அன்றைய இரவில், வெகு நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளுக்கு பிள்ளையின் நினைவும், ரிஷியின் நினைவும் அதிகமாக தாக்கியது! அவளது மனது அவன் தன்னை சீக்கிரமாக வந்து சேர வேண்டும் என்று ஏங்கி தவித்தது! அந்த நாள் என்று வருமோ என்ற ஏக்கத்தில், கண்ணீருடன் அப்படியே தூங்கிப் போனாள் இன்பா!
மறுநாள் காலையில் ஒருவாறு முயன்று தன் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்பொது தான் நிவனின் கைப் பேசி அழைப்பு வந்தது. அதன் பிறகு அவளது மனம் ஒரு நிலையில் இல்லை.
அவர் சொன்ன செய்திகள், உண்மையில் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரிஷி, சாருபாலாவின் மகன் என்றது, அடுத்து அவள் நினைவு வராதபோதும் அவன் தேடிக் கிளம்பியிருப்பது, பற்றியும் சொல்லிவிட்டு அவளது அபிப்பிராயம் கேட்டார்.
அவளும் தன் சம்மதத்தை தெரிவித்து விட்டிருந்தாள்! அப்பொழுது முதலாக அவளது கால் தரையில் பாவவில்லை.. சொல்லப் போனால் அவளது மனம் இருவித உணர்வுகளால் உழன்று கொண்டிருந்தது!


மாலையில் வசந்தன் ஒரு தேநீர் கடை அருகே வண்டியை நிறுத்தினான்!
நிவன் ஆதித்யா ஏற்கனவே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தார்!
"டாக்டர் நீங்க எங்களுக்கு முன்னாடியே கிளம்பிட்டீங்களே, இன்னும் இங்கே இருக்கீங்க?' என்ற ரிஷி வர்ஷனை சுமந்து கொண்டு அவருக்கு அருகில் அமர்ந்தான்!
"ஹை, ஆதி தாத்தா" என்று அவரிடம் தாவினான் வர்ஷன்!
பிள்ளையை வாங்கிக் கொண்டவர்,"எனக்கு மதுரையில் ஒரு சின்ன வேலை இருந்தது, அதனால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது"
"ஏன் டாக்டர் உங்கள் காரை டிரைவர் தானே ஓட்டுகிறார்? பேசாமல் நீங்கள் எங்களோடு வந்து விடுங்களேன்" என்றான் ரிஷி!
"ஆமாம் டாக்டர் சார் , எனக்கும் பேச்சு துணைக்கு ஆளில்லை, எங்ககூட வாங்க" என்றபடி சுரேந்திரனும் வந்து எதிர் இருக்கையில் அமர்ந்தார்!
"எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, சுரேன், இங்கே டீ நல்லா இருக்கு, எல்லாரும் என்னோட சார்பில் டீ சாப்பிடுங்க, என்று எழுந்து டீ மாஸ்டரிடம் நிவன் சொல்லிவிட்டு, பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டிருந்த போது அவரிடமிருந்து இறங்கிய வர்ஷன், சாலை ஓரத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் மேய்ந்து கொண்டிப்பதை பார்த்து அதன் அருகே ஓடினான்! அவைகள் அவன் விரட்டி வருவதாக நினைத்து தாவி கொண்டு சாலையின் மறுபுறம் ஓட, அதை துரத்திக் கொண்டு அவனும் பின்னால் ஓட முயல, அதை கவனித்துவிட்ட, ரிஷி ஓடிச்சென்று அவனை தூக்கிக் கொண்ட போது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெரியவர், சாலையில் குறுக்கே எதிர்பாராத விதமாக, வந்தவனை கண்டு தடுமாறியதில் வண்டியை ரிஷியின் மீதே விட்டுவிட, பிள்ளையை காப்பதிலேயே கவனமாக இருந்தவன், தடுமாறி, கீழே விழுந்து, அப்படியே புரண்டு, சாலையின் ஓரத்தில் இருந்த மையில் கல்லில் மோதி மயக்கமானான்.
சடுதியில் நடந்துவிட்ட சம்பவத்தில் அனைவரும் சிலகணங்கள் ஸ்தம்பித்து நிற்க, நிவனும் வசந்தனும் சுதாரித்து, ரிஷியின் அருகே ஓடினர். தலையில் ரத்தம் பெருக்கெடுக்க, பிள்ளைக்கு அடிபடாதவாறு அரவணைத்து பிடித்தபடி மல்லாந்திருந்தான் ரிஷி!
வசந்தன்,பயத்தில் அழுது கொண்டிருந்த வர்ஷனை தூக்கி ஏதும் அடிபட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தான், அதிர்ஷ்டவசமாக அவன் உடம்பில் சிறு கீறல் கூட இல்லை,
நிவன் ரிஷியின் தலைக் காயத்தை தன் கைக்குட்டையால் கட்டிவிட்டு, அவனை பரிசோதித்தவர் "சுரேன்,வசந்த் சீக்கிரம் வாங்க, உடனடியாக ஹாஸ்பிடல் போக வேண்டும்" என்று குரல் கொடுத்தவர், அப்படியே அவனை அலாக்காக தூக்கிப் போய், தன் காரின் பின்புறம் படுக்க வைத்து தானும் ஏறிக் கொண்டு டிரைவரை வண்டியை கிளப்பும்படி உத்தரவிட்டார்!
சாருபாலா மகனும்,பேரனும் சாலையில் உருண்டதை பார்த்த கணமே மயங்கி சரிந்து விட்டிருந்தார்.
சுரேந்திரன் தமக்கையை வண்டியில் கிடத்திவிட்டு முன்புறம் ஏறிக்கொள்ள சாந்தி, அழுது கொண்டிருந்த பேரனை, அணைத்து சமாதானம் செய்தபடி தானும் ஏறிக் கொண்டார், வசந்தன், நிவனின் காரை தொடர்ந்தான்.
பதினைந்து நிமிடங்களில் நிவனின் கார் கோவில்பட்டி ஊருக்குள் நுழைந்தது! அங்கே அவருக்கு ஒரு தனியார் மருத்துவமனையில் பரிச்சயம் உண்டு! அதனால் கைப்பேசியில் தொடர்பு கொண்டு விவரம் சொல்லிவிட்டார்! அதன்படி அங்கே தயாராக இருந்தனர் !
ரிஷியை மருத்துவமனைக்குள் தூக்கிச் செல்ல, எல்லாருமாக கண்ணீரும் கலக்கமுமாக பின் தொடர்ந்தனர்! சாருவுக்கு மயக்கம் தெளிந்திருந்தது!
நிவனும் தீவிர சிகிச்சை பிரிவு அறைக்குள் சென்றுவிட்டார்!
"என் பிள்ளையை நான் பிரிஞ்சே இருந்திருக்கலாம்! அவன் எங்கோ உயிரோடு இருந்திருப்பான்! எல்லாம் என்கிட்டே வந்த நேரம் தான் இப்படி ஆகிடுச்சு" சாரு புலம்ப ஆரம்பிக்க..
"அண்ணி, என்ன பேச்சு இது? அவனுக்கு ஒன்றும் ஆகாது! இப்படி யோசிச்சு பாருங்க, நம்ம நல்ல நேரம் அந்த நேரத்தில பெரிய வண்டி ஏதும் வராமல் நம்ம பிள்ளைகள் தப்பித்தார்களே, அது அதிர்ஷ்டம் தானே? அதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க அண்ணி" என்றார் சாந்தி.
அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், "அவருக்கு இவ்வளவு நேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியிருக்கணும்! ஆனால் திரும்பவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவருக்கு மயக்கம் தெளிஞ்சிடும்னு எதிர்பார்க்கிறேன், Let's see" என்று டாக்டர் நகர்ந்துவிட,
சாருபாலா, சட்டென்று நிவனுடைய சட்டையை கொத்தாக பற்றிக் கொண்டு,"ஆதி, டாக்டர் என்ன சொல்கிறார்? என் பிள்ளை.. பிள்ளை.. அவனுக்கு ஒன்றும் ஆகாதில்லை?" என்று கண்ணீருடன் அவரது முகத்தை பார்த்தார்!
நிவன் ஆதித்யா," பயப்படாதே பாலா, நம்ம ரிஷிக்கு ஒன்றும் ஆகாது, டாக்டர் சொன்னது போல இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவனுக்கு விழிப்பு வந்துவிடும்" என்று சாரு பாலாவின் தலையை கோதிவிட்டார்.
அவர்களை மற்ற மூவரும் அதிசயமாக பார்த்திருந்தனர்!


மாலை நெருங்க, நெருங்க இன்பாவின் மனதுக்குள் இனம்புரியாத தவிப்பு உண்டாயிற்று! வாசலுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்! வெகு நாட்களுக்குப் பிறகு அவளது சொந்தங்களை அவள் காணப் போகும் ஆவல்.. ஒருபுறம், அவளைப் பார்த்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? கோபப்படுவார்க்ளா? அல்லது பாசத்தை பொழிவார்களா? ஏதேதோ எண்ணங்களுடன் அவள் வளைய வந்து கொண்டிருந்தாள்!
மாலை, முடிந்து இரவு சூழ ஆரம்பித்த வேளையில்,
அந்த கைப்பேசி அழைப்பு வந்தது, ஆவலாக எடுத்துப் பேசிய இன்பசுரபி, அப்படியே மயங்கி சரிந்தாள் !
அத்தியாயம் - 95
ஆனந்தன் காலையில் சரியாக உணவு உண்ணவில்லை என்று மதியம் சமையல் முடிந்ததும், அனிதா அவரது அறைக்கு உணவை அனுப்பி வைத்தார்!
மகனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்ற கடுப்பில் இருந்தார் அவர். ஆனால் அதை பணிப்பெண்ணிடம் காட்ட மனமற்று வைத்துவிட்டுப் போகச் சொன்னார்! இடையில் கொடுத்து அனுப்பிய பழச்சாறும் மேசையில் அப்படியே இருப்பதை பார்த்த பணிப்பெண், நேரே வந்து எஜமானியிடம் தெரிவித்து விட்டாள். இனியும் ஒதுங்கி இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவர், கணவரின் அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்!
"உங்க மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க? வேளா வேளைக்கு ஆக்கிப் போட்டும் சாப்பிடாமல் ஏன் இப்படி உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க? அதனால நடந்தது எதுவும் இல்லை என்று ஆகிவிடுமா? பாதி வாழ்க்கை முடிஞ்சு போச்சு, மீதி வாழ்க்கையை கொஞ்சம் நல்லபடியாக வாழலாம் என்று தான் ரிஷிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடலாம்னு நினைச்சேன்! அவன் வேணாம்னு சொன்னா, அப்படியே விட்டுட முடியுமா, கொஞ்சம் பொறுத்து பேசி சம்மதிக்க வைக்கணும். அதை விட்டுட்டு இப்படி கவலைப்பட்டு சாப்பிடாம உடம்பை கெடுத்துக்கிட்ட எப்படிங்க?" கணவர் குறுக்கிட முயன்றதை தவிர்த்தவராக படபட என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
"நான் அதைப் பத்தி கவலைப்படறேன் என்று உன்கிட்டே சொன்னேனா?" என்று எரிச்சலுடன் கேட்டவர், "எனக்கு இப்ப சாப்பாடு வேண்டாம், எடுத்துட்டுப் போ"
"காலையில் தான் சரியா சாப்பிடலை, ஜுஸ் கொடுத்தேன்,அதையும் குடிக்கவில்லை. ரிஷிக்கு தெரிஞ்சா கவலைப்படுவான். முதல்ல சாப்பிடுங்க, அப்புறமாக உட்கார்ந்து கவலைப்படுங்க, நான் தடுக்க மாட்டேன்.." என்றவர் சாதம், குழம்பை பரிமாறி அவர் கையில் கொடுத்தார்.
வேறு வழியின்றி ஆனந்தன் சாப்பிடத் தொடங்கினார்! அனிதா அதற்கு மேலாக அங்கே நிற்கவில்லை. நின்றால் பேச்சு எங்கோ சென்றுவிடும் என்று தெரியும்.
மனைவியின் வற்புறுத்தலுக்காக, இரண்டு வாய் உணவை உட்கொண்டவர், சாப்பிட பிடிக்காமல் மூடி வைத்துவிட்டார்.
ஆனந்தனுக்கு நேரம் செல்ல செல்ல கவலை அதிகமாயிற்று! மகனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை! அவனை தொடர்பு கொள்ள முயன்றால், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக செய்தி தான் வந்தது! எப்படி அவனை தொடர்பு கொள்வது என்று அவருக்கு புரியவில்லை தவிப்பாக உலாவிக் கொண்டே இருந்தார்! வசந்தனிடம் அவர் கைப்பேசியில் பேசியது இல்லை. அதனால் அவனது எண்ணும் அவரிடம் இல்லை. அதை முன் யோசனையாக வாங்கி வைக்காத தன் முட்டாள்தனத்தை எண்ணி நடந்து கொண்டார். ஏனோ அவருக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதைப் போல மனதுக்குள் மிகுந்த சஞ்சலமாக இருந்தது!
வழக்கமாக எடுத்துக் கொள்ளும் ரத்த அழுத்த மாத்திரையை இரண்டு நாட்களாக எடுத்துக் கொள்ளவில்லை! அதனால் அவரது நடை தள்ளாட ஆரம்பித்தது! வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது!
சரியாக அந்த நேரம் பணிப்பெண்ணிடம் தேநீர் மற்றும் சிற்றுண்டியை கொடுத்து அனுப்பியிருந்தார் அனிதா! இரண்டு முறை கதவை தட்டிப் பார்த்த அந்தப் பெண், சத்தம் வராது போகவும் வந்து எஜமானியிடம் சொல்ல, அவரும் வந்து தட்டிப் பார்த்துப் பிறகு, கதவை தள்ளிப் திறந்து கொண்டு உள்ளே போனார்!
சோபாவிவில் மயங்கி சரிந்திருந்தார் ஆனந்தன்! பதற்றம் தொற்றிக் கொள்ள, தண்ணீரை எடுத்து கணவரின் முகத்தில் தெளித்தார், அப்போதும் அசைவின்றி போக, உடனடியாக மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்க்கு சொன்னார், அடுத்து ரிஷியின் எண்ணை தொடர்பு கொண்டால் அது அனைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி சொன்னது! ரகுவை கைப்பேசியில் அழைத்து விவரம் சொல்லி மருத்துவமனைக்கு வரச் சொன்னார் அனிதா!
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, ஆனந்தனை ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொண்டார்! கடவுளிடம் பிரார்த்தனை வைத்தபடி கலங்கிய விழிகளுடன் பயணித்தார் அனிதா.


ரிஷியின் விபத்து செய்தி கேட்டு மயங்கி விழுந்த இன்பாவை, பார்த்த நந்தனா பதறிப் போனார்.
அவளை தூக்கி மடியில் போட்டுக் கொண்டவர் , அருகில் வைத்திருந்த குடிநீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார்!
கண்களை விழித்த இன்பா, சட்டென்று எழுந்து அமர்ந்தாள். "நான் உடனே என் கேசவ்வை பார்க்கணும்" என்று மளமளவென்று எழுந்து வாசலுக்கு ஓடினாள்.
"இனியா, இரும்மா, இருட்டிருச்சு இந்த நேரத்தில் எங்கே கிளம்புகிறாய்? நான் டாக்டர்கிட்ட பேசுறேன். அவர் என்ன சொல்றாரோ அப்படியே செய்வோம்" என்று அவளை பற்றி இழுத்து நிறுத்தினார்.
"இல்லை அக்கா, என்னால ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்க முடியாது. என் கேசவ் அடிபட்டு ஆபத்தில் இருக்கிறார், நான் உடனே அவர்கிட்டே போகணும்" என்றவள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
நந்தனா, சட்டென்று இன்பாவை தன்னோடு அரவணைத்துக் கொண்டு, இவளை எப்படி சமாளிப்பது என்று சிலகணங்கள் தடுமாறியவர், உடனடியாக நிவன் ஆதித்யாவை கைப்பேசியில் அழைத்தார்.
"ஹலோ, டாக்டர். இங்கே இனியா உடனே கிளம்பணும்னு அழறாள். என்ன செய்யட்டும்?"
மறுமுனையில், நிவன் சம்மதம் சொல்ல, அடுத்த அரைமணி நேரத்தில், இன்பாவை அழைத்துக் கொண்டு, வாடகை காரை வரவழைத்து கிளம்பி விட்டார்.


மருத்துவமனையில்..
மருத்துவர் கொடுத்த நேர கெடுவுக்குள் ரிஷிக்கு மயக்கம் தெளிந்துவிட்டது..
ரிஷி ,கண்களை முழுதாக திறக்க முடியாமல் தலை வலித்தது. அவனுக்கு முதலில் இன்பாவுடன் நேர்ந்த விபத்து தான் நினைவுக்கு வந்தது. ஆகவே சுரபி, சுரபி .. என்று முணுமுணுக்க..
அவனை கண்காணிக்க அமர்த்தியிருந்த நர்ஸ் மருத்துவரை அழைத்துவரச் சென்றாள்.
மருத்துவர் உள்ளே சென்றபோது, ரிஷிக்கு நன்றாக முழிப்பு வந்திருந்தது. அவர் அவனை பரிசோதிக்கையில்,"டாக்டர் என்கூட அடிபட்ட நிலையில் பொண்ணு ஏதும் அட்மிட் ஆகியிருக்கிறாளா?" என்று கேட்டான்.
மருத்துவர், அவனை பரிசோதித்தவாறே யோசனையோடு, மறுப்பாக தலையை அசைத்துவிட்டு, "மிஸ்டர், இன்னும் மயக்கமாக இருக்கிறதா? என்று வினவினார்.
"நோ, டாக்டர். ஐம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.." என்று அவன் சொல்லவும், மருத்துவருக்கு சிரிப்பு வர, அதை அடக்கிக் கொண்டார்.
"ஓகே மிஸ்டர். பட் இன்னும் சில பரிசோசனை முடிவுகள் நாளைக்கு வந்துடட்டும், பார்த்துவிட்டு நான் சொல்கிறேன். இப்போது அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கொஞ்சம் ஓய்வு எடுங்க" என்றுவிட்டு வெளியே வந்தார் மருத்துவர்.
அவரது புன்னகை முகமே விஷயத்தை சொல்லிவிட்ட போதும், வாய்மொழியாக அவர் சொல்லுவதை கேட்க தவிப்புடன் நின்றனர்.
"ஹீ இஸ் ஆல்ரைட் நௌ. எதுக்கும் நாளைக்கு ரிப்போர்ட்ஸ் வந்ததும் பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் ஷீட் போட சொல்றேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் தனி அறைக்கு மாத்திடுவாங்க. அப்புறமாக நீங்க போய் பார்க்கலாம். ஆனால் தயவு செய்து அவரை அதிகம் பேச விடாதீங்க. ஓய்வு எடுக்கட்டும்", என்றுவிட்டு மருத்துவர் சென்றுவிட்டார்.
சாருபாலா பிள்ளைக்கு ஆபத்து இல்லை என்று கேட்ட பிறகே சற்று நிம்மதியாக உணர்ந்தார்.
மற்றவர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
சற்று நேரத்தில் ரிஷியை தனி அறைக்கு மாற்றிவிட்டனர். கண்களை மூடி படுத்திருந்த ரிஷிக்கு இடைப்பட்ட காலத்தில் மறந்து போயிருந்தது, என்று எல்லாமும் மெல்ல மெல்ல நினைவுக்கு வந்தது.
சாந்தி, தூங்கிவிட்ட வர்ஷனை, வசதியாக படுக்க வைப்பதற்காக, தூக்கிக் கொண்டு காருக்கு சென்றார். மற்றவர்கள் ரிஷியை காண உள்ளே சென்றனர்.
கதவு திறக்கும் அரவம் கேட்டு மெல்ல கண்ணை விழித்தான்.. சிலகணங்கள் எல்லோரையும் பார்த்தவனின் விழிகள் நண்பனிடம் வந்து நின்றது! இன்பாவைப் பற்றி அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே அவளை தேடி தான் கிளம்பியிருப்பதும் புரிந்தது.
ரிஷிக்கு ஏற்கனவே ஒரு முறை அடிபட்டதால் அவன் இன்பாவை மறந்து போனது போல, இப்போது அவனிடம் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்குமோ என்று எல்லோருக்கும் உள்ளூர ஒருவித அச்சம் இருந்தது. ஆனால்..
"வர்ஷன், வர்ஷனுக்கு என்னாச்சு? அவன் எங்கே அம்மா? என்று ரிஷிகேட்டதும், தான் எல்லாருக்கும் மூச்சு சற்று சீராயிற்று.
"அவன் நல்லா இருக்கிறான். தூங்கிட்டு இருக்கிறான். அதான் சாந்தி, காருக்கு தூக்கிட்டு போயிருக்கிறாள்" என்று சாரு பதிலளிக்கவும்,
"ஓ! சரிம்மா. இப்ப நாம் எங்கே இருக்கிறோம்?"
"கோவில்பட்டியில்.., என்ற நிவன், அவனது நாடி பிடித்து, பரிசோதித்தார். "ரிஷி, நீ கொஞ்சம் தூங்கி ஓய்வு எடு. எதைப் பற்றியும் யோசித்து மனசை குழப்பிக்காதே! எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட்" என்றவர், "பாலா, நான் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்" என்று வெளியேறினார்.
"அக்கா, நீ ரிஷி கூட இரு. நாங்க வெளியே இருக்கிறோம்" என்று சுரேந்திரன் வசந்தனுடன் வெளியேறினார்.
நிவன் ஆதித்யா, இன்பாவின் வரவைப் பற்றி தெரிவிக்கவில்லை. இனிய அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்தவர், பிரதான வாயிலுக்கு சென்று காத்திருந்தார்.