செய்தான்!

"வேலை முடிஞ்சது ரிஷி! நீ இப்போ எங்கே இருக்கிறாய்?"

ரிஷி, விவரம் சொல்லவும், "சரி, நீ ஹோட்டலுக்கு போய் பிரஷ்ஷப் பண்ணிட்டு காத்திரு! நான் கொஞ்சம் நேரத்தில் வந்துடுறேன், சேர்ந்து கிளம்பலாம்" என்றான் வசந்தன்!

ரிஷிக்கு ஒருவித பரபரப்பு உள்ளூர உண்டாயிற்று! இன்பாவின் வீட்டினர் வித்யா திருமண சமயத்தில் அவனை பார்த்திருக்கிறார்கள்! ஆனால் அவனும் இன்பாவும் காதலித்தது யாருக்கும் தெரியாது என்று வசந்தன் ஏற்கனவே சொல்லியிருந்தான்! அதனால் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசிவிடக் கூடாது என்று எச்சரித்தும் இருந்தான்!

ஹோட்டலில் காரை பார்க் செய்து விட்டு, ரிஷி, அறைக்குப் போகாமல் அங்கேயே காத்திருந்தான்! சற்று நேரத்தில் வசந்தன் வந்ததும், இருவரும் அறைக்கு சென்றனர்! வசந்தன் உடை மாற்றிக் கொண்டு வர நண்பர்கள் இருவரும் வசந்தனின் காரில் கிளம்பினர்!

இன்பாவின் வீட்டில்..

"வர்ஷா, கண்ணா, அசையாமல் நில்லுடா குட்டி!" சாந்தி குட்டிப் பையன் வர்ஷனுடன் போராடிக் கொண்டிருந்தார்!

"என்ன சாந்தி, வழக்கம் போல ட்ரெஸ் போட மாட்டேங்கிறானா?" என்றவாறு சாருபாலா வந்தார்!

"ஆமா, அண்ணி, இவனுக்கு உடம்பில் ட்ரெஸ் போட்டுக்கிறதுல என்னதான் பிரச்சினையோ? இவன் எப்படி, யூனிபார்ம் போட்டுட்டு ஸ்கூலுக்கு போய் இருக்கப் போறான்னு தெரியலை!" என்று அலுத்துக் கொண்டார்!

"கொடு, நான் போட்டு விடுறேன்! வாடா கண்ணா, சாரு பாட்டி சொன்னா சமத்தா கேட்பீங்கதானே செல்லம்?" என்று உடையுடன் குழந்தையிடம் சென்றார் சாருபாலா!

"வேணா.. வேணா.. சாருபாத்தீ.."

"நாம இப்ப வெளியே போறோம், அப்படின்னா ட்ரெஸ் இல்லாம எப்படி போறது? உனக்கு நான் ஒரு கதை சொல்வேனாம் அதைக் கேட்டுட்டே நீ குட் பாயா ட்ரெஸ் போட்டுப்பியாம்!" என்று கதை சொன்னபடியே உடையை அவனுக்கு மாட்டிவிட்டார்!

கதை கேட்கும் ஆர்வத்தில் உடையை மாட்டிக்கொண்டான் அந்த சின்ன கண்ணன் வர்ஷன்!

மூன்று பெரியவர்களுக்கும் அந்த குட்டிப் பையன் தான் இப்போது ஒரே பிடிப்பு என்றான பிறகு, அவர்கள் வாழ்க்கை சற்று இலகுவாக இருக்கிறது!

"அக்கா, நீ போய் முதலில் தயாராகிட்டு வா! நான் குட்டிப்பையனைப் பார்த்துக்கிறேன்! என்ற சுரேந்திரன், "சாந்தி, வசந்தன் வர்றதா சொன்னியே? போன் செய்தானா?" என்றார்!

"ஆமாங்க, அவனோட நண்பனை அழைச்சிட்டு வர்றதாக சொன்னான்! நான் போய் சாப்பாடு ரெடியாகிட்டதானு பார்த்துட்டு வர்றேன்!"

சாருபாலா, உடை உடுத்த அறைக்குள் சென்றார்! அலமாரியை திறந்தவரின் கண்கள் அங்கே இருந்த மருமகளின் புகைப்படத்தில் நிலைத்தது! கண்களும் நீரில் நிறைந்தது! கண்ணம்மா எங்களை எல்லாம் இப்படி தவிக்க விட்டுப்போய்விட்டாயே?" என்று வாய்விட்டு சொன்னவர், மருமகளின் யோசனையில் லயித்துப் போனவராக, இயந்திர கதியில், புதிதாக வாங்கிய சில்க் காட்டன் புடவையை எடுத்து கட்டத் தொடங்கினார் சாரு!

சற்று நேரத்தில் கதவை தட்டும் சத்தத்தில், நிகழ்வுக்கு திரும்பினார்! "என்ன சாந்தி?"

"அண்ணி, அவர் வந்துட்டார்! சீக்கிரம் கீழே வாங்க!" என்று குரல் கொடுத்தார்!

" சரி, சரி, அவருக்கு குடிக்க ஏதாவது கொடு, நான் பத்து நிமிஷத்தில் வந்திடுறேன்!" என்று புடவையை உடுத்தி முடித்து, தலையை சீராக வாரி, பிண்ணலிட்டுக் கொண்டவர், சாந்தி வைத்துவிட்டுப் போயிருந்த, மல்லிகை சரத்தையும் ரோஜாவையும் அழகாக சூடிக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தார்!

வந்திருப்பது யார்? கண்டுபிடிச்சிட்டீங்க தானே? ஆமா அவரே தான்!"

🩷

வசந்தனும் ரிஷியும் இன்பாவின் வீட்டை அடைந்தபோது, வாசலில் உயர்ரக கார் நின்றிருந்தது!

இருவரும் உள்ளே வெராண்டாவை தாண்டி, கூடத்திற்குள் நுழைய, அங்கே யாரையும் காணோம், பக்கவாட்டு அறையில் இருந்து வெளிப்பட்ட சாந்தி ஓடி வந்து வரவேற்றார்!

"வா வசந்த், வாங்க தம்பி ! எப்படி இருக்கீங்க? என்று விசாரிக்கவும், ரிஷிக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்! அவனை ஞாபகம் வைத்திருக்கிறாரே, இந்த பெண்மணி!

"நல்லா இருக்கிறேன் ஆன்ட்டி! நீங்க எப்படி இருக்கீங்க?" பதிலுக்கு கேட்டு வைத்தான் ரிஷி!

"கடவுள் கிருபையால் நல்லா இருக்கிறேன்! நீங்க உட்காருங்க, வசந்த் நீயும் உட்காரப்பா! நான் இதோ வருகிறேன்" என்று உள் புறமாக விரைந்தார்!

வீட்டை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவனின் பார்வையில், சற்று முன் சாந்தி வந்த அறையின் வாசலில் நின்றிருந்த சுரேந்திரனின் கடுத்த முகத்தை பார்த்து திடுக்கிட்டான் ரிஷி! நண்பனின் பார்வை போன திக்கில் பார்த்த வசந்தனும் துணுக்குற்றான்!

"இவருக்கு என்னாயிற்று? ஏன் வழக்கத்திற்கு மாறாக இவர் முகம் இத்தனை கடுமையாக இருக்கிறது?

"யாருடா இவரு? ஏன் என்னை இப்படி பார்க்கிறார்? ஒரு வேளை ...என்று மேலே பேச வாயெடுத்தவனை கையமர்த்திவிட்டு, " ஹலோ, அங்கிள், எப்படி இருக்கீங்க?" என்று எழுந்து சென்றான் வசந்தன்!

அவரும் அவனை பார்த்ததும் முகத்தை சீராக்கிக் கொண்டு," நல்லா இருக்கிறேன் ! நிகிலாவையும் குழந்தையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?" என்று அவனது கையைப் பற்றியவர் அடுத்திருந்த அறைக்கு அழைத்துப் போனார்! ஏன் என்று புரியாத போதும் அவரது இழுப்பிற்கு உடன் சென்றவாறு பதிலளித்தான் வசந்தன்!

"பாப்பாவுக்கு சளி, அதனால் ட்ராவல் பண்ண வேண்டாம்னு அம்மா சொல்லிட்டாங்க!"

அறைக்குள் சென்றதும்," வசந்த், இனி ஒரு தடவை அவனை இங்கே கூட்டிட்டு வராதேப்பா! ப்ளீஸ்" என்று கை எடுத்து கும்பிட்டார்!

"அங்கிள், என்னாச்சு? ரிஷி ரொம்ப நல்லவன் !

"இருக்கலாம் வசந்த்! ஆனாலும் அவன் இங்கே வராமல் இருப்பது எங்க குடும்பத்துக்கு நல்லது! உனக்கு அவங்க குடும்பம் பத்தி சரியா தெரியாது வசந்த்" சுரேந்திரனின் முகம் கோபத்தில் சிவந்து போயிற்று!

அதே நேரம் கூடத்தில் அமர்ந்திருந்த ரிஷிக்கு ஒன்றும் விளங்கவில்லை! அவனை விட்டுவிட்டு என்ன ரகசியம் பேசுகிறார்கள்? என்று அவன் யோசிக்கும் போதே.. சாந்தி இரண்டு குவளைகளில் குளிர் பானத்துடன் வந்தார்!

"எடுத்துக்கோங்க தம்பி, வசந்த் எங்கே ? என்றார்! அவன் அறையை காட்டினான்!

"அங்கே என்ன பண்றான்? என்றவாறே, கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றார் சாந்தி!

"அவனோட குடும்பம் எப்படியோ அங்கிள், ஆனால் ரிஷி ரொம்ப நல்லவன்! நம்பினவங்களை கை விட மாட்டான்! அவன் என்றைக்குமே பணக்காரன் என்ற கர்வத்துடன் பழகியதில்லை! நான் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போதில் இருந்து அவனை எனக்கு நல்லா தெரியும்! யாருக்கும் ஒன்று என்றால் முன்னால் சென்று உதவக்கூடியவன்! இவனைத் தவிர இன்னும் இரண்டு பணக்கார நண்பர்கள் இருக்காங்க! அவங்க என்னை ரிஷியோட நண்பன் என்ற காரணத்திற்காக தான் ஏத்துக்கிட்டாங்க! "

" என்னாச்சு அத்தான்? கூட வந்த பிள்ளையை அங்கே உட்கார வச்சுட்டு, நீங்க இரண்டு பேரும் இங்கே பேசிட்டு இருக்கீங்க!"

"இந்தா, இவளும் வித்யா கல்யாணத்தில் அவனைப் பார்த்துவிட்டு இப்படித்தான் ரொம்ப புகழ்ந்தாள்! ஆனால் .. என்றவர் பேச்சை நிறுத்திவிட்டு, "வசந்த் நான் சொன்னது ஞாபகம் வச்சுக்கோ அவ்வளவுதான்! " என்றவர் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினார்!

வசந்தனுக்கு உள்ளபடியே அவர் ஏன் ரிஷியின் குடும்பத்தை வெறுக்கிறார் என்று புரியவில்லை! யோசனையுடன் வெளியே வந்தவன், ரிஷி கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, அருகே சென்றான்!

நண்பனை நிமிர்ந்து பார்த்த ரிஷி, "என்னாச்சுடா? அவர் யார் ? ஏன் அப்படி பார்த்தார்? நான் உண்மையில் ரொம்ப பயந்துட்டேன்!" என்றான்!

"அவர் தான் இன்பாவோட அப்பா, மிஸ்டர் சுரேந்திரன்! அந்த ஆன்ட்டி தான் அவளோட அம்மா! "

"ஓ! என் மாமனார் மாமியார்னு சொல்லு! ஆனால் என் மேல் மாமாவுக்கு என்னடா கோபம்?" என்றவனிடம்,

"ஷ் .. சத்தமா பேசாதேடா! என்று அடக்கிவிட்டு,அவர் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டார்டா! அவருக்கு தெரிஞ்ச குடும்பத்து பையன் மாதிரியே நீ இருக்கிறதால அவன் தான் நீ ..என்று நினைச்சுட்டார்! அந்தக் குடும்பத்தால் ஏதோ இவங்களுக்கு கஷ்டம் ஏற்பட்டிருக்கும் போல.. அதான் நான் விளக்கம் சொல்லிட்டு வந்தேன்!"

"ஓ..! அவ்வளவுதானா? என்று ஆசுவாசமாக இலகுவாக அமர்ந்தான் ரிஷி!

அப்போது அங்கே சாருபாலா வந்தார்! எதிர்பாராத விதமாக மகனை அங்கே பார்க்கவும், திகைத்து அப்படியே நின்றுவிட்டார்!

"ஐயோடா ! இவங்களும் என்னை தப்பா தான் நினைக்கிறாங்க போலடா!" என்றான் ரிஷி பதற்றமாக!

வசந்தனும், அவரைப் பார்க்க, அவரோ ரிஷியின் மீது தான் பார்வையை நிலைக்கவிட்டிருந்தார்! அந்தப் பார்வையில் கோபம் இல்லை, மாறாக வருத்தம், வலி, கண்கள் அவனை தலைமுதல் பாதம் வரை வாஞ்சையுடன் வருடிக் கொண்டிருந்தது!

சுரேந்திரனின் கோபப் பார்வையும், சாருபாலாவின் இந்தப் பரிவான பார்வையும், வசந்தனை சிந்திக்க வைத்தது! கூடவே ஏதோ லேசாக புரிவது போல இருந்தது! உள்ளபடியே அவனது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது!

அப்படி இருக்குமோ...?


86. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!


சாரு பாலாவின் பின்னோடு , குழந்தையுடன், அந்த உயரமான மனிதர் கையில் வர்ஷனை ஏந்தியபடி, அங்கே வந்தார்!

வேரோடியது போல நின்றிருந்த சாருபாலாவைப் பார்த்துவிட்டு, "பாலா.. என்னாச்சு? "என்றவர், இளைஞர்கள் மீது பார்வையை செலுத்தினார்!

சாருவிடம் பதிலின்றி போகவும், "பாலா?"என்று அழுத்தமான குரலில் அழைக்க..

குழப்பத்தில் இருந்த வசந்தன், அந்த மனிதரின் கையில் இருந்த குழந்தையை, கூர்ந்து கவனித்தவன் வியந்து போனான், காரணம், குழந்தை சாருபாலாவின் சாயலில் இருந்தது ! அது எப்படி சாத்தியம்? அவனுக்கு சற்றுமுன் தோன்றிய அதே ஐயம் மீண்டும் எழுந்தது! அவன் மனது சில கணக்குகளை போட, அப்படி நேர்ந்திருக்குமோ? கிடைத்த விடையில் அவனுக்கு.. நம்பவும் முடியவில்லை ! நம்பாமல் இருக்கவும் முடியவில்லை!

சுரேந்திரனைப் போல சாருபாலாவும் தன் மீது கோபம் கொண்டிருப்பாரோ என்று ஐயத்துடன், அம்மாளைப் பார்க்கவும் தான், முன் தினம் மருத்துவமனையில் பார்த்த மருத்துவர், அவர்தான் என்று சில கணங்கள் கழித்த பிறகே ரிஷிக்கு புரிந்தது! உடனே ஆசுவாசமாகி,

"ஹலோ ! டாக்டர் வாட் எ சர்ப்ரைஸ்?" என்றவாறு சாருபாலாவை நோக்கி சென்றான் ரிஷி!

அவனது அசைவிலும் குரலிலும், சாருபாலா சிலைக்கு உயிர் வந்தது!

மகனின் கையைப் பற்றியவரின், உடல் தள்ளாட, அருகே நின்ற நிவன் ஆதித்யா, "ஹே.. பாலா...! என்றவாறு சட்டென்று தாங்கிப் பிடிக்க, அவர் கையில் இருந்து நழுவிய குழந்தையை ரிஷி, லாவகமாக கைப் பற்றிக் கொண்டான் ! முதலில் சிணுங்கிய குழந்தையும், தட்டிக் கொடுக்கவும், புதியவன் என்ற பாகுபாடு இல்லாமல், வாகாக தோளில் சாய்ந்து கொண்டது!

எல்லாம் சில நொடியில் நடந்துவிட்டது!

வசந்தன் பார்வையாளனாக நின்றிருந்தான்!ரிஷியையும் சாருபாலாவையும் மாறி மாறிப் பார்த்தான்! இருவருக்குமான நிற ஒற்றுமை! அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை! இருவரின் கண்கள்! அது ஒரே மாதிரியாக இருந்தது! லேசாக பிரவுன் நிறத்தில் கருவிழிகள் இருவருக்குமே! இதை வைத்து முடிவு செய்ய முடியாது தான்! ஆனால் வசந்தனின் உள்ளம் ஏனோ நிச்சயமாக நம்பியது! அவனது அன்னை சொன்ன கதையின்படி, இது ஒத்துப் போகிறது! ஒரே ஒரு சின்ன ஆதாரம் கிடைத்துவிட்டால் போதும், ரிஷியிடம் உண்மையை சொல்லிவிடலாம்! அதுவரை பொறுத்துதான் போக வேண்டும்!

சாருபாலாவை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்த அந்த மனிதர்,நிவன் ஆதித்யா, "சாந்திம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொண்டு வாங்க!" என்றார்!

சில கணங்களில் தண்ணீருடன் சாந்தியும், அவள் பின்னே சுரேந்திரனும் வந்துவிட்டனர்!

நிவன் ஆதித்யா, சாருவை சோதித்துவிட்டு, "பயப்படும்படியாக ஒன்றும் இல்லை! கொஞ்சம் வீக்கா இருக்காங்க, அவ்வளவு தான்!" என்றவர், அவருக்கு சூடாக பானம் கொணர்ந்து தருமாறு சொன்னார்!

"இதோ கொண்டு வர்றேன் டாக்டர்!"என்று சாந்தி உள்ளே ஓடினார்!

சாருபாலாவின் விழிகள் மீண்டும், மகனிடமே சென்றது! அவன் தோளில் அமர்ந்திருந்த குழந்தையை வியப்புடன் பார்த்தார்! வெளி ஆட்களிடம் சட்டென்று போகாத குழந்தை , எப்படி இவனிடம், ஏதோ அவன் உரிமைப்பட்டவன் போல சமத்தாக அமர்ந்திருக்கிறது?

"டாக்டர் , நீங்க மக்களுக்கு வைத்தியம் பார்க்கிறவங்க, உங்களையும் கவனிச்சுக்கணும் இல்லையா?" என்றான் ரிஷி!

சாந்தி சூடான பானத்துடன் வந்தவர்,"நல்லா சொல்லுங்க, தம்பி! ஒழுங்கா சாப்பிடறது இல்லை! எப்ப பாரு வேலை,வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்!" என்றார் ஆதங்கத்துடன்!

சுரேந்திரனுக்கு அங்கே நிற்கவே பிடிக்கவில்லை! ரிஷியை அங்கே பார்க்க பார்க்க, அவருக்கு அக்காவின் வாழ்க்கையை அநியாயமாக பறித்த ஆனந்தனின் நினைவு தான் அதிகமாக வந்து கொதிப்படையச் செய்தது! அதிலும் அக்காவின் இழப்பை உணர்த்தும்படியாக வந்து நிற்கும் ரிஷியை பார்க்க கடுப்பாக இருந்தது. அக்கா வேறு மகனைப் பார்த்து ஏங்குவது அவருக்கு மிகவும் வேதனையை உண்டாக்கியது! ஆகவே அவரை அங்கிருந்த அப்புறப்படுத்த நினைத்து,

"அக்கா நீ போய் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா! நாங்க அதற்குள் இங்கே கேக் கட் பண்றதுக்கு டேபிள் தயார் பண்ணிடுறோம்!" என்று தமக்கையை உள்ளே அனுப்ப முயன்றார்!

"இல்லை.. சுரேன், நான் இங்கேயே இப்படி ஓய்வாக இருக்கிறேன்! நீங்கள் வேலையை பாருங்க!" என்றார் சாருபாலா! என்னவோ இன்றைக்கு விட்டால் திரும்ப கிடைக்காது போய்விடுமோ என்பது போல அவர் பார்வை அவ்வப்போது மகனிடம் லயித்து, அவனது ஒவ்வொரு அசைவையும் மனதுக்குள் தக்கவைத்துக் கொள்ள முயன்றார்!

வசந்தனுக்கு சாருபாலாவின் நடத்தையே அவனது யூகம் சரியானதே என்று உணர்த்தியது! ஆனால் வலுவான ஆதாரம் தேவை! ரிஷி என்னதான் அவன் மீது உயிரையே வைத்திருந்தாலும், அனிதாவைப் பற்றி அவதூறாக சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்! என்ன செய்வது? என்று மனதுக்குள் ஒருபக்கம் யோசனை ஓடிய போதும், ரிஷி குழந்தையோடு நின்ற காட்சியை தவறாது தன் கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டான்!

சுரேந்திரனும் நிவனும் கேக் வெட்டுவதற்கு மேசையை தயார் செய்ய, ரிஷிக்கு உதவத்தான் ஆசை! ஆனால் சுரேந்திரனின் கடுமையான முகத்தை பார்த்து ஒதுங்கி நின்றவன்," டேய் வசந்த், போய் ஹெல்ப் பண்ணுடா" என்றான்!

எல்லாம் தயார் ஆனதும்," வாடா கண்ணா, என்று வர்ஷனை, ரிஷியிடம் இருந்து பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டார் சுரேந்திரன்!

அத்தனை நேரம் அந்த குழந்தையின் ஸ்பரிசம், ரிஷிக்கு பிடித்திருந்தது! அதிலும் அழாமல் அவன் தோளில் சலுகையாக சாய்ந்திருந்தது அவனுக்கே வியப்பு தான்! அந்தக் குழந்தையை சுரேந்திரனிடம் கொடுக்க அவனுக்கு இஷ்டமே இல்லை! மனமே இல்லாமல் தான் பிள்ளையை அவரிடம் கொடுத்தான்!

சாருபாலா அதையும் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தார்! நிவன் வந்து அவரை கேக் வெட்ட அழைக்கவும் எழுந்து சென்றார்! வசந்தன் நண்பனை இழுத்துக் கொண்டு சென்றான்!

வர்ஷனின் பிஞ்சுக் கையில் இருந்த பிளாஸ்டிக் கத்தியை பற்றி, கேக்கை வெட்டச் செய்தார் சுரேந்திரன்!

கைகளை தட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடினர்! குழந்தையும் சிரித்தபடி தன் கரங்களை தட்டியது, எல்லார் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது! துளி கேக்கை பேரனுக்கு ஊட்டிவிட்டு, அவன் கையில் ஒரு துண்டு கேக்கை கொடுத்து சாருவுக்கு ஊட்டச் சொன்னார்! குழந்தை அதை தன் வாய்க்கு கொண்டு போக, அங்கே சின்னதாக சிரிப்பலை எழுந்தது!

"வர்ஷு கண்ணா, சாரு பாட்டிக்கு கொடுங்க", என்று சாந்தி சொல்லவும் பிள்ளை அப்படியே செய்தான்! அவனைக் கைகளில் வாங்கிக் கொண்டு, கன்னத்தில் முத்தமிட்டு, அவரும் சிறிது ஊட்டிவிட்டு, மீதியை சாந்திக்கும், தம்பிக்கும் ஊட்டிவிட்டார்!

வீட்டினருடன், பணிப் பெண், அந்த வீட்டின் காரோட்டி, தோட்டக்காரன், என்று அங்கே வந்திருக்க, சாந்தி, கேக்கை வெட்டி துண்டு போட்டு, தட்டுகளில், அதனுடன், ஒரு பஃப்பும் வைத்து கொடுக்க, பணிப்பெண் அதை எல்லாருக்கும் வினியோகம் செய்தாள்!

ரிஷி, கொண்டு வந்த பரிசுப் பொருளை வசந்தனிடம் ஒன்றை தந்துவிட்டு, தன் சார்பாக வாங்கியதை , குழந்தையிடம் நீட்டினான்!

"இதெல்லாம், அவசியமில்லை" என்று சுரேந்திரன் எரிச்சலுடன் தாழ்ந்த குரலில் சொன்னார்!

"சார், இது உங்களுக்கு இல்லை! இந்த குட்டி செல்லத்துக்கு!" என்று குழந்தையின் தலையை பாசமாக வருடிவிட்டு நகர,அடுத்து வசந்தன் பரிசுப் பொருளை கொடுத்தான்!

"God bless you dear! என்று வாழ்த்திவிட்டு ஓரமாக ஓர் இருக்கையில் அமர்ந்த வசந்தன் ! நண்பனுடன் அமர்ந்து,சாப்பிட்டபடியே, நிவன்ஆதித்யாவை நோட்டம் விட்டான்!

நாற்பது வயது மதிக்க தக்க தோற்றத்தில் கம்பீரமாக, தெரிந்தார்! இன்பாவின் குடும்பத்தில் ஒருவராக வளைய வந்து கொண்டிருந்தார்!

சற்று தூரத்தில் ஒரு சோபாவில் அமர்ந்து சாருபாலாவுடன் பேசிக் கொண்டிருந்த நிவன் ஆதித்யாவிற்கு காணொளி அழைப்பு வந்தது! அவர் ப்ளூடூத் காதில் பொருத்திக் கொண்டு, எழுந்து அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தவாறு, "சொல்லும்மா, இனியா எப்படி இருக்கிறாய்? ஏதும் பிரச்சினை இல்லையே?" என்று சன்னமான குரலில் பேசியவாறே வெளி காமிராவை ஆன் செய்து, அந்த கூடத்தில் இருப்பவர்களை பார்க்க வசதி செய்து கொடுத்தார்!

எதிர்முனையில் பிம்பம் இல்லை,ஆனால் குரல் மட்டும் கேட்டது!

"ஒன்றும் பிரச்சினை இல்லை மாமா! குட்டிப்பையன் கேக் கட் பண்ணிட்டானா?"

"ஆச்சும்மா! வெளி ஆட்கள் யாரும் இல்லைம்மா! நான் இதுவரை பார்க்காத இரண்டு பேர் வந்திருக்காங்க!" என்று ரிஷியையும்,வசந்தனையும் ஃபோகஸ் செய்தார்!

எதிர் முனையில், சத்தமே இல்லை!

"இனியா? என்னாச்சும்மா ? என்றார் ஆதித்யா!

"மாமா... நான்.. நான் பிறகு பேசுகிறேன்!" என்று தொடர்பு துண்டிக்கப்பட்டது!

நிவன் ஆதித்யா, இளைஞர்கள் இருவரையும் யோசனையாக பார்த்தவர், மறுபடியும் சாருபாலாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு,"பாலா, அவங்களை யாரும் அறிமுகம் செய்யவில்லையே? என்றார்!

சாருபாலா அப்போதும் மகனிடம் தான் ஒரு கண்ணை வைத்திருந்தார்! அவரது கேள்வியில் லேசாக தடுமாறியவர், "அந்த ப்ளூ சர்ட் போட்ட பையன், வசந்தன், அவங்க குடும்பமும் எங்க குடும்பமும் ரொம்ப நெருக்கம்! அவன்கூட இருக்கிறது, கேசவன் .. ரிஷிகேசவன்! அவனோட நண்பன்! அதைச் சொல்லும்போது சாருபாலாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது, முகம் சிவக்க, கண்களும் கலங்கிவிட்டது!

தான் பெற்ற பிள்ளையை யாரோ போல அறிமுகம் செய்ய வேண்டிய கொடுமை எந்த தாய்க்கும் வரக்கூடாது என்று உள்ளூர வருந்தினார்!

அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்த வசந்தனுக்கு சாருபாலாவின் முகபாவம் துள்ளியமாக தெரிந்தது!

"டேய் என்னடா பார்க்கிறே" என்றான் ரிஷி!

"இன்பாவோட அத்தை கூட பேசிட்டு இருக்காரே மிஸ்டர் நிவன் ஆதித்யா,அவர் அந்த குட்டிப் பையனை கொண்டு வந்து கொடுத்தவர்"!

"ஓ! என்றவன், " டேய் இன்னும் இன்பாவோட அப்பா என் மேல் கோபமாத்தான் இருக்கிறார்டா! அந்தக் குட்டிப் பையனுக்காகத்தான் பொறுத்துக்கிட்டேன்!" என்றான் ரிஷி!

வசந்தனுக்கு அவனது சிறுபிள்ளைத்தனமான பேச்சு சிரிப்பை வரவழைத்தது! ஆனால் சுரேந்திரனின் கோபமும் சாருபாலாவின் கலங்கிய முகமும் அவனுக்கு உண்மையை உணர்த்தியது!

ஆனால் ஆதாரத்துடன் உண்மையை தெரிந்து கொண்டாக வேண்டும் என்ற உந்துதல் உண்டாயிற்று! அதை சொல்லக்கூடியவர் ஒருவர் தான்! நிச்சயமாக அவர் அவனிடம் மறுக்க மாட்டார் என்று நினைத்தான்!

உங்கள் ஊகம் சரிதான்! பொறுத்திருங்கள்...