• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 33

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:- 33



நேரம் இறக்கை கட்டி பறக்க விழா தொடங்கும் நேரமும் வந்தது.விருந்தாளிகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கினர்.



பூவினி தூய வெண்மை நிறத்தில் ஆடை அணிந்து அதற்கேற்ற முத்து நகைகள் அணிந்து ஒரு தேவதை போலவே ஒளிர்ந்தாள்.தாரணி அன்று மித்திரன் தேர்வு செய்து கொடுத்த ஆடையில் இளநீல வர்ணத்தில் கல் வேலைப்பாடுகள் செய்த ஆடையை அணிந்து கொண்டாள்.தமிழ் கரு நீல நிறத்தில் விழாவுக்கெனவே தைக்கப்பட்ட ஆடையில் அழகிய பொம்மைக் குட்டியைப் போலவே இருந்தாள்.





பெண்கள் மூவரும் தாய்மாருடன் விழா அரங்குக்கு சென்ற போது அங்கிருந்த அனைவர் பார்வையும் இவர்களையே மொய்த்தது.தாரணியின் பார்வை ஆவலுடன் மித்திரனைத் தேடிக் கொண்டிருந்தபோது அவனே அவள் எதிரில் வந்தான்.அவன் விழிகளில் வந்து போன வெளிச்சம் அவள் அணிந்திருக்கும் ஆடையை அவன் கண்டுகொண்டான் என்பதை அவளுக்கு உணர்த்தியது.வெட்கத்துடன் தலைகுனிந்துகொண்டாள்.அதன் பிறகு மித்திரனின் பார்வை அடிக்கடி அவளிடம் பாய்ந்து மீண்டது.இந்த நாடகத்தைக் கண்ட வினியின் பார்வை ஏக்கத்துடன் தன்னவனைத் தேடியது.அவன் அங்கு தான் இருந்தான்.அங்கு வந்திருந்த தொழில்முறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.பெண்கள் மூவரும் அவனைக் கடக்கும் போது எதேச்சையாக திரும்பியவனின் பார்வை ஒருகணம் வினியை உரசிச் சென்றது.அதன் பின் அவள் இருந்த பக்கம் அவன் முகம் திரும்பவே இல்லை.





அந்த விழாவில் பூவினியின் கேக் எல்லோரின் பாராட்டையும் பெற்றது. ஒரு பசிய புல்வெளி அதன் நடுவில் ஒரு குளம்.நீல நிற குளத்து நீர் கரையோரம் மோதி வெள்ளை நுரைகளை தோற்றுவித்தது.அந்த குளத்தின் கரையோரம் ஒரு குட்டிப் பெண் அமர்ந்திருந்தாள்.குளத்தின் அருகே நின்ற மரத்தில் இருந்து பசிய புல்வெளியில் வெண்ணிற மலர்கள் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சொரிந்திருந்தன.இவ்வளவையும் கேக்கிலும் ஐசிங்கிலுமே வடிவமைத்திருந்தாள்.குட்டிப் பெண்ணின் பொம்மையை வைத்திருந்தாள்.



அதைப் பார்த்த அனைவருமே அவளின் கற்பனையையும் அதை கேக்கில் வடிவமைத்த விதத்தையும் பாராட்டினர்.அவள் எதிர்பார்த்தது போலவே தமிழ் வியப்பில் விழிகள் விரிய மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்தாள்.அவரவர்களுக்கு ஏற்ற விதத்தில் புன்னகையோடு நன்றி கூறிய வினியின் விழிகள் நிலவனைத் தேடியது.



அவனைக் கண்டுகொண்ட அவள் விழிகள் கோபத்தில் சுருங்கியது.யாரோ ஒரு நவ நாகரிக யுவதி ஒருத்தி அவன் அருகில் நெருங்கி நின்று பேசியபடியிருந்தாள்.அவர்களுக்கு சற்று தள்ளி ஒரு மொட்டைத்தலை பெரிய மனிதர் ஜெகநாதனுடன் பேசிக்கொண்டிருந்தார்.ஒ ..யாரோ தொழில் முறை நண்பருடைய வாரிசு போலும்.



யாராயிருந்தாலும் அவள் அத்தானிடம் அவளுக்கு என்ன பேச்சு.அதுவும் அத்தனை நெருங்கியிருந்து.இங்கு இத்தனை பெண்கள் இருக்கிறோமே!! பேசுவதற்கு நாங்கள் யாருமே அவளுக்கு கிடைக்கவில்லையாமா??



ஆளைப்பார் ஆளை..உரித்த கோழி மாதிரி!!!!! கையும் இல்லாமல் கழுத்துமில்லாமல் ஒரு ஆடை வேறு ச்சே... கருமம்...



அதன் பிறகு கணமும் தாமதியாமல் வினி அவர்களை நெருங்கினாள்.அவள் நெருங்கும் போதே அந்த பெரிய மனிதர் ஜெகநாதனிடம் என்ன ஜெகா எப்போது கல்யாணச் சாப்பாடு போடப் போகிறாய்??? பையனுக்கும் வயசாகிறது இல்லையா??





ஆமாம்பா எனக்கும் போடத்தான் ஆசை.பையன் தான் பிடிகொடுக்க மாட்டேன் என்கிறான்.எப்போது கேட்டாலும் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறான்.



அட என்னப்பா நீ பையனிடம் கேட்டால் அவன் ஆமாம் பண்ணி வையுங்கள் என்றா சொல்லுவான்.நீ பெண்ணைப் பார்த்துவிட்டு கட்டிக்கொள் என்றால் தாலியைக் கட்டப் போகிறான்.



அவரின் பேச்சுக்கு ஜெகநாதன் லேசாக சிரித்து வைத்தார்.அவர்கள் வீட்டில் பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம்.பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டோம் என்று கூறினால் அந்த அறுவை அதற்கும் ஏதாவது சொல்லும் என்பதால் வெறும் சிரிப்புடன் நிறுத்திக்கொண்டார்.



அவர் சிரிப்பை தான் சொன்னதை அவர் அங்கீகரித்ததற்கான அடையாளமாய்க் கொண்டு உன் பையனுக்கு பொண்ணு பார்க்கும் போது என்னையும் நினைவு வைத்திருப்பா.என்னிடமும் ஒரு பொண்ணு இருக்கிறாள். என் சொத்து முழுதும் அவளுக்குதான்.என்றார்.



அவர்களை நெருங்கிய பூவினிக்கு அவர்கள் பேச்சு முழுதும் கேட்டது.அந்த மொட்டையை முறைத்தபடி பூவினி அவர்களை நெருங்கவும் அவளைக் கண்டுகொண்ட ஜெகநாதன் வினி இங்கே வாடா என்று அழைத்தார்.இவள் அருகில் செல்லவும் இவள் பெயர் செம்பூவினி.என் தங்கை பெண்.வெளிநாடு சென்று படித்துவிட்டு இப்போது தான் திரும்பி வந்தாள்.என்று அறிமுகப்படுத்தினார்.அந்த அறிமுகத்தில் வெளிநாடு சென்று படித்துவிட்டு வந்தாலும் எங்கள் குடும்பத்துப் பெண் எப்படி இருக்கிறாள் பார்த்தாயா என்று கர்வம் மறைந்திருந்தது.





வேறு வழியின்றி வினி வணக்கம் சொல்ல சுண்டிப்போன முகத்துடன் தானும் வணக்கம் சொன்னார்.அதுவரை நிலவனின் அருகில் நின்று வழிந்து வழிந்து பேசிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் முகமும் தேவதையாய் மிளிர்ந்த வினியைக் கண்டு சுருங்கியது. அவளது பொறாமையை மேலும் தூண்டுவது போல் நிலவனின் அருகே சென்று அத்தான் கொஞ்சம் வருகிறீர்களா என்று உரிமையுடன் அழைத்தாள்.



அருகே ஜெகநாதன் இருந்ததால் மறுக்க முடியாமல் அவர்களிடம் நாசுக்காய் மன்னிப்பு வேண்டிவிட்டு அவளுடன் சென்றான்.அவர்கள் பேச்சு மற்றவர்களின் காதில் விழாத அளவு தூரம் சென்றதும்



எதற்கு அழைத்தாய்?? என்றான் மொட்டையாய்.





ஏன் நான் அழைத்ததால் உங்கள் இனிமையான தருணம் கெட்டுவிட்டதா?? என்றாள் வினி கடுப்புடன்.



புரிந்தால் சரி என அலட்சியமாக அவன் பதில் கொடுக்கவும்

அவன் அருகில் வந்தவள் என்ன கொழுப்பா இனி அந்த பெண் உங்கள் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் மீறி வந்தால் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது என்று மிரட்டலாய் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக அகன்றாள்.





அவளின் இந்த மிரட்டலை நிலவன் எதிர்பார்க்கவில்லை.கண நேரம் திகைத்து நின்றவன் இதழ்களில் அவனையும் மீறி ஒரு முறுவல் மலர அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.





அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவன் இதழ்களில் மலர்ந்த முறுவல் அதுவரை அவர்களையே வெறித்துக்கொண்டிருந்த கண்மணியின் விழிகளில் பட்டு அவர் வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்தது.





தோட்டத்தில் விழா நடந்துகொண்டிருக்க நிலவன் தனிமை தேடி வீடு நோக்கி நடந்தான்.



வினி அவனை மிரட்டியதை நினைக்க நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் ஒரு வார்த்தை உரத்து சொன்னால் மிரண்டு விழிக்கும் அவள் அவனையே மிரட்டுகிறாளாமா!!!!!! என்ன நடக்கும்னு அவளுக்கே தெரியாதாம்!! ஹ ஹ.........பொறாமை..



அவனின் உற்சாகம் பாதியில் நிற்க மனம் வேதனையைச் சுமந்துகொண்டது. உன்னுடைய இந்த பொறாமையையும் உரிமை உணர்வையும் அதட்டலையும் அனுபவிக்க நான் கொடுத்துவைக்கவில்லையடி. உன்னுடைய இந்த உரிமையான பேச்சு எதன் விளைவென்று எனக்கு தெரியும்.ஹ்ம்ம்........மறுபடியும் உன்னை காயப்படுத்தப்போகிறேன்!!!!!!



கண்மூடி அமர்ந்திருந்தவன் எதிரே அசைவுணர்ந்து நிமிர்ந்து பார்த்தான்.எதிரே கோபத்துடன் கண்மணி நின்றிருந்தார்.ஒரு வெற்றுப்பார்வையுடன் என்ன என்பதாய் அவரைப் பார்க்கவும்



உன் மனதில் நீ என்னதான்டா நினைத்துக்கொண்டிருக்கிறாய்???? உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னால் புரியாதா?? ஓராயிரம் தடவை நீ யார் என்பதை நினைவுபடுத்தி என் பேத்தியை விட்டு விலகி இரு இல்லாவிட்டால் என்ன நடக்கும்.உன் காதல் இந்த குடும்ப ஒற்றுமையை எப்படிப் பாதிக்கும் என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டுமா???? அன்று நான் உன் பிறப்பைப் பற்றி நீ ஒரு அநாதை என்பதைப் பற்றி கூறிய பின்பு இந்த நான்கு வருடம் ஒழுங்காகத்தானே இருந்தாய்??? இப்போதென்ன மறுபடியும் அவள் புறம் சாய்கிறாய்?? மீண்டும் அவளை அருகில் கண்டதும் உன் மனமந்தி தடுமாறுகிறதோ?? இதோ பார் நான் முன்பே சொன்னது போல உன்னைப் போல ஒரு அனாதைக்கு ஒரு போதும் என் மகன் தன மகளைக் கட்டித் தர மாட்டான்.என் பேரன் மித்திரன் தான் வினிக்கு கணவன்.என் மகனும் அதற்கு சம்மதித்துவிட்டான்.கூடிய சீக்கிரமே அவர்கள் திருமணம் நடக்கும். அதனால் ஒழுங்காக முன்பு போல நீயுண்டு உன் வேலையுண்டு என்று விலகியிரு.இல்லாவிட்டால்..........



இல்லாவிட்டால்???????? நிலவனின் அழுத்தமான கேள்வியில் கண்மணியின் வாய் அடைத்தது.



அவர் எப்பவும் போல் அவனின் பிறப்பைக் குறித்துப் பேசினால் அடங்கிப் போய்விடுவான்.மறுபடியும் வினியின் புறம் கூட திரும்ப மாட்டான் என்று தான் எண்ணினார்.என்று வினி அவனின் அலுவலகத்துக்கு அவனோடு செல்கிறாள் என்பது தெரிந்ததோ அன்றே அவனை மீண்டும் எச்சரித்து வைக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் அவன் மறுநாளே கொடைக்கானல் கிளம்பிவிட்டான்.இன்று மீண்டும் வினியும் அவனும் அருகே நின்று பேசியதைக் கண்டவர் உள்ளம் கொதித்தது.அவர்கள் என்ன பேசினார்கள் என்று அவருக்கு தெரியாது தான்.ஆனால் அவர்கள் பேசுவதே அவருக்கு பிடிக்கவில்லை.அதுவும் வினியின் பேச்சை ரசித்தாற்போன்ற அவனின் முறுவல் அவரின் முடிவை உறுதிப்படுத்த அவன் வீட்டுக்கு செல்வதைக் கவனித்து அவனை மிரட்ட வந்தார்.



ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார்.இவர் மிரட்டி வைக்க அவன் ஒன்றும் சிறு பிள்ளை அல்ல.வளர்ந்த கம்பீரமான ஆண்மகன்.அத்தனை தொழில்களையும் திறம்பட நடத்துபவன்.அத்தோடு எந்த ஒரு விடயத்தையும் முதன் முதல் அறியும் போது தான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும்.அதையே மறுபடி மறுபடி கேட்க நேர்ந்தால் முதல் தடவை அளவுக்கு அது பாதிக்காது.



நிலவனும் அதே நிலையில் தான் இருந்தான்.அவர் முதல் தடவை அந்த ரகசியத்தை உடைத்தபோது அவனே உடைந்து போய்விட்டான் தான்.ஆனால் மீண்டும் மீண்டும் அவர்கள் அதையே கூறி மிரட்டுவது போல பேசவும் அவனுக்கும் கோபம் வந்தது.



சொல்லுங்கள் இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்?? நான் ஒரு அநாதை என்ற உண்மையை வினியிடம் கூறுவீர்களா?? அந்த ஒரு காரணத்துக்காக அவள் என்னை வெறுப்பாள் என்றா நினைக்கிறீர்கள்?? ஹ்ம்ம்........நீங்கள் அந்தளவு முட்டாள் இல்லை என்று நினைக்கிறேன் என்று அலட்சியமாக கூறியவன்



நான் நினைத்தால் இப்போதே என் வினியை தூக்கிக் கொண்டு போய் மணம் முடிப்பேன்.அதை தடுக்கும் சக்தி இங்கு யாருக்கும் கிடையாது.அப்படி செய்யாமல் என்னைத் தடுப்பது எது தெரியுமா?? உங்கள் மிரட்டலோ வேறு எதுவுமோ இல்லை.என் மனம்!!!!!ஆம் என் மனம் தான்!!!!



இந்த அனாதையை சொந்தப் பிள்ளைக்கும் மேலாய் பாசத்தைக் கொட்டி போற்றி வளர்க்கும் இந்த குடும்பத்தின் மீது நான் கொண்ட பாசம் தான் என்னைத் தடுக்கிறது.இந்த குடும்பத்திற்கு ஒரு சிறு துன்பம் கூட வராமல் காக்க வேண்டும் என்ற என் மன வைராக்கியம் தான் என்னைத் தடுக்கிறது. இவர்களுக்கு நான் பட்ட நன்றிக்கடன் தான் என்னைத் தடுக்கிறது.





இப்போது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்.உங்கள் ஆசைக்கு ஒருபோதும் நான் குறுக்கே நிற்கமாட்டேன். இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு வினியின் மகிழ்ச்சியும் எனக்கு முக்கியம்.அவள் நன்றாக இருக்க வேண்டும்.உங்கள் பேரனை இதுவரை பார்த்த அளவில் அவன் உங்களைப் போல இல்லை என்று புரிகிறது.வினி மேல் பாசம் உள்ளவனாயும் தெரிகிறான்.வினி மகிழ்ச்சியாக இருந்தால் அது போதும் எனக்கு.



தயவுசெய்து இனிமேல் என்னை மிரட்டுகிறேன் பேர்வழியென்று இப்படி சின்னத்தனமாய் நடந்துகொள்ளாதீர்கள்.முதல் தடவை அடிபடும் போது தான் பயங்கரமாய் வலிக்கும்.அடிக்கு மேலே அடி விழ விழ மரத்துப் போகும். என் மனமும் இப்போது அந்த நிலையில் தான் இருக்கிறது.என்று மரத்த குரலில் பேசி முடித்தவன் அந்த இடத்தைவிட்டு வேகமாக நகர்ந்தான்.



கண்மணி சற்று நேரம் அசையாமல் நின்றார் அவருக்கு ஏனோ அவன் முன்னிலையில் தான் மிகவும் தாழ்ந்துவிட்டது போல் தோன்றியது.சோர்ந்த நடையுடன் அவர் வாசலை நெருங்கவும் அதுவரை திரைசீலையின் மறைவில் இருந்து அவர்களின் உரையாடலை அதிர்ச்சியுடன் கேட்டபடி இருந்த மித்திரனும் தாரணியும் மேலும் நன்றாக மறைந்து கொண்டனர்.



நிலவனை பின் தொடர்ந்து கண்மணி வீட்டை நோக்கி செல்வதை எதேச்சையாக கண்ணுற்ற மித்திரனுக்கு ஏதோ தோன்றவும் அவனும் கண்மணி அறியாமல் அவர்களைப் பின் தொடர்ந்தான்.உள்ளே சென்ற கண்மணி நிலவனிடம் பேசத் தொடங்கவும் அவன் திரைச் சீலையின் மறைவுக்குள் ஒளிந்து கொண்டு அவர்கள் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினான்.அச் சமயத்தில் வீட்டில் இருந்து ஏதோ பொருள் எடுத்துப் போவதற்காக தாரணி அங்கு வரவும் பேசிக்கொண்டிருந்தவர்களின் கவனத்தைக் கவராமல் அவளையும் தன கை வளைவுக்குள் இழுத்து திரைச்சீலையின் மறைவுக்குள் நிறுத்திக்கொண்டான்.



எதிர்பாராமல் மித்திரன் இழுத்ததால் திகைத்துக் கத்தப் போனவளின் வாயைப் பொத்தி திமிறியவளின் தோளை அணைத்து கண்களால் உள்ளே பார்க்குமாறு சமிக்ஞை செய்தான்.அதன் பிறகே அவன் சொல்ல வருவதை புரிந்து கொண்டு உள்ளே பார்த்தவள் கண்மணியின் பேச்சைக் கேட்டு திகைத்துப் போனாள்.



கண்மணி வாசல் தாண்டி வெளியே செல்லவும் அதுவரை மறைவிலேயே நின்ற தாரணி கண்களில் நீர் வழிய நிமிர்ந்து மித்திரனைப் பார்த்தாள்.கைவளைவில் இருந்த தாரணியின் அசைவை உணர்ந்து தன்னிலைக்கு மீண்ட மித்திரனும் அவளைத்திரும்பிப் பார்த்தான்.அவன் முகம் இறுகியிருந்தது.



தாரணி அவன் கையை விலக்கி வேகமாய் வீட்டினுள்ளே செல்ல முயற்சிக்கவும் எங்கே போகிறாய் என்றான் இறுகிய குரலில்.



உடனே அத்தானைப் பார்த்துப் பேச வேண்டும்.அவர் எங்கள் எல்லாருக்கும் எவ்வளவு முக்கியம் என்று கூறவேண்டும்.இன்னும்........என்று தவிப்புடன் பேசியவளை



வேண்டாம்...என்ற மித்திரனின் ஒற்றை வார்த்தை தடுத்தது.அவளின் தவிப்பு கோபமாக மாற



என்ன சொல்கிறீர்கள்???? உங்கள் பாட்டி பேசிய பேச்சைக் கேட்டீர்கள் தானே?? ச்சே அவரெல்லாம் ஒரு பெரிய மனுசியா???அத்தான் மனதை இப்படி உடைத்துவிட்டார்களே?? இதுவரை அத்தான் பற்றிய உண்மையை அவர்கள் பெற்ற பிள்ளைகள் எங்களிடம் கூட வீட்டுப் பெரியவர்கள் சொல்லவே இல்லையே!! அவ்வளவு அன்பான கண்ணியமான எங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு உறவினரா..ச்சே......நினைக்கும் போதே வெட்கமாக உள்ளது.



போதும் தாரணி



ஏன்?? ஏன்?? அவரைத் திட்டுவதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையோ?? அதுசரி என்ன இருந்தாலும் அவர் உங்கள் பாட்டி ஆயிற்றே!!!



ஸ்ஸ்ஸ் தரு உன் கோபம் எனக்கு புரிகிறது.உன் கோபம் நிஜாயமானதும் கூட.ஆனால் இப்போது நிலவனிடம் எதுவும் பேசாதே.எப்படியோ அவன் அனுபவித்த துன்பம் அனுபவித்தது தான்.இப்போது நீ போய் பேசுவதால் எதுவும் மாறப் போவதில்லை.இந்த உண்மை உனக்கு தெரியும் என்பதை இப்போதைக்கு யாரிடமும் காட்டிக்கொள்ளாதே.



என் பாட்டி செய்தது தப்பு தான். அவர் செய்தது எவ்வளவு தவறான விடயம் ஏன் முட்டாள்த்தனமானதும் கூட என்பதை நான் அவருக்கு புரிய வைப்பேன். என் பாட்டி செய்த தவறை நான் திருத்துவேன்.அதுவரை பொறுத்திரு. என்று இறுகிய குரலில் கூறியவன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.