சென்னை
மருத்துவமனையில்..
ஆனந்தன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கவலையுடன் அனிதா அறை வாசலில் காத்திருந்தார். ரகுவாசனும் அங்கே நின்றிருந்தான்.
"ரிஷிக்கு கால் பண்ணிட்டியா ரகு?"
"அண்ணா போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது. காலையில் அப்பா கூட அண்ணா போன் பண்ணினானு கேட்டார். ஆமா என்ன விஷயம் அம்மா? அண்ணா அப்படி எங்கே தான் கிளம்பிப் போனான்?"
"எனக்கு தெரியாதுடா. என்கிட்ட ஒன்றும் சொல்விட்டு போகவில்லைடா. அவர்கிட்டே தான் சொல்லிட்டு போயிருக்கான். அதை நினைச்சு தான் இவர் கவலைப்பட்டு இப்படி உடம்பை கெடுத்துட்டு இங்கே வந்து படுத்திருக்கிறார்"
ரகு தாயை வினோதமாக பார்த்தான். கணவர் மனைவியிடம் மகன் எங்கே போயிருக்கிறான் என்று சொல்ல மாட்டாரா? அவராக சொல்லவில்லை என்றால் இவங்க கேட்காமல் எப்படி இருக்கிறார்? அவர்களுக்குள் ஏதோ சரியில்லை என்று முதல் முறையாக அவனுக்கு தோன்றியது. அதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்பா குணமானதும் அண்ணா எங்கே போனான் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று அவன் நினைக்கும் போது..
சிகிச்சை அறையில் இருந்து வெளிப்பட்டார் மருத்துவர். இருவரும், ஒரே குரலாக "என்னாச்சு டாக்டர்? என்றனர்..
"நத்திங் டு வொர்ரி.. சரியா, சாப்பிடாது, துங்காதது, எதையோ நினைச்சு ரொம்ப கவலைப்பட்டு என்று பிரஷர் அதிகமாகிடுச்சு. நௌ ஹீ இஸ் ஓகே. பட் ஒரு நாள் முழுக்க அவர் அப்ஸர்வேஷன்ல இருக்கட்டும்! நாளைக்கு சாயந்திரம் பார்த்துட்டு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம். ஆமா உங்க பெரிய பிள்ளை ரிஷி எங்கே? அவர் நினைவு வந்ததும் அவரைத்தான் தேடினார். ரிஷியை பார்த்துட்டா கொஞ்சம் பெட்டராக ஃபீல் பண்ணலாம். ஸ்ட்ரெஸ் ஆகாமல் பார்த்துங்கோங்க"மருத்துவர் சென்றுவிட..
அனிதா முதலில் சென்று பார்த்துவிட்டு வந்தார். ஆனந்தன் கண்களை திறக்காமல் படுத்திருந்தார். ஆனால் தூங்கவில்லை என்று புரிந்தது. வழக்கம் போல அவருக்கு தன்னிடம் பேச விருப்பமில்லை என்று புரிந்தவராக வெளியே வந்துவிட்டார்.
அடுத்து ரகு உள்ளே சென்று,"அப்பா என்று அழைத்தான்"
"ரகு... ரிஷிக்கு போன் பண்ணினியா?" என்றார் ஆவலாக..
"போன் கனெக்ட் ஆகவில்லை அப்பா. நான் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கிறேன்"
"அண்ணா பேசினான் என்றால் சொல்லுப்பா.. " என்றார் ஆனந்தன் தவிப்புடன்.
"நீங்க கவலைப்படாதீங்க அப்பா. அண்ணாக்கிட்டே பேசுறேன். இல்லைன்னா அவன் எங்கே போயிருக்கிறான் என்று சொல்லுங்க, நேரில் போய் பார்த்து பேசிவிட்டு, கையோடு அழைச்சிட்டு வர்றேன்"
"இல்லை அதெல்லாம் வேண்டாம்பா. அண்ணா ஒரு முக்கியமான விஷயமாக தான் போயிருக்கிறான். போனவன் ஒரு தகவலும் கொடுக்கலைன்னு கொஞ்சம் கவலையா இருக்கு"
"சரி அப்பா, நாளைக்கு தான் டிஸ்சார்ஜ் என்று டாக்டர் சொன்னார். அதனால நீ எதை நினைச்சும் கவலைப்படாமல் ரெஸ்ட் எடுங்க.."
வெளியே வந்த ரகுவுக்கு ரிஷியின் மீது கொஞ்சம் கோபம் உண்டாயிற்று. இப்ப திடீர்னு அண்ணா ஏன் இப்படி பண்ணிட்டு இருக்கான்? என்று நினைத்தவனுக்கு மனதுக்குள் ஏதேதோ வேண்டாத எண்ணங்கள் வந்து போயிற்று.. "ஒரு வேளை அண்ணாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ? என்று அவன் வாய்விட்டே சொல்லிவிட, அனிதா திடுக்கிட்டுப் போனார்.
"டேய் என்னடா உளறிட்டு இருக்கிறே? என்று அதட்டினார் .
"இல்லை அம்மா, இந்த அண்ணா, எப்பவும் இப்படி இருந்தது இல்லை.எங்கே போனாலும் போன் பேசிடுவான். அப்பா காலையில் இருந்து ட்ரை பண்ணியிருக்காங்க. நானும் தான் ட்ரை பண்ணினேன்"
என்றவனுக்கு காலையில் வசந்தனின் அழைப்பு வந்தது நினைவு வந்தது.
ரகு, உடனடியாக வசந்தனுக்கு அழைத்தான்.. அது நாட் ரீச்சபில் என்று செய்தி சொன்னது. இரண்டு மூன்று முறை முயன்றும் அவனுக்கு அதே பதில் தான் கிடைத்தது.
காலையில் வசந்தன் அவனிடம், எப்போதும் போல பேசவில்லை என்பது இப்போது நினைவில் ஓடியது. பட்டும்படாமல் தான் பேசினான். மேற்கொண்டு அவன் பேச முயன்றபோது அவசரமாக, ஊருக்கு கிளம்புவதாக தெரிவித்து தொடர்பை துண்டித்து விட்டான்.
ஆக, ஏதோ பெரிய விஷயம் நடந்திருக்கிறது. அதை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது? பேசிக்கொண்டிருந்த ரகு, பேசுவதை நிறுத்தி யோசனைக்கு போகவும்,
"என்ன விஷயம் ரகு? என்னாச்சு? நீ ஏதும் என்கிட்ட மறைக்கிறாயா?" என்றார் அனிதா.
ரகு நடந்ததை தெரிவித்தான். அனிதா யோசனையில் ஆழ்ந்தார்.
வசந்தனை அவருக்கு எப்போதும் பிடிக்காது என்பதை விட, அவரைப் பற்றிய விஷயம் தெரிந்த அவனது பெற்றோர் காரணமாக, ரிஷியுடன் அவன் பழகுவதை வெறுத்தார். ஆனால் அவரால் அந்த பழக்கத்தை தடுக்க முடியவில்லை. காரணம் ரிஷி. அவனிடம் ஒன்றை செய்யாதே என்றால் அதற்கான சரியான காரணங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வான். ஆனால் வசந்தன் விஷயத்தில் அப்படி சொல்ல வழியில்லாமல் போயிற்று. வசந்தன் அவளை இனம் கண்டு கொண்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகமாக அவன் தங்கள் வீட்டுக்கு வரமாட்டான். அப்படியே வந்தாலும் கூடத்தில் நின்றபடியே காத்திருப்பான்.. அதனால் அவன் மீது வீண் பழி சுமத்த முடியாது போனது. இப்போது கைப்பேசியில் ரிஷியின் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்கு ஒருவேளை இந்த வசந்தன் தான் காரணமோ? இல்லையே, அவனுக்கு உண்மை தெரிந்திருந்தால் வந்து சண்டை போட்டிருப்பானே? சுமூகமாகத் தானே கிளம்பிப் போனான். ஆனாலும் ஏதோ விவகாரம் இருக்கிறது..! அது எப்போது வெடிக்கும்? அதனால் ஆனந்தனுக்கு என்னவும் ஆகிவிட்டால் ? அனிதாவிற்கு நினைக்கும் போதே மனது படபடத்து. நிமிடத்தில் வியர்த்து கொட்டியது.. மயக்கம் வரும் போல் இருந்தது.. கணவன் சரியாக சாப்பிடாததால் அவருக்கும் உணவு செல்லவில்லை. இப்போது அதுவும் சேர்ந்து கொள்ள.. உட்கார்ந்த நிலையில் அப்படியே அவரது உடல் சரிய, ரகுவாசன் வெலவெலத்துப் போனவனாக, நர்ஸ் .. டாக்டர் சீக்கிரமாக யாராவது வாங்க.. " என்று தாயின் கன்னத்தில் லேசாக தட்டினான்..!
ஒரு நர்ஸ் அனிதாவைப் பரிசோதித்துவிட்டு, ஸட்ரெச்சர் எடுத்துவரும்படி வார்டு பாயிடம் பணித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அனிதாவும் அங்கே அனுமதிக்கப்பட்டு,ட்ரிப்ஸ் ஏற்றினர்.
"அவங்களுக்கு பயப்படும்படியாக ஒன்றும் இல்லை.. கொஞ்சம் அனீமிக்கா இருக்காங்க.. ட்ரிப் ஏறட்டும்.. அதோட பிளட் டெஸ்ட் எடுத்திருக்காங்க.. காலையில் ரிப்போர்ட்ஸ் வந்ததும் என்ன என்று பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்முழிச்சிடுவாங்க.. ஆனால் பேச்சு கொடுக்காதீங்க. பூரண ஓய்வு எடுக்கட்டும், நான் காலையில் வந்து பார்க்கிறேன்" என்று அவனது தோளில் ஆறுதலாக தட்டிவிட்டு மருத்துவர் செல்ல மீண்டுமாக அவன் தமயனை தொடர்பு கொள்ள முயன்று தோற்றான். எளிதில் எதற்கும் கலங்காத அந்த இளைஞன், அன்று ஆற்றுவார் தேற்றுவார் இன்றி கலங்கி நின்றான்.
அத்தியாயம் - 97
கோவில்பட்டி.
மருத்துவமனையில்..
நிவன், இன்பாவுக்காக காத்திருந்த போது, இரவு அனைவரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்தவர், சற்று தூரம் தள்ளியிருந்த லாட்ஜில் அறைகளை புக் செய்தார்.
அப்போதுதான் சாந்தி பேரனுடன் வெளியே வந்தார்.
"சிஸ்டர், எங்கே போறீங்க?" என்றார் நிவன்.
"இவனை தூங்க வைக்கலாம் என்றுதான் டாக்டர்" என்றதும்,
" ஓ! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, என்றவர் கைப்பேசியை எடுத்து சுரேந்திரனுக்கு அழைப்பு விடுத்தார்.
"சுரேன், சாரு, வசந்த்தை அழைச்சிட்டு இங்கே வாங்க" என்றார்.
"என்னாச்சு டாக்டர்?" என்று சுரேன் பதற்றமாக கேட்டார்.
"ஒன்றுமில்லை, சுரேன் நீங்க வாங்க சொல்றேன். ரிஷி, இப்ப நல்லா தூங்கிட்டு இருப்பான். அதனால பயப்படாமல், எல்லாரும் வாங்க"
சற்று நேரத்தில், மூவரும் வந்து சேர, நிவன், விஷயத்தை சொல்லி, அவர்களை காரில் அழைத்துப் போய் லாட்ஜில் இறக்கி விட்டார்.
"எட்டரைக்கு மேல ஆச்சு, டிபன் வரவழைத்து சாப்பிடுங்க. ரிஷி பத்தி கவலைப்படாதீங்க. நான் நைட் அவன் கூட தங்கிக்கிறேன்" என்றார் நிவன்.
எல்லோரும் உள்ளே செல்ல, தயங்கி நின்ற சாருபாலா,
"ஆதி, நா..ன் .." என்று இழுக்கவும்,
"நானும் டாக்டர் தான், உன் பிள்ளையை பத்திரமா பார்த்துப்பேன்" என்றார் சற்று கடுமையான குரலில்.
"ஐயோ, நான் உங்களை என்ன சொன்னேன்? பிள்ளை கூட இருக்கணும்னு நினைச்சு சொன்னேன், அவ்வளவு தான்" என்றார் குரலின் சுருதி இறங்கியவராக..
"அவன் எனக்கும் பிள்ளை மாதிரி தான். நீ, உட்கார்ந்தே பயணம் செஞ்சு வந்திருக்கிறே.. போய் பெட்ல ரிலாக்ஸாக தூங்கு. அதுக்காக மட்டும் இல்லை பாலா, அவன் சின்ன பையன் இல்லை. வாலிபன். கொஞ்சம் புரிஞ்சுக்கோ" என்றபோது குரல் இயல்பாகியிருந்தது.
"ஓகே. . ஓகே ஆதி.. நீங்களும் சாப்பிட்டு, அப்புறமாக ஹாஸ்பிடல் போங்க.. நான் நர்ஸ்கிட்டே பார்த்துக்க சொல்லிட்டு தான் வந்திருக்கிறேன்" என்று வழியனுப்பி வைக்க..
நிவனின் இதழில் புன்னகை ஒன்று உதித்தது..!
அறைக்கு சென்று பேரனை வசதியாக படுக்க வைத்துவிட்டு சாந்தி, இரவு உடைக்கு மாறிவிட்டு வந்தபோது சாப்பாடு வந்திருந்தது.
சாப்பிட அமர்ந்த சாந்தியிடம், சுரேந்திரன்,
"என்னாச்சு சாந்தி, உடம்புக்கு ஏதும் முடியவில்லையா?" என்றார்.
"எனக்கு ஒன்றுமில்லை அத்தான். நாம் நினைச்சுப் பார்க்காதது எல்லாம் நடக்குது இல்லையா?"
"ஆமா சாந்தி. சாருவுக்கு அவளோட பிள்ளை கிடைச்சுட்டான். அதே போல நம்ம பாப்பாவும் கிடைச்சுட்டா போதும்.." என்றார் குரல் கரகரக்க..
"எனக்கு இன்னிக்கு அவள் நியாபகமாவே இருக்கு அத்தான். இன்னும் அவள் காணாமல் போனதை என்னால் நம்ப முடியவில்லை" கண்ணீர் வழிய, புறங்கையால் துடைத்துக் கொண்டார்.
" சரி, சாப்பிடும்மா. நடுநிசியில் பசிச்சா,சாப்பிட, இங்கே ஒன்றும் இல்லை"
"வர்ஷனுக்கு மட்டும் பால் வாங்கணும்ங்க, சீக்கிரமாக தூங்கிட்டான்ல, அதனால எழுந்துப்பான். நம்ம இன்பா மாதிரியே,பசி மட்டும் பொறுக்க மாட்டான்"
"சரி, பிளாஸ்க் கொடு, கீழே தானே ஹோட்டல் நான் போய் வாங்கிட்டு வர்றேன்" என்று சாப்பிட்டதும் சுரேந்திரன்,வெளியேறி லிஃப்டின் வழியாக கீழே செல்ல, அதே சமயம்,இன்பா நந்தனாவுடன், படிகள் வழியாக மேலே அன்னை, இருந்த அறையை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
கணவர் கிளம்பியதும், பேரன் அருகில் சென்று, கண்களை மூடி அமர்ந்திருந்த,சாந்திக்கு அன்று ஏனோ மகளின் நினைவு அதிகமாக எழுந்தது. தினமும் ஏதோ ஒரு விஷயத்தில், அவள் நினைவு வருவது தான்.. சமீபகாலமாக வர்ஷனின் சில குணாதிசயங்கள், அதை அடிக்கடி நினைவுபடுத்தியது. இன்றைக்கு ஏனோ, மனது மிகுந்த பாரமாக இருந்தது. சிறு வயது முதல் அவளது, விளையாட்டு சிரிப்பு, ஒவ்வொரு பிறந்தநாள், திலகமும் அவளும் வீட்டில் அடிக்கும் லூட்டி. இப்படியாக எத்தனை சம்பவங்கள், நினைக்கையில் கண்ணீர் வழிந்தது. ஆனால் திடுமென அவள் காணாமல் போய் விட்டதாக சொன்ன போதும் சரி, அவள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் சொன்ன போதும், அதை இன்றுவரை அவரால் நம்ப முடியவில்லை. அவள் மற்ற பெண்களைப் போல சுயநலமாக யோசிக்கிறவள் இல்லை. எப்போதும் அவளுக்கு குடும்பம் தான் முதலில். மற்றது பிறகுதான். அப்படிப்பட்ட பெண், பிரியமானவர்களை, கஷ்டப்படும்படி எப்படி விட்டுச் சென்றாள்? என்பதுதான் அவருக்கு இன்று வரை புரியாத புதிராக இருந்தது.. !
அறையை அடைந்த இன்பா, நந்தனாவை, அவர்களுக்கான அறைக்கு செல்லுமாறு, பணித்துவிட்டு, கதவை லேசாக தட்டினாள்.
அதற்குள்ளாகவா திரும்பிவிட்டார் என்று யோசித்தவர், கதவை சிறிதளவு திறந்து பார்த்தார் சாந்தி. அங்கே நின்ற மகளைப் பார்த்ததும் பிரம்மையோ என்று கண்களை கசக்கிவிட்டு, மீண்டும் பார்த்தவர்.. கதவை அகலமாக திறந்தார்.
இன்பா உள்ளே நுழைந்து கதவை சாத்திவிட்டு, திரும்பியதும், சாந்தி அவளை ஓங்கி அறைந்தார்.
கண்கள் குளமாக, அடிபட்ட கன்னத்தை பிடித்தபடி, அதிர்ந்து நின்றாள் இன்பா.
"இத்தனை நாளும் நீ உயிரோடு இல்லை என்று நினைத்து நினைத்து நாங்கள் பட்ட வேதனை உனக்கு தெரியுமா? ஆனால் நீ இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், இருக்கிறாய் என்று சந்தோஷப்படவும் முடியாமல் நாங்கள் எப்படி தவித்தோம் என்று அந்த கடவுளுக்கு தான் தெரியும்." என்று வருத்தமாக மொழிந்தவர், தொடர்ந்து, "ஏன் .. ஏன் சுரபி? நீ உயிரோடு இருக்கிறாய் என்று ஏன் எங்களுக்கு சொல்லவில்லை. எதுக்காக எங்களை தவிக்க விட்டுட்டு உன்னால எப்படி இருக்க முடிந்தது? உன்னை பிரிஞ்சு நாங்க எப்படி இருப்போம்னு கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா?"என்று ஆத்திரமாக கேட்டவர், மேலே பேச முடியாமல் உடைந்து அழலானார்.
இன்பா தாயைக் கட்டிக் கொண்டாள். "அம்மா உங்களை பிரிஞ்சு நானும் சந்தோஷமாக இருக்கவில்லை அம்மா.." என்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
"அதுதான் ஏன் என்று கேட்கிறேன் சுரபி.. அப்படி என்ன அவசியம்? அட அப்படியே தலைபோகிற விஷயமாக இருந்தாலும்கூட, நாம் எல்லாருமாக சேர்ந்து அதற்கு நல்ல தீர்வை கண்டுபிடிச்சு இருப்போமே? அப்படி என்றால் உனக்கு எங்கள் மீது இருந்தது பாசம், மரியாதை எல்லாம் இல்லை.. பயம்தான்? நாங்கள் அப்படித்தான் உன்னை வளர்ந்திருக்கிறோம் இல்லையா?"
"இல்லை அம்மா.. நான் தான் பயந்துவிட்டேன். என் காரணமாக நீங்க எல்லாரும், ஊர் முன்னால அவமானப்பட்டு நிற்ககூடாதுன்னு நினைச்சேன். இத்தனைக்கும் தெரியாமல் நடந்துவிட்ட ஒரு சம்பவத்தின் பின்விளைவு அது. ஆனால் அதற்காக அதை கழித்து கட்டவும் எனக்கு மனம் வரவில்லை அம்மா"
"சுரபி, புரியும்படியா சொல்லு" என்று கண்டிப்பான குரலில் சாந்தி சொல்ல..
இன்பாவின் கண்கள், இயல்பாக மகனிடம் சென்றது..!
"அவனைப் பற்றி பிறகு பேசலாம். நீ சொல்லு"
"அவன் என் பிள்ளை அம்மா" என்றதும் அதிர்ந்து குழந்தையையும் மகளையும் மாறி மாறிப் பார்த்தார் சாந்தி.
"ஏய்..எ... என்னடி சொல்றே .." என்றபோது தான் ரிஷியை, அப்பா என்று சாரு அழைக்க சொன்னது நினைவுக்கு வந்தது.
"அம்மா ப்ளீஸ்.. நீங்க நினைக்கிறது போல எதுவுமே இல்லை.. என்ற இன்பசுரபி, நடந்ததை சுருக்கமாக தெரிவித்தாள்.
அப்படியே தொய்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் சாந்தி.
"அப்போ அத்தைகூட நீ தொடர்பில் இருந்தாயா?" என்றவரின் குரலில் உணர்ச்சியே இல்லை.
"இல்லை..அப்படி எல்லாம் இல்லை.. அம்மா. இவனை அத்தைக்கிட்டே அனுப்பிவிட்டதோடு, எந்த பேச்சும் இல்லை. சொல்லப் போனால் அத்தைக்கு இது என் குழந்தை என்று சொல்லவிலலை. நான் நிவன் மாமாக்கிட்டே சொல்லக்கூடாது என்று வாக்கு வாங்கியிருந்தேன். உங்களுக்கு மறைத்து எதுவும் நடக்கவில்லை அம்மா" என்றாள்.
"ஏன்டாம்மா, இதை அப்போதே சொல்லியிருந்தால், உன்னை அத்தைகூட வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சு இருப்போமேடா.. இத்தனை காலம் பிரிஞ்சு இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே ராஜாத்தி" என்று மகளை தன்னுடன் அரவணைத்துக் கொண்டார்.
அப்போது அறைக் கதவு தட்டும் சத்தம் கேட்டது. இன்பாவை இருக்க சொல்லி சாந்தி சென்று கதவைத் திறந்தார்.
உள்ளே வந்த சுரேந்திரன், பிளாஸ்க்கை மனைவியிடம் கொடுத்துவிட்டு, சட்டையை கழற்றியபடியே.."பால் பக்கத்தில் கிடைக்கவில்லை சாந்தி, கொஞ்சம் தூரம் போய் தான் வாங்கிட்டு வந்தேன்.. குட்டிப் பையன் எழுந்துக்கிட்டானா?..
"அப்பா" என்ற குரலில், ஒரு கணம் சுரேந்திரன் திடுக்கிட்டுப் போனவராக திரும்பிப் பார்த்தார். நம்ப முடியாத ஆச்சரியமும், அதிர்ச்சியுமாக சில கணங்கள் நின்றவர், மனைவியின் தொடுகையில், மீண்டும் பார்த்தவர், கண்கள் கலங்க,
" ஹே..இ.. இன்பாக்குட்டி..." என்று ஒரே தாவலில் மகளை அரவணைத்துக் கொண்டவரின் உடல் அழுகையில் குலுங்கியது.
"அழாதீங்க அப்பா.. ப்ளீஸ்.. நான் தான் வந்துவிட்டேனே?"என்று தந்தையின் முதுகினை ஆறுதலாக வருடியவளின் குரலும் கரகரத்தது.
"இப்பத்தான், நானும் அம்மாவும் உன்னைப் பத்தி பேசிட்டு இருந்தொம்,"எங்களை தவிக்கவிட்டுட்டு எங்கேடாம்மா போய்விட்டாய்?"குரல் கரகரக்க சுரேந்திரன் கேட்டார்.
"என்னை மன்னித்து விடுங்க அப்பா. எல்லாம் விவரமாக அம்மாக்கிட்டே இப்ப தான் சொன்னேன் அப்பா. நேரமாகிறது, நீங்க தூங்குங்க" என்றவள், தயங்கியபடி, மகனின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, "நான் காலையில் வர்றேன் அம்மா" என்று கிளம்பியவளிடம்
"இன்பா நீ எப்படி இங்கே வந்தேன்னு சொல்லவில்லையே?"என்ற சுரேந்திரனுக்கு ஏதோ விளங்குவது போல இருந்தது.
இன்பா தாயைப் பார்த்தாள். "அவள் பிரயாணம் செஞாசு களைச்சுப் போய் வந்திருக்கிறாள் அத்தான். அவள் போகட்டும், நான் எல்லாம் சொல்கிறேன்" என்றதும் இன்பா வெளியேறினாள்.


நந்தனா இருந்த அறைக்கு வந்து, உடை மாற்றிவிட்டு, கட்டிலில் படுத்த இன்பாவின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.. அன்றுவரை அவள் தாய் சொன்ன கோணத்தில் நினைத்துப் பார்த்திருக்கவில்லை..!
பெற்ற பிள்ளையை தூக்கிவர அவள் மனம் வெகுவாக துடித்தது. ஆனால், அவளை குழந்தைக்கு அடையாளம் தெரியாதே.. இரவில் விழித்து அழுதான் என்றால் சமாளிப்பது கடினம் என்ற காரணத்தினால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்துவிட்டாள்.
மருத்துவமனைக்கு சென்றும், ரிஷியை பார்க்க நிவன் அனுமதிக்கவில்லை..
"மாமா, ப்ளீஸ் ஓரமா நின்னு பார்த்துவிட்டு வந்துடுறேன்" என்று கெஞ்சினாள்..!
"இனியா, அவனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. இப்ப அவனுக்கு நல்ல ஓய்வு தேவை.. ! அடுத்தது முக்கியமான விஷயம் அவனுக்கு உன் நினைவு வந்திருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை..! அதனால.. இவ்வளவு காலம் பொறுத்திருந்தவள் இன்னும் ஒரு இரவு பொறுத்துக் கொள். அது மட்டுமில்லை.. இதைவிட ஒரு தார்மீக பொறுப்பு உனக்கு இருக்கு. உன் பெற்றோரைப் பார்த்து நடந்ததை சொல்றது ரொம்ப அவசியம்..! அவங்களுக்கு விஷயம் தெரிந்தால் தான், காலையில் நாம் எல்லாருமாக சுமூகமாக சந்தித்துக் கொள்ள முடியும்" என்றார்.
நிவன் சொன்னது ரொம்பவும் சரி என்று அவள் தாயை சந்தித்தபின் புரிந்தது, கூடவே அத்தனை நாளும் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம், விலகி மனம் லேசாகிவிட்டதை போல உணர்ந்தாள் இன்பா