• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nilaa - 03

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
நிலவு __ 3




அதன் பிறகு வந்த நாட்கள் யாவும் சேராவிற்கும் வந்தனாவிற்கும் விரைந்தோடியதைப் போல் தோன்றியது. பாடசாலையில் இருக்கும் நேரம் தவிர மீதி நேரத்தை முழுதும் இல்லத்திலேயே களித்தனர்.இரவு தூங்க மட்டுமே விடுதி என்றானது.



நடனம், நாடகம், பாடல், கவிதை என அங்கிருக்கும் ஒவ்வொரு சிறுவர்களுக்குள்ளும் இருக்கும் தனித் திறமையை கண்டறிந்து அதற்கேற்ற விதத்தில் அவர்களை தயார்ப்படுத்தினர். சேரா ஒரு நாடகம் எழுதி அதற்கு சிறுவர்களைப் பயிற்றுவித்தாள்.வந்தனா நடனப் பயிற்சி வழங்கினாள்.அங்கிருக்கும் சாந்தி மற்றும் பிற ஊழியர்களும் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்தனர்.


இப்படி விரைந்தோடிய நாட்களினிடையே விழா நாளும் நெருங்கியது.நாளை விழா என்ற நிலையில் இறுதிக்கட்ட பயிற்சிகளை சிறுவர்களுக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர்.ஒவ்வொரு குழுவாக பிரித்து அங்குள்ள ஊழியைகளுள் ஒரு சிலரும் வந்தனாவும் சேராவும் மும்முரமாக சிறுவர்களுக்கு பயிற்சி வழங்கிக்கொண்டிருந்தனர்.



பயிற்சியின் இடையிடையே வந்தனாவின் பார்வை அவ்வப்போது ஒரு ஆராய்ச்சியுடன் சேராவைத் தொட்டு மீண்டது.அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.அன்று சனிக்கிழமை ஆதலால் இருவரும் காலையிலேயே இல்லத்துக்கு வந்து இறுதிக்கட்ட பயிற்சிகளைச் சரிபார்த்துவிடவேண்டும் என்று தீர்மானித்திருந்தனர்.



அதன்படி அன்று காலை சற்று சீக்கிரமே தயாரான வந்தனா சேராவின் அறைக்கதவை தட்டும் போது முகம் முழுதும் வீங்கியிருக்க வந்து கதவைத் திறந்த சேரா இவளை உள்ளே வந்து அமரச் சொல்லிவிட்டு குளிப்பதற்காக குளியலறையுள் நுழைந்தாள்.சேராவின் வீங்கிய முகமும் சிவந்த கண்களுமே முதல்நாள் இரவு அவள் அழுதிருப்பதைச் சொல்லியது.


வந்தனாவின் மனம் வலித்தது.எதற்கு இப்படி இருக்கிறாள்.என்ன துன்பம் என்றாலும் அதை இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்ளும் போது அது பாதியாகக் குறைந்து விடாதா?? அதைவிட்டு மனதில் போட்டு துன்பத்தை அடக்கி அடக்கி தன்னையே வருத்திக்கொண்டு!!!!!! எதற்கு இவள் இப்படி இருக்கிறாள்.அப்படி என்னதான் துயரம் இவளுக்குள்???



வந்தனா மனதுக்குள் தோழிக்காக வருந்தும் போது தான் அவள் கண்ணில் அதுபட்டது. அது ஒரு புகைப்படம். மெத்தைக்கடியில் வைக்கப்பட்டிருந்த அது சேராவின் அசைவினாலோ அல்லது கவனக்குறைவினாலோ வெளியே தலையை நீட்டி தன்னை வெளிப்படுத்திக்கொண்டது.



ஏதோ ஓர் உந்துதலில் மெல்ல படுக்கையின் அருகில் சென்று அப்புகைப்படத்தை உருவி அதில் பார்வையைப் பதித்த வந்தனாவின் விழிகள் வியப்பில் விரிந்தன.அதில் வாய்கொள்ளாச் சிரிப்புடன் உதடுகளுடன் கண்களும் சேர்ந்து சிரிக்க உற்சாகமே உருவெடுத்தாற் போன்று நிற்பது சேரா தானா?? சேராவே தானா??



சிலகணங்கள் இதுவரை காணக் கிடைக்காத தோழியின் மகிழ்ச்சியே உருவான தோற்றத்தைக் கண்டு ரசித்தபடியிருந்த வந்தனாவின் பார்வை மெல்ல புகைப்படத்தில் அவளருகில் நின்ற உருவத்தின் மீது பதிந்தது.



சேராவினை விட சற்று உயரமாய் கம்பீரமாய் ஒரு ஆண்மகன் அவள் அருகில் நின்று மென்மையாக புன்னகைத்தபடியிருந்தான்.
“ காந்தப்புன்னகை”
வந்தனா தன்னையறியாமலே நினைத்துக்கொண்டாள்.




இவன் யாராயிருக்கும்??? ஒருவேளை சேராவின் காதலனாய் இருக்குமோ??? ஒருவேளை இவன் சேராவை காதலித்து ஏமாற்றியிருப்பானோ?? சேராவின் இந்த சோகம் ஆண்கள் மீதான வெறுப்பு எல்லாவற்றும் பின்னால் இருப்பவன் இவனாகக் கூட இருக்கலாம்.மனம் தன் போக்கில் ஏதேதோ எண்ணமிட்ட போதும் வந்தனாவின் பார்வை அந்த புன்னகை முகத்திலிருந்து விலகவில்லை.அவளால் சேராவின் புன்னகையை பறித்தவனாக அவனைக் கற்பனை பண்ணக்கூட முடியவில்லை.இது எல்லாவற்றுக்கும் மேலாக சேராவின் காதலனாக அவனை எண்ணி பார்க்கக்கூட முடியவில்லை அவளால்.



இவன் யாரோ???? குளியலறைக்கதவு திறக்கும் ஒலியில் சட்டென மீண்டவள் புகைப்படத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள்.



அவள் மறைத்து வைத்த அந்த புகைப்படத்தை தான் பார்த்தது தெரிந்தால் சேரா மிகுந்த கோபம் கொள்ளக்கூடும் என்று பயந்தவள்.அதைக்குறித்து எதுவும் பேசாமல் அவளுடன் கிளம்பினாள்.ஆனாலும் மனதின் ஓரம் அவன் யாராயிருக்கக்கூடும்??? அவனுக்கும் சேராவிற்குமான உறவு என்ன??? சேராவின் இந்த துன்பத்திற்கு காரணம் என்னவாக இருக்கக் கூடும்?? இப்படி பல கேள்விகள் அவள் நெஞ்சில் முட்டி மோதி எழுந்த வண்ணமே இருந்தன.அதன் விளைவு தான் வந்தனாவையும் மீறி சேராவின் மீது பாயும் இந்த ஆராய்ச்சிப் பார்வைகள்.



வந்தனாவிற்கு சேராவை கடந்த மூன்று வருடங்களாக தெரியும்.ஆரம்பத்தில் சேராவைப் பார்த்த போது அவளின் இயல்பே இந்த சிடுமூஞ்சித்தனம் தான் என்று தான் எண்ணியிருந்தாள்.ஆனால் ஏதோ ஓர் ஈர்ப்பில் அவளை சற்று ஊன்றிக் கவனித்ததில் அவள் மாணவர்களிடம் காட்டும் கனிவும் அன்பும் அவள் கவனத்தில்பட்டது.



அப்போது தான் வந்தனாவின் மனதுக்கு பட்டது.இயல்பிலேயே சிடுமூஞ்சியாய் கோபக்காரியாய் இருக்கும் ஒருத்தியிடம் இந்த கனிவும் அன்பும் இருப்பது என்பது சாத்தியப்படாதது என்பது. ஆக இயல்பிலேயே இவள் கோபக்காரி அல்ல. தன்னை அப்படிக் காட்டிக்கொள்வதன் மூலம் பிறரிடமிருந்து ஒதுங்கி இருக்க முயற்சிக்கிறாள் என்று புரிந்தது.அது புரிந்தபின் வந்தனாவால் அவளைவிட்டு விலகிப் போக முடியவில்லை.



அந்த கோபத்திரைக்கு பின்னிருக்கும் அன்புமுகத்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டவள் சேராவை நெருங்கினாள்.ஆரம்பத்தில் அவளையும் தன்னிடமிருந்து விலக்கி வைக்க சேரா எவ்வளவோ முயன்றாலும் வந்தனா அதற்கு இடம் கொடுக்கவில்லை.அவளின் இடைவிடாத முயற்சியில் இன்று சேரா ஓரளவிற்கு அவளுடன் இயல்பாக பேசுகிறாள். இப்போது தான் அந்த புகைப்படம் குறித்து ஏதேனும் கேட்கப்போய் இப்போது இருக்கும் நெருக்கமும் கெட்டுவிடுமோ என்று வந்தனாவிற்கு பயமாக இருந்தது.அதனால் அது குறித்து அவளிடம் எதையும் கேட்காது விட்டாலும் அவளின் மனதில் எழுந்த குறுகுறுப்பும் அடங்குவதாக இல்லை



சேராவின் அன்னை சென்னையில் இருக்கிறார் என்று வந்தனாவிற்கு தெரியும்.அவள் அருகில் இருக்கும் போதே சேராவின் அன்னையிடமிருந்து அவளுக்கு பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்கள் வந்ததுண்டு. சேரா அவ் அழைப்பை ஏற்று பேசினாலும் பல தருணங்களில் சேராவின் எரிச்சலும் கோபமுமான பேச்சோடு தான் அவ் அழைப்புக்கள் முற்றுப்பெறுவதை வந்தனா கவனித்திருக்கிறாள்.



அன்னையிடம் கூட மனதுவிட்டுப் பேசமாட்டாளா இவள்?? இப்படி யாரிடமும் ஒட்டாமல் விலகி விலகி என்ன வாழ்க்கை இவளது என்று கூட சில சமயம் சலித்திருக்கிறாள்.



இவை தவிர சேராவின் குடும்பம் பற்றி வேறு எதுவுமே தெரியாது அவளுக்கு. ஊரிலிருக்கும் தன் தாய் தந்தை தம்பியைப் பற்றி வந்தனா வாய் வலிக்க அவளிடம் பேசும்போது சிறு புன்னகையுடன் கேட்பாளே தவிர அவள் குடும்பம் எப்படி??அதில் எத்தனை அங்கத்தினர்கள்?? என்று அவள்குடும்பத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து உதிராது.



இப்படி இருக்கையில் அந்த புகைப்படத்தில் உள்ளவன் யார் அவனுக்கும் சேராவிற்கும் என்ன தொடர்பு இருக்க கூடும்?? அதில் அவ்வளவு துள்ளலுடன் சிரித்தவளின் சிரிப்பு எங்கே?? அதை பறித்தது யார் ?? என்று எப்படி அவள் அறிவது???



அந்த புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து ஏதேதோ எண்ணி குழம்பி தவித்தாள் வந்தனா.


சேராம்மா


சொல்லுங்க துர்க்காம்மா.

உங்கள் பயிற்சிகள் எல்லாம் முடிந்ததாடா???

ம்ம் முடிந்ததம்மா.நாளை எங்கள் குட்டிகள் எல்லாம் அசத்தப்போகிறார்கள் பாருங்களேன்.

சந்தோசம்மா.இவ்வளவு நாள் உதவியது போலவே நாளையும் நீயும் வந்தனாவும் முழு நேரமும் கூடவே இருந்து உதவி செய்ய வேண்டும்மா.


கண்டிப்பாய் செய்கிறோம் மா.

நன்றி டா.

ஆ ....அப்புறம் நாளை நிகழ்ச்சி அறிவுப்புக்களை யார் செய்கிறார்கள்??

அதை வந்தனா பார்த்துக்கொள்வாள் மா.

அவள் கூட நீயும் சேர்ந்து இருவரும் செய்தால் சிறப்பாக இருக்குமேம்மா?? சேரா அதற்கு ஒத்துழைக்க மாட்டாள் எனப் புரிந்தும் ஓர் நப்பாசையில் கேட்டார்.


ஆனால் அவர் எதிர்பார்த்ததைப் போலவே சேரா சிறு சிரிப்புடன் அமைதியாக இருந்து தன் மறுப்பை தெரிவித்துவிட சிறு பெருமூச்சுடன் சரி உன் இஷ்டம்மா. என்றவர் மேலும் மறுநாளைய நிகழ்வுகளைப் பற்றி சற்று நேரம் பேசிவிட்டு விடைபெற்றார்.



மறுநாள் பொழுதும் அழகாக புலர்ந்தது.


காலை பத்து மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் வந்தனாவும் சேராவும் காலை ஒன்பது மணிக்கே கிளம்பி இல்லத்துக்குச் சென்றனர்.



விழா நேரம் நெருங்கியது முக்கிய விருந்தினர்கள் வரத் தொடங்கவும் வரவேற்கும் சிறுவர்களை ஒழுங்குபடுத்தியவள்.அவர்களை பார்த்துக்கொள்ளுமாறு அங்கு பணிபுரியும் ஊழியை சாந்தியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மற்றைய சிறுவர்களை விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஒழுங்காக அமர வைத்தவள். முதல் நிகழ்ச்சியில் பங்குபெறும் சிறுவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களைத் தயார்ப்படுத்தச் சென்றாள்.



அவளைப் பொறுத்தவரை அவள் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு மட்டுமே இருந்தது.மற்றும்படி அந்த விழாவிற்கு யார் யார் வருகிறார்கள்.யார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.என்பதைப் பற்றியெல்லாம் அவள் அக்கறை எடுத்துக்கொள்ளவே இல்லை.ஏன் அந்த விழா அழைப்பிதழைக் கூட அவள் பார்க்கவில்லை.



ஒருவேளை அந்த அழைப்பிதழையும் அதில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த “அகவினியன்” என்ற பெயரையும் அதில் அச்சிடப்பட்டிருந்த அவன் புகைப்படத்தையும் அவள் பார்க்க நேர்ந்திருந்தால் !!!!!!!!!!!!!!



நீ ..... நிலாதானே?? என்று மிதமிஞ்சிய வியப்பை விழிகளில் தேக்கி கேட்டபடி தன்முன்னே கம்பீரமாக வந்து நின்றவனைக் கண்டு அதிர்ச்சியடையாமல் இருந்திருக்கலாம்.அதன் பின் நிகழப்போகும் நிகழ்வுகளில் இருந்தும் தப்பித்திருக்கலாம். ஏன் அந்த சந்திப்பையே தவிர்த்தும் இருக்கலாம்.


ஆனால் இந்த “லாம்” கள் எல்லாம் நடந்தனவே !!!!

ஒருவேளை கொடும்பாலையாய் வறண்டு போயிருந்த சேரநிலாவின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தை பூக்கச் செய்ய இறைவன் முடிவெடுத்துவிட்டாரோ என்னவோ !!!!!!!!!!!!!!!!!!!