• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

89 & 90. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயனெக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
ரகுவாசன் அன்று இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வீடு வந்துவிட்டான்! அனிதா ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த போதே அவன்,பாதி மாடிப்படிகளில் ஏறிவிட்டிருந்தான்!

"ரகு, சாப்பிட்டியா?" அனிதா குரல் கொடுத்தார்!

ஆனால் அவனோ ஏதோ மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல மேலே போய்விட்டான்!

"என்னாயிற்று, இவனுக்கு? பதினோரு மணிக்கு முன்னாடி வீட்டுக்கு வரமாட்டான்! இன்னிக்கு ஒன்பதரைக்கு வந்ததும் இல்லாமல், கூப்பிட்டால் காது கேளாதவனாட்டாம் போறான்! காலையில் விசாரிக்க வேண்டும்! என்று நினைத்துக் கொண்டு தனக்கான அறைக்கு சென்று படுத்துவிட்டார்! அவரது சிந்தனை ரிஷியை சுற்றி இருந்தது!

ரிஷி, பொத்தாம் பொதுவாக ஒரு வேலை விஷயமாக நான் வெளியூர் போகிறேன்! எப்போ திரும்புவேன் என்று சொல்ல முடியாது! அவசியம்னா மட்டும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! என்றுவிட்டு துணிமணிகளுடன் கிளம்பிப் போயிருக்கிறான்!

பெற்றவராக என்ன ஏது என்று கேட்காமல் ஆனந்தனும் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தார்! ஒரு வேளை அவருக்கு விஷயம் தெரியுமோ? இத்தனைக்கும் நான் இவனுக்கு எந்த வகையில் குறை வைத்தேன்! எத்தனை பாசம் காட்டினாலும், ஏன் அவன் என்னிடம் அன்னியோன்யமாக இருப்பதில்லை? வீட்டில் நிலவும் இந்த அமைதி புயலுக்கு முன்பான, எச்சரிக்கை போலவே மனதில் கலக்கம் ஏற்படுகிறதே! நினைத்த வாழ்க்கை கானலாகப் போயிற்று! ஙஇனி, ரிஷியின் திருமணத்தை செய்து விட்டால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்! வரும் மருமகள் முன்பாக அதிகமாக உரசல்கள் நேராமல் தவிர்க்கலாம் என்று போட்டிருந்த கணக்கும் தப்பிப் போயிற்று! இப்படி ஒரு வெறுமையான வாழ்க்கை வாழ்வதற்கு செத்துவிடலாம்! ஆனால், அப்படி போய்விட்டால், தன் மீது உள்ள கோபத்தில், தான் பெற்ற மகனை அனாதை ஆக்கி விடுவாரோ என்று பயம் காரணமாகத் தான் அந்த செயலை செய்யாமல் இருக்கிறார்!

அடுத்து வரும் நாட்களில் அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் பறி போகப் போவது தெரியாமல் கண்ணீருடன் அப்படியே தூங்கிப் போனார்!

❤️❤️❤️

சுரேந்திரன் சொன்னது என்னவோ சற்று சுருக்கமாகத்தான்! சொல்லப்போனால் சாருபாலா அவருக்கு தெரிவித்த அளவில் சொன்னார்!

அதை கேட்ட வசந்தனுக்கு உண்மையில் ரத்தம் கொதித்தது! ஆனந்தன், அனிதாவை விட அவனுக்கு விசாலாட்சியின் மீதுதான் அவனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாயிற்று! ஆனால் இறந்து போனவர்கள் மீது கோபப்பட்டு என்ன பிரயோசனம்? ஆனந்தன் செய்தது பச்சை துரோகம்! அனிதா செய்தது அயோக்கியத்தனம்! ஒருவனின் மனைவியை வீட்டில் வைத்துக் கொண்டே அவனோடு, காதல்.. இல்லை.. அது கள்ளக்காதல் செய்திருக்கிறாளே.. இவளெல்லாம் பெண் இனத்திற்கே சாபக்கேடு!

விசாலாட்சி தான் ஏதோ வாரிசு அது இது என்று தாயையும் பிள்ளையையும் பிரித்தாள் என்றால், அவள் இறந்த பிறகாவது, பெறறவளிடம் பிள்ளையை ஒப்படைத்திருக்க வேண்டாமா? அப்படி செய்திருந்தால் அது அவர்கள் செய்த துரோகத்திற்கு, பாவத்திற்கு சின்ன பிராயச்சித்தமாக இருந்திருக்கும்!

"அங்கிள் நான் ரிஷியிடம் இந்த விஷயத்தை சொல்லப் போகிறேன்! இன்னமும் ஆன்ட்டி மகனைப் பிரிந்து வாழ வேண்டுமா? அவர்தான் வாக்கு கொடுத்தார்!அவனும் தான் பெறாதவளை தாய் என்று நினைத்து உஇன்னும் ஏமாற வேண்டும்? ரிஷி தாயிடம் செல்வதற்கு யாரையும் கேட்க வேண்டிய அவசியமில்லை தானே? என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில்!

அவனது தோளில், ஆறுதலாக தட்டிவிட்டு, "அது உன் விருப்பம் வசந்த்! என் அக்கா சந்தோஷமாக இருந்தால் நான் வேண்டாம் என்பேனா? ஆனால் அவன் நீ சொல்வதை நம்புவானா? மற்ற விஷயங்கள் வேறு ! இது வேறு வசந்த்! பல வருடங்களாக இருந்த ஒன்று, திடுமென பொய்த்துக் போனால் அதை தாங்குவது கடினம்! சொல்லப்போனால் ஏற்றுக்கொள்வதே எளிதல்ல! அதனால், நன்றாக யோசித்து செய்!பல வருட நட்பு இதனால கெட்டுப் போயிடக்கூடாது!"

"இந்த உண்மை எனக்கு அரைகுறையாக தெரிந்த போது ரிஷியிடம் சொல்ல எனக்கு தயக்கமாக இருந்தது அங்கிள்! ஆனால் இப்போது முழுமையாக தெரிந்த பிறகு நிச்சயமாக அவனிடம் சொல்லத்தான் வேண்டும்! இல்லை என்றால் நான் நல்ல நண்பன் இல்லை! தாயையும் பிள்ளையையும் பிரித்த பாவம் அவர்களுக்கு மட்டுமின்றி எனக்குமே வந்து சேரும்! ஆகவே , நான் வாருங்கள் அங்கிள்! இன்றைக்கே இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்!" என்றவாறே படிகளில் இறங்கத் தொடங்கினான்!

"வசந்த், நிவன் ஆதித்யாவும் அங்கே இருக்கார்! அவருக்கு சாருவோட முழு கதையும் தெரியாது! நாங்க சொல்லவில்லை! அவரும் ஏதும் கேட்கவில்லை!" என்றார் யோசனையாக!

"அவருக்கு தெரிஞ்சா என்ன அங்கிள்? எனக்கு ரிஷிக்கும் ஆன்ட்டிக்கும் நடந்த அநியாயத்துக்கு முடிவு கட்டணும் அவ்வளவுதான்!" என்றவன் வேகமாக, படிகளில் கீழே இறங்கினான்!

ரிஷியின் மடியில் வர்ஷன் உறங்கியிருக்க, சாருபாலா, நிவன் ஆதித்யாவை பார்த்து ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார்! ரிஷிக்குள் நிவன் சொன்ன உரிமை பற்றிய செய்தி தான் என்ன யோசித்தும் புரியவில்லை! வர்ஷனை கொணர்ந்து சேர்த்தவர் அவர்!ஆனால், அவர் ஏன் இப்படி சொல்கிறார் என கேட்டுவிடலாம் என்று நினைத்தவன்," டாக்டர் சார், என்னிடம் டாக்டர் மேடத்திற்கு உரிமை இருப்பதாக எதை வைத்து சொன்னீர்கள்?"

அப்போது, வசந்தன் அவனை நோக்கி வந்தபடியே, "அவர் உண்மையைத் தான் சொல்கிறார் ரிஷி" என்றான் அழுத்தமான குரலில்!

ரிஷி திகைப்புடன், "டேய் என்னடா நீயும் சேர்ந்துட்டு இப்படி சொல்றே?" என்றவன் அங்கே, ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த சுரேந்திரனைப் பார்த்தான்! கண்களில் கனிவு ததும்ப, அவர் முகத்தில் இப்போது அத்தனை சாந்தம்! என்னடா நடக்குது இங்கே? ஏனோ அவன் மனதுக்குள் கலக்கமாக உணர்ந்தான்!

சாந்தி சமையல் அறை வேலைகளை ஒழுங்குபடுத்திவிட்டு, அனைவருக்கும் குடிப்பதற்கு பானம் எடுத்துக் கொண்டு, பணிப்பெண் தொடர,வந்து சேர்ந்தார்!

"எல்லாருக்கும் கொடும்மா" என்று கணவரின் அருகே சென்று அமரப் போனவர், அப்போதுதான் வர்ஷனை கவனித்தார்!

"குட்டிப்பையன் தூங்கிட்டானா?" என்றவாறே ரிஷியின் மடியில் இருந்து வர்ஷனை தூக்கிக் கொண்டு, அவர் உள்ளே செல்ல, திகைப்பின் காரணமாக, இப்போது தடுக்கத் தோன்றாமல்,
வசந்தனை கேள்வியாக பார்த்தான் ரிஷி!

பானத்தை வாங்கிக் கொண்டதும் பணிப்பெண் உள்ளே சென்றுவிட,"வசந்த், நீ என்ன சொல்ல வர்றே? தேவை இல்லாத விஷயத்தில் நீ தலையிடாதே!" என்ற சாருபாலாவின் குரலில் அத்தனை நேரம் இருந்த இளகுத்தன்மை மறைந்து, லேசான எச்சரிக்கும் தொனி வந்திருந்தது!

"எது, தேவை இல்லாத விஷயம் ஆன்ட்டி? வாக்கு கொடுத்தது நீங்கள் தானே ? நான் இல்லையே? ஆகவே நியாயத்தை யார் வேண்டுமானாலும் பேசலாம்! என்ன டாக்டர் சார் நான் சொல்வது சரிதானே?" என்றான் வசந்தன்!

அர்த்தம் பொதிந்த பார்வையை சாருபாலாவை நோக்கி செலுத்தியபடி,"யூ ஆர் ரைட் யங் மேன்! நியாயத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து சொல்லலாம்!" என்றார் நிவன்

"ஆதி! ப்ளீஸ் ! அவனுக்கு நீங்க ஒத்து ஊதாதீங்க! நான் பேசிக்கிறேன்! "என்ற சாருபாலா, "வசந்த், நீ இந்த விஷயத்தில் தயவு செய்து தலையிடாதே! என் தலையில் எழுதியபடி இத்தனை காலம் வாழ்ந்துவிட்டேன்! இனி மீதியிருக்கும் காலத்தையும் என்னால் கடந்து விட முடியும்!"

"இன்றைக்கு நீங்கள் உங்கள் லட்சியத்தில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஆனால் அதில் உங்களுக்கு முழு சந்தோஷம் கிடைத்திருக்கிறதா? நிஜத்தை சொல்லுங்கள்?ஏன் ஆன்ட்டி? எதற்காக? அப்படி என்றால் அவர்கள் மட்டும், அநியாயம் செய்யவில்லை! நீங்களும் கூட ஒரு வகையில் அநியாயம் தான் செய்கிறீர்கள்" என்றான் ஆணித்தரமாக!

சாந்திக்கு, நாத்தனாரும் வசந்தனும் பேசுவது புரியாமல் கணவரைப் பார்க்க, அவர் தாழ்ந்த குரலில் மனைவிக்கு விளக்கம் சொல்ல... ஆச்சர்யமாக அவரது விழிகள் ரிஷியின் மீது படிந்தது! ஆனந்தனை அவர் வெகு சில தருணங்களில் தான் பார்த்தது! அப்போது அவர் புது மணப்பெண்ணாக இருந்ததால் பெரிதாக ஏதும் நினைவில் இல்லை! கணவர் சொன்ன பிறகே அவனை கவனித்துப் பார்த்தார்!

"வசந்த்! நான்.. நானா அநியாயம் செய்கிறேன்? என்றார் சாருபாலா அதிர்ச்சியுடன்!

பொறுமை இழந்தவனாக, எழுந்த ரிஷி, "நிறுத்துங்க.. என்ன நடக்குது இங்கே? டேய் வசந்த் என்ன விஷயம்னு முதலில் சொல்லு! அப்புறமாக உங்க பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளுங்கள்" என்று சத்தம் போடவும்.. அங்கே சில கணங்கள் கனத்த அமைதி நிலவிற்று! ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

சாருபாலா, உட்கார இயலாமல் எழுந்து நின்றுவிட்டார்! அதற்குள் சாந்தி,அருகில் வந்து அவரை அரவணைத்துக் கொண்டார்!

சுரேந்திரன் வசந்தனுக்கு கண்ணை காட்ட..

"ரிஷி, டாக்டர் சாருபாலா தான் உன்னை பெற்ற அம்மா! அதாவது இவங்க உன் அப்பாவோட முதல் மனைவி!" வசந்தன் மிக நிதானமாக அதே சமயம் அழுத்தமாக அவன் விஷயத்தை உள்வாங்கும் விதமாக சொன்னான்!

இப்போது, ரிஷி அதிர்ந்து போனவனாய் அப்படியே சிலையாகிப் போனான்!


90. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!


வசந்தன் சொன்னதை கேட்டு, ரிஷி உண்மையில் அசைவற்றுப் போனான்! சொல்லப்போனால் உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தான்! அந்த செய்தியை அவன் உள்வாங்க சற்று நேரம் ஆயிற்று! இத்தனை காலம் இல்லாது இப்போது இது என்ன புதுக்கதை என்று அவன் யோசிக்கையில், சற்றுமுன் நிவன், சொன்ன, "அவளுக்கு உரிமை இருக்கிறது" நினைவுக்கு வந்தது! ஆக, அவர் சும்மா சொல்லவில்லை!

அவன் இங்கே வந்தது முதலாக நடந்ததை நினைத்துப் பார்த்தான்! அவனுக்கு அடிபட்டது என்றதும் துடித்துப்போய் அவனருகில் வந்தமர்ந்தாரே! அவன்மீது அவருக்கு இருக்கும் பாசம் எத்தகையது என்று புரிந்து கொள்வதற்கு, அந்த செயல் ஒன்றே போதுமே! ஆனால் ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்?

நண்பனின் தோளில் கையை வைத்தான் வசந்தன்! சட்டென்று அவனது கைகளைப் பற்றிக் கொண்ட ரிஷி,"நீ சொல்றது நிஜமா வசந்த்? என்னைப் பெற்ற அம்மா இவங்க என்றால்? வீட்டிலிருப்பது யார்? இத்தனை வருஷமா இதுபற்றி என்கிட்டே ஏன் யாருமே சொல்லவில்லை?"

"ரிஷி என்னை நீ நம்புகிறாய் தானே? நான் தேவையில்லாமல் பொய் சொல்ல மாட்டேன் என்று தெரியும்தானே?"

"உன்னை நம்பாமல் என்னடா? என்னைத் தவிர இந்த விஷயம் எல்லாருக்கும், நீ உட்பட தெரிந்திருக்கிறது! ஆனால் எனக்கு மட்டும் தெரியவில்லையேடா!" ரிஷி கலங்கி நிற்க..

அதுவரை தேக்கி வைத்திருந்த தாய்ப்பாசம் பிரவாகமெடுக்க "கேசவ்... என் ராஜா" என்றழைத்தவாறு சாருபாலா, மகனிடம் வந்தவர், அவனை இழுத்து அனைத்துக் கொண்டார்!

தாயின் அணைப்பில், சிலகணங்கள் கட்டுண்டு நின்ற ரிஷி, "அ.. அம்மா "

"கூப்பிடு ராஜா .. இந்த வார்த்தையை உன் வாயால் இனி கேட்கவே மாட்டேன் என்று நினைத்திருந்தேன் கண்ணா! இன்னொரு முறை கூப்பிடு கேசவ்"
தழுதழுத்த குரலில் மகனின் முகத்தை அன்னாந்து ஆவலாக பார்க்க..

"அம்மா, இன்னும் என்னால் எதையும் நம்ப முடியவில்லை! நான் கனவு ஏதும் காண்கிறேனோ என்று தோன்றுகிறது அம்மா!" என்று அவரது கரங்களை கன்னத்தோடு அழுத்தியவாறு சொன்னான்!

"என்னாலும் தான் கேசவ், என் பிள்ளை, என் பக்கத்தில் என் மகனாக இருக்கிறான் என்பதை நம்பமுடியவில்லை!" சாருபாலாவின் கண்ணில் நிற்காமல் நீர் வழிந்தது!

தன் கைகளால் அவரது கண்ணீரை துடைத்துவிட்டவனின் கண்களிலும் அவனையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது!

"அம்மா, எனக்கு ஏன் இந்த தண்டனை? நான் என்ன பாவம் செய்தேன்! எது நடந்திருந்தாலும் நீங்கள் எப்படி அம்மா என்னை விட்டுக் கொடுத்தீர்கள்? என்ன நடந்தது என்று எனக்கு இப்போதாவது சொல்லுங்கள் அம்மா!"

"உன்னைவிட்டுத்தர எனக்கு கொஞ்சமும் மனமில்லை தான்! ஆனால் நான் நன்றாக யோசித்த போது, எனக்கு சில காரணங்கள் தோன்றியது! நான் வளர்ந்த முறையில் எனக்கு குடும்பம் என்ற அமைப்பு எப்படி இருக்கும் என்று தெரியாத காரணத்தால், நீயும் அப்படியான வாழ்க்கை வாழக்கூடாது என்று நினைத்தேன்! உனக்கு ஒரு குடும்பத்தில் வாழும் முறைமை தெரிய வேண்டும், அடுத்து அத்தனை வசதிகளுடன் வளர்ந்த உன்னை கொண்டு வந்து கஷ்டப்படுத்த எனக்கு மனமில்லை! அதனால் தான் மனதைக் கல்லாக்கிக் கொண்டு உன்னை விட்டு வந்தேன்! அதற்காக நான் உன்கிட்டே மன்னிப்புக் கேட்டுக்கிறேன் ராஜா! "என்றவரின் கண்களில் நீர் வழிந்தது!

"அம்மா ப்ளீஸ்! என்கிட்டே போய் மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு.. என்ன நடந்தது அதை மட்டும் சொல்லுங்க? இதைக்கூட எனக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டும், என்பதற்காகத்தான் கேட்கிறேன் அம்மா!

"சொல்கிறேன் கண்ணா! அவங்களை குற்றம் சொல்வதற்காகவோ, என்னை நியாயப்படுத்திக்கவோ நான் சொல்லவில்லை என்பதை நீ மனதில் வைத்துக் கொண்டு கேள், என்றவர், ஆனந்தன் காதல் சொன்னது முதல், விசாலாட்சி நிபந்தனை வைத்தது வரை நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தவர், அன்றைய நாளின் நினைவில், கண்களில் கண்ணீர் வழிய,

ரிஷி,தாயின் துன்பத்தை உணர்ந்தவனாக, அவரை தன்னோடு சேர்த்து அரவணைத்துக் கொண்டு சிலகணங்கள் பேச்சின்றி, ஆறுதலளிப்பவன் போல அவரது முதுகை மெல்ல வருடிக் கொடுத்தான்! ஒருவாறு சுதாரித்து, தொண்டையை செறுமிக்கொண்டவன்,"வேண்டாம் அம்மா, இத்தனை காலம் நீங்கள் அழுததே போதும்! இனி, நீங்கள் அழக்கூடாது" என்று கரகரத்த குரலில் ரிஷி சொல்லவும், "கேசவ், என் ராஜா" என்று மகனின் மார்பில் சாய்ந்து பொங்கி அழுதார் சாருபாலா!

சுரேந்திரந்திரனும் எழுந்து வந்து தமக்கையோடு மருமகனையும் அரவணைத்துக் கொண்டார்! சற்று நேரம் பாசப்பிணைப்பில் கட்டுண்டு இருந்த மூவரும், ஒருவாறு நிகழ்வுக்கு திரும்பினர்!

ரிஷிக்கு உள்ளூர கோபம் கனன்று கொண்டிருந்தது! ஆதரவு தந்தவளுக்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது? காதலித்து, தாலி கட்டிய மனைவி, பெற்ற பிள்ளை இருக்கையில் இன்னொருத்தியை நாடுவதற்கு எத்தனை துணிச்சல் இருக்க வேண்டும்? இவர்கள் எல்லாம் சமூகத்தில் பெரிய மனிதர்கள்!
ஒரு குற்றமும் செய்யாத என் தாய், சொந்த மண்ணைவிட்டு, வெளிநாட்டில் போய் தன்னந்தனியாக ஒரு துறவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்றால் அவர் மனதால் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்? இன்றைக்கு வசந்தன் சொல்லாமல் விட்டிருந்தால், கடைசி வரை அவர் ஏக்கத்தோடு வாழ்ந்து முடித்திருப்பார்! நினைக்கும்போதே அவனுக்கு மேலும் ஆத்திரம் உண்டாயிற்று!

ஏதோ நினைவு வந்தவனாக,"டேய் வசந்த், இதுக்காகத்தான் நீ எங்க வீட்டிற்கு , சாரி அந்த வீட்டிற்கு வந்து தங்க மாட்டேன் என்றாயா? அப்போ உனக்கு இந்த விஷயம் எப்படி தெரியும்டா? யார் சொன்னாங்க? அம்மா சொல்லியிருக்க மாட்டாங்க! வேற யார்டா?" என்றான் பரபரப்புடன்!

அவனது பேச்சை கவனித்த சுரேந்திரனின் முகத்தில், ஆச்சர்யம்! வசந்தன் ரிஷியைப் பற்றி சொல்லும்போது அவருக்கு, அவ்வளவாக நம்பிக்கை இல்லை! ஆனால் இப்போது, அவர் கண்கூடாக பார்த்தார்! எத்தனை ஆழமான நட்பாக இருந்தாலும், இந்த மாதிரியான விஷயத்தில் நிச்சயமாக கோபம் கொள்வது தான் இயல்பாக இருக்கும்! ஆனால் அவன் நண்பனிடம் கோபப்படவில்லை! அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு, அவன் எப்படி அறிந்தான் என்று விவரம் அறியும் நோக்கத்தோடு கேட்கிறான்! உண்மையில் அவருக்கு அவர்கள் நட்பு மீது பெருமிதம் உண்டாயிற்று!

"ஆமாம் ரிஷி, முதலிலேயே, அதாவது நீ என்னோடு படிக்கும் போதே என் பெற்றோருக்கு தெரிந்திருக்கிறது! அதனாலேயே அவர்களுக்கு நீயும் எங்கள் வீட்டில் பிள்ளை போல தனிப் பாசம்! இந்தக் காரணம் எனக்கு நாலு வருஷத்துக்கு முன்பு, இந்த விஷயம் தெரிந்த பிறகு தான் புரிந்தது! அப்போது அதை உன்னிடம் சொன்னால் நீ தாங்க மாட்டாய் என்பததோடு, எனக்கு முழுமையாக தெரியாத ஒன்றை உன்னிடம் சொல்லி குழப்பக்கூடாது என்றும் நான் அதை மனதோடு வைத்துக் கொண்டேன்! ஆனால் இன்றைக்கு அங்கிள் உன்னை இனி இங்கே அழைத்து வரவேண்டாம் என்று சொன்னனார்கள்! அதற்கான காரணத்தை நான் அழுத்திக் கேட்டபோது, எல்லாம் சொன்னார்! ஆனால் ஆன்ட்டி சொன்ன பிறகு, தான் எனக்கு தெளிவாக தெரியும்"
என்றான் வசந்தன்!

நிவன் ஆதித்யா, சாருபாலாவை பார்த்திருந்தார்! அவருக்கு தொழில் மீது இருக்கும் ஆர்வம், எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்! எதையும் பொறுமையோடு விளக்கும் தன்மை என்று அவர் பால் ஏற்கனவே வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தார்! இப்போது அவரது கதையைக் கேட்டபிறகு, அவர் மீது, மதிப்பு அதிகரித்தது!

இறுக்கமான அந்த சூழலை இலகுவாக்க எண்ணியவராக, "நேரமாகுது, எல்லாரும் தூங்கப் போகணும்னு நினைப்பு இருக்கா, இல்லையா?" என்றார் சாந்தி

நிவன் ஆதித்யா எழுந்தவாறே, "எல்லாருக்கும் குட் நைட்! நான் கிளம்புகிறேன், இப்போது போய் தூங்கினால் தான், காலையில் ஹோட்டலில் இருந்து சீக்கிரமாக ஊருக்கு கிளம்ப முடியும்" என்றார்!

கூடவே ரிஷியும், வசந்தனும் மெல்ல எழுந்தனர்! சாருபாலா தவிப்புடன் மகனின் கையைப் பற்றினார்!

"அம்மா, இனி நான் உங்களுக்கு மட்டும் தான் பிள்ளை ! அதை மனதில் வையுங்கள்! இப்போது நான் வசந்துடன் அவனது அறைக்கு தான் போகிறேன்! நாளைக்கு நான் ஒரு முக்கியமான வேலையாக அவனோடு போயாக வேண்டும்!"

"சரி, கேசவ், இன்றைக்கு இங்கே அம்மாவோடு, தங்கியிருந்துவிட்டு, காலையில் போகலாம்தானே?"
என்றார்!

"அக்கா சொல்வதும் சரிதானே மருமகனே? எங்களோடு இரண்டு தினங்களாவது தங்கியிருந்தால் எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும்!" என்றார் சுரேந்திரன்!

அவரது மருமகனே என்ற அழைப்பு அவனுக்கு இன்பாவை நினைவுபடுத்தியது! அப்போது இன்னொன்றும் புரிந்தது! அதாவது இன்பா யாரோ இல்லை! அவனது சொந்த மாமன் மகள் என்பது தான் அது!

"இன்றைக்கு வேண்டுமானால் நான் தங்கிக் கொள்கிறேன் மாமா! ஆனால் நாளைக்கு காலையில் கண்டிப்பாக போயாக வேண்டும்!"
என்றான் தீவிரமான குரலில்!

"அட, அப்படி என்ன, தலைபோகிற விஷயம் மருமகனே?" என்று சற்று கிண்டலாகவே கேட்டார்!

"உங்கள் மகளை கண்டுபிடித்து அழைத்து வரத்தான் மாமா, அது முக்கியமான விஷயம் தானே?" என்றான் அழுத்தமான குரலில்!

வீட்டுப் பெரியவர்கள் மூவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, நிவன் ஆதித்யா அவனை ஆராயும் பார்வை பார்த்திருந்தார்!

வசந்தனுக்கு ரிஷி அவசரப்பட்டுவிட்டதாக தோன்றியது! ஆனாலும் அவன் நண்பனை தடுக்க முயற்சி செய்யவில்லை.

மூவரில் முதலில் சுதாரித்த சாந்தி,"என் சுரபி,சுரபியைப் பற்றி உனக்கு தெரியுமா தம்பி?" பரிதவிப்புடன் அவனது கையைப்பிடித்துக் கொண்டு கேட்டார்!

ரிஷி, இப்போது தான் தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று நினைத்தான்!ஆனால் வார்த்தைகளை விட்ட பிறகு அதை திரும்பப் பெற இயலாதே! ஆகவே உண்மையே உரைப்பது என்று முடிவு செய்தவனாக, சாந்தி பற்றியிருந்த கையின் மீது தன் கையை ஆதரவாக வைத்தவன், தாயிடம் பதில் சொன்னான்!

"அம்மா, கொஞ்சம் முன்பு சொன்னேன் தானே, நான் கோவையில், வேலை செய்தபோது ஒரு பெண்ணை சந்தித்தேன் என்று, அது சுரபி தான்!"

"நிஜமாகவா கேசவ்? அவள் என் கண்ணம்மாவா?" சாருபாலா ஆச்சரியமாக கேட்க

"ஆமா அம்மா, எனக்கு இங்கே வரும்போது, அவள் எனக்கு உறவாக இருப்பாள் என்று நினைக்கவில்லை! சொல்லப்போனால் இதுவே ரொம்ப தாமதம்! என்றான்!

நிவன் ஆதித்யா, யோசனையாக அவனைப் பார்த்திருந்தார்!