• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 39

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:-39



சிறு பெருமூச்சுடன் பத்மன் தொடர்ந்தார்.கண்மணியை அம்மா என்று அழைக்க மனமில்லாதவரைப் போல அவர்கள் கூறியது போல உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இரத்த சம்பந்தம் இல்லைத்தான்.ஆனால் நீ அநாதை இல்லை நிலவா.இரத்தத்தால் இணைந்த உறவுகளை விட உணர்வுகளால் இணைந்த உறவுகளுக்கு பலம் அதிகம்.அப்படி உணர்வால் எங்களுடன் இணைந்தவன் தான் உன் அப்பா என்றார்.



அதைக் கேட்டு நிலவன் திகைப்பும் வியப்பும் மகிழ்ச்சியுமாக நிமிர்ந்து அவர் முகம் பார்க்கவும் அவன் தோளைத் தட்டியவர்



ஆம் உன் அப்பா தான். நீ எங்கள் நண்பன் கிருஷ்ணனின் மகன் நிலவா.உன் அப்பாவின் முழுப்பெயர் கிருஷ்ண தேவராஜ பூபதி.அவன் தன் பெயர் மிகவும் நீளமாக இருப்பதால் கிருஷ்ணசாமி என்று மாற்றிக்கொண்டான்.அதுவும் அவன் வீட்டுக்கு தெரியாமல் தான். நான் உன் அப்பா கிருஷ்ணன் ஜெகன் மூன்று பேரும் மிகவும் நெருங்கிய தோழர்கள்.எங்கள் மூன்று பேரில் நான் தான் மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தில் இருந்து நன்றாகப் படித்ததனால் சில நல்ல உள்ளங்களின் உதவியால் அந்த பாடசாலையில் படிக்கச் சேர்ந்தேன்.ஜெகன் சற்று வசதியானவன் தான்.ஆனால் உன் அப்பா ஒரு ஜமீன் பரம்பரையின் வாரிசு டா.ஆனால் அந்தப் பெருமை சற்றும் இன்றி மிகவும் இயல்பாக அன்பாகப் பழகுவான்.





பணக்கார பசங்கள் என்று அவர்களிடம் இருந்து விலகிப் போன என்னை அவன் தான் மெல்ல மெல்ல தன் நட்பு வட்டத்துக்குள் இழுத்தான்.எங்களுடன் ஜெகனும் சேர்ந்துகொண்டான்.அப்போதிலிருந்தே நாங்கள் மூன்று பேரும் உயிர் நண்பர்கள் ஆகிவிட்டோம்.பள்ளி முடித்து கல்லூரி வரையிலும் எங்கள் நட்பு தொடர்ந்தது.எனக்காகவே பிரபலமான கல்லூரிகளைத் தவிர்த்து நடுத்தரமான கல்லூரியில் இருவரும் சேர்ந்துகொண்டனர்.என்று கூறி அந்த நினைவுகளில் குரல் நெகிழ பத்மன் பேச்சை நிறுத்தவும் ஜெகநாதன் தொடர்ந்தார்.





உன் அப்பா வீட்டுக்கு ஒரே பிள்ளை கண்ணா.சொத்துக்களும் பணமும் ஏராளம்.ஆனால் பாசம்??? உன் அப்பாவுக்கு அம்மா இல்லை.தந்தை மட்டும் தான்.பணக்கார ஜமீன்தார் மனைவி வேறு இல்லை கேட்கவா வேண்டும்??? அதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போன கிருஷ்ணன் பாடசாலையில் படிக்கும் போதே ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தான்.அப்படியே தான் கல்லூரிப் படிப்பும்.விடுமுறை சமயம் கூட அவனுக்கு வீட்டுக்கு செல்லப் பிடிக்காது. அச் சமயத்தில் இங்கே நம் வீட்டுக்கு வந்துவிடுவான்.





இங்கே எங்களின் குடும்பத்தைப் பார்த்து நான் இந்தக் குடும்பத்தில் ஒருத்தனாய்ப் பிறக்காமல் போய்விட்டேனே என்று மிகவும் ஏங்குவான். என் தம்பி தங்கைகள் அவனுக்கும் அப்படித்தான்.நாதன் ஏதேனும் தவறு செய்தால் கண்டிப்பான்.தங்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பான்.அம்மா உருட்டித்தரும் உருண்டை சோறை எங்களுடன் வட்டமாக அமர்ந்துகொண்டு சப்புக்கொட்டி சாப்பிடுவான். எங்கள் அம்மா அப்பாவை அவனும் அப்படியே தான் அழைப்பான்.அதுவும் வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் மனதின் ஆழத்தில் இருந்தே அழைப்பான்.ஏன் சில சமயம் அம்மாவுக்கு கால் வலி என்றால் கீழே அமர்ந்து அவர் காலைப்பற்றி தைலம் தேய்த்து விடுவான்.





அவன் இந்தக் குடும்பத்தில் வேறு இல்லை.அவனும் எங்களில் ஒருவன் தான்.மேனகாவும் மேகலாவும் நாதனும் அவனை சின்னண்ணா என்று தான் அழைப்பார்கள். எங்கள் அம்மா அப்பாவுக்கு அவனும் இன்னொரு மகன் போலத்தான்.



விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டுக்கு வருவதும் கல்லூரி நாட்களில் கல்லூரியிலும் என்று எங்கள் மூவரினதும் நட்பும் மிகவும் இயல்பாய் இறுக்கமான பிணைப்போடு தொடர்ந்தது.எங்கள் கல்லூரி வாழ்க்கையில் நாங்கள் இறுதி வருடத்தை நெருங்கும் போது தான் உன் அம்மா வளர்மதி எங்கள் கல்லூரியில் புதுவரவாக நுழைந்தாள்.அப்படியே உன் அப்பாவின் மனதிலும் நுழைந்துவிட்டாள்.





உன் அம்மா மென்மையே உருவானவள்.அமைதியே குணமானவள்.ஆனால் சற்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள்.



இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.ஆனால் எல்லைகளைத் தாண்டவில்லை.ஒருவழியாக நாங்கள் கல்லூரி வாழ்க்கையை முடித்தோம்.



எனக்கு அப்பாவின் தொழிலை விரிவாக்கும் கனவு. பத்மனுக்கு உழைத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.எங்களுடன் கிருஷ்ணனும் இணைந்துகொண்டான்.



மூன்று பேரும் சேர்ந்து ஒரு தொழிற்சாலையை நிர்மாணிக்க திட்டம் போட்டோம்.நான் அப்பாவின் தொழிலையும் விரிவாக்கம் செய்ததனால் பணப் பற்றாக்குறையில் கால் பங்கு முதலீடு செய்தேன்.பத்மன் தங்கையின் நகைகளை விற்று அத்தோடு தான் அதுவரை உழைத்து சிறிது சிறிதாய் சேமித்த பணத்தையும் சேர்த்து கால் பங்கு பணம் போட்டான். மீதி அரைவாசிப் பங்கு போட்டு இந்த தொழிலை முழு மூச்சாக தொடங்கியது கிருஷ்ணன் தான்.அத்தோடு தொழில் ஒரு நிலைக்கு வரும் வரை தேவைப் பட்ட போதெல்லாம் பணம் முதலீடு செய்து தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வந்தான்.



kpj குழுமம் என்று எங்கள் தொழிற்சாலைகளுக்கு பெயர் வந்ததன் காரணம் இது தான்.உண்மை தெரியாத பலரும் குமாரசாமி என்ற அப்பாவின் பெயர் தான் k என்று எண்ணுவார்கள்.ஆனால் அப்படி அல்ல.கிருஷ்ணன் பத்மன் ஜெகன் என்ற எங்கள் மூன்று பெயருடைய முதல் எழுத்தும் தான் kpj.





தொழில் ஓரளவு ஏறுமுகம் காட்டி நன்றாகச் சென்றுகொண்டிருந்தது.இந் நிலையில் எனக்கும் திருமணம் ஆகியது.உன் அப்பாவிற்கு சாந்தாவும் இன்னொரு தங்கை ஆகிவிட்டாள்.



எல்லாம் நன்றாகத் தான் சென்றுகொண்டிருந்தது. உன் அப்பா அம்மாவின் காதலும் தான்.ஒரு சமயம் திரையரங்கு ஒன்றில் உன் அப்பாவையும் அம்மாவையும் ஒன்றாக பார்த்துவிட்ட கிருஷ்ணன் ஊரைச் சேர்ந்த யாரோ அதை கிருஷ்ணனின் அப்பாவின் காதில் போட கிளம்பியது பிரச்சினை.



கிருஷ்ணனை உடனே ஊருக்கு வரச் சொல்லி அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. எங்களிடம் பிரச்சினையைக் கூறி எது நடந்தாலும் மதியைக் கைவிட மாட்டேன்.அவள் தான் என் மனைவி. அப்பாவுடன் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்று வருகிறேன் என்று கூறிவிட்டு கிளம்பினான்.அன்று தான் அவனை நாங்கள் நன்றாகப் பார்ப்பது என்று தெரியாமலேயே வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தோம்.என்று கூறி கண்கலங்க ஜெகநாதன் சற்று பேச்சை நிறுத்தினார். மேகலா சேலைத் தலைப்பால் வாயை மூடிக் கேவலை அடக்கினார்.



வினி மித்திரன் தாரணி ஆகியோருக்கும் நிலவன் அநாதை இல்லை அவனுக்கும் பெற்றோர் இருந்தனர். அதுவும் அவன் ஜமீன் வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது மகிழ்ச்சியைக் கொடுக்க ஆர்வமுடன் ஜெகநாதன் கூறிய கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அவரின் கடைசிப் பேச்சில் இதயம் கலங்க நிலவனைப் பார்த்தனர்.





அவனும் தான் அநாதை இல்லை.பெற்றவன் பெயர் தெரியாதவன் இல்லை.ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று நெஞ்சு குளிர மகிழ்ச்சியுடன் தன பெற்றோரின் கதையை கேட்டபடியிருந்தவன் ஜெகநாதன் இப்படிக் கூறி குரல் தழுதழுக்க பேச்சை நிறுத்தவும்



சொல்லுங்கள் என் அப்பாவுக்கு என்ன ஆச்சு?? என்றான் தவிப்புடன்.



ஜெகநாதன் பேச முடியாதவராய் மௌனிக்கவும் பத்மன் தொடர்ந்தார்.





கிருஷ்ணனை உடனே ஊருக்கு வரச் சொன்ன அவன் அப்பா தான் அறிந்தது உண்மையா என்று விசாரித்தார்.கிருஷ்ணனும் துணிவுடன் தன் காதலைச் சொல்லவும் பெண் யார் என்று விசாரித்தவர் அதிர்ந்துவிட்டார். ஒரு ஜமீன் வாரிசு தாழ்ந்த சாதிப் பெண்ணை மணப்பதா?? என்று ஆத்திரம் கொண்டவர் கிருஷ்ணனை வீட்டிலேயே அடைத்து வைத்ததுடன் இன்னொரு ஜமீன் வாரிசான பெண்ணுடன் அவசரமாக திருமண ஏற்பாடும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.



இதை அறிந்த அவன் அவர் காவலுக்கு போட்டிருந்த அடியாட்களையும் மீறி ஒருவழியாக தப்பித்து வந்ததுடன் உன் அம்மாவையும் அழைத்துக்கொண்டு ஊரை விட்டே சென்றுவிட்டான்.போகும் முன் அவசரமாக நடந்ததை விவரித்து எங்களுக்கு ஒரு கடிதம் போட்டிருந்தான்.அதில் எங்கள் வீட்டுக்கு வராததற்கு மன்னிக்கும் படியும் அப்படி தான் இங்கு வந்தால் அது அவன் அப்பாவின் மூலம் எங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அதனாலேயே வரவில்லை என்றும் தான் குறைந்தது சில வருடங்களுக்கேனும் எங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்றும் அதனால் தன்னைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தான்.





அவன் கூறியதில் உள்ள நியாயம் எங்களுக்கும் புரிந்ததால் எங்கிருந்தாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டியபடி காத்திருந்தோம்.





இப்படியே மூன்று வருடங்கள் ஓடின தொழிலும் நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்தது.எனக்கும் உன் அத்தைக்கும் திருமணமும் ஆனது.இந் நிலையில் தான் ஜெகனுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பாக்கியம் கிட்டவே இல்லை என்று அதற்கு பரிகாரம் செய்வதற்காக குடும்பத்துடன் பழனி சென்று வந்தோம்.





பழனியில் இருந்து வரும்வழியில் ஜெகனின் தொலைபேசிக்கு ****** மருத்துவமனையில் இருந்து ஓர் அழைப்பு வந்தது.அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணன் என்ற நபர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் ஜெகனையும் என்னையும் உடனே பார்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.





பழனியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த நாங்கள் அடித்துப்பிடித்து அப்படியே குடும்பத்துடன் அந்த மருத்துவமனைக்கு ஓடினோம்.அங்கே உன் அப்பா உடலெல்லாம் கட்டுக்களுடன் மரணத்தின் கடைசி நொடிகளுடன் போராடிக்கொண்டிருந்தான். அச் சமயத்திலும் எங்களைக் கண்டதும் அவன் விழிகளில் அப்படி ஒரு ஒளிர்வு.அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.





அவன் கட்டிலைச் சுற்றி நின்று கண்ணீர் சொரிந்த எங்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்தவன் இதழ்களில் ஒரு மகிழ்ச்சிப் புன்னகையுடன்





உங்கள் எல்லோரையும் மீண்டும் ஒருமுறை பார்க்காமலே போய்விடுவேனோ என்று பயந்தேன்.கடவுள் கருணை உள்ளவன்.என்று கூறி சிறிது மூச்சு வாங்கியவன் பின் ஒரு வேகத்துடன் அனைத்தையும் கூறினான்.





வீட்டைவிட்டு ஓடி வந்தது உன் அம்மாவைத் திருமணம் செய்தது.மூன்று வருட இன்ப வாழ்க்கை அதன் சாட்சியான உன் பிறப்பு. உன் தாத்தாவின் ஜாதிவெறி.திருமணம் செய்து மூன்று வருடங்கள் ஆன போதும் அவன் ஒரு தாழ்ந்த ஜாதிப் பெண்ணை மணமுடித்ததை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உன் தாத்தாவுக்கு நீ பிறந்தது தெரிந்ததும் வெறி இன்னும் அதிகரித்துவிட்டது.





ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணின் வயிற்றில் ஜமீன் வாரிசு உதிப்பதா என்று ஆக்ரோசம் கொண்டவர் உன் அம்மாவையும் உன்னையும் கொல்ல ஏற்பாடு செய்தார்.அதை அறிந்து உன் அப்பா உங்களைக் காப்பாற்ற வருமுன் நேரம் கடந்திருந்தது.



உன்னையும் கைகளில் ஏந்திக்கொண்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிய உன் அம்மாவை வேகத்துடன் வந்த ஒரு கார் மோதியது. தன்னை மோதுவது போல் ஒரு கார் அருகில் வரவும் உனக்கு எதுவும் ஆகிவிடாமல் இருக்க உன்னை மூடிக் கவிழ்ந்து முழு அடியையும் உன் அம்மா வாங்கியிருந்தார்.உங்களைக் காப்பாற்ற ஓடி வந்த உன் அப்பாவின் கண் முன்னாலேயே அந்த பயங்கரம் நிகழ்ந்திருந்தது.அதைக் கண்டு அதிர்ந்து வீதியில் வந்த வாகனங்களைக் கவனிக்காது உங்களைக் காப்பாற்ற குறுக்கே ஓடி வந்த உன் அப்பாவையும் வேகத்துடன் வந்த ஒரு லொறி மோதியிருந்தது.இருவரும் அன்றில் பறவைகள் போல் ஒருவரை விட்டு ஒருவர் வாழ மாட்டார்கள் என்று கடவுளுக்கும் தெரிந்திருந்தது போலும்.அதனால் தான் இருவருக்கும் ஒன்றாகவே மரணத்தைக் குறித்திருந்தான்.

.





உன் அப்பா கடைசியாய் எங்களிடம் வைத்த வேண்டுகோள் இது தான்.என் உயிரினும் மேலான மதி என்னைவிட்டு போய்விட்டாள்.அவள் இல்லாத உலகத்தில் ஒரு நொடி வாழ்வதும் எனக்கு சிரமமாய் இருக்கிறது.இவ்வளவு நேரமும் என் உயிர் தங்கியதே என் மகனுக்காகத்தான்.என்றவர் அருகில் பார்க்க செவிலி ஒருவர் ஒரு வயதே நிரம்பிய உன்னைக் கைகளில் தாங்கி வந்தார்.





உன்னைக்காட்டி இவன் இனி என்மகன் இல்லை ஜெகா.இனி இவன் உன் மகன்.நான் அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்கித் தவித்தது போல என் பிள்ளை தவிக்க கூடாதுடா.அவன் சந்தோசத்தோடு மகிழ்ச்சியாய் வளர வேண்டும். எனக்கு தெரியும் பாசத்தை அள்ளி வழங்கி எதற்கும் ஏக்கம் கொள்ளாமல் என் மகனை நன்றாக வளர்க்க உங்களால்தான் முடியும்.



அத்தோடு என் மகன் ஜாதிவெறி பிடித்த ஜாதிக்காக ஒரு உயிரையே எடுக்கத் துணியும் மிருகத்தின் வம்சமாக வளர வேண்டாம்டா. அவன் பாசத்தை மட்டுமே அடித்தளமாக கொண்டு மகிழ்ச்சியில் கட்டிய உங்கள் குடும்பத்தில் உங்களில் ஒருத்தனாக வளரட்டும் டா.அவனுக்கு வேறு எந்த அடையாளமும் வேண்டாம் டா.



எனக்காக இதைச் செய்வாயா ஜெகா?? தயவு செய் ஜெகா.உன் மகனாக இவனை ஏற்றுக்கொள் என கேட்கவும்



அதுவரை கண்களில் இருந்து கண்ணீர் சொரிய அவன் படும் துன்பத்தை கண்டு தவித்துக் கொண்டிருந்த ஜெகன்

அவன் வாயைப் பொத்தி டேய் என்னடா இப்படிக்கேட்கிறாய். உத்தரவு போடுடா.அவன் இனி என் மகன் டா.என் மகன்.என்று உணர்ச்சியுடன் கூறவும்.





அருகில் நின்ற குமாரசாமி வள்ளியம்மையும் நீ எங்கள் மகன் பா.அவன் தான் எங்கள் மூத்த பேரன் அதில் எந்த மாற்றமும் இல்லை.என்று உறுதியளித்தனர்.கூடவே மேகலா மேனகா நாதன் மூவரும் ஆமாம் சின்னண்ணா இவன் எங்கள் குடும்பத்துப் பிள்ளை.எங்கள் அண்ணனின் மகன். இவனை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றனர்.



அவர்கள் அனைவரின் பேச்சையும் கேட்டு இதழ்களில் நிம்மதிப் புன்னகை மலர உன்னை ஜெகனினதும் அவன் மனைவியினதும் கைகளில் தரச் சொன்னான்.குழந்தை பாக்கியம் கேட்டு கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நீ அவர்கள் கையில் கிடைத்தது ஏதோ தெய்வமே நேரில் வந்து உன்னை வரமாக கொடுத்தது போல ஜெகனுக்கும் அவன் மனைவிக்கும் தோன்ற பரவசத்துடன் பெற்றுக்கொண்டனர்.என்று பத்மன் பேச்சை நிறுத்த





ஜெகன் தொடர்ந்தார் நிஜமாகவே நீ எங்களுக்கு அந்த தெய்வம் தந்த வரம்தான் கண்ணா.அப்படித் தான் நாங்கள் நினைக்கிறோம் என்று குரல் தழுதழுக்க கூறியவர் தொடர்ந்து உன் அப்பா உன்னை மட்டும் எங்களுக்கு தரவில்லை உன் கூடவே சில பெறுமதிமிக்க சொத்துக்களையும் நாங்கள் மூவரும் தொடங்கிய தொழிலில் இருந்த முக்கால்வாசி அவனது பங்குகளையும் சேர்த்து தந்தான்.





அதையும் எப்படித் தந்தான் தெரியுமா?? எதையும் உன் பேரில் எழுதவில்லை. முற்றுமுழு உரிமையையும் எங்களுக்கே எழுதித் தந்தான்.அவ்வளவு நம்பிக்கை எங்கள் மீது என்று நட்பின் மேல் கொண்ட கர்வத்துடன் சொன்னவர் தொடர்ந்து





சட்டப்படி உன்னை எங்களுக்கு உரிமையாக்கிய பத்திரத்தையும் சொத்துக்களின் பத்திரங்களையும் எங்களிடம் ஒப்படைத்தவன் எங்கள் கையில் இருந்த உன்னையும் எங்களையும் பார்த்து நிறைவாகப் புன்னகைத்தான்.அது தான் அவனின் இறுதிப் புன்னகை. அடுத்த கணம் அவன் ஆத்மா உடலைவிட்டு அவன் மனைவியைத் தேடிப் பறந்துவிட்டது.





என்று அவன் உன்னை எங்களின் கைகளில் கொடுத்தானோ அந்தக் கணமே உன்னை எங்கள் இதயத்தில் ஏற்றிக்கொண்டோம் டா.அன்றிலிருந்து இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசாய் உன்னைத் தான் டா கொண்டாடுகிறோம்.





உன் தந்தை வழித் தாத்தாவுக்கும் நீ உயிருடன் இருப்பது தெரியாது.உன்னையும் உன் அம்மாவையும் கொல்ல தான் செய்த முயற்சியில் தன் மகனும் இறந்து போனதில் அவர் மிகவும் உடைந்து போய்விட்டார்.அதோடு வயதின் தாக்கமும் சேர்ந்து கொள்ள அவர் நோய்வாய்ப்பட்ட தருணம் அதற்காகவே காத்திருந்த அவர் தம்பியும் அவர் மகன்களும் மெல்ல மெல்ல சொத்துக்களை கைப்பற்றிக்கொண்டு அவரை செல்லாக்காசாக்கி மூலையில் முடக்கினர்.



தான் செய்த பாவத்தின் குற்றவுணர்ச்சியும் மகனை இழந்த தவிப்பும் உறவுகளின் துரோகமும் நோயும் என எல்லாம் சேர்ந்து அவர் உயிரையும் சில வருடங்களில் பறித்துவிட்டது.அவர் செய்த பாவத்துக்கு தண்டனை உடனேயே கிடைத்துவிட்டது.





உன்னைக் குறித்த உண்மை யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே வெளியூரில் நானும் உன் அம்மாவும் சில வருடங்களை உன்னுடன் கழித்தோம்.பின் உன்னை எங்களுக்கு பிறந்த பிள்ளை போல இங்கே அறிமுகப்படுத்தினோம்.எந்த சமயத்திலும் உண்மை உனக்கு தெரிந்துவிடக்கூடாது.நீ அதனால் வேதனைப் பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாய் இருந்தோம்.இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூட உண்மையைக் கூறவில்லை.





நாங்கள் இவ்வளவு ஜாக்கிரதையாய் இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என எதிர்பார்க்கவே இல்லை நிலவா.உன் அப்பாவை மருத்துவமனையில் காணச் சென்றபோது எங்களுடன் பழனிக்கு வந்த வினியின் பாட்டியும் கூட வந்தார்கள்.அவர்களுக்கும் அனைத்து உண்மையும் தெரியும்.அவர்கள் வயதில் பெரியவர்கள் பக்குவமானவர்கள் என்று எண்ணினோம்.ஆனால் இப்படி அவர்களால் உனக்கு உண்மை தெரிய வருமென்று நாங்கள் கனவிலும் எண்ணவில்லை நிலவா.என்றார் வேதனையுடன்.





ஜெகநாதன் பேச்சை முடிக்கவும் அதன் கனம் தாங்காமல் அங்கிருந்த அனைவரும் மௌனமாய் இருந்தனர்.அனைவர் நெஞ்சிலும் பல்வேறு உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன.







நிலவன் தலையை கைகளில் தாங்கி குனிந்து அமர்ந்திருந்தான்.அவன் முதுகு குலுங்கியது.அதைக்கண்ட அனைவரும் அவனிடம் விரைந்து அவன் முதுகையும் தலையையும் வருடினர். தமிழ் அவன் அருகில் சென்று அமர்ந்து அண்ணா அழாதீங்கண்ணா.என்னோட அண்ணா எப்போவுமே கம்பீரமாய்த் தான் இருக்கணும்.யார் என்ன சொன்னாலும் நீங்கள் என்னோட அண்ணாதான்.இதை யாராலும் மாத்த முடியாது.அண்ணா நான் உங்களோட தங்கைச்சி தானேண்ணா??

என்று அழுகையும் தவிப்புமாக தமையனின் கை பற்றி பேசவும்





நிலவனும் உடைந்தான்.ஆமா டா குட்டி.நான் உன் அண்ணா தான் டா.நீ என்னோட செல்ல தங்கைச்சி தான் டா. நான் அழல டா.இது ஆனந்தக் கண்ணீர்.என் பிறப்பின் மூலம் தெரியாத அநாதை என்று இத்தனை வருடம் தவித்து மறுகினேன். இப்போது அப்படி இல்லை என்று தெரிந்ததில் வந்த ஆனந்தக் கண்ணீர் டா இது என்றபடி அவளைத் தன தோளில் சாய்த்துக் கொண்டான்.மற்ற சின்னவர்களும் கண்ணீர் வழிய மெல்ல அவனின் அருகில் சென்று அவனின் கரத்தை இறுகப் பற்றியபடி அவனைச் சுற்றி அமர்ந்துகொண்டனர். அவனும் அவர்களின் தலையை வருடிவிட்டான். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு நெகிழ்ச்சித் தருணம் அங்கு மௌனமாக அரங்கேறியது.



அதைக் கண்ட பெரியவர்கள் அனைவரின் விழிகளும் சந்தோசமாக கலங்கியது.