• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nilaa - 01

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur

நிலவு _ 1



நிலமகளின் தாகத்தை தணிக்கும் வேகத்துடன் விண்ணரசன் எங்கிருந்தோ கருமேகக் கூட்டங்களையெல்லாம் ஒன்று திரட்டி வெள்ளிக் கம்பிகளாய் மழைத் தாரைகளை மண்மகள் மீது கொட்டிக்கொண்டிருந்த இதமான மாலை நேரம்.மதியம் ஆரம்பித்த மழை நிற்காத அடைமழையாய் மாலை நான்கு மணியை தொட்டும் தொடர்ந்துகொண்டிருந்தது.இடையிடையே கண்ணைப்பறிக்கும் மின்னல் கொடிகளும் காதைப் பிளக்கும் முழக்கமுமாக “சோ” வென்று கொட்டிக்கொண்டிருந்த மழைத்தாரைகளையே ஜன்னல் கம்பிகளூடாக வெறித்துக்கொண்டிருந்தாள் சேரா.



“ சேரநிலா ”



மழைக் குளிரைச் சுமந்த கூதற் காத்து உடலில் மோதி உடலை சிலிர்க்கச் செய்ய கட்டியிருந்த காட்டன் புடவையை இழுத்து தோளைச் சுற்றிப் போர்த்துக்கொண்டாள்.அவள் கை தான் இயல்பாக அந்த செய்கையை செய்ததே தவிர அவள் சிந்தை அங்கில்லை.அது வேறு எங்கோ தான் இருக்கிறதென்பதை சுழித்த அவள் புருவங்களும் ஜன்னல் கம்பியினூடாக மழைத்தாரைகளை வெறித்த அவள் பார்வையும் சொல்லியது.



ஏய் ..குட்டிம்மா பார்த்து....நனைஞ்சிடப்போற



எங்கோ வெறித்துக்கொண்டிருந்த சேராவின் நிஷ்டை சட்டென கலைய அவள் பார்வை அந்த குரல் வந்த திசை நோக்கி அவளையுமறியாமல் பாய்ந்தது.



அவள் பாடசாலையில் பயிலும் மாணவர்களில் இருவர் தான்.அண்ணனும் தங்கையும் போலும்.அந்த ஆறு வயது சுட்டிப்பெண் குடைக்குள் வர மாட்டேன் என்று அடம்பிடித்து மழையில் ஆட்டம் போட முயல அவள் அண்ணன் போலும் அவளைவிட ஒரு மூன்று நான்கு வயது பெரியவனாய் இருப்பான்.தங்கையை செல்லமாக கடிந்து அவள் மழையில் நனைந்துவிடாமல் அவளை குடைக்குள் அணைவாக நடத்தி அழைத்துச் சென்றுகொண்டிருந்தான்.அதை பார்க்கும் போதே அவள் இதழ்களில் சிறு புன்னகை மலர அதற்கு மாறாக கண்களில் நீர் துளிர்த்தது. அவளுக்கும் இதே போல் ஏன் இதைவிடவும் அதிகமாக அவள் மீது அன்பை சொரிய ஒரு அண்ணன் இருந்தான்.ஆனால்...............



ஏய் சேரா!!!!! நீ இங்கேயா இருக்கிறாய்??? உன்னை எங்கெல்லாம் தேடுவது. வா வா மழை கொஞ்சம் விட்டிருப்பது போல் தோன்றுகிறது.இப்போதே போனால் தான் உண்டு.



தோழியின் குரல் கேட்டதுமே அவசரமாக கண்ணீரைத் துடைத்தவள்.இ..இதோ வருகிறேன் வந்தனா. என்றபடியே தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.



அவளுடன் கூட நடந்த வந்தனா ஒரு கணம் தாமதித்து தோழியின் முகத்தினைக் கூர்ந்தாள்.



அழுதிருக்கிறாள்.



ஹ்ம்ம் அவளிடம் இருந்து சன்னமான பெருமூச்சொன்று கிளம்பியது.அவள் அழுவது இது முதல் தடவையல்ல அவளுக்கு சேரா அறிமுகமான இந்த மூன்று வருடத்தில் அவள் பலமுறை அவளிடம் இந்த அழுது சிவந்த கண்களையும் கலங்கிய முகத்தையும் கண்டிருக்கிறாள்.ஆனால் அதன் காரணம்????



இது வரை வந்தனா அதனை அறியாள்.சேரா அவளுக்கு அறிமுகமான புதிதில் அவளின் கலங்கிய விழிகளைக் கண்டு அவளுக்கு ஆறுதல் கூறி அவளின் மன வலியை அறிய முயற்சித்திருக்கிறாள்.ஆனால் சேரா அதற்கு இடம் கொடுக்கவில்லை.அத்தோடு மட்டுமல்லாது



எல்லாவற்றையும் எல்லோரிடமும் கூறிவிட முடியாது வந்தனா.என்னை மன்னித்துவிடு என்று உறுதியான குரலில் சுருக்கமாக முடித்துவிட்டாள்.



அதற்கு மேல் வந்தனாவும் அவளிடம் எதையும் கேட்கவில்லை.அவள் கூற விரும்பாத ஒன்றை அதற்கு மேலும் தான் தூண்டி துருவி விசாரிப்பது அநாகரிகம் என்று அவளுக்கு தோன்றியது.அதை அவள் செய்யாததனால் தான் அவர்களின் நட்பு இன்னும் நீடிக்கிறது என்பது வேறுகதை.



அவளுக்கும் சேராவிற்குமான நெருக்கம் அவ்வளவு தான்.அவ்வளவே தான்!!!!!





வழக்கம் போல இருவரும் அமைதியாகவே பள்ளியில் இருந்து நடை தூரமே உள்ள விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.



சேரா குளித்துவிட்டு சீக்கிரம் வா பா. நான் தேநீர் எடுத்துவருகிறேன்.போன வாரம் ஊரில் இருந்து எடுத்துவந்த முறுக்கும் இருக்கிறது.இந்த மழைக்கு செமையா இருக்கும்.



ப்ச்..எனக்கு மதியம் சாப்பிட்டதே வயிறு முட்ட இருக்கிறது வந்தனா.லேசான தலைவலி வேறு.நான் ஓய்வெடுக்கப் போகிறேன். என்று முணுமுணுத்துவிட்டு விரைந்து தன் அறைக்குள் நுழையும் சேரநிலாவின் முதுகையே சிறு வருத்தத்துடன் நோக்கியபடியிருந்தாள் வந்தனா.



பூஞ்சிதறலாய் நீர்த்துளிகள் உடல் தழுவி செல்ல ஷவரின் அடியில் நின்றிருந்த சேராவின் காதுகளில்



ஏய் நிலா இங்கே ஓடி வா.நான் என்ன வாங்கி வந்திருக்கிறேன் பார்.உனக்கு பிடித்த சமோசா டி. இந்த மழைக்கு சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சீக்கிரம் வா.

என்ற ஓர் ஆண் குரலின் அன்பு கலந்த அழைப்புக் கேட்டது.



சேராவின் கண்ணோரம் துளிர்த்த நீர் முகத்தில் வழிந்த தண்ணீருடன் கலந்து வழிந்தது.சட்டென ஓர் ஆத்திரத்துடன் அதைத் துடைத்துவிட்டு குளியலறையை விட்டு வெளியேறினாள்.



அந்த விடுதியின் சிறிய கண்ணாடி ஜன்னல்களை விரியத்திறந்துவிட்டாள். கனத்த மழை சற்று ஓய்ந்து மெல்லிய பூத்தூறல் போட்டுக்கொண்டிருந்தது..........வானம் இன்னும் தெளியவில்லை.



ஏய் நிலாம்மா மழையில் நனையாதே.உள்ளே வா.

அச்சோ அம்மா மழை விட்டுடிச்சும்மா. இப்போ குட்டி குட்டியா தூறல் தான் போடுது.

தூறல்னா அது மழையில்லையா?? மழைத் துமி தலையில் விழுந்தா தலைவலி வரும்டி....பரீட்சை வேறு நெருங்குது உள்ளே வா.



போங்கம்மா நான் வர மாட்டேன்.ப்ளீஸ் மா.இன்னும் கொஞ்ச நேரம் இந்த பூந்தூறலை அனுபவிக்கிறேனே.ப்ளீஸ்.



டேய் இவளை கொஞ்சம் என்னவென்று கேளுடா..சொல் பேச்சே கேட்க மாட்டேங்கிறா.



நிலா...சற்று அழுத்தி ஒலித்த அந்த ஒற்றைச் சொல்லில் அடங்கி உள்ளே சென்றது அந்த பூஞ்சிட்டு.



இவ்வளவு நேரம் நான் கரடியாய் கத்தினது உன் காதில் ஏறவே இல்ல.அவன் ஒரு சொல்லு சொன்னதும் பார் என்னமா அடங்கி வருதுன்னு.



முகத்தை தூக்கி வைத்தபடியே உள்ளே சென்று புத்தகத்தை விரித்து வைத்தபடி அமர்ந்துகொண்டாள் நிலா.சற்று நேரத்திலேயே ஒரு கரம் தலை கோத அதை தட்டி விட்டாள்.



ஹே.... அண்ணா மேல கோபமா டா??

ப்ச்....



ஏய்...அடுத்த வாரம் இறுதிப் பரீட்சையை வைத்துக்கொண்டு மழையில் நனைந்தால் எப்படி நிலாம்மா?? அது தான் அண்ணன் அதட்டினேன்.நீ பரீட்சையை எல்லாம் முடி.அதன் பிறகு வரும் ஒவ்வொரு மழையிலும் நாங்கள் சேர்ந்தே ஆட்டம் போடலாம்.என்ன சரியா??

நிஜம்மா??



நிஜம்மா டி.



அன்று அவள் கன்னம் தட்டி சிரித்த அவள் அண்ணனின் முகம் மனதில் வந்து போனது.



ஏன் டா அண்ணா இப்படிப் பண்ணினாய்..??

அவள் மனதில் வெறுமை சூழ்ந்துகொண்டது.







“ஸ்ரீ சாரதா மெற்றிக்குலேஷன்”



என்ற பெயரினைத் தாங்கி கம்பீரமாக எழுந்து நின்ற அந்த பள்ளிக்கூடத்தின் பிரதான வாயிலுக்குள் நுழைந்தனர் சேரநிலாவும் வந்தனாவும்.உள்ளே சென்று வருகைப் பதிவேட்டில் கையொப்பத்தினையும் தாங்கள் வந்த நேரத்தையும் பதிவிட்டவர்கள்.தங்கள் பாடவேளை அட்டவணைப் பிரகாரம் அவரவர்களின் வகுப்புக்குள் நுழைந்தனர்.



வெளியே மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் தன் கூட்டிற்குள் ஒடுங்கி இருக்கும் சேரா ஆசிரியையாக பாடமெடுக்க வகுப்பினுள் நுழைந்துவிட்டால் முற்றிலும் வேறாக மாறிவிடுவாள்.எடுக்க வேண்டிய பாடத்தை நிதானமாகவும் தெளிவுடனும் மாணவர்களுக்கு புரியும் விதத்திலும் சொல்லிக்கொடுப்பதுடன்.மாணவர்களிடம் ஒரு தோழியைப் போல உரையாடுவாள்.அவள் முகத்தில் புன்னகையைப் பார்ப்பதென்றால் அவள் வகுப்பெடுக்கும் நேரத்தில் மட்டுமே அது சாத்தியம்.தன்னுடைய மாணவர்களுக்கு புத்தகக் கல்வியை மட்டுமல்லாது உலகக் கல்வியையும் சொல்லிக்கொடுப்பாள்.வாழ்வியல் ஒழுக்கம் ஜீவகாருண்யம் மனிதாபிமானம் என அனைத்து நற்பண்புகளையும் படிப்பினூடே அவர்களுக்குள் புகட்டுவாள்.



ஒரு ஆசிரியையாக பாடத்தை சொல்லிக்கொடுப்பதுடன் ஒரு தாயாக மாறி அன்பையும் கனிவையும் காட்டுவாள்.ஒரு நல்ல தோழியாய் நல்ல பண்புகளை சொல்லிக்கொடுப்பாள்.அவளின் நிமிர்வும் அமைதியான முகமும் பேச்சும்.கனிவும் பண்பும் அவளை அனைத்து மாணவர்களுக்கும் பிரியமான ஒரு ஆசிரியையாக மாற்றியிருந்தது.



இந்த முசுட்டினை எப்படித்தான் students க்கு பிடிக்குதோ தெரியலப்பா.நாம எப்படித் தான் அரட்டினாலும் அடங்காததுகள் இவ ஒரு வார்த்தை சொன்னா மேய்ப்பானைப் பின்பற்றும் ஆடுகள் போல இவ இஷ்டத்துக்கு ஆடுதுகள். என்று சக ஆசிரியைகளே பொறாமைப்படும் அளவுக்கு மாணவர்கள் மத்தியில் அவளுக்கு செல்வாக்கு இருந்தது.



அன்றும் காலை வணக்கம் சொன்ன மாணவ முத்துக்களுக்கு பதில் வணக்கம் தெரிவித்தவாறே அன்றைய நாளை ஆரம்பித்தாள் சேரா.அன்று எடுக்க வேண்டிய பாடப்பகுதியை மிகவும் பொறுமையாக மாணவர்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்லிக்கொடுத்தவள்.அதன் பிறகு தான் கற்பித்ததில் இருந்து சிறு சிறு வினாக்களை எழுப்பினாள்.அவர்களின் பதிலில் திருப்தியடைந்தவளாய் பாடப்புத்தகத்தை சற்று மூடி வைத்தவள்.

சிறு புன்னகையுடன் சரி இனி நாம் சற்று பேசலாமா?? என்றாள். மாணவர்கள் முகம் மலர சம்மதம் சொல்லவும்

சரி ஒவ்வொருத்தராய் சொல்லுங்கள் கடந்த வாரத்தில் நீங்கள் என்னென்ன நல்ல காரியம் செய்தீர்கள்?? அதே போல் என்ன கெட்டகாரியம் செய்தீர்கள்??? என்றாள்.

அது வழக்கமாய் அவள் செய்யும் செயற்பாடு தான். ஒவ்வொரு வாரம் முடிந்து புதிய வாரம் தொடங்கும் போதும் கடந்த வாரத்தில் அவர்கள் செய்த நல்ல தீய விடயங்களை அவர்களையே சொல்ல சொல்லுவாள்.ஆரம்பத்தில் மாணவர்கள் தயங்கி மழுப்பி கூச்சப்பட்டு என அவளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் அவள் தன முயற்சியில் சற்றும் தளராது அவர்களுடன் இயல்பாக பேசி அவர்கள் தயக்கங்களைக் களைந்தாள்.முதலில் தான் செய்த நல்ல கெட்ட விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டாள். அதைப் பார்த்து அவர்கள் தயக்கங்களும் மெல்ல விடுபட அவர்களும் இயல்பாக அவளுடன் உரையாட தொடங்கினர்.



ஒரு மாணவன் எழுந்து மிஸ்!! நான் இந்த வாரம் ஒரு கண் தெரியாத தாத்தாவுக்கு வீதியை கடக்க உதவி செய்தேன்.அப்புறம் இந்த வாரம் நான் செய்த தப்பு அம்மாக்கு தெரியாம பாக்கெட் சிப்ஸ் வாங்கி சாப்பிட்டேன்.அதைக் கூறும்போதே அவன் குரல் உள்ளே சென்றிருந்தது.தன் தவறை அவனே உணர்ந்திருக்கிறான்.



அட ரொம்ப நல்ல விஷயம் பண்ணியிருக்கியே சத்யா.என்று அந்த மாணவனைப் பாராட்டினாள்.அந்த மாணவன் முகத்தில் எதையோ சாதித்த கர்வம் தோன்றியது. அதை ரசித்த சிறு முறுவலுடன் அப்புறம் அம்மாக்கு தெரியாம சிப்ஸ் சாப்பிட்டிருக்க. ஆமா ஏன் அம்மாக்கு தெரியாம அதை வாங்கி சாப்பிட்ட??



தெரிஞ்சா அம்மா திட்டுவாங்களே

எதுக்கு திட்டுவாங்க

கடைல விக்கிற பாக்கெட் சிப்ஸ் எல்லாம் health க்கு நல்லதில்ல..அதனால தான்.

ஓஹோ..அப்போ அம்மா யாரோட நன்மைக்காக திட்டுறாங்க

என்னோட நன்மைக்காக தான். குரல் உள்ளே செல்ல தலை குனிந்தான் அந்த மாணவன்.

அவன் முகத்தை நிமிர்த்தி உன்னோட தவறு உனக்கு புரியுதில்ல சத்யா?? என்றாள் சிறு சிரிப்புடன்.

ம்ம்..இனி இந்த தப்ப பண்ண மாட்டேன் மிஸ்.

“குட்” என்று புன்னகைத்தாள்..



அதன் பின் ஒவ்வொரு மாணவர்களும் செய்ததாக கூறிய நல்ல விடயத்திற்கு பாராட்டியவள் அவர்கள் செய்ததாக கூறிய சிறு சிறு தவறுகளுக்கு அறிவுரை கூறினாள்.அவர்கள் செய்ததாக கூறிய தவறுகள் அனைத்துமே சிறியவை தான்.ஏன் சிலது ரசிக்கக் கூடியதும் கூட.ஆனால் அவர்கள் செய்த தவறை உணர்த்தாமல் சிறியவை தானே என்று அலட்சியமாய் விட்டால் அவை பின்னாளில் பெரும் தவறுகளுக்கு அடிகோலும்.இப்போது அவர்கள் விடும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தினால் வளரும் நாற்றுக்களாவது ஆரோக்கியமாக வளரும் அல்லவா???? தப்பும் தவறுமாய் வளர்ந்து நிற்கும் நெடுமரங்களை திருத்துவதை விட வளரும் நாற்றுக்களை நேராய் ஆரோக்கியமாக வளர்த்துவிடுவது சுலபம் அல்லவா?? அப்படி வளரும் நல்ல நாற்றுக்கள் வருங்காலத்தில் இன்னும் பல நல்ல நாற்றுக்களுக்கு வித்திடுமே!!!!!



அவளது கல்வித் தகமைக்கு நல்ல நல்ல கம்பனிகளில் சிறந்த வேலைகள் காத்திருந்த போதும் அவள் ஆசிரியப்பணியைத் தேர்ந்தெடுத்ததே இந்த ஒரே காரணத்திற்காகத்தான்.வளரும் சமுதாயம் ஒழுக்கமானதாக நற்பண்புகள் கொண்டதாக ஆரோக்கியமானதாக வளர வேண்டும்.அதற்கு அவளால் ஆன முயற்சியை செய்யவே அவள் இந்த துறையை தேர்ந்தெடுத்தாள்.தன்னால் முடிந்த அளவுக்கு வளரும் சமுதாயத்தை செம்மைப்படுத்துவதையே அவள் வாழ்வின் இலட்சியமாக கொண்டிருக்கின்றாள். அவளின் இந்த முடிவுக்கு பின்னிருக்கும் காரணம் எதுவோ???