• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode : 20

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,056
479
113
Tirupur
இதழ்:-20



தன் வீட்டிற்கு வந்த பிறகும் தாரணிக்கு படபடப்பு குறையவில்லை.பாவி எப்படி பேசுகிறான்.பேசியது மட்டும் இல்லாமல் கடைசியில் என்ன காரியம் செய்துவிட்டான்.



நான் அவனை கொஞ்சம் மிரட்டி வைக்கலாம் என்று போனால் அவன் என்னையே மிரள வைத்துவிட்டானே.



ஹ்ம்ம் பாடமாம் பாடம்.அவனை நம்பி தனியறையில் நின்று பேசிய என்னைச் சொல்லவேண்டும்.தாரணியின் முகம் சிவந்தது.அவன் பார்வையும் பேச்சும்.ஊப்ஸ்ஸ்...............இனி முடிந்தவரை அவனிடம் பேச்சு வைத்துக்கொள்ள கூடாது.எதுவாய் இருந்தாலும் வினிக்காவிடமே பேசிக்கொள்ள வேண்டும்.நெஞ்சம் படபடக்க தாரணி தனக்குள் முடிவெடுத்தாள்.மித்திரனின் பேச்சும் அவன் செய்த செயலும் அவளுக்கு ஏதோ ஒருவித பயத்தையும் படபடப்பையும் கொடுத்திருந்தது.



சாலையில் நத்தை போல் ஊர்ந்துகொண்டிருந்தது நிலவனின் கார்.எங்கே வேகமாய் போனால் சீக்கிரம் அலுவலகம் வந்துவிடுமோ என்ற பயத்தில் தன்னால் முடிந்தவரை காரின் வேகத்தை குறைத்து ஓட்டிக்கொண்டிருந்தான்.தன்னை முந்தியபடி விசித்திரமாய் திரும்பி பார்த்து செல்லும் மோட்டார் வண்டிகளைக் கூட கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.



ச்சே இந்த அப்பாவிற்கும் மாமாவிற்கும் எதற்கு இந்த வேண்டாத வேலை.அவனை அல்லவா பொறியில் மாட்டி வைத்துவிட்டார்கள்.



நிலவா பூவினிக்கு இந்த தொழில் சம்பந்தமான பயிற்சியை நீ கொடுக்க முடியுமா?? என்று பத்மன் கேட்ட போது முகத்திற்கு நேரே மறுத்து கூற முடியாமல்



என்ன மாமா என்னை விட நீங்கள் இதில் எவ்வளவோ அனுபவசாலி நீங்கள் பயிற்சி கொடுத்தால் அது சிறப்பாக இருக்குமே என்று நாசூக்காய் மறுத்தான்.ஆனால் பத்மனோ நான் சொல்லிக் கொடுப்பதில் ஒன்றுமில்லைப்பா.நீங்கள் இந்தகாலப் பிள்ளைகள் வயசான நான் இதில் பயிற்சி கொடுப்பதை விட ஒரே தலைமுறையை சேர்ந்த நீ அவளுக்கு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது என்று கூறவும் கூடவே இருந்த ஜெகநாதனும் ஆமாம் நிலவா அதோடு சிறுவயதில் இருந்தே அவளுக்கு ஒவ்வொன்றையும் கற்று கொடுப்பது நீதானே.



கடினமான பாடங்களைக் கூட அவளுக்கு ஏற்ற விதத்தில் சொல்லிக்கொடுத்து அவளை நன்றாக செய்ய வைத்துவிடுவாயே அதே போல இந்த தொழிலிலும் அவளுக்கு பயிற்சி கொடு.பத்மனின் தொழில் வாரிசு அவள் தானே.உன்னைப் போலவே அவளும் இந்த தொழிலில் திறம்பட நடத்த வேண்டாமா?? அத்தோடு நீ சொல்லிக்கொடுத்தால் அவள் சீக்கிரமே பிடித்துவிடுவாள்.என்று கூறவும் அவனால் அதற்கு மேல் மறுத்து கூற முடியவில்லை.



ஆனாலும் கடைசி வாய்ப்பாக வினியிடம் கேளுங்கள் அவளுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறினான்.அப்படிக் கூறும் போது நிச்சயம் வினி இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள் என்று நினைத்து தான் கூறினான்.பாவம் அவனுக்கு தெரியாதே இந்த திட்டமே வினியினால் தான் உருவானது என்று.தந்தை கூறும் ஒவ்வொன்றையும் இது புரியவில்லை அது புரியவில்லை.நீங்கள் கூறும் விளக்கம் விளங்கவில்லை என்று இப்படி ஆயிரம் தொல்லைகளைக் கொடுத்ததில் களைத்துப்போன பத்மன் ஜெகநாதனிடம் பேசியதில் தான் இந்த திட்டமே உருவானது என்று.



மறுநாள் அலுவலகத்தில் பத்மன் வினியை அழைத்துவந்து அவனிடம் விட்டுப் போனதில் அவன் நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது.ஒருவேளை பத்மனின் கட்டாயத்தில் தான் வந்திருப்பாளோ என்று பார்த்தால் அவள் முகம் எப்போதும் போல மலர்ந்து தான் இருந்தது,கட்டாயத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.



ஹ்ம்ம் நிலவன் தான் சோர்ந்து போனான்.அவள் அருகில் இருந்தாலே நிலை தடுமாறி விடுவோம் என்று முயன்றவரை அவளை விட்டு அவன் விலகி விலகி ஓடிக்கொண்டிருக்கும் போது அவள் அவனுடைய அலுவலகத்திற்கே வந்துவிட்டாள்.நாளின் முக்கால்வாசி அவனின் பொழுது கழிவதே இங்கு தான்.அவன் விரும்பும் தனிமை கிடைப்பதும் இங்கே தான்.அவன் இறுக்கம் எதுவுமின்றி இயல்பாக இருப்பதும் இங்கே தான்.இப்போது இங்கேயும் அவள் அவன் அருகிலேயே இருந்தால் அவனால் எப்படி இயல்பாக இருக்க முடியும்.



எந் நேரமும் தன் மனதை வெளிப்படுத்தி விடுவோமோ என்று பயந்து பயந்து மனதை மறைக்க முகமூடி போட்டுக்கொண்டல்லவா இருக்க வேண்டும்.அந்த மனநிலையில் அவனால் எப்படி இயல்பாக வேலை பார்க்க முடியும்.மனது செய்ய வேண்டிய வேலையில் பதியுமா என்பதில் சந்தேகமே.இந்த லட்சணத்தில் அவளுக்கு வேறு பயிற்சி கொடுக்க வேண்டுமாம்.



என்ன வாழ்க்கைடா இது என்று தோன்றியது.ம்ஹும்ம்ம் அவனால் எப்போதும் நடிக்க முடியாது.இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.அவளை விலக்க அவன் கையாண்ட வழிமுறையைத் தான் இப்போதும் கையாள வேண்டும்.கஷ்டம் தான் ஆனால் வேறு வழி இல்லை.



நிலவனின் கார் அவனுடைய அலுவலக வாயிலை நெருங்கும் போது மித்திரன் வினியிடம் விடை பெற்று கிளம்பிக்கொண்டிருந்தான்.வினியும் அவனுக்கு சிரித்தபடி கையசைத்து விடை கொடுத்துவிட்டு திரும்பியவள் இவனின் காரைக் கண்டதும் சற்று தயங்கி நின்றாள்.



ஏன் இவளுக்கு தனியே வர வழி தெரியாதாமா? எவ்வளவு முயன்றும் சிறு எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை அவனால்.



தன்னைக் கண்டு தயங்கி நின்றவளைக்கண்டு தன்னுடன் வருமாறு சிறு தலையசைப்புடன் நடந்தான். அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் காலை வணக்கம் சொல்ல ஒரு தலையசைப்பும் சிறு புன்னகையுமாக அதை ஏற்றபடி தன் கம்பீர நடையுடன் வேகமாக சென்றவனை மனதில் ரசித்தபடி பின் தொடர்ந்தாள் பூவினி.



தன்னுடைய தனிப்பட்ட காபின் உள்ளே அவன் செல்லவும் அவனை பின் தொடர்வதா என்று தயங்கியவள் பின் சற்று பொறுத்து இருவிரலால் கதவைத் தட்டிவிட்டு அனுமதிகேட்டு உள்ளே சென்றாள்.



அவளை நிமிர்ந்து பார்த்தவன் உட்காருமாறு கண்ணசைவில் இருக்கையை காட்டி விட்டு எழுந்து மற்றொரு கதவை திறந்து உள்ளே சென்றான்.



ஏன் வாயை திறந்தால் முத்து உதிர்ந்துவிடுமாமா.மனதுள் பொருமியபடியே அமர்ந்தாள் பூவினி.



சற்று பொறுத்து வெளியே வந்தவனின் முகம் இறுக்கமாய் இருந்தது.பூவினியைப் பார்த்தபடி வந்து அவள் எதிரில் அமர்ந்தான். பூவினிக்கு புரிந்தது ஏதோ பேசப்போகிறான் என்று. பூவினி தன்னை தயார்ப்படுத்திக் கொண்டாள்.



என்ன மேடம்.என்னை பிடிக்காதவர்களை எனக்கும் பிடிக்காது.அப்படி இப்படி என்று வீர வசனம் எல்லாம் பேசினீர்கள்.இப்போது என்னிடமே பயிற்சி பெற வந்திருக்கிறீர்கள்.அந்த ரோசம் எல்லாம் எங்கே போனது?? என்றான் நக்கல் குரலில்.



சீண்டுகிறான்.எதிர்பார்த்ததுதான்.



பூவினி நிதானமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

நான் உங்களிடம் பயிற்சி பெறுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா??



பூவினியின் நேரடிக் கேள்வியில் நிலவன் திகைத்துவிட்டான்.தான் இப்படி சீண்டலாகப் பேசினால் முன்பு போல பதிலுக்கு தானும் கோபம் கொண்டு பேசிவிட்டு விலகி விடுவாள் என்று தான் நினைத்தான்.ஆனால் அவள் ஒன்றும் பழைய வினி அல்லவே.நிலவனின் சீண்டலைப் புரிந்துகொண்டு அதை தடுக்கும் விதமாக எனக்கு பயிற்சி கொடுப்பதில் உங்களுக்கு இஷ்டம் இல்லையா?? என்று நேரடியாகவே அவள் அவனிடம் வினவியதில் ஒரு கணம் என்ன சொல்வதென அவன் தான் தடுமாறிவிட்டான்.



பின் தன்னை சமாளித்துக்கொண்டு கடினமான குரலில் “இல்லை’’ என்றான்.



ஏன்?? அவளிடமிருந்தும் ஒரே சொல்லில் கேள்வி பிறந்தது.



ஒரு பொறுமை இழந்த மூச்சுடன் ஏன் என்று உனக்கே தெரியும்.என்றான் நிலவன்.



அப்போதும் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் எனக்கு புரியவில்லை.அதனால் தான் கேட்கிறேன் என்றாள் பூவினி நிதானமாக.



நிலவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.



இது விளையாடுவதற்கான இடம் இல்லை வினி.என்றான் கோபத்துடன்.



நானும் இங்கே விளையாட வரவில்லை.அமைதியாகவே வந்தது பதில்.



பின்னே எதற்கு இங்கே நின்று வாயடித்துக்கொண்டிருக்கிறாய்.



நான் ஒன்றும் வாயடிக்கவில்லை அத்தான்.நான் உங்களிடம் பயிற்சி பெறுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்று நீங்கள் தான் கூறினீர்கள்.நான் அதற்கு காரணம் தான் கேட்டேன்.



இப்போது உனக்கு என்னதான் வேண்டும் பூவினி.



நான் உங்களிடம் பயிற்சி பெறுவதில் உங்களுக்கு ஏன் விருப்பம் இல்லை என்று தெரிய வேண்டும்.



ஓஹோ காரணம் தானே.கேட்டுக்கொள்.எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை.வெறுப்பாக இருக்கிறது.என்றான் நிலவன் முகம் சுழித்து.



பிடிக்கவில்லையாம்..ஹ்ம்ம்

பார்க்கவே பிடிக்காமல் தான் அன்று உன்னை மறந்து பார்த்தபடி நின்றாயா???பார்பதற்கே வெறுப்பாக இருக்கும் ஒருத்தியைத் தான் அன்று விழுங்கி விடுவது போல் பார்த்தாயா??? அவன் கன்னத்தில் அறைந்து கேட்க வேண்டும் போல் எழுந்த கோபத்தை அடக்கினாள்.



அவள் தேடும் ஆதாரம்.அவனால் மறுக்கவோ வேறு விளக்கம் சொல்லவோ முடியாத ஆதாரம் கிடைக்கட்டும்.அதன் பிறகு உன்னிடம் நேரடியாகவே பேசுகிறேன்.



அதுவரை உன் போக்கில் வந்தே உன்னை சமாளிக்கிறேன்.







ஒ ..ஆனால் இதற்கும் பயிற்சி கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?? வினியின் நிதானம் சற்றும் குறையவில்லை.



பைத்தியமா பூவினி நீ??? உன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை என்கிறேன்.உனக்கு இந்த தொழிலில் பயிற்சி கொடுப்பதானால் வேலை நேரம் முழுதுமே நீ என்னோடு தான் இருக்க வேண்டும்.உன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நான் எப்படி ஒழுங்காக வேலை செய்ய முடியும்.



ஓஹோ அருகில் என்னை வைத்துக்கொண்டு உங்களால் இயல்பாக இருக்க முடியாது என்கிறீர்களா அத்தான்??? பூவினியின் சற்றும் அசராத அழுத்தமான கேள்வியில் நிலவன் தான் திடுக்கிட்டு விட்டான்.உண்மையை அல்லவா கூறுகிறாள்.அவன் சொல்வது அறியாது நிற்கவும்



வினி தொடர்ந்து எனக்கென்னவோ நீங்கள் என்னைப் பார்த்து பயப்படுவது போல் தோன்றுகிறது என்றாள் கேலிக்குரலில்.



உண்மையாகவே கோபம் வந்தது நிலவனுக்கு.பயப்படுவதா??? நானா?? அதுவும் உன்னைப் பார்த்தா??? ஹ எதற்காம்???



வேறு எதற்கு எங்கே என் அருகில் நீண்ட நேரம் இருந்தால் என் அழகில் மயங்கிவிடுவீர்களோ.என்னைக் காதலித்துவிடுவீர்களோ என்று தான்.அதனால் தான் ஏதேதோ காரணம் சொல்லி விலகி இருக்க முயற்சிக்கிறீர்கள்.கேலியுடன் சீண்டியது அவள் குரல்.



நீயாகவே வந்தும் உன்னை தவிர்த்தவன் நான்.நான் உன்னிடம் மயங்கி உன்னை காதலிப்பதா??? ஹ முட்டாள்த்தனமான உளறல்.உள்ளே மனச்சாட்சி டேய் டேய் ..இதெல்லாம் ரொம்ப அதிகம் டா என்று குரல் கொடுத்ததைப் பொருட்படுத்தாது வெளியே அலட்சியமாக பேசினான்.



வினிக்கு உள்ளே சுருக்கென்றது.நிராகரிப்பின் வலி.அவள் முகத்தில் சட்டென தோன்றிய வலியை மறைத்து முகம் மீண்டும் நிதானமானது.



அந்த கணப்பொழுதில் அவள் விழிகளில் தோன்றிய வலியை நிலவன் கண்டுகொண்டான்.அவனுள்ளேயும் வலித்தது.எதற்குடி மீண்டும் மீண்டும் வந்து காயப்படுகிறாய்.உன்னை காயப்படுத்தும் ஒவ்வொரு தருணமும் உன்னைவிட அதிகஅளவு வலியை நானும் அனுபவிக்கிறேனடி.ஆனாலும் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.என்னைவிட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறாயோ அது தான் அனைவருக்குமே நல்லது.புரிந்துகொள் வினும்மா.என்னை நெருங்காதே.



நிலவன் சற்று நேரம் அலட்சியமாக பார்ப்பது போல் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்ப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான்.





சில கண மௌனத்திற்கு பிறகு அப்படியென்றால் அதை நிரூபியுங்கள்.



சிறு புருவச் சுளிப்புடன் திரும்பினான் நிலவன் எதை???



உங்களுக்கு என்னிடம் பயமில்லை என்பதை.அதாவது நான் அருகிலேயே இருந்தாலும் உங்கள் மனம் ஒரு போதும் தடுமாறாது என்பதை.



உன் முகம் பார்க்கவே விருப்பமில்லை என்கிறேன் நான்.நீ என்னவென்றால்.......



அத்தான்...நீங்கள் சொல்வது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.என் முகத்தை நீங்களோ உங்கள் முகத்தை நானோ பார்க்காமல் இருக்க முடியுமா??? நாம் இருவருமே ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள்.அதுவும் அன்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் எங்களுடையது.அந்த குடும்பத்தில் இருக்கும் நாங்கள் இருவரும் இப்படி விலகி இருப்பது வீட்டு பெரியவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்?? அந்த துன்பத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமா??



அந்த குடும்பத்திற்காக அவர்களுக்கு எந்த துன்பமும் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனையும்.மனதுள் எண்ணிக்கொண்டவன் சத்தமில்லாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு .



இதுவரை அவர்களுக்கு நம்மிடையே நடக்கும் பிரச்சினை தெரியாமல் எப்படி பார்த்துக்கொண்டோமோ அதே போல இனிமேலும் பார்த்துக்கொள்ளலாம்.அதற்காக எல்லாம் நாம் நாள் முழுதும் சேர்ந்திருக்க முடியாது.என்றான் வெளியே கடினமாக.



ஹ்ம்ம் இதுவரை அவர்கள் நம்மை கவனிக்கவில்லை என்று நாம் தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் நாம் முன்பு போல் இயல்பாக பழகுவதில்லை என்று எல்லோருமே கவனித்திருக்கிறார்கள்.



என்ன சொல்கிறாய்???



ம்ம் இன்று காலையில் அம்மா என்னிடம் கேட்டார்கள்.உங்களுக்கும் எனக்கும் இடையில் ஏதாவது மனஸ்தாபமா??? இருவருக்கிடையிலும் விலகல் தெரிகிறது என்று.அத்தையும் கூட அதே போல் எண்ணி தன்னிடம் கேட்டதாக கூறினார்கள்.



ஒ..என்று திடுக்கிட்டவன் நீ அதற்கு என்ன சொன்னாய்?? என்றான்.



உண்மையை கூற முடியாதில்லையா??? அதனால் அப்படி எதுவும் இல்லை.உங்களுக்கு நேரம் இல்லை.தொழிலில் அதிக கவனம் செலுத்துவதால் இலகுவாக அமர்ந்து பேச நேரம் இருப்பதில்லை அப்படி இப்படி என்று ஏதோ சொல்லி சமாளித்தேன்.



அதனால் தான் அப்பா உங்களிடம் பயிற்சி பெற சொன்னபோதும் மறுக்கவில்லை.அப்படி மறுத்தால் அது சந்தேகத்தை இன்னும் பலப்படுத்தும் என்பதால்.இதை தவிர என்னளவில் உங்களிடம் பயிற்சி பெற சம்மதித்ததற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.என்று முடித்தாள்.



அப்போதும் நிலவனின் முகம் தயக்கத்தையே காட்டவும்



இதோ பாருங்கள் அத்தான்.மிஞ்சி மிஞ்சி போனால் கூட ஒரு ஆறு மாதம் போதும்.இந்த பயிற்சிக்கு.வெறும் அடிப்படை தானே.அதன் பிறகு அப்பாவுடன் தினமும் அலுவலகம் வந்து பழகி கொள்வேன்.இந்த ஆறு மாத காலம் என்பது நம் மீது பெரியவர்களுக்கு தோன்றியிருக்கும் சந்தேகத்தை போக்கவும் நமக்கு உதவும்.என்னால் உங்களுக்கு வேறு எந்த தொந்தரவும் இருக்காது.இந்த ஆறு மாதங்கள் கூட உங்களால் என்னை சகித்துக்கொள்ள முடியாது என்றால் சொல்லுங்கள். நான் இப்போதே கிளம்புகிறேன்.அதற்கு மேல் அத்தையோ அம்மாவோ வீட்டு பெரியவர்கள் யாராவதோ என்ன கேட்டாலும் நீங்களே சமாளித்துக் கொள்ளுங்கள்.என்று நிதானமாகவே கூறிவிட்டு அமைதியாக அவனைப் பார்த்தாள் பூவினி.



நிலவனுக்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.அவள் பேச்சில் இருந்த நியாயம் அவனுக்கு புரிந்தது.ஆனாலும் .....ஹ்ம்ம் ஆறு மாதங்கள் சமாளிக்க வேண்டுமே. கடவுளே அதுவரை இந்த அழகு ராட்சசியிடம் தடுமாறிவிடாமல் என்னை காப்பாற்றுப்பா.மனதுள் வேண்டுதலை தெய்வத்திடம் வைத்தபடியே வெளியே வினியிடம்.



ம்ம் நீ சொல்வது புரிகிறது.நீ கூறுவதை நம்புகிறேன்.நம் குடும்பத்திற்காக இதற்கு சம்மதிக்கிறேன்.இதை நினைவு வைத்துக்கொள்.



இந்த ஆறு மாதங்களில் அலுவலகத்தில் நான் முதலாளி நீ என்னிடம் வேலை செய்யும் தொழிலாளி அவ்வளவு தான்.முடிந்தவரை இந்த அத்தான் என்ற அழைப்பை தவிர்த்து “சார்” என்றே அழை. நீ என் உறவு என்று அனைவருக்குமே தெரியும் அதனால் உனக்குரிய மரியாதை இங்கே இயல்பாகவே கிடைக்கும்.அதை தவிர உறவு என்ற பெயரை வைத்து வேறு சலுகைகள் எதையும் எதிர்பார்க்காதே.முடிந்த வரை சீக்கிரமாக உனக்கு அனைத்தையும் கற்று தருகிறேன்.அதுவரை வேறுவழி இன்றி உன்னை சகித்துக்கொள்கிறேன்.இப்போது சற்று வெளியே போ.நான் உனக்குரிய இடத்தை ஒழுங்கு செய்துவிட்டு உன்னை அழைக்கிறேன்.என்றான் கடினமாக.



எதுவும் பேசாது தோளைக்குலுக்கி விட்டு வெளியே செல்ல திரும்பிய பூவினியின் இதழ்க்கடை ஓரம் குட்டியாய் ஒரு முறுவல் பூத்தது.எப்படியோ அவள் நினைத்தது நடந்துவிட்டது.



அவள் முதல் காயை வெற்றிகரமாக நகர்த்திவிட்டாள்.அடுத்து???