பகுதி – 12.
கார்முகில் தன் அறையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அவனால் ஒரு பொட்டு கூட கண் மூட முடியவில்லை. கண்களை மூடினாலே தன் தேகத்தில் உணரும் அந்த உணர்வு, அதைக் கொண்டு தேகம் உணரும் வெம்மை, அதைத் தொடர்ந்த கனவுகள்… தலையணையை எடுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
‘ம்ஹும்… இது அவ அளவுக்கு மென்மையா இல்லை’ எனத் தோன்ற அதைத் தூக்கி தூர வீசினான்.
‘இதென்ன என் கற்பனையை தடை செய்யுது’ என்ற நினைப்பு அவள் பக்கம் பாய, தன் அலைபேசியை எடுத்தவன் அவளது புகைப்படத்தைப் பார்த்தான். பார்த்தது பார்த்தபடியே இருந்தான்.
காரில் இருந்து இறங்கிச் செல்லும் முன்னர் அவள் சொன்னது அவன் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. காரிலிருந்து இறங்கிய பிறகு நடந்ததும்…
‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. உங்களுக்காக நான் இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். ஐ’ம் ஹியர் ஃபார் யூ” என்றவள், “ரொம்ப யோசிச்சு குழப்பிக்காதீங்க… நாம கல்யாணம் பண்ணிக்கலாம், அதுவும் ரொம்ப சீக்கிரமே. வீட்டில் இன்னைக்கே பேசறீங்க” கட்டளையாகச் சொன்னாள்.
“ம்… சரி…” அவன் சொல்ல, ஜூசை அவன் கரத்தில் கொடுத்து, தானும் தன்னதை காலி செய்தவள் காரிலிருந்து இறங்கினாள். அப்பொழுது அவள் கரத்தில் இருந்து காலி கப்பை வாங்கியவன், தான் போட்டு விடுவதாகச் சொன்னான்.
“ஓகே… சீக்கிரமே எங்க வீட்டில் உங்களை எதிர்பார்க்கிறேன்” என்றவள் இறங்கிப் போக, காலி கப்புகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டி அவள் பின்னாலேயே சென்றான். அவளது காருக்கு அருகே அது இருக்க, அவளுடனே நடந்தான்.
குப்பைக் கூடையில் போட்டுவிட்டு, அவள் தன் காரில் ஏறப் போகவே அவள் அருகே செல்ல, என்ன நினைத்தாளோ, ஒரு நொடி அவனை இறுக அணைத்து விடுவித்தாள். அவளது செய்கையில் மொத்தமாக நிலை குலைந்து போனான்.
அவன் ஒன்றும் பெண்களை அறியாதவன் இல்லை. எத்தனையோ அழகிகளைக் கண்டவன்தான், கடந்தவன் தான். கை குலுக்குவது, அருகே அமர்வது… என அந்த சாதாரண தொடுகைகள் எல்லாம் பழக்கமும் கூட.
ஆனால் இது… இந்த அணைப்பு… அவனது தாயை, தங்கையை என அவன் அணைத்து இருக்கிறான். அது தோளோடு தோள் உரச, தோளை பின்னால் இருந்து வளைத்து சைடாக மட்டுமே அணைப்பான். இதுவரை எந்த பெண்ணின் முன்தேகமும் அவன்மேல் உரசிச் சென்றது கூட இல்லை.
அப்படி இருக்கையில், சுமித்ராவின் அணைப்பு ஆதியோடு அந்தமாக அவனை ஆட்டம் காண வைத்தது. மிஞ்சிப்போனால் இரண்டு மூன்று வினாடிகள் அந்த அணைப்பு இருந்து இருக்கலாம். ஆனால் அவள் மென்தேகம் தன் நெஞ்சில் உரசி, அழுந்திய நொடி, அவனுக்குள் பல பூகம்பம்.
ஒரு ஆண்மகன் வயதுக்கு வந்தது முதல், பெண்ணின் தேகத்தின்மேல் அவன் கொள்ளும் மோகம் மிகவும் இயற்கையானது. கற்பனையிலும் சரி, சில நேரம் பார்வைகள் கூட வருடிச் செல்லும் தான். ஆனால் அதை உணர்ந்த நொடி, ‘ஒரு பெண் இத்தனை மென்மையானவளா? அதுவும்…’ அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று அவனை இம்சித்தாள்.
“என்னோட எல்லா முதல் அனுபவமும் உங்களோடதான். சோ…” என்றவள் கண்களால் சிரித்துவிட்டு காரில் ஏறிக் கொண்டாள். அவன்தான் ஆணியடித்தாற்போல் அப்படியே சில பல நிமிடங்கள் அப்படியே நின்றுவிட்டான். அதை ரிவர் வியூ கண்ணாடி வழியாகப் பார்த்தவளுக்கு மென்னகை பூத்தது.
அவள் காரை கிளப்பிச் சென்றதோ, அவன் காருக்கு வந்ததோ, தன் வீட்டுக்கு வந்ததோ எல்லாம் எப்படி நடந்தது எனக் கேட்டால் அவனுக்குத் தெரியாது.
“என்னப்பா முகி, என்ன முடிவுக்கு வந்திருக்கீங்க?” தாய் கேட்டு நிற்க, அப்பொழுதுதான் தான் வீட்டுக்கு வந்துவிட்டதே அவனுக்குத் தெரிந்தது.
“நான் அந்த ஏலியனை… இல்ல சுமியை கல்யாணம் பண்ணிக்கறேன்ம்மா” அவன் சொல்ல, சுதாவுக்கு கொள்ளை ஆனந்தம்.
“எனக்குத் தெரியும்… இதோ இப்போவே உன் அப்பாவுக்கு, குழலிக்கு எல்லாம் சொல்லிடறேன். நல்ல நாள் பார்க்கணும், பூ முடிச்சு, நிச்சயம் வச்சு… கல்யாணத்துக்கு நாள் குறிச்சு… எவ்வளவு வேலை கிடக்கு” சுதா வயதை மறந்து துள்ளிக்கொண்டு செல்ல, மந்திரித்த கோழி போல் தன் அறைக்கு வந்து படுக்கையில் விழுந்தான்.
அப்பொழுது விழுந்தவன் தான்… மதியம் என்ன உண்டான்? என்ன குடித்தான்? எதுவும் தெரியாது. கடைக்குச் செல்லும் நினைப்பு கூட இல்லாமல் அப்படியே வீட்டில் இருந்துவிட்டான். இரவு உணவை முடித்தவன், உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அவள் அனுசரணை புரிந்தது, தன்னை கவனிப்பது புரிந்தது. ஆனால் புரியாதது ஒன்று உண்டு என்றால் அது… ‘அவளால் எப்படி என்னை நேசிக்க முடியும்? இந்த கறுப்பனை அவளால் நேசிக்க முடியுமா என்ன?’ தனக்குத் தானே கேட்டுக் கொண்டவன் கண்ணாடியின் முன்னால் நின்றான்.
‘அவளால் தன்னை நேசிக்க முடியும்’ என அவன் கொஞ்சமாவது நம்பி இருக்கலாம். அப்படி நம்பி இருந்தால் அவளைக் காயப்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம். அவளைப்பற்றிய ஆராய்ச்சியில், அவள் எப்படிப்பட்டவள் என்பதையும் ஆராய்ந்து இருந்தால் அவன் இப்படி அவநம்பிக்கை கொண்டிருக்கவே மாட்டானோ?
கார்முகிலுக்கு இப்படி என்றால், அவளுக்கோ வேறு மாதிரி குழப்பம். அவன் கண்களில் தனக்கான தேடலோ, காதலோ எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. மாறாக ஒரு ஆராய்ச்சி, அவன் தன்னைப் பார்த்த பார்வைகளில் எல்லாம் அந்த ஆராய்ச்சி மட்டுமே இருந்ததாகத் தோன்றியது.
‘இப்படியே ஆராய்ந்தே இந்த வாழ்க்கை முடிந்துவிடுமா? அவரோட அன்பை என்னிடம் வெளிப்படுத்த மாட்டாரா? ஒரு வேளை அது அவரால் முடியாமலே போனால்? அந்த ஆராய்ச்சியையே தொடர்ந்தால்?’ அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
இவர்கள் இருவரின் குழப்பங்கள், பயங்களுக்கு மத்தியில், அவர்கள் சுமித்ராவின் வீட்டுக்குச் சென்று பெண் பார்த்து, பூமுடிக்கும் நாளும் வந்தது. வீட்டில் அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க, கார்முகிலோ அதியனைத் தேடிச் சென்றான்.
அவனைப் பார்த்த அதியன், “புது மாப்ள… என்னடா இது? கிளம்பிப் போற நேரத்தில் இங்கே கடையில் வந்து நிக்கற?” கடிகாரத்தில் நேரம் பார்த்தவன் அவனிடம் கேட்டான்.
“நீயும் என்கூட வர்ற அவ்வளவுதான்” அவன் சொல்ல, அதியனோ விழித்தான்.
“நானா? நான் எதுக்குடா? விளையாடாதே முகில்… முதல்ல கிளம்பு. வீட்டில் உன்னைத் தேடப் போறாங்க” அதென்னவோ அவனோடு செல்வது அவ்வளவாக சரியாக வராது என நினைத்தான்.
“நீ வரியான்னு நான் கேட்கவே இல்லை, வர்ற அவ்வளவுதான் புரியுதா? கிளம்புடா… கடையை மூடு…” ஷட்டரை இழுத்து மூடப் போனான். அதைப் பார்த்த அதியன் அவனைப் பாய்ந்து தடுத்தான்.
“முகில்… வேண்டாம் சும்மா இரு… என் ட்ரசைப் பார்த்தியா? நான் எப்படி இப்படியே வர முடியும்? நீ போய் பார்த்துட்டு, பூ முடிச்சுட்டு வாங்க” அதியன் சொல்லிக் கொண்டே இருக்க, கார்முகில் கடையை அடைத்திருந்தான்.
“இப்போ என்ன? ஒரு நாள் வியாபாரம் போகும்னு பார்க்கறியா? வேணா அதை நானே கொடுத்துடறேன் போதுமா? அதே மாதிரி சட்டை தானே… வா… ஒரு டிஷர்ட் ஒன்று என்கிட்டே இருக்கு, அதை மாத்திக்க” என்றவன் அவனை வீட்டுக்கே இழுத்துச் செல்ல முயன்றான்.
அதியன் அவனோடு நல்ல பழக்கம், நெருக்கம் என்றாலும், மளிகைப் பொருட்கள் கொடுக்க என அவனது வீட்டுக்குள் போயிருக்கிறானே தவிர, அவனது நண்பன் என்ற விதத்தில் அவன் வீட்டுக்குள் சென்றதே இல்லை.
அப்படி இருக்கையில், கார்முகிலுக்கு பெண் பார்க்கப் போகையில், அவர்கள் எண்ணிக்கை எல்லாம் பார்ப்பார்கள். அப்படி இருக்கும்பொழுது தான் செல்வது சரியாக வராது என எண்ணினான்.
அதை அவனிடமும் சொல்ல, “அம்மாகிட்டே நீ என்கூட வருவன்னு சொல்லிட்டேன். அதனால் நீ எதுவும் சொல்ல வேண்டாம் வா…” அவன் கை பிடித்து கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான்.
“அம்மா, ஒரு காபி… அதியன் வந்திருக்கான்” அவனை வீட்டு ஹாலுக்கு இழுத்துச் சென்றவன் தாய்க்கு குரல் கொடுத்தான்.
“காபி எல்லாம் எதுக்குடா? எதுவும் வேண்டாம்” அதியனுக்கு அத்தனை சங்கடம்.
“வாப்பா அதியா, எதுக்கு இவ்வளவு தயங்கற? நாம என்ன இன்னைக்கு நேற்றா பார்க்கறோம்? உள்ளே வா…” அவர் அழைக்க, அந்த நேரம் ஒரு வேலைக்கார பெண்மணி காபியோடு வர, கார்முகில் வாங்கி அதை அதியனிடம் கொடுத்தான்.
“வாங்கண்ணா… அதென்ன அண்ணாகிட்டே மட்டும்தான் பேசுவேன்னு ஏதாவது சங்கல்பம் எடுத்து இருக்கீங்களா என்ன? நாங்களும் மனுஷங்கதான்… என்னவோ பேயைப் பார்த்த மாதிரி ஒரு எக்ஸ்ப்ரஷன் கொடுக்கறீங்க” குழலி கேலி பேச, அதியனுக்கு வார்த்தைகள் வர மறுத்தது.
“ஐயோ… அப்படியெல்லாம் எதுவும் இல்லங்க… மாசம் தவறாமல் பொருள் கொண்டு வர்றது நான் தானே. அம்மா ஏதாவது அவசரம், வேணும்னு கேட்டா கூட உடனே கொண்டு வந்து கொடுப்பேனே” ஆயிரம் என்றாலும் அவர்கள் கொஞ்சம் பெரிய இடம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடியது.
“நான் என்ன கேட்டா, நீங்க என்ன பதில் சொல்றீங்க? அப்போ ஒன்லி பிசினஸ் மட்டும்தான் பண்ணுவீங்க. டேய் அண்ணா கேட்டுக்கோடா” குழலி சொல்ல பதறிப் போனான் அதியன்.
“என்னங்க நீங்க? நான் எப்போ அப்படிச் சொன்னேன்? பேசுவேன்ங்க” அவன் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே மூர்த்தி அங்கே வர, அவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைத்தான்.
“வணக்கம் சார்…” அதியன் சொல்ல, மூர்த்தி வாய்விட்டே சிரித்தார்.
“என்கிட்டே வேலை பார்க்கறவன் கூட இம்புட்டு பணிவு காட்ட மாட்டான், நீ என்னப்பா? ஃப்ரீயா இரு… நாம எல்லாம் ஒரே குடும்பம்தான் புரியுதா?” அவர் சொல்ல, எல்லா பக்கமும் தலையை ஆட்டினான்.
“ஏற்கனவே அவன் மிரண்டு போயிருக்கான், இதில் எல்லாரும் சேர்ந்து அவனுக்கு இன்னும் பீதியை கிளப்பாதீங்க, போங்க” கார்முகில் சொல்ல, அனைவரும் சென்றார்கள். அதியனுக்கு சற்று ஆச்சரியமாக கூட இருந்தது.
பொதுவாகவே அந்த ஏரியாவில் அவனை மளிகைக்கடைக்காரன் என்ற விதத்தில் பலர் பார்ப்பார். சிலரோ அவனது தொழில் நேர்த்தி கண்டு அவன்மேல் மதிப்பு கொண்டிருந்தார்கள். ஆனால் கார்முகிலும் அவன் குடும்பமும் தன்னை அவர்களில் ஒருத்தனாகப் பார்க்க, அவன் நெகிழ்ந்து போனான்.
அதியன் காபியை குடித்து முடிக்கவே, கப்பை வாங்கி வைத்துவிட்டு, “உள்ளே வாடா… டிஷர்ட் மாத்திக்கோ” என்றவாறே அவனது அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அதற்கு மேலே அதியனால் அவனிடம் மறுக்க முடியவில்லை.
கார்முகிலின் குடும்பம் அவனை கொஞ்சமாவது மறுக்கும் விதத்தில் பார்த்திருந்தால் கூட அவன் தயங்கி இருப்பான். ஆனால் அவர்கள் அனைவருமே தன்னை வரவேற்க, அதியன் அதற்கு மேலே தயங்கவில்லை.
‘இந்த கல்யாணத்தில் எந்த குழப்பமும் வரக் கூடாது ஆண்டவா’ மனதார கடவுளை வேண்டிக் கொண்டான்.
கார்முகிலின் வீட்டினர் மட்டுமே பூமுடிக்க வேண்டி சென்றிருக்க, சுமித்ராவின் வீட்டிலும் அவர்கள் வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்தார்கள். நிச்சயத்தை பெரிதாக வைத்துக் கொள்ளலாம் என முடிவாகி இருக்க, இதற்கு உறவினர்களை அழைக்கவில்லை.
அங்கே வெளி ஆளாக வந்திருந்தது அதியன் மட்டும்தான். அதென்னவோ கார்முகிலுக்கும், அவனது மச்சான் குமாருக்கும் எப்பொழுதும் பெரிதாக பேச்சுக்கள் இருந்தது இல்லை. குமாருக்கு கார்முகிலை அவ்வளவாக பிடிக்காது என்பதால், அவனாக எப்பொழுதும் பேசவே மாட்டான்.
சில முறை கார்முகில் அவனிடம் பேசிப் பார்த்துவிட்டு, குமார் அதை முன்னெடுக்கவில்லை எனத் தெரிந்த பிறகு, ‘வாங்க’ ‘போங்க’ என்ற அளவிலேயே நின்றுவிட்டான். எனவேதான் இப்பொழுது துணைக்கு கூட அவன் அதியனை நாடி இருந்தான்.
கார்முகிலின் பெற்றவர்களும், அதியனும் ஒரு காரிலும், குழலியும் குமாரும் இன்னொரு காரிலும் சென்று கொண்டிருந்தார்கள்.
“குழலி, நல்லா விசாரிச்சுட்டீங்களா? நிஜமாவே அந்த பொண்ணுக்கு உன் அண்ணனை கட்டிக்க சம்மதமா என்ன? எனக்கென்னவோ அந்த நம்பிக்கையே இல்லை…” குமார் ஒரு மாதிரி குரலில் சொல்ல, குழலிக்கு சட்டென ஒரு கோபம் வந்தது.
“நான் ஏற்கனவே உங்ககிட்டே சொல்லி இருக்கேன், எங்க அண்ணா விஷயத்தில் நீங்க தலையிடாதீங்க. அதையெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க. உங்களால் நடக்கறதை ஏத்துக்க முடியலைன்னா இங்கே வரக் கூட வேண்டாம்னு நான் சொல்லிட்டேன்” குழலி அத்தனை கோபமாக பேச, அப்படியே பின்வாங்கினான்.
மலையேற என்றாலும் மச்சான் தயவு வேண்டும் என்பதுபோல், அவனது கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில், குழலியின் வீட்டு தயவு அவனுக்கு எப்பொழுதும் வேண்டுமே. இல்லாமல் பாதி விலைக்கு பெயின்ட், இன்டீரியர் என அவனுக்கு யார் செய்து கொடுப்பார்கள்?
கார்முகில் முடியாது எனச் சொல்லிவிட்டால் நிச்சயம் தங்களுக்குதான் அது நஷ்டம் என அவனுக்குத் தெரியும். குமாருக்கு கார்முகிலைப் பிடிக்காதே தவிர, குழலி என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்.
ஏற்கனவே அவளது அண்ணனைப் பற்றி குறைவாக பேசி, அவளிடம் நிறைய வாங்கிக் கட்டி இருந்தான். அதோடு அவனை கிட்டே கூட சேர்க்காமல், பெற்றவர்களின் வீட்டுக்கு கிளம்பியும் சென்றிருந்தாள். அவளை சமாதானப்படுத்தி மீண்டுமாக வீட்டுக்கு அழைத்து வரவே அவன் தலையால் தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது.
அவளுக்கு எப்படியோ, அவனுக்கு மனைவி இல்லாமல் ஒரு நாள், ஒரு பொழுது கூட முடியாது. எனவேதான் மனைவியை கோபப்படுத்திப் பார்க்க அவன் விரும்புவதே இல்லை. அவளுக்குமே அவனைப் பிடிக்கும், ஆனால் அவன் தன் வீட்டு ஆட்களைப் பற்றி பேசக் கூடாது என்பது அவளது கட்டளை.
ஆம் கட்டளையேதான்… ‘நீங்க இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா நான் என் பெத்தவங்க வீட்டுக்கே போயிட வேண்டி இருக்கும். பேசக் கூடாது’ என சொல்லியிருக்க, அவன் வாயே திறப்பது கிடையாது.
அவர்கள் வீட்டுக்கு வந்தாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்பான். மாப்பிள்ளை முறுக்கெல்லாம் காட்டுவது கிடையாது. மூர்த்தியே கூட ஒரு முறை அவனை கண்டித்திருக்க, அடக்கியே வாசித்தான். எனவேதான் இப்பொழுது கூட வீட்டில் பொதுவில் பேசாமல், மனைவியிடம் தனிமையில் சொன்னான்.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு நீ என்னை இங்கே வராதே என்ற அளவுக்கு பேசற குழலி? உங்க அண்ணாவுக்கு ஒரு அவமானம்ன்னா அது உனக்கும் தானே… அதுக்குத்தான் சொன்னேன்” என்றவனை நக்கல் சிரிப்பில் பார்த்தாள்.
“உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவனுக்கு இப்படி ஒரு அழகான, கலரான பொண்ணு அமையிறதான்னு உங்களுக்கு வயிற்றெரிச்சல். எங்க அண்ணாவுக்கு கல்யாணமே ஆகாது, அதையே சாக்கா வச்சு நீங்க உள்ளே புகுந்து விளையாடலாம்னு கணக்குப் போட்டீங்க, அது நடக்காம போறதே என்ற ஆற்றாமை அதுதானே?” அவள் அவனைப் படித்ததுபோல் புட்டு புட்டு வைக்க, உள்ளுக்குள் அதிர்ந்துதான் போனான்.
“குழலி, இருந்தாலும் நீ என்னை ரொம்ப மட்டமா பேசற” அவன் மாய்ந்து போனான்.
“நான் உங்க கூட வாழறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு, அது… நீங்க என்னை நல்லபடியா பார்த்துக்கறீங்க, என்னை நேசிக்கறீங்க என்றதால் மட்டும்தான், நான் உங்களை விட்டுப் போகாமல் இருக்கேன். உங்க திருவிளையாடல் எல்லாம் நம்ம வீட்டுக்குள்ளே இருந்தால் நல்லா இருக்கும்” அவன் இறங்கி வந்தும் அவள் இப்படியே பேச, வாயை கப்பென மூடிக் கொண்டான்.
முன்பே அவனுக்கு அவளைப் பிடிக்கும், இப்பொழுதோ அவள் கருத்தாங்கி இருக்கிறாள். இந்த நேரத்தில் அவளை டென்ஷன் செய்து பார்க்க விரும்பாமல் வாயை இறுக மூடிக் கொண்டான்.
அதற்குள் அவர்கள் வீடு வந்துவிட, அனைவரும் இறங்க, குழலி தன் தாயோடு சென்று சேர்ந்து கொண்டாள். கூடவே கணவனை ஒரு பார்வை வேறு பார்த்துச் செல்ல, அவன் தன் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டான்.
எப்படிப்பட்ட மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருப்பதுபோல் அவனது பலவீனம் குழலியாகிப் போனாள். அவள் மட்டும் கொஞ்சம் உறுதியான நிலைப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், அவன் நிச்சயம் குழலியின் வீட்டை ஆட்டிப் படைத்திருப்பான்.
சில பெண்கள் இடறிவிடும் விதத்தில் குழலி இருக்கவில்லை. அவள் மட்டும் கண்ணைக் கசக்கிக் கொண்டு, ‘அவர் இப்படி சொல்றார்’ என தாய் வீட்டில் அழுது புலம்பி இருந்தால், இங்கே நிலையே வேறாகப் போயிருக்கும். ஆனால் குழலி அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.
‘நீயும் என் வீட்டைப்பற்றி, என் வீட்டு மனிதர்களைப் பற்றி பேசாதே, நானும் பேச மாட்டேன்’ முதலிலேயே அவள் பிடித்த பிடி, சரியாக வேலை செய்தது. இவர்கள் காரில் இருந்து இறங்கும் பொழுதே செல்வமும், அனிதாவும் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்றார்கள்.
திலக் தன் மகன் ஆதவனை கைகளில் ஏந்தியவாறே வந்து கார்முகிலை வரவேற்றான். அவன் கைபிடித்து குலுக்கி, “வாங்க…” என அழைக்க, கார்முகிலுக்கு அவனைப் பிடித்தது.
“சித்தா… சித்தா…” ஆதவன் மழலையில் சொல்ல, கார்முகில் குழந்தையின் கன்னம் வருடி, “என்ன சொல்றான்?” திலக்கிடம் கேட்டான்.
“உங்களை சித்தப்பான்னு சொல்றான்… எல்லாம் உங்க சுமித்ராவோட ட்ரெயினிங் தான்” திலக் சொல்ல, குழந்தைக்காக கை நீட்ட, ஆதவன் அவனோடு ஒட்டிக் கொண்டான். வெள்ளை மனம் கொண்ட குழந்தைக்கு நிறமெல்லாம் பெரிதாகத் தெரியவே இல்லை.
“மாப்ள… சூப்பர்டா… சித்தி சித்தப்பாவை அடையாளம் காட்டி இருக்காங்க” அதியன் அவன் காதுக்குள் சொல்ல, அவனை மெல்லியதாக விலாவில் இடித்தான். உள்ளுக்குள் மனதுக்குள் ஒரு இதம் பரவியது மட்டும் உண்மை.
‘கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்திட்டா?’ என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்குள் இருக்கத்தானே செய்தது. ஆனால் அதை ஆதவனின் அழைப்பு இல்லாமல் போக வைத்தது. அனைவரும் உள்ளே வந்து அமர, வந்தவர்களின் பார்வை எல்லாம் பெண்ணை எப்பொழுது பார்ப்போம் என எதிர்பார்த்தது.
கார்முகிலுக்கும் அந்த நினைப்பு கழுத்து மட்டும் இருந்த பிறகும், ஆதவனோடு எதையோ பேசிக் கொண்டு அவனிடமே கவனமாக இருந்தான். கீழே இருந்த அறையில் இருந்து அதைக் கவனித்த சுமித்ராவுக்குள் ஒருவித ஏமாற்றம் பரவியது.