• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

99 & 100. சொந்தமடி நானுனக்கு! சொர்க்கமடி நீயெனக்கு!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
176
157
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
அத்தியாயம் - 99

சென்னை


ரகு தந்தை இருந்த அறைக்கு சென்றான்.

ரிஷியைப் பற்றிய விஷயத்தை இனியும் மறைத்து எந்த பயனும் இல்லை என்பதோடு, அவன் அப்படி போனதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ள நினைத்தான். நிச்சயமாக தந்தைக்கு விஷயம் தெரிந்து இருக்கும் என்று நம்பினான்.

"வாப்பா ரகு" என்று சோர்வான குரலில் அழைத்தார் ஆனந்தன்.

அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டான்.

"இப்போ, உங்களுக்கு எப்படி இருக்கிறது அப்பா?" என்றான்.

"எனக்கு ஒன்றுமில்லைப்பா. நான் நல்லா இருக்கிறேன். அது அண்ணன் நல்லபடியாக போய் சேர்ந்தானானு கவலையில் இருந்ததால் சரியாக சாப்பிட முடியலை. அதனால மாத்திரையும் போடலை. அதான் கொஞ்சம் உடம்பு படுத்திருச்சு..என்றவர்," சரி நீ சொல்லு அண்ணா என்ன சொன்னான்?"

ரகு சில கணங்கள் அமைதியாக தலை கவிழ்ந்து இருந்துவிட்டு, மெல்ல நிமிர்ந்தவனின் கண்கள் கலங்கியிருக்க," அண்ணன் இனி வர மாட்டான் அப்பா"

"டேய்.. என்ன சொல்றே? ரி.. ரிஷிக்கு என்னடா ஆச்சு? ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிட்டு இருக்கிறே?" என்று பதற்றமாக எழுந்து அமர்ந்தார்.

"அண்ணாவுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அவன் எங்கேயோ சுகமாக இருக்கிறான் அப்பா. நம் உறவை வேண்டாம் என்று முடிவு செய்து விலகிப் போய்விட்டான் அப்பா. அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும் அப்பா.. ஏன் அப்பா அப்படி என்ன நடந்துவிட்டது? நம்மை ஒரேயடியாக விட்டு விலகிப் போகும் அளவுக்கு பெரிதாக என்ன நேர்ந்தது?" என்றான் ரகு தீவிரமான குரலில்.

ஆனந்தன் விஷயத்தை அறிந்ததும் அப்படியே திக்பிரம்மை பிடித்தவராக அமர்ந்திருந்தார். ரகுவின் குரல் அவரது செவிகளுக்கு எட்டவில்லை. ரிஷி அவரை விட்டுப் போய் விட்டான்.. அந்த செய்தியே அவரது இதயத்தை வெகுவாக தாக்கியது..
இப்படி ஒரு நாள் நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மகன் விரும்பிய பெண்ணை அழைத்து வந்த பிறகு திருமணம் செய்து வைத்ததும், உண்மையை அவனிடம் சொல்லி பாவமன்னிப்பு கேட்க எண்ணியிருந்தார். ஆனால் அதற்கு இடமே தராமல் மகன் போய்விட்டது அவரை மிகவும் பாதித்தது. முன் எப்போதையும் விட இப்போது தான் அவர் செய்த துரோகத்தின் அளவு மிகவும் பெரிதாக தோன்றியது.. நடந்து விட்ட நிகழ்வுகள் யாவும் மனதுக்குள் காட்சியாக தெரிய தெரிய, தன்னை நினைத்தே அவருக்கு அருவருப்பாக இருந்தது.. வளர்ந்து நிற்கும் பிள்ளைகள் கேள்வி கேட்கும் நிலையில் நிற்பதை நினைக்கையில் அவமானமாக உணர்ந்தார்..! அவரையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தது!

தந்தையின் பதிலுக்காக காத்திருந்த ரகுவாசன் லேசாக திடுக்கிட்டான். "அப்பா" என்று மெல்ல அழைத்தான்.

ஆனந்தன் பதில் சொல்லாமல், அழுகையில் குலுங்கவும், பதறிப்போனவனாக தாயிடம் ஓடினான்.

அனிதாவும் கிட்டத்தட்ட பதற்றமான நிலையில் தான் இருந்தார். அவர் கருவுற்று இருந்த சமயத்தில், கணவருடன் சுமூகமாக வாழ வேண்டித்தான், ரிஷியை கண்ணுங்க கருத்துமாக பார்த்து வளர்த்தார். சொல்லப் போனால் சொந்தப் பிள்ளை இருக்க யாரோ பெற்ற பிள்ளையை வளர்க்க அவருக்கு மனமில்லை. ஆனால் மாமியார் செய்த வேலையால், ரிஷியை வளர்க்கும் பொறுப்பு அவரிடம் தள்ளப்பட்டது. பேறுகாலம் வரையிலும் விசாலாட்சி, பேரனை பார்த்துக் கொண்டார். அப்போது எல்லாம் இரவுகளில் குடியில் தான் இருந்தார் ஆனந்தன்.

ஓரளவுக்கு பிள்ளைகள் வளர்ந்த பின்னே தான் ஆனந்தன் முழு கவனத்தையும் தொழிலில் செலுத்த ஆரம்பித்தார். ரிஷி பள்ளியில் சேர்ந்திருந்தான். அவன் அவரது, முதல் மனைவியை நினைவு படுத்தினான். அவனிடம் மிகுந்த பிரியாமாக நடந்து கொண்டார். அதை கவனித்த அனிதா, ரிஷியைக் கொண்டே தன் விஷயங்களை சாதித்து கொண்டார். இப்போது அவனே போய்விட்டான் என்றால் ஆனந்தன் எப்படி மாறுவாரோ என்று கதிகலங்கிப் போயிருந்தார்..

அப்போதுதான் ரகு அங்கே வந்தான்," அம்மா அப்பா ஒன்றும் பேசமாட்டேங்கிறார், வந்து என்ன என்று பாருங்க" என்றான்.

அனிதாவுக்கு உடனடியாக ஆனந்தன் முன்பு செல்ல மிகுந்த தயக்கம் உண்டாயிற்று. ஆனால் இப்போது போகாமலும் முடியாது என்று உணர்ந்தவராக, அவர் இருந்த அறைக்கு சென்றார்.

"அத்தான்... " என்று மெதுவாக அழைத்தார்.

ஆனந்தன் கண்ணீருடன் சாருவின் நினைவில் ஆழ்ந்திருந்தார். ஆகவே அனிதாவின் குரல் அவரை எட்டவில்லை..!

"அத்தான்.. பேசுங்க" என்று அவரது தோளில் கை வைத்ததும்,

மனைவியை நிமிர்ந்து பார்த்தவரின் கண்களில் சீற்றம், " எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்" என்றவர் ஓங்கி அறைந்தார்..

கன்னத்தை பிடித்தவாறு, சிலகணங்கள் ஸ்தம்பித்து நின்றார் அனிதா. அவர்களுக்குள் எத்தனை மனஸ்தாபம் இருந்தாலும் அதை பிள்ளைகள் முன்பு அவர் காட்டியது இல்லை. ஆனால் இன்று வளர்ந்த பிள்ளை முன் அடி வாங்கியது அவமானமாக இருந்தது..

"அப்பா " என்று அதட்டியவாறு, தாய் தந்தைக்கு நடுவே வந்து நின்றான் ரகுவாசன்..

ஆனந்தன் கோபம் குறையாமல், அவனை உறுத்து விழித்தார்.. அதில் சற்று நடுங்கித்தான் போனான் ரகு. ஆனாலும் தைரியமாக," அண்ணன் போனதற்கு அம்மா என்னப்பா செய்வாங்க? அவன் உங்ககிட்டே தானே கடைசியாக பேசிட்டு போனார். எங்கே போறதா சொன்னார் என்று கேட்டால் அதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க.. இப்ப என்னடான்னா அம்மா மேல கோபப்பட்டு அடிக்க வேறு செய்றீங்க" என்று படபடத்தான்.

"உனக்கு என்னடா தெரியும்? இன்னிக்கு அவன் என்னை பிரிஞ்சு போக இவள் தான் காரணம். வேணும்னா அவளைய கேளு.. நான் சொன்னது பொய்யா நிஜமானு"

"இங்கே பாருங்க, இப்ப எதுக்கு இந்த பேச்சு எல்லாம்? பேசாமல் போலீசில் சொல்லி ரிஷியை தேடச் சொல்றதை விட்டுட்டு, தேவை இல்லாமல் கோபப்பட்டு, உடம்புக்கு ஏதாவது ஆகிடப் போகுது " என்றார் அனிதா அப்போதும் நிதானத்தை விடாமல்!

மகன் முன்னால் அசிங்கப்படுவதை அவர் விரும்பவில்லை. அதனால் ஆன மட்டும் சமாளிப்பது என்று முடிவு செய்தார். ஆனால் ..

"எதுக்குடி, எதுக்குங்கிறேன்? போலீசில் சொல்லி.. ஊரே சேர்ந்து காரி துப்பறதுக்கா? என்னை சொல்லணும்டி, உன் மேல பாவப்பட்டதுக்கு அனுபவிக்கிறேன். கடைசி காலத்துல பெத்த பிள்ளையை பிரிஞ்சு , புத்திர சோகத்தில் சாகணும்னு விதி.. ஆனால் முக்கிய காரணம் நீதான்டி.. சொல்லு உன் பிள்ளை காரணம் கேட்கிறான்ல.. விவரமா சொல்லு"

"அத்தான், பழசை பேசி இப்ப எதுவும் ஆகப் போவதில்லை.. நான் சொல்றதை கேளுங்க, அவன் போனால் அப்படியே விட்டுடணுமா?
போலீஸ் வேண்டாம்னா துப்பறியும் ஆபீஸ்ல சொல்லி கண்டுபிடிக்க சொல்லுங்க, நான் அவன் காலில் விழுந்தாவது கூட்டிட்டு வர்றேன்"

ரகுவாசன் யோசனையொடு இருவரையும் பார்த்தான். தந்தை சொல்வது போல தாயிடம் தான் தப்பிருக்கிறதோ என்று தோன்றியது.. அப்படி என்ன நடந்து இருக்கும்?"

"அவன், அவனோட அம்மா மாதிரி ரோஷக்காரன்டி.. அதான் என் முகத்தில் கூட முழிக்கப் பிடிக்காமல், அவளை மாதிரியே சண்டை போடாமல், சத்தம் காட்டாமல் செருப்பால் அடிச்ச மாதிரி, தண்டனை கொடுத்துட்டுப் போயிட்டான்" என்ற ஆனந்தன் முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலுங்கினார்..

"அவன் அம்மா மாதிரி"..? அப்பா என்ன சொல்கிறார் என்று திடுக்கிட்டுப் பார்த்தான் ரகு..!

❤️🧡❤️

மருத்துவமனையில்

தனித்துவிடப்பட்ட இன்பாவும் ரிஷியும் பேச்சற்று ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தனர்.

ரிஷிக்கு, விபத்திற்கு முன்பாக எழுந்த அதே குற்றவுணர்வு மீண்டுமாக தாக்கியது. தன்னை மீறி நடந்துவிட்ட ஒரு விஷயம் என்று அதை அவனால் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. முறையாக கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைந்த பின் நடக்க வேண்டிய ஒன்றை முறையற்று நடத்திவிட்டோம் என்று அவனுக்கு சங்கடமாக இருந்தது.

ரிஷிக்கு இப்போது தேவை மன அமைதிதான். நடந்தது பற்றி பேசி அவனை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று காதலியாக மட்டுமின்றி ஒரு மருத்துவராகவும் இன்பா நினைத்தாள்.

இருவருக்கும் நிறைய பேச வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அதற்கு அந்த சூழலும் இடமும் சரியானதாக தோன்றாததால், இருவருமே தங்களைப் பற்றிய பேச்சை தவிர்த்தனர்.

"கேசவ், வலி இப்ப எப்படி இருக்கு?" என்றாள் அவனது தலையை வருடியவாறு!

"வலி இப்ப பரவாயில்லை சுபி. ஆமா நீ .. எப்படி இங்கே? யார் சொன்னாங்க?"

"அதை எல்லாம் அப்புறமாக சாவகாசமாக சொல்கிறேன் கேசவ். உங்களுக்கு இப்போது ஓய்வு தேவை. எதையும் நினைச்சு மனசை அலட்க்காதீங்க.. என்ன ? என்று குழந்தையிடம் சொல்வது போல சொன்னாள்.

"எனக்கு ஒன்றும் இல்லை சுபி. இப்பக்கூட எழுந்து வீட்டுக்கு கிளம்பிடுவேன். இந்த டாக்டர் தான் , டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்னு போட்டு பில்லை ஏற்றப் பார்க்கிறார்" என்று குறைப்பட்டவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

"அவர் பிறகு எப்படி பிழைப்பது கேசவ் ? என்றாள் கேலியாக..

"அடப் பாவமே அப்போ, நிஜமாகவே இந்த டெஸ்ட் எல்லாம் நோயாளியை குணப்படுத்த இல்லையா?" என்று அப்பாவியாக கேட்டான்.

"ஐயோ கேசவ்.. நீங்க இருக்கீங்களே.."என்ற இன்பா அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பை வாஞ்சையுடன் பார்த்திருந்தான் ரிஷி..


🩵❤️🧡

அத்தியாயம் - 100

சென்னை

"அம்மா, அண்ணன் பத்தி அப்பா என்ன சொல்கிறார்? அவன் அம்மா என்று ஏதேதோ சொல்கிறாரே?
என்ன நடந்தது என்று நீங்களாவது சொல்லுங்களேன்" என்றான் ரகுவாசன்.

"சொல்லு, மகன் கேட்கிறான்ல " என்றார் ஆனந்தன் கிண்டலாக..

"என்னவோ தப்பெல்லாம் என் மேல்தான் என்கிறாப்ல பேசறீங்களே? உங்களுக்கு அதில் சம்பந்தமே இல்லையா?"

ஆனந்தன் ஆத்திரமாக, மனைவியை நோக்கிவிட்டு," இருக்கு , இருக்கு இருக்கப்போய் தானே இன்றைக்கு என் பிள்ளை என்னை விட்டுட்டுப் போய்விட்டான். புத்திக்கெட்டுப் போயிட்டேன். நான் செஞ்ச அந்த ஒரே ஒரு தப்பு, என்னோட வாழ்க்கையே நரகமாகிடுச்சே. இன்னிக்கு வரை நான் அந்த குற்றவுணர்வில் இருந்து மீள முடியாமல் வேதனைப்பட்டுட்டு இருக்கிறேன். என்னோட சாரு என் முகத்தில் கூட முழிக்கப் பிடிக்காமல், என்னை விட்டுட்டுப் போய்விட்டாள், இப்ப அதே போல என் பிள்ளையும் போய்விட்டான். என் தொழில் வாரிசாக இருப்பான் என்று நினைத்தேன். எல்லாவற்றிலும் மண் விழுந்துவிட்டது. அவனைப் பெற்ற அம்மாவுக்கு நான் செய்த துரோகத்திற்காக, என் உறவு மட்டும் இல்லை, பணமும் வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லிட்டுப் போய் விட்டான்" என்று புலம்பியவர், " இந்த நிமிஷத்தில் இருந்து எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன் பையனை கூட்டிட்டு நீ போய்விடு. எங்கே போவியோ எனக்குத் தெரியாது. இத்தனை காலமும் என் பிள்ளைக்காகத் தான் ஒரே வீட்டில் வாழ்ந்தேன். இப்ப அவனே இல்லை. இனி உன் முகத்தில் முழிக்க எனக்கு பிரியமில்லை"

ரகுவாசனுக்கு துல்லியமாக இல்லாவிட்டாலும், நடந்த விஷயம் இன்னதென்று விளங்கிற்று. அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் கடைசியாக தந்தை பிரவு பற்றி பேசவும் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

"அப்பா, என்ன சொல்றீங்க? உங்களை விட்டுட்டு நாங்க எங்கே போறது? அண்ணன் போனதுக்கு ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்குன்னு புரியுது. அதற்காக நாமும் பிரியணும்னு சொல்றது சரியில்லை அப்பா"

"எது சரி , எது தப்பு என்று எனக்கு தெரியும். நான் வீட்டுக்கு போகிறேன். பில்லை செட்டில் பண்ணிட்டு வாங்க" என்ற ஆனந்தன் அங்கிருந்து வேகமாக கிளம்பி வெளியேறினார்.

ஆனந்தனின் இந்த முடிவை அனிதா, சற்றும் எதிர்பார்க்கவில்லை. அனிதாவிற்கு சொத்து பத்து பற்றிய கவலை இல்லை. ஆனால், கணவர் பிரிந்து செல்லும்படி சொன்னது தான், அவருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்தது. யாருக்காக இத்தனை காலம் வாழ்ந்தாரோ அவரை விட்டுப் பிரிந்து எப்படி வாழ முடியும்? அதுவும் உலகம் தெரியாத இந்த மகனை வைத்துக் கொண்டு?

தந்தை கிளம்பிச் சென்றதும் தாயைப் பார்த்தான் ரகுவாசன். "அம்மா, வாங்க முதல்ல பில்லை செட்டில் பண்ணிட்டு கிளம்பலாம். அப்பா வீட்டுக்கு போறதுக்குள்ள நாமும் போகணும். நீங்க கவலைப்படாதீங்க, நான் அப்பாக்கிட்டே பேசுறேன்" என்று தாயை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த ஆனந்தன். நேராக தன் அறைக்கு சென்றார். ஒரு தாளை எடுத்து, "என்னை தேட வேண்டாம், இனி இந்த வாழ்க்கை போதும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த சொத்து பத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. என்னைத் தேட வேண்டாம். நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்" என்று மளமளவென்று எழுதினார். வக்கீலை அழைத்து பேசினார். வீட்டுப் பத்திரம் முதல் அவரது எல்லா சொத்து விபரங்களும் அடங்கிய கோப்பையும் இன்னும் அவர் அணிந்திர்ந்த நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் என்று எல்லாமும் ஒரு பைக்குள் போட்டு வைத்தார். சற்று நேரத்தில் அத்தியாவசியமாய் தேவைப்படும் பொருட்களை ஒரு சிறு பையில் போட்டுக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார்.

மருத்துவமனை விதிமுறைகள் அது இது என்று எல்லாம் முடித்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கடந்த பிறகு தான் அனிதாவும், ரகுவும் வீடு வர முடிந்தது.

வீட்டு வேலையாள், "அம்மா, ஐயா இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்" என்று ஒரு பையை கொணர்ந்து கொடுத்தான்.

நடுங்கும் கைகளால் அதை வாங்கினார் அனிதா.

"அப்பா எங்கே இருக்காங்க முனியா? என்று கேட்டான் ரகு.

"ஐயா, ஆட்டோ வரவச்சு எங்கேயோ கிளம்பிப் போனார் தம்பி" என்றதும்

தாயின் கையில் இருந்த பையை அவசரமாக வாங்கிப் பிரித்துப் பார்த்தவன், சோர்வுடன் அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

அனிதாவுக்கு படிக்காமலே விளங்கிவிட்டது. ஓ வென்று கதறி அழ ஆரம்பித்தார்.

❤️🩵🧡

கோவில்பட்டி

அன்று மாலையில்!

ரிஷியின் பரிசோதனை முடிவுகள் வரவும், அதில் எதுவும் பிரச்சினை இல்லை என்ற மருத்துவர்.
தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மட்டும் அவர் தரும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள பரிந்துரைத்து அவனை டிஸ்சார்ஜ் செய்தார்.

விஷயம் அறிந்து, தமிழரசன் நேரில் வந்து ரிஷியின் உடல்நலம் விசாரித்தார். இன்பா திரும்பிவிட்டது கண்டு அவர் மிகுந்த சந்தோஷமடைந்தார். அனைவரையும் தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்கவும் செய்தார்.

இன்னும் சில தினங்களில் வருவதாக வாக்களித்துவிட்டு, சாருபாலா குடும்பத்தினருடன் சென்னைக்கு திரும்பிவிட்டார்.

நிவன் ஆதித்யா, நந்தனாவுடன், தனது ஊருக்கு பயணமானார். வசந்தனும் திருநெல்வேலிக்கு கிளம்பிச் சென்றான்.

❤️🩵🧡

சென்னை திரும்பியதும் சாந்தி, கணவரிடம் திருமணப் பேச்சை எடுத்தார்.

"அத்தான், நடக்க வேண்டிய நல்ல விஷயத்தை இனியும் தள்ளிப்போடாமல் சீக்கிரமாக முடிக்கிறது நல்லது"

"நானும், அதைத்தான் நினைக்கிறேன் சாந்தி. ஊர் அறிய விமர்சையாக பண்ணலாமா? இல்லை நெருங்கின உறவுகளை மட்டும் அழைச்சு நடத்தலாமா?"

"அதை அத்தைக்கிட்டே தான் கேட்கணும் அத்தான். மாப்பிள்ளைக்கு காயம் நல்லா ஆறியதும், நாம எல்லாருமாக தென்காசி போய் வரணும், என்றவர்,"அத்தான் எனக்கு ஒரு யோசனை தோனுது. உங்ககிட்டே சொல்லணும்னு நினைச்சுட்டே இருந்தேன். வாய்ப்பே கிடைக்கவில்லை, என்ற சாந்தி தன் எண்ணத்தை தெரிவித்தார்.

சுரேந்திரன் ஆச்சரியமாக மனைவியைப் பார்த்தார். " ஏய் சாந்தி எனக்கு இந்த யோசனை தோனாமல் போச்சே? என்றவர், "இது பத்தி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசணும். அவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தாலும் விடக்கூடாது, என்ன நான் சொல்றது சரிதானே? என்றார் நிறைவான சிரிப்புடன்.

"ரொம்ப சரி, அதுக்கு முன்னாடி அத்தைக்கிட்டே இந்த விஷயத்தை பேசணும் அத்தான்"

"அம்மா இந்த விஷயத்தை கேட்டால் போதும் அவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அம்மாவோட கவலை எல்லாம் பறந்து போகும்"

"அது என்னவோ உண்மை தான் அத்தான். அத்தைக்காக தமிழரசன் அண்ணா செய்திருக்கிற உதவிக்கு, நாம ரொம்ப கடமைப்பட்டு இருக்கிறோம் அத்தான். அத்தை இப்போது ஓரளவுக்கு குணமாக்கிவிட்டார் இல்லையா?"

"அவர் செய்திருக்கிறது சாதாரண உதவி இல்லை சாந்தி. அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? அன்றைக்கு அவருக்கு நாம் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தோம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நம் வீட்டில் ஒருவராக மாறிவிட்டார். இந்த காலத்தில் அவர் மாதிரி நல்ல மனுஷங்களை பார்க்கிறது அபூர்வம்" என்றார் சுரேந்திரன்.

"என்ன புருஷனும் பெண்டாட்டியும் ரொம்ப தீவிரமாக பேசிட்டு இருக்கீங்க போல? என்றவாறு சாருபாலா அங்கே வந்தார்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.

"ஏய், என்ன இரண்டு பேரும் ஏதாவது ரகசிய திட்டம் போடுறீங்களா?" என்றார் சாருபாலா ஆர்வமாக பார்த்தபடி.

"அட எப்படி அண்ணி? என்று ஆரம்பித்த மனைவியை சைகை செய்து தடுத்துவிட்டு,"அக்கா உனக்கு மறைச்சு நாங்க பேசறதுக்கு என்ன இருக்கிறது? ? நம் பிள்ளைகள் திருமணத்தை நடத்துவது பற்றித் தான் பேசிட்டு இருந்தோம்.." என்றார் சுரேந்திரன்.

"ஆமா சுரேன், நானும் நினைச்சேன். அம்மாக்கிட்டே கலந்துட்டு முடிவு பண்ணணும். என்றைக்கு போகலாம் சொல்லு"

"இன்பா நல்லபடியாக திரும்பி வந்துட்டா, நேர்த்திக்கடன் செலுத்தறதா சாந்தி வேண்டிக்கிட்டாளாம். அதனால நானும், சாந்தியும் இரண்டு நாள் பயணமாக, திருச்செந்தூர் கோவிலுக்குப் போய் வரலாம்னு இருக்கிறோம், நீங்க கிளம்பறதுக்கான எல்லா ஏற்பாடும் செய்து வச்சிடுங்க, நாங்க திரும்பி வந்ததும், நாம் அம்மாவை பார்க்க போகலாம்" என்றார்.

"ஏன் தம்பி நாம் அங்கேயிருந்தே போய் இருக்கலாமே? என்றவர், இப்பக்கூட நாம எல்லாருமாக போகலாமே?"

"மாப்பிள்ளைக்கு வீணாய் அலைச்சல் அண்ணி. அதோட இன்பாவுடன் குட்டிப் பையன் பழகட்டும். நீங்க அவங்களுக்கு துணையாக இருங்க" என்றார் சாந்தி.

சாருபாலா சரி என்று ஒப்புக் கொண்டார். அவருக்கு விரைவாக மகனுக்கு திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று தோன்றியது. ஆனந்தன் ஏதேனும் காரணம் காட்டி மறுபடியும் மகனை பிரித்துக் கொண்டு போய் விடுவாரோ என்று உள்ளூர கலக்கமாக இருந்தது.

❤️🩵🧡

அன்று ஆனந்தன் கிளம்பிச் சென்று பத்து தினங்கள் கடந்திருந்த நிலையில்.. அனிதா கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருந்தார். ஆனாலும் அவருக்கு கணவன் கொடுத்த இந்த ஏமாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. அவ்வப்போது பூஜை அறையில் கண்ணீருடன் போய் அமர்ந்து கொண்டார். நடந்து போன நிகழ்வுகள் எல்லாம் மனதில் காட்சிகளாக தோன்றி அவரை சித்தரவதை செய்தது. முன்பு நியாயம் கற்பித்தது போல இப்போது முடியவில்லை. இதில் இருந்து உடனடியாக விலகிக் கொள்ள இருக்கும் ஒரே வழி உயிரை மாய்த்துக் கொள்வது தான். ஆனால் அப்படிப் போனால் அவரது பிள்ளை அனாதையாய் நிற்பானே என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவர் அந்த முடிவை தேடிக் கொள்ளவில்லை. இருதலைக் கொல்லி என்பது போல வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் அவரது நிலை மிகவும் பரிதாபமாகிப் போயிற்று.

ரகுவாசன் தாயை வற்புறுத்தி, நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொண்டான். ரிஷி எடுத்த முடிவு சரியே என்று தோன்றியது. ஆனாலும் அவனுக்கு அண்ணனை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருந்தது.

தந்தை விட்டுச் சென்ற நிறுவனப் பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டான். விளையாட்டுத்தனம் எல்லாம் விடைபெற்று இருந்தது. அவனுக்கு தொழிலில் வழிகாட்ட ஒருவர் தேவையாக இருந்தது. அது ரிஷியாக இருக்க வேண்டும் என்று அவன் மிகவும் விரும்பினான். அதற்காக அவன் துப்பறியும் நிறுவனத்தை அணுகினான்.

அடுத்த சில தினங்களில், அவனுக்கு ரிஷியைப் பற்றிய தகவல்கள் கிடைத்துவிட்டது. ஆனால் நினைத்த போது அவனை பார்க்கச் செல்வது சரியாக இருக்காது என்பதோடு, உளவு பார்த்து அவனை கண்டுபிடித்தது தெரிந்தால் நிச்சயமாக அண்ணன் அவனிடம் பேசக்கூட மாட்டான். ஆகவே சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.

❤️💖❤️

ஒரு மாதத்திற்கு பிறகு,

தென்காசியில் உள்ள கோவிலில், உள்ள சந்நிதியின் முன்பாக அந்த மணவறை அமைக்கப்பட்டிருந்தது.

மணவறையில் மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்தான் ரிஷிகேசவன்.

"நாழியாகிறது, சீக்கிரம், பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என்றார் ஐயர்.

நிகிலாவும், வித்யாவும் இன்பசுரபியை மணவறைக்கு அழைத்து வந்தனர்.

பெண் அலங்காரத்தில் இன்பசுரபி, இன்னும் அழகாக பொற்பாவை போல ஜொலித்தாள்.

ஐயர் மந்திரங்கள் சொல்லி சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருந்தது.

சாருபாலாவும் நிவன் ஆதித்யாவும் தம்பதி சமேதராக நின்று திருமண நிகழ்வுகளைப் பார்த்திருந்தனர்.

சுரேந்திரனும் சாந்தியும் திருச்செந்தூர் செல்வதாக சொல்லிவிட்டு, நிவன் ஆதித்யாவை நேரில் சந்தித்து அவரது விருப்பத்தை தெரிந்து கொள்ள சென்றிருந்தனர். அவரும் சாருபாலாவை விரும்புவதை ஒப்புக் கொண்டார். அதே கையொடு தென்காசிக்கு சென்று திலகத்திடம் விஷயத்தை சொன்னார்கள். அவருக்கு மிகுந்த சந்தோஷம் , என்றதோடு, தள்ளிப்போடாமல் அவர்கள் திருமணத்தை நடத்திவிடச் சொன்னார்.

அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பு தான், அவர்களுக்கு எளிமையான முறையில் பதிவுத் திருமணம் நடந்திருந்தது.

ரகுவாசன் ஒரு ஓரமாக நின்று தன் அண்ணனின் திருமண நிகழ்வுகளை கண்குளிரப் பார்த்திருந்தான். தாடியும் மீசையுமாக அடையாளம் தெரியாத வகையில் இருந்தான்.

இரண்டு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு சென்று வசந்தனை சந்தித்து, அண்ணனை சந்திக்க உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டான். முதலில் மறுத்த வசந்தன், அண்ணன் பற்றி யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று வாக்களித்த பின், ரிஷியிடம் கேட்டுக் கொண்ட பிறகு, சந்திக்க அழைத்துப் போனான்.

"கெட்டி மேளம், கெட்டி மேளம்" என்று ஐயர் உரக்க குரல் கொடுக்க, மேளதாளங்கள் முழங்கியது.

இன்பாவுக்கு சொந்தமான ரிஷிகேசவன், அவளது கழுத்தில் மங்கலநாண் பூட்டி, தன் சொர்க்கத்தை தன் வசமாக்கிக் கொண்டான்!

தமிழரசன் குடும்பத்தினர், வரதன் குடும்பத்தினர் மற்றும் சுரேந்திரன் சாந்தி பேரன் சகிதமாக, நின்றனர்

அவர்களோடு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த திலகம் என்று அங்கே கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி, மணமக்களை வாழ்த்தினர்.

இன்பாவின் வாழ்க்கை இனிதாக தொடங்கிவிட்டது.. இனி அவர்கள் வாழ்நாள் எல்லாம் சுகமே!
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚l💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚