இதழ்:- 28
அன்று இரவு உணவு முடித்து சமையலறையை ஒதுக்கிவிட்டு கணவனுக்கான பாலுடன் தங்கள் அறைக்குள் நுழைந்த மேகலாவை எதிர்பார்த்து கையில் ஏதோ ஒரு கோப்புடன் அமர்ந்திருந்தார் பத்மன்.
கணவனின் கையில் பாலைக் கொடுத்துவிட்டு படுக்கையை ஒருமுறை தட்டி சீர் செய்துவிட்டு படுக்க ஆயத்தமானார் மேகலா.
கலா..
ம்ம்.என்னங்க ?? எதாச்சும் வேணுமா??
உனக்கு தூக்கம் வருகிறதா??
மேகலாக்கு தெரியும் கணவன் இப்படிக் கேட்டால் அவருடன் ஏதோ முக்கியமாக பேச ஆசைப்படுகிறார் என்று.எனவே
இல்லை சொல்லுங்க என்றபடி கட்டிலில் கால் நீட்டி பின்னால் சாய்ந்து அமர்ந்தார்.
பத்மனும் அதற்காகவே காத்திருந்ததைப்போல கையில் இருந்த கோப்பை மூடி வைத்துவிட்டு அவர் அருகில் அமர்ந்துகொண்டார்.
மேகலா அவர் முகம் பார்க்கவும் தொண்டையை செருமியபடியே
இன்று அம்மாவை சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்றேன்.என்றார்.
ஒ என மேகலா கேட்டுக்கொள்ளவும்.
ம்ம்..இன்று பக்தர்கள் குறைவு.அதனால் தரிசனம் நன்கு கிடைத்தது என்றார்.திருப்தியுடன்.
அதற்கும் ஒ..என்ற மேகலா ஒரு கொட்டாவியை வெளியேற்றவும் அதற்கு மேல் மனைவியை சோதிக்க விரும்பாமல் கோவிலில் வைத்து அம்மா என்னிடம் ஒன்று பேசினார்கள் என்றார்.
ஏன் வீட்டில் பேச இடமில்லையாமா?? என்று கேட்கத் தோன்றினாலும் அதை அடக்கி என்னவாம்?? என்றார் மேகலா கணவன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து.
சற்று நேரம் மௌனமாக இருந்த பத்மன் பின். கலா வினிக்கு திருமண வயசு வந்துவிட்டது.ஆனால் அது குறித்து நாங்கள் இன்னும் சிந்திக்கவே இல்லை என்றார்.
தாயைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டு இடையில் எதற்கு மகள் திருமணப் பேச்சிற்கு கணவன் தாவுகிறார் என்று எண்ணம் ஓடினாலும் மகளின் திருமணம் பற்றிய கற்பனையில் கணவன் பேச்சுக்கு உற்சாகமாகவே பதில் கூறினார்.
ம்ம்...ஆமாங்க.வினி படிப்பை முடித்துவிட்டு வருவதற்காகத் தானே காத்திருந்தோம்.இப்போது தான் அவள் வந்துவிட்டாளே இனி அவளிடமும் இது குறித்து பேசிவிட்டு ஏற்பாடு செய்யணும்ங்க.நமக்கு அவள் எப்பவுமே குழந்தையாகத் தான் தெரிகிறாள்.ஆனால் அவளுக்கு வயசு ஆகுதேங்க.அன்றைக்கு என் தோழி செல்வி கூட கேட்டாள் உன் பெண்ணுக்கு வரன் பார்க்கவில்லையா என்று.
ம்ம் ஆமாம் மேகலா.என் நண்பன் ஒருவன் கூட கேட்டான்.என் பையனுக்கு உன் பெண்ணைக் கொடுப்பியா என்று.நான் சிரித்து மழுப்பிவிட்டு வந்துவிட்டேன்.
நமக்கு இருப்பதோ ஒரே பெண்.அதை யாரென்றே தெரியாத ஒருத்தனுக்கு மணம் முடித்து கொடுப்பதைவிட நன்கு தெரிந்த ஒருத்தனுக்கு கொடுக்கலாம் இல்லையா??
கணவனின் பேச்சைக் கேட்டு மகிழ்ச்சி பொங்க ஆமாங்க நான் கூட இதையே தான் எண்ணியிருந்தேன்.நம் உறவிலேயே எத்தனையோ நல்ல பையன்கள் இருக்கிறார்களே.என்று நிலவனை மனதில் வைத்து உற்சாகத்துடன் கூறினார் மேகலா.
ஆனால் பத்மனோ நானும் அதையே தான் நினைத்தேன் கலா.இன்று அம்மா கூட அதைப் பற்றித்தான் பேசினார்கள்.
மித்திரனுக்கு வினியை திருமணம் செய்ய வேண்டும் என்று அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள். அப்படி செய்தால் எங்கள் உறவு காலத்துக்கும் நிலைத்திருக்குமாம்.
நான் ஒரு போதும் இந்த திருமணத்தால் தான் எங்கள் உறவு நிலைத்திருக்கும் என்று எண்ணவில்லை.எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் நான் என் தங்கை மீது பாசமாகத்தான் இருப்பேன்.அவளும் அப்படித்தான்.இரத்தபாசம் எப்போதுமே விட்டுப்போகாது இல்லையா. ஆனால் அம்மா சொல்வதிலும் எனக்கு ஒரு நியாயம் இருப்பதாகப்பட்டது.
யாரென்றே தெரியாத ஒருத்தனுக்கு பெண்ணைக் கொடுத்துவிட்டு அவன் எப்படிப்பட்டவனோ நம் பெண்ணை நன்றாக வைத்துக்கொள்வானோ என்று துன்பப்படுவதற்கு பதில் பேசாமல் என் தங்கை பையனுக்கே நம் பெண்ணைக் கொடுத்தால் நிம்மதியாக இருக்கலாம்.பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் கூட போய் ஒரு பத்து நாட்களோ ஒரு மாதமோ உரிமையாகத் தங்கி பெண்ணைப் பார்த்துவிட்டு வரலாம்.எதுவானாலும் உரிமையுடன் தட்டிக் கேட்கலாம்.
அத்துடன் நம்ம மித்துவுக்கும் என்ன குறை மேகலா பார்க்க அழகனாக இருக்கிறான்.படிப்பு கை நிறைய சம்பளம் ஒரே பையன் வேறு. எல்லா விதத்திலும் வினிக்கு பொருத்தமாக இருப்பான். அதோடு இந்த திருமணம் நடந்தால் அம்மாவும் மகிழ்ச்சியடைவார்கள். நீ என்ன சொல்கிறாய் மேகலா??
என்ன மேகலா எதுவுமே சொல்லமாட்டேன் என்கிறாய்.
மேகலா என்ன சொல்லுவார்.அவர் மனதில் ஒன்றை நினைத்திருக்க கணவன் வேறொன்றைக் கூறினால்!!!!! மேகலாக்கும் மித்திரனைப் பிடிக்கும் தான்.மிகவும் நல்ல பையன் தான்.ஆனாலும் ஏனோ வினியின் கணவனாக அவரால் அவனை எண்ணிப் பார்க்க முடியவில்லை.அவர் மனதில் வினியின் ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் கூடவே இருந்த நிலவன் தான் வினியின் இணையாக பதிந்துவிட்டிருந்தான்.
தன் எண்ணத்தை ஆசையை கணவனிடம் பகிர்ந்துகொள்ள தக்க தருணம் எதிர்நோக்கி காத்திருந்தார்.இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.ஆனால் அவர் தன் எண்ணத்தைக் கூறுமுன்பே கணவன் இன்னொன்றைக் கூறினால் அவர் என்னதான் செய்வார்??
அத்துடன் அவருக்கு இன்னொன்று தோன்றியது.என்னதான் தானும் கணவனும் ஆசைப்பட்டாலும் வாழ்வு வினியினுடையது.வாழப்போவதும் அவள் தான்.எனவே இதில் தங்களுடைய விருப்பத்தை விடவும் வினியின் விருப்பமே முக்கியம் என்று தோன்றியது.அதையே கணவனிடமும் கூறினார்.
ம்ம் ..நீங்கள் சொல்வது எல்லாம் சரி தாங்க.மித்திரன் மிகவும் நல்ல பையன் தான்.ஆனால் இதில் நானோ நீங்களோ உங்கள் அம்மாவோ ஆசைப் பட்டால் மட்டும் போதாது.வாழப்போவது அவர்கள் தான்.எனவே இது குறித்து முதலில் அவர்கள் இருவரிடமும் தெளிவாக பேசி அவர்களின் சம்மதத்தை கேட்க வேண்டும்.அதன் பிறகு முடிவெடுக்கலாங்க.
வாழ்ந்து முடித்தவர்களுடைய ஆசையை வாழப்போபவர்களின் மேல் திணிக்க கூடாது இல்லையா??
என அமைதியாகவே தன் எண்ணத்தைக் கூறினார்.
அதைக் கேட்டு ம்ம் நீ கூறுவதும் சரி தான் மேகலா.ஆனால் மித்திரனுக்கும் என் தங்கைக்கும் இதில் விருப்பம் தானாம்.அம்மா இருவரிடமுமே நேரேயே பேசி விட்டார்களாம்.நம் பெண்ணுக்கும் இதில் உடன்பாடுதான் என்று அம்மா கூறுகிறார்கள். ஆனாலும் நேரில் ஒருமுறை வினியிடம் நாம் கேட்டுவிட வேண்டும்.
அவளும் சம்மதம் தான் என்று கூறிவிட்டால் சீக்கிரமே திருமணத்தை நடத்திவிடலாம்.என்றார் பத்மன் உற்சாகமாய்.
இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் வகுத்த கணக்கை நம்மால் மாற்றவா முடியும்.ஒரு வேளை வினிக்கு மித்திரன் என்பது தான் இறைவனின் சித்தமோ என்று மனதில் எண்ணிய மேகலா. எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கட்டும் இறைவா என்று மனதுள் இறைவனிடம் வேண்டியபடி கணவனைப் பார்த்து சம்மதமாகப் புன்னகைத்தார்.
மறுநாள் காலை நிலவனின் அலுவலக அறைக்குள் நுழைந்த வினியை அவனில்லாத வெறுமையே வரவேற்றது.அவன் அந்த அறையில் இருந்தால் கூட முன்பும் பெரிதாக சிரித்துப் பேசிவிடவில்லைத்தான்.ஆனாலும் அந்த அறைக்குள்ளேயே அவன் இருக்கிறான் என்பதே வினிக்கு உற்சாகத்தை தரும்.அத்துடன் அவள் அவன் சொல்லும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிக்கும் போது அவன் விழிகளில் ஒரு பாராட்டு மின்னி மறையும்.
முன்பு வாயைத்திறந்து பாராட்டினால் முத்துக்கள் சிதறிவிடுமாமா!!! என்று அவன் வாயைத்திறந்து பாராட்டவில்லை என்று கோபம் கொள்பவள் காலப்போக்கில் அவனின் அந்த மின்னல் பார்வைக்காகவே இன்னும் அதிக முனைப்புடன்.சிறப்பாக செயற்பட்டாள்.
அன்று அவனில்லாத வெறுமை அவள் மனதில் சோர்வை விதைத்தது.தலையில் கைவைத்தபடி சற்றுநேரம் அமர்ந்திருந்தாள்.ஆனால் அலுவலகம் மட்டும் அவன் அங்கிருக்கும் போது எப்படி இயங்குமோ அதே அளவு சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.
அவளுக்கு அங்கு பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லை.அவள் ஒன்றும் அங்கு வேலை செய்பவள் இல்லையே.நிலவன் இருந்தால் அவளுக்கு பயிற்சிக்காக சிலசில வேலைகள் கொடுப்பான்.அவன் இல்லாதபடியால் அவளுக்கு வேலை கொடுப்போர் யாரும் இல்லை.நிலவன் இல்லாத அந்த அறையில் இருக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.
தனது கணணியை உயிர்ப்பித்து அனுப்பவேண்டிய சில மின்னஞ்சல்களை அனுப்பினாள்.பின் கணணியை அணைத்துவிட்டு.எழுந்து வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.
அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக்கொண்டே இருந்தது.
என்ன வினிக்கண்ணா சீக்கிரமே வந்துவிட்டாய்.
ப்ச்..தலைவலி அம்மா.அதோடு அங்கு எனக்கு எந்த வேலையுமே இல்லை.
முகமெல்லாம் வாடிப்போய் இருக்கிறதே.மாத்திரை போடுகிறாயா டா?? நிலவன் வரும் வரை நீ வீட்டில் இருந்து ஒய்வெடுமா.அவன் வந்த பின் அலுவலகம் போகலாம்.என்று கூறியவர்.அவளுக்கு மாதுளைச் சாறு எடுத்துவந்து கொடுத்தார்.அதை வாங்கி பருகியவள் தாய் கொடுத்த மாத்திரையை மறுத்துவிட்டு தூங்கப் போவதாகச் சொல்லி மாடிக்கு சென்றாள்.
தனது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவளுக்கு ஆயாசமாய் இருந்தது.இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ஓடி ஒளியப் போகிறான்.ஹ்ம்ம்.....அவனின் பொறுப்புக்களை தட்டிக்கழித்துவிட்டு ரொம்ப நாள் ஓட முடியாது.எப்படியோ இங்கு வந்து தானே ஆகவேண்டும்.அந்த நாளுக்காகத் தானே அவள் காத்திருக்கிறாள்.மனதுள் எண்ணிக் கொண்டாள்.