• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 29

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:- 29



நாட்கள் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது.நிலவன் கொடைக்கானல் போய் நான்கு நாட்கள் ஆகி இருந்தது.எப்போது மீண்டும் வருவான் என்று எந்த தகவலையும் அவன் கூறவில்லை.வினியும் தன் மனச் சோர்வையும் குழப்பங்களையும் மறைத்து இயல்பாக இருக்க முயன்றாள்.



முன்பென்றால் அவளின் மனக்குழப்பத்தை மித்திரன் கண்டுபிடித்திருப்பான்.ஆனால் மித்திரன் செல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அவனின் வேலைகள் சற்று அதிகமாக இருந்தன.அவன் வீட்டில் நிற்கும் நேரமே குறைந்திருந்தது.



இந்த நிலையில் தான் வினிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த அதிர்ச்சியின் விளைவால் வினியின் மனநிலையும் அவளுக்கும் நிலவனுக்கும் இடையிலான பிரிவின் காரணமும் தாரணிக்கும் தெரிய வந்தது.





அன்று தாத்தா பாட்டியைப் பார்க்கவென்று நிலவன் வீட்டுக்கு சென்றாள் பூவினி.



வாடா குட்டி.எங்கே இரண்டு மூன்று நாட்களாக இந்தப் பக்கம் உன்னை காணமேன்னு தேடிட்டே இருந்தன் டா.



சும்மா சொல்லாதீங்க பாட்டி உங்களுக்கு என் மேல் பாசமே இல்லை.கடைக்குட்டி என்று உங்கள் செல்லப்பேத்தி தமிழ் மேல் தான் பாசம்.



சரியாக சொன்னீங்கள் வினிக்கா.இவங்களுக்கு நம்ம மேல பாசமே இல்ல.இருந்திருந்தா எங்க வீட்டில வந்து இருந்திருப்பாங்க.இந்த குண்டுப் பூசணி மேல தான் பாசம்.அதான் இங்கேயே இருக்கிறாங்க.நாம எவ்ளோ தான் கூப்பிட்டாலும் நம்ம வீட்டுக்கு வரவே மாட்டாங்க. என்று வேண்டுமென்று வினியுடன் சேர்ந்து வள்ளியம்மையை வம்புக்கு இழுத்தாள் தாரணி.



வள்ளியம்மை மூட்டு வாதத்தால் எங்கேயும் செல்ல மாட்டார் என்று அவர்களுக்கு தெரியும்.இருந்தும் வேண்டுமென்றே இருவரும் பாட்டியுடன் செல்ல சண்டையிடுவார்கள்.அப்போதும் அதே போல் வினி பாட்டியை வம்புக்கு இழுக்க அங்கு தாரணியும் வந்து சேர்ந்தாள்.





தாரணியை அங்கு காணவும்

ஏய் தரு நீயும் இங்கதான் இருக்கியா?? எங்கேடி வீட்டுப்பக்கம் ஆளையே காணோம்?? என்றாள் வினி.



ப்ச் ப்ச் அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.நீங்க முதல்ல பாட்டியைக் கவனியுங்க.விட்டுடாதீங்க.என்று வள்ளியம்மையிடம் வம்பு செய்தாள் தாரணி.





அப்போது எதுக்கு நீங்க ரெண்டுபேரும் இப்போ என் பாட்டியைத் திட்டுறீங்க.என் பாட்டிக்கு என் மேல தான் பாசம் அதிகம்.அதுக்கு இப்போ என்னங்கிறீங்க????? என்று தமிழ் இடையில் புகுந்து தன் பாட்டிக்கு சப்போர்ட் செய்யவும்



ஒய்..... குண்டுப் பூசணி அடங்குடி??? உனக்கு முதலே அவங்க எங்களுக்குப் பாட்டி. என்று எகிறினாள் தாரணி.



பாட்டி பாருங்க பாட்டி இந்த தரு என்னை குண்டுப் பூசணி குண்டுப்பூசணின்னு சொல்றா. சிறுபிள்ளை போல் பாட்டியிடம் முறையிட்டாள் தமிழ்.



தன் பேத்திகளின் செல்லச் சண்டையை புன்னகையுடன் ரசித்தபடியிருந்தவர்.சிரிப்புடன் அவளை குண்டுன்னு சொல்லாதடா தரு செல்லம் என கூறவும்



ஒ அப்போ பூசணின்னு மட்டும் சொல்லவா பாட்டி என்று அப்பாவியாய்க் கேட்டாள் தாரணி.



அவளின் கேலி புரிந்து பூவினியும் வள்ளியம்மையும் சிரிக்க தமிழ் தாரணியைத் துரத்தியபடி ஓடினாள்.



மகிழ்ச்சியுடன் அதைப் பார்த்தபடி இருந்தவர் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்குடா வினி செல்லம் நீங்கள் எல்லாம் இதே பாசத்தோட அன்னியோன்னியத்தோட காலம் முழுதும் ஒற்றுமையாய் சந்தோசமாய் இருக்கணும் என்று வாழ்த்தினார்.



புன்னகையுடன் கீழே அமர்ந்து பாட்டியின் மடியில் தலை சாய்த்துக்கொண்டாள் பூவினி.நான் கூட இந்த வீட்டுக்கே மருமகளா வந்து காலம் முழுக்க எங்க குடும்பத்தோட இதே போல இருக்கணும் என்று தான் ஆசைப்படுகிறேன் பாட்டி.என்று மனதில் சொல்லிக்கொண்டவளின் கடைவிழி ஓரம் ஒருதுளி நீர் வழிந்தது.



என்ன பாட்டியும் பேத்தியும் செல்லம் கொஞ்சுறீங்க என்று கேட்டபடியே சில பத்திரங்களை கையில் எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார் ஜெகநாதன்.



தன்னைச் சமாளித்துக்கொண்டு சிரித்தபடியே இன்னைக்கு தொழிற்சாலைக்கு போகவில்லையா மாமா?? என்று வினவினாள் வினி.



இல்லம்மா.இன்னிக்கு டாக்ஸ் விடயமா சில கணக்குகள் பார்க்க வேண்டி இருந்திச்சு அதனால நாதனை அங்கேயும் பார்த்துக்க சொல்லி இருக்கன்.



ஒ சரி மாமா.



வினும்மா எனக்கு ஒரு உதவி செய்யுறியா??



சொல்லுங்க மாமா.



நான் சொல்ற தொகைகளை கூட்டி சொல்லணும்.இங்க வா.இப்படி உக்கார்ந்துக்கோ.



ம்ம் சொல்லுங்க என்றவள்.

அவரின் வேலைகளில் உதவினாள்.



சில பல சொத்துக்களின் மதிப்பை சரி பார்த்துக்கொண்டிருந்தவர் ஏதோ தோன்றவும் தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தார்.



மறுமுனையில் அலைபேசி எடுக்கப்படவும் ஆ நிலவா என்றழைத்தார்.அந்த ஒற்றை வார்த்தையில் கால்குலேட்டரில் நர்த்தனமாடிய வினியின் விரல்கள் அசையாமல் நிற்க செவிகள் கூர்மை பெற்றன.



அந்த ********** நிலத்தோட பத்திரம் உன்கிட்ட கொடுத்தேன் இல்ல.அது எங்கேப்பா.??





ம்ம்ம் டாக்ஸ் விடயமாக தேவைப்படுகிறது.



சரிப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்.



சரி வைக்கிறேன்.



வினி ஆவலுடன் எதிர்பார்த்த கேள்வியை அவர் கேக்கவே இல்லை.வினியின் மனம் சோர்ந்தது.



தொலைபேசியை அணைத்தவர் வினியைப் பார்த்து புன்னகைத்து எதோ சிறுபிள்ளைக்கு சொல்வதைப் போல தன் அலமாரியைக் குடைய வேணாமாம்.நீங்கள் கேட்ட பத்திரம் மேலேயே இருக்கிறது.மற்ற கோப்புகள் எதையும் சிதறவிடாமல் இதை மட்டும் எடுங்கள் என்கிறான்.என்றவர்.



வினும்மா இடையில் எழுந்தால் பிரித்து அடுக்கி வைத்திருப்பதெல்லாம் எனக்கு குழம்பிவிடும் நீயே அவன் அறைக்கு போய் அந்த கோப்பை எடுத்துவந்துவிடுகிறாயா??? என்றார்.



சரி மாமா.என்றவள்.நிலவனின் அறைக்கு சென்றாள்.



எப்போதும் போலவே அப்போதும் சுத்தமாகத்தான் இருந்தது அவன் அறை.உள்ளே நுழைந்தவளின் நாசியில் அவனுக்கேயுரிய ஓர் வாசனை.அவன் அங்கு இல்லாவிடிலும் அவன் இருப்பது போலவே ஓர் உணர்வு தோன்றியது அவளுக்கு.மூச்சை இழுத்துவிட்டு அந்த வாசனையை நுகர்ந்தவளுக்கு ஒரு தடவை புஜ்ஜியை துரத்தியபடி தான் இதே அறைக்குள் நுழைந்ததும்.எதிர்பாராமல் நிலவன் எதிரே தோன்றியதும் நினைவுக்கு வந்து.அவள் இதழ்களில் ஒரு நாண முறுவலைப் பூக்கச் செய்தது.



அவனின் அறையை ரசித்தபடி நின்றவளுக்கு சட்டென தான் இங்கு வந்த காரணம் நினைவுக்கு வர தலையில் தட்டியபடி ஜெகநாதன் சொன்ன அலமாரியைத் திறந்தாள்.



அவர் சொன்ன மஞ்சள் நிற கோப்பு மேல் தட்டில் இருந்தது.ஒரு நாற்காலியைப் போட்டு ஏறினால் இலகுவாக எடுத்துவிடலாம்.ஆனால் தன் உயரத்தின் மீது அசாத்திய பெருமை கொண்ட வினிக்கோ அது பிடிக்கவில்லை.எனவே கீழே நின்றபடியே நுனிக்காலில் எம்பி எம்பி முயற்சி செய்தாள்.முடியவில்லை.



மூன்றாவது தடவை உள்ள பலத்தையெல்லாம் திரட்டி எம்பி ஒரு குதி குதித்து அந்த கோப்பை பற்றி இழுத்தாள்.அந்த கோப்பு வந்துவிட்டது தான்.ஆனால் கூடவே அந்த தட்டில் இருந்த ஏழு எட்டு கோப்புகளும் மொத்தமாக அவள் தலையில் விழுந்து அதனுள் இருந்த பேப்பர்கள் எல்லாம் கீழே சிதறின.



அதைக் கண்ட வினி தலையில் கைவைத்துக்கொண்டாள்.அறை முழுதும் பேப்பர்கள் சிதறிக்கிடந்தன.



அதற்கிடையில் ஒய் வினிக்கா மாமா கேட்ட பத்திரம் எங்கே எடுத்துவிட்டாயா?? என்றபடியே வந்த தாரணி.அவள் இருந்த நிலையைக் கண்டு வாய்விட்டு சிரித்தாள்.



போயும் போயும் மாமா உன்னிடம் உதவி கேட்டாரே. எப்படி இன்றைக்குள் இந்த பேப்பர்களுக்குள் இருந்து அவர் கேட்ட பத்திரத்தை எடுத்துக்கொடுத்து விடுவாயா வினிக்கா?? என்றாள் கேலியாக.





தாரணியின் கேலியில் கோபம் வர நான் அதைத்தான் முதலில் எடுத்தேன்.இது தவறி விழுந்துவிட்டது என்றவள்.இந்தா இதைக் கொண்டு போய் மாமாவிடம் கொடு.நான் இதையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டு வருகிறேன்.என்றபடி அந்த கோப்பை தாரணியிடம் கொடுத்தாள்.



அதை வாங்கியபடி இரவுக்குள் முடிந்துவிடும் இல்லையாக்கா என்று கண் சிமிட்டிக் கேட்டுவிட்டு வினி அடிக்க வரும் முன்பு கோப்புடன் கீழே ஓடினாள் தாரணி.



எருமை உதவி செய்வோம் என்று இல்லை.கிண்டல் பண்ணுகிறது. என்று திட்டியபடியே ஒவ்வொரு பேப்பர்களாய்ப் பார்த்து பார்த்து எடுத்து சரியான கோப்பினுள் வைத்தாள் பூவினி.



ஒரு வழியாய் அனைத்தையும் அடுக்கி முடித்துவிட்டு அப்பாடா என்று நிமிரும் போது தான் மின்விசிறியின் காற்றில் கணணி மேசைக்கு கீழே ஒரு பேப்பர் பறந்து போய் இருப்பது தெரிந்தது.



அடக்கடவுளே ஏதேனும் முக்கியமான பேப்பராய் இருக்க போகிறது என்று அதை எடுத்து வைக்க போனவள் அந்த பேப்பரை பார்த்ததும் திகைத்தாள்.அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய உணர்ச்சி மேலீட்டால் உடல் நடுங்கியது.



நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்த துக்கத்தை தாள முடியாமல் விக்கித்தாள்.



கரங்கள் நடுங்க விழிகளில் கண்ணீர் வழிய மீண்டும் அந்த பேப்பரையே வெறித்தாள்.



அந்த பேப்பரில் இருந்தது கரிக்கோலால் (pencil) வரையப்பட்ட இரு கோட்டுருவங்கள்.இன்னும் சொல்லப்போனால் சிறுபிள்ளைத் தனமான கிறுக்கல்கள்.அதன் அருகில் எழுதப்பட்ட ஒரு பிரபலமான கவிதைவரி.



அந்த ஒற்றைக் காகிதம் நிலவனின் அவள் மீதான கரை காண முடியாத காதலை வினிக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.





வினிக்கு அந்த ஓவியம் வரையப்பட்ட தினம் நினைவுக்கு வந்தது.



அப்போது நிலவன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தான்.வினி பள்ளி மாணவி.வழக்கம் போல அன்றும் கணித பாடத்தில் தோன்றிய சந்தேகத்தை அவனிடம் கேட்டு படித்துக்கொண்டிருந்தாள்.





ஒரு கணக்கு மட்டும் ஏனோ அவன் சொல்ல சொல்ல அவளுக்கு புரியவே இல்லை.இரண்டு மூன்று முறை பொறுமையாக விளங்கப்படுத்தியவன் அப்போதும் அவளுக்கு புரியாமல் போகவே நங்கென்று ஒரு கொட்டு வைத்துவிட்டான்.



வினிக்கு ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வர அழுதபடியே அவன் மறுபடியும் சொல்லிக்கொடுத்ததை போட்டுப்பார்த்தாள்.

இப்போது சரியாக வந்தது.



அதைப் பார்த்து பாருடா ஒரு கொட்டு என்னமா வேலை செய்யுதுன்னு என்று கூறி சிரித்தவன் இன்னொரு கணக்கை கொடுத்து இதைப் போட்டுக் காண்பி என்றான்.



முகத்தை உர்ர் என்று வைத்தபடியே அவள் அந்த கணக்கை போட்டுப்பார்க்கவும் சிரிப்புடன் சற்று நேரம் அவளையே பார்த்தபடியிருந்தவன் ஒரு பேப்பரில் குச்சி குச்சியாய் கையும் காலும் நீட்டு நீட்டாய் வரைந்து அதற்கு இரட்டை ஜடை கண் வாய் மூக்கு எல்லாம் வரைந்து அருகிலேயே “ஆடுகால்” என்று எழுதிவிட்டு ஒரு நமட்டுப் புன்னகையுடன் அவள் முன்பு மேசையில் வைத்தான்.





அதைக் கண்டவளுக்கு இன்னும் ஆத்திரம் பெருகியது.கொட்டுவதையும் கொட்டிவிட்டு என்னை இவ்வளவு அசிங்கமாக வேறு வரைந்து வைத்திருக்கிறான் என்ற கோபத்துடன் அந்த பேப்பரை எடுத்து அவன் வரைந்த படத்துக்கு அருகிலேயே அதைவிட உயரமாக ஒரு குச்சி மனிதனை வரைந்து விட்டு அதன் அருகிலேயே “கொக்கைத்தடி” என்று எழுதி அவன் முன்பு வீசிவிட்டு கோபத்துடன் எழுந்து சென்றுவிட்டாள்.



அந்த பேப்பரைத்தான் இவ்வளவு பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறான்.அந்த படங்களின் அருகிலேயே ஒரு பிரபலமான கவிதை வரி அவனின் கையெழுத்தில்





“....உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே....”



அதைப் படிக்கும் போதே மீண்டும் நெஞ்சையடைத்துக்கொண்டு “கோ” என்று வந்தது வினிக்கு.இத்தனை காதலா அவள் மீது.



இதைவிட அவனின் அவள் மீதான நேசத்துக்கு வேறு சான்று வேண்டுமா என்ன?? ஆனால் ஏன்? ஏன்??



மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே.......கடவுளே இவ்வளவு நேசத்தை அவள் மீது வைத்துவிட்டு எதற்காக இந்த நாடகம்.ஒருவேளை ஒருவேளை அத்தானுக்கு ஏதேனும் பெரிய வியாதியோ!!! அதனால் தான்....அதனால் தான் என்னிடம் இருந்து விலகுகிறாரா!!!!!!!



கடவுளே கடவுளே....... அவளின் அத்தான்.அவளின் அத்தானுக்கு அப்படி எதுவும் ஆகாது.இல்லை இல்லை..



நெஞ்சு அதிவேகமாக துடிக்க கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய செய்வதறியாமல் விக்கித்து அமர்ந்திருந்தாள் பூவினி.







நீண்ட நேரமாக வினியைக் காணாது இன்னுமா வினுக்கா அந்த பேப்பர்களை எடுத்து வைக்கவில்லை என்று எண்ணியபடியே மேலே வந்த தாரணி



கையில் ஒரு பேப்பரை வைத்து அதை வெறித்தவாறு கண்களில் இருந்து கண்ணீர் வழிய விக்கித்து அமர்ந்திருந்த பூவினியைக் கண்டு திகைத்து வினுக்கா வினுக்கா என்று அவள் தோளைப் பற்றி உலுக்கினாள். தாரணியின் உலுக்கலில் உணர்வு பெற்றவள் தரு என்று கேவியபடி அவள் தோளில் சாய்ந்து குமுறி அழுதாள்.

நெஞ்சே வெடித்துவிடும் போல் கதறி அழும் தமக்கையைப் பார்த்து காரணம் அறியாமல் திகைத்தாள் தாரணி.அவள் ஒரு கை தமக்கையின் முதுகை வருட மறு கை வினியின் கையில் இருந்த பேப்பரை வாங்கிப் பார்த்தது.





அதைப் பார்த்தவளுக்கு அதில் இருந்த கையெழுத்து நிலவனுடையது என்று புரிந்தது. சிறு பெருமூச்சுடன் மீண்டும் வினியின் முதுகை தட்டிக்கொடுத்தாள்.



தன் மனதின் சோகங்கள் அத்தனையையும் தங்கையின் தோளில் இறக்கி வைப்பவளாய் அழுது தீர்த்தாள் பூவினி.அவள் அழுகை சற்று குறையவும் அவளை நிமிர்த்தியவள். அந்த அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பருக செய்தாள்.



ஒரு மிடறு நீரை பருகியவள் எனக்கு பயமா இருக்கு தரு என்றாள் சிறுபிள்ளையாய் குரல் நடுங்க.



அந்த தருணத்தில் தமக்கைக்கு தாயாகி அவள் முடியை இதமாய் கோதிவிட்ட தாரணி. என்ன வினுக்கா?? எதற்கு பயம்?? என்றாள் இதமாய்.



கண்களில் கண்ணீர் தேங்க அந்த காகிதத்தை அவளிடம் காட்டியவள் குரல் நடுங்க தன் பயத்தைக் கூறினாள்.



அதைக் கேட்டு இவ்வளவு தானா என்று சிரித்த தாரணி.நீங்கள் எப்போ வினிக்கா இவ்ளோ அதிபுத்திசாலியாகினீர்கள் என்று கேலியாக வினவினாள். உடனேயே வினியின் மனநிலையை உணர்ந்தவள் நீங்கள் எண்ணுவது போல் எதுவும் இருக்காது வினுக்கா.



எங்கள் குடும்பத்தில் வருடத்திற்கு இருமுறை அனைவருமே முழு உடல்பரிசோதனை செய்வது தெரியும் தானே.அத்தானும் தான் செய்கிறார்.அதை செய்வது நம் குடும்ப மருத்துவர்.அப்படி இருக்கும் போது நீங்கள் நினைப்பது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.



அத்தோடு அத்தான் அடிக்கடி இரத்த தானம் செய்வதும் உங்களுக்கு தெரியும் தானே!!! பூரண உடல் ஆரோக்கியம் உள்ள ஒருவரால் தான் இப்படி தொடர்ந்து இரத்த தானம் செய்ய முடியும்.அத்தான் கல்லூரி படிக்கும் போதில் இருந்து அதை செய்து வருகிறார்.அத்தானைப் பார்த்து தானே செந்தூ நிவே எல்லோருமே செய்கிறார்கள்.



சும்மா கண்டபடி சிந்தித்து குழம்பாதீர்கள் வினிக்கா.ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் இவ்வளவு நேசத்தை ஒருத்தர் மேல் ஒருத்தர் வைத்துக்கொண்டு எதற்கு இந்த வீண் கோபங்களும் பிடிவாதங்களும்.



சரி அத்தானே தப்பு செய்திருந்தாலும் நீங்கள் மன்னித்திருக்கலாம்.அதைவிட்டு வீம்பாக நாட்டைவிட்டே போய் ஏன் வினிக்கா இவ்ளோ கோபம்.சரி நடந்ததை விடுங்கள்.இனியாவது நீங்களே சென்று அத்தானிடம் பேசுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.அவர்களின் பிரச்சினையை தான் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து தீர்வு சொன்னாள் தாரணி.



தாரணியின் பேச்சில் அதுவரை அடி நெஞ்சைப் பிசைந்த பயம் விலகி போக அவள் சொல்வதில் உள்ள உண்மை புரிய சற்று நிம்மதியாக உணர்ந்தாள் பூவினி.ஆனால் தொடர்ந்து தாரணி பேசியதைக் கேட்டவள் குழப்பத்துடன்



என்ன சொல்கிறாய் தரு??? நான் பிடிவாதமாக இருக்கிறேனா???

எங்களுக்குள் என்ன நடந்ததுன்னு தெரியுமா உனக்கு??? என்ற பூவினி தாரணி கோபத்துடன் முறைக்கவும் தான் இதுவரை தாரணியிடம் எதையுமே சொல்லவில்லை என்பது நினைவு வர



மன்னிச்சுடு தரு ஆரம்பத்தில் இதை சொல்லும் மனநிலையில் நான் இல்லை.எல்லாவற்றையும் மொத்தமாக மறக்கவே எண்ணினேன்.ஆனால் இங்கு மீண்டும் வந்த பிறகு அத்தானிடம் தெரிந்த சில மாற்றங்கள் எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது.அதன் பின்பு உன்னிடம் இது குறித்து பேச நினைத்தேன்.ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்றவள்.



ஒரு வேகமூச்சுடன் நடந்த அனைத்தையும் தாரணியிடம் பகிர்ந்துகொண்டாள்.