• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 42

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:- 42



அன்றைய நிகழ்வுக்கு பின் பூவினி இந்த இரண்டு நாட்களாக எங்கும் செல்லவில்லை.இப்போது தான் மாமன் வீட்டுக்கு வருகிறாள்.ஏனென்று தெரியாமல் ஒரு தயக்கம் அவளை ஆட்கொள்ள தயங்கியபடியே வாசலுக்கு சென்றவளை கண்ட தமிழ் எப்போதும் போல வினிக்கா என்று ஓடி வந்து அணைத்துக்கொண்டாள். உடனேயே ஒ இனி நான் உங்களை அண்ணி என்று சொல்ல வேண்டுமோ என்று கண்சிமிட்டிக் கேட்க பூவினியின் முகம் சிவந்து மலர்ந்தது.அதைக் கண்டு ஹையோ வினிக்கா வெட்கப்படுறா டோய் என்று மேலும் கலாய்த்துக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சாந்தா ஹேய் வினிக்குட்டி வாடா என்று அவளை அன்போடு அழைத்துச் சென்றார்.





அவளின் தயக்கத்தையும் வெட்கத்தையும் உணர்ந்தவர் போல தமிழ் ஜூஸ் எடுத்துட்டு வா என்று அவளை அனுப்பிவிட்டு வினியின் கையைப் பற்றி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா.இப்படி நீங்கள் ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்னு எங்கள் எல்லோருக்குமே மனசில ஆசை இருந்தது.அதுவும் எனக்கு ரொம்ப ஆசைடா.நீயே இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு.ஆனா உங்க மனசில என்ன இருக்கோன்னு தயங்கிட்டே இருக்கும் போது மித்திரனோட உன் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது.எனக்கு ரொம்ப கவலையாய்ப் போச்சுடா



உன் மாமாகிட்ட என் மன வருத்தத்த சொல்லி புலம்பினேன்.அவர் சொன்னார் யாருக்கு யாருன்னு விதிச்சிருக்கோ அது தான் நடக்கும்.சும்மா மனசப் போட்டுக் குழப்பிக்காதன்னு ஹ்ம்ம் நானும் அப்படி எண்ணி மனச தேத்திக்கிட்டேன். திடீர்னு பார்த்தா எல்லாமே தலைகீழா மாறி இப்படி எங்கள் எல்லாருக்கும் ஒரு இன்பஅதிர்ச்சி.ஆனாலும் ரெண்டு பெரும் செம அழுத்தம் வினி.எதையுமே காட்டிக்கல.நீ இங்கிருந்து போனதுமே நிலவனிடம் ரொம்ப மாற்றம் வினி.சரியா சாப்பிடுறது இல்லை பேச்சு சிரிப்பு எல்லாமே குறைந்து முகத்தில எப்போதுமே ஒரு வெறுமை.அதோட தொழில் தொழில்னு முழு நேரமும் தொழிற்சாலையிலேயோ அலுவலகத்திலேயோ தான் இருப்பான்.





அப்போவே உன்னோட பிரிவு தான் இவனின் மாற்றத்துக்கு காரணமோ.கூடவே வளர்ந்துட்டு இப்படி பிரிஞ்சிருக்கிறது தான் அவனைப் பாதிக்கிறது போல நீ வந்தா சரியாயிடுவான்னு நினைச்சேனே தவிர இப்படி நான் நினைச்சுக்கூட பார்க்கல.அப்படி நினைக்கிறதுக்கான வாய்ப்பையும் நீங்க ரெண்டு பேருமே தரல.சில சமயத்துல உங்க இரண்டு பேருக்கிடையிலும் ஏதாவது மனஸ்தாபம் இருக்குமோ?? பேச்சே குறைவா இருக்கேன்னு தோன்றியதுண்டு.அப்படியும் சந்தேகப்பட முடியாம நீ அவனிடமே பயிற்சி பெற செல்லவும் அந்த சந்தேகமும் மறைந்துவிட்டது. ஹ்ம்ம் ரெண்டு பேருமே ரொம்ப அழுத்தம் பா.முகத்தில கூட எதையும் காட்டிக்காம எப்படி இயல்பா நடிச்சிருக்கீங்கள். என்று செல்லக் கோபத்தோடு சாந்தா முடிக்கவும்.



அவரின் கையைப் பற்றி எதுவும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் பூவினி. இதற்கு அவள் என்ன பதிலைக் கூற முடியும்?





அவளின் நிலை புரிந்தவர் போல் சிரிப்புடன் அவள் கன்னம் வருடி சரி விடு.அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே.இப்போ எல்லோரும் ரொம்ப சந்தோசமா இருக்கோம்.என்ன என் பிள்ளைக்கு உண்மை...ப்ச் விடு உன் மாமா சொன்னது போல அதுவும் ஒரு வகையில் நிம்மதி தான்.காலம் முழுதும் அவனிடம் உண்மையை மறைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சி இருக்காது.என்று உள்ளே சென்ற குரலில் சாந்தா கூறவும்





பூவினிக்கு அவர் மனநிலை தெளிவாக புரிந்தது.என்னதான் வெளியே திடமாக பேசினாலும் உள்ளே தான் அவனை சுமந்து பெற்ற அன்னை இல்லை என்ற உண்மை நிலவனுக்கு தெரிந்துவிட்டதே.அவன் தன்னை இனி முழு பாசத்துடன் அணுகுவானா என்ற தவிப்பு அவரிடம் இருப்பது புரிந்தது.இதற்கு நிலவன் தான் பதில் கூற வேண்டும்.அவரின் அந்த தவிப்பை போக்க அவனால் மட்டும் தான் முடியும். என்று எண்ணியவள் அவரின் கையைப் பற்றி அழுத்திவிட்டாள்.கூடவே





உங்கள் பையன் எங்கே அத்தை கண்ணிலேயே காணோம் என்றாள்.உங்கள் பையன் என்பதில் அழுத்தம் கொடுத்து. புரிந்தாற்போல் லேசாக முறுவலித்தவர் மேலே அவன் அறையில் தான் இருக்கிறான் மா. இன்று சற்று சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிட்டான்.ஏதோ மனசு சரியில்லைப் போல அறைக்குள்ளேயே இருக்கிறான்.டிபன் சாப்பிடக் கூட கீழே வரவில்லை என்று கூறவும்





டிபனைக் கொடுங்கள் அத்தை உங்கள் பையனின் மனதை சரியாக்கி அவரை சாப்பிட வைக்கிறேன் என்று கூறவும் சாந்தா சிரிப்புடன் உன் அத்தானை சந்திப்பதற்கு உனக்கு ஒரு சாட்டு ம்ம் என்று அவள் காதை லேசாக திருகிவிட்டு டிபனைக் கொடுத்து அனுப்பினார்.





பூவினி சிரிப்புடன் மாடியில் கால் வைக்கவும் அண்ணி ஹ்ம்ம் ஹ்ம்ம்...என்று தமிழ் கேலி செய்யவும் போடி என்று அவளுக்கு உதட்டை சுழித்துக் காட்டிவிட்டு மேலே விரைந்தாள்.





நிலவனின் அறைக்கதவு லேசாகத் திறந்தே இருந்தது.இரு விரலால் கதவைத் தட்டினாள்.



யார்?? என்று அவனது குரல் சிறு சலிப்புடன் வெளியே வந்தது.வினி பதில் எதுவும் சொல்லாமல் மீண்டும் கதவைத் தட்டவும் எனக்கு எதுவும் வேண்டாம் ராமுண்ணா அம்மா கிட்ட நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லுங்க என்று சலிப்பும் சற்று கோபமுமாக அவன் குரல் வரவும்





சட்டென கதவைத் திறந்தவள் நான் கூட வேண்டாமா?? என்றாள் முறைப்புடன்.





அவன் வினியை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் திகைப்பும் வியப்புமான பார்வையிலேயே புரிந்தது.பூவினி என வியப்புடன் அவன் அழைக்கவும்





ஆமாம் பூவினியாம் பூவினி.நீட்டி முழக்கி கொண்டு.வினு எங்கே போனாளாம் என்று மனதுக்குள்ளே நொடித்தவள்.சீக்கிரம் சீக்கிரம் இதை எவ்வளவு நேரம் தான் கையிலேயே வைத்திருப்பது.சீக்கிரம் வந்து சாப்பிடலாம் என்றாள் அதிகார தோரணையில்



அப்போதும் அவன் வியப்பு நீங்காமல் அவளையே பார்த்திருக்க ஹலோ பாஸ் இந்த லுக்கெல்லாம் அப்புறம் விடலாம் முதல்ல வந்து சாப்பிடுங்க.எனக்கு உங்ககிட்ட நிறைய பேசணும் அப்புறம் நிறைய தரணும் என்று கூறவே அவன் சிரிப்புடன் கண்கள் மின்ன நிமிரவும் ஹலோ ஹலோ உடனே கனவு காண ஆரம்பிச்சிடாதீங்க நான் தரணும்னு சொன்னது கையாலையும் காலாலையும் அதை தாங்கிக்கிறதுக்கு கொஞ்சமாச்சும் தெம்பு வேணும்னா வந்து முதல்ல இதை சாப்பிடுங்க என்றாள் மிரட்டலாய்.





நிலவனுக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை இவ்வளவு சீக்கிரம் அவள் கோபம் தீர்ந்து தன்னிடம் வந்து உரிமையுடன் பேசுவது வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது.அவனுடைய பழைய வினுவைப் பார்ப்பதைப் போல் இருந்தது.இமை மூடாது அவளையே பார்த்தவன் மெல்ல எழுந்து அவளை நெருங்கினான்.





அவன் அருகில் வரவும் அவள் ஒருவித தடுமாற்றத்துடன் அவன் முகம் பார்க்கவும் மெல்லிய சிரிப்புடன் அவள் கரத்தைப் பற்றியவன் கோபமெல்லாம் போயாச்சா வினும்மா என்றான்.அவனது வினும்மாவில் உள்ளம் உருக அந்த உருகல் கண்ணில் பிரதிபலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் மெல்ல இருந்தால் தானே போவதற்கு என்றாள் முணுமுணுப்பாக.





அவளின் பதிலில் கண்கள் மின்ன ஹே என அவன் அவளை மேலும் நெருங்கவும் சட்டென நகர்ந்தவள் முதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசலாம் என்றாள் சிரிப்புடன்





அவன் அவளையே குறும்புச் சிரிப்புடன் நோக்கி அதற்கு அப்புறம்??? எனவும் முகத்தில் வெட்கமும் சிரிப்பும் போட்டியிட அதற்கப்புறம் உதை என்றாள் மிரட்டலாய்.





அவளின் சிவந்த முகத்தை ரசித்தவன் ம்ஹும்?? என புருவத்தை உயர்த்தவும் அவள் முகம் மேலும் சிவந்தது.



இருவருடைய உள்ளத்திலேயும் உற்சாகமும் மகிழ்ச்சியும் கரை புரண்டு ஓடியது.அத்தனை வருடமாக இதயத்தில் பொத்திப் பொத்தி பூட்டி வைத்த நேச வெள்ளம் கரையுடைத்தது. இதுவரை கற்பனையில் மட்டுமே இப்படி பேசி சிரித்த இருவருக்குமே அது நிஜத்தில் நடப்பதை நம்ப முடியவில்லை.அத்தனை வருடங்களும் இப்படி இனிய நிகழ்வுகள் தங்கள் வாழ்வில் இல்லை என மனதினுள்ளே எண்ணி மறுகியவர்கள் அந்த தருணத்தின் இனிமையை துளித்துளியாய் ரசித்தனர்.







இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று காதலுடன் தழுவி நிற்க ஏதோ தோன்றியதைப் போல் அவனிடமிருந்து பார்வையை விலக்கியவள் சாப்பிடுங்கள் என்றாள்.அவனும் சிறு சிரிப்புடன் நீயும் சாப்பிடு எனவும் இருவரும் மனதில் ஓர் இதத்துடன் மாலைச் சிற்றுண்டியை ஒன்றாக முடித்தனர்.





அதன் பின் சற்று நேரம் மௌனமாய் அந்த தருணத்தை ரசித்த பின் வினும்மா என்று நிலவன் கை நீட்டவும் நீட்டிய அவன் கரத்தை பற்றியபடி அவன் அருகில் மெத்திருக்கையில் அமர்ந்தாள்.அவளின் கரத்தை தன் கரங்களினுள் மென்மையாய் சிறைப்பிடித்தவாறே





என்னால் இதை நம்பவே முடியவில்லை வினி.நம் வாழ்வில் இப்படி ஒரு தருணம் வரும் என்று நான் கற்பனையில் கூட எண்ணிப்பார்த்ததில்லை.என்று ஆழ்ந்த குரலில் கூறவும் வினியும் லேசாக கண் கலங்க மௌனமாக அதை ஆமோதித்தாள்.





சற்று நேரத்தில் நிஜமாகவே உனக்கு என் மீது கோபமே இல்லையா வினி என கேட்கவும்.அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள் யார் சொன்னது இல்லையென்று நிறையவே இருக்கிறது என்றாள் முறைப்புடன் அவன் சிறு சிரிப்புடன் நீ தானே சொன்னாய் கோபம் இருந்தால் தானே போவதற்கு என்று என்று கூறவும்

அது வேறு கோபம் இது வேறு கோபம் என்றாள் பூவினி கோபக்குரலில்.





அது என்ன வேறு கோபமாம் என்று செல்லமாக கேட்டு அவள்மூக்கை பிடித்து ஆட்டவும் அவன் கரத்தை தட்டியவள் நீங்கள் என்ன பெரிய உத்தம புத்திரனா?? நான் கோபமாய் இருந்தால் எப்பாடு பட்டாவது என்னை சமாதானப் படுத்தாமல் பெரிய இவர் மாதிரி கோபம் மாற அவகாசம் கொடுத்து காத்திருக்கிறாராம்.இவ்ளோ நாள் காத்திருந்தது போதாதா?? சரியான ..............என்று ஆத்திரத்தில் அவள் பொரிந்து இடையில் நிறுத்தவும்..







பொங்கி வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி அவளையே பார்த்திருந்தவன் சரியான என்ன வினும்மா?? சாமியாரா?? என்று குறும்புடன் கேட்கவும்





ஆமாம் அப்படியே தான் போடா என்றாள் கோபமும் சிறு சிரிப்புமாக



அவள் பேச்சைக்கேட்டு வாய்விட்டு நகைத்தவன் ரொம்ப கொழுப்புடி உனக்கு. நாம செய்ததும் தப்பாச்சே ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமே சரி உனக்கும் கோபம் இருக்குமே அது கொஞ்சம் ஆறட்டுமேன்னு அவகாசம் கொடுத்தா நீ என்னையே சாமியார்னு கிண்டல் பண்ற உன்னை என்றபடி சிரிப்புடன் அவள் காதைப் பற்றித் திருகியவன்.ஏதோ தோன்றியதைப் போல ஒரு ஆழ்ந்த மூச்சுடன்





வினும்மா நாம நிறைய பேசணும் டா என்றான்.அவள் ம்ம் எனவும் முதல்ல எனக்கு இதை சொல்லு நான் பொய் சொல்கிறேன்னு அதாவது நான் உன்னை வெறுக்கிற மாதிரி நடிக்கிறேன்னு எப்படி தெரிஞ்சது என் விலகலுக்கு உன் பாட்டி தான் காரணம்னு எப்படி தெரிந்து கொண்டீர்கள்.ஹப்பா இந்த உண்மை தெரியாம மண்டை வெடிச்சுடும் போல இருக்கு.மித்திரன் கிட்ட கேட்டா அவன் உன்கிட்ட கேட்டுக்கோன்னு சொல்லுறான்.உன்கிட்ட பேச வந்தா நீ பேசவே தயாரா இல்லை.இந்த ரெண்டு நாளா தலை வெடிச்சிடுச்சுடி.





ஓஹோ அப்போ சார் இந்த ரெண்டு நாளா என்கூட பேசுறதுக்கு முயற்சி பண்ணினதெல்லாம் இதை தெரிஞ்சுக்க தான்.என் மேல உள்ள பாசத்தில இல்ல.அப்படித்தானே என்று வினி கோபத்துடன் வினவவும்





அதிர்ந்த நிலவன் அம்மா தாயே மீண்டும் முருங்கை மரத்துல ஏறிடாதம்மா.சும்மா ஒரு ஆர்வத்தில தான் கேட்டேன் என்று பயந்தவன் போல் கூறவும்





முருங்கை மரத்தில ஏறுறதுக்கு நான் என்ன வேதாளமா?? என்னைப் பார்த்தால் வேதாளம் போலவா இருக்கு என்று அவள் மீண்டும் எகிறவும் சட்டென அவள் முகத்தை இரு கையிலும் ஏந்தினான் நிலவன்.அவனின் அந்த திடீர் செய்கையில் பேச்சு தடைப்பட அதிர்ந்து அவன் முகம் பார்க்கவும் அவள் விழிகளை ஊடுருவிப்பார்த்தவன் நீ வேதாளம் இல்லடி என்னோட அழகு என்று இழுத்து சட்டென இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை தோன்ற ஆடுகால் என்று முடித்தான்.





அவனின் திடீர்த் தொடுகையிலும் பேச்சிலும் திகைத்துப் போய் இருந்தவள் அவன் முடித்ததும் தன்னை மீறி சிரித்துவிட்டாள்.எத்தனை வருடங்களுக்கு பிறகு அவனின் இந்த சீண்டல் பேச்சு.அவள் கண்கள் லேசாக கலங்கியது.அவளின் உணர்வைப் புரிந்தவன் போல மெல்ல அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டவன் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லடா என்றான் கம்மிய குரலில்.

அவனின் குரலே அவனின் வேதனையைப் பறைசாற்ற அவன் கரத்தை அழுத்தமாகப் பற்றியவள் என்னளவு ஏன் என்னை விட அதிகமாகவே நீங்களும் வருத்தப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியும் அத்தான் என்றாள் இதமாக.



அவள் பேச்சைக் கேட்டு ஓர் ஆழ்ந்த பெரு மூச்சை எடுத்து விட்டவன். ஹ்ம்ம் ரொம்பவே டா.என்றான் கரகரத்த குரலில் பின் தொடர்ந்து உன்னை எனக்கு சின்ன வயசில இருந்து ரொம்பவே பிடிக்கும் டி.அழகான பூக்குவியலா நீ பிறந்ததில் இருந்து எனக்கு உன் மேல ரொம்ப பிரியம்.நீ வளர வளர உன்னோட ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் கூடவே இருந்த எனக்கு ஏதோ நீ என்னோட ஏகபோக உரிமை என் சொத்து உனக்கு சரி பிழைகளை எடுத்துக்கூறி உன்னை பத்திரமா பாத்துக்கறது என்னோட கடமை என்ற எண்ணம் மனசில அழுத்தமா பதிஞ்சுடுச்சு.நீ வளர வளர உன் மேல இருந்த என்னோட பாசமும் உரிமை உணர்வும் கூடிகிட்டே தான் போச்சு.அப்போ இருந்தே எனக்கு உன்னை சீண்டி பார்க்க ரொம்ப பிடிக்கும் நீ கோபத்தில முகம் சிவக்கிறப்போ ரொம்ப அழகா இருப்ப தெரியுமா?? என்று ரசனையுடன் கூறியவன் தொடர்ந்து உன்னோட அந்த கோப முகத்தைப் பார்க்கறதுக்காகவே அடிக்கடி உன்னை சீண்டுவேன்.





ஆனா நீ வருத்தப்பட்டா மட்டும் என்னால பொறுத்துக்கவே முடியாது.எப்படியாவது உன் வருத்தத்தை போக்கணும்னு மனசு துடிக்கும்.ஆனா இது எல்லாம் காதலான்னு எனக்கு அப்போ தெரியாது.நான் உன் மீதான என் நேசத்தை முதன் முதலில் உணர்ந்தது என்று கூறி சிறு சிரிப்புடன் அவளைப் பார்க்கவும் அதுவரை விழிகள் விரிய அவன் பேச்சைக் கேட்டபடியிருந்தவள்





ம்ம் சொல்லுங்க எப்போ உணர்ந்தீங்க என்றாள் ஆர்வத்துடன் அவள் ஆர்வத்தைக் கண்டு புன்னகைத்தவன் அவள் தோளைச் சுற்றி வளைத்து அணைத்துக்கொண்டு அவள் விழிகளைப் பார்த்து நீ பத்தாவது படிக்கும் போது ஒரு பையன் காதல் கடிதம் கொடுத்துவிட்டான் அத்தான் என்ன செய்வது என்று விழித்துக்கொண்டு வந்து நின்றாயே அப்போது தான்.என்றான் ஒரு குறுஞ்சிரிப்புடன் பின் தொடர்ந்து



என்னோட வினுக்கு இன்னொருத்தன் காதல் கடிதம் கொடுப்பதா என்று ஐயாவுக்கு செம கோபம். அதோட அந்த விடயத்தை நீ யாரிடமும் பகிர்ந்து கொள்ளாம என்னை நம்பி என்னிடம் வந்து சொன்னதும் மனசுக்குள்ள ஒரு இதத்தை கொடுத்தது. அப்போவே மனசுக்குள்ள இந்த செம்பூ மேல ஒரு பூ பூத்திடுச்சு என விழிகளைச் சிமிட்டி கூறவும் அவள் விழிகளும் ஒளிர்ந்தது.அதைக் கண்டு என்ன கண்ணில அப்படி ஒரு மின்னல் என அவன் வினவவும்





தன்னுடைய மனதிலும் அந்த சம்பவத்தின் போது தான் அவன் மீது வேறு வகையான எண்ணம் விழுந்ததை சிறு நாணத்துடன் சொன்னாள்.அதைக் கேட்டு வியந்தவன் ஹே அப்போவேயா?? என்று சிரித்துவிட்டு அப்போவே அத்தானை செமையா சைட் அடிச்சிருக்கேன்னு சொல்லு என்று கூறி கண் சிமிட்டினான்.





தொடர்ந்து அப்போவே என் மனசு எனக்கு புரிந்தாலும் படிக்கும் வயதில் இது தப்பு உன்னுடைய மனதையும் திசை திருப்பிவிடக் கூடாது என்றெல்லாம் எண்ணி நான் என்னை கட்டுப்படுத்திக்கிட்டேன்.என் படிப்பை முடித்து விட்டு அப்பாவுடன் தொழிற்சாலை நிர்வாகத்தில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்ததுமே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி இனி என்ன இன்னும் சில வருடத்தில் உன் படிப்பும் முடிந்துவிடும் அதன் பின் என் காதலை உன்னிடம் கூறி உன் சம்மதம் பெற்ற பின்பு வீட்டில் பேச வேண்டும்.அதன் பின் திருமணம் இப்படி ஆயிரம் வண்ணக் கனவுகள்.யாரும் இதை மறுப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு அப்போது இல்லை வினு.





அத்தோடு அப்போது உன்னுடைய ஒரு சில பார்வைகளும் நடவடிக்கைகளும் கூட உன் மனதிலும் நான் இருக்கிறேனோ என்ற சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது.ஆனால் அது குறித்து உன்னிடம் நான் நேரில் எதுவும் பேச விரும்பவில்லை.உன் கல்லூரி படிப்பு முடியட்டும் என்று நினைத்து காத்திருந்தேன்.ஹ்ம்ம் ஒருவேளை அப்போதே உன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு துன்பம் எதற்குமே அவசியம் இல்லாமல் போயிருக்குமோ என்னவோ என வலி நிறைந்த குரலில் கூறி அவன் சற்று பேச்சை நிறுத்தவும்





அவனின் கரத்துடன் தன கரத்தை கோர்த்து அழுத்தினாள் வினி அவளின் அந்த சிறு செயல் அவனின் மனக் கட்டுப்பாட்டை உடைக்க அவளின் கரத்தை இறுகப் பற்றியபடியே நான் ரொம்பவும் உடைந்து போனேனடி.உன் பாட்டி உன்னை மணமுடிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை.உன் அருகில் நிற்க கூட நான் அருகதையற்றவன்.ஏனெனில் நான் ஒரு அநாதை என்று கூறிய அந்தக் கணம் என் இதயமே சுக்கல் சுக்கலாக உடைந்து விட்டது.நான் ஒரு அநாதை என்ற அந்த உண்மை தெரிந்ததே பெரிய அதிர்ச்சி என்றால் அதோடு நான் உன்னை நினைப்பது கூட இந்த குடும்பத்துக்கு நான் செய்யும் துரோகம் என்று உன் பாட்டி சொன்னதில் நான் முற்றாக நொறுங்கிப் போனேன்.பேசாமல் இந்த குடும்பத்தை விட்டே கண்காணாமல் எங்கேயாவது போய் விடலாமா என்று கூட எண்ணினேன் வினு.ஆனால் அதுவும் என் மீது உயிரையே வைத்திருக்கும் இந்த உறவுகளுக்கு நான் செய்யும் துரோகமாய்ப் படவே என்னால் அதையும் செய்ய முடியவில்லை.







என் மனதிலுள்ள துன்பத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூட முடியாமல் நான் தவித்த தவிப்பு.அதோடு உன்னிடம் வேறு உன்னை வெறுப்பதைப் போல் நடிக்க வேண்டும். என் மனசு முழுக்க நீயே நிறைந்திருக்க உன்னை வார்த்தைகளால் வதைத்து என்னை விட்டு விலகச் செய்ய வேண்டிய கட்டாயம்.அப்போதெல்லாம் நரக வேதனை அனுபவித்தேன்டி. என்று கூறியவன் அந்த வேதனையை அப்போதும் அனுபவிப்பவன் போல் உடல் இறுக தவிப்புடன் கரங்களையும் விழிகளையும் இறுக மூடினான்.அவனின் வேதனையை உணர்ந்தவளின் விழிகளிலும் கண்ணீர்ப் பூக்கள் காதலுடன் பூக்க அடிபட்ட குழந்தையாய் தவித்தவனின் தலையைக் கோதி கரத்தை பற்றி மெல்ல விரல்களை விரித்து வருடிவிட்டாள். கூடவே அவன் தோள்களையும் வருடி ம்ஹும்..வேணாம் அத்தான் இத்தனை நாள் நீங்கள் அனுபவித்ததே போதும்.இனி பழைய துன்பங்கள் எதையும் எண்ண வேண்டாமே என்றாள் இதமாக.





அவளின் முயற்சி புரிந்தவன் போல் மெல்ல முறுவலித்தவன் எனக்கு தெரியும் வினும்மா என் வாழ்வில் இனி உன் வடிவில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் என்று ஆனால் இதுவரை நான் அனுபவித்த எந்த வேதனைகளையும் யாரிடமுமே பகிர்ந்து கொண்டதில்லை.என்னால் உன்னைத் தவிர என் மன உணர்வுகளை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாதுடி.என்றவன் தொடர்ந்து





உன்னை கோபப்படுத்தி என்னைவிட்டு விலக வைப்பதற்காக ரொம்ப மோசமாகப் பேசினேன்.எனக்கு தெரியும் உனக்கு ரோஷம் ரொம்ப அதிகம் என்று அதனால் உன் தன்மானத்தை சீண்டுவது போல பேசினேன்.நான் எதிர்பார்த்தது போலவே நீயும் கோபம் கொண்டு என்னை விட்டு விலகினாய்.நீ இங்கிருந்து போனதும் எனக்கு என் உலகமே என்னை விட்டு போனது போல இருந்திச்சுடி.வாழ்வே வெறுத்த ஒரு நிலை.எதிலுமே ஈர்ப்பில்லை.கிட்டத்தட்ட பைத்தியமே பிடித்திடுமோ என்ற நிலைக்கு வந்தபோது என் கவனத்தை முழு மூச்சாக தொழிலில் செலுத்தினேன்.உன்னை என் தவிப்பை மறக்க அது உதவியது.பசி தூக்கம் என அனைத்தையும் மறந்து இந்த நான்கு வருடங்களும் தொழில் தொழில் என்று அதிலேயே மூழ்கிப்போனேன்.





என் ஒட்டுமொத்த கவனத்தையும் தொழில் மீதே திருப்பி முழு மூச்சாய் அதில் சாதித்துக் கொண்டிருந்த போது தான் என் கவனத்தைக் கலைத்து என்னை இம்சை பண்ணவென்றே மறுபடியும் நீ வந்து குதித்தாய்.என்று அவன் சிரிப்புடன் கூறவும்





அவள் செல்ல முறைப்புடன் ஹ்க்கும் இந்த சாமியாரின் கவனமாவது கலைவதாவது.நான் இங்கு வந்த அன்று சார் தான் வீட்டுக்கு கூட வரலையே.ஆடி அசைந்து ஒரு வாரம் கழித்து வந்து பார்த்து ஆ.... ஊ... ...னு கத்திட்டுப் போனார். ஏன் அத்தான் உங்களுக்கு அவ்ளோ நாள் கழிச்சு வாற என்னை உடனே பார்க்கனும்னு தோணவே இல்லையா? எனக்கு உடனே உங்களைப் பார்க்கணும் போல எவ்ளோ ஆசையா இருந்திச்சு தெரியுமா?? என்று ஏக்கம் நிறைந்த குரலில் அவள் கூறவும் அவனுக்கு உள்ளே உருகியது.



 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
அவளை தன்னுடன் சேர்த்து லேசாக அணைத்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி விழிகளுக்குள் ஆழ்ந்து பார்த்தான்.அவன் விழிகளில் ஏதோ சேதி தெரிய அவள் அத்தான் என வியப்புடன் அழைக்கவும் சிறு சிரிப்புடன் கண் சிமிட்டி விட்டு எழுந்து சென்று தன்னுடைய மடிகனணியை எடுத்து வந்து உயிர்ப்பித்து அதில் ஒரு ரகசிய கடவுச் சொல்லை கொடுத்து ஒரு போல்டெர் ஐ ஓபன் செய்தான்.





அவன் செய்வதை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்த வினியின் கண்கள் அந்த போல்டெரில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து வியப்பில் விரிந்தது.அத்தான் என்று வியப்பும் மகிழ்ச்சியுமாக கூவினாள்.ஏனெனில் அதில் இருந்தது அவளது புகைப்படங்கள்.அவள் விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவை எடுக்கப்பட்டிருந்தது. மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டு தாய்நாட்டு சுவாசக்காற்றை ரசிக்கும் அவள்.தாரணி பின்னால் இருந்து கண்ணைப் பொத்தியிருக்க அவள் கரத்தைப் பற்றியபடி புன்னகைக்கும் அவள்.தந்தையின் தோளில் சிறு புறாவாய் சாய்ந்து விசும்பும் அவள் என விமான நிலையத்தில் நடந்த அத்தனை காட்சிகளும் படமாகியிருந்தன.





அவள் வியப்பும் மகிழ்ச்சியுமாக அவனைப் பார்க்க அதுவரை அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன்.புன்னகையுடன் எப்படி?? என்று புருவம் உயர்த்தவும்





சரியான திருடன் அத்தான் நீங்கள் என்று அவன் தோளில் அடிக்கவும் அடித்த அவள் கையைப் பற்றியவன் நீ வருகிறாய் என்று தெரிந்ததுமே உன்னை பார்த்தே ஆக வேண்டும் என்று உடலின் ஒவ்வொரு அணுவும் துடிக்க தொடங்கி விட்டதடி.நானும் எவ்வளவோ மனதை அடக்கிப் பார்த்தேன் ம்ஹும் முடியவே இல்லை.எனக்கு தெரியும் அந்த நிலையில் உன்னை நேரில் சந்தித்தால் நிச்சயம் என்னால் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவே முடியாது.என்னை மீறி என் மனதை வெளிப்படுத்தி விடுவேன் என்று. உன்னை பார்க்காமலும் இருக்கலாம் போல் தோன்றவில்லை.அதனால் யாருக்கும் தெரியாமல் விமான நிலையத்துக்கே வந்து உன்னை ஆசை தீரப் பார்த்து தேவையான அளவு புகைப்படமும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் வந்தவழியே கிளம்பிவிட்டேன்.என்றான் சிரிப்புடன்.அவனின் காதலில் அவளின் இதயம் நெகிழ்ந்தது.மெல்ல காதலுடன் அவனின் தோளில் தலையை சாய்த்துக்கொண்டாள். அவளின் தலையை மெல்ல வருடியவன் தொடர்ந்து





ஹ்ம்ம் என்ன தான் உன் அருகில் இருந்தாலே ஏதோ ஓர் சமயத்தில் தடுமாறி விடுவேனோ என்று பயந்து நான் விலகி விலகி ஓடினாலும் அழகு ராட்சஷி நீ விட்டால் தானே.இங்கு வந்த ஆரம்பத்தில் நான் எதிர்பார்த்த மாதிரியே விலகி இருந்த நீ பின்னர் ரொம்பவே என்னை நெருங்க ஆரம்பித்தாய் நான் என்ன பேசினாலும் அதைக்கண்டு கொள்ளாமல் நெருங்கி நெருங்கி வந்தாய்.கடைசியில் மறுக்க முடியாத காரணத்தோடு என் அலுவலகத்துக்கே வந்துவிட்டாய். உன்னுடன் அதிக நேரம் அருகில் இருந்தாலே என்னுடைய கட்டுப்பாடுகள் தளர்ந்துவிடுமோ என்று நான் பயந்தேன்.உன்னிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் விலகி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் நினைக்க மட்டும் தான் முடிந்தது.





அந்த சமயத்தில் மித்திரன் வேறு.அவன் உன்னிடம் நெருங்கி உரிமையுடன் பழக பழக எனக்கு உள்ளே பயங்கர காந்தல்.என் வினியுடன் இவனுக்கென்ன பேச்சு என்ற கோபம் உரிமைப் போராட்டம் வேறு.அதுவும் அவன் உன்னுடன் நெருக்கமாக பழக பழக அவனை உன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தவே வேண்டுமென்று நான் உன்னிடம் சற்று நெருக்கம் காட்டினேன்.நீ அவனுடன் வீட்டுக்கு ஒன்றாய் செல்வதை தடுக்கவே சில சமயங்களில் அதிக வேலை கொடுத்து உன்னை தாமதிக்க பண்ணிவிட்டு நானே அழைத்துச் செல்லுவேன்.உனக்கேனடா இந்த வைக்கோல் போர் நாயின் குணம் என்று உள்ளே மனச்சாட்சி குரல் கொடுத்தாலும் என்னால் நீ அவனுடன் நெருங்கி பழகுவதை பொறுக்க முடியவில்லை.என்று தன் மனநிலையை தீவிரமாக கூறிகொண்டிருந்தவன் சட்டென பேச்சை நிறுத்தி சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்து அச் சமயத்தில் தான் நான் முதல் முதல் தடுமாறி உன்னிடம் செமையாக மாட்டிக்கொண்டேன் என்றான்.





அவன் எந்த சம்பவத்தைக் கூறுகிறான் என்று புரிந்து கொண்ட அவளின் முகம் அன்றைய நிகழ்வின் நினைவில் செம்பூ போலவே மலர்ந்து சிவந்தது.அவளின் முகத்தையே இதழ்களில் சிரிப்புடனும் கண்களில் ரசனையுடனும் நோக்கியபடியிருந்தவன் மனதில் அதுவரை தோன்றாத உணர்வொன்று தோன்ற மெல்ல அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.அவன் பார்வையை சந்திக்க முடியாமல் விழிகள் தாழ இதயம் படபடக்க பேச்சை மாற்றும் பொருட்டு நீங்கள் அதற்கெல்லாம் முதலே என்னிடம் மாட்டிவிட்டீர்கள் அத்தான். நீங்கள் இப்படி மனதை மறைத்து நடிக்கிறீர்களோ என்ற சந்தேகம் தோன்றிய பின்பு தான் நான் உங்களிடம் நெருங்கவே ஆரம்பித்தேன் என்றாள் சிரிப்புடன்.





அதைக்கேட்டு நிலவன் வியப்புடன் ஹே எப்படி?? அதற்கு முன் உனக்கு சந்தேகம் வருவது போல நான் என்ன செய்தேன்?? என்று குழப்பத்துடன் வினவவும்.





சிறு சிரிப்புடன் ஆலயத்துக்கு சென்ற அன்று நடந்ததை விவரித்தாள் ஒ ..என்றவன் ஆனால் நான் தான் உடனேயே சொல்லிவிட்டேனே வினி அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித் தான் நடந்துகொண்டிருப்பேன் என்று அதற்கு பின்னும் எப்படி உனக்கு சந்தேகம் தோன்றியது என கேட்கவும்





ம்கும்..நீங்கள் சொன்னால் நாங்கள் அப்படியே நம்பி விடுவோமாக்கும்.உங்கள் அந்த அக்கறையான செய்கை மட்டும் என்றால் கூட ஏதோ ஒருவிதத்தில் சரி பரிவு மட்டும் தான் போல என்று நீங்கள் சொன்னதை நம்பியிருப்பேன்.ஆனால் என்று இழுத்தவள் குறும்புச் சிரிப்புடன் என்னை அன்று காலையில் முதன் முதலாக புடவையில் கண்டதும் பார்த்தீர்களே ஒரு பார்வை.அதைக் கண்டபின்பும் நீங்கள் சொன்னதை நான் நம்பியிருப்பேன் என்றா நினைத்தீர்கள் என்றாள் விழிகளைச் சிமிட்டியபடி.





அவள் பேச்சைக் கேட்டு லேசாக அசடு வழிய அதை அப்போவே கவனித்துவிட்டாயா??? என்று கேட்கவும்





கலகலவென்று சிரித்தவள் நான் மட்டும் இல்ல பா.மித்துவும் தருவும் கூட கவனித்துவிட்டார்கள்.சொல்லப் போனால் மித்துவுக்கு நம்ம மேல் சந்தேகம் வந்ததே அதிலிருந்து தான் என்றாள்.





ஒ..மித்திரனுக்கு அப்போவே நம்ம விடயம் தெரியுமா?? என்றவன் அப்புறம் ஏன் அவன் என்னை சீண்டுவது போல நடந்துகொண்டான்?? என கேட்கும் போதே அவன் கண்கள் மின்ன ஹே அப்போதிருந்தே எல்லாம் திட்டம் போட்டு காய் நகர்த்தியிருக்கிறீர்கள்??? அது தெரியாம நான் உங்ககிட்ட மாட்டியிருக்கேன் என்று கூறவும்.





அதைக் கேட்டு வாய்விட்டு கலகலவென சிரித்தவள் அப்படி எங்ககிட்ட மாட்டினது சாருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு போல என்றாள் கிண்டலாய்.





அவளின் சிரிப்பை ரசனையுடன் பார்த்தவன்.அவள் தலையைப் பற்றி ஆட்டி உன்கிட்ட மாட்டுறது எனக்கு எப்போவுமே கஷ்டம் இல்லை.ரொம்ப இஷ்டம் தான் வினும்மா என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி கிசுகிசுப்பான குரலில்.அவன் குரலும் அந்த நெருக்கமும் அவளை மீண்டும் மௌனமாக்கி ஏதோ ஒரு தயக்கத்தை அவளுள் விதைக்க அவள் பேச்சு தடைப்பட்டது.

அதை உணர்ந்தவன் போல அவள் முகத்தை நிமிர்த்தி என்ன மேடம் சாமியார் அது இதுன்னு என்னை கிண்டல் பண்றீங்கள்.ஆனா நான் கொஞ்சம் நெருங்கி வந்தாலே பேச்சுக் கூட வருதில்ல?? என்னைப் பார்க்க அவ்ளோ பயமா இருக்கா என்ன?? என்றான் புருவத்தை உயர்த்தி கிண்டலாக





அவள் சிறு தடுமாற்றத்துடன் ப..பயமா?? அதுவும் எனக்கா என்று தைரியமாக பேச முயலவும்



அப்போ பயமில்ல என்றபடி சட்டென அவன் அவள் இடையை வளைத்து தன்னை நோக்கி இழுக்கவும் அவனிடமிருந்து அதனை எதிர்பார்க்காத வினி அதிர்ந்து போனாள்.



தன கைகளுக்குள் பூங்கொத்தாய் சிறைப்பட்டிருக்கும் அவளை நோக்கி குனிந்தவனுக்கு அவளின் பயத்தில் விரிந்த விழிகளையும் அதிர்ச்சியில் உறைந்த முகத்தையும் காண மற்ற உணர்வெல்லாம் பின்னுக்குப் போக சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. வாய் விட்டு ஹ ஹ ஹ...என்று நகைத்தவன் இவ்ளோ பயமிருக்கிறவ வாயை வைத்துக்கொண்டு சும்மா இருப்பது தானே என்று கேலி செய்தவன் மெல்ல அவளை விடுவித்தான்.





பூவினிக்கு பேச்சே வரவில்லை.எதிர்பாராது நடந்த சம்பவத்தில் அதிர்ந்து போய் இருந்தாள்.அவளின் நிலையை உணர்ந்தவன் போல ஹேய் வினு என்று அவள் தோளில் தட்டினான்.அவள் ஓரளவு சுயவுணர்வு பெற்று முகம் சிவக்க பார்வையை திருப்பவும் அவள் கரத்தை பற்றியவன் ஏய் இதுக்கே இப்படி ரியாக்ட் பண்ணினா இன்னும் எவ்ளோ இருக்கே?? என்று கண்சிமிட்டி கிசுகிசுக்கவும் அவள் முகம் மேலும் சிவந்தது.





அவளின் சிவந்த முகத்தை ரசனையோடு நோக்கி புன்னகைத்தவன் இதற்கு மேலும் இப்படியே பேசினால் அவள் அதற்கு மேல் இயல்பாக பேசவே மாட்டாள் என்பது புரிய பேச்சை திசை திருப்பினான்.கூடவே அவனுக்கு தெரியவேண்டியதும் சிலது இருந்தது.





க்ம்..அன்றைக்கு என்னை மீறி உன்னை முத்தமிட்ட பின் என்னால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை வினு.அத்தனை வருடம் பட்ட துன்பம் தவிப்பு போட்ட நாடகம் எல்லாம் வீணாக போய்விட்டதே.நீ வந்து எதற்கு இந்த நடிப்பு என்று கேட்டால் உன்னிடம் என்ன கூறி சமாளிப்பது என்றெல்லாம் ரொம்பவே தவித்துப் போனேன்.அப்போதைக்கு நீ வந்து பேசினால் உன்னிடம் எதைக் கூறி சமாளிப்பது என்றும் எனக்கு தெரியவில்லை.அந்த பிரச்சினையில் இருந்து அதாவது உன்னை உடனே சந்திப்பதில் இருந்து தப்பிக்கவே மறுநாள் காலையிலேயே கொடைக்கானல் கிளம்பி போனேன்.அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து என்னென்னவோ சிந்தித்து உன்னை எப்படி சமாளிப்பது என்று ஒரு திட்டமும் போட்டுக்கொண்டு தமிழின் பிறந்த நாளைக்கு வந்தால் நான் எதிர்பார்த்து பயந்தது போல நீ அன்றைய சம்பவம் குறித்து எதுவுமே கேட்கவேயில்லை. ஏன் வினி?? என்றான் வியப்புடன்





ஹ்ம்ம்..அன்றைக்கு நீங்கள் நடந்துகொண்டது எனக்கு ஒரு ஆதாரமாக தோன்றியது.அது குறித்து மறுநாளே உங்களிடம் பேச வேண்டும் என்று பார்த்தால் ஐயா எஸ்கேப்.கோபம்னா அப்படி ஒரு கோபம் வந்தது.உங்கள் கன்னத்தில் நாலு போட்டு மனசில என்னடா நினைச்சிட்டிருக்கன்னு கேட்கனும்னு நீங்கள் எப்போ வருவீங்கள்னு பார்த்துட்டே இருந்தா அதுக்குள்ளேயே உங்கள் நேசத்தை ஐயம் திரிபற நான் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது.அதுக்குப் பிறகு உங்கள் மீது இருந்த கோபமெல்லாம் போய் நீங்கள் இப்படி மனதை மறைத்து நடிப்பதற்கு ஏதோ பெரிய காரணம் இருக்கும் போலவே.அது என்னவாக இருக்கும் என்ற குழப்பம் தான் மனசை குடைஞ்சுட்டே இருந்திச்சு.





ஹே அது என்ன ஐயம் திரிபற?? எப்படி?? என அவன் வியப்புடன் வினவவும் சிறு சிரிப்புடன் எழுந்து சென்று அன்று தான் வைத்த அந்த கோப்பினை எடுத்து வந்தாள்.அவன் புரியாது பார்க்கவும் அதை திறந்து அந்த கவிதை வரிகள் எழுதிய ஓவியத்தை எடுத்துக் காட்டினாள்.அதைக் கண்டு அவன் விழிகள் விரிய மறுபடியும் அந்த வரிகளைப் படித்த அவள் விழிகள் கலங்கி கண்ணீர் முத்துக்கள் சிதறியது.





முதல் முதல் அதைக் கண்ட போது தான் அனுபவித்த உணர்வுகள் நினைவு வர இதைப்படித்ததுமே நான் உடைந்துவிட்டேன் அத்தான்.இதை விட உங்கள் காதலுக்கு வேறு என்ன சான்று வேண்டும் கூறுங்கள்.இதைப் பார்த்த அந்தக் கணம் உடனே உங்களைப் பார்க்க வேண்டும் உங்கள் நெஞ்சில் சாய்ந்து கொண்டு கதற வேண்டும் என்று எவ்வளவு தவித்தேன் தெரியுமா?? என்று அழுகையினூடே கலங்கிய குரலில் அவள் கூறவும்





அவள் நிலையை உணர்ந்தவன் போல அப்போது தோன்றியதை இப்போது செய்யலாமே வினும்மா.இப்போது உன் அத்தான் உன் அருகிலேயே தானே இருக்கிறேன் என கரகரத்த குரலில் கூறி கரங்களை விரித்தான் நிலவன்.அவனின் கரகரத்த குரல் அவனின் மனநிலையை சொல்ல அவளுக்கும் அப்போது அவனின் அருகாமை வேண்டும் போல் தோன்ற மெல்லிய விசும்பலுடன் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.மார்பில் சாய்ந்தவளை மென்மையாக அணைத்தவன் அவள் உச்சியில் தன கன்னத்தை சாய்த்து உன் நியாபகமாய் இப்படி சில பொருட்களை நான் பத்திரப்படுத்தியிருந்தேன் வினும்மா.இந்த ஓவியம் என் அலமாரியில் ஒரு ரகசிய அறையில் வைத்திருந்தேன்.தோன்றும் போது இதை எடுத்துப் பார்ப்பேன்.அப்படி ஒரு நாள் இதை எடுத்து பார்த்து இதை நாம் வரைந்த அன்றைய தினத்தை நினைத்து சிரித்துக்கொண்டிருக்கும் போது யாரோ கதவைத் தட்டவும் அவசரமாக அருகில் இருந்த கோப்பில் வைத்து மூடி மேலே வைத்துவிட்டு சென்றுவிட்டேன்.அதன் பின் வேலைகளில் இதை இடமாற்றி வைக்க மறந்துவிட்டேன்.அது இப்படி உன் கையில் சிக்கியிருக்கிறது. ஆனால் இதைப் பார்த்த பின்பும் நீ என்னிடம் எதையுமே கேட்கவே இல்லையே ஏன் வினி??





இதைப் பார்த்த பின்பும் நான் எப்படி சும்மா இருப்பேன்.உங்களிடம் பேச வேண்டும்.எந்த பிரச்சினையாய் இருந்தாலும் இருவரும் சேர்ந்தே சமாளிக்கலாம். இந்த விலகல் நாடகம் இனியும் வேண்டாம் என்று கூறத்தான் இருந்தேன்.தமிழின் பிறந்த நாள் விழா முடியட்டும் அதன் பின் பேசுவோம் என்று காத்திருந்தேன்.ஆனால் அப்படி பேசுவதற்கு அவசியமே இல்லாமல் உண்மை முழுதும் தெரிந்துவிட்டது என்றவள்





விழா அன்று கண்மணி அவனிடம் பேசியதையும் அதற்கு முன்பே பாட்டி மேல் லேசாக மித்திரன் கொண்டிருந்த சந்தேகத்தால் கண்மணியை தொடர்ந்து வந்து உண்மை அறிந்ததையும் அதன் பின் மித்திரன் தாரணி தான் என மூவரும் சேர்ந்து திட்டம் போட்டு காய் நகர்த்தியதையும் அதற்கு கங்காவும் ஜெகநாதனும் உதவி செய்ததையும் என அனைத்தையும் கூறினாள்.





அதைக் கேட்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவன் சிறு பெருமூச்சுடன் மித்திரனுக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் வினி.என்றான்.





ம்ம்..என்றவள் ஒன்று செய்யுங்களேன் அத்தான் அந்த நன்றிக்கடனுக்கு பிரதியுபகாரமாக வீட்டில் பெரியவர்களிடம் பேசி தாரணியை மித்துக்கு திருமணம் செய்து வையுங்களேன்.என்றாள் அப்பாவியாக.



அவளின் காதைப் பற்றி திருகியவன் ஏய் என்ன அண்ணனோட லவ்வுக்கு சப்போர்ட் ஆ ம்ம்?? எனவும்



தங்கையோட லவ்வுக்கு அண்ணன் இவ்ளோ சப்போர்ட் பண்ணும் போது அண்ணனோட லவ்வுக்கு இந்த தங்கை சப்போர்ட் பண்ணினா என்னவாம் என்றாள் துடுக்காக.





அவள் பேச்சைக் கேட்டு சிரித்தவன் தப்பே இல்லைத் தான் ஆனால் உன் அண்ணன் செம ஆள்டி. அவனுக்கு நம்மளோட உதவிலாம் தேவையேபடாது. அவன் நேரடியா வீட்டுப் பெரியவங்க கிட்ட அவன் வீட்டில சொல்லி பேசிட்டான்.எல்லோருக்குமே சம்மதம் தான்.





ஒ...இந்த மித்து இதை என்கிட்ட சொல்லவே இல்லை பாருங்கத்தான்.





ம்ம்..நீதான் என்னை தவிர்க்கிறதுக்காக இந்த ரெண்டு நாளும் அறைக்குள்ளேயே பூட்டிட்டு இருந்தியே.அப்புறம் எப்படி உனக்கு சொல்றதாம்.என்று நிலவன் சிறு கோபத்துடன் கேட்கவும்.





அவனின் கோபத்தைப் பார்த்து சிறு சிரிப்புடன் வேணும்னே தான் அப்படிப்பண்ணினேன் என்றாள்.





அவன் ஏன்டி?? எனவும்



என்னதான் உங்கள் செய்கைகளுக்கு ஆயிரம் நியாயமான காரணம் இருந்தாலும் நீங்கள் என்னை எத்தனை வருடம் தவிக்கவிட்டீர்கள்.அதுக்கு கொஞ்சமாச்சும் தண்டனை வேணாம் அதான் இந்த ரெண்டு நாளும் உங்களைத் தவிக்கவிட்டேன் என்று கூறி கண்சிமிட்டி சிரித்தாள்.





அவளை கோபத்துடன் முறைக்க முயன்று முடியாமல் புன்னகைத்தவன் இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடி என்றான் ஒரு மாதிரி குரலில்



அவனின் அந்த குரலிலும் பேச்சிலும் வினி மீண்டும் லேசாக முகம் சிவக்கவும் ஹேய் இதை சொல்லு இந்த விசயமெல்லாம் அப்பாவுக்கு எப்படித் தெரியும்?? நீ தான் சொன்னேன்னு சொன்னாரே.எப்போது சொன்னாய்?? என்றான் அறியும் ஆர்வத்துடன்





அவனின் கேள்வியில் சிரித்தவள் நான் எங்கே சொன்னேன்.நானே மாமாகிட்ட மாட்டிகிட்டேன்.வேற வழியில்லாமல் எல்லாத்தையும் சொல்ல வேண்டியதாய்ப் போய்விட்டது.என்றாள்





அவன் கேள்வியாய்ப் பார்க்கவும் எங்கள் நிச்சயதார்த்த நாடகத்துக்கு முதல் நாள் இரவு தோட்டத்தில் உங்களை சந்தித்துவிட்டு அழுதபடி ஓடினேனே அப்போ மாமா உங்களைத் தேடி தோட்டத்துக்கு வந்துட்டிருந்தார் நான் அழுதுட்டே ஓடிப்போய் அவர் மேலேயே மோதி நின்றேன்.என்று கூறி அதன் பின் அவரிடம் எல்லாம் சொன்ன கதையை கூறினாள்.





ஒ என்று கேட்டவன் ஏதோ தோன்றியதைப் போல ஏய் ஏன்டி என்னை அன்னைக்கு அப்படி அறைஞ்ச?? எப்படி வலிச்சுது தெரியுமா?? எனவும்





ம்ம் ஒரு கன்னத்தோட விட்டேனே என்று சந்தோசப்படுங்க சார்.பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு கேள்வி வேறையா?? அத்தனை நாள் வராத தைரியம் மறுநாள் நிச்சயதார்த்தம் என்றவுடனே தான் வந்திச்சாக்கும்.அந்த தைரியம் முதலே வந்திருக்கலாம்ல.என்று முறைப்புடன் கூற நிலவன் சிரிப்புடன் ஏதோ கூற வரவும்





வெளியே தமிழ் அண்ணா அண்ணி நேரம் எட்டு மணி.சாப்பிட வாற ஐடியா இல்லையா?? என்றாள் சத்தமாக தமிழின் அண்ணி என்ற அழைப்பில் நிலவன் வினியை பார்க்க அவள் அவன் பார்வையை சந்திக்காமல் லேசாக முகம் சிவக்க இதோ வருகிறேன் தமிழ் என்றபடி விரையவும்

சட்டென நிலவனின் கரம் நீண்டுவந்து அவளைப் பற்றி இழுத்தது.எதிர்பாராமல் அவன் இழுத்ததில் மொத்தமாக அவன் மார்பில் வந்து விழுந்தவளை இடையோடு வளைத்து அணைத்தவன் ஒரு கையால் தன் நெஞ்சில் இருந்தவளின் முகத்தை நிமிர்த்தி திகைப்புடன் லேசாக விரிந்திருந்த அவளின் மலரினும் மெல்லிய இதழ்களில் அழுத்தமாக முதல் முத்தத்தைப் பதித்தான்.அந்த முத்தத்தின் தாக்கத்தில் அதிர்ந்து உடல் சிலிர்க்க நின்றவளை அணைத்த வேகத்தில் விலக்கி நிறுத்தியவன் அவள் கன்னத்தை தட்டி கண்சிமிட்டி விட்டு ஒரு உற்சாக சீழ்க்கை ஒலியோடு கதவைத்திறந்து விரைந்து வெளியே சென்றுவிட்டான்.





எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் அவனின் முதல் முத்தத்தின் தாக்கத்தில் திகைத்து நின்றாள் பூவினி.உடலெல்லாம் பரவிய உணர்வுகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வரவே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது.இதயம் படபடக்க மூச்சுவாங்க சற்று நேரம் உள்ளேயே நின்று தன்னை சமன் செய்தவள்.சிறிது நேரம் கழித்து மெதுவாக கீழே சென்றாள்.





கீழே கூடத்தில் சாந்தாவின் அருகே அமர்ந்து அவர் கரத்தை பற்றியபடியே சிறு பையன் போல் ஏதோ பேசிக்கொண்டிருந்தான் நிலவன்.பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு பாரேன் அத்தையிடம் ஏதோ அப்பாவி போல் உக்கார்ந்து கதையளப்பதை என்று மனதுள் கறுவிக்கொண்டே அவனைப் பார்த்தால் யாரும் அறியாமல் அவளை நிமிர்ந்து பார்த்து குறும்பாக கண்ணடித்தான் வினி இதயம் படபடக்க வெட்கத்துடன் பார்வையை திருப்பிக்கொண்டாள்.





அப்போது தான் தமிழைக் கவனித்தாள் கண்கள் இரண்டும் பளபளக்க உதடுகள் துடிக்க சிரிப்பை அடக்க முடியாமல் அடக்குபவள் போல் உதட்டை அழுந்தக் கடித்தபடி அமர்ந்திருந்தாள்.வினி தன்னை நோக்குவதைக் கண்டவளின் பார்வை அவளையும் அறியாமல் தமயனிடம் பாய்ந்து மீண்டு மேலும் பளபளத்தது.



ஏன் இப்படி சிரிப்பை அடக்குகிறாள் என்று எண்ணியபடி தமிழின் பார்வையை தொடர்ந்த வினியின் பார்வை அவன் சட்டையில் நிலைக்க அவள் முகம் கணப்பொழுதில் ரத்தமெனச் சிவந்தது.வினிக்கும் புரிந்து விட்டது என்பதை அறிந்த தமிழ் அதற்கு மேலும் சிரிப்பை அடக்க முடியாதவளாய் தன்னை மீறி வெளிப்பட்ட “ஹக்” என்ற ஒலியுடன் வாய்விட்டுச் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.







அவளின் சிரிப்புச் சத்தத்தில் நிமிர்ந்த சாந்தா உக்காருடா வினிக்குட்டி.ஆமாம் அவள் எதற்கு இப்படிச் சிரித்துக்கொண்டு ஓடுகிறாள்.என்றார் வினியைப் பார்த்து.





வினியால் என்ன சொல்லமுடியும் அவள் பதில் சொல்ல முடியாமல் திணறி முகம் சிவந்து தடுமாறவும் அவள் முகத்தை ஒரு கணம் கூர்ந்த நிலவன் இரண்டும் ஏதாவது ரகசியமாய் ஜோக் அடித்திருப்பார்கள் அம்மா விடுங்கள் என்று சாமாளித்தான்.





அதன் பின் சாப்பிட்டுச் செல்லும்படி கூறிய சாந்தாவிடம் உறுதியாக மறுத்துவிட்டு அதற்கு மேல் அங்கு ஒரு கணமும் இருக்க முடியாதவள் போல் கிளம்பிவிட்டாள்.வீடுவரை தானும் வருவதாக நிலவனும் வரவும் மறுக்க முடியாமல் கூட நடந்தாள்.அவர்கள் வீட்டுத் தோட்டம் தாண்டி வினி வீட்டுத் தோட்டத்தை அடைந்ததும் அவள் கை பற்றி நிறுத்திய நிலவன் ஏய் வினி தமிழ் ஏன் அப்படிச் சிரித்தாள்?? நீ வேறு அவ்ளோ வெட்கப்பட்டியே?? என்ன விடயம் வினி என்றான் விழிகளில் ஓர் குறுகுறுப்புடன்.அவள் எதுவும் கூறாது உள்ளே போன குரலில் ஒன்றுமில்லை கையை விடுங்கள் அத்தான் எனவும்.





ம்ஹும் ஏதோ இருக்கு.நீ சொல்லாமல் நான் கையை விடமாட்டேன் என்று அவன் விழிகளில் சிரிப்பும் குரலில் உறுதியுமாக கூறவும் வேறு வழியின்றி அவனை நெருங்கி அவனின் சட்டையின் கொலரின் ஓரம் ஒட்டியிருந்த தனது கறுப்பு பொட்டை எடுத்து காட்டினாள்.அதைப் பார்த்து ஒரு கணம் புரியாமல் குழம்பிய நிலவனின் முகத்தில் சட்டென விஷயம் புரிந்ததற்கான தெளிவு வர சிறு சங்கடமான முறுவலோடு ஒற்றை விரலால் நெற்றி ஓரம் வருடியவாறு லேசாக தலை குனிந்தான்.அந்த நேரம் பெண்களின் வெட்கம் அழகென்றால் ஆண்களின் வெட்கம் பேரழகு என்று எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு வந்து அதன் உண்மைத்தன்மையை உணர்த்தியது வினிக்கு.சிறு சிரிப்புடன் அவன் வெட்கத்தை ரசித்தவள் அவனின் தளர்ந்த பிடியிலிருந்து கையை விடுவித்தவாறு இரவு வணக்கம் அத்தான் என்றாள். பதிலாக மெல்லிய புன்னகையுடன் தானும் இரவு வணக்கம் கூறியவன் பைடா என்றபடி விடைபெற்றான்.



அன்றைய இரவில் நீண்ட நெடிய பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த காதலர்கள் இருவரும் மனம் முழுதும் இனிமையான உணர்வுடன் தூக்கம் வராமல் புரண்டு இறுதியில் இதழ்களில் புன்னகையுடனேயே துயில் கொண்டனர்.