• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 29

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
638
113
Tirupur
சரணடைந்தேன் – 29



பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்

ஓவியம் போல சேர்ந்திருப்போம்

வரலாறு எல்லாம் நம் பேரை நாளை

சொல்வதை போல வாழ்ந்திருபோம்

எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே

ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே

அடை மழையாக பெய்யும் சந்தோசம்



ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே

பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே

நம்மைக் காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்

சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்

ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்

சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்



அந்த ஊரை விட்டுச் சென்று மூன்று நாட்கள் தான் ஆனது என்று அரூபியால் நம்பவே முடியவில்லை… அவள் கிளம்பிய நாள் கூட, இப்படி இருக்கவில்லை… மூன்று நாட்களில் இத்தனை மாற்றங்களா..? கிராமமே மாறி, விழாக் கோலமாய் காட்சியளித்தது… விழாவிற்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வர வைத்து வெளியாட்களை உள்ளே விடாமல் அங்குள்ள மக்களை வைத்தே வேலைகளை செய்து முடித்திருந்தான் வெற்றி…

அவர்கள் வணங்கும் காடுவெட்டி அய்யனார் கோவிலின் முன்னும் பந்தல் அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆச்சியின் யோசனைப்படி கனபதி ஹோமமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



பத்ரன் ஆசைப்பட்ட அத்தனைக் கனவுகளையும் கொடுத்திருந்தனர் பாலனின் மக்கள். அதில் முக்கியப் பங்கு வெற்றிக்குத்தான்… தன்னுடைய ஆசையை உணர்ந்து, அதை யாரிடமும் வெளிக்காட்டாமல் மங்கையை விட்டுக் கொடுத்தது தான் அத்தனைக்கும் காரணம்… புகழ் அதைச் செய்யாமல் போயிருந்தால் வெற்றி இப்போது நடை பிணமாகியிருப்பான். தன் உடன் பிறந்தவன் எடுத்த ஒரு முடிவால் இன்று அவனின் வாழ்க்கையே வண்ணமயமாக மாறியிருந்ததே… இத்தனை வருடமாய் வெறுத்து வாழ்ந்த தாய் கூட தன் தவறை உணர்ந்து அவனிடம் மன்னிப்பைக் கேட்டு விட்டாரே…



அம்மா என்ற பாசம் எப்போதும் உண்டு தான். ஆனால், அவரோடு சாதரணமாக அவனால் பேச முடியுமா.? தெரியாது… ஆனால் அப்படியே இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டாள் அவனின் ராட்சசி. காலம் எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து தானே… அந்த மருந்து அவனது வலியையும், வேதனைகளையும் குறைக்கிறதா என்று பொருத்திருந்து பார்ப்போம்… அடுத்த நாள் காலை பத்து மணிக்குத் திறப்பு விழா என்றிருக்க, முதல் நாளே எல்லோரும் வந்திருந்தனர்…

பாலனின் சகோதரிகள் இருவருமே தங்கள் பிள்ளைகளுடன் வந்திருக்க, இவர்கள் குடும்பமே சிறு கிராமம் போலத் தெரிந்தது… சும்மாவே மங்கையை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாகத் தான் பார்த்தார்கள்… இப்போது மொத்த குடும்பத்தையும் பார்த்து வாயைப் பிளந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்… அதிலும் வனிதா அரூபியைக் கையோடு வைத்துக் கொண்டு அலைந்தது தான் அதிசயமாகப் பார்க்கப்பட்டது…



ஊருக்கு வந்ததுமே அம்மாவின் கையில் மனைவியை விட்டு விட்டு, வெற்றியோடு சேர்ந்து மீதமுள்ள வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான் புகழ்… அபிக்கு ஊருக்கு வந்தாலும் எதுவுமே ஒட்டவில்லை. ஏதோ எல்லோரும் அன்னியர்களைப் போலத் தோன்றினர். அன்று ஒருத்தர் கூட தனக்கு ஆதரவாகப் பேசவில்லையே என்ற கோபம். அதனால் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்தாள்.



தபேரா தான் அவளை எங்கும் தனியாக விடவில்லை… பத்ரன் அவள் அருகாமையை விட்டு இம்மியும் நகரவில்லை… ஊரை விட்டுத் தள்ளி வைத்தவர்கள், அந்தக் குடும்பத்தில் ஒருத்தராக அந்த வீட்டுக்குள் நுழைய முடியாது. அதனால் அவர் பேத்தியை தங்கள் வீட்டுக்கு அழைக்காமல் அவள் கூடவே இருந்தார்…



மங்கையைப் போல அரூபியும் பட்டுப் புடவை தான் கட்டியிருந்தாள். அவர்கள் வழக்கம் போல் கூந்தலை தூக்கிக் கொண்டையில் அடக்காமல் தளர பின்னில் தலை நிறைய பூவும் வைத்திருந்தாள். கிளம்பும் போதே வனிதாவின் ஆலோசனைப் படி ஒரு அழகு நிலையம் சென்று, அபிக்கு உடை மற்றும் தலை அலங்காரம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. அதிலேயே அவள் தேவதைப் போல இருந்தாள்… பேத்தியைப் பார்க்க பார்க்க பத்ரனுக்கு தன்னுடைய முடிவு சரிதான் என்ற எண்ணம் வலுப்பெற்றது…



அவர்கள் கார் உள்ளே நுழைந்ததும், இறங்கி அவரிடம் வந்தவள் அவரை ஒரு சுற்று சுற்றி வந்தாள், கொடிய விலங்குகளுக்கு மத்தியில் மூன்று நாட்கள் காட்டில் இருந்தாரே அவைகள் ஏதேனும் தாக்கியிருக்குமோ, காயம் ஏதேனும் ஆகியிருக்குமோ என்று தான் அந்த சுற்றல். அப்படி ஒன்றும் இல்லையென்றதும் ஒரு சண்டை. அன்று கூட்டதில் ஏன் அப்படி சொன்னாய் என்று… அவரும் தபேராவும் மாறி மாறி எவ்வளவோ சமாதானம் செய்தும் கேட்கவில்லை…



மனைவியின் அட்டகாசத்தைப் பார்த்து பொறுக்க முடியாத புகழ், “உனக்கு என் மேல் ஆசையில்ல அப்படித்தானே. உன் தாத்தா அந்த முடிவு எடுக்கலைன்னா நீயும் நானும் ஒன்னு சேர்ந்திருக்கவே முடியாது. அது உனக்குத் தெரியுமா? அப்போ.. அப்போ அது தான் நீ எதிர்பார்த்தியா…?” என கோபமாகப் பேசவும் தான் வாயை மூடினாள்…



வாயை மட்டும் தான் மூடினாள். ஆனால் முறைப்பை விடவில்லை. பத்ரன் தபேராவோடு இப்போது புகழும் அந்த முறைப்பில் சேர்ந்தான். மூவரையும் முறைத்து முறைத்தே ஒரு வழியாக்கினாள்…



புகழ் வந்ததும் வெற்றியின் வேலை பாதியாகி விட, ஆச்சியிடம் மனைவியைப் பற்றி பேச வந்தான். ஆனால், அதற்கு முன்னரே வனிதா மங்கையைத் தனியாகப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார். எதற்கு போனில் சரியாகப் பேசவில்லை. எதை மறைத்தாய் என்பது போல மிரட்டிக் கொண்டிருந்தார். இத்தனை நாள் அவரின் அருகாமையை எதிர்பார்த்தவள் தானே, வனிதா வந்ததும் அவர் மடியிலேயே கிடந்தாள். அவள் செய்தியை சொன்னதும் வனிதாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. தன் குழந்தையின் வயிற்றிலும் ஒரு குழந்தையா..? நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஆனாலும் விரல்கள் மருமகளின் தலை கோதுவதை நிறுத்தவில்லை.



மனைவியைக் காண வந்தவன் இருவரையும் பார்த்து விட்டு, பிறகு ஒன்றும் சொல்லாமல் ஆச்சியிடம் வந்து உட்கார்ந்து கொண்டான்…



அங்கு தான் அவனின் குடும்பம் மொத்தமும் இருந்தது… சுமி மட்டும் “ஏன் வெற்றி ஒழுங்கா சாப்பிடறது இல்லையா, உடம்பு ரொம்ப இளைச்சிடுச்சே…” என அவன் கன்னம் வருட,



“அப்படியெல்லாம் இல்ல அத்த, வேலை அதிகம், அதோட மங்கைக்கு ஒன்னுமே வயித்துல தங்கல, அவ சாப்பிடாம நான் மட்டும் என்ன சாப்பிட…” என அத்தைக்கு பதில் சொன்னவன்,



ஆச்சியின் வீல் சேரின் கீழ் அமர்ந்து மடியில் தலை வைத்து, “ரொம்ப கஷ்டப் படுறா ஆச்சிம்மா, சாப்பிடுறது எல்லாமே வாந்தி பன்றா. வைத்தியர் வந்து ஏதோ ஒரு மருந்து கொடுத்தார். அதுக்குப் பிறகு சாப்பிடுறா, ஆனா வாந்தி மட்டும் நிக்கல, எல்லாருக்கும் இப்படித்தான் இருக்குமோ…?” என தாயிடம் கேட்க வேண்டியதை ஆச்சியிடம் கேட்டான்…

அவன் கேட்டதில் அங்குள்ள அனைவரும் சிரிக்க, ஆச்சி மட்டும் அவன் தலையை வருடியபடியே, “ஆமா கண்ணா… இது இயற்கை தானே. எல்லாப் பொண்ணுங்களுக்கும் இப்படித்தான் விதிச்சிருக்கு, அதுக்காக நீ சாப்பிடாமே இருப்பியா… நீ நல்லா இருந்தாதான் அவளை நல்லா பார்த்துக்க முடியும்…” என ஆச்சி விசயத்தை ஊகித்துப் பேச,



“என்ன கண்ணா சொல்ற, இந்த நேரம்ன்னா, மங்கை முழுகாம இருக்காளா…? எப்போ எப்படித் தெரியும்…? ஏன் எங்ககிட்ட சொல்லல…? என்ன வெற்றி எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை இவ்ளோ ஈசியா சொல்ற, என் தங்கத்துக்கு ஒரு குழந்தை வரப்போகுதா…? கடவுளே நாங்க கும்புடுற தெய்வம் எங்க கோரிக்கையை நிறைவேத்திடுச்சு… நன்றி தெய்வமே…” என உணர்ச்சி வசப்பட்டக் குரலில் அவனின் அத்தைகள் இருவரும் மாறி மாறிப் பேச, மொத்தக் குடும்பமும் அந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்டாடித் தீர்த்தது…



வனிதாவோ மங்கையை எழுப்பி, அவளை உச்சி முகர்ந்தவர் “நல்லாருக்கனும் ரெண்டு பேரும் நூறு வருசம் குழந்தைக் குட்டியோட நல்லாயிருக்கனும்…” என வாழ்த்தி விட்டு, வீட்டிலிருந்த இனிப்புகளை எடுத்து அவர் கையாலேயே எல்லாருக்கும் கொடுத்தார்…



வெற்றியிடம் வந்தவர் அவன் வாயில் இனிப்பைத் திணித்து விட்டு, “ரொம்ப சந்தோசம் கண்ணா… ரொம்ப ரொம்ப சந்தோசம். ஆனா என்ன.? இவ்வளவு சீக்கிரம் என்னை நீ பாட்டி ஆக்கியிருக்க வேணாம்… பாரு எனக்கு ஒரு முடி கூட நரைக்கல..” எனக் கிண்டலடிக்க, வெற்றியின் முகத்தில் வெட்கத்தின் சாயல்… தலையைக் கோதி அதை மறைக்க முயல, அதைப் பார்த்த அனைவரும் “ஓஹோ” எனக் கத்த “ஆள விடுங்கடா சாமி…” என அந்த இடத்தை விட்டே ஓடிப்போனான்… அதற்கும் அவனைப் பார்த்து அனைவரும் சிரித்தனர்…



ஆராவாரங்கள் எல்லாம் முடிய அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். பத்ரனிடம் அரூபி பற்றி நாச்சியார் பேசினார். அவர்களின் எதிர்காலம் குறித்து, அடுத்து அவர்கள் எங்கே இருப்பார்கள் என்றெல்லாம் பேசினார். உண்மையிலேயே பத்ரனுக்கு இப்போது தான் பயம் பிடித்திருந்தது.



புகழின் குடும்பத்தைப் பார்த்து வாயடைத்துப் போயிருந்தார். யாருமே இல்லாமல் வளர்ந்தவள் அவரின் பேத்தி அம்மாயி. எப்படி இவ்வளவு பெரிய குடும்பத்தில் சமாளிப்பாள் என்ற பயம் அவருக்கு. அது புரிந்ததாலோ என்னவோ தான் நாச்சியார் அவரிடம் பேசினார். தங்கள் குடும்பத்தில் அரூபி எந்த பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பாள் என உத்திரவாதமும் கொடுத்தார். அதன் பிறகு தான் அந்தப் பெரியவரின் முகத்தில் நிம்மதியே வந்தது.

மங்கையின் உடல்நிலையை முன்னிறுத்தி, அவர்கள் ஊருக்குக் கிளம்பட்டும் என்றும், வேலைகள் ஓரளவுக்கு சீராகும் வரை புகழும் அரூபியும் இங்கேயே இருக்கட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளத் தேவையான தனிமையைக் கொடுத்தது போலவும், தன் தாத்தாவோடு இன்னும் கொஞ்ச நாள் அரூபி இருந்துவிட்டு வரட்டும் என்பது போலவும் ஆனது.



இதற்கிடையில் அரூபியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்ப்பதற்கும், ஆதார் கார்ட் வாங்குவதற்கும் ஏகப்பட்ட சிரமங்கள் உண்டானது. மலைவாழ் மக்களின் கெசட்டில் தேடிப் பிடித்து, அந்த அந்த டிபார்ட்மென்டில் தேவையான ஆட்களுக்கு செய்ய வேண்டியதை செய்து முறைப்படி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது. வெற்றி சொன்ன அந்த நிலத்தை வாங்குவதற்குத்தான் இத்தனை ஆவணங்களும் தேவைப்பட்டது.



திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்க, அதனால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு காவல்துறை அதிகாரிகள், மீடியாக்கள் என குமிய, முதல்நாளே அந்தக் கிராமம் அல்லோகலப்பட்டு, ஒட்டு மொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது..

அன்றைய விடியல் அனைவருக்கும் புதுவிதமாக ஆரம்பித்தது. எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சியும் ஆர்ப்பரிப்பும். புகழ் அவன் விரும்பிய காட்டு ராணியே தன் வாழ்க்கைத் துணையாக அமைந்ததில் பெருமகிழ்வு கொண்டிருந்தான்.



வெற்றி மற்றும் மங்கைக்கோ தங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொடுத்த புகழுக்கு அவன் விரும்பிய பெண்ணே மனைவியாகக் கிடைத்ததில் நிம்மதியும் ஆனந்தமும் கிடைத்தது என்றால், பத்ரனுக்கோ அவர் குடும்பத்தின் மீது இருந்த அவப்பெயர் நீங்கித் தன் பேத்தியையும் அவர் குடும்பத்தையும் அந்த கிராம மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து கர்வமும், பெருமையும் என்றால், தபேராவிற்கோ தான் பெறாத பெண், அவள் விரும்பிய வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் அடியெடுத்து வைப்பதில் பெரும் நிம்மதி கொண்டார்.



இதில் இங்குமங்கும் சுற்றி அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டது மணிமொழிதான். வயதின் முதிர்வில் இருந்த ராமசாமியின் கையைப் பிடித்துக்கொண்டு அவரைத் தனியே விடாமல் கூடவே இருந்தாள்.



11மணியளவில் தான் திறப்புவிழாவிற்கு நேரம் குறித்திருக்க, அன்றைய காலை பிரம்ம முகூர்தத்தில் புகழ் அரூபி திருமணம். விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாக பூமியில் சஞ்சரிப்பதாகவும், எந்த ஒரு சுப நிகழ்வும் பிரம்ம முகூர்த்தத்தில் நடத்தினால், அவர்களின் ஆசிர்வாதம் நமக்குத் தங்கு தடையின்றி கிடைக்கும் என்பதும் அம்மக்களின் காலம் காலமான நம்பிக்கை. நாச்சியாருக்கும் இதில் நம்பிக்கை இருந்ததால் அவரும் அதற்கு ஒத்துக் கொண்டார்.



அதனால் அவர்களின் குலதெய்வமான காடுவெட்டி அய்யனார் முன்னே திருமணம் நடக்க இருந்தது. அங்குள்ள வழக்கப்படியே அனைத்து நிகழ்வுகளும் முதலில் நடந்து முடிய, அடுத்து நாச்சியார் குடும்ப முறைப்படி புகழ்-அரூபி திருமணம் நடந்தது. மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட மாங்கல்யத்தை மனைவியின் கழுத்தில் கட்டும் போது தான் அவளின் முகத்தையேப் பார்த்தான். நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து பயந்திருப்பாள் போல. முகத்தில் மகிழ்வே இல்லாமல் மிரட்சியாக இருந்தது.



இப்போது எதுவும் பேசமுடியாது. கொஞ்சம் தனிமைக் கிடைத்ததும், அவளிடம் பேசி சரி செய்து விடலாம், என நினைத்தவன் அவள் கரத்தைப் பிடித்து இதமாக அழுத்தி, உனக்கு நான் இருக்கிறேன். என அவள் பயத்தைப் போக்கினான்.



பாலனின் தங்கையும் தங்கை கணவரும் அரூபியை மகளாகத் தாரை வார்க்க, பல இன்னல்களுக்குப் பிறகு தன் காட்டு ராணியைத் தன்னில் சரிபாதியாக்கி கொண்டான் புகழ்வாணன்.

திருமண நிகழ்வுகள் முடிய, காலை உணவை எடுக்கும் போது தான் மங்கை சொன்னாள். “நீயும் புகழ் மாமாவும் தம்பதி சகிதமா உட்கார்ந்து கனபதி ஹோமம் பண்ணனும்னு ஆச்சி உத்தரவு. என்னதான் மாமா உனக்கு தாலி கட்டியிருந்தாலும் அவசரமாக் கட்டினது இல்லையா. அதனால நெறைய பிரச்சினை வந்துட்டா என்ன பன்றது. ஆச்சிக்குப் பயம். அதுதான் இவ்ளோ பூஜையும் பரிகாரமும் செஞ்சி மறுபடியும் மாமா உனக்கு தாலி கட்டிருக்கார்..” என்றதும் அரூபிக்குப் பேச்சே வரவில்லை. நெஞ்சு முட்ட அக்குடும்பத்தின் மீது பாசமும் நன்றிக்கடனும் நிறைந்து வழிந்தது..



என்ன செய்து என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன். என மனம் அரற்றத் தொடங்க, மனசாட்சியோ நீ எதுவும் செய்ய வேண்டாம். நல்ல மருமகளாக, நல்ல மனைவியாக, நல்ல தாயாக இருந்தாலேப் போதும் என்று சொல்ல, இவற்றையெல்லாம் சாத்தியமாக்கிய கணவனின் மீது கரை காணா காதல் பொங்கியது.


 
  • Like
  • Haha
Reactions: saru and CRVS2797

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
முத்துநகையே முழுநிலவே..!
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 29)


ஆமா, ஆமா நீ எதுவும் செய்ய வேணாம் அரூபிம்மா... நல்ல மனைவியாக, நல்ல தாயாக, நல்ல மருமகளாக இருந்தாலே போதும். அதுவும் தவிர, இப்பவாவது நம்ம புழ்வாணன் மேல காதல் கரை புரண்டு ஓடுதுன்னு ஒத்துக்கறியே அதுவே போதும்.


அட.. ஆண்கள் வெட்கப்படறதும் கூட ஒரு அழகுத்தான் போல.
அதுவும் நம்ம வெற்றி வெட்கப்பட்டா அழகோ அழகு தான் போங்க. உண்மையிலேயே, வெற்றி கிடைக்க மங்கை கொடுத்து வைச்சிருக்கணும்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 

saru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 24, 2022
265
16
28
Hosur
♥️♥️♥️♥️