• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 38

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:-38



வழக்கம் போல தன் கதிர்க் கரங்களால் நிலமகளை வெட்கப்படச் செய்து சிவக்க வைத்தவாறே மெல்ல மெல்ல உதயமாகினான் ஆதவன். அன்று காலையிலேயே வினி வீடு களைகட்டியிருந்தது.அன்று தான் வினிக்கும் மித்திரனுக்கும் நிச்சயம்.



சிறிய அளவிலேயே விழா ஏற்பாடுகள் நடைபெற்ற போதிலும் அனைவர் மனத்திலும் விழா நாளுக்கேயுரிய உற்சாகப் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது.



காலை ஒன்பது தொடக்கம் பத்து மணிவரை நல்ல முகூர்த்த நேரம் என்பதால் அந்த நேரத்திலேயே நிச்சயம் செய்து மோதிரம் மாற்றிவிடலாம் என்று தீர்மானித்திருந்தனர்.



வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் நிச்சயத்திற்குரிய ஏற்பாடுகளைக் கவனிப்பதிலும் பெண்கள் விருந்துச் சமையலிலும் ஈடுபட்டிருந்தனர்..



கண்மணி உற்சாகத்தில் காற்றில் மிதந்தார்.அவர் முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கி வழிந்துகொண்டிருந்தது.அவரின் ஆசை நிறைவேறும் தருணமல்லவா அது!!!!!!



தாரணியும் தமிழும் பூவினிக்கு அலங்காரத்தில் உதவினர்.நிச்சயத்துக்கான நேரம் நெருங்க கல்யாணியும் மேனகாவும் போய் வினியை அழைத்து வந்தனர்.



மித்திரன் பட்டு வேட்டி சட்டை அணிந்து கம்பீரமே உருவானவனாக பையன்களுடன் பேசியவாறே கூடத்தில் அமர்ந்திருந்தான்.அவன் முகத்திலும் ஏதோ ஓர் இறுக்கம் குடிகொண்டிருந்தது.



அவனுக்கு எதிர் மெத்திருக்கையில் முள்மேல் அமர்ந்திருப்பவனின் அவஸ்தையோடு அமர்ந்துகொண்டு கையில் வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியில் ஏதோ நோண்டியவாறே தலை குனிந்து அமர்ந்திருந்தான் நிலவன்





அப்போது மாடியில் இருந்து விண்ணுலக தாரகை என கீழே இறங்கினாள் பூவினி. அவள் பார்வை உணர்ச்சியற்று நிலவனை தீண்டியது. தன்னை மீறி அவளை நிமிர்ந்து நோக்கிய நிலவன் சிறு தடுமாற்றத்துடனும் குற்றவுணர்ச்சியுடனும் பார்வையை திருப்பிக் கொண்டான்.



அனைவரும் கூடத்தில் கூடியிருக்க கூடத்தின் மூலையில் மேசைமேல் இருந்த கணனித் திரையின் பின்னே மகனின் நிச்சயத்தைப் பார்க்க கங்காவும் அவர் கணவனும் அமர்ந்திருந்தனர்.





அனைவரும் தயாராக அமர குமாரசாமி நான்கு மூலையிலும் மஞ்சள் பூசப்பட்ட நிச்சய ஓலையை எடுத்து வாசிக்க தொடங்கினார்.





இன்னாருடைய மகனும் பேரனும் இன்ன கோத்திரத்தைச் சேர்ந்த என்று மித்திரனின் வம்சாவளியைப் படித்தவர் அடுத்து வினியினதை படிக்க தொடங்கவும் நிலவன் நெஞ்சையடைக்கும் வேதனையுடன் அதற்குமேல் அங்கு இருக்க முடியாதவனாய் முகம் இறுக சட்டென அங்கிருந்து நகர முற்பட்டான்.அச் சமயத்தில்





ஒரு நிமிடம் தாத்தா என்ற மித்திரனின் குரல் அழுத்தமாக குமாரசாமியை இடைமறித்தது.நிலவனின் கால்களும் அவன் குரலின் அழுத்தத்தில் வேரோடியது போல் நின்றது.





அனைவரும் திகைப்புடன் மித்திரனைப் பார்க்கவும் வினியிடம் ஓர் பார்வையைச் செலுத்தி என்னை மன்னித்துவிடு வினி என்றவன்.மற்றவர்களைப் பார்த்து எனக்கு வினியுடனான இந்த நிச்சயத்தில் விருப்பம் இல்லை என்றான் உறுதியான குரலில்.





அனைவரும் ஒரு நொடி அதிர்ந்து மௌனித்தனர்.நிலவனும் அதைக் கேட்டு அதிர்ந்தாலும் அவன் மனதின் ஓரம் சிறு இன்பச் சாரலும் வீசாமல் இல்லை.அதில் யார் அதிகம் அதிர்ந்தது என்று சொல்ல முடியாது. அனைவரும் அதிர்ந்து ஏன் என்ற கேள்வியைப் பார்வையில் தாங்கி நிற்க முதலில் சுதாரித்த கண்மணி





மித்துக்கண்ணா என்னடா சொல்கிறாய்?? இப்போது நிச்சயம் செய்வது உனக்கு பிடிக்கவில்லையா?? என்றார் குழப்பத்துடன்.



அவர் பேரனோ இப்போது மட்டும் இல்லை பாட்டி இனி எப்போதுமே இதில் எனக்கு விருப்பம் இல்லை.என்றான் முகத்தைச் சுழித்தபடி அலட்சியமாக.



அவன் எதிர்பார்த்தது போலவே அவனின் பேச்சு கண்மணியின் கோபத்தைக் கிளப்ப



ஏய் என்னடா உளறுகிறாய்?? உன்னிடம் கேட்காமலா இந்த ஏற்பாட்டைச் செய்தோம்?? முதலிலேயே எல்லாம் பேசி நீ சம்மதம் வினியைப் பிடித்திருக்கிறது என்று சொன்னபிறகு தானே இந்த ஏற்பாட்டையே செய்தோம்.இப்போது வந்து இப்படி உளறுகிறாய்?? என்றார் கட்டுக்கடங்காத கோபத்துடன்





என்னை மன்னித்துவிடுங்கள் பாட்டி.ஏனோ எனக்கு ஆரம்பத்தில் இருந்தே வினி மீது அப்படி ஒரு எண்ணம் எழவே இல்லை.ஆனால் நீங்கள் வினிக்கும் எனக்கும் திருமணம் செய்வதில் மிகவும் ஆர்வமாய் இருந்தீர்கள்.அப்போது என் மனதிலும் வேறு யாரும் இல்லை.சரி எப்படியும் நம்மஊர்ப் பெண்ணைத் தானே திருமணம் செய்யப் போகிறோம்.அது நன்கு தெரிந்த வினியாக ஏன் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இதற்கு சம்மதித்தேன். வினிக்கும் எனக்கும் திருமணம் நடந்தால் நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவீர்கள்.அதோடு திருமணம் என்று ஆகிவிட்டால் என் மனதிலும் அவள் மேல் ஈர்ப்பு வந்துவிடும் என்று எண்ணித் தான் இந்த நிச்சயத்துக்கு சம்மதித்தேன். ஆனால்........





என்றவன் தாரணியை ஓர் பார்வை பார்த்தான் அவள் முகம் வெளுத்து வேர்த்துக்கொட்ட படபடப்புடன் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.அதைக் கண்ட அவன் கண்களில் சட்டென ஒரு குறும்புச் சிரிப்பு மின்னி மறைய அதை மறைத்து முகத்தை இயல்பாக்கி ஆனால் எப்போ இந்த நிச்சயத்துக்கு சம்மதித்தேனோ அன்றிலிருந்து என் மனதுக்குள் ஒரு சலனம்.தமிழின் பிறந்த நாள் விழாவின் போது தாரணியுடன் பழக நேர்ந்ததில் எனக்கு அவள் மேல் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது.நான் அப்போது அதைப் பெரிதாகக் கருதவில்லை.ஆனால் வினியுடனான என் நிச்சயத்துக்கு சம்மதித்த நாளில் இருந்து என் மனதுக்குள் தரு மேல் இருந்த ஈர்ப்பு மெல்ல மெல்ல வலுப்பெற்று காதலாக மாறி விட்டது.



என்னால் அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனைவியாக எண்ணிக்கூடப் பார்க்க முடியாது என்பதை நான் பூரணமாக உணர்ந்துகொண்டேன்.அதோடு அவள் மனதிலும் நான் இருக்கிறேன் என்ற உண்மையும் சமீபத்தில் தான் எனக்கு தெரிய வந்தது.இதற்கு மேலும் என்னால் என் மனதை மறைத்து வைக்க முடியவில்லை பாட்டி. அதனால் தான் இப்படி ஒரு சூழ்நிலையில் எல்லோரையும் நிறுத்திவிட்டேன் எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். என்றான் குற்றவுணர்ச்சி சிறிதுமற்ற குரலில்.



அவன் பேசி முடிக்கவும் அதுவரை கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென்று வழிய அதிர்ச்சியுடன் அவன் பேச்சைக் கேட்டபடியிருந்த பூவினி மயங்கிச் சரிந்தாள். அதுவரை வினியின் கண்ணீரைக் கண்டு இதயம் வலிக்க செய்வதறியாது திகைத்துப்போய் நின்ற நிலவன் அவள் மயங்கி சரியவும் வினும்மா என்ற சிறு கூவலுடன் ஓர் எட்டு எடுத்து வைத்தான். அதற்கிடையில்



மேகலாவும் சாந்தாவும் வினிக்குட்டி என்று பதட்டத்துடன் அவளிடம் விரைந்திருந்தனர்.அனைவரும் பதட்டத்துடன் வினியைப் பார்க்க மேனகாவோ



அடிப்பாவி....எங்கேயிருந்துடி நீ என் வயிற்றில் வந்து பிறந்தாய்.இந்த குடும்பத்தின் ஒற்றுமையை சிதைக்கவென்றே பிறந்தியாடி பாவி... என்று ஆத்திரத்துடன் தாரணியை திட்டியபடியே அவளை அறைய கை ஓங்கினார்.ஓங்கிய அவர் கை அவள் கன்னத்தில் இறங்கும் முன்பே மித்திரனின் கரம் தாரணியைப் பற்றி தன்னருகே இழுத்து நிறுத்தியது.மித்திரன் அவர் முன்னே வந்து ப்ளீஸ் ஆன்டி என்ன தண்டனை என்றாலும் எனக்கு கொடுங்கள்.தவறு செய்தது முழுதும் நான் தான் என்றான். மேனகா வெறுப்புடன் அவனை முறைக்கவும்



அதுவரை ஆத்திரத்துடன் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த நாகநாதன் எங்கள் குடும்பத்தைக் குலைக்க வந்த கோடரிக் காம்பே நீ தான் டா என்றபடியே மித்திரன் மீது பாய்ந்துவிட்டார்.அவன் சட்டைக் கொலரைக் கொத்தாகப் பற்றிய நாகநாதனை ஜெகநாதன் மிகவும் சிரமப்பட்டு விலக்கியதோடு கொஞ்சம் பொறு நாதா எதையும் பொறுமையாக விசாரிப்போம் என்றார் அமைதியாக.



நாகநாதனோ இன்னும் என்னத்தை விசாரிப்பதண்ணா. அன்றே பார்த்தேன் இருவரும் சிரித்துப் பேசியபடி தோட்டத்தில் இருந்து வந்ததை.இருந்தும் எங்கள் வீட்டுப் பெண் இப்படி தமக்கைக்கே துரோகம் செய்ய மாட்டாள் என்று நம்பினேன். ஆனால் இவள் இப்படி என் நம்பிக்கையை குலைத்துவிட்டாளே.இப்படி ஒன்று நடக்கும் என்று தெரிந்திருந்தால் அன்றே இவளை வெட்டிப் போட்டிருப்பேன் அண்ணா என்று எகிறினார்.



தம்பியின் கரத்தை இறுகப் பற்றி அழுத்தி அமைதியாய் இரு நாதா என்று சொன்ன தமையனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று நாகநாதனின் கோபத்தை சற்று மட்டுப்படுத்த சிறு வியப்புடன் தமையனின் முகத்தைப் பார்த்தார்.அண்ணனின் விழிகளில் என்ன தெரிந்ததோ அவர் கோபம் குறைந்து அந்த இடத்தை குழப்பம் ஆக்கிரமித்தது.





அதற்கிடையில் அனைவரும் பரபரப்புடன் நீர் தெளித்து வினியின் மயக்கத்தை தெளிவித்தனர்.குமாரசாமியும் வள்ளியம்மையும் செய்வதறியாது கலங்கிப் போய் மெத்திருக்கையில் துவண்டிருந் தனர். குமாரசாமி வேதனையுடன் நடப்பதைப் பார்த்திருக்க வள்ளியம்மையோ ஏன் கடவுளே எங்கள் குடும்பத்தை இப்படிச் சோதிக்கிறாய்.காலம் போன கடைசியில் நான் இதைத்தானா பார்க்க வேண்டும். என் குடும்பம் எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தானே உன்னிடம் வேண்டுவேன்.வேறெதையும் நான் உன்னிடம் கேட்டதில்லையே.எனக்கேன் இந்த சோதனை இறைவா என்று வாய்விட்டு புலம்பியபடி இருந்தார்.





மித்திரனின் பேச்சையும் வினி மயங்கி விழுந்ததையும் கண்டு அதிர்ந்து போய் நின்ற கண்மணி சற்று தன்னை சுதாரித்து கொண்டவராய். மித்து என்னடா இப்படிச் சொல்கிறாய்?? அப்போது வினியின் நிலை என்னடா?? அவளின் மனதில் ஆசையை வளர்த்து நிச்சயம் வரை வந்துவிட்டு இப்படிப் பேசுகிறாயே?? அவள் மனம் என்ன பாடுபடும் என்று சிந்தித்தாயா?? என்றார் தவிப்பும் ஆதங்கமுமாக





ஆனால் அவனோ அவள் ஆசைக்காக நான் என் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முடியாது பாட்டி. என் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம்.என்றான் அசால்ட்டாக.அதைக் கேட்டு



பாவி கொஞ்சமும் மனச்சாட்சி இல்லாமல் இப்படிப் பேசுகிறாயே என்று கொதித்தவர் என்ன கங்கா உன் மகன் இப்படிப் பேசுகிறான் நீ எதுவுமே சொல்லாமல் இருக்கிறாய்?? அவனுக்கு புத்தி சொல்லி என் பேத்திக்கு வாழ்வு கொடுக்கச் சொல்லு கங்கா.என்று கணனித் திரையின் பின்னே இருந்த மகளிடம் கெஞ்சலுடன் கேட்டார் கண்மணி





அவர் மகளோ இதில் நான் சொல்ல எதுவுமே இல்லை அம்மா.அது அவன் வாழ்க்கை. அவன் இஷ்டம். எனக்கு என் மகனின் வாழ்வு மகிழ்ச்சியாய் அமைய வேண்டும் அது தான் முக்கியம்.அந்த பெண்ணை மணந்துகொண்டால் அவன் மகிழ்ச்சியாய் இருப்பான் என்றால் எனக்கும் சம்மதம் தான்மா. என் மகனின் வாழ்வு தான் எனக்கு முக்கியம்.என்று அவர் தலையில் குண்டை இறக்கினார்.





கண்மணி விக்கித்தார் அவர் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.கங்கா மித்திரனை திட்டுவார் அவன் பிழையை அவனுக்கு உணர்த்தி அவனை இந்த நிச்சயத்துக்கு சம்மதிக்கப் பண்ணுவார் என்று தான் எதிர்பார்த்தார்.ஆனால் அவர் மகள் இப்படிப் பேசவும்





என்ன கங்கா இப்படிச் சொல்கிறாய்?? உன் மகனின் வாழ்வைப் பற்றி மட்டும் பேசுகிறாயே உன் அண்ணன் மகளின் வாழ்வைப் பற்றி சற்றேனும் எண்ணிப் பார்த்தாயா??? இந்த நிச்சயத்துக்கு வெளி ஆட்கள் யாரையும் அழைக்காவிட்டாலும் என் பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் செய்யப்போகிறோம்.இன்று நிச்சயம் என்று நானே ஊரில் உள்ளோரிடம் எல்லாம் சொல்லிவிட்டேனே.இது நடக்காவிடில் அவள் வாழ்வு என்னவாகும் என்று சற்றேனும் எண்ணிப்பார் கங்கா என்றார் கோபத்துடனும் ஆதங்கத்துடனும்





அவர் மகளோ இதில் எண்ணிப் பார்க்க என்னம்மா இருக்கிறது.திருமண மேடைவரை வந்தே எத்தனையோ திருமணங்கள் நின்று போவதில்லையா?? அந்தப் பெண்கள் எல்லாம் திருமணமே செய்துகொள்ளாமலேவா இருக்கின்றனர்?? இது வெறும் நிச்சயம் தானே. அண்ணனிடம் சொல்லி வேறு மாப்பிளை பார்க்கச் சொல்லுங்கள் சற்று வசதி குறைந்த பையனாய்ப் பார்த்தால் இதைப்பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக திருமணத்திற்கு சம்மதிப்பான்.என்றார் அலட்சியமாக





கண்மணியின் மனம் கொதித்தது.அழகே உருவான பூப் போன்ற அவர் பேத்திக்கு வருபவன் வெறும் பணத்தை மட்டுமே முக்கியமாக கருதியா அவளை மணக்க வேண்டும்.அவளை நேசித்து அவளையே உயிராக சுவாசிப்பவன் அல்லவா அவர் பேத்தியை மணக்க தகுதியுள்ளவன் என்று எண்ணும் போதே அப்படி அவளை தன் சுவாசமாகவே நேசித்தவனை தன்னுடைய ஆசைக்காக தான் அவளிடம் இருந்து திட்டம் போட்டுப் பிரித்தது நினைவு வந்தது.





மகளிடமிருந்தும் பேரனிடமிருந்தும் எதிர்பாராமல் விழுந்த அடியில் நிலை குலைந்து போய் இருந்தவருக்கு தான் செய்த தவறு இமயமாய் தாக்க



ஐயோ...

என் பேத்தியின் வாழ்க்கையை நானே நாசமாக்கி விட்டேனே.என்னுடைய ஆசைக்காக என் பேத்தியின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டேனே. என்று பெருங்குரலெடுத்து அழுதவர் ஏதோ தோன்றியதைப் போல் மெத்திருக்கையில் சோர்ந்துபோய் துவண்டு கிடந்த வினியின் அருகே சென்று அவள் கரத்தைப் பற்றி என்னை மன்னித்துவிடு மா.உன் இத்தனை துன்பத்துக்கும் நான் தான் காரணம்.





யார் என்ன நினைத்தாலும் ஆண்டவன் போடும் முடிச்சை யாராலும் அவிழ்க்க முடியாது என்று புரிந்துகொண்டேன். என் ஆசைக்காக சதித் திட்டம் தீட்டி உன் மகிழ்ச்சியைக் குலைத்தேன் டா.இப்போது என் வாயாலேயே சொல்கிறேன் டா. நீ எப்படி உன் அத்தான் நிலவனை நேசித்தாயோ அதே போல ஏன் அதைவிட அதிகமாகவே அவனும் உன்னை நேசிக்கிறான்.





என்னுடைய ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக சற்றும் இரக்கம் இன்றி இந்தக்குடும்பமே அவனிடம் இருந்து மறைத்த அவன் பிறப்பின் ரகசியத்தைக் கூறி திட்டம் போட்டு சூழ்ச்சி செய்து அவனை உன்னிடம் இருந்து பிரித்தேன் டா.நான் பாவி அது தான் கடவுள் எனக்கு சரியான தண்டனையைக் கொடுத்துவிட்டார்.யாருடைய உறவு காலத்துக்கும் நிலைக்க வேண்டும் என்று எண்ணினேனோ அவர்களின் சுஜரூபத்தைக் காட்டிவிட்டார்.என் மகள் என் பேரன் என் இரத்தம் என்று நான் கொண்டாடியதற்கு எனக்கு சரியான தண்டனையை அவர்கள் மூலமாகவே கொடுத்துவிட்டார் என்று நெஞ்சே வெடித்துவிடும் போல் புலம்பிக் கதறியவரை சமாதானப் படுத்த அங்கே யாரும் முன் வரவில்லை.





அவர் பேச்சைக் கேட்டு அந்தக் கூடத்தில் இருந்த அத்தனை பேரின் இதயமும் ஒரே கணத்தில் சுரம் தப்பியது.கண்மணி இப்படி எல்லோர் மத்தியிலும் உண்மையைப் போட்டு உடைப்பார் என்று எதிர்பாராத நிலவன் பாட்டி என அதிர்ந்து அவரை தடுக்க முயலவும்





அதற்கிடையில் ஜெகநாதன் என்னம்மா சொல்கிறீர்கள்?? அவனிடம் எந்த உண்மையைக் கூறினீர்கள் என்றார் உணர்ச்சியற்ற குரலில்.



கண்மணியின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றவர்களுக்கு ஜெகநாதனின் பேச்சைக்கேட்டு சுயவுணர்வு வர கண்மணி என்ன கூறப் போகிறார் என்பதைப் புரிந்தவர் போல நாகநாதன், அங்கு நடப்பதை அதிர்ந்து போய் விழிவிரித்து நோக்கியபடி இருந்த சின்னவர்களைப் பார்த்து இங்கு இனி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு எதுவும் இல்லை.இனி பெரியவர்கள் பேச வேண்டும்.நீங்கள் அனைவரும் பெரிய வீட்டில் சென்று இருங்கள் என்று அனுப்ப முயன்றார்.





அவரின் பேச்சைக் கேட்டு சின்னவர்களும் அமைதியாக வெளியே செல்லவும் கொஞ்சம் இருங்கள் பா.என்று அவர்களைத் தடுத்த ஜெகநாதன் தம்பியை நோக்கி இது இவ்வளவு தூரம் வந்த பின் இதற்கு மேலும் ஒளிவு மறைவு தேவையில்லை நாதா.அவர்களிடம் இருந்து இதற்கு மேலும் நாம் இதை மறைத்தால் இப்போது வந்திருப்பது போல் வேறு பல பிரச்சினைகள் எழ வாய்ப்புண்டு.வேண்டாம் இதற்கு மேலும் நாம் இதை மறைக்க வேண்டாம்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது நம் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்.இதனால் அவர்கள் ஒற்றுமைக்கு ஒரு போதும் பங்கம் வந்துவிடாது என்று கூறியவர்.சாந்தாவிடம் திரும்பினார்.





அவரோ இதைப்பற்றி எதுவும் பேசாதீர்களேன் என்று கண்களில் கண்ணீருடன் கணவனை இறைஞ்சல் பார்வை பார்த்தார்.அதைக் கண்டு மனம் வலித்தாலும் முகத்தில் ஓர் உறுதியுடன் மீண்டும் கண்மணியின் புறம் திரும்பியவர்





சொல்லுங்கள் அம்மா.அவனிடம் எந்த உண்மையைக் கூறினீர்கள்?? எப்படிக் கூறினீர்கள்?? தயவு செய்து சொல்லுங்கள் என்றார் குரலில் வலியுடன்.



ஏற்கனவே தான் செய்த தவறு இமயமாய் இதயத்தை தாக்க வலியுடன் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த கண்மணி அந்த சமயத்திலும் மரியாதையை கைவிடாது கண்ணியத்துடன் பேசிய ஜெகநாதனின் பேச்சில் மேலும் குன்றினார்.அந்த குன்றலுடனேயே நான் இந்தக் குடும்பத்துக்கே துரோகம் செய்துவிட்டேன் என் மேல் இருந்த நம்பிக்கையில் எனக்கு தெரிவிக்கப் பட்ட ரகசியத்தை நான் அம்பலப்படுத்திவிட்டேன்.என்றவர் நிலவன் வினியின் காதலையும் அதை தான் அறிந்துகொண்ட விதத்தையும் திட்டம் போட்டு நிலவனிடம் பேசி அவர்களைப் பிரித்த விதத்தையும் என அனைத்தையும் கண்ணீருடன் குற்றவுணர்ச்சியில் குரல் தழுதழுக்க கூறி முடித்தார்.





அவர் பேசி முடிக்கும் வரை அங்கிருந்த அனைவரும் மூச்சுக் கூட விட மறந்தவர்களாய் விக்கித்துப் போய் நின்றிருந்தனர்.கண்மணி பேசி முடிக்கவும் விழிகளில் நீருடன் பூவினியின் பார்வை நிலவனை நோக்கியது.அவனும் விழிகள் லேசாக கலங்கியிருக்க வினியையே நோக்கினான்.உரிமையுடன் அவள் விழிகளை நீண்ட நாட்களுக்குப் பின் ஊடுருவியது அவன் பார்வை. தன் இதயத்தின் தவிப்புக்களை எல்லாம் பார்வையாலேயே அவளுக்கு உணர்த்திவிடுபவன் போல அவன் வினியை நோக்கினான்.சட்டென ஏதோ தோன்றியவள் போல் முகம் இறுக பார்வையை விலக்கிக் கொண்டாள் பூவினி.





அச் சமயத்தில் “தொப்” என்று ஒரு சத்தம் கேட்கவும் அனைவரும் சற்று முன் ஏற்பட்ட அதிர்வின் அலைகளில் இருந்து விடுபட்டு சத்தம் வந்த திசையை நோக்கினர்.சாந்தா தான் மயங்கிச் சரிந்திருந்தார்.அனைவரும் அவரிடம் விரைய நிலவன் ஓடிச் சென்று அவர் தலையைத் தன் மடியில் தாங்கினான். தமிழ் ஓடிச் சென்று நீர் எடுத்துவர அதைத் தாயின் முகத்தில் தெளித்து அம்மா அம்மா என்று அழைத்தான்.அவனின் அம்மா என்ற அழைப்பின் சக்தியோ என்னவோ விழிநீருடன் விழி திறந்தவர் அவன் முகத்தை தவிப்புடன் வருடி



நிலவா....நிலவா...நான் உன் அம்மா தானேடா.நான் தான்டா உன்னோட அம்மா.நீ என் பையன் தான்.யார் என்ன சொன்னாலும் நீ என் பையன் தான் டா.நீ கடவுள் எனக்காகவே கொடுத்த என்னுடைய மகன் டா.என்றார் குரலில் தவிப்பும் ஆதங்கமும் போட்டி போட விழிகளில் பொங்கிப் பெருகிய நீருடன்.



அந்த தாயுள்ளத்தின் தவிப்பை புரிந்துகொண்ட நிலவனின் விழிகளிலும் நீர் நிறைந்து வழிந்தது.இந்த தவிப்பு இவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தானே அவன் தனக்கு உண்மை தெரியும் என்பதை வெளிப்படுத்தாது மனதினுள்ளேயே மறுகினான். அது குறித்து யாரிடமும் எதுவும் கேட்காது மௌனித்திருந்தான்.



தாயின் முகத்தை வருடி நீங்கள் என் அம்மா தான் மா.என்னைப் பெற்ற தாய் கூட என்னை அநாதையாய் தெருவில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.ஆனால் நீங்கள்.......உங்களைப் போல ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும் மா.உங்களுக்கு இந்த துன்பம் வரக்கூடாது என்று தான் மா எனக்கு இந்த உண்மை நான்கு வருடம் முன்பே தெரிந்த போதும் கூட நான் எதையும் உங்களிடம் கூறாது மௌனமாக இருந்தேன் மா. நான் எப்போதுமே உங்கள் பையன் தான் மா.உங்கள் அன்பு ஒன்றே எனக்கு போதும்மா.என்று தாயின் தோளில் சிறு குழந்தை போல் சாய்ந்து கொண்டு குரல் கம்மப் பேசினான்.





நிலவன் சாந்தாவிடம் கூறிய பெற்ற தாய் கூட என்னை அநாதையாய் தெருவில் வீசிவிட்டு சென்றுவிட்டார் என்ற வார்த்தையில் அங்கிருந்த உண்மை தெரிந்த அனைவரின் முகமும் ஒரே சமயத்தில் சுருங்கி கண்மணியை வெறித்தது.





கண்மணியோ அவர்களின் பார்வையை சந்திக்கும் திராணி சிறிதும் அற்றவராய் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குமுறினார்.



தாரணியும் மித்திரனும் வினியும் தங்கள் திட்டம் சரியான விதத்தில் நடந்தேறுவதை மனதுக்குள் சிறு நிம்மதியுடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.



இவ்வளவு களேபரத்திலும் பத்மன் மட்டும் வாயைத் திறக்கவே இல்லை.இறுகிப் போய் நின்றிருந்தார்.அவர் பார்வை மட்டும் நிலவனையே வெறித்தபடி இருந்தது.





ஜெகநாதன் அவர் நிலை உணர்ந்து பத்மா என அருகில் சென்று அவர் கரம் பற்றவும் உடைந்தார்.



எப்படிடா எப்படி இவன் என்னை அப்படி நினைத்தான்.யார் என்ன சொன்னாலும் இவனுக்கு என்னைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா?? அவன் ஒரு அநாதை என்று கூறி நான் என் பெண்ணை அவனுக்கு தர மறுப்பேன் என்று எப்படி அவன் எண்ணலாம்??? அவன் அப்படி எண்ணும் அளவுக்கா நான் அவனிடம் நடந்துகொண்டிருக்கிறேன்?? நான் அவன் மீது கொண்ட அன்பும் அக்கறையும் எப்படிடா அவனுக்கு புரியாமல் போனது??எனக்கு புரியவில்லை டா. என்று ஆதங்கத்துடன் புலம்பியவரை தோளில் தட்டி அமைதிப் படுத்தினார் ஜெகநாதன்.







அவர் பேச்சைக் கேட்ட நிலவனோ “மாமா” என கண்ணீருடன் சென்று அவர் கரத்தைப் பற்றினான்.அவ்வளவு தான் அவனை இழுத்து அணைத்துக் கொண்டவர் நீ அநாதை இல்லைடா.நீ அநாதை இல்லை.நீ என் நண்பனின் மகன் டா. என் உயிர் நண்பனின் மகன்.உனக்காக என் உயிரைக் கூட தருவேன் டா. என் மகளைத் தர மாட்டேனா? எந்த விடயத்தையும் கம்பீரத்துடன் பேசி துணிந்து செயற்படும் என் நிலவன் எங்கேடா போனான்.மாமா நான் உங்கள் பெண்ணை நேசிக்கிறேன்.எனக்கு அவளைத் திருமணம் செய்து தாருங்கள் என்று என்னிடம் உரிமையுடன் கேட்பதற்கு உன்னை எதுடா தடுத்தது?? என்றார் தன்னை இப்படி எண்ணிவிட்டானே என்ற ஆதங்கமும் தவிப்புமாக



நிலவன் உதட்டைக் கடித்தபடி தலை குனிந்து நிற்கவும் அவனின் தோளைப்பற்றி தன்னருகில் நிறுத்தியவர் ஒரு வேளை நீ அறிந்து கொண்ட உன் பிறப்பைக் குறித்த உண்மை தான் உன்னைத் தடுத்தது என்றால் அதற்கு அவசியமே இல்லை நிலவா என்றவர் அவன் கேள்வியாய் நிமிர்ந்து பார்க்கவும் உன்னிடம் இனியும் நாங்கள் எதையும் மறைக்கப் போவதில்லை நிலவா என்று கூறி ஜெகநாதனை பார்த்தார்.



அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவர் போல அவரும் மௌனமாய் தலையசைத்து தன சம்மதத்தை தெரிவித்தார்.