கொட்டிவாக்கம்
காலையில் எழுந்ததும் சாருபாலா மகனைத் தான் தேடினார்!
கீழே கூடத்தில் வர்ஷனின் சிரிப்பும் ரிஷியின் பேச்சுக் குரலும் கேட்டது! அவசரமாக தன் பணிகளை முடித்துக் கொண்டு, கீழே இறங்கிச் சென்றார்!
கூடத்தை மைதானமாக்கி, ரிஷியும் வர்ஷனும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்!
சாந்தி எல்லாருக்குமாக, குடிப்பதற்காக பானம் எடுத்து வந்து டீபாயின் மீது வைத்தார்!
சுரேந்திரன் தோட்டத்தில் போடப்பட்ட நடை பாதையில் நடை பயிற்சியை முடித்துக் கொண்டு, உள்ளே வந்தவர், இருவரின் விளையாட்டை பார்த்தபடி ஒரு இருக்கையில் அமர்ந்தார்!
"தாத்தா, நான் அங்கிளை அவுட் பண்ணிட்டே... என்று ஓடி சென்று அவர் மடியில் ஏறிக் கொண்டான். வர்ஷன்.
"வர்ஷா, அங்கிள் சொல்லக் கூடாது , டாடி சொல்லு" என்றபடி தம்பிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தார் சாருபாலா!
சுரேந்திரனும் சாந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!
"அதை கவனித்த சாரு," எப்படியும் வர்ஷனுக்கு ஒரு டாடி வேண்டும் தானே? என்றார் சன்னமான குரலில்!
"ஆமா அண்ணி, ஆனால் மாப்பிள்ளைக்கு அதில் விருப்பமா என்று ஒரு வார்த்தை கேட்டுவிட்டு ..என்று இழுத்தார் சாந்தி!
"அதெல்லாம் விருப்பம் தான், பார், நான் சொன்னதை அவன் ஆட்சேபிக்கவில்லை! இந்த குட்டியும் பாரு, அவன்கிட்டே எப்படி ஒட்டிக்கிட்டான் என்று!
"ஆமாம் அக்கா, வேற்று ஆளிடம் இவன் போகவே மாட்டானே, எப்படி ரிஷியிடம் போனான் என்று நேற்றே எனக்கு ரொம்ப ஆச்சர்யம் தான்"
"டாடி, வேண்டாம் அம்மா, அப்பா என்றே பழக்கலாம்" என்றான் ரிஷி அவனை தூக்கி தன் மடியில் இறுத்தியபடி!
"அதுவும் சரிதான்! சரி நீ விஷயத்தை சொல்லிவிட்டாயா ரிஷி?"
"நீங்கள் சொல்வது தான் சரி அம்மா" என்று சாந்தி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டான்!
"என்ன அக்கா விஷயம்? "
சாருபாலா விஷயத்தை சொல்லவும் கணவனும் மனைவியும் சந்தோஷமாக ஒப்புக் கொண்டனர்!
"டிபன் வேலையை நான் பார்க்கிறேன் சாந்தி, நீங்க போய் துணிமணிகளை எடுத்து வைங்க, குட்டியோடதும் தனியா எடுத்து வச்சிடுங்க!" என்று அவர் சொல்லவும், சாந்தி எழுந்தார்!
"சாந்தி பாத்தி, வர்ஷனுக்கு இல்லை" என்று தன் சின்ன கைகளை விரித்து கேட்டான் அந்த சுட்டி!
"உனக்கு இல்லாமலா கண்ணா? நான் ஆத்தி கொடுக்கிறேன் சரியா?" சாருபாலா அந்த பணியை ஏற்றுக் கொண்டார்!
காலை உணவு சாப்பிட்டுவிட்டு, எல்லோருமாக கிளம்ப, அவர்களது பெரிய வண்டியை ரிஷி, கிளப்ப, வசந்தனின் வண்டியை அவர்களது டிரைவர் ஓட்டிக் கொண்டு வந்தார்!


நீலாங்கரை
காலை உணவருந்த அமர்ந்த ஆனந்தன் மணியை பார்த்தார்! மகனிடம் இருந்து தகவல் வரும் என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தவருக்கு சாப்பிடும் மனநிலை சுத்தமாக இல்லை! என்னாயிற்று காலையில் கிளம்பும் போது சொல்வதாக தெரிவித்திருந்தானே! இன்னுமா கிளம்பவில்லை? அவராக தொடர்பு கொள்ளவும் தயங்கினார்! ஒருவேளை கிளம்பும் பரபரப்பில் இருந்தால் அவரது அழைப்பு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்தார்!
இரண்டு இட்டலியோடு எழுந்து கொண்ட கணவரை கவலையாக பார்த்திருந்தார் அனிதா! இரவு நன்றாகத்தானே இருந்தார்? இப்போது திடீரென்று என்னவாயிற்று?? கேட்டாலும் எரிந்து விழுவார்! ஹூம் .. எதுவானாலும் தெரியும்போது தெரியட்டும் என்று எண்ணியவராக, மற்ற வேலைகளை பார்க்கச் சென்றார்!
ரகுவாசன் குளித்து தயாராகி, கீழே வந்தான்! "அம்மா, டிபன்" என்றவாறு சாப்பாட்டு மேசையின் முன் அமர்ந்தான்!
அந்த நேரத்தில் அவனை அனிதா அங்கே எதிர்பார்க்கவில்லை! வியப்பை மறைத்துக் கொண்டு, அவனுக்கு பரிமாறினார்!
"ரகு, ஏன்டா உன் முகம் ஏதோ மாதிரி இருக்கு? என்ன பிரச்சினை?" என்றார் இட்லிக்கு சட்னியை ஊற்றியபடி!
"ப்ச்சு, ஒன்னும் இல்லைம்மா! ஆமா அண்ணா எங்கம்மா? ஆளையே காணோம்?" என்றான்
"நேற்று மதியம் சாப்பிட வந்தவன், உன் அப்பாக்கிட்டே பேசிட்டு இருந்தான்! கொஞ்ச நேரத்தில பெட்டியோட எங்கேயோ வெளியூர் போறதாக சொல்லிவிட்டு கிளம்பினான்! அப்புறமாக ஒரு தகவலும் இல்லைடா"
"எப்பவும் பிஸினஸ் விஷயமாக போறது தானேமா? இதில் என்ன விஷயம் இருக்கு?"
"இல்லைடா, எப்பவும் அவன் இரண்டு செட் தானே எடுத்துட்டுப் போவான்? இது பிஸினஸ் விஷயமா எனக்கு தோனலை! ஏன்னா பத்து நாளுக்கு மேல தங்கிற மாதிரி துணிமணிகள் எடுத்துட்டுப் போனான்"
"ஓ! சரி நான் அண்ணாக்கு போன் பண்ணி அப்புறமாக என்ன விஷயம்னு கேட்டுக்கிறேன்"
"என்னடா, இட்டிலியோட எழுந்துட்டே? பூரி உனக்கு பிடிக்கும்னு தான் செய்தேன் ஏன் எடுத்துக்கலை?"
"போதும்மா, நான் கிளம்புகிறேன், என்று எழுந்தான் ரகுவாசன்!
"ரகு, கொஞ்சம் என்னோட ரூமுக்கு வந்துட்டுப் போ" என்றார் ஆனந்தன்!
திடுமென அவரது குரல் கேட்கவும் இருவருமே ஒரு கணம் திடுக்கிட்டுப் போனார்கள்! "என்னம்மா விஷயம்? அப்பா, என்னைக்கும் இல்லாம என்னை கூப்பிடுகிறார்?"
"தெரியலைடா, போய் என்னான்னு கேள்" என்றார் அனிதா யோசனையாக!
தந்தையின் அறைக்குள் நுழைந்தான் ரகுவாசன்!
"உட்கார் ரகு! உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்ற ஆனந்தன் அவனுக்கு புதிதாக தெரிந்தார்!
"சொல்லுங்கப்பா!"
"ரிஷி, உனக்கு போன் பண்ணினானா?"
"இல்லை அப்பா! ஏன் அண்ணனுக்கு என்னாச்சு?
"ஓ ! அவனுக்கு ஒன்னுமில்லை ! நேற்று கிளம்பிப் போனவன், ஒரு போன் கூட பண்ணலை! இப்படி அவன் இருந்தது இல்லை! அதான் கேட்டேன்"
"நான் அண்ணனை பார்த்தே இரண்டு நாளாச்சுப்பா! அவனே பண்ணுவான்! ஏதாவது வேலையில் பிஸியாக இருப்பானா இருக்கும்"
"அப்படித்தான் இருக்க வேண்டும்! சரி, நீ போப்பா"
ரகுவுக்கு தந்தையின் இந்த நடவடிக்கை புதிராக இருந்தது! கூடவே, அண்ணன் அப்படி எங்கே கிளம்பிப் போயிருக்கிறான்? என்று யோசித்தபடியே வெளியே கிளம்பிவிட்டான்.
ரகு வண்டியை கிளப்பும் சத்தம் கேட்டு வந்த அனிதா,"எதுக்கு அவர் கூப்பிட்டார்னு ஏதாவது சொல்லிட்டு போறானா பார்! வளர்த்ததும் சரியில்லை! பெத்ததும் சரியில்லை! கட்டிக்கிட்டதும் சரியில்லை, எல்லாம் நான் வாங்கி வந்த வரம்" என்று முணுமுணத்தபடி, சலவைக்கு, துணிகளை மெஷினில் போட சென்றார்!
🩷🩵🩷
"என்ன விஷயம் டாக்டர்? ஏன் அப்படி பார்க்கிறீங்க?"
"நான் ஏன் என்னை சந்திக்கச் சொன்னேன் என்று தெரியுமா வசந்த்?"
"தெரியலையே டாக்டர் ! என்ன விஷயம் என்று இப்போ சொல்லுங்க"
"ம்ம்.. நீங்கள் இருவரும் இன்பாவை தேடிக் கிளம்பும் விவரம் தெரிந்ததும், உங்கள் இருவரையும் என்னோடு அழைத்துப் போவதுதான் என் நோக்கம்! ஆனால் இப்போது திட்டமே மாறிப் போயிற்றே! அதுதான் யோசிக்கிறேன்!
"டாக்டர் ப்ளீஸ்! புதிர் போடாமல் நேராக விஷயத்துக்கு வாங்க"
"நான் அந்தப் பக்கத்தில் தானே இருக்கிறேன்! இன்பாவை தேடுவதில், நான் உங்களுக்கு உதவலாம் என்று நினைத்தேன் வசந்த்! ஆனால் இப்போ குடும்பமாக அத்தனை பேரும் வருகிறார்கள்! அவர்களை அலைக்கழிக்க வேண்டாம்! பேசாமல் திருநெல்வேலியில் அவர்களை தங்க வைத்துவிட்டு நீங்கள் இருவரும் கிளம்பி வாருங்கள் நாம் மூவருமாக தேடும் பணியில் ஈடுபடலாம்! இது என்னோட நம்பர், குறிச்சுக்கோங்க! அவர்கள் எல்லாருமாக அங்கே வந்து சேர்ந்த பிறகு எனக்கு தகவல் கொடுங்க, சரிதானா? டேக் கேர்! நான் கிளம்புகிறேன்!" நிவன் ஆதித்யா கிளம்பிச் சென்றுவிட்டார் !
வசந்தனுக்கு, அவர் ஏதோ சொல்ல வந்து அதை மறைத்துவிட்டு வேறு ஏதோ சொல்லிவிட்டு போவதாக தோன்றியது. அவர்கள் எல்லாரும் வந்தால், இவருக்கு என்ன சங்கடம்? அவர் உதவி செய்கிறேன் என்றால் எல்லாருக்கும் சந்தோஷமாகத் தானே இருக்கும்? அவனுக்கு என்ன யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை!
சற்று நேரம் யோசனையில் கழித்தவன், ரகுவுக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டான் வசந்தன்!
அப்போது ரிஷியின் கைப்பேசி அழைப்பு வர ஏற்றான்!
"என்னடா இப்பத்தான் கிளம்புறீங்களா?"
"இல்லைடா, ஹோட்டல் பக்கத்தில வந்துட்டோம், அங்கே பார்க்கிங் பண்ண முடியாது, அதனால நீ, கிளம்பி வெளியே வந்து, ஏறுக்கோடா" என்றான் ரிஷி
"இதோ வர்றேன்" என்று கைப்பேசியை அனைத்துவிட்டு, வாசலுக்கு விரைந்தான் வசந்தன்!
அத்தியாயம் - 93
முன் தினம் மாலையில்..
தன் கண்ணாளனை பார்த்துவிட்ட பிறகு அவளது சக்தி எல்லாம் வடிந்துவிட்டார் போல இன்பசுரபி துவண்டு போனாள்! அவளால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை! ஆகவே அங்கே உதவியாளராக இருக்கும் பெண் மணி நந்தனாவிடம் சொல்லிவிட்டு விரைவாகவே தூங்க சென்றுவிட்டாள்! பழைய நினைவுகள் எல்லாம் வந்து அவளைப் புரட்டிப் போட்டது. அவள் இங்கே வந்த சேர்ந்த நாளும், அதற்கு பிறகான இத்தனை வருடங்களும் அவளது மனத்திரையில் சித்திரமாக ஓடியது!
அன்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இன்பா, சற்று நேரத்தில் சுதாரித்து, தன்னியல்பாய், நீர் போகும் பாதையில் நீச்சலடிக்கத் துவங்கினாள்! அப்படியே எங்கேனும் கரை ஒதுங்க முடிகிறதா என்று கண்காணித்தாள்! ஆற்றுக்கு குறுக்காக அந்த தென்னை மரம் வளைந்து தாழ்ந்து இருந்தது! அதைப் பார்த்ததும் சற்று ஆசுவாசமானாள்! நீரின் குறுக்கே நீந்துவது மிகவும் சிரமமாக இருந்தது! ஆனாலும் உயிர் பிழைக்கும் உந்துதலால், முயன்று மரத்தை அடைந்து, அதைப் பிடித்தபடி, மெல்ல நோட்டம் விட்டாள்! கண்ணுக்கெட்டிய தூரம் யாவும் பச்சை பசேல் என்று இருந்தது! கரையோரம் ஏதோ விவசாய கிராமம் போல, தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும், அதற்கு நடுவே தனிவீடு என்று ஏகாந்தமாக இருந்தது!
மெல்ல மெல்ல, சற்று சிரமத்துடன் கரையேறிய போது, இன்பா வெகுவாக களைத்து போய் அப்படியே அங்கிருந்த ஒரு மரத்தில் சரிந்து அமர்ந்தவள் மயக்க நிலையை அடைந்துவிட்டாள்!
அதன் பிறகு இன்பா கண் விழித்த போது, மென்மையான மெத்தையில் படுத்திருந்தாள்! நிதானமாக கண்களை சுழற்றி சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்! அந்த அறையில் வேறு யாருமில்லை! அது மருத்தவப்படுக்கை போல இருந்தது! திறந்திருந்த சன்னல்கள் வழியே இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது!
அங்கிருந்த கடிகாரம் மணி மூன்று என்று காட்டியது! இவ்வளவு நேரமாகிவிட்டதா? ஐயோ அங்கே எல்லாரும் தேடுவார்களே என்று பதறிய மனதை அடக்கினாள்! தேடட்டும், இப்போது அவள் திரும்பப் போவதாக இல்லை! அவள் அந்த முடிவோடுதான் கிளம்பி வந்திருக்கிறாள்! அவளது திட்டம் வேறாக இருந்தது.. ஆனால் கடவுளின் திட்டம் இது தான் போல..என்று நினைத்தவள் மீண்டுமாக, ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்!
சில கணங்கள் கழித்து கதவு திறக்கும் சத்தம், அதைத் தொடர்ந்து, யாரோ உள்ளே வரும் காலடி ஓசைகள்! இன்பா அசையாமல் படுத்திருந்தாள்!
"இவ்வளவு நேரத்தில் மயக்கம் தெளிந்திருக்கணும், ஒரு வேளை ரொம்ப தூரத்தில் இருந்து நீந்தியதால் சோர்வடைந்து இருக்கலாம்" என்ற கம்பீரமான ஆண் குரல் கேட்டது. குரலை வைத்து வயதை அனுமானிக்க முடியவில்லை!
மெல்ல கண்களைத் திறந்தாள் இன்பா, அங்கே உயரமாக, நாற்பது வயது மதிக்க தக்க ஒரு மனிதரும், அவருடன் நடுத்தர வயதுடைய பெண்ணும் இருந்தனர்!
அன்றைக்கு இன்பா தனக்கு ஏதும் நினைவில்லை என்றுவிட்டாள்! மருத்துவர் அவளை அதற்கு மேலாக தொந்தரவு செய்யவில்லை! அது மட்டும் சற்று ஆறுதலாக இருந்தது! ஆனால் தாய்மை அடைந்ததால் உண்டான வாந்தி, மயக்கம், ஒவ்வாமை என்று அடுத்த சில மாதங்கள் வெகுவாக சிரமப்பட்டாள்!
அதன் பிறகு அவளுக்கு நினைவு வந்ததாக தெரிவிக்க வேண்டிய சூழலுக்கு ஆளானாள்! காரணம் அவள் படித்த மருத்துவம்!
மேலே டாக்டர் நிவன் ஆதித்யாவின் வீடும், கீழே மருத்துவமனையுமாக இருந்தது !
அந்த சின்ன கிராமத்தில் உள்ள எளிய மக்களுக்கு நிவன் மருத்துவ சேவை செய்து கொண்டிருந்தார்! அது மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமத்திற்கும் அவர் சென்று சேவையாற்றினார்! அந்த மக்களுக்கு சுத்தம் பற்றி எடுத்துச் சொல்லி, நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றி அறிவுறுத்துவதும் அவரது கடமையாக இருந்தது!
நிவன் ஆதித்யா, வெளிநாட்டில் படித்துவிட்டு அந்த கிராமத்திற்கு வந்து தங்கிவிட்டார்! மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாக கொண்டதால் திருமணம் பற்றி அவர் யோசிக்கவே இல்லை! அவர் யோசிக்க நினைத்த போது வயது நாற்பதுக்கு மேல் கடந்துவிட்டது! ஆகவே அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டார்!
இன்பா மருத்துவம் படித்தவள் என்று தெரிந்ததும் நிவன் ஆதித்தாயாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! அவருக்கு கை கொடுக்க இன்னொருவர் வந்துவிட்ட தெம்பு உண்டாயிற்று !
இன்பாவை அவர் வழிநடத்தினார்! மருத்துவம் பார்ப்பதை ஆர்வமாக அவளும் கருதியதால், நிவனுக்கு அவ்வளவு உற்சாகம்!
ஓர் நாள் காலைப் பொழுதின் கதிரவன் உதிக்கும் தருவாயில், லேசான மழை பெய்த நன்னாளில் அவளது மைந்தன் ஜனித்தான்!
குழந்தை பிறப்பதற்கு முன்பே, அவள் ஒரு தீர்மானம் செய்திருந்தாள்! அவளது குழந்தையை அவள் வளர்க்கப் போவதில்லை! பெற்ற பிள்ளையை பிரிந்து வாடும் அவளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவள் நினைத்ததற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது! அது, எப்படி இத்தனை காலம் அவளை பிரிந்து அவளது வீட்டினர் துன்பப்பட்டாகளோ, அதே துன்பத்தை அவளும் அனுபவிக்க வேண்டும்! அதுதான் அவளுக்கு தகுந்த தண்டனையாக இருக்கும், என்று நினைத்தாள்!
அதன்படி அவள் சாருவின் முகநூல் பக்கத்தில் கவனித்த போது அந்த பெங்களூர் கருத்தரங்கு பற்றி தெரிய வந்தது!
"உங்கள் வீட்டுப் பெண்ணை இழந்து தவிக்கும் உங்களுக்கு, என் பிள்ளை வர்ஷன் அருமருந்தாக இருப்பான் என்று எண்ணுகிறேன்"
இப்படிக்கு
தங்கள் அபிமானி
இனியா.
என்று ரத்ன சுருக்கமாக சாருபாலாவுக்கு கடிதம் எழுதி, பிள்ளையை தந்து அனுப்பினாள் இன்பா!
பிள்ளையை அனுப்பிவிட்ட பிறகு தான், அவள் அந்தப் பிரிவின் துயரத்தை முழுமையாக உணர்ந்தாள்! சாப்பிட, தூங்க முடியாமல் அவள் தவித்தாள்! ஆனாலும் ஒரு வைராக்கியத்துடன் தன்னை சேவையில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியும் கண்டாள்!

ரிஷியின் முகத்தில் தெரிந்த உணர்வு கலவை அவன் மனதில் ஏதேதோ விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் வசந்தன். ஆகவே, ஹோட்டலில் இருந்து, வாகனத்தை ஓட்டும் பொறுப்பை தானே ஏற்றுக் கொண்டான்!
ரிஷியின் மனதுக்குள் ஒரு புறம் இன்பாவை தேடும் ஆவல்! மறுபுறம் அவனது தந்தை செய்த துரோகத்தை நினைத்து ஆத்திரம் என்று இருவேறு எண்ணங்கள் அவனை அலைகழித்தது உண்மை தான்! தன் உணர்வுகளை பெரும் பிரயத்தனம் செய்து கட்டுக்குள் வைத்திருந்தான்!
பயணத்தில் ஆளுக்கு ஒரு சிந்தனையில் இருந்தனர்! அதை மாற்ற நகைச்சுவை காட்சிகள் அடங்கிய டிவிடியை எடுத்துப் போட்டுவிட்டான் வசந்தன்! அது கொஞ்சம் வேலை செய்தது! சாருபாலா தான் வெகு காலத்திற்கு பிறகு ரசித்து மனம் விட்டு சிரித்தார் எனலாம்!
வழியில் உணவுக்காக வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிய போது, " மச்சான், ஊருக்கு போனதும் முதலில் எனக்கு ஒரு சிம் வாங்கணும்! இப்ப இருக்கிற சிம்மை தூக்கிப் போட்டுடலாம்னு இருக்கிறேன்" என்றான் ரிஷி!
"வாங்கிக்கலாம்டா, இதுல உனக்கு தேவையான காண்டாக்ட்ஸ் இருந்தா அதை மட்டும் சேவ் பண்ணிக்கோ"
"இனி நான் சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்கணும்! இல்லன்னா, ஏதாவது கன்சர்ன்ல வேலைக்கு போகணும் என்று முடிவு பண்ணிட்டேன்! அதனால பழைய தொடர்பு எதுவும் எனக்கு தேவைப்படாது"
"ஓகேடா, நீ ரிலாக்ஸாக இரு. இப்ப முழுக்க உன் கவனம் இன்பாவை தேடுவதில் மட்டும் இருக்கட்டும்! மற்றதை அப்புறமாக பார்த்துக்கலாம்" என்றவாறு அவனை சாப்பிட அழைத்துப் போனான் வசந்தன்!
🩵


நிவன் ஆதித்யா கிளம்புவதற்கு முன்பாக சாருபாலாவை தொடர்பு கொண்டார்!
"ஹலோ ஆதி! எங்கே இருக்கீங்க? கிளம்பிட்டீங்களா?" வழக்கத்திற்கு மாறான சாருபாலாவின் குரலில் உற்சாகம்!
"கிளம்பப் போகிறேன்! வசந்தன் சொன்னான் எல்லாருமாக கிளம்புவதாக"
"ஆமா, ஆதி, இத்தனை காலம் நான் என் பிள்ளையை பிரிந்து இருந்துவிட்டேன்! இப்போது உடனடியாக பிரிவது என்றால் என்னால் முடியாது! அதனால தான் இந்த பிளான்" என்ற சாருபாலா, நானே உங்களை அழைத்து பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆதி!"
"என்ன விஷயம் சாரு?"
"அது ஏற்கனவே கேட்டது தான் ஆதி! நேற்று நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இது பற்றி உங்களிடம் பேச மறந்து போனேன்! காலையில் தான் நினைவு வந்தது"
"சாருவுக்கு இப்படி சுற்றி வளைத்து பேசும் வழக்கம் இல்லையே! இப்போது ஏன் இந்த தயக்கம்?"
"இன்பா பற்றி தான் ஆதி! என் பிள்ளை, என் பேரன் என்னிடம் வந்துவிட்டார்கள்! என் மருமகளும் வந்துவிட்டால் என் குடும்பம் முழுமையாகிவிடும் அல்லவா?"
"உண்மை தான் சாரு! நேற்றே நான் இதை நினைத்தேன் தான்! ஆனால் நான் வாக்கு கொடுத்திருக்கிறேன் என்று சொன்னேன் இல்லையா? அதை எப்படி மீறுவது? ஒன்று மட்டும் சொல்கிறேன் இன்பா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம்"
"அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஆதி! ஆனால் ப்ளீஸ்! என் பிள்ளை பழசை மறந்து போனாலும், தன்னவளை தேட என்று கிளம்பிவிட்டான் தானே? இலக்கு இன்றி தவிக்கிற எங்களுக்கு நீங்கள் உதவி செய்யக்கூடாதா?"
சில கணங்கள் மௌனத்தில் கழிய, "ஆதி ? ஆர் யூ தேர்?" என்றார் சாரு!
"எஸ் சாரு, என்றவர் "எனக்கு ஒரு பத்து நிமிஷம் கொடு சாரு, நானே லைன்ல வர்றேன்" என்று தொடர்பை துண்டித்தார்!
நிவன் சொன்னது போல சில நிமிடங்களில் தொடர்பு கொண்டார்," சாரு, நான் அனுப்புகிற விலாசத்துக்கு எல்லாரும் வந்துடுங்க,எல்லாருக்கும் ஒரு இனிய அதிர்ச்சியாக இருக்கட்டும்" என்று பேச்சை முடித்துக் கொண்டார் நிவன்