• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 25

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,056
479
113
Tirupur
இதழ்:- 25



நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன.பூவினியின் அருகாமையில் நிலவனின் மனமும் கரைந்து கொண்டு தான் இருந்தது.



பாஸ் பாஸ் என்று அழைத்து அவள் பேசும் ஒவ்வொரு முறையும் அவளின் அத்தான் என்ற அழைப்பிற்காக அவன் நெஞ்சு ஏங்கியது.



சிலவேளைகளில் குறும்புடன் ஏதாவது சொல்லிவிட்டு கண்ணால் சிரிக்கும் அவளைக்காண அவன் நெஞ்சம் தடுமாறும்.எங்கே தன்னை மீறி அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டுவிடுவோமோ என்று பயந்து சட்டென பார்வையை விலக்கிக் கொள்வான்.



வேலைகளில் அவள் காட்டிய நேர்த்தி.அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்களுடன் நட்புடன் அவள் பழகும் பாங்கு என எல்லாமே அவனைத் தடுமாற வைத்தது.



முன்பென்றால் மனம் தடுமாறும் போது அவளுடன் பேசாமல் அவளைக் காண்பதைத் தவிர்த்து விலகிவிடுவான்.இப்போது அதுவும் முடியாமல் போனது.குடும்பத்தினரின் சந்தேகத்தைப் போக்கவேண்டும் என்ற போர்வையில் இருவரும் இயல்பாக பேசத்தொடங்கி இருந்தனர்.அதனால் அவளுடன் பேசாமல் இருப்பது என்பது சாத்தியமற்றுப் போனது.



அதுவும் சில சமயங்களில் மித்திரன் தனது சொந்த வேலையின் காரணமாக வெளியே செல்ல நேர்கையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களும் அமைந்தது.அது இன்னும் கொடுமை.



இரவு நேர சிலுசிலு காற்றில் அருகில் தேவதை போல் அமர்ந்திருக்கும் அவளைக் காண அவனுக்கு என்னவோ பண்ணும்.அதிலும் கார் ப்ளேயரில் அவள் ஓடவிடும் காதல் பாட்டுக்கள் வேறு.



நிலவன் ரொம்பவும் தவித்துப்போவான்.மனம் மிகவும் தடுமாறும் சமயங்களில் மிகவும் சிரமப்பட்டு கண்மணி கூறிய வார்த்தைகளை நினைவுக்கு கொண்டு வந்து தன் மனதை அடக்குவான்.



என்ன இருந்தாலும் அவனும் மனிதனே அல்லவா?? அதிலும் கம்பீரமான ஆண்மகன்.புத்தி அவளை ரசிக்காதே!! அவள் எப்போதுமே உனக்கு சொந்தமாக முடியாது என்று ஆயிரம் அறிவுரை கூறினாலும் அவன் மனம் அதை கேட்காது.அவள் அருகில் இல்லாத போது புத்தி சொல்லும் சொல்லைக் கேட்டு ஆயிரம் உறுதி மொழி எடுப்பவன் அவள் அருகில் வரும் கணம் அனைத்தையும் மறந்துவிடுவான்.



இப்படித்தான் அன்றும்.வேலைகள் முடிய சற்று தாமதம் ஆனது.அன்று மித்திரன் அவளை அழைக்க வர முடியாது என்று கூறிவிட வினி நிலவனுடன் செல்வது என்று முடிவானது.



வேலையை முடித்து கிளம்பும் போதே வெளியே பலத்த காற்றுடன் பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன.அன்று மாலையிலிருந்து இருந்த புழுக்கம் ஏன் என்று புரிந்தது.



அச்சோ..மழை என்றாள் வினி.



கவலைப்படாதே நீ கரைந்துவிடாமல் பத்திரமாக கூட்டிப் போகிறேன் என்று கேலியாக சொன்னான் நிலவன்.



க்கும்..என்னைப் பற்றி கவலை இல்லை.எங்கே மழையில் நனைந்தால் உங்கள் தலையில் உள்ள களிமண் எல்லாம் கரைந்துவிடுமே என்று தான் கவலையாக இருக்கிறது.என்று சிரிக்காமல் கூறிவிட்டு கண்ணால் சிரித்தாள் வினி.



அவளின் பேச்சைக்கேட்டு வந்த சிரிப்பை முயன்று அடக்கினான்.



அதைக் கவனித்தவள் பாஸ் சிரிப்பு வந்தால் சிரித்துவிடவேண்டும்.என்றாள்.அதைக் கேட்டு வரிசைப்பற்கள் தெரிய கவர்ச்சியாக முறுவலித்தான் நிலவன்.



அவன் புன்னகையில் வினியின் மனம் தடுமாறியது.எத்தனை நாட்கள் ஏன் வருடங்களுக்கு பின் அவனின் இந்த சிரிப்பை பார்க்கிறாள்.



செயற்கைத் தனம் இல்லாத இயல்பான ஆண்மை நிறைந்த சிரிப்பு.மிகவும் சிரமப்பட்டு பார்வையை திருப்பிக்கொண்டாள்.





கார் பார்க்கிங் சற்று தள்ளி இருந்தது.மழை வேறு சற்று வலுக்கவும் எப்படியும் காருக்கு செல்வதற்குள் நனைந்துவிடுவோம் என்று புரிந்தவன் வாட்ச்மேன் ஐ அழைத்தான்.



நிலவனின் தேவை புரிந்தவர் போல் சண்முகம் கையில் ஒரு குடையுடன் ஓடி வந்தார்.



அவரைப் பார்த்து புன்னகைத்தவன்.நன்றி தாத்தா.என்றான்.அவருக்கு வயது எழுபதற்கு மேல் இருக்கும்.பாவம் இந்த வயதிலும் தன் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய தேவை.நிலவன் எப்போதுமே வயதிற்கு மரியாதை கொடுப்பவன்.அவரை பெயர் சொல்லி அழைக்க அவனுக்கு மனம் வராததால் எப்போதும் தாத்தா என்றே அழைப்பான்.முதலாளியே தாத்தா என்று அழைப்பதால் அங்கு பணிபுரிவோரும் அப்படியே அழைத்தனர்.



நிலவனிடம் சண்முகத்திற்கு மரியாதையுடன் பாசமும் அதிகம் இருந்தது.



ஒரு குடை தான் இருக்கிறதா தாத்தா??



ஆமாம் தம்பி.மழை எதிர்பார்க்காமல் வந்துடிச்சில்ல.பரவால்ல தம்பி நீங்கள் இதை எடுத்துப்போங்க.



அப்புறம் நீங்க என்ன பண்ணுவீங்களாம்.மழையில நனைஞ்சு கொண்டே உங்க இடத்துக்கு போவீங்களா??? என்று நக்கலாக கேட்டான்.





இது வெயில்லயும் மழையிலையும் ஊறி வளர்ந்த உடம்பு தம்பி.இந்த மழை என்னை ஒன்னும் பண்ணாது.



அந்த முதியவரின் பேச்சைக் கேட்டு சிரித்தவன்.சரி வாங்க என்று அவரை லேசாய் அணைத்தவாறு அவருடன் சென்று அவரை செக்கியுரிட்டி அறையில் விட்டவன்.அவரின் குடையை வாங்கி கொண்டு வினியிடம் வந்தான்.



அதுவரை அவனின் இயல்பான சிரிப்பையும் பேச்சையும் அந்த முதியவரிடம் அவன் காட்டிய கனிவையும் ரசித்துக்கொண்டிருந்த பூவினி அவன் தன்னிடம் வரவும் பார்வையை திருப்பினாள்.



இந்தா என்று குடையை நீட்டினான்.



அப்போ நீங்கள்??



தோளைக்குலுக்கி விட்டு சட்டென அவன் மழையில் இறங்கிவிட அவன் நனைந்துவிடப்போகிறான் என்ற பதட்டம் தொற்றிக்கொள்ள எதையும் சிந்திக்காமல் சட்டென அவன் கை பற்றி தடுத்தவள் அவனுடன் நெருங்கி நின்றபடி குடையை உயர்த்தி இருவருக்கும் பொதுவாக பிடித்தபடி நடந்தாள்.



இருவர் உடல்களும் உரசிக்கொள்ள நிலவனின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி உடனே உடல் விறைத்து இறுகியது.அவனின் உடலில் தோன்றிய மாற்றம் அவனை ஒட்டி நடந்த வினிக்கு புரிய அப்போது தான் தான் செய்த செயல் புரிந்தது.



அவள் முகம் சிவந்தது.ஆனால் இப்போது என்ன செய்வது பாதி தூரம் வந்து விட்டு விலக முடியாதே.அப்படி விலகினால் இருவரில் ஒருவர் கண்டிப்பாய் முழுதாக நனைய வேண்டியது தான்.அத்தோடு அந்த விலகல் வித்தியாசமாகவும் படும்.அதைவிட இதை இயல்பான ஒன்றாக கருதுவோம் என்று எண்ணியவள் எதுவும் பேசாமல் நடந்தாள்.



புத்தி வேறு மனம் வேறு அல்லவா?? புத்தி என்னதான் சொன்னாலும் அவன் அருகாமையை அறிந்த பின் அவளால் இயல்பாக நடக்க முடியவில்லை.ஒவ்வொரு அடிக்கும் அவனோடு உடல் உரசிய ஸ்பரிசங்கள் ஏற்படுத்திய சிலிர்ப்பில் உடல் நடுங்கி கால்கள் தடுமாறியது.



கீழே விழப்போனவளை சட்டென அணைத்துப் பிடித்தான் நிலவன்.முன்பைவிட அதிகமான நெருக்கம்.அவள் உடல் மேலும் நடுங்கியது.இருவருக்குமே முதல் நெருக்கம் முதல் ஸ்பரிசம்.உள்ளே ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது இருவருக்கும்.அதன் பிறகு காரை நெருங்கும் வரையும் அவள் தோளைச்சுற்றியிருந்த கையை நிலவன் விலக்கவில்லை.





கார்க்கதவைத் திறந்து விட்டு கரகரத்த குரலில் ஏறு வினி என்றான்.



வினியும் மௌனமாக ஏறி அமர்ந்தாள்.



சுற்றிக்கொண்டு வந்து காரை எடுத்தான்.கார் வாயிலை நெருங்கும் போது செக்கியுரிட்டி அறையில் இருந்த சண்முகத்திடம் நன்றி தாத்தா என்று குடையை நீட்டினான்.வினியைத் தாண்டித்தான் குடையை கொடுக்க வேண்டும் நீட்டியவனின் கை லேசாக பட்டது. மூச்சு தடைப்பட சட்டென குடையை வாங்கி தானே அவரிடம் கொடுத்தாள்.



அதன் பின் கார் வேகம் எடுத்தது.காரினுள் மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே.வழமையாக இப்படியான சந்தர்ப்பங்களில் வினி எதையாவது பேசிக்கொண்டே வருவாள்.அப்படி பேசி தன் பேச்சினுள் அவனையும் இழுத்து பேச வைத்துவிடுவாள்.



ஆனால் இன்று பேசும் நிலையில் வினி இல்லை.அது நிலவனுக்கும் புரிந்தது.அவனுக்கும் அதே நிலை தானே.

ஆனாலும் அந்த மௌனத்தின் கனம் தாங்க முடியாமல் கார் ரேடியோவை உயிர்ப்பித்தான்.



வினிக்கும் அது ஆறுதலாக இருக்க மௌனமாக வெளியே பெய்யும் மழைத் தாரைகளை ரசித்துக்கொண்டிருந்தாள்.



திடீரென்று பளிச் என மின்னல் வெட்டவும் பூவினி உடனே செவியைப் பொத்திக்கொண்டு



“ஆபத்து ஆபத்து அர்ச்சுனா ஆபத்து.ஆறுகட்டைக்கு அங்கால் ஓடு..” என்று முணுமுணுத்தாள்.



பூவினிக்கு மழை என்றால் பிடிக்கும்.ஆனால் முழக்கம் என்றால் மிகுந்த பயம்.மின்னல் முழக்கத்துக்கு பயந்தே அவள் மழையில் நனைய மாட்டாள்.



அவளின் செய்கையைக் கவனித்த நிலவனுக்கு சிரிப்பு வந்தது.இன்னும் இவள் எதிலுமே மாறவில்லை.உதட்டுக்குள் நமுட்டாய்ப் புன்னகைத்தான்.



அவனின் கேலிச் சிரிப்பைக் கண்டுகொண்ட வினி.வீம்புடன் காதைப் பொத்தியிருந்த கையை எடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.



சற்று முன் அவர்களுக்குள் இருந்த உணர்வுக்கொந்தளிப்பும் தயக்கமும் விலகி இருந்தது.



அன்று மின்னலும் முழக்கமும் சற்று அதிகமாகவே இருந்தது.எனினும் நிலவனின் கேலிப் பார்வையைக் கருத்தில் கொண்டு வீம்பாகவே அமர்ந்திருந்தாள்.நிலவனும் அதைக்கவனித்தாலும் எதுவும் சொல்லவில்லை.



அப்போது தான் அது நிகழ்ந்தது.அவர்கள் சென்றுகொண்டிருந்தது.இருபுறமும் மரங்கள் அடர்ந்த சாலை.திடீரென பளீர் என ஒரு சத்தம் கேட்க கார் ஒருகணம் குலுங்கி நின்றது.மறுகணம் அத்தான் என்ற அலறலோடு வினி நிலவனை அணைத்திருந்தாள்.



ஆச்சரியம் என்னவென்றால் நிலவனின் கரங்களும் வினியைச் சுற்றியிருந்தது.



சற்றுநேரம் நிலவனுக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை.பின்பு தன்னை நிலைப்படுத்திக்கொண்டு நிமிர்ந்து பார்த்தபோது எதிரே ஒரு பச்சை மரம் எரிவது தெரிந்தது.



அருகில் இடி விழுந்திருப்பது புரிந்தது.பதட்டம் குறைந்ததும் தான் வினியைப் பார்த்தான்.அவள் அப்போதும் நிமிரவில்லை.அவனை இறுக அணைத்தபடி அவன் நெஞ்சில் முகம் புதைத்து இருந்தாள்.தளிர்க்கொடியென அவனைச் சுற்றியிருந்தவளின் ஸ்பரிசம் அவனைத் தடுமாற வைத்தது.அவளின் மேனியில் ஓடிய நடுக்கம் புரிந்து மெல்ல அவளைத் தட்டிக்கொடுக்க முயன்றவன் அப்போது தான் உணர்ந்தான்.தன் கரங்களும் அவளைச் சுற்றி வளைத்திருப்பதை.ஆனாலும் ஏனோ கரங்களை விலக்கத் தோன்றவில்லை அவனுக்கு.மாறாக மேலும் இறுக்கி அவள் உச்சியில் உதடுகளைப் பதித்து வினும்மா என்று முணுமுணுத்தான்.



இவர்களின் நிலை வானொலிக்கும் புரிந்ததோ





தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன

பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது

நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன...



அந்த இளம் வயதில் ஆற்றங்கரை மணலில்

காலடித் தடம் பதித்தோம்

யார் தடுத்தார்??

நந்தவனக்கரையில் நட்டுவைத்த செடியில்

மொட்டுவிட்ட முதல்ப் பூவை யார் பறித்தார்...................



புதிது தான் இருவருக்குமே புதிது தான்.நிலவன் தன் நிலையை மறந்தான்.சூழ்நிலை மறந்தான்.தன் நடிப்பை மறந்தான்.அவனுக்கு தன் காதலி தன்னுடைய கையினுள் இருக்கிறாள் என்பது மட்டுமே நினைவில் இருந்தது.



மார்பில் சாய்ந்திருந்தவளின் பூமுகத்தை அவன் விரல்கள் வருடின.இருவரைச் சுற்றிலும் மழைத்தாரைகள் திரைபோட இருவர் மனங்களைச் சுற்றிலும் ஓர் மாயப்புகை திரை போட்டது.அவள் மதிமுகத்தை நிமிர்த்தியவனின் உதடுகள் அவள் பட்டுக்கன்னத்தில் அழுத்தமாக பதிந்தபோது நிலவனைச் சுற்றியிருந்த மாயப்புகை சட்டென விலகியது.



வினியிடமிருந்து பதறி விலகினான் நிலவன்.வினியின் விழிகளில் கண்ணீரின் கோடுகள்.அது எதனால் என்று அவளுக்கே புரியவில்லை.



ஆனால் அதைக் கவனிக்கும் மனநிலையில் நிலவன் இல்லை.



என்ன காரியம் செய்துவிட்டான்.ச்சே...அவன் உறுதி எங்கே போனது? எப்படி தன் நிலையை மறந்தான்.தான் செய்ய வேண்டிய கடமையை மறந்தான்.இனி என்ன??? இனி என்ன???

குற்றவுணர்வும் குழப்பங்களும் தன் மேலேயே எழுந்த கோபமும் என உணர்வுக் கொந்தளிப்பில் மனம் குமுற நிலவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது.



மழையில் இருவரையும் காணோமே என்று அனைவரும் வாசலில் காத்திருக்க நிலவனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது.



வழக்கமாக வீட்டினர் யாராவது வாசலில் நின்றால் அவர்களுக்காக நிலவனிடம் நின்று சிரித்த முகத்துடன் இரண்டு வார்த்தை பேசிவிட்டு செல்லும் வினி அன்று அதை மறந்தவளாக எதுவும் பேசாமல் இறங்கி வீட்டினுள் சென்றாள்.வாசலில் நின்ற மேகலா உள்ளே வந்துட்டு போ நிலவா என்று அழைக்கவும்.



லேசான தலைவலி அத்தை பிறகு வருகிறேன் என்றபடி காரை எடுத்தான்.



பாவம் பிள்ளை குரலே சரியில்லை.என்றபடி மறக்காம மாத்திரை போடு நிலவா.என்று மேகலா சொல்லவும்



சரி அத்தை என்றபடி கிளம்பினான்.



வாசலின் ஓரத்தில் நின்று அனைத்தையும் கவனித்த கண்மணியின் முகம் பயங்கரமாக மாறியது.வினியின் கலங்கிய முகமும் நிலவனின் இறுகிய முகமும் அவருக்கு ஏனோ சரியாகப் படவில்லை.





எவ்வளவு திட்டம் தீட்டி இந்தளவு தூரம் கொண்டு வந்தார்.அது ஒரு போதும் வீணாக போக கூடாது.வீணாக விடமாட்டேன்.சற்று அடங்கியிருந்த கண்மணியின் மனம் எனும் சாத்தான் மீண்டும் விழித்துக்கொண்டது.

பயங்கரமாக மாறிய முகத்துடன் உள்ளே செல்லும் தன பாட்டியை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் மித்திரன்.கண்மணியின் இந்த முகம் அவனுக்கு வித்தியாசமாய்ப் பட்டது.அவன் கண்மணியிடம் அதுவரை கண்டது எல்லாம் கண்ணா என்று கொஞ்சும் பாசத்தை தேக்கிய முகமே!!!!!

அவரின் மற்றொரு முகத்தைக் கவனித்த மித்திரன் திகைத்துநின்றான்.