Home Love - Family - Romanceசரணம் – 20

சரணடைந்தேன் – 20

கண்களில் நீர் வழிந்து கன்ன‌த்தில் ஓடுது

கற்பனை ஆயிரம் தான் எண்ண‌த்தில் ஓடுது

வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது

வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது

பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது

வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது

இருந்தால் இனி உன்னோடுதான்

இல்லையேல் உடல் மண்ணோடுதான்

மாலை இடும் வேளை வரும் நாளை என்று நான் வாழ்கிறேன்

பனியில் இருள் குளித்துத் தலைதுவட்டி இமை  திறக்காமல் காத்திருந்த வைகறைப் பொழுது, கணவனின் கைவளைவுக்குள் சுகமாய் சாய்ந்தபடி ஓர் அதிகாலைப் பயணம். அடித்தக் குளிரில் இருவரும் ஒட்டிக்கொண்டாலும், மௌனங்களே மொழியாக வார்த்தைகள் அங்குத் தேவைப்படவில்லை. காருக்குள் வெற்றியின் இளையராஜா எப்போதும் போல சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்தார்.

அடுத்து வரும் நாட்கள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியவில்லை. ஆனால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரலாம் என்று மட்டும் புரிந்தது. எதுவாகினும் தாங்கிக் கொள்ள வேண்டும் புகழுக்காக என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.

எட்டு மணியளவில் கார் தர்மபுரி வந்தடைய, தபேரா இவர்களுக்கு முன்னமே வந்துக் காத்திருந்தார். மேலும் அவர்களுக்காகவே காத்திருந்தனர் வெற்றி ஏற்பாடு செய்த குழுவினரும். மங்கையின் நண்பர்களை இரண்டு நாள் கழித்து வரச் சொல்லலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தனர். ட்ரஸ்ட் மெம்பர்ஸ் அங்கே தங்குவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடந்திருக்க, அவர்களை அங்கே விட்டுவிட்டு, காலை உணவை முடித்துக்கொண்டு தபேராவுடன் இருவரும் கொட்லாங்காடு நோக்கி பயணித்தனர்.

அதுவரை அமைதியாக இருந்த மங்கை கார் கிளம்ப ஆரம்பித்ததும், அவளும் ஆரம்பித்தாள். அவளுக்கு கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தன தபேராவிடம். கேட்டுக்கொண்டே வந்தாள். அந்த வைத்தியரும் சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வர, ஒருக்கட்டத்தில் கடுப்பாகிப் போனான் வெற்றி.

உனக்கு வாயை மூடிட்டு வரவே முடியாதா..? எவ்வளவு கேள்வி கேட்குற, அவர் நம்மக்கூட வரனுமா.. இல்லை இப்படியே இறங்கித் தலை தெறிக்க ஓடனுமா சொல்லு..?” என எரிச்சல் காட்டிப் பேச, “க்கும்..என அவனைப் பார்த்து பழிப்புக் காட்ட,

பரவாயில்ல்லை தம்புடு, புள்ளைக்கிட்ட கோபம் காட்டாதீங்க. எல்லாத்தையும் புதுசா தெரிஞ்சிக்கிற ஆர்வம் அதுதான் துடுக்குத்தனமா பேசுது. எங்க அம்மாயி கூட இப்படித்தானே பேசும். விடுங்க தம்புடு. நீங்க பொண்ணைத் திட்டாதீங்க..என சமாதானம் பேச, ‘எப்படி..என்பது போல் மங்கை ஒரு வெற்றிப் பார்வை பார்க்க, அவனுக்குத் தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

ஐயா.. உங்களுக்கு இவளைப் பத்தி தெரியாது. அரூபி மாதிரி இவள் அமைதி எல்லாம் இல்ல. ஒன்னும் தெரியாம எதையும் பேசாதீங்க..என எச்சரித்தாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் இல்லை இருவரும். எப்படியோ போங்க..என நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டான் வெற்றி.

மங்கையின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டே வந்தாலும், தபேராவின் முகத்தில் ஒரு அலைப்புறுதல் இருக்கத்தான் செய்தது. அவரே சொல்லுவார் என்று பொறுமை காத்தவன், கார் கிராமத்தை நெருங்குவதை உணர்ந்து ஓரம் கட்டிவிட்டு, அவரை மட்டும் வெளியே அழைத்து வந்தான்.

அவர் இறங்கவும், மங்கையும் கூடவே இறங்க, கடுப்பானவன் ஏய் லூசாடி நீஜென்ஸ் எதுக்குத் தனியா போவாங்கன்னு கூடத் தெரியாதா.?” என எரிந்து விழ, ‘அச்சோ..என தன் செய்கையை எண்ணி  தலையில் தட்டியபடியே, மீண்டும் காருக்குள் போனாள்.

அவள் நகர்ந்ததும் தபேராவைப் பார்த்து என்னாச்சுங்கைய்யா நாங்க போனதும் இங்க எதுவும் பிரச்சினையா..? அரூபிக்கு என்ன..? அவ தாத்தா என்ன பண்ணார்..? இல்ல வேற மாப்பிள்ளை ஏற்பாடு பண்ணிட்டாரா..? நீங்க அமைதியா இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது.. என்ன விஷயம்ன்னு சொல்லுங்க..என்றான் பதட்டமாக,

இவ்வளவு பதட்டப்படுற அளவுக்கு ஒன்னும் ஆகல தம்பி, ஆனா கவலைப்படுற மாதிரி ஒரு சம்பவம் நடந்ததுங்க. நீங்க கிளம்பின பிறகு அடுத்த ரெண்டு நாள் அம்மாயி பித்து பிடிச்ச மாதிரி இருந்தா, மேச்சலுக்கு போனா, சரியா கவனிக்காம தெனம் ரெண்டு ஆடுகள சிறுத்த அடிச்சிட்டு போயிடுச்சு, அதுல பத்ரன் ரொம்ப கவலையாகிட்டார். அடுத்த நாள் புள்ளய என்கிட்ட விட்டுட்டு, அவர் போனார்.

ஆனால் அன்னைக்கு ஆட்டுக்குப் பதிலா, அவரை அடிச்சிட்டு போயிடுச்சி சிறுத்தை, உசிருக்கு ஆபத்து இல்ல, ஆனா உடம்பு முழுக்க காயம். நான் தான் வைத்தியம் பார்க்குறேன். டவுனு ஆஸ்பத்திரில வச்சி பார்த்தா நல்லதுன்னு சொன்னேன். டவுனுக்கு போகலாம்ன்னு சொன்னேன் கேட்கமாட்டேங்குறாங்க. தகவல் தெரிஞ்சி சிறுத்தையப் பிடிக்க வந்த, இந்த காட்டாஃபிஸ் (ஃபாரஸ்ட் ஆஃபிசர்ஸ்) காரங்க இங்க இருக்குற மக்களை எல்லாம் மிரட்டிட்டு போயிருக்காங்க.

அதுல ஒருத்தன் நம்ம அம்மாயிக்கிட்ட ஏதோ தப்பா பேசிருப்பான் போல. அதுல இருந்து பத்ரன் அந்த புள்ளைக்கு உடனே கண்ணாலம் பண்ணனும் சொல்லி ஒரே குறியா இருக்கார். அவர் படுத்ததும் ஆளாளுக்கு நான் கட்டிக்கிறேன், நீ கட்டிக்கிறேன்னு வந்து நிக்கிறானுங்க. இதுல ரெண்டாந்தாரமா வேற, நான் தான் பத்ரனை கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லிருக்கேன். புள்ளைய பார்க்க முடியல. உங்க முடிவு தெரியாம, நானும் என்ன செய்ய முடியும்..என்றார் ஆதங்கமாக.

கேட்ட வெற்றிக்கு ரத்தம் கொதித்தது. நாடு, காடு, வீடு என சுற்றிலும் எங்குமே பெண்களுக்குப் பாதுகாப்பு இருப்பதில்லை. என்ன செய்யலாம் என யோசித்தவன், தன் பதிலுக்காக காத்திருக்கும் வைத்தியரிடம் ஐயா எங்க முடிவுல எந்த மாற்றமும் இல்ல. நாங்க செய்றோம்னு அவருக்கு உறுதி கொடுத்துருக்கோம். அதனால அந்த வேலையை முடிச்சிட்டு, முறைப்படி உங்க அம்மாயியை எங்க வீட்டு மருமகளா நாங்க கொண்டு போவோம்.. நீங்க பயப்படாம இருங்க. அடுத்து என்ன செய்றதுன்னு நான் முடிவு பண்ணிட்டேண். பார்த்துக்குறேன்..என்றவன் பாலனுக்கு அழைத்தான்,

அப்பா நம்ம கோவை எஸ்.பி அங்கிள்கிட்ட பேசனும், நீங்க பேசுறீங்களா, இல்லை நான் பேசட்டுமா..?” எனக் கோவமாக கேட்க, “என்ன வெற்றி.. என்ன பிரச்சினை..என்றார் பதட்டமாக,

இல்லப்பா இங்க..என ஆரம்பித்து இங்கு நடந்த அனைத்தையும் சொன்னவன், “எந்த தைரியத்துல அவன் நம்ம பொண்ணு மேல கைவச்சான்னு தெரியனும். கவர்ன்மென்ட் ஜாப்ல இருக்குற திமிரு. அரூபி மேல வச்ச கை, அவன் உடம்புல இருக்கக் கூடாது. அந்த பொறுக்கியை சும்மா விடமாட்டேன். நீங்க இமிடியட்டா அவர்ட்ட பேசுங்க. நான் மறுபடியும் கால் பன்றேன்..என போனை வைத்துவிட்டு வைத்தியரிடம் திரும்பி,

அவனோட குவார்ட்டர்ஸ் எங்க இருக்குன்னு தெரியுமா..என்றதும் அவர் முழிக்க, அவருக்குத் தான் பேசியது புரியவில்லை என உணர்ந்தவன் அவனுங்க தங்கிருக்குற வீடு எங்க இருக்குன்னு கேட்கறேன்..எனவும்,

அதுவா தம்பிநம்ம தம்பி விபத்து நடந்துச்சுல்ல அதுக்குப் பக்கத்துல தான் இருக்கு. அதுதானுங்க மைசூரு போற முக்கியமான ரோடுங்க. இந்தப்பக்கம் எதுனா பிரச்சினைன்னா தான் வருவாங்க. இல்லாங்காட்டி வரமாட்டானுங்க தம்பி. ஆனா முன்ன ஒருக்கா இப்படி ஏதோ பெருசா பிரச்சினையாகியிருக்கும் போல, மக்க எல்லாம் பயந்து பேசினதக் கேட்டேன். என்னப் பிரச்சினைன்னு விசாரிக்கல தம்பி..என விளக்கம் கொடுக்க,

அப்போது அவன் போன் அடிக்க, பாலன் தான். எடுத்தவன் பேசிட்டீங்களாப்பா..?” என, “ஆமா வெற்றி, அவர் இப்போ தர்மபுரி DCP கிட்ட பேசிட்டு, அவரை உனக்கு பேச சொல்றேன் சொன்னார். இப்போ கூப்பிடுவார். அப்புறம் வெற்றி எந்த விசயத்தையும் பொறுமையா கேன்டில் பண்ணனும். அவசரப்படாம, ஆத்திரப்படாம எப்படி அவனை கேச் பன்றதுன்னு பாரு. உணர்ச்சிவசப்படாம பேசு. பேசிட்டு எனக்கு கூப்பிடு..என வைத்துவிட்டார்.

பாலன் வைத்ததும் யோசனையாக நின்றிருக்க, அப்போதுதான் மங்கையின் ஞாபகமே வந்தது. காருக்குள் இவள் தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறாளோ எனப் பதட்டமாக திரும்ப, அவளை மோதி நின்றான். ஆண்கள் இருவரும் வர நேரமாகவே, அவளும் வந்திருந்தாள். இருவர் பேசியதையும் கேட்டிருந்தாள்.

ஏய் லூசாடி நீ.. இங்க என்ன பன்ற…” மோதியதில் இருவரும் விழாமல் இருக்க, அவளையும் தாங்கிப் பிடித்தபடி கத்தினான். அவன் திட்டியும் பெண் ஒன்றும் சொல்லாமல் இருக்க, நிமிர்ந்து பார்த்தான். அவளோ முறைத்துக் கொண்டிருந்தாள். எதற்கு இப்படி முறைக்கிறாள் என யோசைனையாக, “என்னடீ…” என மீண்டும் கேட்க,

என்ன.. என்னடீ.. நம்ம வீட்டு பொண்ணு மேல கை வச்சா மட்டும் தான் கோபம் வருமா…? மத்த பொண்ணுங்க மேல வச்சா பரவாயில்லையா..? இதுக்கு பேரு என்ன..? உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கல மாமா.. எந்த பொண்ணு மேல கைவச்சாலும் அவன் கை அவன் உடம்புல இருக்கக் கூடாது. இப்படித்தான் பேசனும். இதுல நீங்க ஹீரோ வேற. என் மானமே போகுது. போங்க..எனக் கடுப்படிக்க,

அவள் பேசியதில் வைத்தியருக்கு சிரிப்பு வர, வெற்றிக்குமே சிரிப்புத்தான்.  வாயாடிவாயை மூடிட்டு கார்ல ஏறுடி…” என அந்த கனமான சூழலை இலகுவாக்கி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர் மூவரும்.

வெற்றி வந்து சென்ற பிறகு பத்ரனிடத்தில் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள் அரூபி. அதுவரை அவளிடம் அவர் எதையும் மறைத்தது இல்லை. ஆனால் வெட்ரியிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்டாள் ஏதோ ஒரு பெரிய விசயத்தை தன்னிடம் மறைக்கிறார் என்று. அவரே சொல்வார் என்று பொறுத்து பொறுத்து பார்த்தாவள், அவர் சொல்லமாட்டார் என்றுத் தெரிந்ததும், தன் அமைதியை விட்டு அவரிடம் கேட்டார்.

தாத்தா நீங்க எதை மனசுல வச்சிக்கிட்டு டவுனுசாரு அண்ணங்கிட்ட பேசுனீங்க. நாம செய்தது ஒரு உதவிதான். அதுக்குப் பதிலுக்கு பதில் கேட்க முடியுமா..? ஆனா நீங்க பேசினது எங்களுக்கு செய்ங்கன்னு கேட்டமாதிரி இல்ல. செஞ்சே ஆகனும்னு சொன்ன மாதிரி இருந்தது. நீன்ங்க இப்படி நடந்துக்கிட்டது எனக்குப் பிடிக்கல தாத்தா. ஒருவேளை என்னுக்கிட்ட மறைக்கிற மாதிரி ஏதாவது விஷயம் நடந்திருக்கா..? அப்படி மறைக்க வேண்டிய அவசியம் என்ன..? எனக்குத் தெரிஞ்சா என்ன ஆகும். சொல்லுங்க தாத்தா..? என விடாமல் பேசியவளைத் தீர்க்கமாகப் பார்த்தார் பத்ரன்.

உனக்குத் தெரிய வேண்டாம்ன்னு தான் நான் இதுவரை அந்த செய்தியை சொல்லல. இனியும் சொல்வேன்னு எப்படி நினைக்கிற, தேவையில்லாத விசயங்களைப் பத்தி யோசிக்காம, மத்த வேலைகளைப் பாரு..என்றார் கடுமையாக.

பத்ரன் இதுவரை அரூபியிடம் இப்படியெல்லாம் பேசியதே இல்லை. முதல்முறையாக அவர் பேச்சில் இருந்த கோபத்தையும், மாற்றத்தையும் பார்த்தவளுக்கு குழப்பமும், பயமும் ஒருங்கேத் தோன்றியது. இவரது செயலால் புகழுக்கு ஏதேனும் பிரச்சினையாகி விடுமோ? இல்லை புகழ் மீது தான் அவரது கோபமோ..? என பலவாறாக யோசனைகள் புகழையேச் சுற்றி வந்தது.

வெற்றி வந்துவிடுவதாக சொல்லி நாட்களூம் நகர, அவர்கள் வராதது வேறு பயத்தைக் கொடுத்தது. வரமாட்டார்களோ.. அவர்கள் கூறியதை நம்பியிருக்கக் கூடாதோபார்த்து சில நாட்களே ஆன, அதுவும் ஒரு மலைஜாதிப் பெண்ணை எப்படி தன் வீட்டிற்கு மருமகளாக கொண்டு செல்வார்கள்? பணக்காரர்கள் அந்த நேரத்திற்கு ஏற்ப பேசுவதுதான். அதையேப் பிடித்துக் கொண்டு நானும் அவர்களை எதிர்பார்க்கிறனோ..? மேலும் ஊர்மக்கள் எல்லாம் அவளைக் கேலிப்பார்வை பார்ப்பது போல் வேறு தோன்ற ஆரம்பித்தது.

எது நடக்க இருக்கிறதோ அதுவே நடக்கும். என இப்படியாக நேர் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்த யோசனைகளுடன் அவள் மேய்ச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் செல்ல, யோசனைகளின் மத்தியில் இருந்தவள் ஆடுகளைக் கவனிக்க மறந்து விட்டாள்.

மேய்ச்சல் பகுதியைத் தாண்டி அடர்ந்த காடுகளுக்குள் ஆடுகள் செல்லஒற்றைச் சிறுத்தைக்கு இரண்டு ஆடுகள் பலியாகியிருந்தன. அடுத்த நாளும் இப்படியே நடக்க, மூன்றாம் நாள் பத்ரன் போவதாக முடித்து விட்டார். அன்றைய நாள் ஆடுகளுக்குப் பதிலாக பத்ரனை பிடித்திருந்தது ஒற்றை சிறுத்தை. பலத்த காயங்களுடன் அவர் உயிர் பிழைக்க, மீண்டும் ஒரு பிரளயம்.

விசாரணைக்கு என்று வந்த ஃபாரஸ்ட் ஆபிசர்களின் அத்துமீறல்கள் அம்மக்களை பெரும் பீதிக்குள் தள்ளியிருந்தது. மீண்டும் அந்த அரக்கர்களின் ஊடுருவலா..? என அங்கிருந்த பெரியவர்களீன் கலக்கம் உண்மை என்பது போல், அடுத்தடுத்து அவர்களின் ஆதிக்கங்களும் வன்முறைகளூம் அதிகமாகின. அதிலும் பெண்களை அவர்கள் பார்க்கும் பார்வையே அசிங்கமாக இருந்தது.

இதையெல்லாம் தாண்டி ஒரு காவலர் அரூபியிடம் தவறாக நடக்க முயற்சிக்க, பத்ரனுக்கு சர்வமும் அடங்கியது. முதலில் அவளை இங்கே தனியாக வைத்திருக்கக் கூடாது. கூடிய விரைவில் பக்கத்தில் இருக்கும் மற்றொரு கிராமத்தில் உள்ள தன் மக்களில் யாருக்கேனும் மணமுடித்து அனுப்பிவிட வேண்டும் என நினைத்து, அவர்களிடம் சொல்ல, நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் இருவருக்கும் யாரையும் பிடிக்கவில்லை.

ஒருவனிடம் வாக்கு கொடுத்திருக்கிறோமே, தன் மீதுள்ள நம்பிக்கையில் தான் சொன்ன ஒரு வார்த்தைக்காகத் தானே போயிருக்கிறான். அவன் வந்து கேட்டால் என்ன  பதில் சொல்வது. என உறுத்தல் பெரியவருக்கு.

பெண்ணுக்கோ நேசம். நேசம் கொண்ட மனதை மறைத்து மற்றவனோடு இணங்கி எப்படி வாழ முடியும். புகழ் அவன் இல்லாத வாழ்வை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வெளியே அவன்மீது நேசம் இல்லையென்று வீராப்புக் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் காதலின் வலி கரையானாக அரித்தது. அவன் வரவேண்டுமே என உள்ளம் கதற தொடங்கியது.

பத்ரனும் ஓரளவு இறங்கி அவன் வந்துவிட்டால் போதும், அவனால் தான் தன் பேத்தியை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள முடியும்  என்பது போல் யோசிக்க, இப்படியாக இருவரும் வந்தவர்களை எல்லாம் தட்டிக் கழித்தனர்.

வைத்தியரிடம் பேசும் போதெல்லாம் அவள் புகழைப் பற்றி பேசுவதே இல்லை. தன்னுடைய மனதில் இருந்ததை தானே உணர்ந்திராத போதே உணர்ந்தவர். இப்போது அவனை உயிராக நினைத்து வாழும் காலத்தில் எப்படி கண்டுபிடிக்காமல் இருப்பார். நிச்சயம் கண்டுபிடித்து விடுவார். அப்படி கண்டுபிடித்துக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் அவளால். தன் தாத்தனை மீறி. அதனால் அவனைப் பற்றி அதிகம் விசாரிக்கவில்லை.

ஆனால் அவர் அப்படியே விடவில்லை. புகழைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். வெற்றியின் மூலம் தனக்குத் தெரிந்த விவரங்களையும் அவளிடம் சொல்லத் தவறவில்லை. பணக்காரன் என்று அனுமானித்தது தான். ஆனால் பெரும் பணக்காரன் என்பது வைத்தியரின் மூலம் தெரிய குழப்பத்தின் குழந்தையாகிப் போனாள் பெண்.

You may also like

Leave a Comment

About Me

Featured