• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 45

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,054
479
113
Tirupur
இதழ்:- 45



வசந்தகால நீரோட்டத்தின் விரைவுடன் ஓடிய ஓராண்டின் பின்



குமாரசாமி வீட்டு திருமணம்.



அந்த ஊரே களைகட்டி இருந்தது.அதுவும் இரு திருமணங்கள் ஒன்றாக நடப்பதனால் திருமண ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாய் இருந்தன.இரு வாரங்களுக்கு முன்பே உறவினர் வருகையும் விருந்தும் கலகலப்புமாய் அந்த பெரிய வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.குடும்பத்தினர் அனைவரும் மனம் முழுதும் மகிழ்ச்சியும் முகம் முழுதும் மலர்ச்சியுமாய் வளைய வந்தனர்.



மித்திரன் சொன்னது போலவே அந்த ஒரு வருடத்தில் தன் கான்ராக்ட் இனை முடித்ததோடு பெற்றோருடன் மொத்தமாகவே தாய்நாடு திரும்பிவிட்டான்.கங்காவுக்கும் அவர் கணவன் வெற்றிவேலுக்கும் கூட என்ன தான் வசதி வாய்ப்புக்களைத் தேடி அந்நிய தேசத்தில் கால்பதித்தாலும் மனம் முழுதும் தாய்நாட்டில் வாழும் ஏக்கம் நிறைந்து இருந்ததனால் அவர்களும் மகனின் ஆசைக்கு மகிழ்ச்சியுடனேயே சம்மதித்தனர்.



அதுவரை உழைத்த பணத்தை தங்கள் ஊரிலேயே முதலீடு செய்து தங்கள் ஊரை முன்னேற்ற வேண்டும் என்ற ஆர்வம் மனதில் இருக்க அதை நிறைவேற்றும் கனவோடு இருந்தனர்.மித்திரனின் வருங்கால திட்டங்கள் அனைத்துமே அவர்கள் ஊரை மையப்படுத்தியே இருந்தது.அதற்கான முன்னேற்பாடுகளை அவன் அங்கிருந்த அந்த ஒருவருட காலப் பகுதியிலேயே பத்மன் மற்றும் நிலவனின் துணையோடு ஆரம்பித்திருந்தான்.



கண்மணி மகிழ்ச்சியில் திளைத்தார்.அவரது இருபிள்ளைகளும் அவரின் ஆசைப்படி இனி காலம் முழுதும் அருகிலேயே ஒற்றுமையுடன் இருப்பார்கள்.அத்துடன் மித்திரனின் பேச்சில் தாயின் மனநிலையை உணர்ந்த பத்மனும் கங்காவும் தாயின் மீது பாசத்தை சொரிந்தனர்.அவர் மீண்டும் வரவே வராதோ என்று எதிர்பார்த்து ஏங்கிய அந்த இனிமையான வாழ்வு அவருக்கு மீண்டும் கிடைத்தது.மகன் மகள் பேரன் பேத்தி என்று அவர் அன்பு வைத்த அனைவரும் அவரை சுற்றி இருந்து அவர் மீது அன்பை சொரிந்தனர்.அவர் கிட்டவே கிட்டாதோ என்று எண்ணி ஏங்கிய சொர்க்கம் அவருக்கு மீண்டும் கிடைத்து விட்டது.



குமாரசாமி வள்ளியம்மை தம்பதிக்கும் தங்கள் பேத்திகள் இனி எப்போதும் தங்கள் அருகிலேயே இருப்பார்கள் என்ற எண்ணம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்க தங்கள் வயதையும் மீறிய உற்சாகத்துடன் நடமாடினர்.



இப்படி அனைத்துமே சுபமாக நடந்து அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தபடி இருக்க அந்த திருமண நாளும் அழகாக புலர்ந்தது.





பட்டுவேட்டி சட்டையில் மணமகன்கள் இருவரும் ஆண்மையின் பொலிவோடு கம்பீரமாக மணமேடையில் அமர்ந்திருந்து ஐயர் சொன்ன சடங்குகளை செய்தவாறே எப்போது தங்கள் தேவதைகள் தரிசனம் தருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தனர்.



இந்த இரண்டு வாரங்கள் வீடு முழுதும் உறவினர்கள் நிறைந்து வழிந்ததால் அவர்களை மீறி தங்கள் நாயகிகளை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு இருவருக்குமே கிடைக்காததில் இருவருமே மிகவும் தவித்துப்போய் இருந்தனர்.அவர்களை எப்போது காண்போம் என்று நாயகர்களின் இதயமும் விழிகளும் ஆவலும் ஏக்கமுமாக தவித்து துடித்துக்கொண்டிருந்தது.அவர்களை அதிக நேரம் தவிக்க விடாமல் “பொண்ணுங்களை அழைச்சுட்டு வாங்கோ” என்ற ஐயரின் வார்த்தைகள் தேனாறாக செவிகளில் பாய பெற்றோரும் சுற்றமும் நட்பும் புடை சூழ வினியும் தாரணியும் சர்வ அலங்கார பூஷிதைகளாக அழகுப் பெட்டகங்களாக மென்னடை நடந்து மேடைக்கு வந்தனர்.





தேவதையாக அருகில் வந்து அமர்ந்தவளையே இமைக்க மறந்து நிலவன் பார்த்திருக்க ஐயர் தாலியை எடுத்து அவன் கையில் கொடுத்தார்.அந்த கணத்தை முழுதாக அனுபவிப்பவன் போல் கண்மூடி ஒருகணம் நின்றவன் பின் கண்களில் காதல் வழிய இனி என் ஆயுள்வரை இவளைப் பிரியேன் என்ற உறுதிமொழியோடு அவள் கழுத்தில் அந்த மங்கள நாணைப் பூட்டினான்.எத்தனை வருட தவத்தின் பயன் அது.வினியின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் முத்துக்கள் அவன் கட்டிய தாலியில் பட்டு தெறித்தது.





அவள் மனநிலையை உணர்ந்த நிலவன் முகம் கனிய கண்களில் காதலும் தவிப்புமாக அவளை நோக்க அதை உணர்ந்தவள் போல விழிகளில் கண்ணீருடனும் இதழ்களில் லேசான நாணப் புன்னகையுடனும் அவனை நிமிர்ந்து நோக்கினாள் பூவினி. இருவரின் பார்வைகளும் எல்லையில்லாத காதலுடன் சங்கமித்த அந்த நொடியில்





கெட்டிமேளம் கெட்டிமேளம் என்ற சொல்லோடு மங்கள வாத்தியங்கள் மீண்டும் முழங்க மித்திரன் தாரணியின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.தாரணி நாணத்தோடு அவன் விழிகளை நிமிர்ந்து பார்க்க அதற்காகவே காத்திருந்தவன் போல விழிகளைச் சிமிட்டிப் புன்னகைத்தான்.



அதன் பின் வந்த ஒவ்வொரு திருமணச் சடங்கின் போதும் நிலவன் பூவினி ஜோடி அதை காதலுடன் உணர்வுபூர்வமாக எதிர்கொள்ள மித்திரன் தாரணி ஜோடியோ அதில் காதலுடன் குறும்பும் கலந்து எதிர்கொண்டனர்.



உதாரணமாக மெட்டி அணிவிக்கும் சடங்கின் போது நிலவன் வினியின் காலை மென்மையுடன் பற்றி சிறு சிரிப்புடன் அவள் விழிகளை காதலுடன் நோக்கி மெட்டி அணிவித்து அவள் கால்களில் சிறு அழுத்தம் கொடுத்து அவளை முகம் சிவக்கச் செய்து அந்த சடங்கினை நிறைவு செய்ய மித்திரனோ முதலில் நிலவன் போலவே காதலுடன் அவள் விழி கலந்து மெட்டியை அணிவித்தாலும் இறுதியாக அவள் பாதத்தின் அடியில் விரலால் குறுகுறுப்பு மூட்டிவிட்டான்.அதில் தாரணி துள்ளிக் குதிக்கவும் எல்லோரும் என்ன என்ன எனவும் எ..எறும்பு என்று தாரணி திணறவும் அவள் அருகில் நின்ற தமிழ் நமுட்டுச் சிரிப்புடன்



ஆமா ஆமா ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு விரல் சைஸ்ல இருக்கு இல்லை தருக்கா என கூறவும் தாரணி முகம் சிவந்து சொல்வதறியாமல் மித்திரனை முறைக்க அவனோ குறும்பாக இமை சிமிட்டி புன்னகைத்தான்.



இப்படி காதலும் குறும்பும் சிரிப்புமாக அவர்களது திருமணச் சடங்குகள் நிறைவு பெற்றது.



அந்த ஒருவருடத்தில் தன் படிப்பினைப் பூர்த்தி செய்து தாய்நாட்டுக்கு திரும்பியிருந்த சிந்துவும் திருமணத்திற்கு வந்திருந்தாள்.நிலவன் பூவினியின் கடந்தகாலம் குறித்து எதுவும் தெரியாதவள் போல் வாழ்த்துக்கள் அண்ணா என்று நிலவனிடம் கூறியவள். பூவினியை அணைத்து ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்குடி.இப்போது போலவே எப்போதும் சிரித்தபடியே இருக்கணும் நீ என்று கூறி வாழ்த்தினாள்.வினி மூலம் அவளைப் பற்றி அறிந்திருந்த நிலவன் பாசத்துடன் ரொம்ப நன்றி மா.உன்னைப் போல ஒரு தோழி கிடைக்க வினு கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று கூறினான் நெகிழ்ந்த குரலில்.





அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள் வினி எனக்கு தோழியாய் கிடைத்ததில் நான் தான் அண்ணா அதிர்ஷ்டசாலி என்றாள் உள்ளே போன குரலில்.அவள் எதை நினைத்து அப்படிக் கூறுகிறாள் என்று புரிந்த பூவினி பேச்சை மாற்றும் பொருட்டு ஹே ..எப்போ மேடம் உங்க கல்யாணம் ஒரு அடிமை சிக்கிட்டான் போலவே?? ஆன்டி சொன்னார்கள் எனவும்



அவள் எதிர்பார்த்தது போலவே மனநிலை மாறி ஏய் வினி உன் அத்தான் போலவே எல்லோரையும் நினைப்பதா என்று பதிலுக்கு அவள் காலை வாரியவள் பின் முகச் சிவப்புடன் ம்ம் உறவுக்காரர் தான்.என்னைப் பிடித்து கேட்டு வந்தார்கள்.தனியே மனம்விட்டு அவருடன் பேசியதில் எனக்கும் அவரைப் பிடித்திருந்தது.அடுத்த மாதம் திருமணம் என்றாள் வெட்க முறுவலுடன்.



ஹே நிஜமாகவே மிக்க மகிழ்ச்சி சிந்து என்று கூறி தோழியை அணைத்து வாழ்த்தினாள் பூவினி.பின் சில நாட்கள் அங்கு தன்னுடன் தங்கி போகச் சொல்லி கேட்ட வினியிடம் அடுத்த மாதமே திருமணம் என்பதால் நிறைய வேலைகள் இருப்பதாகவும் பிறிதொரு சமயம் கணவனுடன் வருவதாகவும் கூறி சிந்துவும் அவள் பெற்றோரும் விடை பெற்றனர்.



அதன் பின் திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு ஜோடியும் நேராக பெரிய வீட்டுக்கு சென்றனர்.அங்கு பால்பழம் அருந்தினார்கள்.குடும்பத்தினர் மட்டுமே அங்கு இருக்க தமிழ் செந்தூ நிவே சுவே என்று இளையவர்கள் அனைவரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த வகையில் இரண்டு ஜோடியையும் கலாய்த்துக்கொண்டு இருந்தனர்.பெரியவர்களும் அவர்களின் கேலி அளவு மீறாதபடியால் அதை புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தனர்.





அப்போது திடீரென சோகமான தமிழ் ஒரு பெருமூச்சை எடுத்துவிட்டு எனக்கு ரொம்ப கவலையா இருக்குப்பா எனவும் அனைவரும் அவளை விசித்திரமாக பார்க்க தாரணி ஏய் என்னாச்சு?? இவ்ளோ நேரமும் நல்லாத் தானேடி இருந்தாய்??? எனவும்



ஹ்ம்ம்..என்று ஒரு சோக பெருமூச்சை விட்ட தமிழ் நீங்க ரெண்டு பெரும் லக்கி பா.இனி ஆயுள் முழுக்க இங்கேயே எல்லோருடனும் ஒன்றாய் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.இங்கிருந்து போக வேண்டிய அவசியமே இல்லை.ஆனா எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லையே என்றாள் சோகத்துடன்.அவள் கூறுவது புரிந்து சொல்வதறியாமல் அனைவரும் மௌனமாக திடீரென செந்தூ



உன்னை நினைக்க எனக்கும் பாவமா தான் இருக்குடி.ஆனா என்ன செய்ய!! அதுக்காக எல்லாம் நான் என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாதே.என்றான் கேலி கலந்து கடுப்பேற்றும் குரலில்.



முதலில் அவன் கூறியது புரியாமல் அவனை விசித்திரமாக பார்த்த தமிழ் பின் மற்றவர்களின் நமட்டுச் சிரிப்பில் விடயம் புரிய தலையில் அடித்துக் கொண்டு “அய்யே..உனக்கு அப்படி வேறு ஒரு நினைப்பு இருக்கோ!! உன்னுடன் சேர்ந்து இங்கே இருப்பதற்கு இங்கிருந்து போவதே மேல் போடா” என்றாள் சிரிப்பும் சிறு கோபமுமாக அதைக் கேட்டு அனைவரும் வாய்விட்டு கலகலவென நகைத்தனர்.





அனைவருடன் சேர்ந்து சிரித்தாலும் தங்கையின் முகத்தில் விழுந்த சோகத்தின் நிழலைக் கண்ட நிலவன் ஹே தமிழ் இந்த அண்ணா எதற்கு இருக்கிறேன்.அந்த நேரம் வரும் போது உன்னுடன் இங்கே நம் வீட்டிலேயே இருக்க சம்மதிக்கும் ஆயிரம் மாப்பிள்ளைகளை கொண்டுவந்து இறக்க மாட்டேன்?? இப்போது எதையும் சிந்திக்காமல் படிடா.நாங்கள் யாருமே உன்னை ஒருபோதும் தனியே அனுப்ப மாட்டோம் என்றான் கனிந்த குரலில்.கூடவே வினியும் ஆமாடா என்று அவள் கரத்தைப் பற்றவும் அவள் முகம் தெளிந்தது.தொடர்ந்து



தாரணி ஏய் குண்டுபூசணி ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாதுடி.நீயில்லாமல் எங்களுக்கு போர் அடிக்காது.நீயே போகிறேன் என்றாலும் நாங்கள் உன்னை விடவே மாட்டோம்.கவலையே படாதே எனவும் அவளின் முகம் புன்னகையில் மலர்ந்தே விட்டது.





அதன் பின் சற்று நேரம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கலகலத்த பின் மித்திரன் தாரணி ஜோடி மித்திரனின் பூர்வீக அதாவது அதுவரை கண்மணி வசித்த வீட்டுக்கு கிளம்பியது.அங்கு தான் தங்கள் வாழ்வை தொடங்க வேண்டும் என்பது மித்திரனின் ஆசை.





அவர்களை வழியனுப்பிய பின் சிறியவர்களையும் ஓய்வெடுக்க அனுப்பியவர்கள்.நிலவனையும் வினியையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு பெற்றவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்களை நிறைந்த மனதுடன் ஆசீர்வதித்த பின் ஜெகநாதன் நிலவன் கையில் ஒரு கோப்பினைக் கொடுத்தார்.



அதைக் கண்டு அவன் முகம் இறுக என்னப்பா இது?? எனவும் சிறு பெருமூச்சுடன் நீ என்னவென்று நினைக்கிறாயோ அது தான் நிலவா.என்றவர்.தொடர்ந்து



இது உன்னுடைய சொத்துக்கள் நிலவா.இதை அன்று உன்னிடம் ஒப்படைத்தபோது ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாய்.அதோடு முழுக்க முழுக்க உன் உழைப்பில் ஒரு தொழிற்சாலையை தொடங்க வேண்டும் என்று கூறி வங்கியில் கடன்பெற்று தனியே ஒரு தொழிலை உன் முழு முயற்சியில் தொடங்கினாய்.இந்த ஒரு வருடத்தில் அதுவும் ஓரளவு இலாபமாகவே சென்று கொண்டிருக்கிறது.உன்னுடைய அந்த ஆசைக்கும் தன்மானத்துக்கும் மதிப்பளித்து நானும் எந்த உதவியும் செய்யாமல் விலகி இருந்தேன்.இனியும் அப்படி இருக்க முடியாது நிலவா.புரிந்துகொள் இதுவும் உன்னுடைய சொத்துக்கள் தான்டா.உன்னுடைய தந்தையின் சொத்துக்கள்.அதோடு நீ உழைத்து பெருக்கியதும் கூட தயவு செய்து ஏற்றுக்கொள்.என்றார் வற்புறுத்தும் குரலில்.



நிலவன் மறுப்பாக தலையசைத்தான்.இல்லைப்பா இது உங்களுடைய நண்பர் உங்களுக்கு அளித்த சொத்துக்கள் இதில் எனக்கு எந்த உரிமையுமே இல்லை.நீங்கள் எனக்கு நல்ல கல்வியை தந்திருக்கிறீர்கள்.சொந்தக் காலில் தனியே நின்று உழைத்து வாழும் திறமையை தன்னம்பிக்கையை தந்திருக்கிறீர்கள்.எனக்கு அது போதும்பா.இதே போல ஏன் இதைவிடவும் அதிகமான சொத்துக்களை சம்பாதிக்க என்னால் முடியும்.எனக்கு உங்கள் பாசம் மட்டும் போதும்பா.வேறு எதுவும் வேண்டாம் என்று உறுதியான குரலில் கூறி அதை மறுத்தான்.







பாசத்துடன் அவன் தலையை வருடி நீ என் மகன்டா. என்ற ஜெகநாதன் தயவு செய்து என்னை புரிந்துகொள் நிலவா.இந்த சொத்துக்களை நீ கூறுவது போல் நானோ இந்த குடும்பமோ எடுத்துக்கொண்டால் அது உன்னை வளர்த்ததற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட கூலி போல் ஆகிவிடும்டா.நீ என் மகன் டா இந்த வீட்டுப்பிள்ளை. தயவு செய்து இந்த சொத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து நீ எங்களை அந்நியமாக்கி விடாதே நிலவா.என்றார் ஜெகநாதன் தழுதழுத்த குரலில்.





அவரது மனநிலை நிலவனுக்கு தெளிவாக புரிந்தது.அந்த சொத்துக்களை தான் ஏற்றுக்கொண்டால் அது அவனை வளர்த்ததற்கான கூலி என்பது போல் ஆகிவிடும் என்று அவர் தவிப்பது புரிந்தது.அத்தோடு நண்பனின் சொத்துக்களை அவன் மகனிடம் ஒப்படைத்தேயாகவேண்டும் என்ற அவரது உறுதியும் புரிந்தது.







சிறு பெருமூச்சை வெளியேற்றியவன் உங்கள் மனநிலை எனக்கு புரிகிறதுப்பா.நான் ஒன்று சொல்கிறேன் தப்பாக எண்ணாதீர்கள்.என்றவன் தொடர்ந்து சிறு மௌனத்தின் பின் ஒரு அநாதை ஆச்சிரமம் அமைக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் நீண்ட நாளாகவே உண்டுப்பா.அதற்கான இடம் கூட வாங்கிவிட்டேன்.அதன் மீதிப் பணிகளுக்கு இந்த சொத்துகளை பயன்படுத்திக் கொள்ளலாமா?? என்றான் எதிர்பார்ப்புடன்.





சிரிப்புடன் அவன் தோளைத் தட்டியவர் ரொம்ப சந்தோஷம் டா.நாங்கள் பல தர்மகாரியங்களுக்கு உதவி செய்தாலும் இப்படி தனியே ஒரு தர்ம நிறுவனத்தை நிறுவி மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இதுவரை வரவில்லை.உன்னைகுறித்து பெருமையாய் இருக்கு நிலவா.இது உன் சொத்து உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்றார் திருப்தியுடன்.





முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை தோன்ற நமக்கென்று ஒரு வலி ஏற்படும் போதுதான் பா அடுத்தவரின் வலியை உணர முடிகின்றது.அவர்களுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் துடிக்கின்றது. என்றான் நிலவன் எங்கோ வெறித்தபடி.அவன் குரலில் இருந்த வலியை உணர்ந்தவள் போல பூவினி மெல்ல அவனை நெருங்கி அவன் கரத்தை பற்றி அழுத்தினாள்.அதில் தன்னிலைக்கு மீண்டவன் அவளைத் திரும்பி பார்த்து லேசாக புன்னகைத்தான்.





அதன் பின் ஜெகநாதன் சாந்தாவைப் பார்க்க அவர் கையில் ஒரு சிறிய சட்டமிட்ட புகைப்படத்தை ஒரு கவரில் சுற்றி எடுத்து வந்தார்.அவரிடமிருந்து அதை வாங்கிய ஜெகநாதன் உன் திருமணத்திற்கான எங்கள் பரிசு நிலவா இது என்றவர்.தொடர்ந்து உன் பெற்றோரைப் பற்றி தெரிந்த பின்னும் நீ இதுவரை ஒரு தடவை கூட அவர்கள் புகைப்படம் உண்டா.?? என்று கேட்கவே இல்லை.ஒருவேளை அப்படிக் கேட்டால் எங்கள் மனம் வருந்தக் கூடும் என்று நீ எண்ணி அதை தவிர்த்திருக்கலாம்.ஆனால் உண்மை தெரிந்த பின் உன் பெற்றோர் முகத்தை பார்க்கும் ஆசை உனக்கு ஏற்பட்டிருக்கும்.எங்களுக்காக அதை நீ வெளிப்படுத்தா விட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை நிலவா.



உன் தந்தையின் புகைப்படம் எங்களிடம் இருந்தாலும் உன் அன்னையின் புகைப்படம் எங்களிடம் இல்லை.இருவரையும் ஒன்றாக உனக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்று நானும் பத்மனும் ஆசைப்பட்டோம்.எங்கள் கல்லூரிக்கு சென்று உன் அன்னை படித்த ஆண்டு விபரங்கள் சொல்லி தேடிப்பிடித்து உன் அன்னையின் புகைப்படம் பெற தாமதமாகிவிட்டது.உன் திருமணத்தின் போது உனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருக்கட்டுமே என்று எண்ணி இருந்தோம்.



எங்கள் குடும்பம் மட்டுமே அறிந்த உண்மை அப்படியே இருக்கட்டும் என்று எண்ணியே திருமண மண்டபத்தில் இதை உன்னிடம் கொடுக்கவில்லை.இப்போது கொடுக்கிறோம்.பிரித்து பார்.என்று கூறி அவன் கையில் அந்த புகைப்படத்தைக் கொடுத்தார்.





அதை உடல் அதிர கைகளில் வாங்கியவனின் பார்வை ஜெகநாதனினதும் சாந்தாவினதும் முகத்தை ஆராய்ந்தது.பின் சிறு பெருமூச்சுடன் அந்த கவரைப் பிரிக்காமலே அதை சாந்தாவின் கைகளில் கொடுத்தவன்.வேணாம்மா என்றான்.தொடர்ந்து இதுவரை அம்மா அப்பா என்றால் உங்கள் இருவரின் முகம் தான் என் மனக்கண்முன்னே வந்துள்ளது.இனிமேலும் அப்படியே இருக்கட்டும்.அதை மாற்ற வேண்டாம்.அப்படி மாற்றுவது உங்கள் நண்பனுக்கு கூட பிடிக்காது அப்பா.





நீங்களே நினைத்துப் பாருங்கள் அவ்வளவு தெளிவாக சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றி என்னை முறைப்படி உங்களுக்கு தத்துக்கொடுத்து என தன்னுடைய இறுதி நேரத்திலும் அவ்வளவு தெளிவாக செயற்பட்ட அவர் ஏன் தங்கள் இருவரின் புகைப்படத்தை மட்டும் உங்களிடம் கொடுக்கவில்லை??? அப்படி அவர்களை நான் அறியவேண்டும். என்ற எண்ணம் அவருக்கு இருந்திருந்தால் நிச்சயம் அவர் அதை செய்திருப்பார்.ஆனால் அவர் அதை விரும்பவில்லை.



அவர் என்னை முற்றுமுழுதாக முழுமனதாக உங்களுக்கு கொடுத்தார் அப்பா.அந்த நிலை மாறுவதை நிச்சயம் அவர் விரும்பமாட்டார்.நான் உங்களின் மகன்பா என்றான்.



அவனின் பேச்சைக் கேட்ட சாந்தா நிலவா என்று அழுகையுடன் அவனை அணைத்துக்கொண்டார்.அதுநாள் வரை அவர் மனதில் இருந்த சஞ்சலம் அந்த நொடி அகன்று ஓடியது.இவன் என் மகன் தான்.இவன் மனதில் எப்போதும் தாய்க்குரிய ஸ்தானம் தனக்குத்தான் என்ற எண்ணத்தில் அந்த தாய்மனம் பூரித்தது.அதுநாள் வரை உறுதியுடன் தன் மன சஞ்சலங்களை மறைத்து திடமாக காட்டிய ஜெகநாதனும் அந்த நொடி உடைந்து கண்கலங்க அவனை அணைத்துக்கொண்டார்.



அந்த காட்சியைக் கண்டு அங்கிருந்த அனைவரின் மனமும் நெகிழ்ந்தது.



அதன் பின் அந்த உணர்வுப்போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வரவும் கல்யாணி நேரமாகிறது அக்கா எனவும் அதைப் புரிந்தவர்கள் போல அனைவரும் இயல்புக்கு திரும்பி அடுத்த சடங்கிற்கான ஏற்பாட்டினை ஆரம்பித்தனர்.