Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 5.

உனக்கென பிறந்தவள் நானே – 5.

by infaalocious

பகுதி – 5.

கார்முகில் அங்கிருந்து அவளைத் திரும்பியும் பாராமல் நடந்து செல்ல, அவன் செய்கையில் அவளுக்குள் ஒரு புன்னகை பூத்தது. ‘சச் அ ஜென்டில் மேன்… அனிச்சையா பார்க்கப் போனவர், தன்னை சுதாரிச்சுட்டு போறாரே…’ அவளை வசீகரித்தான்.

அந்த கைக்குட்டையின் மீது ஏறிச் சென்றது நிச்சயம் அவளைப் பெண் பார்த்து பேச வந்த சமர்தான் என அவளுக்குப் புரிந்தது. சமர் கவனிக்காத ஒரு விஷயத்தை முகில் கவனித்து, ‘எனக்கு என்ன?’ என்று செல்லாமல் அதை எடுத்துக் கொடுத்தது,

அதை யாரோ மிதித்துவிட்டதை நொடியில் கவனித்து, அதை அவள் யூஸ் செய்யவிடாமல் தடுத்தது என அனைத்தும் அவளைக் கவர்ந்தது. அவள் தனக்கென வரும் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்க்கும் ஒரு க்வாலிட்டி, அது அவனிடம் இருப்பதாகத் தோன்றியது.

பொதுவாக அவள் பொது இடங்களில் தனித்து இருந்தாலும் சரி, தோழியர், கொலீக் என யாருடனும் இருந்தாலும் சரி, சுற்றி இருக்கும் ஆண்களின் பார்வை தெரிந்தோ தெரியாமலோ அவள் மீது படிந்து மீள்வதைக் கண்டு இருக்கிறாள்.

ஆனால் அவனுக்கு எதிரில் சில நிமிடங்களாக தான் இருந்த பொழுதும், அவனது பார்வை தன் மீது படியவே இல்லை என்பதை உணர்ந்தாள். ‘ஒரு பெண் தனியாக இருக்கிறாளே’ என்று கூட அவன் பார்க்கவில்லையே.

அவள் அனைத்தையும் எண்ணிக் கொண்டே அமர்ந்துவிட, “சுமித்ரா, நான் பேசுவது உங்களுக்கு கேட்குதா இல்லையா? இது ஒரு பெரிய பிசினஸ் ஆர்டர். ஒரு வெளிநாட்டு க்ளையின்ட் கிடைச்சு இருக்காங்க. இதை மட்டும் சக்சஸ் பண்ணா, அடுத்தடுத்து நிறைய ஆர்டர் வரும்” அவன் சொல்லக் கொண்டே போக, அவளுக்கு அவன் பேச்சு எரிச்சலைக் கொடுத்தது.

முதல்முறையாக, வாழ்க்கை துணையாக வரப் போகும் பெண்ணைப் பார்க்க வந்திருக்கும் இடத்தில் அவன் பிசினஸ் பற்றி பேச, அவன் தனக்கு செட் ஆகவே மாட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

“மிஸ்டர் சமர்… நீங்க உங்க லஞ்சை முடிச்சுட்டு கிளம்புங்க. எனக்கு இந்த பிசினஸ் பேச்சில் எல்லாம் விருப்பம் இல்லை” என்றவள் அவனது அதிர்ந்த முகத்தைப் பார்த்தவாறே எழுந்துவிட்டாள்.

“ஹலோ… என்ன அழகா இருக்கன்னு ஆட்டிடியூட் காட்டறியா?” அவனது ஒருமை பேச்சும், அவன் வார்த்தைகளும் அவளுக்குள் சுள்ளென்ற எரிச்சலைக் கிளப்பியது.

“ஆமாடா… அப்படித்தான்…” என்றவள் வெளியேறிவிட்டாள். அவள் பொதுவாக இப்படிப் பேசும் ஆளே கிடையாது. ஆனால் அவனது பேச்சு அவளை இப்படி எதிர்வினை ஆற்றச் செய்து இருந்தது.

அவனை விடுத்தவள் தன் விழிகளைச் சுழற்றி ‘அந்த பிட்லியை எங்கே?’ எனத் தேடினாள். பிறகு தன் செய்கையை உணர்ந்தவள், தன் தலையிலேயே அடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள். அவள் வீட்டுக்குச் சென்று சேர்கையில் செல்வமும் அனிதாவும் அவளைக் கவலையோடு வரவேற்றார்கள்.

அதற்குள் விஷயம் அவர்களுக்கு வந்துவிட்டதை உணர்ந்தவள், “சாரிப்பா…” அவள் மன்னிப்பை வேண்டத் துவங்க, அவளைத் தடுத்தார்.

“நீ எதுக்கும்மா சாரி சொல்ற? நீ ஏதாவது ஹார்ஷா பேசி இருந்தால் கண்டிப்பா அதற்கு சரியான காரணம் இருக்கும். என் கவலை அது இல்லை… எந்த புற்றுக்குள் எந்த பாம்போ என இருக்கு. ஆளையும் உருவத்தையும் வச்சு யாரையும் கணிக்க முடியலையே…” வருத்தமாகச் சொன்னார்.

“என்னை ஒருமையில் பேசறான்ப்பா… அது கூட பரவாயில்லைன்னு வைங்க. சில சைக்கோ அப்படித்தான் பிஹேவ் பண்ணும். ஆனா அழகா இருக்கன்னு ஆட்டிடியூட் காட்டறியான்னு கேட்கறான் கிரேக். வந்ததே லேட்… இதில் பில்கேட்ஸ் மாதிரி பேச்சு, இந்த வெயிலுக்கு ஒரு கோட் வேற… இம்ப்ரஸ் பண்றானாமாம் பண்டாரம்…” அவள் பேச, பெற்றவர்கள் இருவரும் வாய்விட்டே சிரிக்கத் துவங்கி விட்டார்கள்.

அதைப் பார்த்தவள், “ம்மா… ப்பா நீங்களுமா?” அவள் சிணுங்க,

“என்னம்மா பேச்சு இது? முடியலை… சரி விடு… இனிமேல் நிதானமா யோசிச்சு செய்யலாம்” செல்வம் முடித்துக் கொண்டார். ஆனாலும் மாதங்கள் ஒவ்வொன்றும் கடக்க, அனிதாவுக்குள் பெரும் கவலை குடி கொண்டது.

சுமித்ரா ஒன்றும் வேண்டுமென்று எதையும் செய்து வைக்கவில்லை என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். பிடிக்காத எதையும் தங்கள் விருப்பத்துக்காக அவளைச் செய்ய வைக்க பெற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.

அவர்கள் கொஞ்சம் அழுத்திச் சொன்னாலோ, ‘இதையே முடிக்கலாமே’ எனச் சொன்னாலோ கொஞ்சம் கூட மறுக்காமல் அதைச் செய்வாள் தான். ஆனால் தங்களுக்காக அவள் திருமணம் செய்து கொண்டு, அட்ஜஸ்ட் செய்து கொண்டே காலம் முழுக்க வாழ வேண்டுமா? அந்த எண்ணத்தாலேயே அவர்கள் அதைச் செய்யவில்லை.

“சரிம்மா… ரொம்ப சோர்ந்து போய் தெரியற, கொஞ்சம் ரெஸ்ட் எடு” செல்வம் சொல்ல, மறுப்பாக அவரைப் பார்த்தாள்.

“இல்லப்பா… ஒரு கேக் ஒன்று ஆர்டர் கொடுக்கணும். நாளைக்கு காலையில் அது கைக்கு கிடைக்கணும், இல்லன்னா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. நீங்க இங்கே என் பதிலுக்காக காத்துட்டு இருப்பீங்களே என்றுதான் நேரா இங்கே வந்துட்டேன். நான் போயிட்டு வர்றேன்ப்பா…” அவள் சொல்ல, அவர்கள் எதையும் சொல்லவில்லை.

“அப்பா, அங்கே காம்ப்ளக்ஸ்ல ஒரு ‘பிட்லி’யைப் பார்த்தேன்” அவள் திடுமெனச் சொல்ல, பெற்றவர்கள் புருவம் நெரித்தார்கள்.

“பிட்லி’யா? யாரும்மா அது? எனக்கு அந்த பெயரில் யாரையுமே தெரியாதே?” யோசனையோடு சொன்னார்.

“அப்படி ஒரு கலர்ல இருந்தார்ப்பா. என்னன்னு தெரியலை… திடீர்ன்னு அவரை கவனிச்சேன். உங்ககிட்டே சொல்லணும்னு தோணிச்சு சொன்னேன். சரிப்பா வர்றேன்…” என்றவள் கிளம்பிவிட்டாள்.

அவள் வெளியே கிளம்பிச் செல்லவே, “என்னங்க, எல்லாமே இப்படியே ஆகுது?” அனிதா கணவனிடம் கவலையாகக் கேட்டார். அவள் ‘பிட்லி’ எனச் சொன்னதற்கு அவர்கள் பெரிதாக எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.

அவள் வெளியே சென்றுவிட்டு, வீடு திரும்பும் வரைக்கும் கூட வெளியே என்ன நடந்தது? யாரைப் பார்த்தாள் என்பது வரைக்கும் அவர்களிடம் சொல்வாள் என்பதாலேயே அவ்வாறு செய்தார்கள்.

“விடு அனிதா… பார்த்துக்கலாம்… எனக்கும் கடையில் கொஞ்சம் வேலை இருக்கு நான் வர்றேன்” என்ற செல்வம் அவரும் கிளம்பிவிட்டார். வீட்டில் தனியாக இருந்த அனிதா, தன் மனக் குமுறலைக் கொட்ட, சுபிதாவுக்கு அழைத்து பேசத் துவங்கினார்.

மறுநாள் காலையில் பத்து மணிக்கு, அலுவலகத்தில் ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டுக் கொண்டு, அருகே இருக்கும் ஹோட்டலுக்குச் சென்றாள். அங்கே இவளுக்கு முன்பாகவே நான்கு ஐந்து பேர் குழுமி இருந்தார்கள்.

அவளைப் பார்த்தவுடன் அனைவரும் ஒன்றாக அவளிடம் கேட்ட கேள்வி, “கேக் எங்கேடி?” என்பதுதான்.

“என்னது கேக்கா?” அவள் போலி அதிர்ச்சி காட்டினாள்.

“நான் சொன்னேன் தானே, இவ ஃபோனையே எடுக்கலை… கண்டிப்பா கேக்கை மறக்கப் போறான்னு சொன்னேனா இல்லையா?” ஒருத்தி சொல்ல, அனைவரும் அவளை முறைத்தார்கள்.

“என்ன பார்வை?” அவள் எகிற,

“கொஞ்சம் அமைதியா இருடி…” அவளை அடக்கினாள் மற்றவள்.

“நான் அமைதியா இருக்கறது இருக்கட்டும். கேக்கை எங்கே? இப்போ உடனே கேக் வேணும்ன்னா நாம கேட்கற ஃப்ளேவர் எல்லாம் கிடைக்குமா?” அவள் புலம்பித் தள்ளினாள்.

“அவ என்ன சொல்றான்னுதான் கேட்போமே. ஒரு கேக்கா கிடைக்காது?” சுமித்ராவை கொஞ்சம் நன்கு அறிந்தவளாக ஒருத்தி சொன்னாள்.

“ஆமா…” மற்றவள் நொடித்துக் கொள்ள, சுமித்ராவோ அமைதியாக வந்து, பிறந்தநாள் கொண்டாடும் தோழியை அணைத்துக் கொண்டாள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு…” அவள் வாழ்த்த, அதை இன்முகமாகவே பெற்றுக் கொண்டாள்.

“சரி பிறந்தநாள் பரிசை எங்கே? இவ பெருசா வாங்கிட்டு வர்றேன்னு சொன்னதால் தானே, நாம எதையும் தனித்தனியா வாங்காமல் வந்தோம்” முதலில் புலம்பியவள், மீண்டுமாக துவங்கினாள்.

“அட ஆண்டவா… இவளோட முடியலை” மற்றவள் புலம்பிவிட்டு விலகிவிட்டாள்.

அவள் விலகிச் செல்லவே, சுமித்ராவிடமே நேரடியாக கேட்டு விடுவது என அவள் முடிவெடுக்க, அந்த நேரம் அங்கே வந்தான் அவன். ‘கேக் வேர்ல்ட்’ என பெயர் பொறித்த அடர் பச்சை வர்ண டிஷர்ட்டில் அவன் இருந்தான்.

“மிஸ் சாருமதி…?” அங்கே ஐந்து பெண்களும், இரு ஆண்களும் இருக்கவே யார் எனத் தெரியாத குழப்பத்தில் கேட்டான்.

“எஸ்…” சாருமதி முன்னால் வர, தன் கையில் இருந்த கேக் பாக்ஸ், மிகப்பெரிய சாக்லேட், ஒரு பெரிய பொக்கே என அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். அதைவிட, மூன்றுபேர் சேர்ந்து அவர்கள் அமர்ந்திருந்த டேபிள் அளவுக்கான ஒரு பாக்ஸை அங்கே வைத்துவிட்டுச் செல்ல, அனைவரின் கவனமும் அதில் சென்றது.

“என்னடி இது?” அன்புச் செல்வி, சுமித்ராவின் நெருங்கிய தோழி கேட்க, சுமித்ராவோ அவளிடம் கண்ணடித்தாள்.

அவளை குறை சொல்லிக் கொண்டிருந்த பாண்டீஸ்வரி திறந்தவாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருக்க, “முதல்ல கேக் கட் பண்ணு சாரு. நான் ஒருமணி நேரம்தான் பெர்மிஷன் போட்டு இருக்கேன்” சுமித்ரா அவசரப்படுத்தினாள்.

“சுமி… அந்த பெரிய பாக்ஸ்ல என்ன இருக்குன்னு முதல்ல பார்த்துடறேனே” சாருமதி கண்கள் மின்ன கேட்க, மற்றவர்களுக்கும் அதே ஆர்வம் தான்.

“பிறந்தநாள் பேபியோட விருப்பம், அதை மறுக்க முடியுமா? திறந்து பார்” அவள் சொல்ல, அதைத் திறந்து பார்த்தவள் விழி விரித்தாள். விதம் விதமான குட்டி குட்டி கேக்குகள் வரிசையாக அதில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

“உன் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாளுக்கு அத்தனை விதமான கேக்” சுமித்ரா சொல்ல, அவளது சந்தோசம் இரட்டிப்பானது.

“இப்போவாவது கேக் வெட்டலாமா?” கூட்டத்தில் இருந்த பாலா கேட்க, அனைவரும் தனி கேக்கிடம் திரும்பினார்கள்.

“அப்போ அந்த கேக் பாக்ஸ் தான் கிப்ட்டா?” பாண்டீஸ்வரி கேட்க, அன்புச் செல்வி அவளை அடக்க முயன்றாள்.

“அதை பிறகு சொல்றேன்”, “சாரு…” என்ற சுமித்ரா அவளிடம் கத்தியைக் கொடுக்க, கேக்கை வெட்டி, முதல் துண்டை அவளுக்கு ஊட்டினாள். மற்றவர்களுக்கும் கொடுத்து, அவளுக்கும் அவர்கள் கேக் ஊட்டவே கொஞ்ச நேரம் கலகலப்பாகச் சென்றது.

“சாரு… அதில் இருக்கும் எல்லா கேக்கும் ஒவ்வொரு ஃப்ளேவர், எதுவுமே செயற்கை கலர் கிடையாது. அதனைக் குழந்தைகளுக்கும் தைரியமா கொடுக்கலாம். அப்போ நான் கிளம்பட்டுமா?” என்றவள் கிளம்ப முயன்றாள்.

அனைவரும் அவளுக்கு விடை கொடுக்கவே, “சரி கிளம்பறேன்… ஆனா அதுக்கு முன்ன…” அந்த கேக்குக்கு நடுவில் இருக்கும் அந்த பூவை தனியா எடு சாரு” சுமி சொல்ல,

“ஏன் அந்த பூவை மட்டும் நீ தின்னுட்டு போகலாம்னு பார்க்கறியா?” பாண்டீஸ்வரி கேட்டாள்.

“உனக்கு என்னதான்டி பிரச்சனை? அவகிட்டே வம்பு வளக்கலைன்னா உன்னால் நிம்மதியா இருக்கவே முடியாதா? இவளை நான் இன்வைட் பண்ணி இருக்கவே கூடாது. தெரியாத்தனமா கூப்ட்டு தொலைச்சுட்டேன்” முன்னதை சத்தமாகச் சொன்ன சாருமதி, பின்னதை சன்னமாக முனகினாள்.

“அட விடு சாரு… நீ எடு…” சுமி மீண்டும் சொல்ல, அதைத் தூக்கியவள், மேலும் இனிதாக அதிர்ந்தாள். அதை அவள் எடுக்க எடுக்க, கவருக்குள் வரிசையாக சுற்றி வைக்கப் பட்டிருந்த பணச்சுருள் விடுபட்டு வந்து கொண்டே இருந்தது.

அதைப் பார்த்த சாருமதி, “சுமி, இது எதுக்குடி…?” அவளிடம் கடிந்து கொள்ள முயன்றாள்.

“அதெல்லாம் எங்க சந்தோஷத்துக்கு, இது உன் சந்தோஷத்துக்கு. உனக்கு என்ன வாங்கணும்னு தோணுதோ, அன்புவை கூட்டி போய் ஷாப்பிங் பண்ணிக்கற” என்றவள் அன்புச் செல்வியை அணைத்து விடை பெற்றாள்.

அதற்கு முன்னர் அவளது கரத்தில், ஒரு பார்சலைக் கொடுக்க, அன்பு அவளை முறைத்தவாறே அதைப் பெற்றுக் கொண்டாள். அதைப் பார்த்த பாண்டீஸ்வரி, “இதென்ன அவளுக்கு மட்டும் ஸ்பெஷலா என்னவோ கொடுக்கற?” அவளிடம் கேட்டாள்.

“இது உனக்குப் பிடிக்காது ஈசு…” என்ற அன்புச் செல்வி அந்த பார்சலைப் பிரித்தாள். உள்ளே இருந்ததோ, அவள் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள்.

அதைப் பார்த்த பாண்டீஸ்வரி, “அய்யய்ய…” என முகத்தைச் சுழிக்க, அன்பு அவளை முறைத்தாள்.

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்றவள், “ரொம்ப தேங்க்ஸ் சுமி… நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ரொம்ப நல்லா பொழுது போகும்” என்றவாறு அவளை அணைத்துக் கொண்டாள்.

“இதெல்லாம் நீ முன்னர் படித்த ஆதரோட புத்தகங்கள் தான். இப்போ புதுசா உன் லிஸ்ட்ல யாராவது எழுத்தாளர் ஆட் ஆகி இருக்காங்களா?” அவளிடம் கேட்டாள்.

“அது எதுக்கு இப்போ?” அன்பு மறுக்க, சுமித்ரா அவளை முறைத்தாள்.

“சரி… சரி… இப்போ இன்பா அலோசியஸ் அவங்க கதைகள் எல்லாம் தேடித் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்” அவள் சொல்லவே,

“அடுத்த முறை அதை வாங்கித் தர்றேன்” என்றவள், பாண்டீஸ்வரிக்கும், வாங்கி வந்திருந்த பரிசுப்பொதியை அவளிடம் கொடுத்தாள். அவள் எதையும் சொல்லும் முன்பே, அனைவரிடமும் விடை பெற்றுச் சென்று விட்டாள்.

அங்கே, சாருமதி அந்த சுருளை மொத்தமாக எடுத்து முடிக்க, நிச்சயம் ஐந்தாயிரத்துக்கும் குறையாமல் பணம் இருக்கும் எனத் தோன்றியது.

சாருமதி தோழியை எங்கே எனப் பார்க்கும் முன்னர், அவள் அங்கே இருந்து சென்றிருந்தாள். இவர்கள் எல்லாம் குதூகலிக்க, அந்த பாலா எனப்பட்டவன் சுமித்ராவின் பின்னால் சென்றிருந்தான்.

அவளது அலுவலகத்துக்கு அருகில் வைத்து அவன் அவளை பிடித்துவிட, “பாலா…?” என கேள்வியாக அவனை நோக்கினாள்.

“ஒரே ஒரு விஷயம்தான் உன்கிட்டே கேட்கணும் சுமி. இன்னுமே உன் பதில் அதுதானா?” அவளிடம் கேட்டான்.

“இதென்ன இப்படி கேட்கற பாலா, நீ உன் விருப்பத்தை சொன்ன பொழுதே, நான் என் பதிலை சொல்லிட்டேன். எனக்கு உன்மேல் அப்படி ஒரு நினைப்பே இல்லை. அது இனிமேல் வரவும் செய்யாது. தயவு செய்து புரிஞ்சுக்கோ…” அவள் நிறுத்தி நிதானமாகச் சொன்னாள்.

“எனக்குத் தெரியும் சுமி, ஆனாலும்… நாம கொஞ்ச மாசமா பார்த்துக்கலையே, ஒரு வேளை உன் முடிவு மாறி இருக்குமோன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன். இனிமேல் நான் இதைப்பற்றி உன்கிட்டே பேசவே மாட்டேன், இதுதான் கடைசி…” என்றவன் முகம் வாடிச் செல்ல, சுமித்ராவுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று.

“பாலா…” அவள் அழைக்க, ‘என்ன?’ என்பதுபோல் திரும்பிப் பார்த்தான்.

“உன் மனசை ஹேர்ட் பண்ணி இருந்தால் ரியலி சாரி. எனக்கு உன்னைப் பிடிக்கும், ஒரு நண்பனா, வெல்விஷரா மட்டும்தான் என்னால் உன்னைப் பார்க்க முடியுது. புரியும்னு நினைக்கறேன்” அவள் சொல்ல, ‘ஆம்’ என்பதுபோல் தலை அசைத்துச் சென்றான்.

பொதுவாகவே சுமித்ராவால் தன்னை நேசிக்கும் யாரையும் காயப்படுத்தவே முடியாது. ஆனால் பாலா அதில் விதி விலக்காக இருந்தான். அவர்கள் இரண்டாம் வருடம் MBA படிக்கையில், அவளை வைத்து அவனது நண்பர்களிடம் அவன் சவால் விடுவதை எதேச்சையாக கேட்டுவிட்டாள்.

‘சுமித்ராவை என்னை லவ் பண்ண வச்சு காட்டறேன்டா. என்னைக்கா இருந்தாலும் அவதான் என் மனைவி… அந்த அழகியையும் என்னை லவ் பண்ண வச்சு, நான் சொல்ற படி எல்லாம் அவளை ஆட வச்சுக் காட்றேன். எத்தனை வருஷம் ஆனாலும் அது நடக்கும், நடத்திக் காட்டறேன்’ அவன் சொன்னது இன்று கூட அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

இந்த பாலா, பாண்டீஸ்வரி இவர்களும் வசதியான இடத்துப் பிள்ளைகள் தான். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்று, அழகிய வதனமும், அழகிய மனமும் அவளிடம் பிரத்தியேகமாக இருந்தது.

பள்ளி கல்லூரிகளில் எல்லாம், அவர்களைச் சுற்றி இருந்த ஒரு கூட்டம் பிஜி படிக்கையில் சுமித்ராவிடம் சென்றதில் அவர்களுக்கு ஏக கடுப்பு. அவர்கள் முக்கியமான இடத்தில் இருந்து விடுபட்டு போயிருக்க, அதைத் தாங்க முடியாமல் பொறாமை கொண்டார்கள்.

அது சுமித்ராவுக்கும் தெரியும் என்பதாலேயே அவர்களோடு இருந்தாலும், பெரிதாக அவர்களைக் கண்டு கொள்ளாமல் விலகி இருந்தாள். அதற்கு மேலே பாலாவைப் பற்றிய நினைப்பே இன்றி தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

ஆனால் அந்த பாலா விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடும் ஆளாக இருக்கப் போவதில்லை என அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. அவள் அலுவலக வாசலிலேயே அவனது நினைப்பில் இருந்து கூட விலக்கிவிட்டுச் சென்றிருக்க, அவன் அவளை மனதுக்குள் சுமந்து சென்றான்.

அவனிடம் இருந்தது ஒரு முரட்டுத்தனமான பிடிவாதம். அவனிடம் எல்லாம் இருக்கிறது, வசதி வாய்ப்புகள், பணம்… சொந்த தொழில், அவன் கேட்டது எல்லாம் கிடைத்தது. எதிலும் பெஸ்ட் என்பதை மட்டுமே சூஸ் செய்து பழகிவிட்டவன் அவன்.

சுமித்ராவை என்றைக்கு அவன் கல்லூரியில் வைத்து பார்த்தானோ அப்பொழுதே அவள் தான் தன் மனைவியாக வர வேண்டும் என நினைத்தான். அவள்மேல் பெரும் காதலா எனக் கேட்டால் கிடையாது.

‘அந்த அழகி என்னுடன் என் வீட்டில் இருக்க வேண்டும்’ அது மட்டும்தான் அவனது எண்ணமாக இருந்தது. அவள் HR படிப்பில் இருக்க, அவன் பிசினஸ் மேனேஜ்மென்ட் டிப்பார்ட்மெண்ட்டில் இருந்தான்.

அந்த இரண்டு வருடங்களும் சுமித்ராவின் பின்னால் சுற்றுவதை மட்டுமே வேலையாகக் கொண்டிருந்தான். ஆனால் சுமித்ராவுக்கு ஒரு வருடம் வரைக்குமே இப்படி ஒருத்தன் தன் பின்னால் சுற்றுவதே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அவள் அதைப் பெரிதாக எடுத்திருக்க மாட்டாள் என்பது வேறு விஷயம்.

அவளது அழகு எப்பொழுதும் ஆபத்து எனச் சொல்லியே பெற்றவர்கள் வளர்த்திருக்க, முகத்துக்கு ஒப்பனையோ, கழுத்து, கை என நகைகளோ, தலை அலங்காரமோ கூட அவள் செய்வது கிடையாது. அப்படியும் அவள் அழகியாகத்தான் இருந்தாள்.

அந்த அழகு ஆயிரம் விட்டில் பூச்சிகளை பள்ளிக் காலத்திலேயே அவளை நோக்கி இழுத்தது. அந்த டீனேஜ் பருவத்திலேயே அதை எல்லாம் அவள் தவிர்க்க, கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகி இருந்தாள்.

அப்படி இருக்கையில் இந்த வயதுக்கு எல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்ததில் ஆச்சரியமே இல்லை. இரண்டாம் வருட துவக்கத்தில் பாலா அவளிடம் காதலைச் சொல்ல, ‘இதுயார் புதுசா?’ எனதான் பார்த்தாள்.

அதுவே அவனுக்கு மிகப்பெரிய அடி… அந்த கல்லூரியில் நான்கு ஐந்து கார்களை அவனுக்கென வைத்திருந்தது அவன்தான். அதுவும் அவை எல்லாம் உயர் ரக கார்கள் என்பதால் அங்கே அவன் பிரபலம். அதோடு அவள் பின்னாலேயே ஒரு வருடமாக சுற்றும் தன்னை அவளுக்கு யார் என்று கூட தெரியாமல் போனதில் ஏக கடுப்பானான்.

அவன் காதலைச் சொன்ன அன்றைக்கே, “சாரி… எனக்கு காதலில் எல்லாம் விருப்பம் இல்லை” என தன்மையாக மறுத்தாள். நல்லவன் போன்று அவன் விலகிச் சென்று, தன்னை அவள் கவனிக்க வேண்டும் என நினைத்தான். அது எல்லாம் அவள் நினைவிலேயே இல்லை என்கையில், அவன் மீண்டும் வந்த பொழுது மீண்டும் மறுத்தாள்.

இப்பொழுதும் அவன் அதை அதோடு விடுவான் எனப் பார்த்தால், அடுத்த இரண்டாவது வாரம், பெற்றவர்களை அழைத்துக் கொண்டு அவள் வீட்டுக்கே பெண் பார்க்க என வந்து நின்றான். அதிர்ந்து நின்றுவிட்டாள் சுமித்ரா.

சுமித்ரா அலுவலகத்தில் இருந்து வருகையில் பாலாவின் வீட்டினர் அவள் வீட்டில் இருக்கவே, செல்வமும் அனிதாவும் குழப்பம் சுமந்த விழிகளோடு மகளைப் பார்த்தார்கள்.

அவள் உள்ளே வரவே, “ஹாய் சுமி…” பாலா அவளை வரவேற்க, “ஹலோ பாலா…” என்றவள் அவனைப் பெற்றவர்களைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு தன் அறைக்கு மாடி ஏறினாள்.

“அம்மா… அப்பா கொஞ்சம் வாங்க” என்றவள் அழைத்துச் செல்ல, “நீங்க ஜூசைக் குடிங்க, நாங்க இப்போ வர்றோம்” என்றவர்கள் மகளது அறைக்குச் சென்றார்கள்.

அவர்கள் உள்ளே வரவே, அறைக்கதவை மூடியவள், “என்னப்பா நாங்க லவ் பண்றோம்னு சொன்னானா? அப்படி…” அவள் சொல்லத் துவங்க,

“அதுக்கு வாய்ப்பே இல்லை, எங்க பொண்ணு லவ் பண்ணி இருந்தால் எங்ககிட்டே சொல்லாமல் இருந்திருக்க மாட்டான்னு நாங்களே சொல்லிட்டோம்மா. எங்க பொண்ணு வீட்டுக்கு வந்த பிறகு கலந்து பேசிட்டு தகவல் சொல்லி அனுப்பறோம்னு சொல்லியும், அவங்க கேட்காமல் வெயிட் பண்ணிட்டே இருக்காங்க” செல்வம் சங்கடமாகச் சொல்ல, அதற்கு மேலே சுமித்ரா அங்கே ஒரு நொடியும் நிற்கவில்லை.

சில ஜென்மங்களுக்கு தன்மையாகச் சொன்னால் புரியவில்லை என்றால், கண்டித்து சொல்லித்தானே ஆக வேண்டும்?

You may also like

Leave a Comment

About Me

Featured