• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 35

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
இதழ்:-35



அவன் அறையின் வாசலில் நின்றுகொண்டிருந்த வினியின் முகத்தில் தென்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவையே அவள் தான் பேசியதை கேட்டுவிட்டாள் என்பதை மித்திரனுக்கு உணர்த்தியது.



அதைக் கண்டு முதலில் அதிர்ந்தாலும் அது ஒருவிதத்தில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது.எப்படியோ இது அவளுக்கு தெரிந்தே ஆகவேண்டிய விடயம் தானே!! அவளிடம் எப்படி இதை கூறுவது என்று சிந்தித்தபடி இருந்தான்.இப்போது அவளுக்கே அந்த உண்மை தெரியவந்துவிட்டது.ஓர் நிம்மதிப் பெருமூச்சை எடுத்துவிட்டவன் உள்ளே வா வினி என்று அழைத்தான்.





அமைதியாக உள்ளே வந்தவள் அவன் முகம் பார்த்து நடுங்கிய குரலில் இ...இப்போது அத்தையிடம் நீ பேசியது எல்லாம் உ..உண்மையா மித்து??? என்றாள்.



ம்ம்ம்..உண்மைதான் வினி என்றான் மித்திரன் வருந்திய குரலில்.



உனக்கு ....உனக்கு இது எப்படித் தெரிந்தது?? என்றாள் அழுகையை உள்ளடக்கிய குரலில்





மித்திரன் பொய் சொல்ல மாட்டான் என்று அவளுக்கு தெரிந்தாலும் அவளின் மனம் அவன் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது.எப்படி இது சாத்தியம்??? அவளின் அத்தான் எப்படி ஒரு அநாதையாய் இருக்க முடியும்??? அப்படி எண்ணிப் பார்க்க கூட அவளால் முடியவில்லையே! நிலவனின் விலகலுக்கு அவள் எத்தனையோ காரணங்களை எண்ணிப்பார்த்ததுண்டு.ஆனால் கனவிலும் கூட இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்ததில்லையே!!









அவளின் நிலை புரிந்தவன் போல அவளை அங்கிருந்த மெத்திருக்கையில் அமரச் செய்தவன் தானும் அமர்ந்து தமிழின் பிறந்ததினத்தன்று நிலவனின் வாயாலேயே அந்த உண்மையை தான் அறிந்துகொண்டதை அவளுக்கு விளக்கினான்.



அவன் சொல்லச் சொல்ல கண்களில் இருந்து கண்ணீர் வழிய விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள் வினி.அவள் நெஞ்சே வெடித்துவிடும் போல் வலித்தது.





அவள் அத்தான் ஒரு அநாதை.இந்தக் குடும்பத்திற்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை.கடவுளே இதை நினைக்கும் போது எனக்கே இப்படி வலிக்கிறதே.இந்த உண்மை தெரிந்தபோது அவள் அத்தான் என்ன பாடுபட்டிருப்பான். எப்படித் தவித்திருப்பான்!!!!!!



நெஞ்சு நிறைய என் மேல் நேசத்தை சுமந்துகொண்டு எங்கே அந்த நேசத்தை வெளிப்படுத்தினால் இந்த குடும்பத்தின் ஒற்றுமையை அது குலைத்துவிடுமோ என்று பயந்து காதலிப்பவளையே வெறுப்பது போல் நடித்து.....தன துன்பத்தை யாரிடமும் கூற முடியாமல் மனதிலேயே புதைத்து வெளியே சிரிப்பதாய் நடித்து..............என்ன ஒரு கொடுமை.அவனின் துன்பத்தை தனதாய் உணர்ந்த வினியின் மனம் தவித்து துடித்தது.



நெஞ்சின் பாரம் தாங்காமல் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள்.



அவளின் நிலை அவனுக்கு புரிந்தது.சற்று நேரம் அவளை அழவிட்டவன் பின் மென்மையாக அவள் தலையை வருடி. உன் நிலை எனக்கு புரிகிறது வினி.எனக்குமே இது சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சிதான்.ஆனால் நீ ஒன்றை எண்ணிப்பார் இத்தனை நாட்கள் அவனின் விலகலுக்கு காரணம் தெரியாமல்.



தவித்தாய்.இப்போது அவனின் செயல்களுக்கு காரணம் தெரிந்துவிட்டது.





இனி எப்படி உன் அத்தானை உன்னிடம் கொண்டு வருவது. அவன் துன்பத்தை எப்படித் தீர்ப்பது என்று யோசிடா.இவ்வளவு நாளும் நீங்கள் இருவரும் அனுபவித்த துன்பமே போதும். இனிமேல் மகிழ்ச்சி மட்டும் தான் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.என்றான் கனிந்த குரலில்.





மித்திரனின் பேச்சு வினியின் மனதையும் சற்றுத் தெளிய வைத்தது.கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள்.

நான் என்ன பண்ணட்டும் மித்து?? இப்போவே அத்தானிடம் சென்று பேசட்டுமா??





ம்ஹும்..வேண்டாம் வினி.நீ சென்று என்ன பேசினாலும் நிச்சயம் அவன் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.அவன் மனதில் அவன் ஒரு அநாதை.அதனால் அவனை தன மருமகனாக உன் அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார்.அப்படி அவன் உன்னைத் திருமணம் செய்ய நினைத்தால் அதனால் இந்தக் குடும்பத்தின் ஒற்றுமையே சிதைந்துவிடும் என்ற எண்ணத்தை பாட்டி ஆழமாகப் பதிய வைத்திருக்கிறார்கள்.



அவனைப் பொறுத்தவரை தன மகிழ்ச்சியை விட இந்தக்குடும்பத்தின் மகிழ்ச்சிதான் முக்கியம்.இந்த குடும்பத்திற்கு தன்னால் சிறு துன்பம் கூட வந்துவிடக்கூடாதென்று நினைக்கிறான்.



அதனால் அவன் மனதில் என்னதான் காதல் இருந்தாலும் அவன் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டான்.அது அநாதையான தன மீது இத்தனை பாசத்தைப் பொழியும் இந்தக் குடும்பத்திற்கு தான் செய்யும் துரோகம் என்று எண்ணுகிறான்.



இதற்கு என்ன தான் தீர்வு மித்து?? இதற்கு மேலும் என்னால் அத்தானைவிட்டு இப்படி விலகி இருக்க முடியாதுடா.அவரின் காயங்கள் அத்தனைக்கும் மருந்தாக நான் அவர் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது.







வினி ஒன்று சொல்லு?? பாட்டி சொன்னது போல நிஜமாகவே மாமா அவனை அநாதை என்று மறுப்பார் என்று எண்ணுகிறாயா??





எனக்கு அப்படித் தோன்றவில்லை மித்து.தான் பெற்ற மகளான என்னிடம் கூட அத்தானைப் பற்றிய உண்மையைக் கூறாமல் ரகசியத்தைக் கட்டிக்காப்பவர் எப்படி அப்படிச் செய்வார்?? அதோடு அப்படி எண்ணுபவராய் இருந்தால் சிறுவயது முதலே என்னை அத்தானோடு பழக அனுமதித்திருப்பாரா சொல்லு.





ம்ம் நீ சொல்வது சரி தான் வினி.அவனைக்குறித்து மாமா பேசும் போது கவனித்திருக்கிறேன்.அவர் குரலில் அப்படி ஒரு பெருமை வழியும். அத்தோடு இந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளிடம் கூட அவன் பற்றிய உண்மையை கூறாமல் இந்த குடும்பத்தின் மூத்த வாரிசாயே அவனை மதிப்புடன் நடத்துகிறார்கள்.இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது பாட்டி சொன்னது போல் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.பாட்டி அவனிடம் சொன்னது எல்லாமே உன்னையும் அவனையும் பிரிப்பதற்கு பாட்டி கையாண்ட யுக்தி.





ஆனால் ஏன் மித்து பாட்டி இப்படிச் செய்தார்கள்? என்றாள் தாள மாட்டாமல்.



ஏன் என்று மித்திரன் விளக்கவும்





வினியின் முகம் கோபத்தில் ஜொலித்தது.

என்ன முட்டாள்த்தனம் மித்து இது.அவர்கள் பிள்ளைகள் காலத்துக்கும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசைக்காக எங்கள் வாழ்க்கையை கெடுப்பார்களா??? எங்களுக்கென்று மனசு இல்லையா?? அதில் ஆசைகள் இல்லையா?? அவர்கள் ஆசைக்காக எங்கள் ஆசைகளை அழிப்பார்களா?? இவ்வளவு சுயநலமா அவர்களுக்கு ச்சே.அவர்களை என் பாட்டி என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.





வினியின் கோபத்தை ஆமோதிப்பவன் போல சற்று நேரம் மௌனமாக இருந்தவன்.அவர்கள் செய்தது பெரிய தப்புத் தான் வினி.மூன்று பேருடைய வாழ்க்கையோடு விளையாடி இருக்கிறார்கள். அவர்கள் தப்பை சீக்கிரமே உணர்வார்கள் என்றான்.



ஹ்ம்ம் இவ்வளவு திட்டம் தீட்டி தன எண்ணத்தை நிறைவேற்ற முயல்பவர்கள் தன தவறை உணருவார்களா என்ன!!!



திட்டம் தீட்டி தப்பு செய்பவர்களை அதேபோல திட்டம் தீட்டி நாம் அவர்களின் தப்பை உணரவைக்க முடியாதா என்ன??





என்ன சொல்கிறாய் மித்து??



சொல்கிறேன் என்றவன் தீவிரமான முகத்தோடு ஏதோ கூறினான்.முதலில் குழப்பத்தோடு அவன் முகம் பார்த்து ஏதோ மறுத்துக் கூறியவள் பின் அவன் பேச்சில் தெளிந்தவளாய் தலையசைத்து சம்மதித்தாள்.